திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த
திருப்பாவை – 30
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
திருப்பாவை – 30 | வங்கக் கடல்கடைந்த | ஸ்வேதா குரலில்
பாற்கடலைக் கடைந்த பரந்தாமனுக்காகத் தமிழ்ப் பாக்கடலைக் கடைந்து, திருப்பாவை எனும் அமுதம் தந்தவர் ஆண்டாள். தாமரைப் பூவிதழ்களால் பூமாலை தொடுத்து, அரங்கனுக்குச் சாற்றியவர் பட்டர்பிரான். இன்னமுதச் சொற்களால், பாசுரப் பாமாலை தொடுத்து, அரங்கன் உள்ளத்தில் இடம்பெற்றவர் கோதை.
இந்தச் சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே பாடுவோர் எங்கும் என்றும் இன்புறுவர். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால், நம்மை என்றும் காக்கட்டும்.
இந்த முப்பது பாடல்களையும் தம் இனிய குரலால் பாடிய செல்வி ஸ்வேதா அவர்களுக்கு என் சார்பிலும் வல்லமை வளர்தமிழ் மையத்தின் சார்பிலும் நன்றிகள், வாழ்த்துகள். தமிழ்கூறு நல்லுலகம், இவரைத் தக்க வகையில் பயன்படுத்த வேண்டும். திருப்பாவையின் இந்த நிறைவுப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)