Category: சமயம்

  • கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • டல்லாஸ் அனுமன் கோவில்

    டல்லாஸ் அனுமன் கோவில்

    அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரில் அமைந்துள்ள காரிய சித்தி அனுமன் திருக்கோவில், இதோ. அழகிய கட்டமைப்புடன், பனியில் நனைந்தபடி, கம்பீரத்துடன் காட்சி தருகிறது. இராம தூதன், அஞ்சனை மைந்தன், சொல்லின் செல்வன், அல்லலைப் போக்கிக் காக்கும் டல்லாஸ் அனுமனை வணங்கி, அருள் பெறுங்கள். படமெடுத்து அனுப்பிய தம்பி மாதவன் ஸ்ரீரங்காச்சாரிக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

    முருகன் பாட்டுப் போட்டி முடிவுகள்

    தைப்பூசத்து அன்று அறிவித்த முருகப் பெருமான் பாட்டுப் போட்டிக்கான முடிவுகளை முனைவர் வ.வே.சு. அறிவித்துள்ளார். வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள். முனைவர் வ.வே.சு. அவர்களுக்கும் ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் நன்றிகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டவர். முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழப் படைத்தவர். இந்தப் பதிவில், முருகன் மீது எளிமையும் அழகும் சுவையும் உயிர்ப்பும் நிறைந்த ஒரு பாடலை இயற்றி, அதற்கு இசையமைத்துப் பாடுகிறார். தேனாக இனிக்கும் அவரது குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

    என்ன கவி பாடினாலும் – கிருஷ்ணகுமார் குரலில்

    வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகுமார், தபோவனம் சுவாமி ஞானானந்தா அவர்களைப் பாடி, இரண்டு குறுவட்டுகளை வெளியிட்டுள்ளார். இவருடைய தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. அகில இந்திய வானொலி நிலையக் கலைஞர். இவரது மரபணுக்களிலேயே இசை மரபு வளமாக உள்ளது. இந்தப் பதிவில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற ‘என்ன கவி பாடினாலும்’ என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன்

    திருப்புகழ் | முத்தைத்தரு | நேத்ரா ஜெயராமன்

    அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் முத்தைத்தரு பாடலைச் செல்வி நேத்ரா ஜெயராமனின் தித்திக்கும் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த இனிய பாடலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் தெய்வீக அனுபவங்கள் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 5

    என் தெய்வீக அனுபவங்கள் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 5

    தைப்பூசத்தை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது தெய்வீக அனுபவங்களைப் பகிர வேண்டினோம். சிவன் கண்சிமிட்டியதில் இருந்து, காசியில் கஞ்சா அடித்துச் சிவனைக் காண முயன்றது வரை பற்பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பேட்டியின் இறுதியில் நமக்காக முருகன் ஓவியம் ஒன்றை, நம் கண்முன்னே சில நிமிடங்களில் வரைந்து அளித்தார். நேயர்களுக்கு இந்த ஓவியத்தைப் பரிசாக வழங்க உள்ளோம். இதற்கென போட்டி ஒன்றை அறிவித்துள்ளோம். மேலும் விவரங்களைப் பேட்டியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றிவேல், வீரவேல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

    திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த

    திருப்பாவை – 30

    வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
    சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த | ஸ்வேதா குரலில்

    பாற்கடலைக் கடைந்த பரந்தாமனுக்காகத் தமிழ்ப் பாக்கடலைக் கடைந்து, திருப்பாவை எனும் அமுதம் தந்தவர் ஆண்டாள். தாமரைப் பூவிதழ்களால் பூமாலை தொடுத்து, அரங்கனுக்குச் சாற்றியவர் பட்டர்பிரான். இன்னமுதச் சொற்களால், பாசுரப் பாமாலை தொடுத்து, அரங்கன் உள்ளத்தில் இடம்பெற்றவர் கோதை.

    இந்தச் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே பாடுவோர் எங்கும் என்றும் இன்புறுவர். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், நம்மை என்றும் காக்கட்டும்.

    இந்த முப்பது பாடல்களையும் தம் இனிய குரலால் பாடிய செல்வி ஸ்வேதா அவர்களுக்கு என் சார்பிலும் வல்லமை வளர்தமிழ் மையத்தின் சார்பிலும் நன்றிகள், வாழ்த்துகள். தமிழ்கூறு நல்லுலகம், இவரைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டும். திருப்பாவையின் இந்த நிறைவுப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே

    திருப்பாவை – 29

    சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே | ஸ்வேதா குரலில்

    கோவிந்தா, சிற்றஞ்சிறு காலையிலே வந்து உன்னைச் சேவிக்கின்றோம். உன் பொற்றாமரை அடியைப் போற்றுகின்றோம். உனக்குச் சேவகம் செய்யும் வாய்ப்பை வழங்கு. இந்தப் பிறவியில் மட்டுமின்றி என்றைக்கும், எழுகின்ற ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடனே இருக்க வேண்டும். உனக்கு உரியவராய் இருக்க வேண்டும். நீயே எங்களை ஆட்கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செல்லாதவாறு நீயே எம்மைக் காத்தருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகிறார்கள்.

    விடியலைச் சிற்றஞ்சிறு காலே என அழைக்கும்போதே செல்லம் கொஞ்சும் தொனி வந்துவிடுகிறது. குற்றேவல் எனச் சொல்லும்போது அதில் ஒரு குறும்பும் வெளிப்படுகிறது. எங்கள் கவனம் உன் மீதன்றி, வேறு பக்கம் போகக் கூடாது, அதற்கும் நீயே பொறுப்பு என உரிமையுடன் கேட்கும்போது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது.

    எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னுடனே இருக்க வேண்டும் என்றதால், மீண்டும் மீண்டும் பிறந்து இதேபோன்று இன்புற்று இருக்க வேண்டும் என்ற குறிப்பும் வெளிப்படுகிறது. கோதைப் பிராட்டி மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து, இனிய கவிதைகள் யாக்க வேண்டும். உலகம் அதில் தோய வேண்டும். இதோ, இந்த 29ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
    குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்
    சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
    இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று | ஸ்வேதா குரலில்

    மாலே, நெடுமாலே, மணிவண்ணா, ஆழி மழைக்கண்ணா, பூவைப் பூவண்ணா, மலர்மார்பா, கோவிந்தா… எனத் திருப்பாவை முழுவதும் கண்ணனை ஏக வசனத்தில் ஆண்டாள் அழைக்கிறார். அது, உரிமை தந்த நெருக்கம். அதேபோன்று ஆயர்பாடியில் உள்ள பாவையர்களும் அழைக்கிறார்கள். அவளைப் போல் நாங்களும் உரிமையுடன் அழைக்கிறோம் என மகிழ்ச்சி இருந்தாலும், சிறு தயக்கம் அவர்களுக்கு. அப்பா, குறையொன்றும் இல்லாத கோவிந்தா, சிறுபேர் இட்டு அழைத்ததற்காகக் கோபிக்காதே என்கிறார்கள். Nick name என்பதைச் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் என இன்று அழைக்கிறோம். இதைச் சிறுபேர் என ஆண்டாள் வழங்குகிறார். நல்லதொரு சொல்லாக்கம். சிறுச்சிறிதே என முன்பே மொழிந்ததையும் இங்கே நினைவுகூரலாம்.

    சீறாதே எனச் சொல்லாமல் சீறி அருளாதே என்கிறார். ஏனெனில், அவன் சீறினால், கோபித்தால், அதுவும் அவனது அருளே. நடப்பது அனைத்தும் அவனது ஆசீர்வாதம் என ஏற்கும் பக்குவம் பெற்ற உள்ளம், அது.

    இந்தப் பாடலில் அறிவொன்றும் இல்லாத என்றும் அறியாத பிள்ளைகள் என்றும் சிறுபேர் அழைத்தனம் என மூன்று விதமாகச் சொல்கிறார். அறிவொன்றும் இல்லாத என்பதற்கு, உன்னைப் புரிந்துகொள்ளும் அறிவொன்றும் இல்லாத எனப் பொருள்கொள்ளலாம். கறவைகள் மேய்ப்போம், அவற்றின் பின்னே காட்டுக்குள் செல்வோம், எல்லோரும் சேர்ந்து உண்போம். இவற்றைத் தவிர வேறொன்றும் தெரியாது எனச் சொல்வதாகவும் கொள்ளலாம். இது ஒருவகை அவையடக்கம்.

    அறிவொன்றும் இல்லாத எங்கள் குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்துவிட்டோம் எனக் கண்ணனை நோக்கி ஆண்டாள் பாடுகிறார். அதையே ஆண்டாளை நோக்கி நாமும் பாடலாம். எங்கள் தமிழ்க்குலத்தில் நீ பிறப்பதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ. கோதை நாச்சியாரைக் கொண்டாடி, அவர் பின்செல்வோம். கறவைகள் பின்சென்று கானத்தைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    திருப்பாவை – 27

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
    சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும் | ஸ்வேதா குரலில்

    நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் எனப் பாடிய பாவையர்கள், பாவை நோன்பு நோற்று முடிக்கும் தறுவாயில், பாற்சோறு உண்போம், முழங்கை வழிய நெய்யுண்போம். உன்னுடன் கூடியிருந்து குளிர்ந்திருப்போம் என்கிறார்கள். கூடாரை வெல்லும்சீர் கோவிந்தனிடம் நாடு புகழும் பரிசிலும் பல்வகை ஆபரணங்களும் வேண்டும் பாவையர், எல்லாப் பரிசுகளுக்கும் உச்சிப் பரிசாக வேண்டுவது, கூடியிருந்து குளிர்ந்திருப்பதையே. மற்ற பரிசுகள் யாவும் நாடு புகழ்வதற்காக. மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருப்பது தங்கள் உள்ளம் குளிர்வதற்காக. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமத்தைக் கொண்ட கோவிந்தன், இந்தப் பாவையருடன் கூடியிருந்து தானும் உள்ளம் குளிர்ந்திருப்பான். கூடாரை வெல்லும்சீர் கோவிந்தனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு, நாமும் உள்ளம் குளிர்ந்திருப்போம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா | ஸ்வேதா குரலில்

    திருப்பாவையின் முந்தைய பாடலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ என்றும் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் என்றும் சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன் என்றும் பாடியவர் ஆண்டாள்.

    கண்ணனுக்காகக் கட்டிய மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்து, அதன் பிறகுக் கோவிலுக்கு அனுப்பியவர் ஆண்டாள்.

    கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ
    மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

    என நாச்சியார் திருமொழியில் சங்கிடம் கேட்டவர் ஆண்டாள்.

    பாவை நோன்புக்குச் சங்கு வேண்டும் என்றதும், பால்வண்ணத்தில் இருக்கும் உன் பாஞ்சசன்னியத்தைப் போல் சங்குகள் வேண்டும் என்கிறார். அதுவும் ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் சங்கு. ஓம் என்ற நாதத்தின் விஸ்வரூபத்தைப் போல், ஓங்கி ஒலிக்கும் அந்தச் சங்கு. உறங்கிக் கிடந்த சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்தது போல், நமக்கு அறிவூட்டி விழிப்பூட்டும் அந்தச் சங்கு. அதன் பேரரவம் ஒலிக்கட்டும். மாலே மணிவண்ணனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய் | ஸ்வேதா குரலில்

    உன்னைக் கொல்ல ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் கம்சன் வயிறு பற்றி எரிந்திருக்கிறது. இதைத்தான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே என ஆண்டாள் வர்ணிக்கிறார். அடுத்தொரு பாடலில், பகைவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா எனவும் பாடினார். அதே நேரம் பக்தர்கள் இந்தத் தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, அவர்கள் தீவினைகள் யாவும் தீயினில் தூசாகும் என்று முன்னரே பாடியிருக்கிறார். ஒரே தீ, பகைவரிடத்தில் ஒரு விதமாகவும் பக்தர்களிடையே ஒரு விதமாகவும் செயல்புரிகிறது. நம் வருத்தம் தீர்ந்து மகிழ்வதற்கு, இந்த நெடுமாலைச் சரண்புகுவோம். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்

    திருப்பாவை – 24

    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
    சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
    பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
    கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
    குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

    திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம் | ஸ்வேதா குரலில்

    கண்ணனின் அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி வந்த ஆண்டாள், குன்று குடையாய் எடுத்ததைச் சொல்லும்போது குணம்போற்றி என்கிறார். வேலெடுத்து வென்று பகைகெடுக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வேண்டிய இடத்தில் காட்டும் வீரச் செயல்கள். ஆனால், அவனது உண்மையான குணம், பக்தர்களைக் காப்பது. மலையளவு இடர் வரினும் சுண்டு விரலின் நுனியில் அதைக் களைபவன் கண்ணன்.

    ஒரு சிக்கலைப் பல வகைகளில் தீர்க்க முடியும் எனினும் எவரும் எதிர்பாராத விதத்தில், முற்றிலும் புதுமையான முறையில் அதைத் தீர்ப்பவன் கண்ணன். இத்தகைய வீறு படைத்த அதிவீரன் கண்ணனுக்கு என்றென்றும் சேவகம் புரிய அருள வேண்டும் என்பதைக் குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்ற வரிகளுடன் இணைத்துப் பார்க்கலாம். அன்று இவ்வுலகம் அளந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் இன்று கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்

    திருப்பாவை – 23

    மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
    கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
    சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில் | ஸ்வேதா குரலில்

    மழைக்காலத்தில் மலைக்குகையில் கிடந்துறங்கும் சிங்கம், உணர்வுற்று, தீயென விழித்து, மேனி உதறி, பிடரி சிலிர்த்து, தலை நிமிர்ந்து, மலையதிரக் கர்ச்சித்து கம்பீரமாக நடப்பது போல், நீல வண்ணக் கண்ணா, உன் கோயிலிலிருந்து கிளம்பி இந்தச் சிறப்பு மிக்க சிங்காசனத்தில் எழுந்தருளி, எமது தேவைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகின்றார்கள்.

    இதில் அறிவுற்றுத் தீவிழித்து என்பதை நாம் கவனிக்க வேண்டும். நல்லறிவை உற்று (அனுபவித்து) உணர்ந்தால், அஞ்ஞான இருளில் உறங்கும் நம் அகம் விழிக்கும். அதன் பிறகு நாம் சிங்கம்போல் தலைநிமிர்ந்து நடக்கலாம். நம் காரியம் யாவும் நிறைவேறும் என்பது உட்பொருள். ஆண்டாள் ஆராய்ந்து அருளிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share