படக்கவிதைப் போட்டி 292இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
வல்லமை வாசகர்கள், படைப்பாளர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கட்டும் தைப்பொங்கல்!
தங்கட்டும் மகிழ்வெங்கும்!
*****
கிளியேந்திய பெண்கொடியாய்க் காட்சிதரும் இந்தக் கயற்கண்ணாளின் கோலம், காண்போரின் கண்களுக்குக் காட்டிடுதே வர்ணஜாலம். இவ்வழகிய ஒளிப்படத்தின் சொந்தக்காரர் திரு. மாரியப்பன் கோவிந்தன். இப்படத்தை அவரின் ஒளிப்படத் தொகுப்பிலிருந்து தெரிந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. ஒளிப்பதிவாளர், தேர்வாளர் இருவர்க்கும் என் நன்றிகள் உரித்தாகுக!
மீனாட்சியின் கோலம் புனைந்த இந்தப் பெண்ணைப் பார்க்கையில் மதுரை அரசாண்ட மீனாட்சியும் அவளைப் பாவில் ஆண்ட பாவலர் குமரகுருபரரும் நினைவுக்கு வருகின்றார்கள். ’மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பாடி அந்த மீனாளிடம் முத்துமாலை பெற்றதல்லவா அவரின் அற்புதத் தமிழ்!
அம்மையின் வருகைப் பருவத்தில் அவளை,
தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே! என்றழைக்கின்றார் குமரகுருபரர்.
இப்படித் தமிழ்ச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியழைத்தால் அம்மை வருவதில் அதியமென்ன?
படத்தில் காட்சியளிக்கின்ற ஒப்பனைமிகு மீனாளைக் காணுகின்ற நம் கவிஞர்களின் கற்பனை எப்படியெல்லாம் விரிகின்றது என்று அறிந்துவருவோம்! புறப்படுங்கள்!
*****
”புரமதை எரித்தோன் தேவியான மரகதவல்லி மீனாட்சியைக் கரமது கூப்பி வணங்கிடுவோம்” என்று நமை அழைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மரகதவல்லி…
மரகத வல்லி மீனாட்சி
மண்ணுல கதிலே இவளாட்சி,
கரத்தினில் பிடித்த கிளியுடனே
கண்களில் கருணை காட்டிடுவாள்,
புரமதை எரித்தோன் தேவியவள்
பூவுல காள்கிறாள் மதுரையிலே,
கரமது கூப்பி வணங்கிடுவோம்
கண்ணா லருளும் தேவியையே…!
*****
”பச்சைநிறமான மீனாட்சித் தாயே! என் கண்ணுக்கு நீ ஸ்ரீவில்லிபுத்தூர் பாசுரத் தாயாய்க் காட்சியளித்தாயே!” என்று நெகிழ்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.
பச்சைநிறமானவளே
மதுரை மீனாட்சித் தாயே
கையில் கிளியேந்திய நீ
என் கண்ணில் பாசுரத் தாயே
ஸ்ரீவில்லிபுத்தூர் பாசுரத் தாயே
மதுரையென்ன வில்லிபுத்தூரென்ன
மாதர்குலத் தெய்வங்கள் நீவீர்
மடிநிறையக் கவலையோடு வந்த எம்மை
மகிழ்வெள்ளம் புரளச்செய்து வாழ்த்தியெம்மை அனுப்பிட்டாயே
மொத்தத்தில் நீ எனக்குத் தெரிந்த
மரகதப் பச்சைக்காரி
மதுரை மீனாட்சி தாயே
உலகாளும் உமையே!
*****
”பச்சைக் கொடி என எண்ணிப் பச்சைக்கிளியும் நின் தோளமர்ந்து,
கொஞ்சிப் பேசிட மறந்து விட்டதே வஞ்சிக்கொடி உன் மொழி கேட்டு” என்று வியக்கின்றார் திருமிகு. ராதா.
உலகம் யாதுமாகி நிற்பவளே எங்கும்
உன்னையே காண வேண்டுமெனக்
காட்சிகள் அனைத்தினையும்
சாட்சிகள் கூறவும் வைத்து விட்டாய்…
பச்சைச் செடி கொடி மரம் கண்டாலே
பச்சை வண்ணத்தில் நீயே என
எண்ண ஏதுவாய் எங்கும் உள்ளாய்
எங்கும் நிறை இறைவியே சரணம்!
பச்சைக் கொடி என எண்ணி இப்
பச்சைக்கிளியும் நின் தோளமர்ந்து
கொஞ்சிப் பேசிட மறந்து விட்டது
வஞ்சிக்கொடி உன் மொழி கேட்டு….
செவ்விதழ் உனதினைக் கண்ட கிளி
தலை குனிகிறது வெட்கத்தில்!
உவமைக்கு ஒப்பா உனதழகு -இது
ஐந்தறிவு ஜீவி உணர்ந்த உண்மை
ஐந்தறிவுக் கிளி உணர்ந்த போதம்
ஆறறிவு மக்கள் உணரவில்லை
அவளுக்குள் நாம் அடக்கமே அன்றி
நம்மில் அவள் அடக்கமில்லை என்றும்!
படத்தில் காணும் மீனாட்சியின் எழில் தோற்றத்தில் சிந்தை பறிகொடுத்த நம் கவிஞர்கள், பக்திப் பரவசத்தோடு, அன்னையைப் புகழ்ந்து கவிமழை சிந்தியிருக்கின்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது…
குத்துவிளக்கு
கடவுள் வேடம் போட்டாலும்
கவலைகள் ஏதும் தீரவில்லை!
கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும்
பேசிட இங்கே உரிமையில்லை!
மணிமுடியணிகலம் யாவும் இருந்தும்
அடிமைக்கோலம் மறைந்திடவில்லை!
மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித்
தடைகள் எப்போதும் உடைவதில்லை!
பச்சை நிறங்கள் இருந்தாலும்
பாசியில் வளங்கள் ஏதுமில்லை!
இச்சைப்பேச்சு வார்த்தையன்றி
உரிமைகள் ஏதும் கிட்டுவதில்லை!
பச்சைக்காளிகள் அழித்தாலும்
தஞ்சகன் என்றும் மாய்வதில்லை!
பவழக்காளியாய் மாறினாலன்றித்
தீமைகள் எதுவும் அழிவதில்லை!
பெண்ணினம் சரிநிகரெனினும் அவர்
ஆண்டிடும் வழிகள் இங்கில்லை!
கண்ணிமையாகக் காப்பதாய்க் கூறி
அடைத்து வைத்தல் ஞாயமில்லை!
குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால்
வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை!
கைவிலங்குடைத்து வெளியேறாவிடில்
சுதந்திர வாசம் கிடைப்பதில்லை!
பெண்ணடிமைத் தீர்ந்திடாத வரையில் பெண்கள் எந்த வேடம் புனைந்தாலும் பயனொன்றுமில்லை என விளம்பும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்,
”குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால்
வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை!
கைவிலங்குடைத்து வெளியேறாவிடில்
சுதந்திர வாசம் கிடைப்பதில்லை!” என்று பெண்கள் தடைகளை உடைத்து வெளியேற வேண்டியதன் அவசியத்தையும் இக்கவிதையில் நயமுற உரைத்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.