விவேக் பாரதி

 
பக்தி என்ப தெல்லாம் – இங்கே
பாழ்ப டிந்து போச்சு !
முக்தி என்ப தெல்லாம் – சாகும்
மூட மென்று மாச்சு !
பக்தி என்ப தென்ன ? – அன்பைப்
பாடு கின்ற சமயம்
அக்னி யாயின் அதனை – ஏற்றும்
அறிவுத் திரியே பக்தி !

பக்தி ஒன்றி னாலே – கிட்டும்
பலன்கள் நூறு கோடி
மக்கள் என்ற எண்ணம் – தங்கி
மண்ணில் ஒழுக்கம் நேரும் !
பக்க முள்ள மனத்தை – மனத்தால்
பார்த்தும் உதவி செய்தும்
அக்க றைகள் காட்டும் – நிலைமை
அந்த பக்தி நல்கும் !

கடவுள் பேரைச் சொல்லி – பெரிதாய்க்
கட்சி சேர்த்துக் கொண்டு
நடை முறை வழங்கி – அதிலே
நடக்கத் தவறு கின்ற
மடமை அல்ல பக்தி ! – உயரும்
மார்க்கம் பக்தி யாகும் !
உடைமை தீரும் போதும் – கையின்
உறுதி பக்தி ஆகும் !

‘பற்றி ருக்க வேண்டும் – எதிலும்
பசையி ருக்க வேண்டும்
ஒற்றி ருக்க வேண்டும்” – என்றே
ஓதல் பொய்மை யாகும் !
பற்ற றுத்த நிலையே – உண்மைப்
பக்தி யாகும் ! ஆசை
அற்றி ருக்கும் நிலையே – பெரிய
அருளின் பக்தி யாகும் !

வேலை மீது மனிதன் – இங்கே
வைக்கும் பாசம் பக்தி !
கால மாற்றம் தன்னை – மனங்கள்
காதல் கொள்ளல் பக்தி !
கோலக் கவிதை மீது – கவிஞன்
கொள்ளும் உரிமை பக்தி !
ஞாலம் எங்கும் அன்பை – விதைக்கும்
ஞானம் பக்தி யாமே !

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எது பக்தி ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *