திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில்
திருப்பாவை – 23
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
திருப்பாவை – 23 | மாரி மலைமுழைஞ்சில் | ஸ்வேதா குரலில்
மழைக்காலத்தில் மலைக்குகையில் கிடந்துறங்கும் சிங்கம், உணர்வுற்று, தீயென விழித்து, மேனி உதறி, பிடரி சிலிர்த்து, தலை நிமிர்ந்து, மலையதிரக் கர்ச்சித்து கம்பீரமாக நடப்பது போல், நீல வண்ணக் கண்ணா, உன் கோயிலிலிருந்து கிளம்பி இந்தச் சிறப்பு மிக்க சிங்காசனத்தில் எழுந்தருளி, எமது தேவைகளைக் கேட்டு ஆராய்ந்து அருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகின்றார்கள்.
இதில் அறிவுற்றுத் தீவிழித்து என்பதை நாம் கவனிக்க வேண்டும். நல்லறிவை உற்று (அனுபவித்து) உணர்ந்தால், அஞ்ஞான இருளில் உறங்கும் நம் அகம் விழிக்கும். அதன் பிறகு நாம் சிங்கம்போல் தலைநிமிர்ந்து நடக்கலாம். நம் காரியம் யாவும் நிறைவேறும் என்பது உட்பொருள். ஆண்டாள் ஆராய்ந்து அருளிய இப்பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)