திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம்
திருப்பாவை – 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 24 | அன்று இவ்வுலகம் | ஸ்வேதா குரலில்
கண்ணனின் அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி வந்த ஆண்டாள், குன்று குடையாய் எடுத்ததைச் சொல்லும்போது குணம்போற்றி என்கிறார். வேலெடுத்து வென்று பகைகெடுக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வேண்டிய இடத்தில் காட்டும் வீரச் செயல்கள். ஆனால், அவனது உண்மையான குணம், பக்தர்களைக் காப்பது. மலையளவு இடர் வரினும் சுண்டு விரலின் நுனியில் அதைக் களைபவன் கண்ணன்.
ஒரு சிக்கலைப் பல வகைகளில் தீர்க்க முடியும் எனினும் எவரும் எதிர்பாராத விதத்தில், முற்றிலும் புதுமையான முறையில் அதைத் தீர்ப்பவன் கண்ணன். இத்தகைய வீறு படைத்த அதிவீரன் கண்ணனுக்கு என்றென்றும் சேவகம் புரிய அருள வேண்டும் என்பதைக் குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது என்ற வரிகளுடன் இணைத்துப் பார்க்கலாம். அன்று இவ்வுலகம் அளந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் இன்று கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)