Category: தொடர்கள்

  • திருவள்ளுவர் யார்? – 2

    திருவள்ளுவர் யார்? – 2

    புதுக்கோட்டை பத்மநாபன்

    திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அது முற்றிலும் தவறான கருத்து.

    “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனின்”

    “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.”

    “அரசன் ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால், ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் தங்களது வேதத்தை மறந்து விடுவார்கள். பசுமாட்டில் பால் குறைந்துவிடும். அந்தணர்களின் வேதமும் அவர்களின் வேத தர்மமும் அரசனின் செங்கோலைப் பற்றியே நிற்கின்றன” என்பது தான் இந்த இரண்டு குறட்பாக்களின் பொருள். வேதம் ஓதுதல், பிறர்க்கு அந்த வேதத்தைக் கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் என்பவையே அந்தணர்களுக்குரிய ஆறு தொழில்கள். இதுவே வடமொழியில் அத்யயனம், அத்யாபனம், யஜனம், யாஜனம், தானம், பரிக்ரஹம் என்று சொல்லப்படுகிறது.

    இந்த ஆறு தொழிலுக்கும் வேதமே அடிப்படை. அரசன் ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிடுவார்கள் என்றும் அதனால் பசுமாடுகளில் பால் குறைந்துவிடும் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர். பசுமாட்டிற்கும் அந்தணர்க்கும் ஒரு ஸம்பந்தம் உள்ளது. அதாவது, அந்தணர்கள் செய்யும் வேள்வியில் பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் இவையே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கே சுழற்சி முறையிலான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. வேள்விமுறைகள் நினைவில் இருக்க வேண்டுமானால், வேதம் நினைவிலிருக்க வேண்டும். வேதம் மறந்துபோய்விட்டால் வேள்வி செய்ய முடியாது. வேள்வி இல்லையென்றால் மழை பொழியாது. மழை இல்லையென்றால் புல் தழைக்காது. புல் இல்லை என்றால் பசுமாட்டிற்கு உணவு இல்லாமல் போய்விடும். உணவில்லாத பசு, பால் கொடுக்காது. பால் இல்லை என்றால் தயிர், நெய் இவை கிடைக்காது. பால்,தயிர்,நெய் இவை இல்லாமல் வேள்வி செய்யமுடியாது. இதனால்தான் பசுவையும் அந்தணரையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார் திருவள்ளுவர்.

    பசு பால் கொடுக்காது என்று சொல்வதன் மூலம் அந்தணர்கள் வேதத்தை மறந்துவிட்டால் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் நாட்டின் வளமையும் செழிப்பும் அந்தணர்களின் தொழிலாலும் அறத்தாலுமே நிலைநிற்கின்றன என்பதையும் நிலைநாட்டுகிறார். அந்த அந்தணர்களின் அறமும் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டுமென்றால் நாட்டில் நல்லாட்சி நடக்கவேண்டும். இந்தக் குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் வேதம் மற்றும் அவர்களது அறமான வைதிக தர்மம், பசுக்கள் இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டியது ஒரு மன்னனின் கடமை என்பதையும் இவற்றுக்குப் பாதுகாப்புக் கொடுக்காத மன்னன் அரசாளும் நாட்டில் வளம் குன்றிவிடும் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.

    अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः।
    यज्ञाद्भवति पर्जन्यो यज्ञःकर्मसमुद्भवः॥

    அந்நாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:|
    யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:||

    என்ற பகவத்கீதை ஶ்லோகத்தின் கருத்தை இந்தக் குறட்பாக்கள் பிரதிபலிப்பது கவனிக்கத்தக்கது. அதனால் இந்த இரண்டு குறட்பாக்களின் கருத்தைக் கொண்டு பார்க்கின்றபோது, திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்தை முழுக்க முழுக்க ஆதரிப்பவர் என்பது  தெளிவாகிறது. ஆகவே திருவள்ளுவர் ஸநாதன வைதிக மதத்திற்கு எதிரானவர் என்று கூறுவது ஆதாரமற்ற பிதற்றல்தான்.

    திருவள்ளுவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவரா?

    “வைதிக வேள்விகளில் உயிர்பலி கொடுக்கப்படுகிறது. ஆனால் திருவள்ளுவர் கொல்லாமயை வலியுறுத்தியவர்.

    “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

    என்ற குறட்பாவில் அவர் அஹிம்ஸையை ஆதரிக்கிறாரேயொழிய வேள்வியை ஆதரிக்கவில்லை. அதனால் அவர், வைதிக வேள்விகளுக்கு எதிரானவர்தான்” என்று சிலர் கூறுகிறார்கள்.

    இதுவும் தவறான கருத்துத்தான். இவர்கள் எடுத்துக் காட்டும் குறளில் உள்ள அவி என்பது யாகங்களில் உபயோகப்படும் நெய், அன்னம் இவற்றைக் குறிக்கும். “நெய்யையும் அன்னத்தையும் கொட்டி ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உண்ணாமல் இருப்பது நல்லது” என்பதே இந்தக் குறட்பாவின் கருத்து. இதனால் திருவள்ளுவர், வேள்விக்கு எதிரானவர் என்பது எப்படித் தேறும்?

    இந்தக் குறட்பாவின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், வேள்வியை விட அஹிம்ஸை சிறந்தது என்று சொல்கிறார். வேள்வியைவிட அஹிம்ஸை சிறந்தது என்று சொன்னால் வேள்வியை அவர் புறக்கணித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. மாறாக வேள்வியை அவர் ஆதரித்திருக்கிறார் என்பது தான் அதற்குப் பொருள். மாம்பழத்தைவிட பலாப்பழம் இனிமையானது என்று ஒருவன் சொன்னால், மாம்பழத்தை அவன் இனிமையற்றது என்று சொல்லிவிட்டான் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? அதைப்போல இந்தக் குறட்பாவில் வேள்வியின் சிறப்பையும் அஹிம்ஸையின் சிறப்பையும் ஒப்பீட்டு அடிப்படையில் கூறுகிறார் திருவள்ளுவர்.

    ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூற வேண்டுமானால் அவ்விஷயத்தை வேறொரு விஷயத்தோடு ஒப்பிட்டுக் கூறுவது மரபு. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்த விரும்பும் விஷயம் கொல்லாமை. கொல்லாமையின் சிறப்பை வேள்வியின் சிறப்போடு ஒப்பிடுகிறார். வேள்வியால் ஒருவன் அடையும் நன்மையையைவிட ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னாமல் இருப்பதால் அடையும் நன்மை உயர்ந்தது என்பதே அந்தக் குறளின் உட்பொருள். அவர் வேள்விக்கு எதிரானவராக இருந்திருந்தால் ‘ஆபயன் குன்றும்’ என்ற குறளையும் ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறளையும் அவர் எழுதியிருக்கவே முடியாது. ‘ஆபயன் குன்றும்’, ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்களின் மூலம் திருவள்ளுவர், வைதிக வேள்வியைச் சிறப்பாக ஆதரித்தே பேசுகிறார்.

    “செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து”

    என்ற குறட்பாவில் தேவர்களுக்கு உரிய உணவு அவி உணவுதான் என்கிறார். வேள்வியை ஆதரிக்காதவராக அவர் இருந்திருந்தால் தேவர்களின் உணவு அவி உணவுதான் என்று அவரால் எழுதியிருக்க முடியாது. ஆகவே திருவள்ளுவர் நெய், அன்னம் இவற்றால் அக்னியில் செய்யப்படும் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் தான் என்பதே இக்குறட்பாக்கள் நமக்குக் கூறும் செய்தி.

    வைதிக வேள்விகள் சிலவற்றில் உயிர்ப்பலி சொல்லப்படுகிறது. அஹிம்ஸையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் உயிர்பலியுள்ள வைதிக வேள்வியை எப்படி ஆதரித்தார் என்ற கேள்வி எழுவது இயற்கை. இக்கேள்விக்கு பதில் திருக்குறளிலேயே இருக்கிறது. அதாவது விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்று இருந்தே தீரும். விதிவிலக்கில்லாத விதி என்றுமே இருந்தது கிடையாது. ஒரு உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்னக் கூடாது என்பது பொதுவிதி. இந்தப் பொதுவிதியை வலியுறுத்திக் கூறும் திருவள்ளுவர், வைதிக வேள்வியை ஆதரிப்பதன் மூலம் வேள்விகளில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக அவர் ஏற்கிறார் என்பது தெளிவாகிறது.

    “உயிர் செகுத்து உண்ணாமை நன்று” என்ற இடத்தில் அவர் சொல்லவருவது என்னவென்றால் உணவுக்காக ஓர் உயிரைக் கொன்று அதன் உடலைத் தின்பது தவறு என்பதே. வேள்விகளில் உணவுக்காக உயிர்ப்பலி செய்யப்படுவதில்லை. தேவர்களுக்கு ஹவிர்பாகம் அளிக்கப்பட்ட பிறகு மிகுந்ததை வேள்வி செய்யும் கர்த்தாவும் வேள்வி செய்துவைக்கும் ரித்விக்குகளும் பிரஸாதமாக உண்பது மரபு. கொல்லாமையைப் பெரிதும் வலியுறுத்தும் திருவள்ளுவர் போரில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் குற்றவாளிக்கு அரசன்  மரண தண்டனை கொடுப்பதையும் எப்படி விதிவிலக்காக ஆதரித்துள்ளாரோ அதே அடிப்படையில்தான் யாகங்களில் செய்யப்படும் உயிர்ப்பலியை விதிவிலக்காக ஆதரித்துள்ளார் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளை ஆதரித்தவர் என்பதே அவரது நூலான திருக்குறள் நமக்குக் கூறும் செய்தி.

    ‘அவிசொரிந்து’

    ‘அவிசொரிந்து’ என்ற குறட்பாவில் புலால் உண்ணாமையின் சிறப்பு வலியுறுத்தப்படுகிறதேயொழிய வேள்வி செய்வது தவறு என்று கூறப்படவில்லை. இதே கருத்து வைதிக ஶாஸ்த்ரங்களான மனுஸ்ம்ருதியிலும், மஹாபாரதத்திலும் கூடச் சொல்லப்படுகிறது.

    वर्षे वर्षेश्वमेधेन यो यजेत शतम् समाः।
    माम्सानि च नखादेद्यस्तयोःपुण्यफलम् समम्॥

    வர்ஷே வர்ஷேஶ்வமேதேந யோயஜேத ஶதம்ஸமா:|
    மாம்ஸாநிச நகாதேத்யஸ் தயோ: புண்யபலம் ஸமம்||

    என்று மனுஸ்ம்ருதியில் சொல்லப்படுகிறது. “எவன் நூறு வருடம் வரை வருடம் தோறும் அஶ்வமேதயாகம் செய்கிறானோ அவனுக்கும் எவன் தன் உயிருள்ளவரை கொல்லாமையைப் பின்பற்றி மாம்ஸத்தை உண்ணாமலிருக்கிறனோ அவனுக்கும் புண்ய பலன் ஒன்றுதான்” என்பது இந்த ஶ்லோகத்தின் பொருள். இதைப் போலவே மஹாபாரதத்தில்,

    इष्टम् दत्तमधीतम्च क्रतवश्च सदक्षिणाः।
    अमाम्स भक्षणस्यैव कलाम् नार्हन्ति षोडशीम्॥

    இஷ்டம் தத்த மதீதஞ்ச க்ருதவஶ்ச ஸதக்ஷிணா:|
    அமாம்ஸ பக்ஷணஸ்யைவ கலாம் நார்ஹந்தி ஷோடஶீம்||

    என்று சொல்லப்படுகிறது. அதாவது, ”பெருமளவில் தக்ஷிணைகள் கொடுத்துச் செய்யப்படும் யாகம், அக்னிஹோத்ரம், தானம் வேதாத்யயனம் இவையெல்லாம் புலால் உண்ணாமல் இருப்பதன் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட ஈடாகாது” என்பது இதன் கருத்து. உணவுக்காக ஓர் உயிரைக்கொன்று அதன் உடலைப் புசிப்பவன் யாகம் செய்வது என்பது வீணான வேலை என்று மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் கூறுகின்றன. இதிலிருந்து இன்னொரு அர்த்தமும் கிடைக்கிறது. அதாவது புலால் உணவு உண்ணாமல் இருப்பவன் யாகம் செய்தால், புலால் உண்ணாமல் இருப்பதால் ஏற்படும் புண்ணியத்தையும் யாகம் செய்வதால் உண்டாகும் புண்ணியத்தையும் அடைந்து இரட்டித்த புண்ய பலனை அடைகிறான் என்பதையும் அறிய முடிகிறது. மனுஸ்ம்ருதியும் மஹாபாரதமும் சொன்ன கருத்தையே ‘அவிசொரிந்து’ என்ற குறட்பா பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தாரைக் குறித்துச் சொல்லப்பட்ட செய்திதான், இக்குறட்பாவில் சொல்லப்பட்ட விஷயம். அந்தணரைத் தவிர மற்ற மூன்று வர்ணத்தவர்களும் உணவுக்காக உயிர்களைக் கொல்கின்றனர். அந்த மூவருள் அரசர், வணிகர் என்ற இரண்டு வர்ணத்தவருக்கு மட்டுமே வேள்வி செய்ய அதிகாரம் உண்டு. நான்காம் வர்ணத்தவருக்கு வேள்வி விதிக்கப்படவில்லை. அரசர், வணிகர் இருவரும் உணவுக்காக உயிர்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் யாகமும் செய்கிறார்கள். அந்த இரண்டு வர்ணத்தாரையும் நோக்கித்தான், “நீங்கள் வேள்விகள் செய்வதைவிட உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாமல் இருப்பதே சிறந்தது” என்று திருவள்ளுவர் இந்தக் குறட்பா மூலம் கூறுகிறார். அதேபோல, வேள்வி செய்யத் தகுதியில்லாத நான்காம் வர்ணத்தவரை நோக்கி, “நீ வேள்வி செய்ய முடியவில்லையே என்று கவலைகொள்ளத் தேவையில்லை. நீ வாழ்நாள் முழுவதும் புலால் உண்ணாமல் இருந்தாலே உனக்கு வேள்வியின் பலன் கிடைத்துவிடும்” என்றும் திருவள்ளுவர் இக்குறட்பா மூலம் கூறுகிறார். அதாவது நான்காம் வருணத்தவர் உட்பட யாராக இருந்தாலும் மாமிசம் உண்ணக் கூடாது என்பதுதான் இந்தக் குறட்பாவின் திரண்ட கருத்து.

    அந்த வகையில் வேள்வி செய்ய இயலாதவரும் உய்வடைவதற்கு வழிகாட்டியுள்ளார் திருவள்ளுவர். அதனால் மாமிச உணவுப் பழக்கம் உள்ளவர்கள், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இயலாது. அவர்களுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையும் இல்லை. ஆகவே இக்குறட்பா, அந்தணர் தவிர்த்த மற்ற மூன்று வர்ணத்தாருக்காக எழுதப்பட்டது. இக்குறட்பாவில் உணவுக்காக எவ்வுயிரையும் கொல்லாமல் இருப்பது வேள்வியைவிடச் சிறந்தது என்று சொல்லப் படுவதால் புலால் உணவுப் பழக்கம் உள்ளவர்கள், வேள்வி செய்வதால் பயனில்லை என்பதும் புலால் உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் வேள்வி செய்வதால் அவர்களுக்கு இரட்டித்த புண்ய பலன் கிடைக்கும் என்பதும்தான் இக்குறட்பாவின் திரண்ட பொருள்.

    மஹாபாரதத்தில் பீஷ்மர், தர்மராஜருக்கு தர்மோபதேஶம் செய்யும் சமயத்தில் புலால் உணவில் உள்ள தோஷங்களை எடுத்துக் கூறி ‘க்ஷத்ரியர்களும் புலால் உணவைத் தவிர்ப்பது தான் உத்தமம்’ என்று கூறுகிறார். யாகங்களில் உயிப்பலி சரியா, தவறா என்பது குறித்த சர்ச்சை ரிஷிகளுக்கு மத்தியில் எழுந்ததாகவும் உயிர்பலி இல்லாமலும் யாகங்கள் செய்யலாம் என்ற முடிவுக்கு ரிஷிகள் வந்ததாகவும் மஹாபாரதத்தில் சொல்லப்படுகிறது. மேலும் அஶ்வமேதம் முதலிய உயிர்ப்பலி உள்ள பெரிய வேள்விகள் கலியுகத்தில் செய்யக் கூடாது என்றும் ஶாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விஷயங்களையெல்லாம் நன்றாக உள்வாங்கிக்கொண்டவரே திருவள்ளுவர்.

    “அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.”

    என்று அந்தணருக்கான இலக்கணத்தைச் சொல்கிறார் திருவள்ளுவர். அதாவது எந்த உயிரிடத்தும் கருணையோடு இருப்பதால் அந்தணர் அறவோர் எனப்படுகின்றனர் என்று கூறுகிறார். அதே நேரத்தில் அந்தணரின் ஆறு தொழில்களில் ஒன்றான வேள்வியையும் ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்களால் ஆதரித்துப் பேசுகிறார். வைதிக வேள்வியில் உயிர்க்கொலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாத விஷயமன்று. இதிலிருந்து வேள்வியில் செய்யப்படும் உயிர்க்கொலையை அவர் எதிர்க்கவில்லை என்பதே தெரிகிறது.

    ஆகவே, எல்லாவுயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டவர்களாக இருப்பதால் அந்தணர்கள் அறவோர் எனப்படுகின்றனர் என்று அந்தணருக்கு ஓர் இலக்கணத்தை வரையறை செய்த திருவள்ளுவர், ‘ஆபயன் குன்றும்’ முதலிய குறட்பாக்கள் மூலம் அந்தணர்களின் ஆறு தொழில்களில் ஒன்றான உயிர்ப்பலியுள்ள வேள்வியை ஆதரித்துப் பேசுவதால், எப்படிப் போர்களில் மனிதர்கள் கொல்லப்படுவதையும் அரசன் குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையையும் விதிவிலக்காக ஆதரித்தாரோ அதைப் போலவே வேள்விகளில் செய்யப்படும் மந்த்ர ஸம்ஸ்காரத்துடன் கூடிய உயிர்ப்பலியையும் வேள்வியோடு தொடர்புடையவர்கள் செய்யும் மாம்ஸ பக்ஷணத்தையும் விதிவிலக்காக அவர் ஆதரிக்கிறார் என்பதே இங்கு தெளிவாகின்ற விஷயம். ஆகவே இந்தக் குறட்பா, கொல்லாமை, புலால் உண்ணாமை இவற்றின் சிறப்பை உணர்த்துவதற்காக எழுதப்பட்டதேயொழிய வேள்வியை மறுப்பதற்காக எழுதப்பட்டதன்று. அதனால் திருவள்ளுவர் வைதிக வேள்விகளுக்கு எதிரானவர் என்ற கருத்து மிகவும் தவறானது.

    —தொடரும்

    Share
  • பழகத் தெரிய வேணும் – 30

    பழகத் தெரிய வேணும் – 30

    நிர்மலா ராகவன்

    (செயலும் விளைவும்)

    ஒரு செயல் எண்ணத்திலிருந்து பிறக்கிறது.

    எண்ணமோ உணர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது.

    அண்மையில் சீனாவில் நடந்தது இது.

    பெற்றோர் இணங்காததால், ஃபூவும் (Foo) அவன் காதலியும் பிரிய நேரிட்டது. இருவருமே பெற்றோர் நிச்சயித்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு, ஆளுக்கு ஒரு பிள்ளையும் பெற்றார்கள்.

    பல வருடங்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் சந்திக்க, பழைய காதல் துளிர்த்தது. விவாகரத்து பெற்று, திருமணம் செய்துகொண்டார்கள்.

    முதல் திருமணத்தில் பெற்ற குழந்தைகளை இருவருமே உதறித் தள்ளினார்கள். ஃபூவின் மகள் தாயுடனும், மனைவியின் மகன் தந்தையுடனும் வசிக்க ஏற்பாடு செய்துவிட்டு, தனியாக இன்புற்றிருந்தார்கள்.

    சில வருடங்கள் கழித்து, தன் மனைவியைக் காணோம் என்று கண்ணீருடன் காவல்துறையினரிடம் புகார் செய்தான் ஃபூ.

    விசாரித்துப் பார்த்ததில், அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது தெரியவந்தது.

    ஒரு பெண் கொலை செய்யப்பட்டாலோ, காணாமல் போனாலோ, முதலில் கணவன்மீதுதான் சந்தேகம் எழும்.

    ஃபூவின் வீட்டைச் சுற்றித் தோண்டியபோது, மனைவியின் கை, கால் முதலியவை தனித்தனியாக அகப்பட்டன. உடலோ, கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிக்குள் (septic tank).

    இருவரும், அவர்களுக்கு இருந்த சொத்து தத்தம் குழந்தைகளுக்குத்தான் சேரவேண்டும் என்று சண்டை பிடித்திருக்கிறார்கள். ஆத்திரத்தில், காதல் மனைவியைக் கொன்றுவிட்டான் ஃபூ.

    ஆத்திரத்தில் புரியும் செயலால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி முதலிலேயே யோசிக்காவிட்டால் இப்படித்தான் ஆகும்.

    அதிகாரம் அஞ்சாமையை அளிக்குமோ?

    உலகம் முழுவதிலும், எத்தனை அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்!

    ‘அரசியலில் ஈடுபட்டால், இவ்வளவு சீக்கிரம் செல்வந்தர்களாக முடியுமா? மக்களை முட்டாளாக்குவது இவ்வளவு எளிதா! எத்தனை அதிகாரம்!’ என்று யோசித்தே பலரும் இத்துறையைத் தேர்ந்தடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

    சற்றே யோசித்துச் செயல்பட்டிருந்தால், ‘பிடிபட்டு விடுவோமோ!’ என்ற அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஓடி ஒளிந்திருக்கவேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்பட்டிருக்காது.

    “அரசியலில் முதல் கொள்ளைக்காரர்” என்று வர்ணிக்கப்படுகிறார் பிலிப்பீன்ஸ் அதிபராக இருந்த மார்கோஸ். அவரையும், அவரது மனைவியையும் எதிர்த்து நாட்டில் கலகம் விளைந்தது. மக்களை ஏழ்மையில் உழல வைத்துவிட்டு, பெட்டி பெட்டிகளாக ரொக்கப்பணம், நகை, தங்கக்கட்டி என்று சுருட்டிக்கொண்டு, 1986 -ல் தலைமறைவானார்கள் இத்தம்பதியர்.

    ஹவாயி தீவில் மார்கோஸ் இறந்தபின்னும், அவருடைய உடலை சொந்த நாட்டிற்குக் கொண்டுவர அனுமதி கிடைக்கவில்லை.

    அவர்களது பேராசையால் நாட்டு மக்கள் ஏழ்மையில் தவித்து, பிழைப்பைத் தேடி வெளிநாட்டுக்குச் செல்லவேண்டிய அவலம். (மலேசியாவில், பிலிப்பீன் நாட்டுப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவோ, அழகு நிலையங்களிலோ வேலை பார்க்கிறார்கள்).

    பயமும் அசட்டுத்தனமும்

    இன்னொரு சாரார், ‘இதைச் செய்தால் என்ன ஆகுமோ!’ என்று அஞ்சி, புதிதாக எதையும் செய்யத் தயங்குவார்கள்.

    யோசியாமல், அசட்டுத்தனமாக நடக்கிறவர்களும் உண்டு.

    ஒரு பெண்மணி மின்சாரத்தில் இயங்கிக்கொண்டிருந்த மிக்ஸியின் மூடியைக் கழற்றிவிட்டு, தன் நாக்கை உள்ளேவிட்டு, அரைபட்டுவிட்டதா என்று சோதித்துப்பார்த்தாளாம்! நாக்கு துண்டானதுதான் பலன்.

    விளைவு தெரிந்தபோதும்..

    எந்த விளையாட்டாக இருந்தாலும் உடலின் கை, கால், இடுப்பு என்று ஏதாவது ஒரு பாகத்தில் அடிபட்டுத்தான் ஆகும். தீவிரமாக அதில் ஈடுபடுகிறவர்கள் அதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக சில காலம் உடல்குறைவுடன் அவதிப்படுவதை சாதாரணமாக ஏற்பார்கள்.

    நீச்சலா? ஐயோ!

    சீனப்பெண்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நீ நல்ல கலராக இருக்கிறாய்! (You are very fair, lah!)” என்று பாராட்டிக்கொள்வார்கள்.

    நீச்சல் கற்க ஆரம்பித்த பல சீனப் பெண்மணிகள் முகம் கறுக்கிறதென்று உடனே நிறுத்திவிட்டார்கள்.

    “பல பெண்கள் நின்றுவிட்டார்களே! கறுப்பாகிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்குக் கிடையாதா?” என்று ஓர் இளைஞன் கேட்டான்.

    ஆரம்பிக்குமுன், `நீச்சலா! கறுப்பாயிடுவியே!’ என்று சிலர் எச்சரிக்கை செய்ய, ‘அதனால என்ன?’ என்று அலட்சியம் செய்தேன்.

    விளைவு முதலிலேயே தெரிந்திருந்ததால், கலக்கம் உண்டாகவில்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திற்கும் ஈடு கொடுக்க முடிந்தது.

    இயற்கைச் சீற்றத்தை வேடிக்கை பார்ப்பது

    பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றத்தின்போது துணிந்து படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்களில் சிலர் அதற்குப் பலியாகி உள்ளார்கள். அதுதான் தொழில் என்ற நிலையில், எந்த நிமிடமும் ஆபத்து விளையலாம் என்று அவர்களுக்கும் தெரியும்.

    ஆனால், ‘புதிய அனுபவம் கிடைக்குமே!’ என்ற ஆர்வத்துடன் யாராவது அதை வேடிக்கை பார்க்கச் செல்வார்களா?

    பிறருக்காகச் செய்யும்போது

    நேர்மையானவர்கள் பிறரது நலனைக் கருதி சில காரியங்கள் செய்யும்போது அது அவர்களுக்கே பாதகமாக முடியும் வாய்ப்பு உண்டு.

    இருப்பினும், ‘இப்படிச் செய்தால் என்ன ஆகும்?’ என்று யோசித்துச் செயல்பட்டால், எந்த விளைவையும் துணிவுடன் ஏற்க முடியும்.

    கதை

    மனநிலை சரியாக இல்லாது, தன்கீழ் வேலைபார்த்த எல்லாரையும் பொறுக்கமுடியாத அளவுக்கு அவமரியாதையாக நடத்திய எங்கள் தலைமை ஆசிரியைப்பற்றி நான் விரிவாக ஆங்கில தினசரியில் எழுதினேன்.

    அது பிரசுரமானதும், ‘இனி எப்படி நீ அவளிடம் வேலை பார்க்க முடியும்?’

    ‘உன் வேலை போய்விடப்போகிறது!’ என்று பலரும் அச்சுறுத்த முயன்றார்கள்.

    ‘நமக்கு இல்லாத தைரியம் இவளுக்கு மட்டும் ஏன்?’ என்ற பொறாமைதான் காரணம். அவளைப் பொறுக்க முடியாதிருந்த நிலைதான் பலருக்கும். ஆனால், அவர்களுக்கு அவளை எதிர்க்கும் துணிச்சல் இருக்கவில்லை.

    அடுத்த சில மாதங்கள் மேலிடத்திலிருந்து என்னை மிரட்டிப்பார்த்தார்கள். நான் மசியவில்லை.

    நான் செய்த காரியத்தால் தலைமை ஆசிரியை என்மீது காதல் கொள்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், நான் எதிர்ப்படும்போதெல்லாம் என்னை வெறுப்புடன் பார்த்தது மிகை.

    (இறுதியில், அவளுக்கு பதவிகுறைப்பு செய்யப்பட்டது).

    ஐ லவ் யு

    காதலர்களோ, தம்பதியரோ, நிறைய சண்டை போட்டுவிட்டு, இந்த மந்திரத்தை உச்சரித்தால், சமாதானமாகிவிடுவார்கள்.

    இது தமிழ்த்திரைப்படங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் முட்டாள்தனமான பாடங்களுள் ஒன்று.

    சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் நம்பிக்கை பிறக்கும்.

    மனைவியை அடித்துவிட்டு, `ஐ லவ் யு’ என்று அவளைக் கொஞ்சி சமாதானப்படுத்த முயன்றால், அது அன்பில் சேர்த்தியா?

    அவசரம் சுறுசுறுப்பாகாது

    அதிவேகமாக எதையோ செய்வதுபோல் ஒருவர் நடந்துகொண்டால், அவர் சுறுசுறுப்பானவர், செயல்வீரர் என்றாகாது.

    ஒருவரது செய்கையால் ஏதேனும் மாற்றம் நிகழவேண்டும்.

    கதை

    “நீங்கள் தினசரியில் ஏதேதோ எழுதுகிறீர்களே! என்ன பயன்?” ஆண்களும் பெண்களும் கேலியாக என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

    “நாம் சமூகத்துடன் ஒட்டி நடக்கவேண்டும்,” என்ற அறிவுரை வேறு!

    சகஆசிரியர் ஒருவர் மாணவியை மானபங்கம் செய்ய முயன்றார் என்றெழுதியபோது, என்னமோ, நான்தான் கெட்டவள் என்பதுபோல் என்னைத் திரும்பத் திரும்ப குறுக்கு விசாரணை செய்தார்கள் மேலிடத்திலிருந்து.

    நம் செய்கையால் அநீதியான எதையாவது மாற்ற நினைத்தால், பலரையும் சிந்திக்க வைக்கிறோம். அதுதான் பயன்.

    இருபத்தைந்து வருடங்களுக்குப்பின், மகளை, மாணவியை, பலாத்காரம் செய்ய முயன்ற ஆண்களுக்கு இருபது ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

    உடனுக்குடன் எதுவும் மாறுவதில்லை. அதற்காக, முயற்சி செய்யாமல் இருந்துவிடலாமா?

    Share
  • திருவள்ளுவர் யார்? – 1

    திருவள்ளுவர் யார்? – 1

    புதுக்கோட்டை பத்மநாபன்

    சில நாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது. திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கிய விஷயம். இது குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

    திருக்குறளில் உள்ள ஞானச் செழுமை, சொல்லாட்சி இவற்றை வைத்துப் பார்க்கும் போது அதை எழுதிய திருவள்ளுவர், ஓர் ஈடு இணையற்ற ஞானி என்று தான் சொல்லவேண்டும். சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய நூல், திருக்குறள். அந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் திட்டவட்டமாகக் கூறுவதற்கு எந்தவிதமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. இந்த நிலையில், ஞானச் செறிவுள்ள அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களை, முடிந்த அளவு நம் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டியதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். அதை விட்டுவிட்டு அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து, அவருக்கு ஓர் அடையாளத்தைக் கற்பித்து அரசியல் செய்வதும், அந்த அடையாள அரசியலை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் தங்கள் சாயத்தைத் திருவள்ளுவர் மேல் பூசப் பார்ப்பதும் அடியேனைப் பொறுத்தவரை வேண்டாத வேலை என்றே நினைக்கிறேன்.

    இதுவரை, அடியேன் திருவள்ளுவரின் ஜாதி, மதம் பற்றி ஆய்வு செய்ததுமில்லை, செய்ய நினைத்ததுமில்லை. அந்த விருப்பம் அடியேனுக்கு இருந்ததும் இல்லை. அடியேன் அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களையும், சொல்லிய விதத்தையும் சுவைத்துப் படித்துப் பல தடவை மெய்சிலிர்த்து வியந்ததுண்டு. அதே நேரத்தில், தற்போது எழுந்துள்ள சர்ச்சை விஷயம் வீதிக்கு வந்துவிட்டபடியால் அதுபற்றி நமது கருத்தையும் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

    முதலில் திருவள்ளுவருக்குக் காவி உடைபோட்டுப் படம் வரைந்ததைக் கண்டு கொதித்தெழுந்து கடுமையாகக் கண்டிக்கும் பரம யோக்கியர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன். திருவள்ளுவர் எந்த உருவத்தில் இருந்தார் என்பது பற்றியோ அவரது வாழ்க்கை வரலாறு பற்றியோ எந்தவிதமான ஆதாரங்களும் தெளிவாகக் கிடைக்காத நிலையில் வெள்ளை ஆடை அணிவித்து தாடிவைத்து அவருக்கு ஒரு உருவத்தை நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே, எந்த அடிப்படையில் அந்த உருவத்தை நீங்கள் அவருக்கு ஏற்படுத்தினீர்கள்? அவருக்கு ஒரு உருவம் கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கின்றபொழுது, மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லையா?

    திருவள்ளுவராண்டு என்று ஓர் ஆண்டை உருவாக்கியிருக்கிறீர்களே எந்த அடிப்படையில் உருவாக்கினீர்கள்? திருவள்ளுவரின் பிறப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா? ஆய்வு என்ற பெயரில் எந்தவிதமான ஆதாரமும் இன்றி வெறும் அனுமானத்தால் உங்களின் சொந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கப் பல அபத்தமான காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற பொழுது மற்றவர்கள் ஆய்வு செய்யக் கூடாதா? திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாட உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, அருகதையும் இல்லை. ஏனெனில் திருவள்ளுவரின் கொள்கைக்கும் உங்கள் கொள்கை, நடைமுறை இவற்றுக்கும் உள்ள ஸம்பந்தம் கருணை உணர்வுக்கும் கசாப்புக் கடைக்காரனுக்கும் உள்ள ஸம்பந்தம் தான். அதனால் திருவள்ளுவருக்குக் காவிஉடை அணிவித்தது பற்றிக் கேள்வி கேட்க, உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை.

    அதே நேரத்தில் பிரச்சனை பெரிதாகிவிட்டபடியால் திருவள்ளுவர் உண்மையில் யார், அவருக்கு எந்த உருவம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதுடன் தவிர்க்க முடியாத கடமையும் ஆகிவிட்டது. அந்தக் கடமை உணர்வோடு திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்த முக்கியமான சில விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

    ஒருவரது அடையாளத்தைத் தெரிந்துகொள்ள வெளிப்படையான ஆதாரங்கள் இல்லை என்பதற்காக அவருக்கு எந்த அடையாளமும் இல்லை என்று முடிவு கட்டிவிடவும் முடியாது. எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் இருந்தே தீரும். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள, வலிமையான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவரது படைப்பில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரது அடையாளத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் திருவள்ளுவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்குச் சரியான புறச்சான்றுகள் கிடைக்காததால் அவரது சீரிய படைப்பான திருக்குறளில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும்.

    திருக்குறளில் தங்களுக்குச் சாதகமாகத் தோன்றும் சில குறட்பாக்களை மட்டும் எடுத்துக் காட்டி, திருக்குறள் தங்கள் நூலென்றும் திருவள்ளுவர் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்றும், ஜைனர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் தற்காலத்தில் நாஸ்திகம் பேசும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் பொதுவுடைமைவாதிகளும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட முயன்று கொண்டிருகிறார்கள். முதலில் மேற்படி ஜைனம் முதலிய மதங்களின் கருத்துகளுக்கும் நாஸ்திகக் கருத்துகளுக்கும் அணுவளவும் திருக்குறளில் இடமில்லை என்பதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபிப்போம்.

    திருக்குறளின் முதற்குறளிலேயே இறைவனே உலகிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து நாஸ்திகர்களுக்கும் பொருள்முதல்வாதிகளுக்கும் உடன்பாடான கருத்தன்று. மேலும் தெய்வ வழிபாடு, ஊழ் என்று சொல்லப்படும் விதி, மறுபிறப்பு, வினைப்பயன், வேத வைதிக நெறி, இல்லறப் பெண்களின் ஒழுக்கம், கற்பு, பிறனில் விழையாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், தவம், துறவு இவற்றைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாஸ்திகர்களுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும் திருவள்ளுவர் கூறும் இவ்விஷயங்களில் எல்லாம் உடன்பாடு உண்டா? திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இன்றைய பகுத்தறிவுவாதிகளின் தந்தை என்று சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவனுக்கு ஆண்களின் ஒழுக்கம், பெண்களின் கற்பு, மரபுவழியான திருமணமுறை, பிறனில் விழையாமை இவையெல்லாம் பிடிக்காத விஷயங்கள். திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது என்றும், திருமண முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும், ஒருவனுடைய மனைவி உப்பு, மிளகாயைப் போல் அவனுக்கு மட்டும் தனி உடைமைச் சொத்தாக நினைப்பது தவறு என்றும், கற்பு, விபசாரம் போன்ற வார்த்தைகள் பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு எதிரானவை என்றும், திருக்குறள் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றும் இவர்களின் தந்தையான பகுத்தறிவுப் பகலவனே கூறியிருக்கிறார். பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகளுக்கெல்லாம் ஆசான் என்று சொல்லப்படும் கார்ல் மார்க்ஸ், பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் தனிஉடைமை ஆகிவிடுவாள் என்றும், அவளைப் பொதுவுடைமையாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுவான விபசாரியாக்க வேண்டும் என்றும் private property and communism என்ற தலைப்பில் economic and philosophic manuscript of 1844 என்பதில் எழுதியுள்ளார். இப்படியெல்லாம் கூறியிருக்கின்ற இந்த ஆசான்களின் வாரிசுகளான இன்றைய பகுத்தறிவு வாதிகளுக்கும், பொதுவுடைமை வாதிகளுக்கும் திருக்குறளை உரிமை கொண்டாட என்ன அருகதை இருக்கிறது? இவர்களுக்கும் திருக்குறளுக்கும் என்ன ஸம்பந்தம்? திருக்குறளைப் பற்றிப் பேசக்கூட இவர்களுக்கு உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே, திருக்குறள் நாஸ்திக நூலும் அன்று. திருவள்ளுவர் நாஸ்திகரும் அல்லர். அதனால் இந்த நாஸ்திக இயக்கவாதிகள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறள் பற்றியும் கருத்துச் சொல்வது என்பது ஒரு மட்டரகமான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஜைனமும் பௌத்தமும் வேதங்களையும் வைதிக கர்மங்களான வேள்விகளையும் ஏற்றுக்கொள்ளாத மதங்கள். அம்மதங்களில் சொல்லப்படும் அஹிம்ஸை , துறவு, தவம், ஆசையைத் துறத்தல், நல்ல நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் முதலிய கோட்பாடுகள் அம்மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்த வேதங்களிலும், உபநிஷத்துகளிலும், வைதிக இலக்கியங்களிலும் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்தான். அவையொன்றும் புத்தராலும் மஹாவீரராலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை. அவ்விருவரும் வேத இலக்கியங்களிலிருந்து அக்கருத்துகளை ஸ்வீகரித்துக்கொண்டு, அவற்றைத் தங்கள் மதங்களின் முக்கியக் கோட்பாடுகளாகக் காட்டிக் கொண்டார்கள்.

    இந்த அஹிம்ஸை முதலிய கோட்பாடுகள் திருக்குறளில் காணப்படுவதால், திருக்குறள் புத்த சமய நூல் என்று சிலரும் சமண சமய நூல் என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்து அடிப்படையற்றது. பௌத்த சமண சமயக் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கருத்துக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது என்பதை மிக முக்கியமான ஆறு காரணங்களால் தெளிவுபடுத்துவோம்.

    முதலாவதாக சமணமும் பௌத்தமும் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் திருவள்ளுவர் முதல் குறட்பாவிலேயே கடவுள் தான் உலகைப் படைத்தார் என்கிறார். அவர் சொல்லும் “ஆதிபகவன்” என்பதற்கு இந்த இரண்டு மதக்காரார்களும் தங்களுக்குச் சாதகமாகக் கூடப் பொருள் கொள்ளலாம். அப்படி இவர்கள் பொருள் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அக்குறளில் ஓர் அழகான உவமையைத் திருவள்ளுவர் காட்டுகிறார். அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் எப்படி முதலாக உள்ளதோ அதைப்போல உலகுக்கு முதலாக இருப்பவர் ஆதிபகவன் என்று கூறுகிறார்.

    இங்கு ‘படைத்தல்’ என்பதற்கு என்ன இடம் இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். எந்த மொழியைப் பேச வேண்டுமானலும் முதலில் வாயைத் திறந்துதான் பேசமுடியும். வாயைத் திறக்கும்போது முதலில் வெளிவருவது அகர ஒலிதான். இதனால் மற்ற எழுத்துகளின் ஒலி உருவாக அகரமே காரணமாக இருக்கிறது என்பது புலனாகிறது. அப்படி உருவாகும் மற்ற எழுத்துகளுக்குரிய ஒலிகளிலும், அகரம் உள்ளீடாகச் சேர்ந்தே இருக்கிறது. அதனால், மற்ற எழுத்துகள் தோன்ற அகரமே காரணமாகிறது என்பதால்தான், “அகர முதல எழுத்தெல்லாம்” என்றார். எப்படி அகரம் மற்ற எழுத்துகளை எல்லாம் தோற்றுவித்ததோ, அதாவது படைத்ததோ அதைப் போலக் கடவுள் உலகைப் படைத்தார் என்பதே அந்த முதல் குறட்பாவின் கருத்து. “முதற்றே”என்றால் ‘முதலாக உடையது’ என்று பொருள். அதாவது அந்த முதல்வனான ஆதிபகவன் என்ற கடவுளிடமிருந்து உலகம் தோன்றியது என்று பொருள். ஸர்வசூன்யவாதிகளான பௌத்தருக்கும், கடவுள் உலகுக்குக் காரணம் இல்லை என்ற கருத்துடைய சமணருக்கும், இந்த முதற்குறட்பாவின் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?

    இரண்டாவதாக, கொல்லாமையை வலியுறுத்தும் திருவள்ளுவர்,

    “கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்” என்று அரசன், குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையை ஆதரித்துப் பேசுகிறார். எல்லா நிலையிலும் அஹிம்ஸையையே வலியுறுத்தும் சமண, புத்த சமயங்களுக்கு இந்தக் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?

    மூன்றாவதாக, சமணர்களும் பௌத்தர்களும் வேள்விக்கும் அதற்கு அடிப்படையான வேதங்களுக்கும் எதிரானவர்கள். திருவள்ளுவர் “ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்”, “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்ற குறட்பாக்களால், அந்தணரையும் அவர்களின் நூலான வேதத்தையும், அவர்களின் தொழிலான வேள்வி முதலியவற்றையும், அவர்களின் அறமான வைதிக தர்மத்தையும், ஓர் அரசன் பாதுகாக்க வேண்டும் என்று கூறி, வேதவைதிக நெறியையும் அந்தணரையும் ஆதரித்துப் பேசுகிறார். திருவள்ளுவரின் இந்தக் கருத்து, சமண பௌத்த சமயக் கொள்கைக்கு எதிரான கருத்து.

    நான்காவதாக பூமியில் விளையும் கிழங்கு வகைகளைக் கூட சாப்பிடக் கூடாது என்னும் அளவிற்கு அஹிம்ஸையை வலியுறுத்துவது சமண சமயம். ஆனால் உழவுத் தொழிலான வேளாண்மையை ஆதரித்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார் திருவள்ளுவர். இதனாலும் திருவள்ளுவர் சமணக் கொள்கைக்கு எதிரானவர் என்பது தெளிவாகிறது. பௌத்தம் அஹிம்ஸையை வலியுறுத்தினாலும் கொல்லாமல் தானாகவே இறந்த விலங்கின் மாமிசத்தை உண்ணலாம் என்று சொல்கிறது அந்த மதம். ஆனால் திருவள்ளுவரோ, “தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்” என்ற குறட்பாவின் மூலம் பிற உயிர்களின் மாமிசத்தை உண்பவர்களைக் கண்டிக்கிறார். இவர் எப்படி சமணராகவோ பௌத்தராகவோ இருக்க முடியும்?

    ஐந்தாவதாக, துறவறம், நிலையாமை ஆகியவற்றையே முழுமையாக வலியுறுத்தும் சமண, பௌத்த சமயங்களுக்கு இல்லற இன்பம், காம சுகம், மக்கட்பேறு முதலியவை எல்லாம் ஸம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் திருவள்ளுவர் இல்லறம், அங்கீகரிக்கப்பட்ட தர்மதோடு கூடிய காம சுகம், இவற்றையெல்லம் ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் சமண, பௌத்தக் கருத்துகளுக்கும் திருக்குறளின் கருத்துகளுக்கும் எந்தவித உறவும் இல்லை என்பது புலனாகிறது.

    ஆறாவதாக அசோகர், புத்த சமயத்தைத் தழுவிய பின் போரைக் கைவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதனால் போர் புத்த சமயத்துக்கு, உடன்பாடான விஷயமன்று என்பது புலப்படுகிறது. தாவரங்கள், புழு பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இவற்றைக் கூடக் கொல்லக் கூடாது என்ற கொள்கையை உடைய சமணர்கள், மனிதர்களைக் கொல்லும் போரை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் திருவள்ளுவரோ போரை ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் திருவள்ளுவரின் கருத்து சமண, பௌத்த மதக் கருத்துகளுக்கு முரணானது என்பது புலனாகிறது. இந்த ஆறு முக்கியமான காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், சமணர்களும் பௌத்தர்களும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட எந்தவித நியாயமும் உரிமையும் அணுவளவும் இல்லை என்பதுதான் புலப்படுகிறது.

    இதைத் தவிர, கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் புலால் உணவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருக்குறளில் புலால் உணவு கண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூறுவதற்கோ இஸ்லாமியர் என்று கூறுவதற்கோ எந்தவிதமான அடிப்படையுமில்லை.

    திருக்குறளில் கடவுள் வாழ்த்து- இரண்டாவது குறளில் “நற்றாள் தொழார் எனின்” என்று வருகிறது. இதில் வரும் ‘தொழுதல்’ என்ற வார்த்தை, இஸ்லாமுக்குரிய வார்த்தை என்றும், முஸ்லிம்கள்தான் வழிபாட்டை ‘தொழுதல்’ என்று சொல்வார்கள் என்றும், மற்ற மதத்தினர் வழிபாட்டுக்கு அச்சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் இஸ்லாமியர் ஒருவர் கூறி வருகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இந்த இஸ்லாமியருக்குத் தன் மதத்தைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றியும் ஆழமான அறிவு இல்லை என்பது தான் தெரிகிறது. இஸ்லாமியரின் வழிபாட்டுக்கு அரபி மொழியில் “நமாஸ்” என்று பெயர். அச்சொல்லுக்கு இணையாகத், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழில் உள்ள தொழுகை என்ற சொல்லை அமைத்துக்கொண்டார்கள்.

    ’நின் தாள் நிழல் தொழுதே’ என்றும், ‘நிற் பேணுதும் தொழுதே’ என்றும், ‘நின் அடி தொழுதனெம்’என்றும் சங்க இலக்கியமான பரிபாடலில் ‘தொழுதல்’ என்ற சொல் திருமால் வழிபாட்டைக் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆகவே தொழுதல் என்ற சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இந்த இஸ்லாமியருக்கு, மதங்கள் ஸம்பந்தமான அடிப்படை அறிவு இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. அதனால் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எந்தவித உரிமையும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏன் அவர்கள் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் ஓர் அரசியல்தான்.

    — தொடரும்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

    தி. இரா. மீனா

    சொட்டாள பாச்சரசா

    பிஜ்ஜளன் அரண்மனையில் எழுத்தராக இவரது காயகம். ’சொட்டள’ இவரது முத்திரையாகும்.

    “பக்தன் பக்தனென அறிவின்றி சொல்வீர்
    பக்தியின் இடம் அனைவருக்கும் எங்குள்ளதோ?
    கால்காசு ஆசை பணத்தாசை உள்ளவரையில் பக்தனோ?
    ஐயனே பொருள், உயிர்ப்பற்று, மோகமுள்ளவரை பக்தனோ?
    பொன், பெண், மண்ணுக்குப் போட்டியிடுபவன் பக்தனோ?
    பக்தருக்கு நான் சொன்னால் பொல்லாப்பு,கொந்தளிப்பு
    ஒருமுறை தாங்கள் சொல்வீர்,
    பிரளய காலத்தின் சொட்டாளனே“

    சுதந்திர சித்தலிங்கேஸ்வரா

    ”நிஜகுரு சுதந்திர சித்தலிங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

    1. “அந்தரத்தில் தூய்மை இல்லாதவரிடத்தில்
    அத்திப் பழத்தில் புழுக்கள் போல விடாது பாரய்யா .
    அந்தரங்கத்தில் தூய்மையிருப்பின்
    வாழைப்பழம் போல நற்குணம் தெரியும் பாரய்யா.
    சரணர்கள் அந்தரங்கத் தூய்மையற்றவர் குழுவில் இருக்கக்கூடாது
    நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரனே“

    2. “நெருப்பின் தொடர்பால் விறகு நெருப்பானது போல
    சிவசடங்கின் வழியுயர்ந்த சிவபக்தன்
    சிவனாவானன்றி மனிதனாக மாட்டான்
    சிவபக்தனுக்குச் சாதியில்லை மாசில்லை
    சிவனைப் போலவே இருப்பான்
    நிஜகுண சுதந்திரசித்தலிங்கேஸ்வரனின் பக்தன்.”

    3. “ஆயுதங்கள் ஐந்நூறு இருந்தென்ன?
    போர்க்களத்தில் பகையறுப்பது வாளொன்றே.
    என்ன படித்து என்ன கேட்டென்ன
    தான் யாரென்பதை அறியமுடியாத வரையில்.
    தான் யாரென அறிந்த பின்னர், நீ நானென்பதில்லை
    நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரன் தானாகியுள்ளான்.“

    4. “என்னால் அறிந்தேனினில் என்னால் அறியவில்லை
    உன்னால் அறிந்தேனெனில் உன்னால் அறியவில்லை
    கண்ணொளியும் சூரிய ஒளியும் சேர்ந்து காண்பது போல
    என் உன் அறிவு உறவான் ஆதரவிலறிந்தேன் பாராய்
    நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரனே“

    ஹடப்பத அப்பண்ணா

    பசவேசரோடு நெருக்கமாக இருந்தவர்.வெற்றிலைப் பெட்டியேந்தும் காயகம் இவருடையது. இவர் மனைவி இலிங்கம்மா சரணரும், வசனக்காரருமாவார். கல்யாண் புரட்சியின் போது பசவேசரோடு கூடலசங்கமம் சென்றவர். பின்பு பசவேசரின் கட்டளைப்படி மனைவியை அழைத்து வர கல்யாண் செல்கிறார். அதற்குள் பசவேசர் இறைவனிடம் ஐக்கியமான செய்தி கிடைக்கிறது. கணவன், மனைவி இருவரும் அங்கேயே இறைவனிடம் ஐக்கியமாகின்றனர். ’பசவப்பிரிய கூடலசென்ன பசவண்ணா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “ஆகின்றன உதயம், பகல், மாலை,
    போகின்றன நாள், வாரம், மாதம், ஆண்டு
    சாகின்றன ஆயுளும், வாக்குறுதியும்
    இவற்றை உடனறிந்து களைந்து நீ பிறப்பெடுத்தாய்
    பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணனே”

    2. “பேசியென்ன ஐயனே நடக்காத வரையில்?
    நடந்தென்ன ஐயனே நல்லுரை இல்லாத வரையில்?
    இந்தச் செயலும் சொல்லுமறிந்து ஒன்றாகி
    சிவவடிவாகிய சரணர்பதம் பணிந்து வாழ்கின்றேன் நான்
    பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணனே“

    3. “பக்தனொரு குலம், சம்சாரியொரு குலமென்பார்
    பக்தன் எங்ஙனம், சம்சாரி எங்ஙனமெனில், யாருமறியார்
    இஃதறிந்தோர் சிந்தனை செய்வீர்
    பக்தனெனில் இலிங்கம், சம்சாரியெனில் அங்கம்.
    இவ்விரண்டின் இரகசிய உறவறிந்தால்
    அவனே நமது வசனப்பிரிய கூடல சென்னபசவண்ணன்”

    4. “காலையிலிருந்து மாலை வரையில்
    சுழலும் மாயவுலகில் அலைந்து திரிந்து
    இருட்டியதும் கெட்ட புலன்களுக்குள்
    மூழ்கி, செத்துப், பிறந்து
    காலையில் மீண்டும் தான் தத்துவமறிந்தவனெனப் பேசும்
    இருண்ட மனிதருடன் அப்பக்கம் போய்ச் சேராமல்
    இப்பக்கம் நின்று நாணியே நகைப்பான்,
    நம் பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணன்”

    ஹடப்பத அப்பண்ணனின் புண்ணியஸ்திரி இலிங்கம்மா 

    பசவேசருக்கு நெருக்கமான ஹடப்பத அப்பண்ணரின் மனைவி இவர். ’அப்பண்ண பிரிய சென்ன பசவண்ண’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆசையழித்து , சீற்றம் தவிர்த்து உலகப் பாசமறுத்து
    ஈசனை நினைக்கும் அடியாரை
    உலகின் ஈனப்பிறவிகள் எங்ஙனமறிவர்
    அப்பண்ண பிரிய சென்ன பசவண்ணனே?”

    2. “கண்டேன் கேட்டேனெனும் இருநிலையழித்து
    உண்டேன் உடுத்தினேனெனும் தேவையை விடுத்து
    செய்தேன் சொன்னேனெனும் செயல்விட்டு
    மாயசெபங்களுக்கு ஆட்படாமல் சென்று
    அடியார் பாதம் வணங்கி வாழ்ந்துளேன்,
    அப்பண்ண பிரிய சென்னபசவண்ணனே”

    3. “மனம் மறதிக்கு ஆட்பட்டது
    உடல் கலவரத்துக்கு ஆட்பட்டது
    ஆசையும் சினமும் சுவரெழுப்பியது
    இவற்றினிடையே உலக ஈசனை நினைக்கும்
    அடியார் சொற்கள் கவனத்திலிருப்பதில்லை
    நம் அப்பண்ண பிரியனே சென்ன பசவண்ணனே.”

    4. “போதுமய்யனே, அறுந்தது உலகின் தாட்சண்யம்
    உடலாசை விட்டது  உள்ளத்தின் சஞ்சலம் நின்றது
    சொல்லின் அலங்காரம் சுருங்கியது;
    மேன்மை கலந்தது ; ஒளியுடன் கூடியது.
    வெட்ட வெளியில் மகிழ்ந்தாடி இன்பமடைந்தேன் ஐயனே
    அப்பண்ண பிரிய சென்னபசவண்ணனே“

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 93 (அன்பனே)

    சேக்கிழார் பாடல் நயம் – 93 (அன்பனே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    “அன்பனே! யன்பர் பூசை யளித்தநீ யணங்கி னோடும்
     என்பெரு முலக மெய்தி, யிருநிதிக் கிழவன் தானே
    முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி ஏவல் கேட்ப,
    வின்பமார்ந் திருக்க“ வென்றே யருள்செய்தான் எவர்க்கு மிக்கான்.”

    விளக்கம்:

    “அன்புடையவனே! அன்பர்களது பூசையினைச் சிறிதும் வழுவாது காத்துச் செய்து வந்த நீ உன் மனைவியோடும் எமது பேருலகத்திலே சேர்ந்து, குபேரன் தானே  நும் முன்னர்ப் பெரு நிதிகளை ஏந்தி நும் சொல் வழியே ஏவல் கேட்டு நிற்க, இணையில்லாத பேரின்பம் நுகர்ந்து கொண்டு நித்தியமாய் வாழ்க“ என்றே யாருக்கும் மிக்காராகிய சிவபெருமான் அருளிச் செய்தார்.

    இப்பாடலில் அன்பனே என்ற சொல், எம்மிடத்து வைத்த அன்பினாலே அடியார்களிடத்து அன்புடையவனே என்று பொருள்பட்டது. ‘’அன்பர்பூசை அளித்த நீ’’ என்ற தொடர் அன்பு நிறைதலாகிய காரணத்தால் விளைந்தது அன்பர் பூசையாகிய காரியம் எனப்பட்டது.

    அளித்தல் என்ற சொல்  வளம் சுருங்கியபோதும் என்றும் விடாது பாதுகாத்துச் செலுத்துதலைக் குறித்தது. அணங்கு – தெய்வத்தன்மை வாய்ந்த பெண். இங்கு மனைவியாரைக் குறித்தது. தெய்வத்தை எப்போதும் வழிபடும் அடியாரின் மனைவியும் தெய்வத்தன்மை பெற்றார்.

    ‘’அணங்கினோடும் நீ  என் பெரும் உலகம் எய்தி’’  என்ற தொடர்,  அடியார் பூசைக்கு உரிய அமுது படைத்து உய்த்தது மனைவியாரது கற்பின் றிறத்தாலே நிகழ்ந்ததாலின், அச்சிறப்புப் பற்றி மனைவியாருடன் சார்த்தி, அணங்கினோடும் நீ எய்தியிருக்க என்றருளினார்.

    ‘’நம்பெரு முலகம்’’ என்றதொடருக்கு இயற்பகையார் புராணத்தில் நலமிகு சிவலோகத்தில்  என்ற தொடருக்கு சிவானந்த போகமே வளர்கின்ற அபரமுத்தித் தானமாகிய சுத்தபுவனத்திலே என்றபொருள் கூறியதை இங்குநினைவில்கொள்க

    ‘’இருநிதிக் கிழவன்  தானே முன்பெருநிதியம் ஏந்தி‘’ என்ற தொடர் பிறகணங்களன்றிக் குபேரன் தானே பெருநிதியம் ஏந்தி முன் நின்று, என்றபொருளைக்குறித்தது. பெருநிதியம் – எடுக்க வெடுக்கக் குறையாத சங்கநிதி – பதுமநிதி என்பன.

    மேலும் ‘’மொழிவழியேவல் கேட்ப‘’ என்றதொடருக்கு உனது சொல் வழிப்பட்டு நின்று, நீ ஏவின பணி செய்து வர என்று பொருள்!

    சிவலோகத்திலே இந்நாயனார்க்குக் குபேரனது பெருநிதியத்தால் ஆவது என்ன? எனின் செல்வமும், அடியார் திறத்து அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும், பாரின் மல்க விரும்பி, அக்கொள்கையினின்றே அடியவர் பூசை செய்து வந்தனர் நாயனார்; அவரது எண்ணம் நிறைவேறுக என்று அடியவர்கள் நாளு நாளும் வாழ்த்தினர்; அதன் பயனை உலகிற்குக் கொடுத்துப் பாரிலே நித்தமும் செல்வமும் சிந்தையும் நீடி வருவதற்காக, இறைவன், இவர் சொல்வழிக் குபேரதேவன் நிதியமேந்தி ஏவல் கேட்டு நிற்குமாறு அருளினார் என்பதை விளக்கியது! ஆகவே இளையான்குடிமாற நாயனார் சிவகணங்களிலொருவராய்ச் சிவலோகத்தில் எழுந்தருளியிருந்து உலகிலே செல்வமும் சிவசிந்தையும் நீடி வருமாறு அடியவர்க்கு இன்றும் என்றும் அருள் புரிந்து வருகின்றார்  என்பதைப் புலப்படுத்துகிறது இங்கே இன்பம் என்பது அடியார் கூட்டத்தில் வாழும் பேரின்பத்தைக் குறித்தது.

    எவர்க்கும் மிக்கானாகிய  முழுமுதல்வன்  சோதியாகத் தோன்றி, அடியாரை நோக்கி  அன்பனே, நீ அணங்கினோடும் என்பெரும் உலகம் எய்தி, குபேரன்தானே ஏவல் கேட்ப, இன்பமார்ந்திருக்க என்று  அருள் செய்தான் என இவ்விரண்டு பாட்டுக்களையும் இணைத்துப் பொருள்கொள்க.

    ஆகவே இப்பாடல்கள் ‘’இறைவன்திருவருளையன்றி உலகியல் இன்பங்கள் எதனையும் வேண்டாமல் வாழ்ந்தஅடியார், சிவலோகத்தில் எல்லா இன்பங்களையும்பெற்றுப் பேரின்பத்துடன் வாழ்வர்’’ என்பதை உணர்த்துகின்றன.

    ‘’உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
    கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே!’’

    என்ற  திருவாசகம்  இங்கே  நினைவுக்கு  வரவேண்டும். இவ்வரலாற்றின்  ஆதாரங்கள்  பரமக்குடி அருகில் இருப்பதையும்  எண்ணி மகிழ  வேண்டும்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    மீனாட்சி பாலகணேஷ்

    (குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொருளற்ற மழலைகூறும் பருவமன்று; ஐந்தாறுவயதுப் பெண்குழந்தை பேசும் அழகான பேச்சுகளாகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ப தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் இப்பருவத்தைப் பாடியுள்ள ஒரேயொரு புலவரான கிருட்டிணையர் இதனைப் பொன்னூசல் பருவத்திற்குப் பின்னும் நீராடற்பருவத்தின் முன்பும் வருமாறு அமைத்துள்ளார். இதன் கருத்தை கா. நாகராசு அவர்கள் இப்பிள்ளைத்தமிழுக்கான தமது உரைநூலில் விளக்கியுள்ளார்.

    ‘குதலைமொழி என்பதற்கு மழலைமொழி எனப் பொருள்கொள்வதைக் காட்டிலும் இனியமொழி எனப் பொருள் கொள்வதே பொருத்தமெனப்படுகிறது. ஏனெனில் இப்பருவம் ஊசல் பருவத்துக்கும் நீராடற்பருவத்துக்கும் இடையில் வருகிறது. இவ்விரு பருவங்களும் குழந்தையின் ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளைப் பாடுவது. குதலைமொழியாடல் பருவம் பற்றியோ அது குழந்தையின் எவ்வாண்டுக்குரியது என்பது குறித்தோ நூல்களில் சொல்லப்படவில்லை. எனவே இதையும் ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளுள் ஒன்றாகவே கருதலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து குழந்தை நன்றாகப் பேசத்தொடங்கிவிடும். எனவே அதை மழலை என்று கொள்ளாமல் இனியமொழி எனவே கொள்ளலாம்1,’ என்கிறார்.

    குதலைமொழியாடல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆண்பால் பிள்ளைத்தமிழான கதிர்காமப் பிள்ளைத்தமிழில் ‘மொழிபயிலல்’ என ஒரு பருவத்தைக் கண்டோம். இதுவும் அதுபோன்றே புலவரின் விருப்பத்தின்படி இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

    இப்பருவத்தில் இரண்டு பாடல்களே உள்ளன. இவையிரண்டுமே பொருள் செறிந்த அருமையான பாடல்கள். பாடல்களைக் காணப்புகுமுன் தொடர்பான சில கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.

    சொல், அது என்னவாக வேண்டுமாயினும் இருக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கென்றேயான தனிப்பட்ட ஒரு பொருளுண்டு. அடியார்களின் பார்வை இத்தகைய கருத்தினுள் ஒரு அதியற்புதமான வடிவைக் காண்கின்றது.

                ‘சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன்
             புல்லும் பரிமளப் பூங்கொடியே2….’ என அபிராமி அன்னையைப் போற்றுகிறார் அபிராமி பட்டர்.

    சொல் என்பது பேசப்படுவது; கேட்கப்படுவது – ஆகவே அது சக்தியின் அம்சமாக விளங்குவது; பொருள் ஆனது மனதால் மட்டுமே உணரக் கூடியது – ஆதலால் அது சிவபிரானின் அம்சமாவது. சொல்லின்றிப் பொருளில்லை! பொருளற்ற சொல்லுமில்லை! அவை ஒன்றினையொன்று இணைபிரியாதவை; பிரிய இயலாதவை! அதனால்தான் அன்னையும் ஐயனுமாக, சொல்லும் பொருளுமாக எனப் பிணைந்துள்ள சிவசக்தி ஐக்கிய வடிவத்தினை இப்பாடல் அழகுற விளக்கியருளுகின்றது.

    மகாகவி காளிதாசரும் தமது இரகுவம்ச மகாகாவியத்தின் முதல் ஸ்லோகமாக இக்கருத்தையே முன்வைக்கிறார்.

                வாகர்த்தாவிவ சம்ப்ரக்தௌ வாகர்த்தா ப்ரதிபத்தயே
             ஜகத பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ3

    ‘இந்தப் பிரபஞ்சத்தின் தாய்தந்தையரான பார்வதி, பரமேஸ்வரர்களை நான் வணங்குகிறேன். அவர்கள் சொல்லும் பொருளும் என இணைந்திருப்பவர்கள்,’ என்பது எளிமையான விளக்கம்.

    சொற்களின் பிறப்பு, அமைப்பு, பொருள் அனைத்துமே அறிவியல் நோக்கிலும் அதற்கும் அப்பாற்பட்டதொரு தத்துவ வேதாந்த முறையிலும் உணரப்படுவனவாகும்.

    சொல்லின் தோற்றத்தைத் தமிழின் பழம்பெரும் முதன்மைநூலான தொல்காப்பியமானது விளக்கியுள்ளது. சொல்லின் அடிப்படையான எழுத்துக்களும் அவற்றுக்கான ஓசையும் உந்தியிலிருந்து எழும் காற்றானது தலை, தொண்டை, மார்பு ஆகிய இடங்களில் தங்கி பல், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய இடங்களில் படுவதனால் பிறக்கின்றன. இதற்கென மாத்திரைகள் (கால அளவைகள்) உண்டு. இது தவிர்த்து உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் மறைநூல்களில் மட்டுமே காணப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

    இது எவ்வாறு? நான்குவிதமான சொற்கள் (வாக்குகள்) உண்டென தொல்காப்பியரின் குருவான அகத்தியர் கூறுகிறார். அவை

                ‘………. பைசந்தி மத்திமை வைகரியுஞ்
             சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்4,’ என்கிறார்.

    பரா (சூக்குமை), பச்யந்தி (பைசந்தி), மத்யமா (மத்திமை), வைகரீ,  என்பன வாக்கு எனும் சொல்லின் பலவிதத் தோற்ற வடிவங்களாகும்.

    இதனை லலிதா சஹஸ்ரநாமத்திலும் காணலாம்.

                ‘பரா ப்ரத்யக் சிதீரூபா பச்யந்தீ பரதேவதா
             மத்யமா வைகரீ ரூபா5,’ என்பன அன்னையின் மீதான நாமாவளிகளில் 366, 368, 370, 371 ஆகும். பராசக்தியான லலிதாதேவியே இந்த நான்குவிதமான சொல்வடிவங்களில் விளங்குகிறாள்.

    இவற்றுள் மிக நுண்ணிய நிலையானது பரா அல்லது சூக்குமை எனப்படும்; இது ஞானிகள் தமது சிந்தையில் உய்த்துணரும் ஒலிவடிவமாகும். வெளிப்படையாகக் கேட்கவியலாதது; ஒலிவடிவமற்றது. மூலாதாரத்தில் விளங்குவது.

    பைசந்தி எனப்படுவது உள்ளத்தினுள் தோன்றும் ஒலிவடிவம். சொல்லின் ஆரம்பகாலத்துக் கலங்கிய நிலை எனலாம். மூலாதாரத்தில் கிளம்பி நாபிக்கு வருவது பச்யந்தீ ஆகும்.

    மத்திமையாவது சொல்லின் இடைப்பட்ட நிலை. மனதால் மட்டுமே உணரக்கூடியது. பச்யந்தி நிலையிலிருந்து இருதயத்திற்கு வரும் நாதம் மத்திமை.

    வைகரி என்பது தெளிவாகச் செவிக்குக்கேட்கும் அட்சர வடிவான ஒலியாகும். மத்யமா ஆனது கழுத்திற்கு வந்தால் பீஜம் அல்லது அட்சரம் ஆகின்றது.

    பரா எனும் சூக்குமையான வாக்கினை மேலான முனிவர்களால் மட்டுமே உணரவும் கிரகித்துக்கொள்ளவும் இயலும். இவையே வேத மந்திரங்களின் அடிப்படை ஆகும். அவை உச்சரிப்பிற்கேற்ற மந்திரங்களாக ‘வைகரி’ ரூபத்தில் வெளிப்படுமுன்பு பைசந்தி, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைகளில் உருப்பெற்று வளரும். இதனையே தொல்காப்பியர், ‘அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே6,’ என்றார்.

    இந்த வைகரியே உந்தி, மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு இவற்றுள் இடையறாது சென்றுவரும் மூச்சுக்காற்றில் கலந்து பல், அண்ணம், நாக்கு, இதழ் இவைகளில் பட்டு பற்பல சொல்வடிவாகி உருப்பெறும். இதனையே பெற்றோர் தம் சிறுகுழந்தைகள் எழுப்பும் இனிய ஓசைகளிலும், பேசும் பொருளற்ற மழலையிலும், குதலை மொழியாகவும் உணர்கின்றனர். கேட்டும் மகிழ்கின்றனர்.

    இன்னும் எளிதாகக் கூற வேண்டுமெனில், ‘அம்மா’ எனும் ஒரு சொல்லைக் கூற முற்படும்போது முதலில் அந்த ஒலியின் வடிவம் மனக்கண்ணில் சூக்குமையாக, நுட்பமாகத் தோன்றுகிறது. அடுத்து அதற்கு மட்டுமேயான அந்த அம்மாவின் உருவம் ஒலிவடிவமாக உள்ளத்தில் எழுகின்றது. இதுவே பைசந்தி அல்லது பச்யந்தி. பின்பு அது சொல்லாக ஒலியோடு நமது வாயிலிருந்து வெளிப்படும் முன்பு அதன் ஒலிவடிவு மனதில் தோன்றி  மத்திமை என உணரப்படுகின்றது. பின்பு ஒலியுடன் கூடிய அழுத்தமான சொல்லாக (வைகரி) வெளிப்படுகின்றது. இது செவிக்குத் தெளிவாகக் கேட்கும் அட்சர வடிவான ஒலி.

    நாதமாக (ஓசையாக) உயிரோடு கூடியிருப்பது மொழித்தன்மை; மொழிக்கு இன்றியமையாதன சொற்கள் எனும் வாக்கு; அவை விந்து தத்துவமாகும் என்பன சித்தாந்த சாத்திரக் கருத்துக்களாகும். இதனையே சிவஞான சித்தியார்,

    ‘சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்7‘ என்கின்றது.

    நாம் எண்ணும் எண்ணங்களும் அவை ஒலிவடிவம் பெற்று நம்மால் பேசப்படுதலும் சிவசத்தியின் அம்சங்களே, தத்துவங்களே எனும் பேருண்மை இதனால் புலனாகும்.

    உண்மைக்காதலின் உயர்வைப் போற்றிப் பாடியுள்ள ‘பாயுமொளி நீயெனக்கு,’ எனும் பாடலில் பாரதியார், ‘பேசுபொருள் நீயெனக்கு, பேணுமொழி நானுக்கு8,’ என்று சொல்-பொருளின் தொடர்பினைப் பாடியுள்ளார்.

    சிவசக்தி வடிவமான பிரணவத்தின் – ஓங்காரத்தின் – முழுமுதற்பொருளாக, அதன் தூல வடிவமாகவே விளங்கும் விநாயகப்பெருமானே அனைத்து எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் முழுமுதற் பொருளாவான். இக்கருத்தினை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று அருமையாக விளக்குகிறது.

    வேதவிநாயகப்பெருமான் நமது புத்திக்கு (புந்தி) எட்டாத புண்ணியவெளியில் திகழ்ந்து அருளுபவன். நாபியை இடமாகக் கொண்டு நாதம் எனப்படும் அறிவே வடிவாக இருக்கும் சூக்குமை, உந்தியில் உற்பத்தியாகி பிராணவாயுவை வடிவாகக் கொண்ட பைசந்தி, நெஞ்சையும் கண்டத்தையும் இடமாகக் கொண்டு அட்சர வடிவினை ஒழுங்குபட நிறுத்தி, செவிக்குக் கேளாமல் உள்ளறிவாக நிற்கும் மத்திமை, நாக்கினடியிலிருந்து பிறந்து ஒலிவடிவம் பெறும் வைகரி எனச் சொற்கள் நான்குவகைப்படும்.

    ‘இந்த நாலுவிதமான எழுத்துக்களுக்கும், மிகுதியான நூல்களிலுள்ள எழுத்துக்களுக்கும், பழமையான நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்களுக்கும், குற்றமற்ற சமஸ்கிருத மொழியில் உள்ள எழுத்துக்களுடன் பதினெட்டுவகை நிலங்களில் வழக்கிலுள்ள அத்துணை எழுத்துக்களுக்கும் மேற்பட்டு விளங்கி ஓங்காரப்பொருளாகவும் அவற்றின் தலைவனாக அவற்றை ஆள்பவனாகவும் விளங்கி, மேலான ஞானத்தின் மூல ஆதாரம் எனும் இடத்தில் நமது புத்திக்கு எட்டவியலாத ஒரு புண்ணியவெளியில் அடைவதற்கு அரிய பரம்பொருளாக இருக்கும் விநாயகப் பெருமானே!

    ‘குற்றமற்ற புகழைக் கொண்டவனே! வெற்றி அளிப்பவனே! செங்கீரை ஆடியருளுக!’ என அடியார் வேண்டுவதாக அமைந்த பொருள்செறிந்த பாடல் இது.

                ‘நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி
                       நல்லமத் திமைவைகரி
                 நாலெழுத் துக்கும்வெகு நூலெழுத் துக்குமுது
                       நான்மறை எழுத்தினுக்கும்
             ……………………………………..
             போதத்தின் மூலவா தாரத் தலத்திலே
                      புந்திக்கும் எட்டாததோர்
                 புண்ணிய வெளிக்குளே ………..
             தீதற்ற விசைகொளும் அரும்பாத்தை புரிமுதல்வ
                       செங்கீரை ஆடியருளே9
             ………………………………………..’

    எல்லாம்வல்ல சிவப்பரம்பொருளிடமிருந்து முதலாவதாக உண்டாகிய படைப்பு ஓம் எனும் பிரணவ நாதமாகும். அந்த ஓம் எனும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவம். ஆகவே இவர் ஓங்கார ரூபன் எனவும் பிரணவ கணபதி எனவும் அறியப்படுகிறார்.

    எழுத்து, ