திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்  15

க. பாலசுப்பிரமணியன்

ஆசைகளை அடக்குவதெப்படி? 

திருமூலர்-1-3

ஆசைகளுக்கு  அடிப்படைக் காரணமே அறியாமைதான். தன்னிடம் இல்லாத பொருளைத் தேடியும், தனக்கு உரிமையில்லாத  பொருள்களை நாடியும் மற்றும் மற்றவர்களிடம் உள்ள பொருள்களை விரும்பியும் மனம் அலைபாய்கின்றது. இந்த அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான காரியம். பல்லாயிரம் ஆண்டுகளாக முனிவர்களும்  வாழ்க்கையை விலக்கி துறவு நாடி போராடிக்கொண்டிருக்கின்ற நிலையை நாம் காண்கின்றோம். 

இந்த நிலையை அழகாக முன் நிறுத்தும் திருமூலர் கூறுகின்றார் : 

“அஞ்சு மடக்கடக் கென்பர் அறிவிலார்

அஞ்சு மடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சு மடக்கில் அசேதன மாமென்றிட

அஞ்சு மடக்கா அறிவறிந்த தேனே . “ 

ஐம்புலன்களையும் அடக்க முடியாத நிலை அமரருக்குமுண்டோ ? இந்த ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது மனதன்றோ? 

இந்த மனம் நம்மை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கின்றது ? அது படுத்திய அல்லல்களிருந்து விடுபட்ட பட்டினத்தார் தன் மனதை எவ்வாறு சாடுகின்றார் தெரியுமா ? 

மண்காட்டிப் பொன்காட்டி மாய விருள்காட்டிச்

செங்காட்டி லாடுகின்ற தேசிகனைப் போற்றாமல்

கண்காட்டும் வேசியர்தங் கண்வலையில் சிக்கிமிக

அங்காடி நாய்போ லழைந்தனையே நெஞ்சமே .

பத்திரகிரியாரோ இந்த ஐம்புலன்களையும் அதில் பிறக்கும் உணர்வுகளையும் எரித்துச் சாம்பலாக்கிவிட வேண்டும் ; அது நடப்பது எக்காலம்? என இறைவனையே கேட்கின்றார்.

 ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்

தூங்கமரத்தூக்கி சுகம் பெறுவதெக்காலம் ?

 இந்த ஆசையை அடக்க ஒரே வழி. இறைவனின் பாதங்களை நம்பிக்கையுடன் உறுதியாகப் பிடித்துக்கொள்வதுதான். எவ்வாறு ஆமை வெளியிலிருக்கும் சூழ்நிலைகளைக் காண்டதும் தன உறுப்புக்களை உள்ளே இழுத்துக் கொள்கின்றதோ அதே போல் இந்த மனமும் ஆசைகளை உள்ளே இழுத்துக்கொள்ளும். 

ஆகவே மனதில் இருக்கின்ற மாசினையும் இருளையும் நீக்கி மனதில் ஒளியை வரவழைத்தால் இந்தத் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் திருமூலர் : 

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்

சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி

அனைத்து விளக்குத் திரியோக்கத் தூண்ட

மனத்து விளக்கது மாயா விளக்கே.

 என அழகாக விளக்குகின்றார்.

 ஒரு முறை அகத்தில் இந்த ஒளி நிறைந்து விட்டால் அது அகத்தை விட்டு புறம் நோக்கிச் செல்லாது. ஆசைகளுக்கு அடி பணியாது. ஆனந்தக் கூத்தில் தன்னை மறந்து இன்புறும். இந்த உன்னத நிலையை அனுபவித்த மாணிக்க வாசகர் பாடுகின்றார்

 வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும்

வேண்டேன்பிறப்  பிறப்புச் சிவம் வேண்டார் தமை நாளும்

தீண்டேன் சென்று சேர்ந்தேன் மண்ணு திருப்பெருந்துறை இறைதான்,

பூண்டேன் புறம் போகேன் இனிப் புறம் போகலொட்டேனே . 

ஆகவே அகத்தை ஒளிமயக்கும் அறிவும் கல்வியும் பயனுள்ளதாகவும் அமைதியத் தருவதாகவும் அமைகின்றது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *