மக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்

0

-சிவ. விஜயபாரதி

முன்னுரை

இலக்கியம் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் பிரதிபலிப்பு. இலக்கிய மரபில் பன்னெடுங்காலந் vijayaதொட்டே பாடுபொருளும் மாறிவந்துள்ளன. எல்லோருக்கும் பிடித்த வடிவமாக, இலக்கியத்தின் பிள்ளையாக விளங்குவது கவிதை. எதை வேண்டுமானாலும் பாடுபொருளாகக் கொண்டு பாடுவதுதான் கவிதைக்குக் கிடைத்த சுதந்தரம். மக்கள் கவிஞர் சுகிர்தராணி தம் கவிதைகளில் சமுதாய விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகள் குறித்தும் திடகாத்திரமாக எழுதிருக்கிறார்.

கவிதைக்குள் கண்ணிவெடி

இலக்கியத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கின் தற்காலச் சூழலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இரு கூறுகளை எடுத்து இயம்புகின்றனர் தமிழறிஞர்கள். கவிதைகள் கண்ணிவெடி போன்றன என்பார் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள். புத்தகங்கள் புரட்சி செய்ய வேண்டும். கவிதைகள் கிளர்ச்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம்தான் நின்று வாழும்.

 மக்கள் கவிஞரின்  கவிதைகள் அரசியல் நிலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காதல், நாடகக் காதல், மதமெனும் இழிவு, சாதியச் சாக்கடையைத் தோலுரித்தல், அடிப்படை விளிம்புநிலை மக்களின் வலிகள், கோட்பாட்டுத் தத்துவங்கள், பெண்ணியச் சிந்தனைகள், காதலின் மென்மை, காமத்தின் வன்மை, பகைமுடிக்கும் சீற்றம், போராளியின் முழக்கம் எனப் பரந்துபட்ட விடுதலை ஒளிக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன.

சமகாலப் பதிவுகள்

கவிதைகள் சமகாலத்தின் பதிவுகளாக இருக்க வேண்டும். அதுவே உயிர்ப்புள்ளதாக இருக்கும். மதங்களின் கூடாரத்தில் வருணாசிரமத் தத்துவத்தில் கட்டமைக்கப்பட்டதுதான் சாதி. அது இன்றும் நின்றுநிலைத்து மனித உயிர்களைப் பலி கேட்கிறது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தபடி இருக்கும் இழிவை “நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி” என்னும் தலைப்பிலமைந்த கவிதை

தலை சாய்த்து நீரருந்தும்
சிறு பட்சியைப்போல
______ _______ _______
சேரி ஊராகாதா அம்மா?  {இப்படிக்கு ஏவாள்  பக்கம் 20 } என்ற கேள்வியின் வலி சமுதாயத்தின் அவமானம்.

“சாதி என்பது இன்னும் கிராமங்களில் தான் கட்டமைக்கப்படுகிறது” என்றார் பெரியார். இரட்டை கிராமம் {ஊர் – சேரி}, இரட்டைச் சுடுகாடு, இரட்டைக் குவளை என்று விளிம்புநிலை மக்களைப் புறக்கணிக்கிற ஒதுக்குகிற சமூக அவலத்தை “வீடு திரும்புதல்”என்னும் கவிதை மூலம் பதிவு செய்கிறார்.

பித்தேறி திரிந்து கொண்டிருக்கிறோம்
_____ ______  ______   ______  _______
மேடையைவிட்டு
நாமிருவரும் கீழிறங்குகிறோம்
வரிசைதப்பி மக்கள் கலைகிறார்கள்
நீ ஊருக்குள் போகிறாய்
நான் சேரிக்குச் செல்கிறேன்.” {இப்படிக்கு ஏவாள்  பக்கம்  65}

என்று முடிக்கும்போது வலிபொறுக்காது நெஞ்சின் குமுறலோடு வேற்றுமைக்கான சுவர் எதுவென அடையாளப்படுத்துவதன் மூலம்  மானுடத்தைத் தலைகவிழச் செய்கிறார்.

வாழ்வு தரும் வலிகள்

சூறாவளிக் காற்றில் பறக்கும் தூசு திசைகளற்றுத் துடித்து விழுவதெனப் புரட்டிப்போட்டு விடுகிற இவ்வாழ்க்கை, பொருளாதார நெருக்கடிகள் தரும் வலிகளை, வயிற்றுப் பிழைப்புக்காக அசையும் அசைவுகளை, வாழும் வாழ்க்கையைப் “பல் பிடுங்கப்பட்ட வாழ்க்கை” என்ற கவிதையில் சமநிலைத் தவறிஆடும் வாழ்க்கையின் தீராத துக்கத்தை,

ஒவ்வொரு அடியாக நடக்க நடக்க
சமநிலைத் தவறி ஆடுகிறது வாழ்க்கை
ஏந்தியிருக்கும் கழியின் இருபுறமும்
தீராத துக்கமும்
ஒருபோதும் காணப்படாத கனவுகளும்
தொங்கிக் கொண்டிருக்கின்றன.” { இப்படிக்கு ஏவாள்  பக்கம்  15}

என்று பிழைப்புக்காகக் கயிற்றின்மேல் நடக்கும் பெண்ணொருத்தியின் வாழ்வு தரும் வலியை வடுக்களாகக் காட்டுகிறார்.

உயிர்தின்னி

காலம் காலமாய் உயிர்தின்று ஏப்பம்விடும் சாதிகள், கொடும் வல்லூறுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் விளிம்புநிலை மக்களில் பெண்களிடம் தன் கோபத்தைச் செலுத்துகின்றன.

சாதி ஆதிக்கவெறிகளின் குறிகள் அப்பப்பா வலிகளின் உச்சத்தில் பீறிட்டெழும் யோனியின் குருதியைக் குடித்து கொப்பளித்துக் கும்மாளமடிக்கின்றன. துயர்நிரம்பிய இவ்வாழ்வைப் பொறுக்காது முடிவுகட்ட ஒட்டுமொத்த தலித் பெண்களின் மனக்குமுறல்களை போர்க்குரலெடுத்து ஓங்கி உரைக்கிறார்,

”கொலையும் செய்வாள் பறச்சி “என்னும் கவிதையில்,

எங்கள் ஆடைகளை அவிழ்ப்பீர்
அம்மணமாக்குவீர்
வன்புணர்வீர்
தமையனோடு புணரச் செய்வீர்
—– ——   ——   —-   —- —
இனி எவையும் மிச்சமில்லை
நீங்கள் செய்வதற்கு
ஆனால்
நான் செய்ய ஒன்றுண்டு
அது
கொலையும் செய்வாள் பறச்சி” {இப்படிக்கு ஏவாள்  பக்கம் 31}

இழிநிலையாக அரங்கேறிகொண்டிருக்கும் ஆணவக் கொலைவரை செய்து விட்டீர்கள் என்று கூக்குரலிட்டு மாவோவின் வரிகளை நினைவுபடுத்துகிறார். “எனக்கான ஆயுதத்தை என் எதிரியே தீர்மானிக்கிறான்.”

 உயர்சாதி இந்துக்களாகத் தன்னை கருதும் சமூகத்தில் பிறந்த பெண்களின் மனதில் மரித்துப்போகும் காதலை “பலியிடப்பட்ட காதல் என்னும் கவிதையின் வரிகள் உணர்த்துகின்றன.

சாணைப் பிடிக்கப்பட்ட சாதியின் கூர்வாளால்
வெட்டப்படாத உனதுயிர் வேண்டியே
கைவிடுகிறேன்
நம்முடைய காதலை“ { இப்படிக்கு ஏவாள்  பக்கம் 36 }

மதம் கட்டமைத்த சாதியம் அழிந்து போகக் கடவதாக! இல்லையெனில் நிலம் மலடாகட்டும் எனக் கொதிக்கிறார் “கொலை பார்க்கும் நிலம் “தலைப்பிலமைந்த கவிதையில்,

எனக்கு நானே சாபமிட்டுக் கொள்கிறேன்
 சாதியின் புல் பூண்டு மரம் மயிரென
 எவையும் முளைக்காத
 மலட்டு நிலமாகட்டும் நான்“ { இப்படிக்கு ஏவாள்  பக்கம்  46 }

என்று கொடூரத்தின் வேர்களைச் சாடுகிறார்.

காமத்தின் பெருவலி

தனிமையின் விரக்தியும், காமத்தின் வெம்மையும் உடலையும் மனத்தையும் வாட்டுகின்றன. உடல் என்பது ஒரு வணிகப் பொருளாகிப்போன உலகமயச் சூழலில், இச்சையின் அர்த்தத்தை மீட்டு அதன்வழி பெண்ணின் விடுதலையைப் பேசுகிறார் ‘இரவு மிருகம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை

பருவப் பெண்ணின் பசலையைப் போல
– – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – –
கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவுமிருகம்” {இரவுமிருகம் பக்கம் 19}

மெழுகுவர்த்தியின் ஒளியும் தனிமையுமான வாழ்வில் இச்சை உடலைப் பருகுவதை பதிவு செய்கிறார்.

ஆணாதிக்க மிருகங்கள் காமத்தின் வால்பிடித்துப் பித்தேறித் திரிந்தும், அது பெண்ணின் மனவலி எதையும் பாராமல் தேகத்தைக் கிழித்துப்போட்டு, எச்சிலும், காமநீரையும் சிந்திவிட்டுப் புணர்வு நிமித்தமாக மதர்த்துத் திரிவதை “கலவி வாசனை” என்னும் கவிதைமூலம் சமூக மனங்களைக் கிழிக்கிறார்.

கிழிந்த தேகத்தை
நேர்படுத்திகொண்டு நிமிர்கிறேன்.
மறுபடியுமென்
உறுப்புக்கிளைகள் ஒடிந்துவிழும் படியாக
வந்தமர்கிறது ஓர் உருவபூதம்
– – – – – – – – – – – – – – – – – –
முடிவின் பிந்தைய கணத்தில்
இரத்தம் தோய்ந்த ஆடையைத்
துவைத்துப் போடுகிறாள்
பிரபஞ்சமெங்கும் கலவிவாசனை.”              {இரவுமிருகம் பக்கம் 30}

முடிவுரை

இவ்வுலகில் பிறந்த அத்தனை உயிர்களும் வாழப்பிறந்தவை. உரிமைகளுடன் வாழ்தல் மிகவும் அவசியம். வாழ்க்கை கொஞ்சம் காலம்தான். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை

“ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல” – என்கிறார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கூற்றின்படிப் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் பதிந்து வேற்றுமையற்ற சமத்துவ சமுதாயம் என்ற ஒற்றைத் தத்துவத்தைநோக்கிப் பயணிக்கின்றன கவிஞரின் கவிதைகள்.

******

துணை நூற்பட்டியல்

  • இப்படிக்கு ஏவாள் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .
  • இரவு மிருகம் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .
  • பெரியார் களஞ்சியம் – விடியல் பதிப்பகம்.
  • திருக்குறள் தெளிவுரை – மணிவாசகர் பதிப்பகம்.

******

கட்டுரையாசிரியர்
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி),
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
எழுத : godhassan82@gmail.com
பேச : 0 97 866 345 22

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *