என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 21

சு.கோதண்டராமன்.

 

சோமம்

hindugod_soma

ரிக் வேதத்தில் சோமம், சுரா என்று இரு வகையான பானங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சுரா என்பது போதை தருவது. இது இகழப்பட்டுள்ளது.

சுராவினால் போதை அடைந்தவர்கள் போலச் சண்டையிடுகிறான் (8.2.12); சுரா பாவம் செய்யத் தூண்டுகிறது (7.86.6); சுரா அருந்தும் செல்வந்தனோடு இந்திரன் நட்புக் கொள்ளான்(8.21.14) – என்ற வேத வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

இதற்கு மாறாக, சோமம் விரிவாகப் புகழப்பட்டுள்ளது. ரிக் வேதம் 9வது மண்டலம் முழுவதும் (1017 பாடல்கள்) சோமத்தின் புகழ்ச்சி மட்டுமே. மற்ற தொகுதிகளிலும் சோமத்தைக் குறித்த புகழ்ச்சிகள் பல உள்ளன.

தேவர்கள் எல்லோரும், குறிப்பாக, இந்திரன், சோமத்தில் பிரியமுள்ளவராகக் கூறப்பட்டிருக்கிறார்கள். சோமத்தை அருந்தியதால் ஏற்பட்ட உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றதாகவும், பல அருஞ் செயல்களைச் செய்ததாகவும் வேதம் கூறுகிறது. வாயு தேவனுக்கு சோமத்தில் முதல் உரிமை உண்டு. காலை நேரத்து சவனத்தில் (பிழிதலில்) அச்வினி தேவர்களுக்கு சிறப்பிடம் உண்டு. தேவ நிலைக்கு உயர்ந்த மனிதர்களாகிய ரிபு சகோதரர்களுக்கும் மற்ற தேவர்களைப் போல சோமம் அளிக்கப்படுகிறது.

யக்ஞமும் சோமமும்
சோமம் என்பது வேள்வியின் ஒரு அத்யாவசியமான அங்கம். சோமம், ஸ்தோமம் (பிரார்த்தனை), நமஸ்காரம், புத்தி இவை அனைத்தும் சேர்ந்தால்தான் யக்ஞம் குறைவற்றதாக ஆகிறது. யக்ஞஸ்ரீ என்ற சிறப்பும் சோமத்துக்குக் கொடுக்கப்படுகிறது.

சோமனும் சந்திரனும்
சோமச் சாற்றுக்கு இந்து என்ற பெயரும் உண்டு. சோமன் என்பதும் இந்து என்ற சொல்லும் பல இடங்களில் சந்திரனைக் குறிப்பதாகவும் இருக்கின்றன. இந்து சோமனைத் தழுவுகிறது என்ற மந்திரம் (9.12.5.). இரண்டும் வேறு வேறானவை என்று காட்டினாலும் சில இடங்களில் சோம பானம் சந்திரன் இரண்டுக்கும் பொதுவான புகழ்ச்சியான மந்திரங்களும் உள்ளன.

somamசோமத் தாவரம்
சோமம் என்பது மலைப் பிரதேசங்களில் விளையும் ஒரு தாவரம், அதன் தண்டு சாறுள்ளது என்பது மட்டும்தான் ரிக் வேதத்திலிருந்து அறிய முடிகிறது. பாரசீக சமயத்தின் வேத நூலாகிய ஜெண்ட் அவஸ்தாவில் இது ஹோமா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது என்ன தாவரம், தற்காலத்தில் அதன் பெயர் என்ன என்பதை அறிய உலகளாவிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. சிலர் வடமேற்கு இந்திய மலைப்பகுதிகளில் விளையும் எபிட்ரா சினிகா (Ephedra sinica) என்ற கோரை போன்ற செடிதான் அது என்று கருதுகிறார்கள். ஆனால் அறிஞர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

சாறு எடுத்தல்
அந்தத் தாவரத்தை வண்டியில் கொண்டுவந்து, இரு பாறைக் கற்களுக்கு இடையில் வைத்து சாறு வரும் வரை நசுக்கி, பசு அல்லது ஆட்டுத் தோலின் மீது பரப்பப்பட்ட ஆட்டு ரோமத்தால் ஆன ஒரு வடிகட்டியின் மீது வைத்துக் கைகளால் முறுக்கிப் பிழிகிறார்கள். (பிழியாத சோமத்தை விட பிழிந்த சோமம் மேலானது என்ற மந்திரத்திலிருந்து (6.41.4) அம்சு எனப் பெயரிடப்பட்ட அந்தத் தண்டுகளை அப்படியே சுவைப்பதும் வழக்கில் இருந்திருக்கக் கூடும் என்பதை அறிகிறோம்). பிற்காலத்தில் அதை மர உரலில் இட்டு உலக்கையால் நசுக்கிச் சாறு எடுப்பது வழக்கத்திற்கு வந்ததை முதல் மண்டலத்திலுள்ள ஒரு சூக்தம் கூறுகிறது. அது சுத்தம் செய்யப்பட்டு அடியில் உள்ள ஒரு மரப் பாத்திரத்தில் சேருகிறது. அதில் நீர், பால், தயிர் இவை கலக்கப்படுகின்றன. இது அருந்தத் தயாராக உள்ள பானம். சோமஸ்ய சமிதார (சோமத்தை எரிப்பவர்) என்ற சொல் இது நெருப்பின் மேல் வைத்துச் சூடாக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இதன் சுவை இனிப்பானது, தேன் போன்றது எனக் கூறப்பட்டிருக்கிறது. இது பழுப்பு நிறமானது என்றும் பச்சை நிறமானது என்றும் இருவகையாகவும் கூறப்பட்டுள்ளது. பால் முதலியன கலப்பதற்கு முன் பச்சையாகவும் கலந்த பின் பழுப்பு நிறமாகவும் இருந்திருக்கக் கூடும்.

தன்மைகள்
சோம பானம் போதை தருவதாகவோ, செயலற்று முடக்குவதாகவோ, கலாட்டா செய்யும் தன்மையை உண்டாக்குவதாகவோ, பழக்கத்தை நிலைநாட்டுவதாகவோ சொல்லப்படவில்லை. இது அமரத்துவமும் ஆனந்தமும் தரக் கூடியதாகக் கூறப்பட்டிருக்கிறது.

வேத ரிஷிகளின் பாடல்கள் அவர்கள் உலகில் ஒவ்வொரு பொருளையும் முதன் முதலாகப் பார்க்கும் குழந்தை போலக் கூர்ந்து கவனித்து அதன் அழகை ரசித்து அனுபவித்ததைக் காட்டுகின்றன. அக்னி எரியும் அழகை ரசித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், சோமச் சாறு ஓடி வருவதை ரசித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர். கண்ணுக்குத் தெரியாத காற்றை ஒளி வடிவமாகக் காண்கிறார்கள் (காற்றுத் தேவனின் உடல் வயிர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்ததாகப் பாரதி கூறியது வேதத்தின் தாக்கம்தான்). அவர்களது தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பரந்ததாக உள்ள நிலையில் நானே இந்திரன், நானே வருணன், உலகைப் படைத்தது நானே என்று கூறி பரம்பொருளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள், நாங்கள் சோமத்தைக் குடித்து அமரராகிவிட்டோம் என்று கூறுவதன் மூலம், பாரதி கூறியது போல, வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் வகை உணர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இதெல்லாம் சாத்தியமானது சோம பானத்தின் தாக்கத்தால் என்றால், சோமம் என்பது மனதை விரிவுபடுத்தும் பொருள்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

மனதை விரிவுபடுத்தும் மருந்துகள் பற்றி விக்கிபீடியா கூறுவதைப் பார்ப்போம்.

முதலில் புலன்கள் தீவிரம் அடைகின்றன. சாதாரணமாகக் கவனத்தில் வராத விஷயங்கள் சிறப்பான கவனம் பெறுகின்றன. பழகின விஷயங்கள் கூட முதன் முதலாகப் பார்ப்பது போல ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் முக்கியத்துவம் உள்ளதாகவும் தோன்றுகின்றன. பொருளின் நிறம், வடிவம், அழகு, ஒலியின் இனிமை முதலியன மிகுதியான தெளிவுடன் தோன்றுகின்றன. ரசனை மிகுதிப்படுகிறது. உடலிலும் சுற்றுப்புறத்திலும் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட பெரிதாகத் தோன்றுகின்றன. காதால் பார்ப்பது, கண்ணால் கேட்பது முதலிய புலன் மாறிய நிகழ்வுகள் ஏற்படுகின்றன. காலம் மிக மெதுவாக ஊர்கிறது அல்லது அசைவற்று நின்று நிகழ்காலம் அமரத்துவம் உடையதாக ஆகிவிடுகிறது. தான் என்னும் உணர்வு அற்றுப் போகிறது. தனக்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையே உள்ள தடுப்பு நீங்கி விடுகிறது.

சோமமும் அத்தகைய பொருளாக, மனதை விரிவுபடுத்தி, சாதாரண நிலையிலிருந்தும் உயர்த்தி, அச்சம், கவலை, கோபம், பொய்மை, ஆசை இவை எதுவும் இல்லாத அமைதியான, ஆனந்தமான மனநிலையைத் தரக்கூடியதாக இருக்கக் கூடும்.

மன விரிவை தியானத்தின் மூலமும் அடைய முடியும் என்று யோக சாத்திரம் சொல்கிறது. ரிஷிகள் இதை தியானம், சோமம் இரண்டையும் பயன்படுத்தி அடைந்திருக்கலாம்.

அமரத்துவம்
வேதம் மூன்று வகையான அமரத்துவங்களைக் குறிப்பிடுகிறது என்று பார்த்தோம். சந்ததி பெருகுவதால் உணரப்படும் அமரத்துவம், பிறர் நலனுக்காக அருஞ்செயல்கள் செய்து புகழ் பெறுவதன் மூலம் கிடைக்கும் அமரத்துவம் என்ற இரண்டு தவிர சோம பானத்தினாலும் அமரத்துவம் அடையலாம். இதை அருந்திக் கால உணர்வு அற்றுப் போவதால் உணரப்படும் அமரத்துவம் தற்காலிகமானது.

சோமம் நிரந்தர அமரத்துவத்தையும் தரவல்லது. எப்படி எனில் அது அறிவையும் ஆற்றலையும் தூண்டுகிறது என வேதம் கூறுகிறது. இதை அருந்திய உற்சாகத்தில் இந்திரன் பல எதிரிகளை வென்றார், பல அருஞ் செயல்களைச் செய்தார், புகழ் பெற்றார், அமரத்துவம் அடைந்தார்.

இவ்வாறு ஆற்றலையும் அறிவையும் பெருக்குவதன் மூலம் அருஞ்செயல்கள் செய்ய வைத்து நிரந்தர அமரத்துவத்துக்கும் வழி வகுக்கும் சோமத்தைப் பற்றி ரிஷிகள் மிகுதியாகப் பாடியது ஒன்றும் வியப்பில்லை.

நான்கு மன நிலைகள்
ரிஷிகளின் பாடல்கள் நான்கு வகை மன நிலைகளில் பாடப்பட்டதை வேதத்தை ஆழ்ந்து கற்பவர் உணர முடியும். முதல் நிலையில் அவர்கள் சாதாரணப் புலவர்களைப் போலப் பாடுகிறார்கள். உவமைகள், உருவகம், மிகைப்படுத்தல் முதலிய அணிகள் கொண்டதாக உள்ளன அப் பாடல்கள். தீனியை நோக்கி ஓடும் குதிரை போல காட்டில் தீ விரைந்து பரவுகிறது என்று கூறுவதும், சோமச் சாற்றில் நீர் கலக்கும் போது சோமம் நீராகிய ஆடை அணிந்திருப்பதாகக் கூறுவதும், அக்னியின் புகையாகிய கொடி வானுலகை எட்டுகிறது என்று கூறுவதும் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

அவர்கள் தியானத்தில் ஆழ்ந்ததாலோ அல்லது சோமத்தை அருந்தியதாலோ பரவச நிலை அடையும் போது பாடு பொருள் எதுவாக இருந்தாலும் அதைத் தேவனாகக் கருதிப் பாடத் தொடங்குகின்றனர். அக்னியை, இந்திரனை, குதிரையை, நதிகளை, நீரை, மேகத்தை, ஏன், தவளையைக் கூடத் தேவ நிலைக்கு உயர்த்துகின்றனர். இது இரண்டாவது நிலை.

சோமத்தைத் தேவனாக ஆக்கிப் பாடும் பாடல்களில் விருத்திரனை அழித்தது முதலிய இந்திரனின் செயல்கள் சோம தேவன் பேரிலும் ஏற்றிக் கூறப்படுகின்றன. இந்திரனைப் போலவே சோம தேவனுக்கும் மருத்துகளைத் துணைவராகக் கொண்டவர், வலிமை மிக்கவர் என்ற அடைமொழிகள் உண்டு.

சோம தேவன் ருத்ரனுடன் சேர்ந்து மருந்துகளால் நோய் நீக்குகிறார். வருணனைப் போலவே அவரும் இயற்கை நியதியைக் கட்டிக் காக்கிறார். சூரியன் போல எல்லாரையும் பார்க்கிறார். அக்னியைப் போல அவரும் கவி (அறிவாளி), வேள்வியின் மையம் என வர்ணிக்கப்படுகிறார்.

பேச்சையும் புத்தியையும் தூண்டுகிறார், அவரால் பாதிக்கப்படாதார் இல்லை. போரில் வெல்ல முடியாதவர். இருளை நீக்குகிறார். செல்வம், வசதி முதலியன கொடுக்கிறார், பிரார்த்தனைகளுக்கு இரங்கி சிறப்புகளுக்குள் மேலான ரயி எனப்படும் செல்வம் கொடுக்கிறார், மந்திரங்களின் தலைவர் என்றும் மனத்தின் தலைவர் என்றும் போற்றப்படுகிறார்.

சோமனே பரம்பொருள்
மூன்றாவது கட்டமாகிய பேரருள் நிலையில் ரிஷிகளுக்கு எல்லாமே பரம்பொருளாகத் தெரிகிறது. தான் என்னும் உணர்வு உடலைச் சார்ந்ததாக இராமல் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பதான தோற்றம் ஏற்படுகிறது. காக்கைச் சிறகினிலும், கேட்கும் ஒலிகளிலும், தீயில் கை வைத்த போதும் பாரதி இறை இன்பத்தை அனுபவிக்க முடிந்தது போல இவர்களும் சோமச் சாற்றில் பரம்பொருளைக் காண்கின்றனர்.

சோமன் உஷஸ் என்னும் வைகறைப் பொழுதைச் சூரியனுக்குத் துணையாக ஆக்கினார், சூரியனில் ஒளி வைத்தார், பூமியையும் விண்ணையும் நிலை நிறுத்தினார் என்று கூறுகின்றனர். மழை, மகப்பேறு, உணவு தருபவர் என்றும், ஆடை இல்லாதவர்க்கு ஆடை அளிப்பவர் என்றும், குருடனைப் பார்க்க வைக்கிறார், நொண்டியை நடக்க வைக்கிறார், பசுவினிடத்தில் பாலை வைத்தார், தேவர்களைப் பிறப்பித்தார் என்றும் அவர் கூறப்படுகிறார்.

தத்துவம்
சோமச் சாறு வடிகட்டப்படும்போது, அதில் ரிஷி ஒரு தத்துவத்தைக் காண்கிறார். ஆட்டு ரோமத்தால் வடிகட்டிய சோமம் ஆனந்தம் தருவது போல தர்மம் என்னும் வடிகட்டி மூலமாகப் புகுந்து வரும் நல்ல பேச்சு எல்லோருக்கும் ஆனந்தம் தரவல்லது என்கிறார்.

வருணனின் அற்புத சக்தியால் நாக்கின் நுனியில் தர்மத்தால் ஆகிய ஒரு வடிகட்டி அமைந்துள்ளது. அறிவாளிகள் அதை நெருங்கிப் பயன் அடைகின்றனர். முடியாதவர்கள் பள்ளத்தில் வீழ்கிறார்கள் (9.73.9).

ஒரு வகை தியானம்
சோமச் சாறு கைகளால் பிழியப்படுவதையும், அது ஆட்டு ரோம வடிகட்டி மூலம் பாத்திரத்தில் விழுவதையும், அப்போது சத்தம் ஏற்படுவதையும் விதவிதமாக வர்ணிக்கிறார்கள் ரிஷிகள். ஒரு எளிய செயல், இதில் வர்ணிப்பதற்கு என்ன இருக்கிறது, அவர்களைக் கவரும் அளவுக்கு அதில் என்னதான் இருந்திருக்கும் என நாம் வியக்கும் போது ஜப்பானியரின் சாஜி என்னும் தேநீர்ச் சடங்கு நினைவுக்கு வருகிறது.

இதில், விருந்தினருக்குத் தேநீர் அளிப்பதை, நான்கு மணி நேரம் ஆகும் ஒரு விரிவான சடங்காக்கி, ஒவ்வொரு அசைவுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் கவனம் செலுத்தி, அதை ஒரு தியான முறையாக ஆக்குகின்றனர். அதைப் போல, சோமச் சடங்கும் மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யப்படும் ஒரு வகைத் தியான முறையாக இருந்திருக்கக் கூடும். சோமத் துளிகள் ஒவ்வொன்றிலும் பரம்பொருளைக் காண்பதால் அதை வர்ணிப்பதில் ரிஷிகளுக்கு அலுப்பு ஏற்படுவதில்லை.

சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி
பரவச நிலையில் ஒவ்வொரு தேவனும் ரிஷிகளுக்குப் பரம்பொருளாகத் தெரிவது போல, சோமமும் பரம்பொருளாகத் தெரிகிறது. சோமம் என்பது ஒரு தாவரத்தைப் பிழிந்து வருவது என்று குடிக்கிறவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ரிஷிகள் எதைச் சோமம் என்று கருதுகிறார்களோ அதை யாரும் அறிய மாட்டார்கள் [7] என்கிறது வேதம். சோமம் ஆனந்தத்தின் பிரதிநிதி. ஆனந்தம் என்பது பொருளைச் சார்ந்தது அல்ல. அது உள்ளத்திலிருந்து பீறிட்டு எழுவது. வெளியில் உள்ள பொருள் அதற்கு ஒரு தூண்டுதல் மட்டுமே. நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் பொருள்களைப் பார்த்துக் குழந்தை மகிழ்ச்சியால் மலர்கிறது. அது போல ரிஷிகள் ஆற்றையும், சூரியனையும், இரவையும், மரங்களையும் பார்த்தும், காற்றை ஸ்பரிசித்தும் ஆனந்தம் அடைகிறார்கள். விண்ணையும் மண்ணையும் படைத்த அவன், அளவிடமுடியாததாகவும் ஒழுங்குற அமைந்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லாமல் நிற்பதாகவும் இவற்றைப் படைத்த அவன், நிச்சயமாக ஒரு திறமையான கலைஞன்தான்[8] என்று பரம்பொருளை வியக்கிறார்கள்.

எதையும் பார்த்து வியந்து ஆனந்தம் அடையும் இத்தகைய குழந்தை மனநிலையையே ஒரு கட்டத்தில் ரிஷிகள் சோமமாகக் காண்கிறார்கள்.

படம் உதவிக்கு நன்றி:
http://www.bellaterreno.com/art/a_religion/hindu/hinduismgod_soma.aspx
http://www.bellaterreno.com/art/images/sitegraphics/hindugod_soma.gif

About சு.கோதண்டராமன்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க