–சு.கோதண்டராமன்.

ram_worship_god_shiva

 

யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் தோத்திரம் இந்து சமய இலக்கியத்தின் மிகப் பழமையான அருச்சனை என்ற சிறப்பைப் பெறுகிறது. இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் நம என்ற இணைப்புச் சொல் கொண்ட மந்திரம் வேதத்தில் இது ஒன்றே. அதனால் இது நமகம் என்றும் அழைக்கப்படுகிறது.

ருத்ரனின் பல விதமான சிறப்புப் பெயர்களைக் கூறி ஒவ்வொன்றுடனும் நம என்று சொல்லப்படுகிறது. அப்படி 273 முறை நமஸ்காரம் செய்யும் இதில் 226வதாக வருவதுதான் நம சிவாய என்ற மந்திரம். மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருளுடையது. இதற்கு அடுத்த மந்திரம் சிவதராய. மேலதிக மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருள் படுவது.

இதில் ருத்ரனின் தோற்றத்தைக் குறிக்கும் பெயர்களாக வருபவை- தங்கக் கையர், கருங் கேசத்தர், ஆயிரம் கண்ணர், பூணூல் அணிந்தவர், தலைப்பாகை கொண்டவர், செம்மேனியர்  என்று பல உள்ளன.

வாளேந்தியவர், அம்புக் கையர், அழகிய நாணேற்றிய வில்லினர்,  காலாட்படை தலைவர்,  எதிரிகளை குத்தித் துளைத்து அடித்து அழ வைக்கின்றவர் என்று அவரது போர்த்திறமையைப் புகழ்ந்து பேசும் நமகங்கள் பல.

துன்பம் துடைப்பவர், பாபத்தை அழிப்பவர், அருள் மழை பொழிபவர், இம்மை மறுமை இன்பம் தருபவர் என்ற பெயர்கள் அவரது உயர் பண்புகளைக் காட்டுகின்றன.

வில்லாளிகள், நாணேற்றுபவர்கள், நாணை இழுப்பவர்கள், அம்பு ஏந்தியவர்கள், குறி நோக்கி அம்பு எய்துபவர்கள், படை தலைவர்கள், எதிரியைக் கிழிப்பவர்கள் என்று அவர் பன்மையில் வணங்கப்படும்போது  அவர் பல்லாயிரம் வடிவத்துடன் தோன்றுவதை அறிகிறோம்.

காலத்தால் மிகப் பழமையானது என்பதைத் தவிர, இந்த அருச்சனைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது சொல்லும் முறை வித்தியாசமானது.

மணல் திட்டு, ஓடும் நீர் முதலான எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறாமல் மணல் திட்டே வணக்கம், ஓடும் நீரே வணக்கம்,  களர் நிலமே வணக்கம்  என்று இவ்வகையில் சுக்கான் பூமி, மாட்டுக் கொட்டகை, வீடு, கட்டில், ஒலி, எதிரொலி என்று பல பொருள்களுக்கு வணக்கம் கூறுகிறது. பொருளுக்குள் இறைவன் மறைந்து இல்லை, பொருளே இறைவன் என்கிறது இது.

மந்திரியாகவும் அவைத் தலைவராகவும் விளங்குபவரும் அவரே. மற்றும் வணிகர், தச்சர், குயவர், விராதன் (புலையன்) என்று எல்லா வகை மனிதராகவும் அவரே காட்சி தருகிறார். குதிரை, நாய் முதலான மிருகங்களும் அவரே. இந்த எல்லா உயிர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதிலிருந்து எல்லாமே  இறைவனாகப் போற்றப்பட வேண்டியவை என்பது விளக்கப்படுகிறது.

கருங் கழுத்தர்- வெள்ளைக் கழுத்தர், சடையர்- மொட்டையர், மூத்தவர்- இளையவர், பச்சை இலை- காய்ந்த சருகு, மழைநீர்- மழையின்மை என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைகளையும் ருத்திரனாகக் கருதிப் போற்றும் மந்திரங்கள் சோதியனே- துன்னிருளே, சேயாய்- நணியானே என்ற மணிவாசகரின் வரிகளை நினைவூட்டுகின்றன.

எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் இறைவன் என்றால் நாம் அன்றாடம் கண்ணெதிரில் காண்போரும் தெய்வம் தானே. உரக்கக் கூவுபவர்களுக்கு வணக்கம், ஓடுபவருக்கு வணக்கம், உட்கார்ந்து இருப்பவர்களுக்கு வணக்கம், படுத்திருப்பவர்களுக்கு வணக்கம், தூங்குபவர்களுக்கு வணக்கம், விழித்திருப்பவர்களுக்கு வணக்கம், நிற்பவர்களுக்கு வணக்கம் என்று இறைவனின் வியாபகத் தன்மையை விதந்து ஓதுகிறது ருத்ரம்.

இறைவன் கெட்டவரிடத்தும் இருப்பான் அல்லவா?  அதனால் ருத்ரம் அவனது உயர் பண்புகளைப் போற்றுவதோடு நிற்கவில்லை. தாழ்ந்ததாக நாம் கருதும் பண்புகளையும் கொண்டவன் இறைவன் என்கிறது.  இது பிற அருச்சனைகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு.

திருடர்களின் தலைவருக்கு வணக்கம், கொள்ளையருக்கு வணக்கம், ஏமாற்றுபவருக்கு வணக்கம்,  பேராசைக்காரருக்கு வணக்கம் என்று நாம் சமூகத்தில் விரும்பத் தகாதவராகக் கருதுவோரையும் இறைவனாகவே காண்கிறது.

இதைப் படித்து விட்டுத் தான் பாரதி சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி (வேதம்) சொல்லும் என்று பாடினார் போலும். வேறொரு பாடலில் ருத்ரத்தின் சாரத்தைப் பிழிந்து தமிழில் தருகிறார்.

சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.

 

படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *