–சு.கோதண்டராமன்

என்னதான் இருக்கிறது வேதத்தில் – 15

அக்னி – பல வகை

Agni
வேதத்தில் அக்னி என்பது பூமியில் நாம் மூட்டும் தீயை மட்டும் குறிப்பதல்ல. எதிர்க்க முடியாத வலிமை, இருளைத் துரத்தும் ஒளி, பகைவரை வாட்டும் வெப்பம், மனிதருக்கு உதவும் குணம், மனிதரைத் தூண்டும் திறன் உடைய எல்லாமே அக்னி தான்.

விண்ணில் உள்ள சூரியனும் அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னலும் கூட அக்னியாகத் தான் குறிப்பிடப்படுகின்றன. விண்ணில் சூரியனாகவும், அந்தரிக்ஷத்தில் மின்னலாகவும் பூமியில் தீயாகவும் இருப்பதால் த்ரிஷதஸ்த (மூவுலகிலும் இருப்பவர்) எனப்படுகிறார்.

மூன்று அக்னிகள் இருந்தன. அவற்றில் மனிதர் மகிழ்ச்சிக்காக ஒன்று மட்டும் பூமியில் வைக்கப்பட்டது. மற்ற இரண்டும் விண்ணில் வைக்கப்பட்டன[1] என்று வேதம் கூறுகிறது. அவை முறையே தீ, சூரியன், மின்னல் எனப் பொருள் கொள்கிறோம்.

கர்ப்பத்தில் இருந்தபோது தனூனபாத், பிறந்த பின் நராசம்ஸன், தாயின் மடியில் இருக்கும்போது மாதரிச்வான்  என்று அக்னியின் பெயர்கள் பலவாகும்.[2]

அக்னி ஒன்று தான். அது பல வகையாக மூட்டப்படுகிறது.[3] அக்னியின் பிறப்பிடங்களைப் பொறுத்து பத்து வகை உண்டு,[4] என்று வேதம் சொல்கிறது. அவற்றில்

1. விண்ணில் பிறந்த சூரியன்,

2. அந்தரிக்ஷத்தில் தோன்றும் மின்னல் இவற்றைப் பார்த்தோம்.

3. கடலுக்குள் மறைந்திருந்து அவ்வப்போது வெளிப்படும் வடவாக்னி என்று சொல்லப்படும் எரிமலைகளும் நீரில் தோன்றிய அக்னியாகக் கொள்ளப்படுகிறது. நீருக்குள் வாழும் அக்னி நீரால் மட்டுமே சூழப்பட்டிருப்பதால் ஆடை இல்லாதவராகவும், நீரையே ஆடையாக அணிந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.[5] தேவர்கள் உன்னை நீருக்குள் கண்டுபிடித்தார்கள், குகையினுள் சிங்கம் போல என்கிறது வேதம்.[6] அக்னியை நீருக்கு நண்பன் என்று போற்றுகின்றனர். சமுத்திரத்தை ஏழு ஆறுகளின் சங்கமம் என்று வர்ணித்த அவர்கள் அந்த ஏழு ஆறுகளையும் அக்னியை வளர்த்த ஏழு சகோதரிகளாகப் போற்றுகிறார்கள். சில இடங்களில், “ஒன்றாக வாழ்கின்ற ஏழு ஆறுகள் அவனை கருத் தாங்கின” என்றும் கூறுகிறார்கள். அபாம் நபாத் (நீரின் மைந்தன்) என்ற பெயரும் அவருக்கு அளிக்கப்படுகிறது. நபாத் என்ற சொல் பேரன் என்றும் பொருள் படும். நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறது.[7] எனவே அவர் நீரின் பேரன்.

4. பாறையில் தோன்றும் தீ கற்களை ஒன்றுடன் ஒன்று உரசி தீ மூட்டப்படுகிறது. எனவே அக்னி பாறையின் மகனாகக் கூறப்படுகிறார்.[8]

5. மரத்தில் தோன்றும் தீ மரங்கள் உரசுவதாலும் அக்னி பிறக்கிறது. மரமும் அக்னியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அரணிக்கட்டை முதலியவற்றில் மறைந்திருக்கும் தீயைப் பற்றி, “அசையாப் பொருட்களிலும் அவன் இருக்கிறான்”. “கர்ப்பிணியின் கர்ப்பம் போல இரு குச்சிகளில் அவன் அடங்கியுள்ளான்”[9] என மொழிகின்றனர். “பல வருடங்கள் கர்ப்பத்தில் இருந்தான். தாய் அவனை தந்தைக்குத் தெரியாமல் அணைத்து வைத்துக் கொள்கிறாள்” என்றும், நீர், கல், காட்டு மரங்கள், செடிகள் ஆகியவற்றிலிருந்து அவன் பிறப்பிக்கப்பட்டான் என்றும் போற்றினர்.[10]

6. காட்டுத் தீ இவர் காடுகளை அழிக்கும்போது தேவர்கள் இவரைப் போற்றுகிறார்கள். காட்டில் ஓரிடத்தில் அக்னி பற்றினால் காடு முழுவதும் அழிகிறது. “ஒரு வருடத்தில் அங்கு புதிதாகத் தாவரங்கள் வளர்கின்றன.” “பழையன கழிந்து புதியன பிறக்கக் காரணமாயிருப்பது அக்னி.”[11]  காட்டில் தீப் பிடித்தால் அதன் வலிமையின் முன்னே எவரும் நிற்க முடியாது. எனவே அவர் காட்டின் தலைவன் எனவும் காட்டின் புதல்வன் எனவும் வர்ணிக்கப்படுகிறார். காட்டுத் தீயை ரிஷி வர்ணிக்கிறார்.

