கவிஞர் இடக்கரத்தான்

 

இந்திய தண்டனைச் சட்டம் விரைந்து

எதைச் செய்ததுஎனத் தெரியலே – அதை

முந்தியில் செருகியும் ஊழல் செய்வார்

முற்றும் மறைத்தல் சரியிலே!

ஒளிக்கற் றைதனில் ஊழல் செய்தார்

ஒழிந்து திரிவார் நன்று – சட்டம்

எளிதாய் வாய்தா வழங்கியும் நீதியை

எறிந்தே வீசிடும் கொன்று!

எத்தனை வருடங்கள் வழக்குத் தொடருது

என்று தானிது முடியும்? – வழக்கு

இத்தனை வருடம் தொடர்ந்து நடப்பின்

என்று அவலம் வடியும்?

பசியைப் போக்க உணவைத் திருடிய

பாமரன் மறுநாள் சிறையில் – நாட்டை

ருசித்துப் புசிக்கும் பாதகர் அழகாய்

பளபளப் பார்குளிர் அறையில்!

முரண்பா டதுவும் நீதித் துறையை

முற்றும் அரித்து வருகுது – நாட்டைச்

சுரண்டும் அரசியல் தனமும் நீதியைச்

சுட்டும் பொசுக்கிடக் கருகுது!

வழக்குரை ஞர்தமில் பாதிப் பேரும்

வாய்மை தனைப்பொய் ஆக்குறார் – உயர்

கிழக்கை மேற்கெனச் சொல்லும் திறனால்

கயவரின் கவலை போக்குறார்!

வண்ணம் மாறிடும் பச்சோந் திகள்போல்

வகையாய் மாறும் தீர்ப்பு – தம்

எண்ணம் போன்று தீர்ப்பை மாற்றிடின்

எங்ஙனம் வாழும் ஈர்ப்பு?

அன்று கொல்லும் அரசனும் இல்லை

ஆண்டவன் கல்லெனும் தொல்லை – நீதி

கொன்று குவிக்கும் சட்டம் தன்னால்

கொடுமைக் கேது எல்லை?

நாமும் அமைதி காப்பது இழிவு

நிலையிது தொடருதல் அழிவு – இனித்

தாமதம் இன்றியும் வாள் எடுப்போம்

தர்மம் சாயுதல் தடுப்போம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கொடி தனை ஏந்தும்!

  1. கவிஞர் இடக்கரத்தானின் கவிதை அபாரம்! சாட்டை அடி! சபாஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *