திருப்பாவை – 29

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

திருப்பாவை – 29 | சிற்றஞ் சிறுகாலே | ஸ்வேதா குரலில்

கோவிந்தா, சிற்றஞ்சிறு காலையிலே வந்து உன்னைச் சேவிக்கின்றோம். உன் பொற்றாமரை அடியைப் போற்றுகின்றோம். உனக்குச் சேவகம் செய்யும் வாய்ப்பை வழங்கு. இந்தப் பிறவியில் மட்டுமின்றி என்றைக்கும், எழுகின்ற ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடனே இருக்க வேண்டும். உனக்கு உரியவராய் இருக்க வேண்டும். நீயே எங்களை ஆட்கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு விஷயங்களில் கவனம் செல்லாதவாறு நீயே எம்மைக் காத்தருள வேண்டும் எனப் பாவையர்கள் வேண்டுகிறார்கள்.

விடியலைச் சிற்றஞ்சிறு காலே என அழைக்கும்போதே செல்லம் கொஞ்சும் தொனி வந்துவிடுகிறது. குற்றேவல் எனச் சொல்லும்போது அதில் ஒரு குறும்பும் வெளிப்படுகிறது. எங்கள் கவனம் உன் மீதன்றி, வேறு பக்கம் போகக் கூடாது, அதற்கும் நீயே பொறுப்பு என உரிமையுடன் கேட்கும்போது இன்னும் நெருக்கம் அதிகமாகிறது.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்னுடனே இருக்க வேண்டும் என்றதால், மீண்டும் மீண்டும் பிறந்து இதேபோன்று இன்புற்று இருக்க வேண்டும் என்ற குறிப்பும் வெளிப்படுகிறது. கோதைப் பிராட்டி மீண்டும் தமிழ் மண்ணில் பிறந்து, இனிய கவிதைகள் யாக்க வேண்டும். உலகம் அதில் தோய வேண்டும். இதோ, இந்த 29ஆம் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.