“காற்றால் தூண்டப்பட்டுக் காய்ந்த மரங்களில் பரவும் அக்னி வாளுக்குப் பதிலாக தன் நாக்குகளையே பயன்படுத்திப் பேரிரைச்சலோடு காளை போல் சீறிக் கொண்டு விரைகிறார். அவர் பாதை கறுப்பாக ஆகிவிடுகிறது.”[12]

“தேரில் பூட்டப்பட்ட உன் சிவப்புக் குதிரைகள் காற்றைப் போல் விரைந்து செல்வன, காட்டு மரங்களைப் புகையால் மூடுகிறது.”[13]

“காற்றினால் தூண்டப்பட்டுப் பல திசைகளிலும் பரவும் அக்னி கட்டுப்பாடற்றுப் பாம்பு போல் வளைந்து உலர்ந்த புற்களினூடே செல்கிறது.”[14 ]

“பூமித் தாயின் ஆடையை நக்கிக் கொண்டு அவர் வயல்களில் நீண்டும் அகன்றும் அலையும்போது மிருகங்கள் விரைந்தோடுகின்றன. செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு கறுப்புப் பாதையை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறார்.”[15]

அக்னி ஒரு தத்துவம்

வேதத்தில் அக்னி என்பது நாம் வெளியில் காண்கின்ற ஒரு பொருளாக மட்டும் கருதப்படவில்லை. அது ஒரு தத்துவம். ஒளி, வெம்மை, எதிரியை அழிக்கும் திறன், நல்லோர்க்கு உதவும் மனம், இடைவிடாது செயல்பட ஊக்கப்படுத்தும் தன்மை இவை கொண்ட பொருள்கள் எல்லாம் அக்னியாகக் கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன.

இன்னும் வேறு எங்கெல்லாம் அக்னி காணப்படுகிறான் என்று தேடிய ரிஷிகளுக்கு ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்’ என்பது நினைவுக்கு வருகிறது.

7. உயிர்த் தீ

வாழும் மனிதரின் உடல்களில் எல்லாம் சூடு காணப்படுவதை அறிந்து  நம்மிடத்திலும் அக்னி இருக்கிறானே என்று வியந்தனர். மனிதருடனே வாழ்பவன், வாழும்  மனிதருக்காகப் பல இடங்களில் தங்குபவன் என்று போற்றினர். மேலும் பார்க்கும் போது மனிதர் மட்டுமல்லாது பிற உயிர்களிடத்திலும், தாவரங்களிடத்திலும் இந்தச் சூடு காணப்படுவதை அறிந்து அவனை, எல்லா உயிர்களுக்கும் தலைவன் (விச்வாயு), இருப்பு முழுவதும் வியாபித்தவன், உயிருள்ளோரை எல்லாம் ஒன்றுபடுத்துபவன் என்கின்றனர். “ரிஷிகளும், விண்ணில் பறக்கும் பறவைகளும், போரில் தோற்ற வீரர்களும் அக்னியை அழைக்கின்றனர்” என்றும், “ஓஷதிகள் அவனைக் கர்ப்பமாகத் தாங்கின” என்றும் பாடுகின்றனர். பிறந்த எல்லாவற்றையும் அறிந்தவன் (ஜாதவேதஸ்) என்ற பெயர் உயிருள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் காணப்படும் இந்த உயிர்த் தீயையே குறிப்பதாக இருக்க வேண்டும்.

எல்லா உயிர்களிடத்தும் வாழ்பவர் என்றால், தாவரங்களிலும் அவர் உள்ளார் என்று ஆகிறது. நீரினால் தாவரங்கள் வளர்கின்றன. தாவரங்களால் அக்னி வளர்கிறார். மனிதன் பல அக்னிகளால் மூட்டப்படுகிறான் என்பதிலிருந்து[16] மனிதருக்குள் இன்னும் வேறு வகையான அக்னிகள் இருப்பது அறியப்படுகிறது. கணவனையும் மனைவியையும் நீ ஒன்று பட்ட மனத்தினர் ஆக்கும்போது அவர்கள் உனக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என்பதிலும்[17] எங்கள் தாம்பத்தியத்தை இனிமையாக நெறிப்படுத்துகிறாய்[18] என்பதிலும் அவர் கருவறைக்குள் நுழைந்து உயிர்களைப் பிறப்பிக்கிறார் என்பதிலும்[19]  அக்னிக்குத் தனூக்ருத் (உடலை உருவாக்குபவர்) என்ற பெயர் அளிக்கப்படுவதிலிருந்தும் அக்னி என்பது காமத் தீயைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

8. பசித் தீ

வயிற்றிலுள்ள பசியும் அக்னிக்கு உரிய பண்புகளைப் பெற்றிருப்பது தெரிகிறது. மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகியவை பசிக்கும் உண்டு. நம்மை நடக்கவும் வாழவும் வைக்கிற பசித் தீ உணவின் தலைவன் எனப்படுகிறது. வைச்வானரன் என்பது வயிற்றுத் தீக்கு அளிக்கப்படும் பெயர். இது எல்லா உயிர்களிடத்திலும் காணப்படுகிறது. ஜடரேஷு ஜின்வதே என்று பசி வயிற்றினுள் இருந்து தூண்டுவதை ரிஷி போற்றுகிறார்.[20]

9. அறிவுத் தீ

அறியாமை இருளை அகற்றல், எல்லாத் திசைகளிலும் பார்த்தல், மேல் நோக்கி எழுதல், தன் இருப்பிடத்திலேயே வளர்தல், நம்மை சிரத்தையுடன் செயல்பட வைத்தல், வெல்லமுடியாத வலிமை, ஒளித்து வைக்கப்பட முடியாத தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றிருப்பதால் அறிவுத் துணிவும் அக்னி போன்றதே. மனிதருக்குத் தூண்டுதல் தருபவர், வீரச் செயல்களில் உதவுபவர், தூண் போல் தாங்குபவர் என்றும் அறிவால் உருவாக்கப்பட்டவர் என்றும் போற்றப்படுகிறார். கவி, ரிஷி, அறிவாளி, வருங்காலம் உணர்ந்தவர் என்ற அடைமொழிகள் அக்னிக்கு அளிக்கப்படுகின்றன. வலிமைக்கும் புனித எண்ணங்களுக்கும் தூண்டுதல் தருகிறார். இந்திரனைப் போலவே அக்னியும் விருத்திரனைக் கொன்றவர் எனப் பெயர் பெறுகிறார். (விருத்திரன் என்பது அறியாமை என்பது பாரதியின் விளக்கம்.) அக்னியே, உன்னிடமிருந்து தான் இலக்கியம், எண்ணங்கள், பிரார்த்தனைகள் தோன்றுகின்றன.[21] தவறான வழியில் செல்வோரைத் திருத்துபவர், சிலரைக் கொண்டு பலரை வீழ்த்துபவர் என்ற சிறப்புகள் அறிவாகிய அக்னிக்குப் பொருந்துபவை. அக்னியைத் தேவர்கள் முதல் மனிதனாகவும் மனித குலத்தின் தலைவனாகவும் நியமித்தனர். இளா என்ற பேச்சை மனிதக் குழந்தையின் ஆசிரியராக ஆக்கினர்  என்று கூறுமிடத்திலும் அது அறிவாகிய அக்னியையே குறிப்பிடுகிறது.

10. மனதின் ஊக்க சக்தி

இதுவும் அக்னியே. இந்த ஊக்க சக்தி தான் மனிதனைத் தேவ நிலைக்கு உயர்த்துகிறது. தேவர்கள் அம்ருதத்வம் அடைவது அக்னியின் செயல் திறனால் தான் என்கிறார் ரிஷி.[22] அக்னி, அம்ருதத்தின் காப்பாளன் எனவும்[23] மனிதர்கள் தேவனாகப் பிறப்பதை அறிந்தவர் எனவும்[24] கூறப்படுகிறார்.

தேவர்கள் அக்னியை மனத்தால் தோற்றுவிப்பதாகவும் முனிவர்கள் அதை எண்ணத்தால் வளர்ப்பதாகவும் கூறுகிறது வேதம். யக்ஞங்களின் அடையாளமான அக்னி தன் அறிவினால் எல்லாவற்றையும் அறிகிறார். கடந்து செல்வது தான் இவருடைய நோக்கம்.[25]

“அக்னி பல பெயர், பல வடிவம் கொண்டவர் என்றும் மற்ற அக்னிகள் இவருடைய கிளைகள்” என்றும் பேசுகின்றனர். அக்னிக்குச் செய்யப்படும் துதிகளில் சில எல்லா வகை அக்னியையும் உள்ளடக்கியதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

பல வகை அக்னிகளுக்கும் பிரதிநிதியாகத்தான் தீயில் நாம் நெய்யால் ஆகுதி செய்கிறோம்.[26]

குறிப்புகள்:

1     3.2.9.
2    3.29.11.
3    8.58.2
4    10.51.3
5    3.1.6.
6    3.9.4.
7    3.5.8.
8     2.1.1, 10.20.7
9    3.29.2.
10    1.70.2.
11    1.140.2.
12    1.58.4.
13    1.94.10.
14    1.141.77.
15    1.140.9.
16    6.11.6.
17    5.3.2.
18    5.28.3
19    1.149.2.
20    3.2.11.
21     4.11.3
22    6.7.4.
23    6.7.7.
24    7.2.10.
25    3.11.3.
26    7.8.1.

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://thishollowearth.wordpress.com/2010/11/15/god-of-the-week-agni/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *