சேக்கிழார் பாடல் நயம் – 113
திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல் :
“ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே
யீங்கு நான்சொல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவுமும் மிடத்திக ழாதே
யாங்கு வைத்துநீர் தாரு“ மென் றவர்கையிற் கொடுத்தார்.
பொருள் :
(குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே கொடுத்தார்.
திருநல்லூரில் வாழ்ந்த அமர்நீதிநாயனார், தம்ஊருக்கு வரும் அடியார் களுக்கு, வேண்டிய அனைத்தையும் பணிவோடும் பரிவோடும் அளித்து வாழ்ந்தார்! அவர் அவ்வூரின் திருவிழா நிகழ்ந்த நிலையில் அடியார்களுக்கு அமுதுசெய்வித்து மகிழ்ந்தபோது ஒருநாள் சிவபிரான் ஒருபிரமச்சாரி வடிவம் கொண்டு அமர்நீதி நாயனார் இல்லம் நோக்கி வந்தார்.
அவர் சடைகரந்த குடுமி, திருநீறணிந்த மேனியும், வெண்புரி நூலும், மான்தோலும் கொண்டு, தருப்பைப் புல்லைத் திரித்துக் கயிறாக்கிக் கட்டிய கோவணஆடையும்கொண்டு, மெல்லிய திருவடி பதித்து, கையில் ஏந்திய தண்டத்தில் இருகோவணங்கள், திருநீற்றுப்பை, தருப்பைப்புற்கள் ஆகிய வற்றுடன், அமர்நீதியார் திருமடத்திற்கு வந்தார்.
அவ்வாறு வந்த இறைவன் திருவடிவைக் கண்ட நாயனார், மனத்தைவிட முகம் மிகவும் மலர்ந்து, ‘’இங்கு நீங்கள் எம்மை நாடிவர, யான் என்ன தவம் செய்தேனோ?’’ என்று கூறிவணங்கி வரவேற்றார். ‘’இங்கே அடியார்க்கு வேண்டிய உணவும் இடமும் ஆடையும் நீர் தருவதாகக் கேட்டு, உம்மைக் காண, (நீர் எம்மைக் காண) வந்தோம்.’’ என்றார்.
‘’இங்கே அந்தணர் அமுதுசெய்வதற்கு உரிய வகையில் அந்தணரே சமைத்து இடுவதற்கு உரிய ஏற்பாடு உள்ளது!’’ என்று கூறி, ‘’இங்கேயே அமுதுசெய்து அருளுக!’’ என வேண்டினார்.
அப்போது இறைவர் தம் உடைமைகளில் கோவணம் ஒன்றை அடியாரிடம் தந்தார்.
(குணத்தினால்) ஓங்கு கோவணத்தின் பெருமையை உள்ளபடி உமக்கே இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை; நீர், இதை வாங்கி நான் நீராடித்திரும்பி வரும் வரையில் உம்மிடத்தில் இகழ்ந்து விடாமற் காப்பாற்றி ஆங்கு வைத்து நீர் திருப்பித் தருவீராக!“ என்று சொல்லி அதனை அந்நாயனாருடைய கையிலே கொடுத்தார்.
விளக்கம்:
கோவணத்தின் ஓங்கு பெருமையை என மாற்றுக. ஓங்குதல் – பிறவற்றை யெல்லாந் தாழச்செய்து தான் மேலோங்கிப் புகழால் மிகுதல்.
“புவனம் யாவையு நேர்நிலா வென்பது புகழோ?“ (540) என்று இதனையே பின்னர் விரித்தனர்
ஓங்கு கோவணம் என்று கொண்டு, கோவணம் வேதம்;வேதம் நாத உருவமாய் மேலோங்கி நின்று ஏனைய வெல்லாம் தன்னினின்று பிறக்க நிற்பது என்று உரைப்பினும் அமையும்.
“மன்னுதலை துன்னு பொருள் மறைநான்கே வான்சரடாத்,
தன்னையே கோவணமாய்ச் சாத்தினன்காண் சாழலோ“
என்றதிருவாசகத்திற் கோவணப் பெருமையை விரித்தவாறு காண்க. மேலும் “அருமறைநூற் கோவணத்தின்“ என்றமானக்கஞ்சாறர் புராணம், “மறையே நமது கோவணமாம்“ என்ற திருவிளையாடற் புராணம் காண்க.
ஈங்கு நான் சொல்ல வேண்டியதில்லை – நீர் கோவணப் பெருமையை அறிந்து அடியார்க் களித்துவருகின்றீ ராதலின் நான் சொல்லித் தெரிய வேண்டுவ தில்லை. ஈங்கு இவ்விடத்தில். இப்போது என்றலுமாம்.
இப்பெருமையைப் பின்னர் நான் சொல்லாமல் நீரே அறிந்து கொள்ளுவீர் என்பதும் குறிப்பு. வரும் அளவும் என்றதொடருக்கு, நீராடித் திரும்பி வரும் வரையிலும் என்பது பொருள்
இகழாதே என்ற சொல்லுக்கு உம்மிடத்தில் உள்ள அளவற்ற கோவணங்களைப் போன்றதே யிதுவுமாம் என்று இகழ்ச்சியாகக் காணாது காவல் செய்து என்பது பொருள்.
ஆங்கு – காவலுள்ள தனியிடத்தில், என்றபொருள்கொண்டது.
நீர் வாங்கி…..வைத்து…..நீர்தாரும் என, நீர் என்றதனை இருமுறையும் வைத்த தென்னை? எனின், வாங்குதலும் வைத்தலும் நீர் செய்வீர். நான் வாங்குகின்றேன், நான் வைக்கின்றேன் என்ற ஆன்ம போதத்துடன் செய்யும் செயல் நீர் செய்வீர். ஆனால் பின்னர் அக்கோவணத்தைத் திருப்பித் தருகின்ற செயல் உம்முடைய செயலாக நீர் செய்யப் போவதில்லை. தற்போத மிழந்த நிலையில் உம்மையே நீர் தந்து கோவணத்துக்கு நேர் கண்டுகொள்ளுவீர் என்பது குறிப்புமாம்.
நீர் – வாங்கி வைத்து, என்றது உயிரின் தற்போத நிலை. “யாவையும் வைச்சு வாங்குவாய்“ – திருவாசகம்.
“எல்லாந் தான்வைத்து வாங்க வல்லான்“ (379) என்றபடி வைத்தலும் வாங்குதலும் என்ற தொழில். ஆனால் நீர் வாங்குவதாயும் வைப்பதாயும் எண்ணி வாங்கி வைக்கின்றீர் என்ற குறிப்புமாம்.
வைத்தல் – வாங்குதல் என்ற சொல்லாட்சிகள் காண்க. வைத்தல் – சிருட்டி; வாங்குதல் – ஒடுக்கம். இங்கு வாங்கி – வைத்து – தாரும் என்றது கோவணத்தின் மறைவினையும், பின்னர் நாயனார் இறைவனில் ஒடுங்குவதனையும் குறித்து நின்றன என்பர்.
நீர்தாரும் – என்றது பரவசமாகித் தற்போதமிழந்து சிவம் விளங்கிய நிலை. “இருதிறன் அறிவுள திரண்டலா வான்மா“ என்பது சாத்திரம்.
வாங்கி – வைத்து என்ற வினைகளுக்கு எழுவாயாய் நின்ற நீர் என்றதின் தன்மை வேறு; தாரும் – என்ற வினைக்கு எழுவாயாய் நிற்கும் நீர் என்றதின் தன்மை வேறு. ஆதலின் உயிர் ஒன்றேயாகவும், சார்புபற்றித் தன்மை வேறுபாடு நோக்கி இருமுறை கூறினார் என்க.
“இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொடும் அஞ்செழுத் தோதித்,
தப்பி லாதுபொற் கழல்களுக்
கிடாதுநான் தடமுலை யார்தங்கண்,
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை“
என்ற திருவாசகத்தில் நான் என்றது இருமுறையும் ஆளப் பெற்றது காண்க.
சொல்ல வேண்டுவதில்லை – இதனை வாங்கி வைத்துத் தாரும் என்றது இதன் பெருமை ஒருபுறமிருக்க, ஒப்புவித்த பொருள் பெரிதேயாக, அன்றிச், சிறியதேயாக, அதனைக் காப்பாற்றித் திருப்பித் தருதல் உமது கடமை என்பதும் குறிப்பாம்.