திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

180820 Yashoda Krishna -A4 watercolour graphite 100 dpi lr
திருப்பாவை – 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய் | ஸ்வேதா குரலில்
உன்னைக் கொல்ல ஒருவன் பிறந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டதும் கம்சன் வயிறு பற்றி எரிந்திருக்கிறது. இதைத்தான் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே என ஆண்டாள் வர்ணிக்கிறார். அடுத்தொரு பாடலில், பகைவருக்கு வெப்பம் கொடுக்கும் விமலா எனவும் பாடினார். அதே நேரம் பக்தர்கள் இந்தத் தாமோதரனை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, அவர்கள் தீவினைகள் யாவும் தீயினில் தூசாகும் என்று முன்னரே பாடியிருக்கிறார். ஒரே தீ, பகைவரிடத்தில் ஒரு விதமாகவும் பக்தர்களிடையே ஒரு விதமாகவும் செயல்புரிகிறது. நம் வருத்தம் தீர்ந்து மகிழ்வதற்கு, இந்த நெடுமாலைச் சரண்புகுவோம். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)