சக்தி சக்திதாசன்
லண்டன்

2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி சென்னையை நோக்கிய எனது பயணத்தின் முக்கிய நோக்கம், என் மனைவியின் நீண்டநாள் கனவு, தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த பின்னால் ஒருமுறையாவது ஆண்டு தொடங்கும் போது தான் பிறந்த மண்ணில் இருக்க வேண்டும் எனும் அவாவிலே எழுந்ததாகும். 28ஆம் திகதி சென்னையைச் சென்றடைந்த நாம் 31ஆம் திகதி எனது மனைவி பிறந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் உள்ள கிருஸ்ணாபுரத்தைச் சென்றடைந்து 2020இன் புத்தாண்டுப் பிறப்பை கிருஸ்ணாபுரத்தில் கொண்டாடினோம்.

இப்படியாக ஆரம்பித்த எமது 2020இன் ஆரம்பத்தில் 2020இன் முடிவு இத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை, பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரை தமிழ்நாட்டில் நாம் தங்கியிருந்த சமயம், சீனாவின் வூகான் மாநிலத்தில் ஒரு புதுவித வைரஸின் தாக்கம் பற்றிக் கேள்விப்பட்டோமே ஒழிய அதன் தாக்கத்தின் முழு விஸ்தீரணத்தையும் பற்றி அறிந்திருக்கவில்லை.

நாம் எமது விடுமுறையை முடித்துக்கொண்டு இங்கிலாந்து வந்தடைந்த நேரம்தான், இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது, மேற்கு ஐரோப்பா முழுவதும் கொரோனா தனது கோரப் பிடியை ஆரம்பித்திருந்தது. அப்போது அது தனது முழுக் கோரத் தாண்டவத்தையும் இத்தாலி நகரத்தில் ஆடிக்கொண்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் லாக்டவுண் எனும் புதிய கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது விதிக்க ஆரம்பித்திருந்தன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனித்திருத்தல் போன்ற பதங்களுக்கான அழுத்தங்கள் மக்களின் மனங்களில் உறைய ஆரம்பித்தது.

இங்கிலாந்தில் லாக்டவுண் கொண்டுவருவதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இடம்பெற்றாலும் அதை அமுலாக்குவதற்குச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பததாக கூறிய பிரதமர், தாம் விஞ்ஞானிகளின் விஞ்ஞான அறிக்கையின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுப்பதாகக் கூறினார். அதன் பின்பு நாடு முழுவதுமான முழு லாக்டவுண் ஒருமாத காலத்துக்கு அமுலாக்கப்பட்டது. இதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கும் பொறுப்பு, தமிழ்நாட்டு மாப்பிள்ளையான இங்கிலாந்தின் இளம் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அவர்களின் கையில் விடப்பட்டது. இதுவரை இங்கிலாந்து சரித்திரத்தில் காணாத வகையில் பலவகையிலான பொருளாதார உதவிகள் அறிவிக்கப்பட்டன. இங்கிலாந்து இளவேனில் காலத்திலிருந்து வசந்த காலத்துக்குள் நுழையும் போது கொரோனாவின் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சொற்பமாகிக் கொண்டிருந்த அதேசமயம், தினசரி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வந்தது.

பொருளாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்யும் பல திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்தது, லாக்டவுண் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. லாக்டவுணினால் பாதிக்கப்பட்ட உணவு விடுதிகளை மீண்டும் பரபரப்பாக்குவதற்காக அரசு மக்களை உணவு விடுதிகளுக்குச் சென்று உணவருந்த ஊக்கப்படுத்தியது. ஒருமாத காலத்துக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவு விடுதியில் உணவருந்துவோரின் செலவின் பாதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

மறுபடி கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு வாழ்க்கை திரும்பி விடும் என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்கள். கொரோனாவின் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளைச் சற்றே மறக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒருபுறமிருக்க, இங்கிலாந்தின் பொருளாதாரத்தைத் தாக்கவிருக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கொரோனா பின் தள்ளிவிட்டது என்பதுவே உண்மை. 2019 டிசம்பர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய இராச்சிய அரசுக்கு ஒரு வருட அவகாசம் கொடுத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒரு வருட காலத்துக்குள் அதாவது 2020 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வணிக ஒப்பந்தத்தை எட்டாத பட்சத்தில் இரு பகுதிகளுக்கும் இடையிலான வணிகப் பொருட்கள் மீது வரி அறவிடப்படவிருந்தது.

கொரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கியிருந்த இரு பகுதிகளுக்கு இடையில் இந்த வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவர்களுக்கிடையிலிருந்த இடைவெளி மலையளவாக இருந்தது, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வரும் அவசிய தேவையிருந்தது. 2020 மே மாதம் நடைபெறவிருந்த லண்டன் மேயருக்கான தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் எனப் பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய இராச்சியப் பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானார். ஒருவாறு வெற்றிகரமாக கொரோனாத் தாக்குதலினின்றும் மீண்டுகொண்டார்.

இத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜான்சனின் காதலி, குழந்தைக்குத் தாயானார். ஆம் 2020 இங்கிலாந்துப் பிரதமரைப் பொறுத்தவரையில் ஒரு பரபரப்பு நிகழ்வுகளைத் தாங்கிய ஒரு வருடமாகவே இருந்தது.

பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் சர்ச்சைக்குரிய ஆலோசகரான டொமினிக் கமின்ஸ் என்பவர், மந்திரி சபையில் பதவி வகிக்கும் பல அமைச்சர்களோடு கருத்து மோதல்கள் கொண்டிருந்தார். நாடு முழுவதும் லாக்டவுண் எனும் பிடிக்குள் சிக்கியிருந்த சமயம், கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் கமின்ஸ், இந்த லாக்டவுண் விதிகளை மீறியமை வெளிச்சத்துக்கு வந்தது. மக்களுக்கொரு நீதி, பிரதமரின் ஆலோசகருக்கு ஒரு நீதியா? என ஊடகங்களும் அரசியல் அவதானிகள் பலரும் கொதித்தெழுந்த போதும் பிரதமர் தனது ஆலோசகருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது பல அரசியல் முனைகளில் விசனத்தை ஏற்படுத்தியது.

இப்படியாக லாக்டவுண், லாக்டவுண் தளர்வு, பிரெக்ஸிட் எனக் கரடுமுரடான பாதைகளுக்குள்ளால் பயணித்த இங்கிலாந்து, ஒருவாறு செப்டெம்பர் மாதத்துக்குள் நுழைந்தது. வழக்கமாகவே இங்கிலாந்துக் குளிர்காலத்தில் ப்ளூ எனப்படும் தீவிர ஜலதோஷம் போன்ற உபாதைகளினால் சராசரியாக 20,000 பேர் மரணிப்பார்கள். ஆனால் இம்முறை அதனுடன் இணைந்து கொரோனாவின் தாக்கமும் சேர்ந்தால் தேசிய சுகாதாரச் சேவை அல்லாடப் போகிறது எனும் கருத்து, விஞ்ஞான அவதானிகளினால் அடிக்கடி நினைவூட்டப்பட்டது. மக்களனைவரும் அவதானமாக தம்மைத் தாமே இக்கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகை நடந்துகொள்ள வேண்டும் எனும் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டது.

என்னே ஐக்கிய இராச்சியத்துக்கு வந்த சோதனை! கொரோனா தனது கட்டமைப்பை மாற்றி, அடுத்தவர்களைத் தொற்றிக்கொள்ளும் வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டது. இதன் தாக்கம் இங்கிலாந்தில் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த தொற்றின் வீரியம் விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அச்சமடைந்த ஐக்கிய இராச்சிய அரசாங்கம், நவம்பர் மாதம் கட்டுப்பாடுகளைச் சிறிது தீவிரமாக்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகை, இங்கிலாந்தின் மிக முக்கியப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் போதே வருட்த்துக்கொருமுறை உறவினர்கள், நண்பர்கள் பலரும் சந்தித்துக்கொள்வது வழக்கம். இப்பண்டிகைக் காலத்தில் கெடுபிடிகளை ஐந்து நாட்களுக்குத் தளர்த்த முடிவு செய்தது அரசாங்கம். விஞ்ஞானிகளும், அரசியல் அவதானிகள் பலரும் இதற்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தார்கள்.

கொரோனாத் தொற்று கட்டுக்குள் அடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளினால் நிரம்பி வழியத் தொடங்கியது. இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அல்லாடிய அரசாங்கம் 2021 ஜனவரி தொடக்கம் புதிய தீவிரமான லாக்டவுண் விதிகளை அறிவித்தது. இல்லங்களில் இருந்து பணிபுரியக்கூடியவர்கள் வெளியே செல்லக் கூடாது, பள்ளிகள் பெப்பிரவரி நடுப்பகுதி வரை மூடப்படும், உணவு விடுதிகளில் பார்சல்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பது தடை செய்யப்பட்டது.

இதற்கிடையில் டிசம்பர் 31 ப்ரெக்ஸிட் காலக்கெடுவுக்கு முன்னால் அவசரம், அவசரமாக ஒரு வணிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இவ்வொப்பந்தப் பிரகாரம் ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வணிகம் எதுவித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு மாறிய கொரோனா வைரஸ், ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகியது எனும் காரணத்தினால் உலகின் பலநாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இங்கிலாந்துக்கும், தமக்குமிடையிலான விமான சேவைகளை இரத்துச் செய்தன. டிசம்பர் 22ஆம் தேதியளவில் பிரான்சு நாட்டுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பல ட்ரக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முடியாமல் இங்கிலாந்துக் கரையில் சுமார் இருபது மைல் நீளத்துக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் பலர், தமது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கழிக்க முடியாத நிலைக்கு உள்ளானார்கள். பிரான்சும், இங்கிலாந்தும் பேச்சுவார்த்தைகளின் மூலம் கொரோனா வைரஸுக்கான பரிசோதனையின் பின்னால் இந்த லாரிகள் ப்ரெஞ்சு எல்லைக்குள் அனுமதிக்கப்படும் எனும் ஒரு புரிந்துணர்வை எட்டினார்கள்.

டிசெம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை இங்கிலாந்து ஆரம்பித்தது. பெப்பிரவரி நடுப்பகுதிக்கு முன்னால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் வைத்திய சுகாதாரச் சேவை பணியாளர்கள், வயோதிபர் இல்ல உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும், அதைத் தொடர்ந்து ஏப்பிரல் மாத முடிவுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்றும் 2021 அக்டோபர் மாதத்துக்கு முன்னால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்ற தமது திட்டத்தை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

இன்றைய ஐக்கிய இராச்சிய நிலவரம் பின்வருமாறு.

கட்டமைப்பு மாறிய கொரொனா வைரஸின் தொற்று அதிகரித்த வண்ணமுள்ளது, தொற்றின் காரணமாக வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டி விட்டது. 2020 மார்ச் மாதம் அதி உச்ச நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை சுமார் 21,000 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவரை இக்கொரொனாத் தொற்றுக் கொண்டோரின் இறப்பு எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது. நிலைமை சீராவதற்கு முன்னால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிலை இன்னும் தீவிரமாகும் எனவும் இரண்டு வார காலத்துக்குள் எண்ணிக்கை உச்சமடைந்த பின்னால் தான் குறைவதற்குரிய சான்றுகள் உண்டெனவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த ஆக்கங்களில் 2020இன் சர்வதேச தாக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *