Author: சு.கோதண்டராமன்

  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 25

    –சு.கோதண்டராமன்.

     

    விஷ்ணுவும் ருத்ரனும்

     

    sivavishnu

     

    விஷ்ணு

     

    vamanவேதத்தில் விஷ்ணு பற்றிய மந்திரங்கள் 114. இவற்றில் 31 இல் மட்டும் அவர் தனியாகப் போற்றப்படுகிறார். 11இல் இந்திரனுடன் சேர்த்துப் பேசப்படுகிறார். மற்றவற்றில் மருத், பூஷன், அர்யமன், வருணன், மித்ரன் முதலான பல தெய்வங்களுடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார்.

    விஷ்ணு என்ற சொல் எங்கும் வியாபித்தது என்ற பொருள் உடையது. இந்த அடைமொழி அக்னிக்கும், இந்திரனுக்கும், சூரியனுக்கும் சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவே போற்றப்படுகிறார்.

    இன்று விஷ்ணு பற்றி வழங்கும் பல கருத்துகள் ரிக் வேதத்தில் இல்லை. இருக்கின்ற, குறிப்பிடத்தக்க ஒரே விஷயம் அவர் மூன்று அடி எடுத்து வைத்ததுதான். இது நமக்கு வாமன திரிவிக்ரம அவதாரங்களை நினைவூட்டினாலும் சாயணர் அவ்வாறு கருதவில்லை. இது சூரியனின் மூன்று நிலைகளைக் (காலை, பகல், மாலை) குறிப்பதாக அவர் கூறுகிறார்.

    விஷ்ணுவின் ஒரு அடைமொழியான அஹர்வித் (ஒளியை அறிந்தவர்) என்பதற்கு வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அளிப்பவர் என்று சாயணர் கூறுகிறார்.

    மனிதன் தேவனாகும் மார்க்கத்தில், தேவ நிலைக்கு முந்திய நிலையில் இருப்பவர்களான சூரிகள் எப்பொழுதும் அவருடைய இடத்தைப் பார்த்துக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்கிறது வேதம். (1.22.20)    

    தேவத்தன்மை தருபவர் சூர்யன் என்று சொல்லப்பட்டிருப்பதால் (1.110.3, 4.54.2)  விஷ்ணு என்பது சூரியனின் வேறு பெயர்தான் என ஊகிக்க முடிகிறது. சூரியன், ஸவிதா, பகன், பூஷன், விஷ்ணு என்ற பல பெயர்களும் ஒரே சூரியனைக் குறித்தாலும் அவர்கள் தனித் தனி தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள்.

    விஷ்ணு இந்திரனின் நண்பர். அவரோடு சேர்ந்து சோம பானம் அருந்துபவர். விண்ணைத் தூக்கி நிறுத்தியவர். உலகம் முழுவதும் அவருடைய காலடித் தூசியில் இருப்பதாக ரிக் கூறுகிறது. பாதிக்கப்பட்ட மனிதர்களுக்காக, அவர்களுக்கு வீடு கொடுப்பதற்காக, மித்ரனின் தர்மப்படி நடந்து தர்மத்தை நிலைநாட்டினார். அவரே உலகை நாம் வாழ்வதற்கு ஏற்றதாகச் செய்தவர்.

    எல்லாத் தேவர்களையும் போல, இவரும் மகிழ்ச்சி தருபவராகவும், வலிமை மிக்கவராகவும் ருதத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவராகவும் கூறப்படுகிறார். அவரே ருதத்தின் கர்ப்பம். யக்ஞம் செய்பவர்களுக்கு ருதத்தில் பங்கு அளிக்கிறார்.

     

    ருத்ரன்

     

    SHIVAரிக் வேதத்தில் ருத்ரனைப் போற்றும் மந்திரங்கள் அக்னி, இந்திரன், வருணன், மருத்துகள், அச்வின்கள் இவர்களுடையதை விடக் குறைவாகவே உள்ளன. இவர் நோய் நீக்கும் தெய்வம். தெய்வக் குற்றத்தால் ஏற்பட்ட நோயாக இருந்தாலும் பல வகையான மருந்துகளுடன் வந்து அதனைப் போக்க வல்லவர். எல்லா மருந்துகளின் தலைவர், நோய்களைக் குணமாக்குபவர், வைத்தியர்களுக்கெல்லாம் மேலான வைத்தியர் என்று அவருடைய வைத்தியத் திறமை பல இடங்களில் போற்றப்படுகிறது.

    ருத்ரன் கோபம் மிகுந்தவர். உங்கள் கோபம் எங்கள் குழந்தைகளையும் பேரர்களையும் பாதிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளப்படுகிறார்.

    மற்ற தேவர்களைப் போல ருத்ரனும் பகைமையையும் பாவங்களையும் போக்குகிறார். வலிமை மிக்கவர் என்பதால் அசுரர், வஜ்ரபாஹூ என்ற அடைமொழிகள் இவருக்கு உண்டு. இவருடைய ஆயுதங்கள் வில், அம்பு, நிஷ்கம்.

    மருத்துகளின் தந்தை என்று போற்றப்படுகிறார் ருத்ரன். புகழ்ச்சியால் வசப்படுபவராகவும் கூறப்படுகிறார்.

    அர்ஹத் என்ற சிறப்புப் பெற்ற தேவர்கள் நால்வர்- அக்னி, ருத்ரன், மருத், இந்திரன். இவர்களில் குறைவான பாடல்களைப் பெற்றவர் ருத்ரன்தான்.

    எல்லாத் தேவர்களும் ருதம் என்னும் இயற்கை நியதியோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகக் கூறப்படும்போது, ருத்ரன் அவ்வாறு தொடர்பு படுத்தப்படவில்லை என்பது கவனத்துக்கு உரியது. ஆனால் ருதத்தின் மற்றொரு பெயரான ஸ்வதா என்ற சொல் ருத்திரனின் அடைமொழிகளில் ஒன்றாக வருகிறது.

    ருத்ரன் பற்றி ரிக் வேதத்தில் கூறப்படுவதற்கும் யஜுர்வேதத்தில் வரும் ருத்ரனுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. யஜுர் வேதத்தில் ருத்ரனின்  கோபமும், எதிரிகளை அழிக்கும் தன்மையும் வலியுறுத்தப்படுகின்றன.  பிற்காலத்தில் சிவனாக உரு மாறுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் யஜுர் வேத ருத்ரனிடம் காணப்படுகின்றன.

     

     

     

     

     

     

    படங்களின் தேர்வு இணையத்திலிருந்து

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 24

    –சு.கோதண்டராமன்

    யமனும் பித்ருக்களும்

     

    Yama_deva

    ரிக் வேதத்தின் முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் காலத்தால் பிற்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாகப் படிப்பவர்களுக்கே தெரியும் அளவுக்கு இவ்விரு மண்டலங்களும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகளில் ஒன்று யமன் மற்றும் பித்ருக்கள் பற்றிய தகவல்கள்.

    இரண்டு முதல் ஒன்பது வரையிலான பழைய மண்டலங்களில் ரிஷிகளின் கவிதைகளில் ஒரு உற்சாகம் தெரிகிறது. அவர்கள் வாழ்க்கையின் துன்பங்களைப் பிரச்சினையாகக் கருதவில்லை. இயற்கையைக் கண்டு வியந்தனர், குதூகலித்தனர். இவற்றையெல்லாம் படைத்த அவன் ஒரு திறமையான கலைஞனாகத்தான் இருக்க வேண்டும் என இறைவனைப் போற்றினர். இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழத் தேவையான பசுச் செல்வம், குதிரைகள், குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள் மற்றும் அமரத்துவம் பெறவேண்டும் என்று தேவர்களை வேண்டினர். ஆனால், மரணத்துக்குப் பின் என்ன என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லை.

    முதலாவது பத்தாவது மண்டலங்களில் அவர்கள் இந்த உலகைத் தாண்டி, இந்த வாழ்க்கையைக் கடந்து பிறகு என்ன என்று சிந்திக்கத் தொடங்கினது தெரிகிறது.

    யம என்ற சொல் பழைய மண்டலங்களிலும் காணப்படுகிறது. கட்டுப்படுத்து என்ற பொருளில் வினைச் சொல்லாக மட்டுமே அது வருகிறது. ஒரு தெய்வத்தின் பெயராக அது பயன்படுத்தப் படுவது முதலாவது பத்தாவது மண்டலங்களில் மட்டுமே.

    உயிர் எங்கே போயிற்று?
    தனது அன்பிற்குரியவர் இறக்கும் போது ரிஷி வருந்துகிறார். இவருடைய உயிர் எங்கே போயிற்று எனச் சிந்திக்கிறார். சூரியனிடம் போயிருக்குமா, காற்றில் கலந்திருக்குமா, தாவரங்களோடு ஐக்கியமாகி இருக்குமா எனப் பலவகையாக யோசிக்கிறார். அவர் பூமிக்குள் மறைந்து வாழ்கிறாரா, விண்ணில் உள்ள தெய்வங்களோடு சேர்ந்து வாழ்கிறாரா என நினைக்கிறார். உயிர் மீண்டும் அந்த உடம்பில் வந்து குடியேறும் என்று கூட எதிர்பார்க்கிறார்.

    இயங்கிக் கொண்டிருந்த உடலின் இயக்கம் நின்று போனதுக்குக் காரணம் உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறிவிட்டதுதான் என நினைக்கிறார்கள். அந்த ஒன்று ஆத்மா என்றும் அஸு என்றும் மனஸ் எனவும் பல வகையாக அழைக்கப்பட்டது.

    10.58 இல் ரிஷி சுருதபந்து இறந்தவரின் மனஸைக் கூவி அழைக்கிறார். யமனின் இடத்துக்குப் போயிருக்கிறாயா, பூமியின் நான்கு மூலைகளுக்கும் போய் விட்டாயா, பிரகாசிக்கின்ற வெளிச்சத்தில் மறைந்து விட்டாயா, அலைகடலில் அடங்கிவிட்டாயா, நீரில் நிலைத்து விட்டாயா, தாவரங்களில் தங்கி விட்டாயா, மலைகளின் உயரத்தில் மறைந்துவிட்டாயா, தொலைவில் சூரியனுக்கு அருகில் சென்று விட்டாயா? எங்கிருந்தாலும் இங்கே வா, வாழ்வதற்காக உன்னை நாங்கள் அழைக்கிறோம் என்று பாடுகிறார். முடிவாக, உன் மனஸ் எங்கள் அறிவுக்கெட்டாத இடத்தில், அசைகின்ற எல்லாவற்றிலும், கடந்த காலத்திலும், வருங்காலத்திலும்  அடங்கிவிட்டது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்.

    யமன்:
    பலவாறாக யோசித்த பின், ஏதோ ஒரு தெய்வம் மரணத்துக்குப் பின் உயிரைப் பொறுப்பேற்றுக் கொள்கிறது என்று முடிவு கட்டுகிறார்கள். அந்தத் தெய்வம் எது என்று சிந்திக்கும் போது பூஷன், வாயு, சவிதா, ஸரஸ்வதி என்று பல பெயர்கள் அவர்கள் நினைவுக்கு வருகின்றன.

    பூஷன் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அவர் எல்லாம் அறிந்தவர். அவர் உன்னைப் பித்ருக்களுடன் சேர்க்கட்டும் (10.17.3).

    வாயு உன்னைக் காப்பாற்றட்டும். தொலைவிலுள்ள அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும். ஸவிதா உன்னைப் பிதிரர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும் (10.17.4).

    பித்ருக்களுடன் ஒரே ரதத்தில் செல்கின்ற ஸரஸ்வதி இன்று நம்மிடையே வந்து மகிழட்டும், உணவு தரட்டும் (10.17.8).

    இப்படிப் பல தேவர்களையும் பித்ருக்களின் பொறுப்பாளர்களாகப் பரிசீலித்த பின் இறுதியாக யமன்தான் அந்த வேலையைச் செய்பவர் என்று தீர்மானிக்கிறார்கள். நிர்ருதி, அஸுநீதி என்ற பெயர்களும் யமனுக்குச் சில இடங்களில் அளிக்கப்படுகின்றன.

    வருணனின் பரிணாம வளர்ச்சிதான் யமன் என்று கருத இடம் உள்ளது. ஒரு மந்திரத்தில் யமன் வருணன் இருவரும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்கள்.

    செல்லுங்கள், நமது முன்னோர்கள் எங்கே சென்றார்களோ, அங்கே செல்லுங்கள். அங்கே, யமன் வருணன் ஆகிய இரு ராஜாக்களும் மகிழ்ந்து கொண்டிருப்பதைக் காணுங்கள் (10.14.7).

    வருணனின் ஆயுதமாக இருந்த பாசம் பிற்காலத்தில் யமனுக்கு உரியதாக ஆயிற்று. வேதத்தில் வருணன் மானிடர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துபவராகவும்(கடிவாளம் போல மானிடர்களை இயக்குகிறார் 6.67.1), தவறுகளுக்குத் தண்டனை தருபவராகவும் கூறப்படுகிறார். யமன் என்ற சொல்லும் நெறிப்படுத்துபவர் என்ற அதே பொருள் உடையது.

    யமன் உயிரைக் கவர்பவராக ரிக் சொல்லவில்லை, ஆனாலும் யமனுக்கும் நம் மரணத்துக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்றும் உணர்கிறார்கள்.

    அவர்தான் முதன் முதலாக, இறந்தவர் செல்வதற்கான ஓரிடத்தை ஏற்படுத்தினார் என்றும் அங்கு அவர் அங்கிரஸ்கள் என்ற பழமையான பித்ருக்களுடன் மகிழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. யமன் விரும்பும் வரைதான் நாம் உயிர் வாழ முடியும். எனவே யமனுக்கு சோமமும் யக்ஞமும் அளித்து மகிழ்விக்கிறார்கள்.

    யமனின் இருப்பிடம் செல்லும் வழியில் இரண்டு நாய்கள் இருப்பதாகவும் அவை அங்கு வாழ்வோரைக் காவல் காப்பதாகவும், புதிதாக இறந்தவர்களை அந்த நாயிடம் யமன் ஒப்படைப்பதாகவும்  சொல்லப்படுகிறது. அவை பெரும் பலம் உடையன, உயிர்களை வேட்டையாடுவதில் திருப்தி அடைவன, நீண்ட மூக்கு உடையன. அவை உயிர் வாழ்வோரைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

    வேதகால ரிஷிகளுக்கு புறா ஒரு கெட்ட சகுனமாகத் தெரிகிறது. அது யமனின் தூதனாகப் பார்க்கப்படுகிறது.

    பித்ருக்கள்:
    பித்ருக்கள் என்போர் யார்? பழைய மண்டலங்களைப் பொறுத்தவரை, அங்கிரஸ், ப்ருகு, அதர்வான், மனு ஆகிய மனிதர் குல முன்னோடிகள்தான் பித்ருக்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இவர்களில் மனுதான் மனித குலத்தின் முதல் தந்தை. அங்கிரஸ் என்பவர் மறைபொருளாக இருந்த ஞான ஒளியைக் கண்டறிந்தவர். ப்ருகு அக்னியைக் கண்டறிந்தவர். அதர்வான் தேவர்களுக்கு அக்னி மூலம் ஆகுதி அளித்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர். இவர்கள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்களாயினர்.

    வளர்ச்சியா, தேய்வா?
    மற்ற மண்டலங்களில் நன்மை செய்வோர் மட்டுமே தேவர்களாகக் கருதி வணங்கப்படுகின்றனர். தேவர்களை மக்கள் அன்போடு நேசிக்கிறார்கள், வரச் சொல்லி அழைக்கிறார்கள். தீமை செய்பவர்கள் யாதுதானர், நிர்ருதி, ராட்சசர் என்று அழைக்கப்பட்டு இகழப்படுகிறார்கள். பத்தாவது மண்டலத்தில் நமக்கு மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்யும் யமன் தேவனாகக் கருதப்படுகிறார். அவரிடம் பயந்து கொண்டு மரியாதை செய்கிறார்கள். இங்கே வராதே, குழந்தைகளைத் தொடாதே என்று அவர் வேண்டப்படுகிறார்.

    முந்தின மண்டலங்களில், அமரத்துவத்தை அடைந்து தேவர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் மனித வாழ்வின் லட்சியம் என்பது பல வகையாலும் வற்புறுத்தப்-படுகிறது. சந்ததி விருத்தி மூலமும், சோம பானத்தை அருந்துவது மூலமும் அமரத்துவத்தை அடையலாம் என்றாலும் நிலையான அமரத்துவத்தை கடுமையான உழைப்பின் மூலம், சாதனைகள் மூலம்தான் அடைய முடியும் என்று சொல்லப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ரிபுக்களின் வரலாறு கூறப்பட்டது. அங்கிரஸ்கள் கூட உழைப்பாலும், நற்செயல்களாலும் பணி எனப்பட்ட பகைவர்களை வென்று இறையருளைப் பெற்றதாகவும் அமரத்துவம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    பத்தாவது மண்டலத்தில், இறந்தவர் அனைவரும் ஒளி உடல் பெற்று  பித்ருக்களாகி விடுகிறார்கள், தேவர்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற கருத்து காணப்படுகிறது. ஒருவன் இறப்பதன் மூலமே பித்ரு ஆகி விடுகிறான், தேவர்களோடு சேர்ந்து வாழத் தொடங்குகிறான், சோம பானத்துக்கும் யக்ஞ ஆகுதிகளுக்கும் உரியவன் ஆகிவிடுகிறான் என்ற இக் கருத்து முந்திய காலத்தின் உயர்ந்த லட்சியத்தை நீர்க்கச் செய்தது போல உள்ளது.

    யமன் பற்றியும் பித்ருக்கள் பற்றியுமான இக் கருத்துகள் வேத சமயத்தின்  மையக் கருத்தின் உற்சாகத்திற்கு முரணாக உள்ளன.

    அதே நேரத்தில், சமய சிந்தனை வேறு ஒரு திசையில் வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். உயிர் போன உடலை எரித்த பின்னும் அதில் ஏதோ ஒன்று மீதம் இருக்கிறது, அது நிலையானது என்ற கருத்து புதிதாக ஏற்படுகிறது.

    அக்னியே, அவனை எரித்த பின் அவனுடைய உடலில் மீதம் இருப்பது புதிய உடலையும் ஆயுளையும் பெற்று பித்ருக்களிடம் செல்லட்டும். (10.16.5)

    எரித்த பின் என்ன மீதம் இருக்கும்? சாம்பல் இங்கேயேதான் இருக்கிறது, பித்ரு லோகத்திற்குச் செல்வதில்லை. தீயினால் பாதிக்கப்படாத ஒன்று உடலில் உயிர் போன பிறகும் இருக்கிறது என்ற இந்தக் கருத்து பிற்காலத்தில் வளர்ந்து, நீரால் நெருப்பால் பாதிக்கப்படாத, என்றும் நிலையாக உள்ள ஆத்மா என்று அழைக்கப்பட்டது. உபநிடதங்களின் ஆத்மா பற்றிய கருத்துகளுக்கு விதை இங்குதான் இருக்கிறது. (ஸம்ஹிதையில் ஆத்மா, அஸு, மனஸ் என்ற மூன்று சொற்களும் உயிரைக் குறிப்பன. உபநிடதங்களில் ஆத்மா என்பது உயிர் அல்லாத வேறு ஒன்றைக் குறிப்பதாக உள்ளது.)

    பித்ரு லோகம்:
    பித்ரு லோகம் என்ற பெயர் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உயரத்தில் உள்ள ஒரு இடம். அங்கு யமன்தான் முதன் முதலில் சென்றார். அங்கு அங்கிரஸ்களுடன் மகிழ்ந்து இருக்கிறார். மனிதர்களை அங்கு ஒன்று சேர்க்கிறார். அந்த இடத்திற்கு வழி காட்டி அழைத்துச் செல்கிறார். இறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து பித்ருக்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து வாழச் செய்கிறார். இறந்தவர் அந்த இடத்தை  அடையும் முன், ஒளிமயமான ஒரு புதிய சரீரத்தை அடைகிறார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.

    பித்ரு லோகத்தை அடைந்தவன் பித்ருவாகவே ஆகிவிடுகிறான். பித்ருக்கள் ஒளியில் வசிக்கிறார்கள். அவர்கள் உண்மை பேசுபவர்கள். தேவர்களுடன் பயணம் செய்பவர்கள். தேவர்களைப் போல தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோம பானம் செய்கிறார்கள். யக்ஞங்களை ஏற்று மகிழ்கிறார்கள்.  தேவர்களுக்கு உணவு எடுத்துச் செல்வது போல, அக்னி பித்ருக்களுக்கும் உணவு எடுத்துச் செல்கிறார். பித்ருக்கள் மக்களுக்கு சந்ததியும் செல்வமும் அருள வல்லவர்கள். தவறு செய்தவர்களைத் தண்டிக்கிறார்கள்.  வேண்டினால் மன்னிப்பார்கள். தேவர்களோடு சேர்ந்து வாழ்ந்தாலும் பித்ருக்கள் தேவர்களாவதில்லை. அவர்களின் இடத்துக்குச் செல்லும் பாதை தேவர்களின் பாதையிலிருந்து வேறானது என்று சொல்லப்படுகிறது(10.18.1). இவர்களோடு யமனும் நாம் அளிக்கும் ஹவிஸ்களை ஏற்றுக் கொள்கிறார்.

    பூமியில் பிறந்த மனிதர்கள் அவரவரும் தங்கள் தங்கள் வழியில் செல்கின்றனர். எந்த வழியில் போனாலும் முடிவில் முன்னோர்கள் எங்கு சென்றார்களோ அங்குதான் அந்தப் பாதைகள் அழைத்துச் செல்கின்றன (10.14.2).

    இந்த மேய்ச்சல் நிலம் நம்மிடமிருந்து பறிக்கப்பட முடியாதது என்கிறார் ரிஷி. அதாவது எல்லோரும் இந்த இடத்திற்கு உரிமை உடையவர்கள், எல்லோரும் அங்கு சென்றுதான் ஆகவேண்டும்.

    கீழானவர்கள், மேலானவர்கள், இடைப்பட்டவர்கள் ஆகிய பித்ருக்கள் சோம பானத்துக்கு உரிமை உடைவர்கள். உயிர் நீத்தலை அடைந்த, மென்மையான, நேர்மையான அவர்கள் எங்கள் அழைப்புக்கு இணங்கி எங்களைக் காப்பாற்றட்டும் (10.15.1).

    இறந்த உடல்களுக்கு ஸம்ஸ்காரம்:
    உடல்களை எரிப்பது வழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். அந்த இடத்தில் மீண்டும் புல் முளைக்க வேண்டும் என்று அக்னியிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது (10.16.13).

    இறந்த உடன் உடலை எரிக்காமல் ஓரிரு நாட்கள் திறந்த வெளியில் வைத்திருந்து பின்னர் எரிப்பதும் வழக்கில் இருந்திருக்கிறது. அதனால் நரி, கழுகு முதலியன வந்து உடலைச் சிதைப்பதும் நடந்திருப்பது அறியப்படுகிறது. மீண்டும் உயிர் வந்து உடலில் குடியேறும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.

    கறுப்புப் பறவையோ, எறும்போ, பாம்போ, நரியோ உடலில் என்ன காயம் ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விழுங்கும் அக்னி அதைச் சரி செய்யட்டும் (10.16.6).   

    உடல் எரிக்கப்பட்டவுடன்,
    கண்ணை சூரியன் எடுத்துக் கொள்கிறது, ஆத்மா காற்றால் எடுத்துச் செல்லப்பட்டு அதனதன் தர்மப்படி பூமிக்கோ ஆகாயத்துக்கோ, நீருக்கோ, தாவரங்களுக்கோ தன் எல்லா உறுப்புகளுடன் செல்கிறது (10.16.3).

    இறந்த உடலைப் புதைப்பதும் சொல்லப்பட்டிருக்கிறது:
    அக்னியில் இடப்பட்டாலும் இடப்படாவிட்டாலும் ஆகாயத்தின் மத்தியில் அவர்கள் மகிழட்டும். அவர்களுக்கான உடம்பும், செல்லும் பாதையும், அரசே, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்துங்கள் (10.15.14).

    குழியில் உடலை வைத்தபின் அதன் மேல் மண்ணைத் தூவும்போது, இந்த மண் உடலைக் கனமாக அழுத்தாமல் குழந்தையை மூடும் தாயின் ஆடை போல மென்மையாக இருக்கட்டும் என்று வேண்டப்படுகிறது.

    உடலை ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கல்லால் சுவர் போல் எழுப்பினார்கள். அதைத் தாண்டி யமன் வரக் கூடாது என்பது அவர்களது பிரார்த்தனை. அந்தச் சுவருக்கு வெளிப்புறம் இருப்பவர்கள் எந்தத் தீங்கும் வராமல்  நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டப்படுகிறது.

    அந்த இடத்தில் நிற்காமல் சென்று விடுங்கள் என்று மக்கள் வேண்டப்படுகிறார்கள்.

    இங்கிருந்து சென்று விடுங்கள். பல திசையிலும் பறந்து செல்லுங்கள். இது பித்ருக்கள் அவனுக்காக ஏற்படுத்திய இடம். யமன் அவனுக்காக நீரும் ஒளியும் உள்ள ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார்.

    இனிய உறவினனை இழந்த ஒருவனின் மன நிலையை அறிவிக்கும் கீழ்க்கண்ட மந்திரங்களைப் பாருங்கள்.

    அக்னியே, அவனைச் சுட்டுவிடாதே. அவனுடைய உடம்பின் பாகங்களோ, தோலோ சிதறாமல் இருக்கட்டும். பக்குவப்படுத்தியபின் அவனைப் பித்ருக்களின் இடத்துக்குச் செல்லும் வழியில் அனுப்பி வைப்பாயாக (10.16.1).        

    உன் உடலை அக்னி சுடாதிருக்கட்டும். நெய்யும் கொழுப்பும் உன் தேகத்தை மூடட்டும். உன்னைத் தாக்க வரும் அக்னியின் உக்ரம் உன்னைப் பாதிக்காது இருக்கட்டும் (10.16.7).

    அக்னியே, உன் பங்குக்கான ஆட்டை உன் சுவாலைகள் எரிக்கட்டும். இந்த மனிதனை நல்ல செயல்கள் செய்தவர்களின் உலகத்துக்கு அழைத்துச் செல்க (10.16.4). மாமிசம் உண்ணும் அக்னி யமனுடைய உலகத்துக்குச் செல்லட்டும். தேவர்களுக்கு ஆகுதி அளிக்கும் இந்த அக்னி தன் வேலையைச் செய்யட்டும் (10.16.9).

    விதவை ஆனவள் தவிர்த்த பிற பெண்கள் முதலில் வீட்டுக்குச் செல்லட்டும். அவர்கள் ஆடை ஆபரணங்களை அணிந்து துயரம் இல்லாமல் கணவனுடன் வாழட்டும் (10.18.7).

     இனி மேற்கொண்டு மரணம் ஏற்படாது, நாம் இனி சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாம். நீண்டகாலம் வாழலாம் என்று நம்புகிறார்கள், வேண்டுகிறார்கள் (10.18.3).

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 23

    சு.கோதண்டராமன்.

    அச்வின்கள்

    Ashvin-Twins

    அச்வின்கள் எனப்படுவோர் இருவர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனிப் பெயரோ தனித் தன்மையோ கிடையாது. ஒரு பறவையின் இரு இறக்கைகள் போல இருப்பவர்கள் என்று சொல்லப்படும் அவர்கள், எப்பொழுதும் சேர்த்தே பேசப்படுகிறார்கள். இவர்கள் வேறு வேறு வகையில் பிறந்தவர்கள் என்கிறது ரிக் (5.73.4). பிறந்தது வேறு வேறு வகையானாலும் செயல் திறமையினால் ஒன்றானவர்கள் என அறியலாம்.

    இவர்கள் யார்? நிருக்தக்காரர் கூறுவது போல  விண்ணும் மண்ணுமா, இரவும் பகலுமா, சூரிய சந்திரர்களா, இதிஹாஸக் காரர்கள் கூறுவது போல, இரண்டு நேர்மையான இளவரசர்களா, சாயணர் சொல்வது போல இந்திரன் அக்னியா – ரிக் மந்திரங்களிலிருந்து இதை அறிய முடியவில்லை.

    இவர்களுக்கு நாஸத்யா என்ற பெயரும் உண்டு. இதற்கு ந அஸத்யா என்று பிரித்து பொய்யில்லாதவர்கள் என்று ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது. நாஸத்ய என்பது நாஸிகா ப்ரபவ- (மூக்கில் தோன்றியவர்கள்), அதாவது மூச்சுக் காற்று என்ற கருத்தும் உண்டு (8.5.23க்கு சாயணர் உரை).

    அஹர்விதா (பகலை அறிந்தவர்கள்) என்று போற்றப்படும் இவர்களுடைய தேரில் சூர்யா (சூரியனின் மகள்) விரும்பி ஏறுகிறாள் என்றும், இவர்கள் உஷஸுடனும் சூர்யனுடனும் சேர்ந்து வருபவர்கள் என்றும் கூறப்படுவதால் இவர்கள் ஒளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது அறியப்படுகிறது.  இவர்களது செயல் திறமைகளைப் பார்த்தால் இதிகாசக்காரர்கள் சொல்வது போல, பரோபகார சிந்தையுள்ள, திறமையுள்ள இரு மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.

    மற்ற தேவர்களைப் போல அச்வின்களும் நரா (மனிதர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். அச்வின்களுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனிதருடன் பழமையான தோழமை கொண்டவர்கள் என்றும் மனிதருடன் பொதுவான மூதாதையர் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் மனிதராக இருந்து  தங்கள் அருஞ் செயல்களால் தேவ நிலைக்கு உயர்ந்தவர்கள் (4.44.2).

    அச்வின்களின் சாதனைகள் பல. அவர்களால் உதவப்பட்டோரின் பட்டியல் நீளமானது, இது ஆங்காங்குப் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேவருக்கும் உதவி பெற்றோர் பட்டியல் இவ்வளவு விரிவாகக் கொடுக்கப்படவில்லை.

    Guru_Bhakat_Upamanyuமீட்பு – ரேபன் மற்றும் வந்தனன் ஆகியோரைக் கிணற்றிலிருந்து மீட்டனர். அத்ரி என்பவரைக் குகையிலிருந்து மீட்டனர், அவரது உடல் வெப்பத்தைக் குறைத்தனர். புஜ்யு என்பவரைக் கடலிலிருந்து மீட்டனர். விச்வகனுக்குக் காணாமல் போன மகன் விஷ்ணாபுவை மீட்டுக் கொடுத்தனர். வர்த்திக என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து மீட்டனர். ஜாஹுஷன் என்பவர் எதிரிகளிடம் சிக்கியபோது அவரைக் கடத்திக் கொண்டு வந்து மீட்டனர். ஆழத்தில் மூழ்க இருந்த அந்தகனைக் காப்பாற்றினர். த்ரிசோகன் என்பவரின் களவு போன மாடுகளை மீட்டுத் தந்தனர். குதிரையை இழந்த ப்ருதிக்கு அதை மீட்டுக் கொடுத்தனர்.

    பொறியியல்– தாகத்தால் வருந்திய கோதமருக்குக் கிணறு ஒன்றைச் சீரமைத்துக் கொடுத்தனர். சரன் என்பவருடைய கிணற்றில் நீர் மட்டம் உயரச் செய்தனர்.  வணிகன் தீர்க்கச்ரவஸுக்கு இனிய நீர் கிடைக்கச் செய்தனர். வறண்ட ஆற்றில் மீண்டும் நீர் பெருகச் செய்தனர். சுசந்தி என்பவருக்கும் அத்ரிக்கும் வீடு அமைத்துக் கொடுத்தனர்.

    மருத்துவம்– இவர்கள் சிறந்த மருத்துவர்கள். தண்ணீரிலும், செடிகளிலும், மரங்களிலும் உள்ள மருந்துகளை அறிந்து வைத்திருக்கிறார்கள், கர்ப்பத்தைத் தாங்குகிறார்கள் என்கிறது வேதம். கண்வருக்குக் கண் பார்வை தந்தனர். தந்தையால் கண் குருடாக்கப்பட்ட ரிஜ்ராச்வன் என்பவருக்குக் கண் பார்வை தந்தனர். ச்யாவன் என்பவர் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டார். இவர்கள் அவரை மீண்டும் நல்ல நிலைமைக்குக்  கொண்டு வந்தனர். கால் வெட்டுப்பட்ட விச்பலா என்ற பெண்ணுக்கு இரும்புக்கால் அமைத்துக் கொடுத்தனர்,  காலில்லாத பராவ்ரஜனை நடக்க வைத்தனர். ச்யவனரின் பழைய தோலைக் கவசம் போல் கழற்றிவிட்டுப் புதிய தோல் வளரச்செய்து, மீண்டும் இளமையாக்கினர். ருதுஸ்துபருக்கு சத்துணவு தந்தனர். மிகுதியாகக் குடித்த வம்ரனை அவனது நோயிலிருந்து மீட்டனர். தத்யங் என்பவருக்குக் குதிரைத் தலை அமைத்துக் கொடுத்து அவரிடமிருந்து த்வஷ்டாவின் வித்தையைக் கற்றனர்.

    வத்ரிமதியின் கணவனுக்கு வைத்தியம் செய்து பிள்ளை பாக்கியம் ஏற்படுத்திக் கொடுத்தனர், ச்யாவன் என்பவருக்கு நோயை நீக்கி மனைவி கிடைக்கச் செய்தனர். கோஷா என்பவள் வயதாகியும், நோயின் காரணமாகத் திருமணம் ஆகாமல் தந்தை வீட்டில் இருந்த போது அவளது நோயை நீக்கி திருமணம் நடக்கச் செய்தனர். மனைவியை அடைந்த கலி என்பவர் இளமையாக்கப்பட்டு ஆயுள் நீட்டிக்கப்பட்டார்.

    அச்வின்களின் மருத்துவம் மனிதர்க்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் பயன்பட்டது. ஷயு என்பவரின் மரத்துப் போன பசு மீண்டும் பால் கொடுக்க வைத்தனர். தேனீக்கள் இனிய தேன் தரச் செய்தனர்,  இவை இவர்களது மருத்துவ சாதனைகள்.

    பிற உதவிகள்– விமதன் என்பவர் புருமித்ரனின் மகளை மணந்து கொள்ள உதவினர். பேது என்பவருக்கு வெள்ளைக் குதிரை ஒன்றைத் தந்து அவர் வெற்றி பெற உதவினர். கக்ஷிவான் என்பவருக்காகத் தங்களது குதிரைக் குளம்பிலிருந்து 100 ஜாடி மது பெருகச் செய்தனர். வசன் என்பவர் தினமும் நிறைய செல்வம் பெற வழி செய்தனர். ஸுதாஸன், திவோதாஸன் என்போருக்கு செல்வ உதவி செய்தனர்.

    போர்– சர்யாதன், புருகுத்ஸர், க்ருசானு, பத்தர்வா ஆகியோருக்குப் போர்க்களத்தில் வெற்றி பெற உதவினர்.

    அத்ரிகு, பக்தன், பப்ரு, உபஸ்துத, கர்க்கந்து, குத்ஸர், ச்ருதர்யன், மேதாதிதி, வசன், தசவ்ரஜன், சிஞ்ஜாரன்,   துர்வீதி, தபீதி, த்வஸந்தி,  ப்ரியமேத, பரத்வாஜன், ப்ருச்னிகு, மந்தாதா, வய்யன், ச்யூமரச்மி என்போரும் இவர்களிடமிருந்து உதவி பெற்றவர்களில் அடங்குவர். இவை எத்தகைய உதவிகள் என்பது குறிப்பிடப்படவில்லை.

    குதிரை இல்லாத தேர் ஓட்டினர். சூரியனை வலம்வந்தனர். பஞ்சம், நோய் இவற்றை நீக்கினர். மனுவுக்கு உணவு தந்தனர் (விவசாய முறையைக் கற்றுக் கொடுத்தனர் என்கிறார் சாயணர்). கிணறு தோண்டினர், மகிழ்ச்சி தருபவர் என்ற பொருளில் மயோபூ, சம்பு என அழைக்கப்படுகிறார்கள். மாத்வீ (இனிமையானவர்கள்), புரணா (போஷிப்பவர்கள்), ஸுப்ரணீதி (நல்ல வழி காட்டுபவர்கள்) என்ற சிறப்புகளும் இவர்களுக்கு உண்டு.

    பிரார்த்தனை செய்தால் இவர்கள் உதவிக்கு வருவார்கள். மனோ வேகத்தில் வருகிறார்கள் (மனோஜுவா). வேதம் இவர்களை விட இவர்களது ரதத்தைத்தான் வெகுவாகப் புகழ்கிறது. அது க்ருதவர்த்தனி (நீர் வழியிலும் போகக்கூடியது), ஹிரண்யவர்த்தனீ (ஒளியுள்ள பாதையை உடையது), மூன்று தூண், மூன்று சக்கரம் கொண்டது, முக்கோண வடிவம் உடையது. எளிதில் இயங்குவது. மனத்தினால் பூட்டப்படும் குதிரைகளைக் கொண்டது (மனோயுஜாச்வாஸா). இது ரிபுக்களால் உருவாக்கப்பட்டது.

    மழையும் வலிமையும் ஒளியும் இவர்களது செல்வமாகக் கூறப்படுகிறது. அதை ஒட்டி இவர்களுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள்- வ்ருஷண்வஸு, வாஜினீவஸு, ஸூர்யாவஸு.

    மற்ற தேவர்களுடன் இவர்களது உறவு சிறப்பாகப் போற்றப்படுகிறது. இந்திரனோடு சவாரி செய்பவர்கள், வாயுவுடன் வாசம் செய்பவர்கள், ரிபுக்களுடனும் ஆதித்யர்களுடனும் மகிழ்பவர்கள், விஷ்ணுவுடன் பயணம் செய்பவர் என்று கூறப்படுகிறது. உஷாவுக்கு முன் வருபவர்கள் என்றும் சூரியனைத் தன் தேரில் சுமந்து வருபவர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.

    தேவர்கள் தனி்த்தனியாகப் போற்றப்பட்டாலும் ரிஷிகளின் ஒரு மன நிலையில் இந்த வேறுபாடு மறைந்து போகிறது. அதன்படி அச்வின்களும் மருத்துகளைப் போல ருத்ரனின் மக்களாகக் கூறப்படுகிறார்கள்.

    மற்ற தேவர்களைப் போல இவர்களும் ருதத்தை அனுசரிப்பவர்கள், ருதத்தைக் காப்பவர்கள். உஷஸைப் போல, இந்திரனைப் போல அச்வினின் குதிரைகளும் ருதத்தால் பூட்டப்பட்டவை. இவர்களும் வ்ருத்ரஹந்தமா (விருத்திரனைக் கொல்வதில் சிற்தவர்கள்).

    எல்லா வேள்விகளிலும் அச்வின்களுக்குச் சிறப்பிடம் உண்டு. இவர்கள் காலையில் பிழிந்து எடுக்கப்படும் ஸோம பானத்திற்கு உரியவர்களாகக் கூறப்-படுகிறார்கள். வேறு எந்தத் தேவருடைய வழிபாடும் இல்லாத இடத்திலும் அச்வின்களின் வழிபாடு நடைபெறுகிறது (8.10.4)  என்பது மற்ற தேவர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு. அச்வின்கள் தாஸர்களின் உணவை அனுபவிக்கிறார்கள் (8.5.31) என்பதால் இவர்கள் எல்லோருக்கும் இனியவர்கள் என்பது தெரிகிறது.

    படம் உதவி: http://totreat.blogspot.com/2012/10/ashvins-ayurveda-flying-doctor-family.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 22

    சு.கோதண்டராமன்.

     

     

    மருத்துகளும் வாயுவும்

    Vayu Deva
    மருத்துகள்
    மருத்துகள் என்பது ஒரு தெய்வக் கூட்டம். இதில் மொத்தம் 49 பேர் — ஏழு ஏழு பேர் கொண்ட ஏழு குழுக்கள்- இருப்பதாக ரிக் 5.52.17 கூறுகிறது. இவர்களது எண்ணிக்கை த்ரிஷஷ்டி என்று ரிக் 8.96.8 கூறுகிறது. இதன் நேர்ப் பொருள் 3X60=180 ஆனால் சாயணர் இதை 3+60= 63 என்று பொருள் கொள்கிறார். மொத்தத்தில் இவர்கள் எண்ணிக்கையில் மிகுந்தவர்கள் என்பது அறியப்படுகிறது.

    இவர்களது தந்தை ருத்ரன். தாயின் பெயர் ப்ருச்னி. இதற்குப் புள்ளிகள் கொண்டவள் என்று பொருள். இது ஒரு பசு என்று கூறும் குறிப்புகள் உள்ளன.

    இவர்கள் எல்லோரும் ஒரே தன்மையர். இவர்களில் மூத்தவர் இளையவர் என்று எவரையும் கூற முடியாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை. இவர்கள் இளைஞர்கள், களைப்பு அறியாதவர்கள். ரிஷபம் போலக் கொம்புகளையும், சூரியன் போலக் கண்களையும், குதிரை போல அழகிய தோற்றத்தையும், மாப்பிள்ளை போலக் கம்பீரத்தையும் கொண்டவர்கள்.

    இவர்கள் விண்ணில் வாழ்பவர்கள். இவர்களது வாகனம் கிலாஸ்ய, அதாவது, வெண்புள்ளிகள் கொண்ட மான். அது ப்ருஷத் அச்வா (புள்ளிகளுள்ள குதிரை) என்றும் அழைக்கப்படுகிறது.

    காட்டைக் கலக்கி, மலையைப் பிளக்க வல்ல இவர்களின் உதவியோடுதான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நதிகளை விடுவித்தார். வலிமையானவர்களும் விரைந்து செல்பவர்களுமான இவர்களை மலைகளோ நதிகளோ தடுக்க முடியாது. விண்ணையும் மண்ணையும் நடுங்க வைப்பவர்கள். மருத்துகளால் உதவப்பட்டோரை எவரும் வீழ்த்த முடியாது. இவர்கள் இந்திரனின் படை வீரர்கள். இந்திரனுக்கு அவருடைய அருஞ் செயல்களில் உதவியதால்தான் இவர்கள் யக்ஞியமான பெயர்களைப்  (தேவத் தன்மை) பெற்றார்கள் என்கிறது வேதம்.

    உரத்த குரலில் பாடுபவர்கள், மழையின் சோதரர்கள், வர்ஷ நிர்ணிஜ (மழையை உடையாகத் தரித்தவர்கள்), மேகத்தை விடுவிக்கிறவர்கள், மறைந்த செல்வத்தை வெளிப்படுத்துபவர்கள், தெய்வீக செல்வத்தைக் கீழே இறக்கித் தருபவர்கள், மூவுலகிலும் நதிகளின் சுழல்களிலும் இருப்பவர்கள் என்று கூறப்படுவதிலிருந்து மருத்துகள் என்பது புயற் காற்றைக் குறிக்கும் என அறிகிறோம்.

    புயற் காற்று கண்ணுக்குத் தெரியாது என்றாலும் இவர்கள் கண்ணுக்குத் தெரிகின்றவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். தங்க ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள், தங்க ரதத்தில் செல்கிறார்கள், தங்க நகை அணிந்துள்ளார்கள். ஒளி உடை தரித்தவர்கள். இவர்கள் செல்லுமிடத்தில் எல்லாம் ஒரு ஒளி பின் தொடர்கிறது. மின்னலை ஆயுதமாக உடையவர்கள் என்ற வர்ணனைகள் அவர்கள் புகழ் ஒளி பெற்றவர்கள் என்பதையே குறிப்பிடுகிறது.

    தெய்வ பூஜையில் ராட்சசர்களை அழைக்கும் மனிதர்களைச் சக்கரமில்லாத தேரில் வைத்துக் கீழே தள்ளுவது இவர்களது திறமை. இவர்கள் பக்தர்களின் அழைப்பை ஏற்று அவர்களிடம் வருகிறார்கள், அவர்கள் அளிக்கும் உணவை ஏற்று மகிழ்கிறார்கள். அவர்களுக்கு விரைவாக செல்வம், மக்கட்பேறு, உணவு, நீண்ட ஆயுள் முதலியன கொடுத்து அருள் புரிகிறார்கள். மக்களைக் காப்பாற்றுகிறார்கள். ஸுதானவ: (மிகுதியாகத் தானம் கொடுப்பவர்கள்) என்ற அடைமொழி இவர்களுக்குப் பல முறை அளிக்கப்படுகிறது.

    எல்லாத் தேவர்களுக்கும் வழங்கப்படும் அடைமொழிகளான  கவி, அறிவாளி, நர, ருதாவ்ருத, ஸ்வதாவின் படி நடப்பவர்கள், சூரி என்பவை இவர்களுக்கும் கொடுக்கப்- பட்டுள்ளன.

    வழிபாட்டுக்கு உரிய பெருமை உடையவர்கள் என்பதால் யஜத என்று சிறப்பிக்கப்படுகிறார்கள். இந்திரனையும் வருணனையும் வர்ணித்தது போல் இவர்களையும் சூரியன் பயணிக்க ஒரு ஒளிமயமான பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் என்று கூறி பரம்பொருளாகவே காண்கிறார்கள். 8.7.8

    வாயு
    மருத் என்பது மழை தரும் காற்றையும் வாயு என்பது சாதாரணக் காற்றையும் குறிப்பிடுகின்றன. மருத்துகள் பற்றி விரிவாகப் புகழும் வேதம் வாயுவுக்கு அவ்வளவு சிறப்பிடம் தரவில்லை.

    மற்ற தேவர்களைப் போல வாயுவும் அசுரர், மயோபு மகிழ்ச்சி தருபவர், த்ரவிணோதா செல்வம் கொடுப்பவர், நரர் என்ற அடைமொழிகளால் சிறப்பிக்கப்-படுகிறார். வாயுவின் தனித்தன்மைகளாவன- இவர் ப்ருஷத் யோனி (பல நிறமுள்ள ஆகாயத்தில் தோன்றியவர்). பஞ்சஹோதா (ஐந்து வகையான வாயுக்களையும் அழைப்பவர்). அதூர்த்த பந்தா (தடைபடாத வழியை உடைவர்). சோமபானம் வடிக்கப்பட்டால் அதை முதலில் பருகும் உரிமை வாயுவுக்கே உள்ளது.

    வாயு பூஷனுடன் சேர்ந்து பிரார்த்தனைகளைத் தூண்டுகிறார். இவருடைய குதிரைகளின் பெயர் நியுத். குளிர்ந்த இடத்திலிருந்து வெப்பமாக உள்ள இடத்தை நோக்கி வீசுவது வாயுவின் இயல்பு. அதை ரிஷி, வறுமை உள்ள இடத்துக்கு செல்வம் கொடுக்கப் போகிறார்  என்று வர்ணிக்கிறார்.

    படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா – http://upload.wikimedia.org/wikipedia/commons/1/19/Vayu_Deva.jpg

    Share
  • பார்ப்பனர் மீது பகைமை

    –சு.கோதண்டராமன்.

    பார்ப்பனர்தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திரைப்படங்களில் பரிகசிக்கப்படுகின்றனர். மேடைகளில் இகழப்படுகின்றனர். ஒரு உறுப்பினர் ஏதேனும் தவறு செய்தால் அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் குறை கூறும் போக்கு தமிழ் நாட்டில் காணப்படுகிறது. ஒரு பார்ப்பான் குடித்து விட்டுத் தரையில் கிடந்தால் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவார்கள். அதுவே வேறு சாதி்க்காரன் செய்தால் அவனது சாதிப் பெயரைச் சொல்வதில்லை. தமிழ்ச் சமூகம் பார்ப்பனர்களிடத்தில் உயர்வான நடத்தையை எதிர்பார்க்கிறது.

    தமிழ்நாட்டில் இன்றுவரை நடந்த சாதிக் கலவரங்களில் ஒன்றில் கூட பார்ப்பனர் பங்கு பெற்றதில்லை. ஆனால் சாதிக் கொடுமை என்று சொன்னால் முதலில் விமர்சிக்கப்படுவது அவர்கள் தாம்.

    பார்ப்பனர்களில் கலப்புத் திருமணம் நடந்துள்ள அளவுக்கு வேறு சாதிகளில் ஏற்பட்டுள்ளதா? சர்வே எடுத்து சதவீதம் பாருங்கள் தெரியும். ஆனாலும் சாதிக் கட்டுப்பாடு என்றால் சாடப்படுவது பார்ப்பனர் தாம்.

    பிரதாப முதலி தவறு செய்தால் ஆசிரியர் அவனைத் தண்டிக்கக் கூடாது, பதிலாக அவனுடைய நண்பன் கனகு முதலியை அடிக்க வேண்டும் என்று பெற்றோர் உத்திரவிடுவதாக  பிரதாப முதலி சரித்திரத்தில் வரும். ஆங்கிலத்தில் whipping boy என்பார்களே, அது போல யார் தவறு செய்தாலும் அடி வாங்குவதற்கு என்று விதிக்கப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.

    பாலசந்தர் அரங்கேற்றத்தில் ஒரு பார்ப்பனப் பெண் விபசாரியாக ஆவதைக் காட்டினார். பார்ப்பனர் உள்பட எல்லாரும் கண்டு மகிழ்ந்தார்கள், பாராட்டினார்கள். எழுத்தாளர் சுஜாதா தன் கதைகளில் பார்ப்பனர்களை இழிவுபடுத்தும் காட்சிகளை விவரித்திருக்கிறார். அதை எல்லோரும் படித்து இன்புற்றார்கள். அவரே ஒரு நாடார் பெண் ஓடும்போது ஏற்படும் உடல் அசைவை அவருக்கே உரிய நடையில் வர்ணித்தபோது நாடார் சமூகமே கொதித்து எழுந்தது. அவர் மன்னிப்புக் கேட்டார்.

    தனிப்பட்ட பார்ப்பனர் தாக்கப்பட்டால் வெகுண்டு எழுவர். ஆனால் சமூகம் என்ற வகையில் பார்ப்பனர்களுக்கு சூடு சொரணை கிடையாது. யாரையோ வைகிறான், வைதுவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவர்.

    ஏனெனில் பார்ப்பனர்களுக்கு சமூக உணர்வு என்று ஒன்று கிடையாது. சமூகம் என்றால் ஒன்றுபடுத்தும் சக்தி ஒன்று இருக்க வேண்டும். பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துவது எது? மொழியா? அல்ல. தமிழ்நாட்டில் தெலுங்கு மலையாளம், கன்னடம், துளு பேசும் பலர் உள்ளனர். அவரவர் ஆசாரங்கள் வேறு.

    சமயக் கொள்கையா? அல்ல. சைவம் வைணவம் என்று இரு பெரும் பிளவுகளுக்கு இடையே மூண்டிருந்த பகைமைத் தீ அணைந்துவிட்டாலும் இன்னும் புகைந்து கொண்டிருக்கிறது. மாத்வ சம்பிரதாயம் வேறு. பார்ப்பனர்களிலே கோயிலே கதியாகக் கிடப்போரும் உண்டு, கோயிலுக்கே போகாதாரும் உண்டு, நாத்திகவாதிகளும் பலர் உண்டு. வடமர், வாத்திமர் என்று தங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்பாத உட்பிரிவுகள் பற்பல.  குடும்பத்துக்குக் குடும்பம் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன.

    ஒரு தலைமை உண்டா? இல்லை. வைணவர்களில் வடகலை தென்கலைப் பிளவுகள். சைவர்களில் காஞ்சி மடத்தைச் சார்ந்தவர்களும் உண்டு, சிருங்கேரி மட ஆதரவாளர்களும் உண்டு. எந்த மடத்தையும் ஏற்காதவர் எண்ணிக்கை தான் மிகுதி.

    இத்தகைய நிலையில் பார்ப்பனர்களை ஒரு சமூகமாகக் காணவேண்டும் என்றால் அதற்கான ஒரே நியாயம் அவர்களது முன்னோர் வேதம் கற்றிருந்தனர் என்பது தான். இந்தத் தலைமுறையில் வேதம் கற்போர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. எதை வைத்து இன்று எல்லாப் பார்ப்பனரையும் ஒரே சமூகமாகக் கூற முடியும்?

    சிவாசாரியார்கள் பார்ப்பனர்களா? அல்ல. இரு திறத்தாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. பூணூல் அணிந்திருக்கிறார்கள், ஸம்ஸ்கிருத மந்திரம் கூறுகிறார்கள் என்பது தான் அவர்களைப் பார்ப்பனரோடு இணைப்பது. அவர்களுக்கு வேதப் பயிற்சி இல்லை, ஆகமப் பயிற்சி மட்டும் தான் உண்டு என்பதும் அவர்கள் பார்ப்பனராக்கப்பட்டவர் என்பதும் பலர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

    பூணூல் மட்டும் தான் பார்ப்பன அடையாளம் என்றால் பத்தர்களையும் கோமுட்டி, வாணிய செட்டியார்களையும் கூட பார்ப்பனர் என்று கூறலாம். ஸம்ஸ்கிருதம் அறிந்திருப்பது தான் பார்ப்பனீயம் என்றால் இன்று பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்களில் ஸம்ஸ்கிருதம் அறிந்தோர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. தமிழுக்குத் தொண்டு செய்த பார்ப்பனர்கள் அன்றும் இன்றும் மிகப் பலர். சென்ற நூற்றாண்டு வரை ஸம்ஸ்கிருதம் அறிந்த பிற சாதியினர் தொகை மிகுதி. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஒரு எடுத்துக்காட்டு.

    தாக்கப்படுதல் என்ற ஒரு தன்மை தான் பார்ப்பனர்களை ஒன்றுபடுத்துகிறது.

    மேடையில் பார்ப்பனர்களைத் தாக்குவோர் தங்கள் அந்தரங்க ஆலோசகராக, வழக்கறிஞராக, மருத்துவராக, ஆடிட்டராக பார்ப்பனர்களை அமர்த்திக் கொள்வது உலகறிந்தது.

    கேட்டால் பார்ப்பனர்கள் மீது எங்களுக்குப் பகை இல்லை. பார்ப்பனீயம் தான் எங்கள் எதிரி என்பார்கள். அது என்ன ஈயம்? விளக்கம் கேட்டால் பதில் கிடைக்காது. அவர்களுக்கே தெரியாது.

    மற்றவர்களுக்கு வேதம் கற்பிக்க மறுப்பது தான் பார்ப்பனீயம் என்ற வாதம் தற்போது எடுபடாது. எந்தச் சாதியாக இருந்தாலும் பூணூல் அணிவித்து வேதம் கற்பிக்கத் தயாராக உள்ள பார்ப்பன நிறுவனங்கள் இன்று உள்ளன. பார்ப்பனரல்லாதார் எத்தனை பேர் அதில் சேர்ந்துள்ளார்கள்?

    இணையத்தில் வேதம் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதே, வேதத்தை இகழ்வோர் எத்தனை பேர் அதைப் படித்துவிட்டு ஆதாரத்துடன் இகழ்கிறார்கள்?

    கோயில் பூசைக்கு மற்றவர்களை அனுமதிக்கவில்லை என்பது அந்த ஈயங்களில் ஒன்று. இன்று எல்லாச் சாதியினருக்கும் ஆகமப் பயிற்சி அளிக்கப்படுகிறது. எத்தனை பேர் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பயிற்சி பெற்ற சிலரும் அதில் போதிய வருவாய் வருவதில்லை என்று அதை விட்டு விட்டு வேறு தொழிலை நாடுவதைப் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம்.

    ஒரு நேர்முகத் தேர்வில் தோற்றுப் போன ஒருவன் பார்ப்பானுக்குப் பார்ப்பான் உதவி செய்துவிட்டான். எனக்குக் கிடைக்கவில்லை என்று புலம்பினான். நேர்முகம் நடத்தியவர் பார்ப்பனர் அல்ல என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே பேச்சை மாற்றிக் கொண்டு பார்ப்பான் ஏதோ சாமர்த்தியம் செய்து காசைக் கீசைக் கொடுத்து வேலை வாங்கிவிட்டான் என்று சொல்லத் தொடங்கினான். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பார்ப்பனீயத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் அவர்களுக்கு ஒரு சமாதானம் ஏற்படுகிறது.

    பார்ப்பனீயம் என்று இவர்கள் சொல்வதின் உண்மையான வடிவம் என்ன என்றால் அவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். விரைவில் முன்னேறி விடுகிறார்கள் என்பது தான். இது தோல்வியுற்றவர்களுக்கு ஏற்படும் பொறாமை உணர்வு. இதை மறைத்து அதற்கு வரலாற்றைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

    3000 ஆண்டுகள் முன்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய்கள் வழியாக வந்து வட இந்தியாவிலிருந்த திராவிடர்களைத் தெற்கே துரத்தியதும் அல்லாமல் தெற்கிலும் குடியேறினர் என்று என்றைக்கோ ஒரு விஷமக்கார ஆங்கிலேயன் எழுதி வைத்த,  புளித்துப் போன வாதத்தைக் கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதில் இவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. அவன் எழுதியது சரி தானா என்று எத்தனை பேர் சுயமாக வரலாற்றை ஆராய்ந்திருக்கிறார்கள்?

    பார்ப்பனர் மீது வெறுப்பு என்பது தமிழ்நாட்டுக்கே உரியது. கேரளம் முதலான பிற தென் மானிலங்களில் உள்ள பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அங்கு இந்தத் துவேஷம் காணப்படாதது ஏன்? இவர்கள் கூற்றுப்படி வட இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களும் கைபர் கணவாய் மூலம் வந்தவர்கள் தாமே?

    இந்த வெறுப்பு பற்றி முழுமையாக ஆராய்வோம். இதற்கு வரலாற்று ரீதியான பொருளாதாரக் காரணம் உண்டு. தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒரு பகுதியினர் (எல்லோரும் அல்ல) வந்தேறியவர்கள் தாம். பாரசீகத்திலிருந்து அல்ல. தென்னிந்தியாவின் வடபகுதியிலிருந்து. 3000 வருடங்கள் முன்பு அல்ல. சுமார் 1500 வருடங்கள் முன்பு. கடந்த 3000 வருட இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் கடந்த காலங்களில் பார்ப்பனரும் அல்லாதாரும் இணக்கமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். பகைமை உணர்வு ஏற்பட்டது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். முழுமையாக ஆராய்வோம்.

    பூர்விகக் குடிகள் – தொல்காப்பியர் காலம்  
    தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர்கள் இருந்திருக்கிறார்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுவகைத் தொழில் கொண்ட பார்ப்பனப் பக்கத்தையும், நான்மறைகளையும் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. [புறத்திணை இயல் 16, மரபியல் 71 ,  பாயிரம்.]

    பூர்விகக் குடிகள் – சங்க காலம்
    சங்க காலத்தில் அந்தணர்கள் மிக உயர்வாக மதிக்கப்பட்டனர் என்பதற்கான பல சான்றுகள் அக்கால இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. நின் முன்னோர் எல்லாம் பார்ப்பனர் நோவன செய்யார் என்று ஒரு புலவர் ஓர் அரசனிடம் கூறுவதாக உரைக்கிறது புறம் 43. புறம் 99இல் ஔவையார் அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர் அமரர்ப் பேணி ஆவுதி அருத்திய (தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்த) பெருமையைப் பேசுகிறார். புறம் 166, நான்கு வேதம், ஆறு ஆங்கம் ஓதி உணர்ந்த அந்தணர்கள் அறம் ஒன்று மட்டுமே புரிந்ததையும் 21 வகையான வேள்விகள் பற்றியும் குறிப்பிடுகிறது. புறம் 367 முத்தீ பற்றிக் குறிப்பிடுகிறது.

    சங்க காலப் புலவர்களில் பலர் அந்தணர்கள். புறநானூற்றுப் புலவர்களில் மூவர் –  தாமோதரனார், பெருஞ்சாத்தனார், பேரிசாத்தனார் – வடம வண்ணக்கண் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர். வடம என்ற சொல் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம். இவ்வாறு வடம என்ற அடைமொழி பெறாத அந்தணர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் கபிலர், கவுணியன் விண்ணந்தாயன். அவர்கள் இந்த மண்ணின் பூர்விகக் குடிகளாக இருத்தல்  வேண்டும்.

    பூர்விகக் குடிகள் – களப்பிரர் காலம்
    களப்பிரர் காலத்தில் வாழ்ந்த பூர்விகக் குடி அந்தணர்களில் ஒரு பிரிவினர் சோழியர் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். குறைந்தது, சோழநாடு முழுவதும் பரவி இருக்கவேண்டும். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இன்று தில்லை தவிர்த்தப் பிற பகுதியில் இருந்த சோழியப் பிராமணர்கள் புதிதாக வந்தவர்களுடன் கலந்து விட்டனர்.

    1. தீட்சிதர்கள்    
    நடராஜாவை முதல்வராகக் கொண்ட, தில்லை மூவாயிரவர் என்று முற்காலத்தில் சிறப்பிக்கப்பட்ட இவர்கள் இன்று எண்ணிக்கையில் சில நூறுகளாகக் குறைந்துவிட்ட போதிலும் பிற அந்தணர்களுடன் திருமண உறவு கொள்ளாமல் தங்கள் தனித் தன்மையை இன்றும் பாதுகாத்து வருகின்றனர். தங்கள் சிகையைப் பக்கவாட்டில் முடிந்து கொள்ளும் இவர்களது முறை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டது. முன் குடுமிச் சோழியன், சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற வழக்காறுகளில் குறிப்பிடப்படுபவர்களும் சோழநாட்டின் பூர்வீகக் குடிகளுமான சோழியர்களில் ஒரு பிரிவினராக இவர்கள் இருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். ஆனால் இன்று அவர்கள் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் தீட்சிதர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தீட்சிதர் என்பது ஒரு குலப் பெயரல்ல. விரதம் பூண்டவர் என்று பொருள்படும் இப்பட்டம், யாகம் செய்தவர்களுக்கும் அவர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே உரியது. மற்ற தீட்சிதர்களுக்கும் தில்லை தீட்சிதர்களுக்கும் தொடர்பு இல்லை. மற்றச் சோழியர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவே இவர்கள் முன் குடுமியைப் பக்கவாட்டுக் குடுமியாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். [முன் குடுமி வழக்கம் கொண்ட கேரள நம்பூதிரிகளும் இந்தச் சோழியரே என்றும் ஆதி சங்கரர் அந்தக் குலத்தில் தோன்றியவர் என்றும் காஞ்சி மஹாஸ்வாமிகள் கூறுகிறார். தெய்வத்தின் குரல் பாகம் 5 சங்கரர் வரலாறு]

    2. நம்பியார்கள்    
    சைவத்தைச் சார்ந்த 300 சோழிய அந்தணர்கள் ஆவுடையார்கோவிலை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தனர். தில்லை மூவாயிரவர் போல, இவர்கள் ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் எனப்பட்டனர். இன்று அக்கோவிலில் பூசை செய்பவர்கள் மட்டும் நம்பியார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள். இவர்கள் இன்றும் தங்களைச் சோழியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் முன்குடுமியைக் கைவிட்டு விட்டனர். ஆனால் ஆவுடையார் கோவிலில் உள்ள சிற்பங்கள் அங்கு முன்பு வாழ்ந்த பார்ப்பனரும், பிறரும் முன்குடுமி கொண்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.

    3. தென்கலை வைணவர்கள்    
    பழந் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு நம்பி என்ற பட்டம் பெருவழக்காக இருந்ததைப் பார்க்கிறோம். தென்கலை வைணவர்களும் சோழியர்களே. அவர்களும் நம்பி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தனர். ராமானுஜரின் உறவினர்களும் குருமார்களும் பலர் நம்பி என்ற பின்னொட்டு தாங்கியவர்கள்.

    4. ஆனைக்கா அந்தணர்கள்
    திருவானைக்காவில் பூஜை செய்பவர்கள் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் எனப் பல்வகைப் பட்டப் பெயர்களைக் கொண்டவர்கள். இவர்கள் இன்று வடமர்களுடன் கலந்து விட்டாலும் இவர்களது முன்னோர்கள் முற்காலத்தில் சோழியர்களாகவே இருந்திருத்தல் வேண்டும். (பல ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவெள்ளறைக் கோவிலின் முதிய பட்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு சொலவடை சொன்னார். ஆதி ரங்கம், அடுத்து வெள்ளறை, அடுத்தது ஆனைக்கா என்று பொருள்படும் அது எனக்கு மறந்து விட்டது. மறவாதது, இம்மூன்று தலங்களிலும் பூசை செய்பவர்கள் சோழியர்கள் என்று அவர் கூறியது.)

    5. வீழி அந்தணர்    
    ஆவுடையார்கோவில் முந்நூற்றுவர் போல் திருவீழிமிழலை அந்தணர் ஐநூற்றுவர் என்ற வழக்கும் உண்டு. இவர்களும் பண்டைச் சோழியர்களாகவே இருத்தல் கூடும். ஆனால் இன்று அங்கு சோழியர் என்று சொல்லிக் கொள்வோர் இல்லை.

    6. நயினார், பட்டர், திருசுதந்திரர்
    திருவாரூரில் பூசை செய்பவர்களில் சிலர் நயினார் என்றும், சிலர் பிரமராயர் என்றும் கூறப்படுகின்றனர். திருச்செந்தூரில் பூசை செய்யும் திருசுதந்திரர் என்பவர்களும் மதுரைக் கோவிலில் பூசை செய்யும் பட்டர்களும் இத்தகைய பழந் தமிழ்க் குடிகளே. பிற ஊர்க் கோவில்களில் பூசை செய்பவர்களும் கல்வெட்டுகளில் பட்டர் என்றே குறிக்கப் பெற்றுள்ளனர். ஆனால் இன்று மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தவிர ஏனையோர் தங்களைச் சிவாசாரியர்கள் அல்லது குருக்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர்.

    7. களப்பிரர் கால அந்தணர்கள்
    சைவ சமய வரலாற்றில் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த அந்தணர்களின் பங்கு முக்கியமானது. தில்லை மூவாயிரவர், ஆவுடையார் கோவில் முந்நூற்றுவர், திருவீழிமிழலை ஐநூற்றுவர், திருவானைக்கா சோழியர்கள், செந்தூர் ஈராயிரவர் தவிர பிற அந்தணர்கள் அக்காலச் சமய மாற்றங்களுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள் என்பது சைவச் சோழியர்களின் எண்ணிக்கை சுட்டப்பட்டதிலிருந்து அறியலாம்.

    அது என்ன சமய மாற்றங்கள்?
    தொல்காப்பியத்தில் சிவன் வழிபாடு இல்லை. சங்க இலக்கியங்களிலும், அம்மையார் பாடல்களிலும் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்ற பெயர் ஏற்பட்டதும் ஐந்தெழுத்து பிரபலமானதும் சைவம் வைணவத்திலிருந்து வேறுபட்ட தனிச் சமயமாக ஆனதும் அம்மையாருக்கும் சம்பந்தருக்கும் இடைப்பட்ட காலத்தில் தான்.

    சைவம் அரச ஆதரவைப் பெற்றது. இத் தெய்வம் வேதத்தில் இல்லாதது என்பதால் வேள்விகளில் சிவனுக்கு அவிர்ப்பாகம் கொடுப்பதை மற்ற அந்தணர்கள் எதிர்த்திருக்கக் கூடும். இறுதியில் சைவ அந்தணர்கள் வெற்றி பெற்றனர். இதுவே தக்கன் கதை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செய்தியாகும். அம்மையாரால் குறிப்பிடப்படாத இப் புராண நிகழ்ச்சி, தேவாரத்தில் பெருமளவு குறிக்கப்படுவதிலிருந்து இது இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

    புதிய குடியேற்றம்
    அம்மையார் காலத்துக்குப் பின் வந்து குடியேறியவர்களில் வடமர் என்ற குழு மட்டும் தமிழ்ப் பெயரைத் தாங்கி நிற்கிறது. (சங்க காலத்திலும் வடமர் இருந்தனர் என்று பார்த்தோம்.) மற்றவற்றின் பெயர்கள் வடமொழியில் உள்ளன. எண்ணிக்கையில் மிகுந்தவர்களும் வடமர்களே. பல்லவர் காலத்தில் வந்த பிரகசரணம் (தண்டந்தோட்டம் கல்வெட்டு), வாத்திமர், கேசியர், ராஜேந்திர சோழன் காலத்தில்  குடியேற்றப்பட்ட அஷ்ட ஸஹஸ்ரம் ஆகிய குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் உரியதாக தலா பதினெட்டு கிராமங்கள் உண்டு. வடமர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். குறிப்பாக, சோழநாட்டில் வாழ்ந்த வடமர் எண்ணிக்கை மிகுதி.

    இவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பல்வேறு காலங்களில் வடபுலத்திலிருந்து குடியேறியவர்களாக இருக்க வேண்டும். வடமருக்கு மட்டும் தமிழ்ப் பெயரும் மற்றவர்க்கு வடமொழிப் பெயரும் இருப்பதிலிருந்து பின்வருமாறு ஊகிக்கலாம். முதலில் வந்தவர்களுக்கு இங்குள்ள தமிழர்கள் தமிழில் வடமர் என்று பெயர் சூட்டினர். பின்னர் வந்தவர்களும் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் தங்களைச் சாராதவர்கள் என்று வேறுபடுத்திக் காட்டுவதற்காக வடமர்கள் தங்கள் மொழியில் அவர்களுக்குப் பெயரிட்டு இருக்கலாம். எல்லோரும் வருணத்தால் அந்தணர் எனினும் இக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை. பின்னர் வந்த ஒவ்வொரு குழுவுக்கும் 18, 18 கிராமங்களை ஒதுக்கிவிட்டு பெரும்பான்மையான இடங்களில் வடமர் வாழ்ந்தனர்.

    சோழ நாட்டில் இவர்களுக்கென இறையிலி நிலங்கள் பெருமளவில் வழங்கப்பட்டிருப்பதை நோக்கும் போது, களப்பிரர் காலத்தில் சமணத்தால் சீரழிந்த வைதிக சமயத்திற்குப் புத்துயிர் கொடுக்கவென, வலிமை குன்றிய நிலையில் இருந்தபோதும் சோழ அரசர்கள் இவர்களைப் பெருமளவில் குடியேற ஊக்குவித்திருக்கலாம் என்பது அறியப்படுகிறது.

    ஜெயமோகன் 9.8.2014 அன்று அவரது வலைத்தளத்தில் எழுதியதிலிருந்து ஒரு பகுதி.

    கேரளத்துக்கு வந்த ஆந்திர தேசத்து வைதீகர்கள் கேரள மன்னர்களால் விரும்பி வரவேற்கப்பட்டார்கள். ஏன் என்பதை நாம் வரலாற்றுக் கோட்பாட்டாளரான டி.டி.கோஸாம்பியின் பார்வையில் விளங்கிக்கொள்ள முடியும். அக்காலகட்டத்தில் பலவகையான இனக்குழுக்களை ஒன்றாகத்திரட்டி ஓர் அரசமைப்பை உருவாக்கும் முக்கியமான கருத்தியல் சக்தியாக வைதிகம் விளங்கியது. இந்திய நிலப்பகுதியெங்கும் பிராமணர்களின் சாத்வீகமான அதிகாரப்பரவலாக்கம் மூலமே படையெடுப்புகள் இல்லாமல் இனக்குழுக்கள் வெல்லப்பட்டு, ஒற்றைச்சமூகமாக திரட்டப்பட்டு, அரசு உருவாக்கம் நிகழ்ந்தது என்கிறார் டி.டி.கோஸாம்பி அந்த வழிமுறையையும் டி.டி.கோஸாம்பியே சொல்கிறார். பெருமதம் சார்ந்த கோயில்களை நிறுவுவதும் நாட்டார் வழிபாட்டுத்தெய்வங்களை பெருந்தெய்வங்களாக மாற்றுவதும் முதல்படி. அந்த நம்பிக்கையின் மையச்சரடில் பல்வேறு சாதிகளை அடுக்குவது அடுத்த படி. அவர்கள் அனைவரும் ஏற்கும் கருத்தியல் அதிகாரம் இவ்வாறாக நிறுவப்படுகிறது. அந்த அதிகாரத்தை தங்களை ஆதரிக்கும் மன்னர்களுக்கு வைதீகர்கள் அளிக்கிறார்கள். அவ்வாறாக க்ஷத்ரிய – வைதிக கூட்டு உருவாகிறது. இதுவே நம் மரபின் அதிகாரக்கட்டுமானத்தின் சூத்திரம்.

    அது போல, சோழ மன்னர்களும் புறச்சமயத்தோரான களப்பிரர்களுக்கு எதிராகத் தங்கள் அதிகாரத்தைச் சைவம் மூலம் நிலைப்படுத்துவதற்காக, வட மாநிலங்களிலிருந்து அந்தணர்களை வரவழைத்திருக்கலாம்.

    புதிதாகக் குடியேறிய எல்லோருமே சைவத்துக்கு ஆதரவு அளித்தார்கள் எனக் கூற முடியவில்லை. சிலர் வைணவத்தின் பக்கம் சார்ந்தனர். அவர்களே வடகலை வைணவர்கள் எனப் பெயர் பெற்றனர். இவர்கள் வைணவத்தைப் பின்பற்றிய போதிலும் தென்கலை வைணவர்களுடன் சமய நடைமுறைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தனர். சமூக அளவிலும் அவர்கள் தென்கலையாருடன் உறவு கொள்வதைத் தவிர்த்தனர். வடகலை வைணவர்கள் இறந்தால் தீட்டுக் காக்கும் வழக்கம் வடமரிடையே இருந்ததாகக் கூறப்படுவதிலிருந்து [The people of India –Tamilnadu, vol.  3 – Page 1407– Author V.S.Deep Kumar, Editor K.S.Singh .] இவர்கள் வடமர்களே என்பதும் சமய வேற்றுமை காரணமாகப் பிற்காலத்தில் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர் என்பதும் தெரிகிறது. [தென்கலை வைணவர்கள் தமிழுக்கும் கோவில் வழிபாட்டுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வடகலையார் வைதிகச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிலிருந்து வடமர்களில் வைணவத்தைத் தழுவியோரே வடகலை வைணவராயினர் என்பது தெரிகிறது]

    வடக்கிலிருந்து வேதியர்கள் இக்காலத்தில் குடியேறியதை எப்படி அறிகிறோம்? அம்மையார் காலம் வரை இல்லாத திருநீறு பூசும் வழக்கமும் கணபதி வழிபாடும் தேவாரக் காலத்தில் ஏற்பட்டு விட்டன. (அம்மையார் ஈசனைச் சுடலைச் சாம்பல் பூசியவனாக வர்ணிக்கிறாரே அன்றித் தானோ பிற அடியாரோ திருநீறு பூசியிருப்பதாகக் கூறவில்லை.) இவ்விரண்டும் இந்தியாவில் தமிழ்நாடு தவிர, மராட்டியப் பகுதியில் மட்டும் தான் உண்டு. எனவே ஒரு வேதியக் கூட்டம் அப்பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    இவ்விரண்டும் அந்தணர் அல்லாத பிறரால் வந்திருக்கக் கூடாதா என்ற கேள்வி எழலாம். மராட்டியப் பகுதியின் சித்பாவன் பிராமணர்களின் உடல் அமைப்பு தமிழ் நாட்டில் சில பிராமணரிடம் காணப்படுகிறது என்று நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார். [A History of South India –K.A.N.Sastry] மேலும், தமிழ்நாட்டு ஸ்மார்த்தப் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதை நதிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். எனவே வந்தவர்கள் நர்மதை நதிக்கரையை ஒட்டிய விதர்ப்பா பகுதியைச் சேர்ந்த அந்தணர்கள் என்று தெரிகிறது.

    திருநாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், திருவொற்றியூர் காரோணம் என்ற பெயர்களை குஜராத் மாநிலத்தின் கார்வான் பகுதியில் தோன்றிய லகுலீச பாசுபத சமயத்தோடு தொடர்பு படுத்தும் வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. இந்தப் பாசுபதர்கள் தாம் சைவத்தை ஒரு தனிச் சமயமாக உருவாக்கினர். அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தான் மிகுதியாக ஏற்பட்டது என்பதையும் கவனிக்க.

    மராட்டிய வடமர்கள் தவிர விந்தியமலைக்கு அப்பாலிருந்தும் சில அந்தணர்கள் குடியேறி இருக்க வேண்டும். என்பதைப் பின் வரும் கதைகளிலிருந்து ஊகிக்கலாம்.

    யாக்ஞவல்கியர் என்பவர் வைசம்பாயனரின் சீடர். சில காரணங்களால் சீடனைக் கோபித்த அவர் நான் கற்றுக் கொடுத்த வேதத்தைக் கக்கிவிட்டு வெளியேறு என்று உத்திரவிட்டார். அவர் அதைக் கக்கியதாகவும் மற்ற சீடர்கள் புறா உருக் கொண்டு அதை உண்டதாகவும் கூறுவர். அதுவே கிருஷ்ண யஜுர் வேதமாகும். பின்னர் யாக்ஞவல்கியர் சூரியனைக் குருவாகக் கொண்டு மீண்டும் வேதத்தைப் பயின்றார். அது சுக்ல யஜுர்வேதம் எனப்படுகிறது. வட இந்தியாவில் யஜுர் வேதக்காரர்களில் சுக்லப் பிரிவினர் மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் சுக்ல யஜுர் வேதக்காரர்கள் மிகக் குறைவு. அவர்கள் சென்ற நூற்றாண்டு வரை மத்தியான்னப் பறையர் என்று அழைக்கப்பட்டனர்.

    அடுத்த கதை பெரிய புராணத்தில் உள்ள சோமாசி நாயனாரைப் பற்றியது. அவரைப் பற்றிச் சேக்கிழார், சிவனடியார் எத்தன்மையராக இருப்பினும் அவரை வணங்குபவர் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.

    எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
    அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
    சித்தம் தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதும் வாய்மை
    நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

    இது தொடர்பாக செவிவழிச் செய்தி ஒன்று உண்டு. சோமாசியார் ஒரு வேள்வி செய்தார். அதற்குச் சிவபெருமான் நேரில் வந்து அவிர்ப்பாகம் பெறவேண்டுமென்று விரும்பினார். பல அந்தணர்கள் புடை சூழ வேள்வி நடந்து கொண்டிருக்கும்போது உணவு வேண்டி ஒரு சண்டாளன் வந்ததைக் கண்ட சோமாசியார், வித்தையிலாப் புலையனும் அஃதென்னும் வேதம் என்பதற்கிணங்க அவிர்ப்பாக உணவை அந்தச் சண்டாளனுக்கு அளித்தார். மற்ற அந்தணர்கள் அதை எதிர்த்தனர். சண்டாள வடிவில் இருந்த சிவன் அந்தணர்களைப் பறையர்களாக மாற்றிச் சபித்தார். அவர்கள் தவறை உணர்ந்து மன்னிக்க வேண்டிக் கொண்டதன் பேரில் சாபத்தின் கடுமையைக் குறைத்து, மத்தியானத்தில் மட்டும் நீங்கள் பறையர்களைப் போல் நடந்து கொள்வீர்களாக என்றார்.

    இந்த இரண்டு கதைகளையும் சேர்த்துப் பார்க்கையில் கீழ்க்கண்டவாறு  நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    விந்தியத்திற்கு வடக்கிலிருந்து இங்கே குடியேறி இருந்த பிராமணர்களைக் கொண்டு சோமாசியார் வேள்வி செய்திருக்கலாம். அவர்கள் ருத்திரனை யாகத் தலவனாகக் கூறும் ருக்வேத வழியைப்(ருக் 1.43.4, 4.3.1, 1.72.6) பின்பற்றாமல், ருத்திரனுக்குக் காயமுற்ற பிராணிகள், மீந்து போனது, தரையில் சிந்தியது இவை தான் கொடுக்கப்படவேண்டும் என்ற சதபத பிராமண [சதபத பிராமணம் 1.7.4.9 as quoted in The concept of Rudra Siva through the ages by Mahadev chakravarti] வழி வந்தவர்களாக இருக்கக் கூடும். ருத்திரனின் மறு பெயராகக் கருதப்பட்ட சிவனுக்குப் பிரதானமான இடம் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளாமல், தட்சன் கதையில் நடந்தது போல, எதிர்த்திருக்கலாம். அதன் காரணமாக அவர்களை உள்ளூர் அந்தணர்கள் புறம் தள்ளி இருக்கலாம்.

    குடியேறிய வடமர்கள் வேதம் ஓதிக் கொண்டும் வேள்விகள் செய்து கொண்டும் இருந்தார்களே அன்றிக் கோவில் பூசகர்கள் பணியில் ஒரு போதும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. கோவிலுடன் அவர்களது தொடர்பு அங்கு அத்தியயன பட்டர் பணி – வேத பாரயணம் செய்தல்- மட்டுமே.

    சிவாச்சாரியார்கள்
    சோழர் காலத்தில் கோயில்களின் எண்ணிக்கை பெருகியது. எனவே கோயிலில் பணி புரிவதற்குரிய பூசகர்களின் தேவையும் மிகுந்தது. எனவே பிற சாதியினர் பூசகராக ஆக்கப்பட்டிருப்பர் என்று நினைக்க இடமுண்டு. சிவன் கோவில் பரிசாரகர் பிராமணப் பிள்ளை எனச் சோழநாட்டில் அழைக்கப்படுவது இதற்கு வலுச்சேர்க்கிறது.

    சோழர் காலக் கல்வெட்டுகளில் பூசகர்கள் சிவப் பிராமணர்கள் எனக் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் பெரும்பாலும் நம்பி, பட்டர், பட்டஸ்ய என்னும் பின்னொட்டைக் கொண்டிருந்தது. இப்பெயரைக் குடியேறிய பிராமணர்கள் வைத்துக் கொள்வதில்லை. பட்டர், நம்பி என்பன பழமையான அந்தணரைக் குறிப்பன. வைணவப் பூசகர்கள் பட்டாசாரியர் என அழைக்கப்படுகின்றனர். பட்டஸ்ய என்பது பட்டருடைய என்று பொருள் தருவது. இது புதிதாக அந்தணராக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம்.

    மயூரசன்மன் என்னும் கடம்ப மன்னன் காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் பிராமணர் அல்லாதார் சிலரைப் பூணூல் அணிவித்து அந்தணராக்கி அவர்களுக்குப் புதிய பின்னோட்டுப் பெயர் அளித்ததாகக் கூறப்படுகிறது. [The peoples of India Vol – I  page 169] அது போலத் தமிழகத்திலும் செய்யப்பட்டிருக்கலாம்.

    திருவலஞ்சுழிக் கல்வெட்டு ஒன்றில் ஒரு சிவாசாரியரின் பெயர் திருவெண்காடன் செட்டி பெரியான் என்று கூறப்படுவது இதை வலுப்படுத்துகிறது. மேலும், அந்தணக் குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கும்போது சூத்திரம், கோத்திரம் சுட்டுவது இயல்பாகும். ஆனால் வலஞ்சுழியில் காணப்படும் கல்வெட்டுகள் சிலவற்றில் இந்நிலை இல்லை. [வலஞ்சுழிவாணர்– மு.நளினி, இரா.கலைக்கோவன்.] பூர்விக இடத்தைப் பொறுத்து இன்றைய சிவாசாரியர்கள் திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று வகையினர். இந்த மூன்று இடங்களிலும் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து சிவாசாரியர்கள் வரவழைக்கப் பட்டுக் குடியமர்த்தப்பட்டனர் என்று சித்தாந்த சாராவளிக்கு உரை எழுதிய அனந்த சிவாசாரியர் கூறுகிறார்.[புதுவை மண்ணில் ராசராசன் கண்ட கலைக்கோயில் – அரு. அப்பாசாமி பக்.147] தமிழ்நாட்டுச் சிவாசாரியர்கள் பண்பாட்டு வகையில் தமிழர்களாகவே இருப்பதால் அவர்கள் இந்த மூன்று இடங்களில் ஆந்திர ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட பிற சாதித் தமிழர்களாக இருக்கக் கூடும் என்று தெரிகிறது. புதிதாகப் பூசகர் ஆக்கப்பட்டவர்கள் பழைய பட்டர்களுடன் திருமண உறவு கொண்டிருக்கலாம்.

    பிராமணரின் பல வழக்கங்களைக் கடைப்பிடித்த போதிலும் இன்றும் சிவாசாரியர்கள் தங்களைப் பிராமணரிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

    தமிழ் நாட்டில் ஸம்ஸ்கிருதம் வைதிகச் சமயத்தவரால் புகுத்தப்பட்டது அல்ல
    தொல்காப்பியர் காலத்திலேயே வடசொற்கள் இருந்ததை அறிகிறோம். சங்க காலத்திலும் வேதம், வேதியர், ஸம்ஸ்கிருதம் யாவும் இருந்தன. வட சொல் பயன்பாடு மிகுதிப்பட்டது களப்பிரர் காலத்தில் தான். வடக்கிலிருந்து வந்த சமண சமயம் சூரசேனி என்னும் பிராகிருதத்தையும், சாக்கியம் பாலி என்னும் பிராகிருதத்தையும் கொணர்ந்தன. மகாயான புத்த மதமோ ஸம்ஸ்கிருதத்தையே முழுவதும் பயன்படுத்தியது.

    பிராகிருதம் என்பது ஸம்ஸ்கிருதத்தின் கொச்சை வடிவம், அக்கால வட இந்தியாவின் பேச்சு மொழி. தென்னாட்டில் ஸம்ஸ்கிருதம் இலக்கிய மொழியாக இருந்தது. பிராகிருதம் வழக்கில் இல்லை. காளிதாசரின் நாடகங்கள், உயர்குடி ஆண் பாத்திரங்கள் ஸம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் பெண்களும் தாழ்குடியினரும் பிராகிருதத்தில் பேசுவதாகவும் அமைந்துள்ளன. சமண சாக்கிய இலக்கியங்கள் பிராகிருதத்தில் அமைந்துள்ளன.

    வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர் தமிழ் மக்களுடன் பிராகிருதம் மூலமாகத் தொடர்பு கொண்டிருக்க முடியாது. ஆயினும் தமிழ்நாட்டில் ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் அந்தணர்களிலும் மற்றவர்களிலும் சிலர் இருந்திருக்க வேண்டும். எனவே தம் கொள்கைகளைப் பரப்பப் பிராகிருத மொழியை விட ஸம்ஸ்கிருதமே ஏற்ற ஊடகம் என உணர்ந்து அவர்கள் அதையே பயன்படுத்தி இருக்கக் கூடும்.

    திருஞான சம்பந்தரின் பாடல்களை விட அப்பரின் பாடல்களில் தான் வடசொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மருள் நீக்கியார் என்ற தமிழ்ப் பெயர் தாங்கிய அப்பர், சமண சமயத்தில் சேர்ந்த பின் தருமசேனர் என்ற வடமொழிப் பெயர் பெற்றதையும், தருமபாலர், புத்தமித்திரர் போன்ற வடமொழிப் பெயர் தாங்கிய புறச் சமயத்தார் அனைவரும் பச்சைத் தமிழரே என்பதையும்  கவனிக்க வேண்டும்

    எனவே தான் மண்ணின் மொழியில் பாக்கள் இயற்றிய ஞானசம்பந்தர் தன்னைத் தமிழ் ஞானசம்பந்தன் என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறார். திருமூலரும் என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்று கூறிப் பரவசப்படுகிறார்.

    ஆலயங்களில் ஸம்ஸ்கிருதம் புகுந்தது எப்படி?
    சமணத்திலிருந்து புதிதாகச் சைவத்துக்கு வந்தவர்களைக் கவர்வதற்காக ஸம்ஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மதம் மாறியவரின் உற்சாகம் என்பதற்கிணங்கப் புதிதாக அந்தணராக்கப்பட்டவர்கள் பழைய அந்தணர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஸம்ஸ்கிருதத்தை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கி  இருக்கலாம்.

    சோழ அரசர்கள் அந்தணர்களுக்கு வரியில்லாத நிலங்களை மானியமாக அளித்தார்கள் என அறிந்தோம். இந்த நிலங்கள் எங்கிருந்து வந்தன? நிலம் புதிதாக உற்பத்தி செய்ய முடியாதது. ஏற்கெனவே பழந்தமிழ்க் குடிகள் விவசாயம் செய்த நிலத்தைத் தான் அரசர்கள் அந்தணர்களுக்குக் கை காட்டியிருக்க வேண்டும். விவசாயிகள் அரசருக்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக இந்தப் புதிய அந்தணர்களுக்கு வரி செலுத்த வேண்டும் என உத்திரவிட்டிருக்க வேண்டும்.

    இதில் விவசாயிகளுக்குப் பொருளாதார நட்டம் ஏதுமில்லை. அரசனுக்குச் செலுத்துவதற்குப் பதிலாக அந்தணருக்குச் செலுத்தினர். அந்தணரும் வந்ததைக் கொண்டு எளிமையாக வாழ்ந்து தத்தம் கடமையைச் செய்து கொண்டிருந்தனர்.

    17ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் சாதிப் பெயரைப் பின்னொட்டாகப் போட்டுக் கொள்வது வழக்கில் இல்லை. கம்பர் படையாச்சி, ஓட்டக்கூத்தர் முதலியார் என்று எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா? அருணகிரிநாதரின் சாதியை அவர் பெயரைக் கொண்டு சொல்ல முடிகிறதா?

    சாதிப் பின்னொட்டுகள் தலைதூக்குவது ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான். ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட ஆங்கிலேயர் நில உடைமையை ஆவணப்படுத்தத் தொடங்கும்போது இந்த இறையிலி நிலம் யாருக்கு உரியது என்று விசாரிக்கத் தொடங்கினர். இங்கிலாந்து நாட்டு முறைப்படி உழுது விளைவித்தவரைக் குத்தகைதாரர் என்றும் உட்கார்ந்து சாப்பிட்டவரை உரிமையாளர் என்றும் ஆவணப்படுத்தினர். இது பரம்பரையாக உழுது பயிரிட்டவர்களுக்குக் கசப்பை ஊட்டியிருக்க வேண்டும். பார்ப்பன வெறுப்பின் வேர் இங்கே தான் இருக்கிறது.

    ஆங்கிலேயர் தங்கள் நாட்டில் உள்ளது போல இங்கு சர்நேம் இல்லாதது கண்டு வியந்தனர். மக்களுக்கு சர்நேம் ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்தினர். அப்பொழுது ஒவ்வொரு குழுவினரும் ஒரு உயர்ந்த பெயரைத் தேர்ந்தெடுத்தனர். ஐயன், முதலி, படையாட்சி, தேவன், செட்டி (சிரேஷ்டி- உயர்ந்தவர்) என்று எல்லாப் பட்டப் பெயர்களும் உயர்வைப் பறை சாற்றுவதாகவே உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்தப் பெயர்கள் எளிமையாகவே இருந்தன. அதன் பின்னர் தான் இவற்றில் அர் ஆர் விகுதி சேர்க்கப்படலாயிற்று- ஐயர், முதலியார், படையாட்சியார், தேவர், செட்டியார் என. 19ஆம் நூற்றாண்டுக் கதைகளைப் பார்க்கவும். பாரதியின் கதைகளிலும் காணலாம்.

    மக்களைப் பிரிப்பதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றுவிட்டனர். தங்கள் கம்பெனியிலும் அரசாங்கத்திலும் வேலை செய்ய வல்ல இளைஞர்களைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தபோது கல்வியே தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்கள் அவர்களுக்குக் கை கொடுத்தனர். மற்றவர்கள் தயங்கியபோது இவர்கள் மேலைநாட்டுக் கல்வியைத் துணிந்து ஏற்றனர். அவர்களது பொருளாதாரம் மேலோங்கத் தொடங்கியது. மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்படலாயிற்று.

    பார்ப்பனர்களிலும் ஏழைகள் உண்டு, மண்டுகள் உண்டு, குணக்கேடர்கள் உண்டு. ஆயினும் பெரும்பாலான பார்ப்பனர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறுகிறார்கள், பதவி உயர்வு பெருகிறார்கள். பிற சாதியினர், பிற மதத்தவர் கூடத் தங்கள் நிறுவனங்களில் பார்ப்பனரை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்புகிறார்கள். ஏன்? பார்ப்பனர்களின் வெற்றியின் ரகசியத்தைத் தெரிந்துகொண்டால் அவர்கள் மீது தேவையற்ற காழ்ப்புணர்வு குறையும், எல்லோரும் முன்னேற முடியும்.

    பார்ப்பனர்களுக்கு என்று கடவுள் விசேஷமான அறிவைக் கொடுக்கவில்லை. அறிவாளிகள் எல்லாச் சமூகத்திலும் உண்டு. பார்ப்பனர்களின் சிறப்புக்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறையில் உள்ள சிறப்பு தான்.

    அது என்ன வாழ்க்கை முறை?
    வேதம் கற்கும் முறை பற்றி அறிவீர்கள். குரு ஒரு சொல்லை ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதை இரு முறை திருப்பிச் சொல்கிறார்கள். அதில் எந்தத் தவறும் அனுமதிக்கப்படுவதோ, மன்னிக்கப்படுவதோ இல்லை. சரியான உச்சரிப்பில் சரியான ஸ்வரத்தில் மாணவன் திரும்பச் சொல்லும் வரையிலும் குரு விடுவதில்லை. இப்படி அடிக்கடிச் சொல்வதால் அது மனப்பாடம் ஆகிறது. தவறில்லாத நூறு சதவீதம் முழுமை தான் லட்சியமாகக் கொள்ளப்படுகிறது. 35 சதவீதம் வாங்கினால் பாஸ், 60 சதம் வாங்கினால் முதல் வகுப்பு என்று கூறும் பள்ளிப் படிப்புப் போன்றது அல்ல அது. இதில் பயின்றவர்கள் எந்தக் கல்வியையும், கலையையும் எளிதாகக் கற்க முடியும். தற்காலத்தில் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் வேதக் கல்வியை விட்டுவிட்டபோதிலும், கடுமையான வேதப் பயிற்சிக்கு உட்பட்டு வெளிவரும் புரோகிதர்களால் வழிநடத்தப்படுவதால் அவர்களுக்கு எந்த வேலையைச் செய்தாலும் சிரத்தையோடு செய்வது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

    சந்தியா வந்தனம் முதலாக பல சடங்குகளைப் பார்ப்பனர்கள் அனுசரிக்கிறார்கள். இவை ஒவ்வொன்றிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. தாமாகவே விரும்பி தம்மைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொண்டு சடங்குகளைச் செய்வதால் மற்ற விஷயங்களிலும் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி ஏற்படுகிறது. எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகி, செய்ய வேண்டியதைத் திட்டமிட்டு, ஒவ்வொரு சிறு அம்சத்துக்கும் கவனம் செலுத்திச் செய்யும் பழக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு சடங்குகள் பல கட்டுப்பாடுகளை விதித்துச் சிரத்தையை வளர்க்கும் சிறந்த பயிற்சிக் கூடங்களாக உள்ளன.

    தற்காலக் கல்வி முறையில் சிரத்தைப் பயிற்சி வேறு வகையில் அளிக்கப்படுகிறது. இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மாணவர்களை உட்படுத்தும் பள்ளி சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது என்பதைப் பார்க்கிறோம். அதில் பயிலும் எல்லாச் சாதி மாணவர்களும் மேல் நிலை அடைவதைப் பார்க்கிறோம். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஏனோ தானோ என்று நடத்தும் இடங்களில் சுதந்திரமாகத் திரியும் மாணவர்களின் கல்வித் தரம் தாழ்வதையும் பார்க்கிறோம்.

    சாதிகளற்ற சமுதாயத்தை விரும்பிய பாரதி பார்ப்பானைப் பூணூலைத் துறக்கச் சொல்லவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவிக்கிறார். அவர் தன் பூணூலை நீக்கிக் கொண்டதாகத் திரைப்படத்தில் காட்டுவது உண்மையா என்பதில் எனக்கு ஐயம் உண்டு.

    அவர் சொல்கிறார், காஷ்மீரில் இந்துக்களிடையே சாதிகள் கிடையாது. எல்லோரும் பிராமணர்கள் தாம். அது போல இந்தியா முழுவதும் மற்ற எல்லா சாதியினரையும் மச்ச மாமிசங்களைக் கைவிடச் சொல்லி ஒரு பூணூலை அணிவித்தால் சாதிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்.

    வெவ்வேறு நீளமுள்ள இரு கோடுகளைச் சமப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு இரு வழிகள் உண்டு. பெரிய கோட்டை அழிக்கலாம் அல்லது சிறிய கோட்டை நீட்டலாம். பார்ப்பனர்களைத் தரம் தாழ்த்துவதன் மூலம் அடையப்படும் சமத்துவத்தை விட அவர்களது வெற்றியின் அடிப்படையைத் தெரிந்து கொண்டு அவர்களது நிலைக்கு உயர்வது ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்துக்கான வழியாகும்.

    படம் உதவிக்கு நன்றி:  http://thamizhoviya.blogspot.com/2011/11/blog-post_07.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 21

    சு.கோதண்டராமன்.

     

    சோமம்

    hindugod_soma

    ரிக் வேதத்தில் சோமம், சுரா என்று இரு வகையான பானங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சுரா என்பது போதை தருவது. இது இகழப்பட்டுள்ளது.

    சுராவினால் போதை அடைந்தவர்கள் போலச் சண்டையிடுகிறான் (8.2.12); சுரா பாவம் செய்யத் தூண்டுகிறது (7.86.6); சுரா அருந்தும் செல்வந்தனோடு இந்திரன் நட்புக் கொள்ளான்(8.21.14) – என்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

    இதற்கு மாறாக, சோமம் விரிவாகப் புகழப்பட்டுள்ளது. ரிக் வேதம் 9வது மண்டலம் முழுவதும் (1017 பாடல்கள்) சோமத்தின் புகழ்ச்சி மட்டுமே. மற்ற தொகுதிகளிலும் சோமத்தைக் குறித்த புகழ்ச்சிகள் பல உள்ளன.

    தேவர்கள் எல்லோரும், குறிப்பாக, இந்திரன், சோமத்தில் பிரியமுள்ளவராகக் கூறப்பட்டிருக்கிறார்கள். சோமத்தை அருந்தியதால் ஏற்பட்ட உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றதாகவும், பல அருஞ் செயல்களைச் செய்ததாகவும் வேதம் கூறுகிறது. வாயு தேவனுக்கு சோமத்தில் முதல் உரிமை உண்டு. காலை நேரத்து சவனத்தில் (பிழிதலில்) அச்வினி தேவர்களுக்கு சிறப்பிடம் உண்டு. தேவ நிலைக்கு உயர்ந்த மனிதர்களாகிய ரிபு சகோதரர்களுக்கும் மற்ற தேவர்களைப் போல சோமம் அளிக்கப்படுகிறது.

    யக்ஞமும் சோமமும்
    சோமம் என்பது வேள்வியின் ஒரு அத்யாவசியமான அங்கம். சோமம், ஸ்தோமம் (பிரார்த்தனை), நமஸ்காரம், புத்தி இவை அனைத்தும் சேர்ந்தால்தான் யக்ஞம் குறைவற்றதாக ஆகிறது. யக்ஞஸ்ரீ என்ற சிறப்பும் சோமத்துக்குக் கொடுக்கப்படுகிறது.

    சோமனும் சந்திரனும்
    சோமச் சாற்றுக்கு இந்து என்ற பெயரும் உண்டு. சோமன் என்பதும் இந்து என்ற சொல்லும் பல இடங்களில் சந்திரனைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. இந்து சோமனைத் தழுவுகிறது என்ற மந்திரம் (9.12.5.). இரண்டும் வேறு வேறானவை என்று காட்டினாலும் சில இடங்களில் சோம பானம் சந்திரன் இரண்டுக்கும் பொதுவான புகழ்ச்சியான மந்திரங்களும் உள்ளன.

    somamசோமத் தாவரம்
    சோமம் என்பது மலைப் பிரதேசங்களில் விளையும் ஒரு தாவரம், அதன் தண்டு சாறுள்ளது என்பது மட்டும்தான் ரிக் வேதத்திலிருந்து அறிய முடிகிறது. பாரசீக சமயத்தின் வேத நூலாகிய ஜெண்ட் அவஸ்தாவில் இது ஹோமா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது என்ன தாவரம், தற்காலத்தில் அதன் பெயர் என்ன என்பதை அறிய உலகளாவிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. சிலர் வடமேற்கு இந்திய மலைப்பகுதிகளில் விளையும் எபிட்ரா சினிகா (Ephedra sinica) என்ற கோரை போன்ற செடிதான் அது என்று கருதுகிறார்கள். ஆனால் அறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

    சாறு எடுத்தல்
    அந்தத் தாவரத்தை வண்டியில் கொண்டுவந்து, இரு பாறைக் கற்களுக்கு இடையில் வைத்து சாறு வரும் வரை நசுக்கி, பசு அல்லது ஆட்டுத் தோலின் மீது பரப்பப்பட்ட ஆட்டு ரோமத்தால் ஆன ஒரு வடிகட்டியின் மீது வைத்துக் கைகளால் முறுக்கிப் பிழிகிறார்கள். (பிழியாத சோமத்தை விட பிழிந்த சோமம் மேலானது என்ற மந்திரத்திலிருந்து (6.41.4) அம்சு எனப் பெயரிடப்பட்ட அந்தத் தண்டுகளை அப்படியே சுவைப்பதும் வழக்கில் இருந்திருக்கக் கூடும் என்பதை அறிகிறோம்). பிற்காலத்தில் அதை மர உரலில் இட்டு உலக்கையால் நசுக்கிச் சாறு எடுப்பது வழக்கத்திற்கு வந்ததை முதல் மண்டலத்திலுள்ள ஒரு சூக்தம் கூறுகிறது. அது சுத்தம் செய்யப்பட்டு அடியில் உள்ள ஒரு மரப் பாத்திரத்தில் சேருகிறது. அதில் நீர், பால், தயிர் இவை கலக்கப்படுகின்றன. இது அருந்தத் தயாராக உள்ள பானம். சோமஸ்ய சமிதார (சோமத்தை எரிப்பவர்) என்ற சொல் இது நெருப்பின் மேல் வைத்துச் சூடாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதன் சுவை இனிப்பானது, தேன் போன்றது எனக் கூறப்பட்டிருக்கிறது. இது பழுப்பு நிறமானது என்றும் பச்சை நிறமானது என்றும் இருவகையாகவும் கூறப்பட்டுள்ளது. பால் முதலியன கலப்பதற்கு முன் பச்சையாகவும் கலந்த பின் பழுப்பு நிறமாகவும் இருந்திருக்கக் கூடும்.

    தன்மைகள்
    சோம பானம் போதை தருவதாகவோ, செயலற்று முடக்குவதாகவோ, கலாட்டா செய்யும் தன்மையை உண்டாக்குவதாகவோ, பழக்கத்தை நிலைநாட்டுவதாகவோ சொல்லப்படவில்லை. இது அமரத்துவமும் ஆனந்தமும் தரக் கூடியதாகக் கூறப்பட்டிருக்கிறது.

    வேத ரிஷிகளின் பாடல்கள் அவர்கள் உலகில் ஒவ்வொரு பொருளையும் முதன் முதலாகப் பார்க்கும் குழந்தை போலக் கூர்ந்து கவனித்து அதன் அழகை ரசித்து அனுபவித்ததைக் காட்டுகின்றன. அக்னி எரியும் அழகை ரசித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், சோமச் சாறு ஓடி வருவதை ரசித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர். கண்ணுக்குத் தெரியாத காற்றை ஒளி வடிவமாகக் காண்கிறார்கள் (காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்ததாகப் பாரதி கூறியது வேதத்தின் தாக்கம்தான்). அவர்களது தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பரந்ததாக உள்ள நிலையில் நானே இந்திரன், நானே வருணன், உலகைப் படைத்தது நானே என்று கூறி பரம்பொருளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள், நாங்கள் சோமத்தைக் குடித்து அமரராகிவிட்டோம் என்று கூறுவதன் மூலம், பாரதி கூறியது போல, வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் வகை உணர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இதெல்லாம் சாத்தியமானது சோம பானத்தின் தாக்கத்தால் என்றால், சோமம் என்பது மனதை விரிவுபடுத்தும் பொருள்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

    மனதை விரிவுபடுத்தும் மருந்துகள் பற்றி விக்கிபீடியா கூறுவதைப் பார்ப்போம்.

    முதலில் புலன்கள் தீவிரம் அடைகின்றன. சாதாரணமாகக் கவனத்தில் வராத விஷயங்கள் சிறப்பான கவனம் பெறுகின்றன. பழகின விஷயங்கள் கூட முதன் முதலாகப் பார்ப்பது போல ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் முக்கியத்துவம் உள்ளதாகவும் தோன்றுகின்றன. பொருளின் நிறம், வடிவம், அழகு, ஒலியின் இனிமை முதலியன மிகுதியான தெளிவுடன் தோன்றுகின்றன. ரசனை மிகுதிப்படுகிறது. உடலிலும் சுற்றுப்புறத்திலும் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட பெரிதாகத் தோன்றுகின்றன. காதால் பார்ப்பது, கண்ணால் கேட்பது முதலிய புலன் மாறிய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. காலம் மிக மெதுவாக ஊர்கிறது அல்லது அசைவற்று நின்று நிகழ்காலம் அமரத்துவம் உடையதாக ஆகிவிடுகிறது. தான் என்னும் உணர்வு அற்றுப் போகிறது. தனக்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையே உள்ள தடுப்பு நீங்கி விடுகிறது.

    சோமமும் அத்தகைய பொருளாக, மனதை விரிவுபடுத்தி, சாதாரண நிலையிலிருந்தும் உயர்த்தி, அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியதாக இருக்கக் கூடும்.

    மன விரிவை தியானத்தின் மூலமும் அடைய முடியும் என்று யோக சாத்திரம் சொல்கிறது. ரிஷிகள் இதை தியானம், சோமம் இரண்டையும் பயன்படுத்தி அடைந்திருக்கலாம்.

    அமரத்துவம்
    வேதம் மூன்று வகையான அமரத்துவங்களைக் குறிப்பிடுகிறது என்று பார்த்தோம். சந்ததி பெருகுவதால் உணரப்படும் அமரத்துவம், பிறர் நலனுக்காக அருஞ்செயல்கள் செய்து புகழ் பெறுவதன் மூலம் கிடைக்கும் அமரத்துவம் என்ற இரண்டு தவிர சோம பானத்தினாலும் அமரத்துவம் அடையலாம். இதை அருந்திக் கால உணர்வு அற்றுப் போவதால் உணரப்படும் அமரத்துவம் தற்காலிகமானது.

    சோமம் நிரந்தர அமரத்துவத்தையும் தரவல்லது. எப்படி எனில் அது அறிவையும் ஆற்றலையும் தூண்டுகிறது என வேதம் கூறுகிறது. இதை அருந்திய உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றார், பல அருஞ் செயல்களைச் செய்தார், புகழ் பெற்றார், அமரத்துவம் அடைந்தார்.

    இவ்வாறு ஆற்றலையும் அறிவையும் பெருக்குவதன் மூலம் அருஞ்செயல்கள் செய்ய வைத்து நிரந்தர அமரத்துவத்துக்கும் வழி வகுக்கும் சோமத்தைப் பற்றி ரிஷிகள் மிகுதியாகப் பாடியது ஒன்றும் வியப்பில்லை.

    நான்கு மன நிலைகள்
    ரிஷிகளின் பாடல்கள் நான்கு வகை மன நிலைகளில் பாடப்பட்டதை வேதத்தை ஆழ்ந்து கற்பவர் உணர முடியும். முதல் நிலையில் அவர்கள் சாதாரணப் புலவர்களைப் போலப் பாடுகிறார்கள். உவமைகள், உருவகம், மிகைப்படுத்தல் முதலிய அணிகள் கொண்டதாக உள்ளன அப் பாடல்கள். தீனியை நோக்கி ஓடும் குதிரை போல காட்டில் தீ விரைந்து பரவுகிறது என்று கூறுவதும், சோமச் சாற்றில் நீர் கலக்கும் போது சோமம் நீராகிய ஆடை அணிந்திருப்பதாகக் கூறுவதும், அக்னியின் புகையாகிய கொடி வானுலகை எட்டுகிறது என்று கூறுவதும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

    அவர்கள் தியானத்தில் ஆழ்ந்ததாலோ அல்லது சோமத்தை அருந்தியதாலோ பரவச நிலை அடையும் போது பாடு பொருள் எதுவாக இருந்தாலும் அதைத் தேவனாகக் கருதிப் பாடத் தொடங்குகின்றனர். அக்னியை, இந்திரனை, குதிரையை, நதிகளை, நீரை, மேகத்தை, ஏன், தவளையைக் கூடத் தேவ நிலைக்கு உயர்த்துகின்றனர். இது இரண்டாவது நிலை.

    சோமத்தைத் தேவனாக ஆக்கிப் பாடும் பாடல்களில் விருத்திரனை அழித்தது முதலிய இந்திரனின் செயல்கள் சோம தேவன் பேரிலும் ஏற்றிக் கூறப்படுகின்றன. இந்திரனைப் போலவே சோம தேவனுக்கும் மருத்துகளைத் துணைவராகக் கொண்டவர், வலிமை மிக்கவர் என்ற அடைமொழிகள் உண்டு.

    சோம தேவன் ருத்ரனுடன் சேர்ந்து மருந்துகளால் நோய் நீக்குகிறார். வருணனைப் போலவே அவரும் இயற்கை நியதியைக் கட்டிக் காக்கிறார். சூரியன் போல எல்லாரையும் பார்க்கிறார். அக்னியைப் போல அவரும் கவி (அறிவாளி), வேள்வியின் மையம் என வர்ணிக்கப்படுகிறார்.

    பேச்சையும் புத்தியையும் தூண்டுகிறார், அவரால் பாதிக்கப்படாதார் இல்லை. போரில் வெல்ல முடியாதவர். இருளை நீக்குகிறார். செல்வம், வசதி முதலியன கொடுக்கிறார், பிரார்த்தனைகளுக்கு இரங்கி சிறப்புகளுக்குள் மேலான ரயி எனப்படும் செல்வம் கொடுக்கிறார், மந்திரங்களின் தலைவர் என்றும் மனத்தின் தலைவர் என்றும் போற்றப்படுகிறார்.

    சோமனே பரம்பொருள்
    மூன்றாவது கட்டமாகிய பேரருள் நிலையில் ரிஷிகளுக்கு எல்லாமே பரம்பொருளாகத் தெரிகிறது. தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதான தோற்றம் ஏற்படுகிறது. காக்கைச் சிறகினிலும், கேட்கும் ஒலிகளிலும், தீயில் கை வைத்த போதும் பாரதி இறை இன்பத்தை அனுபவிக்க முடிந்தது போல இவர்களும் சோமச் சாற்றில் பரம்பொருளைக் காண்கின்றனர்.

    சோமன் உஷஸ் என்னும் வைகறைப் பொழுதைச் சூரியனுக்குத் துணையாக ஆக்கினார், சூரியனில் ஒளி வைத்தார், பூமியையும் விண்ணையும் நிலை நிறுத்தினார் என்று கூறுகின்றனர். மழை, மகப்பேறு, உணவு தருபவர் என்றும், ஆடை இல்லாதவர்க்கு ஆடை அளிப்பவர் என்றும், குருடனைப் பார்க்க வைக்கிறார், நொண்டியை நடக்க வைக்கிறார், பசுவினிடத்தில் பாலை வைத்தார், தேவர்களைப் பிறப்பித்தார் என்றும் அவர் கூறப்படுகிறார்.

    தத்துவம்
    சோமச் சாறு வடிகட்டப்படும்போது, அதில் ரிஷி ஒரு தத்துவத்தைக் காண்கிறார். ஆட்டு ரோமத்தால் வடிகட்டிய சோமம் ஆனந்தம் தருவது போல தர்மம் என்னும் வடிகட்டி மூலமாகப் புகுந்து வரும் நல்ல பேச்சு எல்லோருக்கும் ஆனந்தம் தரவல்லது என்கிறார்.

    வருணனின் அற்புத சக்தியால் நாக்கின் நுனியில் தர்மத்தால் ஆகிய ஒரு வடிகட்டி அமைந்துள்ளது. அறிவாளிகள் அதை நெருங்கிப் பயன் அடைகின்றனர். முடியாதவர்கள் பள்ளத்தில் வீழ்கிறார்கள் (9.73.9).

    ஒரு வகை தியானம்
    சோமச் சாறு கைகளால் பிழியப்படுவதையும், அது ஆட்டு ரோம வடிகட்டி மூலம் பாத்திரத்தில் விழுவதையும், அப்போது சத்தம் ஏற்படுவதையும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள் ரிஷிகள். ஒரு எளிய செயல், இதில் வர்ணிப்பதற்கு என்ன இருக்கிறது, அவர்களைக் கவரும் அளவுக்கு அதில் என்னதான் இருந்திருக்கும் என நாம் வியக்கும் போது ஜப்பானியரின் சாஜி என்னும் தேநீர்ச் சடங்கு நினைவுக்கு வருகிறது.

    இதில், விருந்தினருக்குத் தேநீர் அளிப்பதை, நான்கு மணி நேரம் ஆகும் ஒரு விரிவான சடங்காக்கி, ஒவ்வொரு அசைவுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் கவனம் செலுத்தி, அதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதைப் போல, சோமச் சடங்கும் மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யப்படும் ஒரு வகைத் தியான முறையாக இருந்திருக்கக் கூடும். சோமத் துளிகள் ஒவ்வொன்றிலும் பரம்பொருளைக் காண்பதால் அதை வர்ணிப்பதில் ரிஷிகளுக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.

    சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி
    பரவச நிலையில் ஒவ்வொரு தேவனும் ரிஷிகளுக்குப் பரம்பொருளாகத் தெரிவது போல, சோமமும் பரம்பொருளாகத் தெரிகிறது. சோமம் என்பது ஒரு தாவரத்தைப் பிழிந்து வருவது என்று குடிக்கிறவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ரிஷிகள் எதைச் சோமம் என்று கருதுகிறார்களோ அதை யாரும் அறிய மாட்டார்கள் [7] என்கிறது வேதம். சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி. ஆனந்தம் என்பது பொருளைச் சார்ந்தது அல்ல. அது உள்ளத்திலிருந்து பீறிட்டு எழுவது. வெளியில் உள்ள பொருள் அதற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே. நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் பொருள்களைப் பார்த்துக் குழந்தை மகிழ்ச்சியால் மலர்கிறது. அது போல ரிஷிகள் ஆற்றையும், சூரியனையும், இரவையும், மரங்களையும் பார்த்தும், காற்றை ஸ்பரிசித்தும் ஆனந்தம் அடைகிறார்கள். விண்ணையும் மண்ணையும் படைத்த அவன், அளவிடமுடியாததாகவும் ஒழுங்குற அமைந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் நிற்பதாகவும் இவற்றைப் படைத்த அவன், நிச்சயமாக ஒரு திறமையான கலைஞன்தான்[8] என்று பரம்பொருளை வியக்கிறார்கள்.

    எதையும் பார்த்து வியந்து ஆனந்தம் அடையும் இத்தகைய குழந்தை மனநிலையையே ஒரு கட்டத்தில் ரிஷிகள் சோமமாகக் காண்கிறார்கள்.

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.bellaterreno.com/art/a_religion/hindu/hinduismgod_soma.aspx
    http://www.bellaterreno.com/art/images/sitegraphics/hindugod_soma.gif

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 20

    –சு.கோதண்டராமன்.

     

    ஸவிதா

     

    Savitr Vedic Deity

    பரமாத்ம சைதந்யத்தின் மஹிமையையே பூர்வ யோகிகள் அனந்த கோடானு கோடானு கோடானு கோடி ஸூர்ய ஜ்யோதியாக வர்ணித்திருக்கிறார்கள். உபமித்திருக்கிறார்கள். எல்லாம் என்பது ஸர்வத்தின் பெயர். எல் என்பது தமிழில் ஸூர்யனுக்குப் பெயர்.  ஸர்வமென்ற மனக் கொள்கைக்குப் ப்ரதிநிதியாக நம்முடைய முன்னோர் ஸூர்யனை ஆராதனை செய்தது யுக்தமேயாகும். – பாரதி

    எல்லோரும் தேவர்கள் எனப்பட்டாலும் சூரியனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. வானத்தில் பிரகாசமாக ஜ்வலிக்கும் சூரியன் மனிதனது கவனத்தைக் கவர்வதில் வியப்பு இல்லை. தினம் தோறும் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அவன் கவனிக்கிறான். இரவில் உலகமே அசைவற்று உயிரற்றது போலக் கிடக்கிறது. காலையில் சூரியன் உதித்ததும் மனிதன் மட்டுமன்றி மிருகங்களும் பறவைகளும் கூட புத்துயிர் பெற்றது போல உற்சாகத்துடன் தத்தம் வேலையில் ஈடுபடுகிறார்கள். இதனால் சூரியன் உயிர்ப்புத் தருபவர் என்ற பொருளில் ஸவிதா என்று அழைக்கப்படுகிறார்.

    ஸவிதா என்ற பெயர் எங்கு வந்தாலும் அங்கு பெரும்பாலும் தேவ என்ற அடை மொழி கூடவே வரும். “தேவோ வஸ் ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே” என்பது யஜுர் வேதத்தின் முதல் மந்திரத்தின் பகுதி. காயத்ரி மந்திரத்தில் “ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி” என்று வருகிறது. எனவே முதன்மையான தேவன் ஸவிதா தான். ஸவிதாவைப் போற்றும் இந்த மந்திரம் தான் இன்றளவும் வைதிக சம்பிரதாயத்தின் பிரதான மந்திரமாக உள்ளது.

    ஸவிதா தேவர்களுக்கே செல்வத்தை அள்ளிக் கொடுப்பவர். அவருடைய விரதத்தை வருணன், மித்ரன், அர்யமா, ருத்ரன் ஆகிய எந்தத் தேவர்களும் மீறுவது இல்லை. ஏன், எதிரிகள் கூட, ஸவிதாவின் விரதத்துக்குக் கட்டுப்பட்டுத் தான் போக வேண்டும். தண்ணீரும் காற்றும் ஸவிதாவின் ஏவலுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுகின்றன.

    வெற்றி பெறும் நோக்கத்துடன் போர்க் களத்தில் நிற்கிறான் வீரன் ஒருவன். சூரியன் மறைந்ததும் அவன் வீடு நோக்கித் திரும்புகிறான். துணி நெய்து கொண்டிருக்கும் பெண், வேலைசெய்து கொண்டிருக்கும் தொழிலாளி எல்லோருமே சூரியன் மறைந்ததும் வேலையைப் பாதியில் விட்டு விட்டுப் போகிறார்கள். மறுநாள் சூரிய உதயம் ஆனதும் தங்கள் வேலையை மீண்டும் தொடங்குகிறார்கள். பறவைகள் மிருகங்கள் கூட தத்தம் இடத்தில் அடங்குமாறு செய்பவர் ஸவிதா.

    நாங்கள் விரும்பியதும் நீ கொடுத்ததுமான செல்வங்கள் விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும்  எங்களை வந்து அடையட்டும் என்று வேண்டுகிறார் ரிஷி.

    தோன்றும்போது ஸவிதா எனப்பட்டாலும் தோன்றி மேலே எழும்பும்போது அவருக்கு சூரியன் என்று பெயர். தர்மத்தைக் காப்பதால் அவர் மித்ரன் எனப்படுகிறார். தன் பயணங்களால் பூஷன் எனப்படுகிறார்[1]. சூரியன் ஏழு குதிரைகளால் அழைத்துச் செல்லப்படுபவராகவும், மனிதர்களின் நல்ல கெட்ட செயல்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பவராகவும், ருதத்தின் (தர்மத்தின்) அழகிய முகமாகவும் கூறப்படுகிறார். அவரே மித்ர வருணர்களின் மற்றும் அக்னியின் கண்[2 ].நிற்கும் அசையும் பொருள்களின் பாதுகாவலர்.

    வஸுக்களைத் தூண்டுகிறார். ரயி எனப்படும் ஆனந்தமாகிய செல்வத்தைக் கொடுக்கிறார். அறிஞர் எனப் பொருள்படும் விப்ர, விபச்சித, வயுனாவித். கவி, ஆகிய அடைமொழிகளுக்கு உரியவர் ஸவிதா. மற்ற தேவர்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள். இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் மேகங்களுக்கு அப்பால் இடம் தந்ததும் இவரே. அவர்கள் எங்கு பறந்து சென்றாலும் ஸவிதாவிற்குக் கட்டுப்பட்டே நிற்கிறார்கள்[3]. நீரும் காற்றையும் இயக்குவது இவரே. ஸ்வதாவான் (தனித்து இயங்க வல்லவர்). இவர் பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றுவதைப் பூமியை அளந்தார் எனச் சொல்கிறது வேதம். தேவர்களுக்கு அமரத்துவம் அளிப்பதும்  மானிடர்களுக்கு வாழ்வைத் தொடரச் செய்வதும் அவரே[4].

    சுத்தனான சூரியனிடம் கட்டப்பட்ட மனம் நடுங்குவதில்லை[5].

    குறிப்புகள்:

    1     5.81.4
    2    1.115.1
    3    4.54.5
    4    4.54.2
    5    5.44.9

    படம் உதவிக்கு நன்றி: http://www.indianetzone.com/55/savitr.htm

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 19

    –சு.கோதண்டராமன்.

    வருணன்

    varuna
    வருணன், மித்ரன், அர்யமான், பகன், அம்சன் என்ற  ஐந்து தேவர்களை ஆதித்யர் என்று வேதம் சிறப்பித்தாலும் பகனுக்கும் அம்சனுக்கும் தனியான மந்திரங்கள் இல்லை. மித்ரன் வருணன் அர்யமான் மூவரும் சேர்த்தே சில இடங்களில் போற்றப்படுகிறார்கள். பல இடங்களில் மித்ரனும் வருணனும் சேர்த்துப் பேசப்படுகிறார்கள். இவர்களிலும் வருணனே மிகுதியாகத் துதிக்கப்படுகிறார். மற்ற இருவரது தன்மைகள் சாதனைகள் வருணனின் தன்மைகள் சாதனைகளிலிருந்து வேறுபடாமல் உள்ளன. அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கீழே தரப்படுகின்றன.

    வலிமை மிக்கவராதலால் அசுரர் என்றும் அறிவு மிக்கவராதலால் கவிதமர் என்றும் அதிசய சக்திகள் பெற்றிருப்பதால் மாயாவான் என்றும் வருணன் கூறப்படுகிறார். ராஜா, சம்ராட் என்ற சிறப்பு ரிக் வேதத்தில் இவருக்குத் தான் மிகுதியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    மித்ர வருணர்களும் நர என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களும் மனிதர்களாக, நீதி தவறாமல் ஆட்சி செய்த அரசர்களாக, இருந்து உயர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆனால் வேதத்தில் கூறப்பட்ட இவர்களது சாதனைகள் முழுவதும் தெய்விகச் சாதனைகளாக உள்ளனவே அன்றி இந்திரனைப் போல மானிடச் சாதனைகள் எதுவும் இவர்கள் செய்ததாகக் கூறப்படவில்லை.

    எல்லாத் தேவர்களும் ருதத்தை(தர்மத்தை)க் காப்பாற்றுவோராகக் கூறப்பட்டாலும் வருண மித்ரனுக்கு ருதத்தில் முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் ருதத்தின் தலைவர்கள். ருதத்தைக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். ஒவ்வொரு அடியிலும் விரதத்தை அனுசரிக்கிறார்கள். இவர்களே பெரிய ருதம் ஆக இருக்கிறார்கள். இவர்கள் நிலையான தர்மங்களை மீறுவதில்லை. தர்மத்தாலும் மாயையாலும் விரதங்களைக் காக்கிறார்கள், ருதத்தால் ஆள்கிறார்கள்.

    இயற்கை நியதியின் தலைவராக வருணன் செய்த செயல்களாவன- பலியிடப்பட்ட மிருகத்தின் தோலை விரிப்பது போல பூமியை விரித்தார். சூரியன் பூமியைச் சுற்றி வரச் செய்தார். அந்தரிக்ஷத்தில் நின்று கொண்டு சூரியனைக் கொண்டு பூமியை அளக்கச் செய்கிறார். சூரியனை ரதம் போல விண்ணில் அமைத்தார். சூரியனுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தார். வருடம் மாதம் நாள் பகல் இரவு யக்ஞம் ரிக் இவற்றை ஏற்படுத்தினர்.

    மரங்களின் மீது அந்தரிக்ஷத்தை விரித்தார். குதிரைகளிடம் வலிமையையும், மாடுகளிடம்  பாலையும், இதயத்தில் செயல் வேகத்தையும், நீரில் அக்னியையும், ஆகாயத்தில் சூரியனையும், மலை மீது சோமனையும் வைத்தார்.

    மழை பெய்வதும் பயிர் வளர்வதும் அவரால். வருணனின் ருதத்தின் படியே நதிகள் நிற்காமல், ஓய்வெடுக்காமல் ஓடுகின்றன. ஆற்று நீர் சமுத்ரத்தை நிரப்புவதில்லை. காரணம் இது அறிவுள்ள வருணனின் ஏற்பாடு.

    ஆகாயத்தைத் தூக்கி நிறுத்தியது,   பூமியை அளந்தது, எல்லா உயிரினங்களையும் தலைவராக நின்று பரிபாலித்தது ஆகியவையும் வருணனின் சாதனைகளாகப் பேசப்படுகின்றன. விண்ணும் மண்ணும் வருணனின் தர்மத்தால் நிலைநாட்டப்பட்டவை. வருணன் தேவர்களுக்கும் பாதுகாவலர்.

    பிரபஞ்சத்தைப் படைத்து அதில் ருதத்தை ஏற்படுத்திய வருணன் மனிதருக்கும் சில விரதங்கள் விதித்துள்ளார். வருணனின் விரதங்கள் மீறத் தகாதவை. உடல் முழுவதும் களிமண் பற்றுப் போட வேண்டிய நோய், துருத்தி போல் உடல் வீங்குவது, பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை, வசதிகள் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலை இவை வருணனின் விரதங்களை மீறுவதால் உண்டாகும்.

    மித்ர வருணர்கள் கண்களை விட நன்றாகப் பாதையை அறிந்தவர்கள். கண்ணை மூடிக் கொண்டும் அவர்களால் பார்க்க முடியும். அவர்களுக்குத் தெரியாமல் ஒருவன் தவறு செய்ய முடியாது.

    ருதத்தை மீறியவர்களை, அதாவது பாவம் செய்தவர்களை வருணன் பாசம் என்னும் கயிற்றினால் கட்டுகிறார். அந்தக் கட்டிலிருந்து விடுவிக்கக் கூடியவர் அவரே. (பிற்காலத்தில் இந்தப் பாசம் யமனுக்கு உரியதாக ஆக்கப்பட்டது.) பாவங்களைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தண்டிக்கிறார்.

    மற்றவர்கள் செய்த தவறுகளின் பலனை நாங்கள் அனுபவிக்காதிருப்போமாக[1], மூதாதையர் செய்த பழிக்கும் எங்கள் பழிக்கும் தண்டனை தராதே [2] என்று அவர் வேண்டப்படுகிறார்.

    தண்டிப்பவராக இருந்தாலும் கருணையும் மிகக் கொண்டவர் வருணன். பாவிகளிடத்திலும் கருணை காட்டுபவர். வேண்டினால் மன்னிக்கிறார். நண்பர்களிடத்தும், உறவினர்களிடத்தும், அயலாரிடத்தும் செய்த பாவங்களைப் போக்குகிறார். வருணா, உன்னுடைய விரதத்தில் நாங்கள் பிறழாமல் இருப்போமாக என்ற பிரார்த்தனை அடிக்கடி வருணனிடம் வைக்கப்படுகிறது.

    மித்ர வருணர்கள் அறிவற்றவனை அறிவாளி ஆக்குகின்றனர். அறிவுள்ளவனை விழிப்படையச் செய்கின்றனர். நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றனர்[3].

    தெய்வங்களுக்குச் செய்த பாவங்களினாலும், அறியாமையால் உன் தர்மத்தை மீறினதாலும் நாங்கள் செய்த தவறுகளுக்காகக் கோபித்துக் கொள்ளாதே [4] என்ற இந்த மந்திரம் சந்தியா வந்தனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

    யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனே அபித்ரோஹம் மனுஷ்யாச்சராமஸி, அசித்தீ யத்தவ தர்மாயுயோபிம மா நஸ் தஸ்மாதேனஸோ தேவ ரீரிஷ:   

    என் உறவினர்கள் வறுமை அடையக் கூடாது. நாங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் வருணன் வேண்டப்படுகிறார். க்ஷேமத்திலும் யோகத்திலும் நலம் உண்டாகட்டும் என்றும் பிரார்த்திக்கப்படுகிறார்.

    வருண மித்ரர்கள் துன்பத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.  உழைக்கத் தூண்டுகிறார்கள். அறியாதவர்களுக்கு அறிய வைக்கிறார்கள். அறிந்தவர்களைப் பாவங்களிலிருந்து நீக்கி நல்ல பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.

    குறிப்புகள்:
    1    2.28.9.
    2    7.86.5.
    3    7.60.6.
    4    7.89.5.

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://barbarapijan.com/bpa/Nakshatra/24shatataraka.htm

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 18

    –சு.கோதண்டராமன்.

    உஷஸ் – வைகறைப் பொழுது

     

    உஷா
    பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

    இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷிகள் ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார்கள்.

    வைகறைப் பொழுதின் அழகை வர்ணிக்கும் மந்திரங்கள் பல உள்ளன. உதாரணத்துக்கு ஒன்று மட்டும் பார்ப்போம். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

    வைகறைப் பொழுது ஆனந்தம் தருவது. அந்த ஆனந்தமே செல்வமாகக் கருதப்பட்டு ‘ரயி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நாம் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும் இந்த செல்வம் கிடைப்பதால் இது நிரந்தர ரயி எனப்படுகிறது.

    இது அழகானதும் கூட. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும், ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

    இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

    இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு ருதம் (இயற்கை நியதி) உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது. வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

    பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்கள் யாவரும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

    எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்?

    ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் போது நம் வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து வருகிறது அதனால் உஷஸ் மக்கள் ஆயுளைத் தேய்க்கிறாள் என்கிறார் ரிஷி. இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் அவர்.

    இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:

    1    வந்தது வந்தது பேரொளி இன்று,
    வானகமெங்கும் பரவியே நின்று.
    ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு
    அங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

    2    வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்
    இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.
    இரவென ஒருத்தி பகலென ஒருத்தி
    அமரத் தன்மை அடைந்த மகளிர்
    ஒன்று போல் இருப்பர், நிறம் தான் வேறு
    ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று
    விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

    3    மூலப் பரம்பொருள் ஏவியபடியே
    முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்
    இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி
    மாறி மாறியே பயணம் செய்வர்.
    நிறம் தான் வேறு, மனமோ ஒன்று.
    அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்
    தடுப்பதும் இல்லை, நிற்பதும் இல்லை.

    4    உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை
    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி
    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,
    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.
    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    5    சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை
    பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்
    இன்ன நலன்களை இனிதே நாடவும்
    தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி
    விழியிலார்க்கு விழிகள் அருளி
    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    6    கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்
    புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்
    இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்
    கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்
    வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று
    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    7    விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்
    நல்லுடை உடுத்த நளின மங்கையே,
    புவியின் செல்வம் ஆளும் ராணியே,
    மங்கலச் செல்வி, இன்று எம்மீது
    உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

    8    கடந்து சென்ற கணக்கிலா விடியல்
    அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்
    இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்
    யாவற் றிற்கும் நீ வழி காட்டி.
    உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.
    இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

    9    உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்
    தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.
    சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.
    தேவ பூசனை செய்யும் உந்துதல்
    உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

    10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?
    இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?
    கடந்து சென்ற நாட்களின் வழியில்
    நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.
    இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

    11    எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்
    எண்ணிலா விடியல் கண்டு களித்து
    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.
    உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட
    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.
    புதிய மக்கள் நாளை வருவர்
    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

    12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை
    நெடிய பகையினை நீளத் துரத்தினை
    மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி
    இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை
    தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை
    இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

    13    தேவி உனது திருநிறை ஒளியை
    பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.
    இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்
    மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்
    இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

    14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்
    கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்
    செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்
    கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

    15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்
    உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை
    வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்
    கடந்து சென்ற விடியல் களிலே
    கடைசியாய் வந்தது இன்றைய வைகறை
    இனிவர விருக்கும் விடிவு களுக்கு
    முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

    16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,
    விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்.
    பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்
    இன்று எமது ஆயுளில் குறைந்தது ஒரு நாள்

    17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து
    உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்
    போற்றும் புலவர்க் கருளுக உஷையே
    குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

    18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து
    காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை
    வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்
    பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

    19    தேவர் தாயே, அதிதியின் வடிவே
    வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!
    யாவரும் போற்றும் இனிய நங்காய்,
    உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை
    உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

    20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு
    உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்
    மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்
    விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

    படம் உதவிக்கு நன்றி:   http://www.harekrsna.de/usha2.htm

    Share
  • அர்ச்சனை -3

    –சு.கோதண்டராமன்.

    அர்ச்சனை
    சாமி, ஒரு அர்ச்சனை பண்ணணுங்க.

    சரி, பேரு நட்சத்திரம் சொல்லுங்கோ.

    அசுவினி நட்சத்திரம், ஆறுமுகம்,

    அஸ்வினி நக்ஷத்ரே மேஷராசௌ ஜாதஸ்ய ஆறுமுகம் நாமதேயஸ்ய…

    பரணி நட்சத்திரம் பானுமதி,

    பரணி நக்ஷத்ரே மேஷராசௌ ஜாதாயாஹா பானுமதி நாம்யாஹா…

    கார்த்திகை  கந்தவேலு,

    க்ருத்திகா நக்ஷத்ரே ரிஷப ராசௌ ஜாதஸ்ய கந்தவேலு நாமதேயஸ்ய…

    ரோகிணி ருக்மிணி,

    ரோஹிணி நக்ஷத்ரே ரிஷப ராசௌ ஜாதாயாஹா ருக்மிணி நாம்யாஹா…

    மிருகசீரிஷம் மின்னல்கொடி,

    மிருகசீர்ஷ நக்ஷத்ரே மிதுன ராசௌ ஜாதாயாஹா மின்னல்கொடி நாம்யாஹா…

    ……………………

    ………………….

    …………………..

    …………………….

    ரேவதி ரீட்டா,

    ரேவதி நக்ஷத்ரே மீன ராசௌ ஜாதாயாஹா ரீட்டா நாம்யாஹா…

    ஏங்க, எங்க அண்ணனோட சின்னப் பையன் பேரு சொல்லல்லியே?

    இதோ சொல்லிடறேன்,…….. விசாகம் வீராசாமி,

    விசாக நக்ஷத்ரே வ்ருச்சிக ராசௌ ஜாதஸ்ய வீராசாமி நாமதேயஸ்ய…

    நம்ம பொண்ணோட கொழுந்தனார் ஓர்ப்படியா பேரு சொல்லிட்டிங்களா?

    அவங்க என்ன நட்சத்திரம்?

    அவரு பூசம், அவளுக்கு அஸ்தம்

    பூசம் புண்ணியமூர்த்தி,

    பூச நக்ஷத்ரே கடக ராசௌ ஜாதஸ்ய புண்யமூர்த்தி  நாமதேயஸ்ய…

    அஸ்தம் அம்சவல்லி,

    ஹஸ்த நக்ஷத்ரே கன்யா ராசௌ ஜாதாயாஹா அம்சவல்லி நாம்யாஹா,…..  அவ்வளவு தானா இன்னும் இருக்கா?

    அவ்வளவு தாங்க.

    ஸஹகுடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்யாணாம் அபிவிருத்யர்த்தம் பரமேச்வர பாதகமலயோஹோ அஷ்டோத்ர சதநாமார்ச்சனாம் கரிஷ்யே.

    ****

    டிர்ரிங், டிர்ரிங்

    ஹலோ

    …..

    அப்படியா ரொம்ப சந்தோஷம். நாங்க இங்கே கோயில்லே தான் இருக்கோம், செஞ்சுடறேன்.

    சாமி, அர்ச்சனையிலே ஒரு பேரு விட்டுப் போச்சுங்க

    சங்கல்பத்துக்கெல்லாம் பின் இணைப்பு போட முடியாது ஐயா. அம்பது பேரு சொன்னீங்க இதையும் அப்பவே சேர்த்து சொல்லி இருக்கலாமே.

    இல்லீங்க, இப்பத் தான் மருமகளுக்கு பிரசவம் ஆச்சு, ஃபோன் வந்திச்சு.

    சரி, தேங்கா பழம் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு வாங்க. இன்னொரு அர்ச்சனை குழந்தைக்குன்னு தனியாப் பண்ணிடலாம்.

    இந்தக் கொளந்தை பத்து நிமிசம் முன்னாடி பொறந்திருக்கப்படாதா? பொறக்கும்போதே செலவு வெச்சிட்டு வருதே.

     

    படம் உதவிக்கு நன்றி:  http://dhineshmaya.blogspot.com/2010/08/blog-post_1428.html

    Share
  • அர்ச்சனை -2

    –சு.கோதண்டராமன்.

    ram_worship_god_shiva

     

    யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் தோத்திரம் இந்து சமய இலக்கியத்தின் மிகப் பழமையான அருச்சனை என்ற சிறப்பைப் பெறுகிறது. இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் நம என்ற இணைப்புச் சொல் கொண்ட மந்திரம் வேதத்தில் இது ஒன்றே. அதனால் இது நமகம் என்றும் அழைக்கப்படுகிறது.

    ருத்ரனின் பல விதமான சிறப்புப் பெயர்களைக் கூறி ஒவ்வொன்றுடனும் நம என்று சொல்லப்படுகிறது. அப்படி 273 முறை நமஸ்காரம் செய்யும் இதில் 226வதாக வருவதுதான் நம சிவாய என்ற மந்திரம். மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருளுடையது. இதற்கு அடுத்த மந்திரம் சிவதராய. மேலதிக மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருள் படுவது.

    இதில் ருத்ரனின் தோற்றத்தைக் குறிக்கும் பெயர்களாக வருபவை- தங்கக் கையர், கருங் கேசத்தர், ஆயிரம் கண்ணர், பூணூல் அணிந்தவர், தலைப்பாகை கொண்டவர், செம்மேனியர்  என்று பல உள்ளன.

    வாளேந்தியவர், அம்புக் கையர், அழகிய நாணேற்றிய வில்லினர்,  காலாட்படை தலைவர்,  எதிரிகளை குத்தித் துளைத்து அடித்து அழ வைக்கின்றவர் என்று அவரது போர்த்திறமையைப் புகழ்ந்து பேசும் நமகங்கள் பல.

    துன்பம் துடைப்பவர், பாபத்தை அழிப்பவர், அருள் மழை பொழிபவர், இம்மை மறுமை இன்பம் தருபவர் என்ற பெயர்கள் அவரது உயர் பண்புகளைக் காட்டுகின்றன.

    வில்லாளிகள், நாணேற்றுபவர்கள், நாணை இழுப்பவர்கள், அம்பு ஏந்தியவர்கள், குறி நோக்கி அம்பு எய்துபவர்கள், படை தலைவர்கள், எதிரியைக் கிழிப்பவர்கள் என்று அவர் பன்மையில் வணங்கப்படும்போது  அவர் பல்லாயிரம் வடிவத்துடன் தோன்றுவதை அறிகிறோம்.

    காலத்தால் மிகப் பழமையானது என்பதைத் தவிர, இந்த அருச்சனைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது சொல்லும் முறை வித்தியாசமானது.

    மணல் திட்டு, ஓடும் நீர் முதலான எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறாமல் மணல் திட்டே வணக்கம், ஓடும் நீரே வணக்கம்,  களர் நிலமே வணக்கம்  என்று இவ்வகையில் சுக்கான் பூமி, மாட்டுக் கொட்டகை, வீடு, கட்டில், ஒலி, எதிரொலி என்று பல பொருள்களுக்கு வணக்கம் கூறுகிறது. பொருளுக்குள் இறைவன் மறைந்து இல்லை, பொருளே இறைவன் என்கிறது இது.

    மந்திரியாகவும் அவைத் தலைவராகவும் விளங்குபவரும் அவரே. மற்றும் வணிகர், தச்சர், குயவர், விராதன் (புலையன்) என்று எல்லா வகை மனிதராகவும் அவரே காட்சி தருகிறார். குதிரை, நாய் முதலான மிருகங்களும் அவரே. இந்த எல்லா உயிர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதிலிருந்து எல்லாமே  இறைவனாகப் போற்றப்பட வேண்டியவை என்பது விளக்கப்படுகிறது.

    கருங் கழுத்தர்- வெள்ளைக் கழுத்தர், சடையர்- மொட்டையர், மூத்தவர்- இளையவர், பச்சை இலை- காய்ந்த சருகு, மழைநீர்- மழையின்மை என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைகளையும் ருத்திரனாகக் கருதிப் போற்றும் மந்திரங்கள் சோதியனே- துன்னிருளே, சேயாய்- நணியானே என்ற மணிவாசகரின் வரிகளை நினைவூட்டுகின்றன.

    எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் இறைவன் என்றால் நாம் அன்றாடம் கண்ணெதிரில் காண்போரும் தெய்வம் தானே. உரக்கக் கூவுபவர்களுக்கு வணக்கம், ஓடுபவருக்கு வணக்கம், உட்கார்ந்து இருப்பவர்களுக்கு வணக்கம், படுத்திருப்பவர்களுக்கு வணக்கம், தூங்குபவர்களுக்கு வணக்கம், விழித்திருப்பவர்களுக்கு வணக்கம், நிற்பவர்களுக்கு வணக்கம் என்று இறைவனின் வியாபகத் தன்மையை விதந்து ஓதுகிறது ருத்ரம்.

    இறைவன் கெட்டவரிடத்தும் இருப்பான் அல்லவா?  அதனால் ருத்ரம் அவனது உயர் பண்புகளைப் போற்றுவதோடு நிற்கவில்லை. தாழ்ந்ததாக நாம் கருதும் பண்புகளையும் கொண்டவன் இறைவன் என்கிறது.  இது பிற அருச்சனைகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு.

    திருடர்களின் தலைவருக்கு வணக்கம், கொள்ளையருக்கு வணக்கம், ஏமாற்றுபவருக்கு வணக்கம்,  பேராசைக்காரருக்கு வணக்கம் என்று நாம் சமூகத்தில் விரும்பத் தகாதவராகக் கருதுவோரையும் இறைவனாகவே காண்கிறது.

    இதைப் படித்து விட்டுத் தான் பாரதி சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி (வேதம்) சொல்லும் என்று பாடினார் போலும். வேறொரு பாடலில் ருத்ரத்தின் சாரத்தைப் பிழிந்து தமிழில் தருகிறார்.

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.

     

    படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 17

    –சு.கோதண்டராமன்.

     

    இந்திரன்
     

    cambodia-indra

    இந்திரன் தேவர்களில் முக்கியமானவர். முக்காலத்திலும் ஈடு இணையற்றவர். அவர் தன் செயல் திறமைகளால் தேவர்களுக்குப் பெருமை உண்டாகுமாறு செய்தார். இவர் மனிதனின் நண்பர். அவர்களைத் துன்பத்திலிருந்து விலக்கி அழைத்துச் செல்வதில் நாட்டம் உடையவர். மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி. வீரம் மிக்கவர். தன் வலிமையால் பல பகைவர்களை அழித்துத் தன் பக்தர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அவருடைய சிறப்புகளை ரிக் வேதம் எப்படிக் கூறுகிறது என்று பார்ப்போம்.  

    வலிமை
    எதிரிகளின் செல்வத்தைப் பறவை போல் கவரும் திறமை உள்ளவர் இந்திரன். மிக நிலைத்தவரையும் அசைத்து விடுபவர். எல்லா வீர்யமும் அவருள் அடக்கம். அவரது ஆயுதம் வஜ்ராயுதம். அதற்குத் தப்பின பகைவர் எவரும் இல்லை.

    இந்திரனின் தேர் இரண்டு குதிரைகளால் இழுக்கப்படுவது. இவை வசோயுஜா  (சொல்லால் இயங்குவது) என்றும் ப்ரஹ்மயுஜா (மந்திரத்தால் இயங்குவது) என்றும் கூறப்பட்டுள்ளன.

    இந்திரனால் வெல்லப்பட்ட பகைவர்கள்- வ்ருத்ரன், விச்வரூபன், அர்புதன், வலன், சம்பரன், ரௌஹிணன், நார்மரன், த்ருபீகன், உரணன், ஸ்வச்னன், சுஷ்ணன், பிப்ரு, நமூசி, ருத்ரிகா, வர்ச்சின், சுமுரி, துனி, க்ரிவி, குயவன், ஸண்டிகர்கள்.

    இந்திரனால் உதவப்பட்ட நண்பர்கள்- த்ரிதா, அங்கிரஸ், தபீதி, துர்வீதி, வய்யன், ஏதஸன், குத்ஸ, ஆயு, அதிதிக்வா.

    இந்திரன் இன்றி வெற்றி இல்லை என்பதால் போரில் இரு திறத்தாரும் இவரை உதவிக்கு அழைக்கின்றனர். மேலோரும், கீழோரும் அழைக்கின்றனர். ஒரே தேரில் பயணம் செய்யும் இருவர் இவரைத் தனித்தனியே அழைக்கின்றனர். பணிவுடன் வேண்டுவோருக்கு மட்டுமே அவர் உதவுவார். தன் வலிமையில் திமிர் கொண்டோருக்கு அவர் உதவுவதில்லை. பாவிகளையும் தேவர்களை வணங்காதவர்களையும் அழிக்கிறார்.

    இந்திரனின் உணவும் பானமும்
    தன் வலிமையால் பல செயற்கரும் செயல்களைச் செய்தவர், அதற்கேற்ற உணவு உண்பவராகவும் கூறப்படுகிறார். இந்திரனுக்காக பூஷனும் விஷ்ணுவும் 100 எருமைகளைச் சமைத்தனர் என்கிறது ஒரு மந்திரம்.[1]

    சோமம் இந்திரனை மகிழ்விக்கிறது. அதனால் அவர் வளர்கிறார். சோமத்தினால் அவர் மகவான் (பெருஞ் செல்வர்) ஆனார்.[2]  அவர் பிறக்கும்போதே சோமத்தை அருந்தினார். சோமத்தை அருந்திய களிப்பில் அவர் செய்த அருஞ்செயல்கள் பல. அஹியைக் கொன்று நதிகளைப் பெருகச் செய்தது, மலைகளை உடைத்து வலனைக் கொன்றது, நதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்தது, தபீதியை மீட்டது, ஆற்றைக் கடக்க முடியாமல் இருந்த தன் நண்பர் துர்வீதி மற்றும் வய்யனுக்காக, ஆற்றைத் தடைசெய்து அவர்கள் மறு கரைக்குச் சென்று செல்வம் அடைய உதவி செய்தது, பெண்கள் ஒளித்து வைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தது, புறம் தள்ளப்பட்ட மனிதனை வெளிக் கொணர்ந்தது, குருடனைப் பார்க்க வைத்தது, காலில்லாதவனை நடக்க வைத்தது, சுமுரி, துனி ஆகிய தஸ்யுக்களை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திக் கொன்றது மற்றும் பல செயல்களை இந்திரன் சோமபானத்தின் களிப்பில் செய்தார்.

    செல்வமும் கொடையும்
    இந்திரன் செல்வத்தின் இருப்பிடம். செல்வத்தின் பாதைகளின் ஒன்று கூடும் இடம். அவருடைய ஆணையின் கீழ் குதிரைகள், தேர்கள், பசுக்கள், கிராமங்கள் உள்ளன. அவற்றை அவர் தன் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார். அவர் பெரும் கொடையாளி. இந்திரனை விட வலிமையானவர், பணக்காரர் பிறந்தது இல்லை.

    யக்ஞம்
    மற்ற தேவர்களைப் போல இந்திரனும் யக்ஞங்களைப் பாதுகாக்கிறார். யக்ஞத்தால் வலுப்பெறுகிறார். ஆகுதி செய்வோர், சோமம் பிழிவோர், தோத்திரம் சொல்வோர் என வேள்வியின் பல் வேறு பிரிவு வேலைகள் செய்வோரையும் செல்வர், வறியர் என்ற வேறுபாடு இல்லாமல் அவர் ஊக்குவிக்கிறார். பக்தி நெறி அறியாதவரையும் அவர் கை விடாமல் உணவு அளிக்கிறார்.

    தலைவர்
    நல்ல பாதையிலும் கடினமான பாதையிலும் முன்னே சென்று வழிகாட்டுவதால் பதிக்ருத் எனப்படுகிறார்.

    அறிவாளி
    அக்னியைப் போலவே இவரும் சிறந்த அறிவாளி. கவிகளுக்குள்ளே மேலான கவி எனப்படுகிறார். அக்னி ஜாதவேதஸ் (பிறந்தது எல்லாம் அறிந்தவர்) என்று கூறப்படுவது போல, இந்திரனும் விச்வானி விதுஷ (எல்லாம் அறிந்தவர்)  எனப்படுகிறார்.

    மனிதனின் நண்பர்
    இந்திரனைத் திருப்திப்படுத்த யக்ஞம், சோமம், ஹோத்ரம் (புகழ்ச்சி) என மூன்று வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றால் அவர் வலுப்பெறுகிறார்.  மகிழ்ச்சி அடைந்து தன் பக்தர்களுக்கு பெரும் செல்வம் தருகிறார். செல்வம் மட்டுமல்ல, பசுக்கள், மக்கட்பேறு, வீடு, நண்பர்கள், வலிமை, உதவி, பாதுகாப்பு ஆகியனவும் தருகிறார். அவரைக் குறித்து எத்தகைய சிறு தொண்டு ஆற்றினாலும் அவருடைய அருளைப் பெறலாம். புகழ்வோர்க்கு இவர் உதவுவதால் காருதாயர் எனப்படுகிறார்.   இவரைப் புகழ்வோர் வளர்கின்றனர்.

    இவ்வளவு சிறப்பு உடைய இந்திரனைத் தனக்கே உரிமை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று ரிஷிகள் ஆசைப்படுவதைப் பார்க்கிறோம்.

    பந்துக்கள் அற்றவர்களாகிய நாங்கள், பந்துக்கள் உள்ள உன்னோடு சேர்ந்து கொள்ள விரும்புகிறோம்.[3]  நீ சகோதரன் அற்றவன். என்னைச் சகோதரன் ஆக்கிக் கொள்.[4]  “நீ எங்களுடையவன். நாங்கள் உங்கள் பக்தர்கள். மற்ற பக்தர்களின் யக்ஞங்களுக்குப் போவதற்கு முன்னால் எங்கள் யக்ஞத்திற்கு வாருங்கள்” என்று ஒரு ரிஷி அழைக்கிறார்.[5] நூறு அல்லது ஆயிரம், பத்தாயிரம் பசுக்களைக் கொடுத்தாலும் இந்திரனை விற்க மாட்டேன் என்கிறார் மற்றொருவர்.[6 ]

    மனித குலத்தின் எதிரிகளுக்கு எதிரி
    பல எதிரிகளை அழித்து மனிதர்களைக் காத்தது இந்திரனுடைய சாதனைகளில் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மனித குலத்தின் எதிரி யார்? தாஸர் என்றும் தஸ்யு என்றும் ஒரு கூட்டம் ரிக் வேதத்தில் பேசப்படுகிறது. அவர்கள் கறுப்பு நிறத்தவர்களாகவும் மூக்கு இல்லாதவர்களாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள். யக்ஞம் முதலான வழிபாடு செய்யாதவர்கள். மாயையில் வல்லவர்கள். இந்திரன் தானும் மாயையைக் கைக் கொண்டு அவர்களை அழித்தார். பலரைக் குகையில் அடைத்தார். தனக்குச் சாவு இல்லை என்று கருதிக் கொண்டிருந்த தாஸர்கள் அழிந்தனர்.

    தேவர்களும் இந்திரனும்
    அக்னி, விஷ்ணு, சோமன், வருணன், வாயு ஆகிய ஒவ்வொருவருடனும் சேர்த்துப் போற்றப்படுகிறார் இந்திரன்.  அப்பொழுது இந்திரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைகிறது.

    இந்திரனை மழை தரும் பழமையான ஜோதி என்றும் அவர் மேலே பிரகாசிக்கும் போது மக்கள் பார்க்கிறார்கள் என்றும் போற்றி சூரியன் இந்திரன் வேறு வேறு அல்லர் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது. [7]

    சாதனைகளால் தேவ பதவி
    இந்திரனின் சாதனைகளைப் பார்த்தோம். முன் அத்தியாயத்தில் கூறியபடி இந்திரன் மனிதனாக இருந்து தன் சாதனைகளால் தேவ பதவி அடைந்தவரா என்பதை ஆராய்வோம். மேலே குறிப்பிட்டவை அருஞ் செயல்கள் தாம் என்றாலும் ஒரு வலிமையான மனிதன் செய்யக் கூடியவை தாம். இந்த அருஞ் செயல்களைச் செய்ததால் தான் அவர் தேவ நிலையை அடைந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

    அவர் தன் சாதனைகளால் மானிடப் பிறவியைக் கடந்து அமர்த்யன் (இறவாதவன்) என்ற பெயரால் விளங்குகிறார்.

    இந்திரனே பரம்பொருள்
    இந்திரனின் பல்வேறு சாதனைகளைப் புகழ்ந்து கொண்டிருக்கும்போதே ரிஷிகள் பரவச நிலைக்குச் சென்று விடுகின்றனர். இந்திரனைப் பரம்பொருளாகக் கருதி அவரைச் சர்வ வல்லமை உள்ளவராக வர்ணிக்கின்றனர். இவருடைய வஜ்ரத்தின் ஓசையால் மண்ணும் விண்ணும் மலைகளும் பயப்படுகின்றன, வணங்குகின்றன. விண்ணும் மண்ணும் அவரை வெல்ல முடியாது. கடலோ மலைகளோ அவருடைய ரதத்தைத் தடுக்கா. அவர் தான் மண்ணையும் விண்ணையும் படைத்தார். அவற்றைத் தாங்குகிறார். அவரே சூரியனைத் தன் பாதையில் உலவ விட்டார். அவரே நதிகளைத் தன் பாதையில் ஓடவிட்டார். அவரே பசுக்களிடம் பாலை வைத்தார் என்று புகழ்கிறார்கள்.

    இதே போல எல்லாத் தேவர்களும் பரம்பொருள் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள் என்பதை முதலில் பார்த்தோம்.

     

    குறிப்புகள்:
    1    6.17.11.
    2    6.43.4.
    3    8.21.4.
    4    8.21.13.
    5    7.69.6
    6    8.1.5.
    7    8.6.30.

    படம் உதவிக்கு நன்றி: http://i385.photobucket.com/albums/oo297/Vetty_Gurl/tracks-cambodia-indra.jpg

    Share
  • அர்ச்சனை -1

    –சு.கோதண்டராமன்.

    ram_worship_god_shiva

    பரம் பொருளுக்கு உருவமில்லை, பெயரில்லை என்று எல்லாச் சமயங்களும் சொல்கின்றன. இந்து சமயத்தின் அடிப்படையும் அது தான். இறைவன் என்று ஆண்பால் பெயரால் சுட்டுகிறோம். ஆனால் அவன் ஆணும் பெண்ணும் அலியுமல்லாததோர் தாணு என்கிறார் தாயுமானவர்.  அது இருளன்று ஒளியன்று என நின்றதுவே என்கிறார் அருணகிரி.

    மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
    எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை
    இரவல்லை பகலல்லை யாவு மல்லை
    பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
    உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

    என்கிறார் திருநாவுக்கரசர். இப்படி எல்லா வகையிலும் இல்லை இல்லை என்று எதிர்மறையாகவே வர்ணிக்கப்படும் பொருளை துவக்க நிலைச் சாதகர்கள் எப்படி மனதில் இருத்த முடியும்? அதற்காகத் தான் இறைவனுக்குப் பல உருவங்களை உருவாக்கி வணங்குகிறோம்.

    ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

    என்று மணிவாசகர் கூறியபடி, பல பெயர்களால் அவனது தோற்றச் சிறப்பையும் அருஞ் செயல்களையும் போற்றிப் புகழ்ந்து பாடுவதும் இந்து சமயத்துக்கே உள்ள தனிச் சிறப்பு.

    இறைவனுக்குள்ள பல பெயர்களை நிரல் பட அமைத்து திருநாம மாலையாகத் தொடுப்பது ஒரு வகை. ஒவ்வொரு பெயருக்குப் பின்னரும் போற்றி அல்லது அது போன்ற ஒரு சொல்லை இணைத்துப் போற்றுவது மற்றொரு வகை. பின்னது மட்டுமே தற்போது அருச்சனை எனப்படுகிறது.  திருநாம மாலையிலும் அருச்சனையிலும் வரும் பெயர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
    1 இறைவனின் தோற்றச் சிறப்புகளைக் கூறும் பெயர்கள்
    2 பண்புச் சிறப்புகளைப் போற்றுபவை
    3 இறைவன் செய்த அருஞ்செயல்களை வியந்து பாராட்டுபவை
    4 இருப்பிடத்தை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்

    தாளி அறுகின் தாராய் போற்றி
    நீளொளி யாகிய நிருத்தா போற்றி
    சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி  
    இவை இறைவனின் தோற்றத்தை வருணிக்கின்றன.

    நித்தா போற்றி நிமலா போற்றி
    பத்தா போற்றி பவனே போற்றி
    பெரியாய் போற்றி பிரானே போற்றி
    அரியாய் போற்றி அமலா போற்றி
    இவை பரமனின் பண்புகளைப் போற்றுபவை.

    புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
    அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி
    கருங்குரு விக்கன் றருளினை போற்றி  
    இவை ஈசனின் திருவிளையாடல்களை நம் நினைவுக்குக் கொணர்கின்றன.

    ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
    சீரார் திருவை யாறா போற்றி
    அண்ணா மலையெம் அண்ணா போற்றி
    இவை தேவதேவன் உவந்து வாழும் திருத்தலங்களை ஒட்டி ஏற்பட்ட பெயர்கள்.

    மேலே கண்டவை மணிவாசகரின் போற்றித் திருவகவலிலிருந்து எடுக்கப்பட்டவை. இது 154 திருநாமங்கள் கொண்ட ஒரு அற்புதமான அருச்சனை. இதில் தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற புகழ்பெற்ற வரிகள் வருகின்றன.

    அப்பரடிகளின் தேவாரத்தின் பெரும்பகுதி திருநாம மாலை தான். அவரது திருவாரூர்ப் போற்றித் திருத்தாண்டகத்திலும், கயிலை மலைப் போற்றித் திருத்தாண்டகத்திலும் இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் போற்றி என்ற சொல் இணைந்து வரும். இவை தவிர திருநாமங்களுடன் கண்டாய், காண், நீயே, போலும், கண்டேன் நானே என்ற சொல் இணைந்து வரும் பதிகங்கள் பல உண்டு. சில எடுத்துக் காட்டுகள் மட்டும் காண்போம்.

    தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
    காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்

    விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்
    வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்
    மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்

    ஓசை ஒலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
    வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே

    மடந்தை பாகத்தர் போலும்
    மான்மறிக் கையர் போலும்
    குடந்தையிற் குழகர் போலுங்
    கொல்புலித் தோலர் போலும்

    அப்பரடிகளின் பிற பாடல்களும் சம்பந்தர், சுந்தரர் பாடல்களும் இது போன்ற போற்றிச் சொற்கள் இல்லாமல் திருப்பெயர் மாலையாக உள்ளன.
    எடுத்துக் காட்டாக சம்பந்தர் தேவாரத்தில் முதல் பாடலில்,
    தோடுடைய செவியன்
    விடையேறி
    தூவெண்மதிசூடி
    காடுடைய சுடலைப் பொடி பூசி
    உள்ளம் கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த, அருள் செய்தவன்
    பிரமாபுரம் மேவிய பெம்மான்
    என்று இறைவனின் சிறப்புப் பெயர்கள் தொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழின் மிகப் பழமையான திருநாம மாலையை பரிபாடலில் பல இடங்களில் காணலாம். எடுத்துக்காட்டுக்கு ஒன்று-
    தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;  
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

    நீண்ட தொடராக வரும் திருநாம மாலை ஒன்று திருமுருகாற்றுப்படையில் காணப்படுகிறது.
    நெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை
    ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
    அறுவர் பயந்த ஆறமர் செல்வ,
    ஆல்கெழு கடவுள் புதல்வ, மால்வரை
    மலைமகள் மகனே, மாற்றோர் கூற்றே,
    வெற்றி வேல் போர் கொற்றவை சிறுவ,
    இழையணி சிறப்பிற் பழையோள் குழவி,
    வானோர் வணங்கு வில் தானைத் தலைவ,
    மாலை மார்ப, நூலறி புலவ,
    செருவில் ஒருவ, பொருவிறல் மள்ள
    அந்தணர் வெறுக்கை, அறிந்தோர் சொன்மலை,
    மங்கையர் கணவ, மைந்தரேறே,
    வேல் கெழு தடக்கைச் சால் பெரும் செல்வ,
    குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
    விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ,
    பலர் புகழ் நன்மொழிப் புலவரேறே,
    அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக,
    நசையுநர்க்கு ஆர்த்தும் மிசை பேராள,
    வலந்தோர்க்களிக்கும் பொலம்பூட் சேஎய்,
    மண்டமர் கடந்த நின் வென்றாடகலத்து
    பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்,
    பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்,
    சூர் மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி,
    போர் மிகு பொருந, குரிசல்.

    படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 16

    –சு.கோதண்டராமன்

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

    அக்னி – பல வகை

    Agni
    வேதத்தில் அக்னி என்பது பூமியில் நாம் மூட்டும் தீயை மட்டும் குறிப்பதல்ல. எதிர்க்க முடியாத வலிமை, இருளைத் துரத்தும் ஒளி, பகைவரை வாட்டும் வெப்பம், மனிதருக்கு உதவும் குணம், மனிதரைத் தூண்டும் திறன் உடைய எல்லாமே அக்னி தான்.

    விண்ணில் உள்ள சூரியனும் அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னலும் கூட அக்னியாகத் தான் குறிப்பிடப்படுகின்றன. விண்ணில் சூரியனாகவும், அந்தரிக்ஷத்தில் மின்னலாகவும் பூமியில் தீயாகவும் இருப்பதால் த்ரிஷதஸ்த (மூவுலகிலும் இருப்பவர்) எனப்படுகிறார்.

    மூன்று அக்னிகள் இருந்தன. அவற்றில் மனிதர் மகிழ்ச்சிக்காக ஒன்று மட்டும் பூமியில் வைக்கப்பட்டது. மற்ற இரண்டும் விண்ணில் வைக்கப்பட்டன[1] என்று வேதம் கூறுகிறது. அவை முறையே தீ, சூரியன், மின்னல் எனப் பொருள் கொள்கிறோம்.

    கர்ப்பத்தில் இருந்தபோது தனூனபாத், பிறந்த பின் நராசம்ஸன், தாயின் மடியில் இருக்கும்போது மாதரிச்வான்  என்று அக்னியின் பெயர்கள் பலவாகும்.[2]

    அக்னி ஒன்று தான். அது பல வகையாக மூட்டப்படுகிறது.[3] அக்னியின் பிறப்பிடங்களைப் பொறுத்து பத்து வகை உண்டு,[4] என்று வேதம் சொல்கிறது. அவற்றில்

    1. விண்ணில் பிறந்த சூரியன்,

    2. அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னல் இவற்றைப் பார்த்தோம்.

    3. கடலுக்குள் மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் வடவாக்னி என்று சொல்லப்படும் எரிமலைகளும் நீரில் தோன்றிய அக்னியாகக் கொள்ளப்படுகிறது. நீருக்குள் வாழும் அக்னி நீரால் மட்டுமே சூழப்பட்டிருப்பதால் ஆடை இல்லாதவராகவும், நீரையே ஆடையாக அணிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.[5] தேவர்கள் உன்னை நீருக்குள் கண்டுபிடித்தார்கள், குகையினுள் சிங்கம் போல என்கிறது வேதம்.[6] அக்னியை நீருக்கு நண்பன் என்று போற்றுகின்றனர். சமுத்திரத்தை ஏழு ஆறுகளின் சங்கமம் என்று வர்ணித்த அவர்கள் அந்த ஏழு ஆறுகளையும் அக்னியை வளர்த்த ஏழு சகோதரிகளாகப் போற்றுகிறார்கள். சில இடங்களில், “ஒன்றாக வாழ்கின்ற ஏழு ஆறுகள் அவனை கருத் தாங்கின” என்றும் கூறுகிறார்கள். அபாம் நபாத் (நீரின் மைந்தன்) என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்படுகிறது. நபாத் என்ற சொல் பேரன் என்றும் பொருள் படும். நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறது.[7] எனவே அவர் நீரின் பேரன்.

    4. பாறையில் தோன்றும் தீ கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தீ மூட்டப்படுகிறது. எனவே அக்னி பாறையின் மகனாகக் கூறப்படுகிறார்.[8]

    5. மரத்தில் தோன்றும் தீ மரங்கள் உரசுவதாலும் அக்னி பிறக்கிறது. மரமும் அக்னியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அரணிக்கட்டை முதலியவற்றில் மறைந்திருக்கும் தீயைப் பற்றி, “அசையாப் பொருட்களிலும் அவன் இருக்கிறான்”. “கர்ப்பிணியின் கர்ப்பம் போல இரு குச்சிகளில் அவன் அடங்கியுள்ளான்”[9] என மொழிகின்றனர். “பல வருடங்கள் கர்ப்பத்தில் இருந்தான். தாய் அவனை தந்தைக்குத் தெரியாமல் அணைத்து வைத்துக் கொள்கிறாள்” என்றும், நீர், கல், காட்டு மரங்கள், செடிகள் ஆகியவற்றிலிருந்து அவன் பிறப்பிக்கப்பட்டான் என்றும் போற்றினர்.[10]

    6. காட்டுத் தீ இவர் காடுகளை அழிக்கும்போது தேவர்கள் இவரைப் போற்றுகிறார்கள். காட்டில் ஓரிடத்தில் அக்னி பற்றினால் காடு முழுவதும் அழிகிறது. “ஒரு வருடத்தில் அங்கு புதிதாகத் தாவரங்கள் வளர்கின்றன.” “பழையன கழிந்து புதியன பிறக்கக் காரணமாயிருப்பது அக்னி.”[11]  காட்டில் தீப் பிடித்தால் அதன் வலிமையின் முன்னே எவரும் நிற்க முடியாது. எனவே அவர் காட்டின் தலைவன் எனவும் காட்டின் புதல்வன் எனவும் வர்ணிக்கப்படுகிறார். காட்டுத் தீயை ரிஷி வர்ணிக்கிறார்.

    “காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த மரங்களில் பரவும் அக்னி வாளுக்குப் பதிலாக தன் நாக்குகளையே பயன்படுத்திப் பேரிரைச்சலோடு காளை போல் சீறிக் கொண்டு விரைகிறார். அவர் பாதை கறுப்பாக ஆகிவிடுகிறது.”[12]

    “தேரில் பூட்டப்பட்ட உன் சிவப்புக் குதிரைகள் காற்றைப் போல் விரைந்து செல்வன, காட்டு மரங்களைப் புகையால் மூடுகிறது.”[13]

    “காற்றினால் தூண்டப்பட்டுப் பல திசைகளிலும் பரவும் அக்னி கட்டுப்பாடற்றுப் பாம்பு போல் வளைந்து உலர்ந்த புற்களினூடே செல்கிறது.”[14 ]

    “பூமித் தாயின் ஆடையை நக்கிக் கொண்டு அவர் வயல்களில் நீண்டும் அகன்றும் அலையும்போது மிருகங்கள் விரைந்தோடுகின்றன. செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கறுப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறார்.”[15]

    அக்னி ஒரு தத்துவம்

    வேதத்தில் அக்னி என்பது நாம் வெளியில் காண்கின்ற ஒரு பொருளாக மட்டும் கருதப்படவில்லை. அது ஒரு தத்துவம். ஒளி, வெம்மை, எதிரியை அழிக்கும் திறன், நல்லோர்க்கு உதவும் மனம், இடைவிடாது செயல்பட ஊக்கப்படுத்தும் தன்மை இவை கொண்ட பொருள்கள் எல்லாம் அக்னியாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன.

    இன்னும் வேறு எங்கெல்லாம் அக்னி காணப்படுகிறான் என்று தேடிய ரிஷிகளுக்கு ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது நினைவுக்கு வருகிறது.

    7. உயிர்த் தீ

    வாழும் மனிதரின் உடல்களில் எல்லாம் சூடு காணப்படுவதை அறிந்து  நம்மிடத்திலும் அக்னி இருக்கிறானே என்று வியந்தனர். மனிதருடனே வாழ்பவன், வாழும்  மனிதருக்காகப் பல இடங்களில் தங்குபவன் என்று போற்றினர். மேலும் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்லாது பிற உயிர்களிடத்திலும், தாவரங்களிடத்திலும் இந்தச் சூடு காணப்படுவதை அறிந்து அவனை, எல்லா உயிர்களுக்கும் தலைவன் (விச்வாயு), இருப்பு முழுவதும் வியாபித்தவன், உயிருள்ளோரை எல்லாம் ஒன்றுபடுத்துபவன் என்கின்றனர். “ரிஷிகளும், விண்ணில் பறக்கும் பறவைகளும், போரில் தோற்ற வீரர்களும் அக்னியை அழைக்கின்றனர்” என்றும், “ஓஷதிகள் அவனைக் கர்ப்பமாகத் தாங்கின” என்றும் பாடுகின்றனர். பிறந்த எல்லாவற்றையும் அறிந்தவன் (ஜாதவேதஸ்) என்ற பெயர் உயிருள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த உயிர்த் தீயையே குறிப்பதாக இருக்க வேண்டும்.

    எல்லா உயிர்களிடத்தும் வாழ்பவர் என்றால், தாவரங்களிலும் அவர் உள்ளார் என்று ஆகிறது. நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறார். மனிதன் பல அக்னிகளால் மூட்டப்படுகிறான் என்பதிலிருந்து[16] மனிதருக்குள் இன்னும் வேறு வகையான அக்னிகள் இருப்பது அறியப்படுகிறது. கணவனையும் மனைவியையும் நீ ஒன்று பட்ட மனத்தினர் ஆக்கும்போது அவர்கள் உனக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என்பதிலும்[17] எங்கள் தாம்பத்தியத்தை இனிமையாக நெறிப்படுத்துகிறாய்[18] என்பதிலும் அவர் கருவறைக்குள் நுழைந்து உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்பதிலும்[19]  அக்னிக்குத் தனூக்ருத் (உடலை உருவாக்குபவர்) என்ற பெயர் அளிக்கப்படுவதிலிருந்தும் அக்னி என்பது காமத் தீயைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

    8. பசித் தீ

    வயிற்றிலுள்ள பசியும் அக்னிக்கு உரிய பண்புகளைப் பெற்றிருப்பது தெரிகிறது. மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகியவை பசிக்கும் உண்டு. நம்மை நடக்கவும் வாழவும் வைக்கிற பசித் தீ உணவின் தலைவன் எனப்படுகிறது. வைச்வானரன் என்பது வயிற்றுத் தீக்கு அளிக்கப்படும் பெயர். இது எல்லா உயிர்களிடத்திலும் காணப்படுகிறது. ஜடரேஷு ஜின்வதே என்று பசி வயிற்றினுள் இருந்து தூண்டுவதை ரிஷி போற்றுகிறார்.[20]

    9. அறிவுத் தீ

    அறியாமை இருளை அகற்றல், எல்லாத் திசைகளிலும் பார்த்தல், மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதால் அறிவுத் துணிவும் அக்னி போன்றதே. மனிதருக்குத் தூண்டுதல் தருபவர், வீரச் செயல்களில் உதவுபவர், தூண் போல் தாங்குபவர் என்றும் அறிவால் உருவாக்கப்பட்டவர் என்றும் போற்றப்படுகிறார். கவி, ரிஷி, அறிவாளி, வருங்காலம் உணர்ந்தவர் என்ற அடைமொழிகள் அக்னிக்கு அளிக்கப்படுகின்றன. வலிமைக்கும் புனித எண்ணங்களுக்கும் தூண்டுதல் தருகிறார். இந்திரனைப் போலவே அக்னியும் விருத்திரனைக் கொன்றவர் எனப் பெயர் பெறுகிறார். (விருத்திரன் என்பது அறியாமை என்பது பாரதியின் விளக்கம்.) அக்னியே, உன்னிடமிருந்து தான் இலக்கியம், எண்ணங்கள், பிரார்த்தனைகள் தோன்றுகின்றன.[21] தவறான வழியில் செல்வோரைத் திருத்துபவர், சிலரைக் கொண்டு பலரை வீழ்த்துபவர் என்ற சிறப்புகள் அறிவாகிய அக்னிக்குப் பொருந்துபவை. அக்னியைத் தேவர்கள் முதல் மனிதனாகவும் மனித குலத்தின் தலைவனாகவும் நியமித்தனர். இளா என்ற பேச்சை மனிதக் குழந்தையின் ஆசிரியராக ஆக்கினர்  என்று கூறுமிடத்திலும் அது அறிவாகிய அக்னியையே குறிப்பிடுகிறது.

    10. மனதின் ஊக்க சக்தி

    இதுவும் அக்னியே. இந்த ஊக்க சக்தி தான் மனிதனைத் தேவ நிலைக்கு உயர்த்துகிறது. தேவர்கள் அம்ருதத்வம் அடைவது அக்னியின் செயல் திறனால் தான் என்கிறார் ரிஷி.[22] அக்னி, அம்ருதத்தின் காப்பாளன் எனவும்[23] மனிதர்கள் தேவனாகப் பிறப்பதை அறிந்தவர் எனவும்[24] கூறப்படுகிறார்.

    தேவர்கள் அக்னியை மனத்தால் தோற்றுவிப்பதாகவும் முனிவர்கள் அதை எண்ணத்தால் வளர்ப்பதாகவும் கூறுகிறது வேதம். யக்ஞங்களின் அடையாளமான அக்னி தன் அறிவினால் எல்லாவற்றையும் அறிகிறார். கடந்து செல்வது தான் இவருடைய நோக்கம்.[25]

    “அக்னி பல பெயர், பல வடிவம் கொண்டவர் என்றும் மற்ற அக்னிகள் இவருடைய கிளைகள்” என்றும் பேசுகின்றனர். அக்னிக்குச் செய்யப்படும் துதிகளில் சில எல்லா வகை அக்னியையும் உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

    பல வகை அக்னிகளுக்கும் பிரதிநிதியாகத்தான் தீயில் நாம் நெய்யால் ஆகுதி செய்கிறோம்.[26]

    குறிப்புகள்:

    1     3.2.9.
    2    3.29.11.
    3    8.58.2
    4    10.51.3
    5    3.1.6.
    6    3.9.4.
    7    3.5.8.
    8     2.1.1, 10.20.7
    9    3.29.2.
    10    1.70.2.
    11    1.140.2.
    12    1.58.4.
    13    1.94.10.
    14    1.141.77.
    15    1.140.9.
    16    6.11.6.
    17    5.3.2.
    18    5.28.3
    19    1.149.2.
    20    3.2.11.
    21     4.11.3
    22    6.7.4.
    23    6.7.7.
    24    7.2.10.
    25    3.11.3.
    26    7.8.1.

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில் ? –15

    –சு.கோதண்டராமன்

    என்னதான் இருக்கிறது வேதத்தில் – 14

    அக்னியின் சிறப்புகள்

    agni

    விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

    அக்னியின் தோற்றம்
    அக்னி எப்பொழுது தோன்றியவர்? யாருக்குத் தெரியும்? அவர் மிகப் பழமையானவர் என்பது மட்டும் தான் ரிஷிகளுக்குத் தெரிகிறது. அவர் எவ்வாறு தோன்றினார் என்பதை ஊகித்து உணர்த்துகிறார்கள். இது பல வகை அக்னிக்கும் பொருத்தமாக அமைகிறது.

    “முதலில் அக்னி விண்ணிலிருந்தும், இரண்டாவதாக நம்மிடமிருந்தும், மூன்றாவதாக நீரிலிருந்தும் அக்னி தோன்றினார்”[1] எனப் பேசுகின்றனர்.

    விண்ணில் உள்ள சூரியனும் அக்னியே. மண்ணில் உண்டாகும் தீயும் அக்னி தான். எனவே விண்ணும் மண்ணும் அவருடைய பெற்றோர்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, விண்ணைத் தந்தையாகவும் மண்ணைத் தாயாகவும் சொல்வது வேத வழக்கம். இதற்கு மாறாக, இரண்டையும் சேர்த்து ரோதஸீ என்ற பெயரில் சொல்லும்போது இரு பெண்கள் என்று சொல்வதும் வேதத்தில் உண்டு. எனவே அக்னி இரண்டு தாய்களின் மகன் என்று சொல்லப்படுகிறார்.

    இன்னொரு வகையிலும் அவருக்கு இந்தப் பெயர் பொருந்துகிறது. இரண்டு அரணிக் குச்சிகளால் அவர் உருவாக்கப்படுவதாலும் இரு தாய்மார்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

    மேலும், பகல் இரவு இரண்டும் அவருக்குத் தாய்கள் போல இருப்பதாலும் அவர் இரு தாய்களின் மகன் என்று கூறப்படுகிறார்.

    பண்புச் சிறப்புகள்
    அக்னி தூய்மையானவர், பிறரையும் தூய்மைப்படுத்துபவர், கட்டுப்பாடானவர், புனிதமானவர். நம் வாழ்வின் ஊற்று. தவறே செய்யாதவர்.

    மாயா எனப்படும் அதிசய சக்தி, ஆச்சரியமான செயல் திறன், துணிச்சல், வேகம், வலிமை கொண்டவர். வ்ருஷபர் (காளை) என்றும் வலிமையின் மகன் எனப் பொருள் தரும் ஸஹஸஸ் ஸூனு, ஊர்ஜோ நபாத் ஆகிய அடைமொழிகளாலும் போற்றப்படுகிறார். போர்க்களங்களில் முதலில் நிற்பவர், விருத்திரனையும் 99 நகரங்களையும் அழித்தவர். ராட்சசர்களையும் பகைவர்களையும் அழிப்பவர், போட்டி இல்லாதவர்.

    குழப்பமில்லாத தெளிந்த அறிவைச் செல்வமாகக் கொண்டவர், பிறக்கும்போதே எல்லாம் அறிந்தவர், உலகில் பிறந்துள்ள அனைத்தையும் அறிந்தவர் (ஜாதவேதஸ்), வருங்காலம் உணர்ந்தவர் (கவி), வித்வான், விப்ர (ரிஷி), கவிக்ரது, க்ரதுவித் (உலகைத் தூண்டுபவர்), அறிவைத் தூண்டுபவர் என்று போற்றப்படுகிறார். புற இருளையும் அக இருளையும் விரட்டுபவர். புத்தியைத் தூய்மைப்படுத்தி நெறிப்படுத்துபவர். இவருடைய திறமையால் கவிகள் பெருஞ் செயல்களைத் தனித்து நின்று செய்ய முடிகிறது.

    மக்களின் தொண்டர்
    பொதுவாக எல்லா வீடுகளுக்கும் அவரே தலைவர். குறிப்பாக, தேவர்களைப் போற்றும் இல்லங்களின் தலைவர். மக்களை ஒளியுள்ளவர்களாகவும் நல்ல வாழ்க்கை வாழ்பவர்களாகவும் ஆக்குகிறார்.

    மக்கள் இனத்துக்கு விளக்காக மனு அவரை நிலைநாட்டினார், மனிதர்க்கு ஏற்படும் துன்பங்களை, அது தேவர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும், மனிதரால் ஏற்பட்டதாக இருந்தாலும், போக்க வல்லவர். வணங்கினோரைக்  காப்பவர். தாமதமின்றி வரம் அருள்பவர். சுபங்களின் நாயகர். நிகழ் காலத்துக்கும் வருங்காலத்துக்கும் நாயகர்.

    வேண்டுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் தன் கடமையை நிறைவேற்றுகிறார். உணவு, ஆரோக்யம், புஷ்டி, வெல்ல முடியாத வலிமை, மகிழ்ச்சி, புத்திரர்கள், புகழ், அமரத்தன்மை, வருணன் தரும் தண்டனையிலிருந்து பாதுகாப்பு, போரில் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை அவர் தரும் கொடைகள். வீட்டின் செல்வத்தைக் காக்கிறார்.

    தலைமை
    ரயி, வஸு ஆகிய உயர் செல்வத்திற்கும் அவரே அதிபதி. மானிடர் வாழும் நாட்டின் அரசர். மலைகளுக்கும் நீர் நிலைகளுக்கும், செடி கொடிகளுக்கும் அரசர். ஸம்ராட் (பேரரசன்) என்றும் அழைக்கப்படுகிறார். பல வீரர்களைப் பெற்றிருப்பவர். தேவர்களும் மனிதரும் அவர் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றனர். அவரே விதிப்பவர்.

    எளிமை
    இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்னி அணுகுவதற்கு எளியவர். வஞ்சனை இல்லாதவர், பகைக்கும் நட்புக்கும் அப்பாற்பட்டவர், பக்குவம் இல்லாதவர்களிடத்தும் பரிவு காட்டுபவர், காட்சிக்கு இனியர், மகிழ்ச்சியுடன் இருப்பவர், எல்லோராலும் விரும்பப்படுபவர். ரிஷி அக்னியிடம் உரிமையோடு கொஞ்சுகிறார், பாருங்கள்.

    நான் உன் இடத்தில்- அக்னியாக- இருந்தால் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுப்பேன். செல்வத்தில் திளைக்கிறாயே, உன் அருளில் நாங்களும் பங்கு கொள்கிறோமே[2].

    பிதிரரும் தீயும்
    உயிர் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல. இறந்தவர்களுக்கும் உதவுபவர் அக்னி. பிரேதங்களை அவரிடம் ஒப்படைக்கிறோம். பெற்ற தாய் தந்தையரை அக்னியில் இடும்போது ரிஷியின் மனம் கஷ்டப்படுகிறது. “அக்னியே, இந்த உடலை எரிக்காதே, பக்குவப்படுத்தி பித்ருக்களுடன் சேர்த்து விடு. உன் பங்குக்கான ஆட்டை எரித்து உண்க”[3] என்று வேண்டுகிறார். அவர் நமது பித்ருக்களைக் காப்பாற்றுவதாகவும், பித்ருக்களின் உதவிக்கு வருவதாகவும் போற்றுகிறார்.

    அக்னியும் யக்ஞமும்
    இவரே யாகத்தின் தலைவர். ஹோதா, அத்வர்யு முதலான 8 வகை யக்ஞ வேலைகளையும் செய்கிறார். குறிப்பாக, தேவர்களை அழைக்கும் ஹோதா என்ற பணியை மிகுதியாகச் செய்கிறார். ஹவிஸ்ஸாலும் ஸ்தோத்திரங்களாலும் செய்யப்படும் யக்ஞத்தால் வளர்பவர் அக்னி. மேதஸ் (கொழுப்பு), நெய் இவற்றால் மகிழ்கிறார். தேவர்களையும் மனிதர்களையும் தூண்டி புத்தியினால் யக்ஞத்தை நடத்தச் செய்கிறார். புரோகிதர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். அவரே யக்ஞத்தின் கேது (அடையாளம்), யக்ஞஸ்ய வித்வான் (வேள்வியை நன்கு அறிந்தவர்).

    அக்னியும் தேவர்களும்    
    அக்னி இயற்கையிலேயே தேவன், அதாவது ஒளியுடன் கூடியவர். தேவர்களுக்குப் போரில் ஆறுதல் கூறுகிறார். தேவர்களின் எதிரியான சம்பரனைக் கிழித்து, அவனது அரண்களை உடைத்தவர். வருணன், மித்ரன், அர்யமான் ஆகியோர் இவரால் வலிமையூட்டப்படுகின்றனர். தேவர்களின் நண்பன், தேவர்களின் தந்தை, தேவர்களின் மகன், தேவர்களின் கொடி.

    அனைத்து தேவர்களுக்கும் அவரே அவி உணவைச் சுமந்து செல்கிறார். முப்பத்து மூன்று தேவர்களையும் வேள்விக்கு அழைத்து வருகிறார். தேவர்களோடு தர்ப்பையில் அமர்கிறார். வாயில் நெய்க் கரண்டி கொண்டவர் என்றும் தேவர்களின் நாக்கு என்றும் போற்றப்படுகிறார். நெய்யும் தேனும் உண்பதால் இனிய நாக்கு உடையவர். தேவர்கள் அமரத்வம் அடைந்தது அக்னியால் தான்[4].

    மக்களுக்காக, தேவர்களைப் பூஜிக்கிறார். தேவர்களிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். மூரதேவர் எனப்பட்ட போலிக் கடவுளரின் பக்தர்களை அழிக்கிறார். தன் பக்தரைக் காக்கிறார். தேவரை வணங்காதாரைத் தன் கொம்புகளால் கிழிக்கிறார்.

    அக்னி ஸ்வர்த்ருச (ஸ்வர்க்கத்தைப் பார்ப்பவர்), திவ: கேது (ஸ்வர்க்கத்தின் அடையாளம்) என்று போற்றப்படுகிறார். விண்ணின் தலையில் இருப்பவர் (திவ: மூர்தா). உலகம் முழுமையும் பார்ப்பவர் விச்வசர்ஷணி. மர்த்யனாகப் பிறக்கும் மனிதன் நரன், ரிஷி, மகோனன் என்று படிப்படியாக உயர்ந்து சூரி ஆவதை முன்பு பார்த்தோம். மர்த்யனை ரிஷியாக ஆக்குபவர் என்ற பெயர் அக்னிக்கு அளிக்கப்படுகிறது.

    சூரி நிலையிலிருந்து தேவ நிலைக்கு அழைத்துச் செல்வது அக்னி தான். இரண்டாவது (தேவப்) பிறப்புக்கு ஆசைப்படும் சூரிக்கு மகிழ்ச்சி அளிக்கிறாய் என்கிறது ஒரு மந்திரம்[5].

    ருதத்தின் நாயகன்
    ஒவ்வொரு இயற்கைச் சக்திக்கும் உள்ள ஒரு தனி நியதி ருதம் என்றும் விரதம் என்றும் வேதத்தில் கூறப்படுகிறது. அக்னி இந்த ருதத்தை மீறாமல் தன் தனித் தன்மையோடு விளங்குவதை, ருதத்தில் தோன்றியவர், ருதத்தின் மடியில் கிடப்பவர், அதிலிருந்து என்றும் தவறாதவர் என்று போற்றுகிறார்கள் ரிஷிகள். “ருதத்தின் காந்தர்வப் பாதையில் நெய்யில் நிலை பெற்றிருப்பது அக்னியின் மேய்ச்சல் நிலம்” என்கிறது ஒரு மந்திரம். அக்னியின் குதிரைகள் ருதத்தின் கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறது மற்றொன்று.

    ருதத்தின் கண்ணாகவும் காப்பானாகவும் விளங்குகிறார் அக்னி. தனது தீர்க்க திருஷ்டியால் ருதம் மீறப்படாமல் காக்கிறார். ருதப்படி (நியதிப்படி) ருதுக்களைக் (பருவகாலங்களை) காப்பார். ருதத்தைக் காக்க வரும்போது அவரே வருணனாகிறார். இயற்கை நியதியை அழிக்கும் அரக்கனை அக்னி அழிக்கிறார். அவர் ஸ்வதாவான், அதாவது இயற்கை நியதியின் சமநிலைப்படுத்தும் தன்மை.

    நற்பண்புகள் பல கொண்டு, மக்களுக்குப் பல வகையிலும் உதவி புரிவதால் வழிபடத் தகுந்தவர். வழிபாட்டின் போது கூறப்படும் தோத்திரங்களை அக்னி விரும்பி ரசிக்கிறார். புகழுரைகள் அவரை வளர்க்கின்றன.

    குறிப்புகள்:
    1     10.45.1.
    2    8.44.23, 8.44.24
    3    10.16.1,4
    4     5.3.4.
    5     1.31.7.

    படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

    Share