படக்கவிதைப் போட்டி – 292

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் மாரியப்பன் கோவிந்தன் எடுத்த இப்படத்தை அவரது ஒளிப்படத் தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (10.01.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
மரகதவல்லி…
மரகத வல்லி மீனாட்சி
மண்ணுல கதிலே இவளாட்சி,
கரத்தினில் பிடித்த கிளியுடனே
கண்களில் கருணை காட்டிடுவாள்,
புரமதை எரித்தோன் தேவியவள்
பூவுல காள்கிறாள் மதுரையிலே,
கரமது கூப்பி வணங்கிடுவோம்
கண்ணா லருளும் தேவியையே…!
செண்பக ஜெகதீசன்…
பச்சைநிறமானவளே
மதுரை மீனாட்சித் தாயே
கையில் கிளியேந்திய நீ
என் கண்ணில் பாசுரத் தாயே
ஸ்ரீவில்லிப்புத்தூர் பாசுரத் தாயே
மதுரையென்ன வில்லிப்புத்தூரென்ன
மாதர்குலத் தெய்வங்கள் நீவீர்
மடிநிறைய கவலையோடு வந்த எம்மை
மகிழ்வெள்ளம் புரளச்செய்து வாழ்த்தியெம்மை அனுப்பிட்டாயே
மொத்தத்தில் நீ எனக்குத் தெரிந்த
மரகதப் பச்சைக்காரி
மதுரை மீனாட்சி தாயே
உலகாளும் உமையே
சுதா மாதவன்
:
குத்துவிளக்கு
கடவுள் வேடம் போட்டாலும் கவலைகள் ஏதும் தீரவில்லை
கிளிபோல் இன்மொழிச் சொற்கள் அறிந்தும் பேசிட இங்கே உரிமையில்லை
மணிமுடியணிகளம் யாவும் இருந்தும் அடிமைக்கோலம் மறைந்திடவில்லை
மறுமொழி உரைக்கும் கல்விகள் இன்றித் தடைகள் எப்போதும் உடைவதில்லை
பச்சை நிறங்கள் இருந்தாலும் பாசியில் வளங்கள் ஏதுமில்லை
இச்சைபேச்சு வார்த்தையன்றி உரிமைகள் ஏதும் கிட்டுவதில்லை
பச்சைக்காளிகள் அழித்தாலும் தஞ்சகன் என்றும் மாய்வதில்லை
பவழக்காளியாய் மாறினாலன்றித் தீமைகள் எதுவும் அழிவதில்லை
பெண்ணினம் சரிநிகரெனினும் அவர் ஆண்டிடும் வழிகள் இங்கில்லை
கண்ணிமையாகக் காப்பதாய்க்கூறி அடைத்து வைத்தல் ஞாயமில்லை
குத்து விளக்கெனக் குடத்தில் மூடினால் வெளிச்சம் யார்க்கும் தெரிவதில்லை
கைவிளங்குடைத்து வெளியேறாவிடில் சுதந்திர வாசம் கிடைப்பதில்லை
உலகம் யாதுமாகி நிற்பவளே எங்கும்
உன்னையே காண வேண்டுமென
காட்சிகள் அனைத்தினையும்
சாட்சிகள் கூறவும் வைத்து விட்டாய்…
பச்சை செடி கொடி மரம் கண்டாலே
பச்சை வண்ணத்தில் நீயே என
எண்ண ஏதுவாய் எங்கும் உள்ளாய்
எங்கும் நிறை இறைவியே சரணம்.
பச்சைக் கொடி என எண்ணி இப்
பச்சைக்கிளியும் நின் தோளமர்ந்து
கொஞ்சி பேசிட மறந்து விட்டது
வஞ்சிக்கொடி உன் மொழி கேட்டு….
செவ்விதழ் உனதினைக் கண்ட கிளி
தலை குனிகிறது வெட்கத்தில்
உவமைக்கு ஒப்பா உனதழகு -இது
ஐந்தறிவு ஜீவி உணர்ந்த உண்மை
ஐந்தறிவு கிளி உணர்ந்த போதம்
ஆறறிவு மக்கள் உணரவில்லை
அவளுக்குள் நாம் அடக்கமே அன்றி
நம்மில் அவள் அடக்கமில்லை என்றும்