நிலவளம் கு.கதிரவன்

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை வழக்கம்போல் நண்பருடன் நடை பயிற்சியில் இருக்கும்போது, வழக்கமாக உற்சாகமாக பேசிக் கொண்டு வரும் நண்பர் சற்று மலர்ச்சியற்ற முகத்துடனே வருவதைக் கண்டேன். அவரிடம் என்ன நண்பரே என்ன பிரச்சினை, எதுவும் பேசாமல் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வருகின்றீரே என்றேன். என்னத்த சொல்லச் சொல்றீங்க? மனைவியின் மன அழுத்த பிரச்சினைக்கு ஆறு மாசமா அலையோ அலைனு டாக்டர்கிட்ட அலையிறேன். ஒன்னும் குணமான பாடு இல்லை. டாக்டர்கிட்ட தப்பா? இல்லை, என் மனைவி ஒழுங்கா மருந்தை எடுத்துகிடறாளா? என்று ஒரே குழப்பமா இருக்கு என்றார் நண்பர்.

நான் சிரித்துக் கொண்டே, அதற்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிட்டது நண்பா. உங்க மனைவி ஒழுங்கா மருந்து எடுத்துகிடறாங்களா, இல்லை மறதியில விட்டுடுறாங்களா என்பதைப் பற்றியெல்லாம் துல்லியமா தகவல் கொடுக்குற டிஜிட்டல் மாத்திரை சந்தைக்கு வந்தடுச்சி. கவலைய விடுங்க. எங்க பிரச்சினைனு கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் என்று நண்பரை ஆற்றுப் படுத்தினேன்.

ஆம். மருத்துவ உலகில் ஒரு புரட்சியாக டிஜிட்டல் மாத்திரையை சந்தைப்படுத்த, மிக சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் ( Food and Drug Administration ) அனுமதியளித்துள்ளது. இதில் என்ன விசேஷம்? ஏற்கெனவேதான் டிஜிட்டல் மாத்திரைகள் உள்ளதே, என்கிறீர்களா? விசேஷம் உள்ளது நண்பர்களே.

உலகிலேயே முதல் முறையாக மாத்திரையுடன் எண்ம உணரியை ( Digital Sensor ) இணைத்து தயாரிக்கப்பட்டு அமெரிக்க அரசின் அனுமதியோடு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்திரையுடன் சென்சாரை இணைக்க வேண்டிய அவசியம் ஏன்? :

பொதுவாக உலகில் வாழும் மக்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு மருந்துகளை உட்கொள்கின்றனர். உதாரணமாக உயர் ரத்த அழுத்தம், டைப்-2 சர்க்கரை குறைபாடு, மன நலம், மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு டாக்டர்கள் அளிக்கும் மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொள்ள தவறிவிடுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் வழியாக உறுதிப்படுத்தியுள்ளனர். நோயாளிகளில் பலர் நோய்களின் தன்மை பற்றி அறியாதவர்களாகவும், மறதி மற்றும் பக்க விளைவு, நோயாளி-அக்றையாளர் இடையிலான புரிந்துணர்வின்மை அல்லது மருத்துவர்-நோயாளி இடையிலான பிரச்சினை போன்ற பல காரணங்களை ஆய்வு முடிவுகள் பட்டியலிடுகின்றன. இதன் காரணமாக நோயாளிகளின் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்பொழுது நீண்டநாள் சிகிச்சை, அதிக செலவினம், மற்றும் உயிரிழப்பு போன்ற பேராபத்துகள் நிகழ்கின்றன. உயிரிழப்புடன் மருந்துகளுடன் ஒத்திசைவு இல்லாததால் ( Nonadherence ) ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் 300 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும், உலக அளவில் இது இரண்டு மடங்கு இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்சுகா – ப்ரோட்டஸ் இணைந்த ஆராய்ச்சி :

டாக்டர்கள் அளிக்கும் மருந்துகளை தொடர்ச்சியாக நோயாளிகள் உட்கொள்ள தவறுவதற்கான காரணங்களை ஆராய, ஜப்பானின் ஓட்சுகோ மருந்து நிறுவனம்( Otsuka Pharmachutical company ), மற்றும் அமெரிக்காவின் ப்ரோட்டஸ் டிஜிட்டல் நிறுவனமும்( Protus Digital Company ) இணைந்து ஆப்ளிஃபை மைசைட் ( Ablify Mycite ) என்ற மாத்திரையை நீண்ட ஆய்வுக்குப் பின்னர் உருவாக்கி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் அனுமதியை பெற்றுள்ளனர். ஓட்சுகா நிறுவனம் ஏற்கெனவே 2002 முதல் சென்சார் இல்லாமல் ஆப்ளிஃபை மாத்திரையை சந்தைப்படுத்தி வருகிறது. இது ஸ்கிசோபெர்னியா என்ற மனச் சிதைவு நோய் ( Schizophrenia ) பிரச்சினைக்காகவும், மனநோய் மற்றும் மனத் தளர்வு குறைபாடான இருமுனை நோய்க்கான சிகிச்சைக்காகவும்(Bipolar Disorder ), மன அழுத்தம் ( Depression ) தீர்வதற்கான சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட நோய்க் குறைபாடு உடையவர்கள் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ளத் தவறுகின்றனர். ஞாபக மறதி மற்றும் நோய்க்கான அடிப்படை காரணத்தை புரிந்துகொள்ள இயலாமை போன்ற காரணங்களால் இக்குறைபாடு நிகழ்கிறது. இதை தடுக்கும்வண்ணம் அமெரிக்காவின் ப்ரோட்டஸ் நிறுவனம் ஒவ்வொரு மாத்திரையுயுடன் சென்சாரை இணைத்து ஆப்ளிஃபை மைசைட் என்ற பெயருடன் நோயாளிகளுக்கு வழங்குகின்றனர்.

ஆப்ளிஃபை மைசைட் எப்படி இயங்குகிறது?

ஆப்ளிஃபை மைசைட் என்ற மாத்திரையானது சென்சார், காப்பர், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் போன்ற பாதுகாப்பான உணவுக் கலவை கலந்து உருவாக்கியதாகும். இது நோயாளி, உணரி, ஆண்ட்ராய்டு செல்பேசி அல்லது ஐ-பேட் ஆகியவற்றோடு இணைந்ததாகும். முதலில் ஒரு மாத்திரை நோயாளிக்கு அளித்தவுடன், உட்கொண்டவுடன் வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து கரையத் தொடங்கும். கரையத் தொடங்கியவுடன், சென்சார் எலக்ட்ரிக்கல் சிக்னல் உதவியுடன் தகவல்களை நோயாளி வயிற்றில அணிந்திருக்கும் சென்சார் பேட்சுடன் ( sensor patch ) இணைந்து தகவல்களை ஆராய்ந்து சேகரித்து, அங்கிருந்து நோயாளியின் ஆண்ட்ராய்டு போனுக்கு தகவல்களை அனுப்பும். அனுப்பிய தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்டவரின் அனுமதியுடன் டாக்டருக்கோ அல்லது நோயாளியை கவனித்துக் கொள்பவருக்கோ ( care taker) அளிக்கலாம். சரி. எந்தவிதமான தகவல்களை அனுப்புகிறது? நோயாளி தொடர்ச்சியாக மருத்துவர் அளித்த மாத்திரைகளை உட்கொண்டாரா, உட்கொள்ள தவறிய நாட்கள், அவரின் ரத்த அழுத்தம், நடை, நடத்தை, ஓய்வு போன்ற தகவல்களை அனுப்புகிறது. இதன் மூலம் மருத்துவர் தொடர் சிகிச்சை அளிக்க வசதியாகிறது.

ஆப்ளிஃபை மைசைட் மாத்திரையின் பயன்கள்:

1. நோயாளி மருத்துவர் அளிக்கும் மாத்திரைகளை விடுதலின்றி தொடர்ச்சியாக உட்கொள்ள உதவி புரிகிறது.

2. நோயாளிக்குரிய நோய் முற்றாத நிலையில் குணப்படுத்த வழி ஏற்படுகிறது.

3. ரத்த அழுத்தம், காச நோய், அல்சைமர், பல்வேறு மனநோய்கள், மன அழுத்தம் உள்ள நோயாளிகள் ஞாபக மறதியால் மருந்து உட்கொள்ள தவறுவதை இதன் வழியாக கண்டறியலாம்.

4. நீண்டநாள் மருத்துவமனை வாசத்தை தவிர்க்கலாம்.

5. நோய் முற்றி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.

6. மருந்து உட்கொள்ளும் ஒத்திசைவை தொடர்வதன் வழியாக பெரும் செலவினங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

குறைபாடுகள் :

1. தனி நபரின் அந்தரங்கம் கசிய வழி ஏற்படுகிறது.

2. Big-Data என்னும் பெரும் தரவுகளை வைத்துக் கொண்டு எண்ணற்ற மருந்து நிறுவனங்கள் இதே போன்று பலவகை மாற்று மருந்துகளை கண்டறிந்து சந்தைப்படுத்த முனையலாம்.

3. பெரும்பாலும் தாமும், தமது நோய் பற்றிய தரவுகளும் கண்காணிக்கப்படுவதை நோயாளிகள் விரும்பமாட்டார்கள்.

முடிவுரை :

மன அழுத்தம், மனச் சிதைவு, மனத்தளர்வு, ஆட்டிசம் போன்ற நோய் தாக்கியவர்கள் இத்தகைய மருந்துகளை எடுத்துக் கொள்ள மறந்துவிடும் வாய்ப்பு அதிகம். அத்தகையவர்களுக்க இந்த டிஜிட்டல் மாத்திரை மிகப் பேரளவில் பயன்படும். சென்சார் வசதியுடனான தகவல் அளிக்கும் வழிமுறையானது நோயாளியின் மனநிலை மற்றும் சிகிச்சை அளிக்கும் மருத்துவராலேயே கண்டறிய முடியாத தரவுகளை இதன் மூலம் கண்டறிந்து தொடர்ச்சியான, நீடித்த சிகிச்சை அளிக்க வழி ஏற்படுகிறது. தற்பொழுது ஆய்வுத் தரவுகளின்படி உயர் ரத்த அழுத்தம், டைப்-2 நீரிழிவு நோய், காச நோய் போன்ற நோயாளிகளுக்கு தொடர்ச்சியான நீடித்த மருத்துவ சிகிச்சை அவசியமாகும். அந்த வகையில் இந்த டிஜிட்டல் மாத்திரை ஒரு மருத்துவருக்கு நிகரான மெய் நிகர் மருத்தவராகவே ( Virtual Doctor ) செயல்படுவதால் நாம் இதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். மேலும் படிப்படியான பயன்பாட்டின் மூலமே இதன் வெற்றி தோல்வி தெரிய வரும் என்றாலும், இதன் மீதான மேலதிக ஆய்வுகள் தொடர்ச்சியான மற்ற நோய்களுக்கும் இந்த வகையான மாத்திரைகள் கண்டறியப்பட்டால் அது மருத்துவ உலகின் புரட்சியாகவே கருதப்படும்.

••••••••••••••••••••••••••••••••

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *