என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 24
–சு.கோதண்டராமன்
யமனும் பித்ருக்களும்
ரிக் வேதத்தின் முதல் மண்டலமும் பத்தாவது மண்டலமும் காலத்தால் பிற்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாகப் படிப்பவர்களுக்கே தெரியும் அளவுக்கு இவ்விரு மண்டலங்களும் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன. அந்த வேறுபாடுகளில் ஒன்று யமன் மற்றும் பித்ருக்கள் பற்றிய தகவல்கள்.
இரண்டு முதல் ஒன்பது வரையிலான பழைய மண்டலங்களில் ரிஷிகளின் கவிதைகளில் ஒரு உற்சாகம் தெரிகிறது. அவர்கள் வாழ்க்கையின் துன்பங்களைப் பிரச்சினையாகக் கருதவில்லை. இயற்கையைக் கண்டு வியந்தனர், குதூகலித்தனர். இவற்றையெல்லாம் படைத்த அவன் ஒரு திறமையான கலைஞனாகத்தான் இருக்க வேண்டும் என இறைவனைப் போற்றினர். இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழத் தேவையான பசுச் செல்வம், குதிரைகள், குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள் மற்றும் அமரத்துவம் பெறவேண்டும் என்று தேவர்களை வேண்டினர். ஆனால், மரணத்துக்குப் பின் என்ன என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லை.
முதலாவது பத்தாவது மண்டலங்களில் அவர்கள் இந்த உலகைத் தாண்டி, இந்த வாழ்க்கையைக் கடந்து பிறகு என்ன என்று சிந்திக்கத் தொடங்கினது தெரிகிறது.
யம என்ற சொல் பழைய மண்டலங்களிலும் காணப்படுகிறது. கட்டுப்படுத்து என்ற பொருளில் வினைச் சொல்லாக மட்டுமே அது வருகிறது. ஒரு தெய்வத்தின் பெயராக அது பயன்படுத்தப் படுவது முதலாவது பத்தாவது மண்டலங்களில் மட்டுமே.
உயிர் எங்கே போயிற்று?
தனது அன்பிற்குரியவர் இறக்கும் போது ரிஷி வருந்துகிறார். இவருடைய உயிர் எங்கே போயிற்று எனச் சிந்திக்கிறார். சூரியனிடம் போயிருக்குமா, காற்றில் கலந்திருக்குமா, தாவரங்களோடு ஐக்கியமாகி இருக்குமா எனப் பலவகையாக யோசிக்கிறார். அவர் பூமிக்குள் மறைந்து வாழ்கிறாரா, விண்ணில் உள்ள தெய்வங்களோடு சேர்ந்து வாழ்கிறாரா என நினைக்கிறார். உயிர் மீண்டும் அந்த உடம்பில் வந்து குடியேறும் என்று கூட எதிர்பார்க்கிறார்.
இயங்கிக் கொண்டிருந்த உடலின் இயக்கம் நின்று போனதுக்குக் காரணம் உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறிவிட்டதுதான் என நினைக்கிறார்கள். அந்த ஒன்று ஆத்மா என்றும் அஸு என்றும் மனஸ் எனவும் பல வகையாக அழைக்கப்பட்டது.
10.58 இல் ரிஷி சுருதபந்து இறந்தவரின் மனஸைக் கூவி அழைக்கிறார். யமனின் இடத்துக்குப் போயிருக்கிறாயா, பூமியின் நான்கு மூலைகளுக்கும் போய் விட்டாயா, பிரகாசிக்கின்ற வெளிச்சத்தில் மறைந்து விட்டாயா, அலைகடலில் அடங்கிவிட்டாயா, நீரில் நிலைத்து விட்டாயா, தாவரங்களில் தங்கி விட்டாயா, மலைகளின் உயரத்தில் மறைந்துவிட்டாயா, தொலைவில் சூரியனுக்கு அருகில் சென்று விட்டாயா? எங்கிருந்தாலும் இங்கே வா, வாழ்வதற்காக உன்னை நாங்கள் அழைக்கிறோம் என்று பாடுகிறார். முடிவாக, உன் மனஸ் எங்கள் அறிவுக்கெட்டாத இடத்தில், அசைகின்ற எல்லாவற்றிலும், கடந்த காலத்திலும், வருங்காலத்திலும் அடங்கிவிட்டது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார்.
யமன்:
பலவாறாக யோசித்த பின், ஏதோ ஒரு தெய்வம் மரணத்துக்குப் பின் உயிரைப் பொறுப்பேற்றுக் கொள்கிறது என்று முடிவு கட்டுகிறார்கள். அந்தத் தெய்வம் எது என்று சிந்திக்கும் போது பூஷன், வாயு, சவிதா, ஸரஸ்வதி என்று பல பெயர்கள் அவர்கள் நினைவுக்கு வருகின்றன.
பூஷன் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அவர் எல்லாம் அறிந்தவர். அவர் உன்னைப் பித்ருக்களுடன் சேர்க்கட்டும் (10.17.3).
வாயு உன்னைக் காப்பாற்றட்டும். தொலைவிலுள்ள அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும். ஸவிதா உன்னைப் பிதிரர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும் (10.17.4).
பித்ருக்களுடன் ஒரே ரதத்தில் செல்கின்ற ஸரஸ்வதி இன்று நம்மிடையே வந்து மகிழட்டும், உணவு தரட்டும் (10.17.8).
இப்படிப் பல தேவர்களையும் பித்ருக்களின் பொறுப்பாளர்களாகப் பரிசீலித்த பின் இறுதியாக யமன்தான் அந்த வேலையைச் செய்பவர் என்று தீர்மானிக்கிறார்கள். நிர்ருதி, அஸுநீதி என்ற பெயர்களும் யமனுக்குச் சில இடங்களில் அளிக்கப்படுகின்றன.
வருணனின் பரிணாம வளர்ச்சிதான் யமன் என்று கருத இடம் உள்ளது. ஒரு மந்திரத்தில் யமன் வருணன் இருவரும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்கள்.
செல்லுங்கள், நமது முன்னோர்கள் எங்கே சென்றார்களோ, அங்கே செல்லுங்கள். அங்கே, யமன் வருணன் ஆகிய இரு ராஜாக்களும் மகிழ்ந்து கொண்டிருப்பதைக் காணுங்கள் (10.14.7).
வருணனின் ஆயுதமாக இருந்த பாசம் பிற்காலத்தில் யமனுக்கு உரியதாக ஆயிற்று. வேதத்தில் வருணன் மானிடர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்துபவராகவும்(கடிவாளம் போல மானிடர்களை இயக்குகிறார் 6.67.1), தவறுகளுக்குத் தண்டனை தருபவராகவும் கூறப்படுகிறார். யமன் என்ற சொல்லும் நெறிப்படுத்துபவர் என்ற அதே பொருள் உடையது.
யமன் உயிரைக் கவர்பவராக ரிக் சொல்லவில்லை, ஆனாலும் யமனுக்கும் நம் மரணத்துக்கும் ஏதோ தொடர்பு உள்ளது என்றும் உணர்கிறார்கள்.
அவர்தான் முதன் முதலாக, இறந்தவர் செல்வதற்கான ஓரிடத்தை ஏற்படுத்தினார் என்றும் அங்கு அவர் அங்கிரஸ்கள் என்ற பழமையான பித்ருக்களுடன் மகிழ்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. யமன் விரும்பும் வரைதான் நாம் உயிர் வாழ முடியும். எனவே யமனுக்கு சோமமும் யக்ஞமும் அளித்து மகிழ்விக்கிறார்கள்.
யமனின் இருப்பிடம் செல்லும் வழியில் இரண்டு நாய்கள் இருப்பதாகவும் அவை அங்கு வாழ்வோரைக் காவல் காப்பதாகவும், புதிதாக இறந்தவர்களை அந்த நாயிடம் யமன் ஒப்படைப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவை பெரும் பலம் உடையன, உயிர்களை வேட்டையாடுவதில் திருப்தி அடைவன, நீண்ட மூக்கு உடையன. அவை உயிர் வாழ்வோரைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகிறது.
வேதகால ரிஷிகளுக்கு புறா ஒரு கெட்ட சகுனமாகத் தெரிகிறது. அது யமனின் தூதனாகப் பார்க்கப்படுகிறது.
பித்ருக்கள்:
பித்ருக்கள் என்போர் யார்? பழைய மண்டலங்களைப் பொறுத்தவரை, அங்கிரஸ், ப்ருகு, அதர்வான், மனு ஆகிய மனிதர் குல முன்னோடிகள்தான் பித்ருக்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இவர்களில் மனுதான் மனித குலத்தின் முதல் தந்தை. அங்கிரஸ் என்பவர் மறைபொருளாக இருந்த ஞான ஒளியைக் கண்டறிந்தவர். ப்ருகு அக்னியைக் கண்டறிந்தவர். அதர்வான் தேவர்களுக்கு அக்னி மூலம் ஆகுதி அளித்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தியவர். இவர்கள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவர்களாயினர்.
வளர்ச்சியா, தேய்வா?
மற்ற மண்டலங்களில் நன்மை செய்வோர் மட்டுமே தேவர்களாகக் கருதி வணங்கப்படுகின்றனர். தேவர்களை மக்கள் அன்போடு நேசிக்கிறார்கள், வரச் சொல்லி அழைக்கிறார்கள். தீமை செய்பவர்கள் யாதுதானர், நிர்ருதி, ராட்சசர் என்று அழைக்கப்பட்டு இகழப்படுகிறார்கள். பத்தாவது மண்டலத்தில் நமக்கு மனதுக்குப் பிடிக்காத செயலைச் செய்யும் யமன் தேவனாகக் கருதப்படுகிறார். அவரிடம் பயந்து கொண்டு மரியாதை செய்கிறார்கள். இங்கே வராதே, குழந்தைகளைத் தொடாதே என்று அவர் வேண்டப்படுகிறார்.
முந்தின மண்டலங்களில், அமரத்துவத்தை அடைந்து தேவர்களோடு சேர்ந்து வாழ்வதுதான் மனித வாழ்வின் லட்சியம் என்பது பல வகையாலும் வற்புறுத்தப்-படுகிறது. சந்ததி விருத்தி மூலமும், சோம பானத்தை அருந்துவது மூலமும் அமரத்துவத்தை அடையலாம் என்றாலும் நிலையான அமரத்துவத்தை கடுமையான உழைப்பின் மூலம், சாதனைகள் மூலம்தான் அடைய முடியும் என்று சொல்லப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ரிபுக்களின் வரலாறு கூறப்பட்டது. அங்கிரஸ்கள் கூட உழைப்பாலும், நற்செயல்களாலும் பணி எனப்பட்ட பகைவர்களை வென்று இறையருளைப் பெற்றதாகவும் அமரத்துவம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பத்தாவது மண்டலத்தில், இறந்தவர் அனைவரும் ஒளி உடல் பெற்று பித்ருக்களாகி விடுகிறார்கள், தேவர்களோடு சேர்ந்து வாழ்கிறார்கள் என்ற கருத்து காணப்படுகிறது. ஒருவன் இறப்பதன் மூலமே பித்ரு ஆகி விடுகிறான், தேவர்களோடு சேர்ந்து வாழத் தொடங்குகிறான், சோம பானத்துக்கும் யக்ஞ ஆகுதிகளுக்கும் உரியவன் ஆகிவிடுகிறான் என்ற இக் கருத்து முந்திய காலத்தின் உயர்ந்த லட்சியத்தை நீர்க்கச் செய்தது போல உள்ளது.
யமன் பற்றியும் பித்ருக்கள் பற்றியுமான இக் கருத்துகள் வேத சமயத்தின் மையக் கருத்தின் உற்சாகத்திற்கு முரணாக உள்ளன.
அதே நேரத்தில், சமய சிந்தனை வேறு ஒரு திசையில் வளர்ந்திருப்பதையும் காண்கிறோம். உயிர் போன உடலை எரித்த பின்னும் அதில் ஏதோ ஒன்று மீதம் இருக்கிறது, அது நிலையானது என்ற கருத்து புதிதாக ஏற்படுகிறது.
அக்னியே, அவனை எரித்த பின் அவனுடைய உடலில் மீதம் இருப்பது புதிய உடலையும் ஆயுளையும் பெற்று பித்ருக்களிடம் செல்லட்டும். (10.16.5)
எரித்த பின் என்ன மீதம் இருக்கும்? சாம்பல் இங்கேயேதான் இருக்கிறது, பித்ரு லோகத்திற்குச் செல்வதில்லை. தீயினால் பாதிக்கப்படாத ஒன்று உடலில் உயிர் போன பிறகும் இருக்கிறது என்ற இந்தக் கருத்து பிற்காலத்தில் வளர்ந்து, நீரால் நெருப்பால் பாதிக்கப்படாத, என்றும் நிலையாக உள்ள ஆத்மா என்று அழைக்கப்பட்டது. உபநிடதங்களின் ஆத்மா பற்றிய கருத்துகளுக்கு விதை இங்குதான் இருக்கிறது. (ஸம்ஹிதையில் ஆத்மா, அஸு, மனஸ் என்ற மூன்று சொற்களும் உயிரைக் குறிப்பன. உபநிடதங்களில் ஆத்மா என்பது உயிர் அல்லாத வேறு ஒன்றைக் குறிப்பதாக உள்ளது.)
பித்ரு லோகம்:
பித்ரு லோகம் என்ற பெயர் ரிக் வேதத்தில் காணப்படவில்லை. உயரத்தில் உள்ள ஒரு இடம். அங்கு யமன்தான் முதன் முதலில் சென்றார். அங்கு அங்கிரஸ்களுடன் மகிழ்ந்து இருக்கிறார். மனிதர்களை அங்கு ஒன்று சேர்க்கிறார். அந்த இடத்திற்கு வழி காட்டி அழைத்துச் செல்கிறார். இறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து பித்ருக்களுடனும் தேவர்களுடனும் சேர்ந்து வாழச் செய்கிறார். இறந்தவர் அந்த இடத்தை அடையும் முன், ஒளிமயமான ஒரு புதிய சரீரத்தை அடைகிறார் என்ற கருத்து சொல்லப்படுகிறது.
பித்ரு லோகத்தை அடைந்தவன் பித்ருவாகவே ஆகிவிடுகிறான். பித்ருக்கள் ஒளியில் வசிக்கிறார்கள். அவர்கள் உண்மை பேசுபவர்கள். தேவர்களுடன் பயணம் செய்பவர்கள். தேவர்களைப் போல தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோம பானம் செய்கிறார்கள். யக்ஞங்களை ஏற்று மகிழ்கிறார்கள். தேவர்களுக்கு உணவு எடுத்துச் செல்வது போல, அக்னி பித்ருக்களுக்கும் உணவு எடுத்துச் செல்கிறார். பித்ருக்கள் மக்களுக்கு சந்ததியும் செல்வமும் அருள வல்லவர்கள். தவறு செய்தவர்களைத் தண்டிக்கிறார்கள். வேண்டினால் மன்னிப்பார்கள். தேவர்களோடு சேர்ந்து வாழ்ந்தாலும் பித்ருக்கள் தேவர்களாவதில்லை. அவர்களின் இடத்துக்குச் செல்லும் பாதை தேவர்களின் பாதையிலிருந்து வேறானது என்று சொல்லப்படுகிறது(10.18.1). இவர்களோடு யமனும் நாம் அளிக்கும் ஹவிஸ்களை ஏற்றுக் கொள்கிறார்.
பூமியில் பிறந்த மனிதர்கள் அவரவரும் தங்கள் தங்கள் வழியில் செல்கின்றனர். எந்த வழியில் போனாலும் முடிவில் முன்னோர்கள் எங்கு சென்றார்களோ அங்குதான் அந்தப் பாதைகள் அழைத்துச் செல்கின்றன (10.14.2).
இந்த மேய்ச்சல் நிலம் நம்மிடமிருந்து பறிக்கப்பட முடியாதது என்கிறார் ரிஷி. அதாவது எல்லோரும் இந்த இடத்திற்கு உரிமை உடையவர்கள், எல்லோரும் அங்கு சென்றுதான் ஆகவேண்டும்.
கீழானவர்கள், மேலானவர்கள், இடைப்பட்டவர்கள் ஆகிய பித்ருக்கள் சோம பானத்துக்கு உரிமை உடைவர்கள். உயிர் நீத்தலை அடைந்த, மென்மையான, நேர்மையான அவர்கள் எங்கள் அழைப்புக்கு இணங்கி எங்களைக் காப்பாற்றட்டும் (10.15.1).
இறந்த உடல்களுக்கு ஸம்ஸ்காரம்:
உடல்களை எரிப்பது வழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். அந்த இடத்தில் மீண்டும் புல் முளைக்க வேண்டும் என்று அக்னியிடம் பிரார்த்தனை செய்யப்படுகிறது (10.16.13).
இறந்த உடன் உடலை எரிக்காமல் ஓரிரு நாட்கள் திறந்த வெளியில் வைத்திருந்து பின்னர் எரிப்பதும் வழக்கில் இருந்திருக்கிறது. அதனால் நரி, கழுகு முதலியன வந்து உடலைச் சிதைப்பதும் நடந்திருப்பது அறியப்படுகிறது. மீண்டும் உயிர் வந்து உடலில் குடியேறும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.
கறுப்புப் பறவையோ, எறும்போ, பாம்போ, நரியோ உடலில் என்ன காயம் ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாவற்றையும் விழுங்கும் அக்னி அதைச் சரி செய்யட்டும் (10.16.6).
உடல் எரிக்கப்பட்டவுடன்,
கண்ணை சூரியன் எடுத்துக் கொள்கிறது, ஆத்மா காற்றால் எடுத்துச் செல்லப்பட்டு அதனதன் தர்மப்படி பூமிக்கோ ஆகாயத்துக்கோ, நீருக்கோ, தாவரங்களுக்கோ தன் எல்லா உறுப்புகளுடன் செல்கிறது (10.16.3).
இறந்த உடலைப் புதைப்பதும் சொல்லப்பட்டிருக்கிறது:
அக்னியில் இடப்பட்டாலும் இடப்படாவிட்டாலும் ஆகாயத்தின் மத்தியில் அவர்கள் மகிழட்டும். அவர்களுக்கான உடம்பும், செல்லும் பாதையும், அரசே, உங்கள் விருப்பப்படி ஏற்படுத்துங்கள் (10.15.14).
குழியில் உடலை வைத்தபின் அதன் மேல் மண்ணைத் தூவும்போது, இந்த மண் உடலைக் கனமாக அழுத்தாமல் குழந்தையை மூடும் தாயின் ஆடை போல மென்மையாக இருக்கட்டும் என்று வேண்டப்படுகிறது.
உடலை ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சுற்றி வட்டமாகக் கல்லால் சுவர் போல் எழுப்பினார்கள். அதைத் தாண்டி யமன் வரக் கூடாது என்பது அவர்களது பிரார்த்தனை. அந்தச் சுவருக்கு வெளிப்புறம் இருப்பவர்கள் எந்தத் தீங்கும் வராமல் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டப்படுகிறது.
அந்த இடத்தில் நிற்காமல் சென்று விடுங்கள் என்று மக்கள் வேண்டப்படுகிறார்கள்.
இங்கிருந்து சென்று விடுங்கள். பல திசையிலும் பறந்து செல்லுங்கள். இது பித்ருக்கள் அவனுக்காக ஏற்படுத்திய இடம். யமன் அவனுக்காக நீரும் ஒளியும் உள்ள ஒரு இடத்தைக் கொடுத்திருக்கிறார்.
இனிய உறவினனை இழந்த ஒருவனின் மன நிலையை அறிவிக்கும் கீழ்க்கண்ட மந்திரங்களைப் பாருங்கள்.
அக்னியே, அவனைச் சுட்டுவிடாதே. அவனுடைய உடம்பின் பாகங்களோ, தோலோ சிதறாமல் இருக்கட்டும். பக்குவப்படுத்தியபின் அவனைப் பித்ருக்களின் இடத்துக்குச் செல்லும் வழியில் அனுப்பி வைப்பாயாக (10.16.1).
உன் உடலை அக்னி சுடாதிருக்கட்டும். நெய்யும் கொழுப்பும் உன் தேகத்தை மூடட்டும். உன்னைத் தாக்க வரும் அக்னியின் உக்ரம் உன்னைப் பாதிக்காது இருக்கட்டும் (10.16.7).
அக்னியே, உன் பங்குக்கான ஆட்டை உன் சுவாலைகள் எரிக்கட்டும். இந்த மனிதனை நல்ல செயல்கள் செய்தவர்களின் உலகத்துக்கு அழைத்துச் செல்க (10.16.4). மாமிசம் உண்ணும் அக்னி யமனுடைய உலகத்துக்குச் செல்லட்டும். தேவர்களுக்கு ஆகுதி அளிக்கும் இந்த அக்னி தன் வேலையைச் செய்யட்டும் (10.16.9).
விதவை ஆனவள் தவிர்த்த பிற பெண்கள் முதலில் வீட்டுக்குச் செல்லட்டும். அவர்கள் ஆடை ஆபரணங்களை அணிந்து துயரம் இல்லாமல் கணவனுடன் வாழட்டும் (10.18.7).
இனி மேற்கொண்டு மரணம் ஏற்படாது, நாம் இனி சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கலாம். நீண்டகாலம் வாழலாம் என்று நம்புகிறார்கள், வேண்டுகிறார்கள் (10.18.3).
மரணத்திறகுப் பின் என்ன நடக்கும் என்பதை 6000 ஆண்டுகளுக்கு முனபே மதிப்பிட்டிருக்கிறார்கள் என்பது வியப்புக்குரிய உண்மை