திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

திருப்பாவை – 27
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும் | ஸ்வேதா குரலில்
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் எனப் பாடிய பாவையர்கள், பாவை நோன்பு நோற்று முடிக்கும் தறுவாயில், பாற்சோறு உண்போம், முழங்கை வழிய நெய்யுண்போம். உன்னுடன் கூடியிருந்து குளிர்ந்திருப்போம் என்கிறார்கள். கூடாரை வெல்லும்சீர் கோவிந்தனிடம் நாடு புகழும் பரிசிலும் பல்வகை ஆபரணங்களும் வேண்டும் பாவையர், எல்லாப் பரிசுகளுக்கும் உச்சிப் பரிசாக வேண்டுவது, கூடியிருந்து குளிர்ந்திருப்பதையே. மற்ற பரிசுகள் யாவும் நாடு புகழ்வதற்காக. மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருப்பது தங்கள் உள்ளம் குளிர்வதற்காக. சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமத்தைக் கொண்ட கோவிந்தன், இந்தப் பாவையருடன் கூடியிருந்து தானும் உள்ளம் குளிர்ந்திருப்பான். கூடாரை வெல்லும்சீர் கோவிந்தனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேட்டு, நாமும் உள்ளம் குளிர்ந்திருப்போம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)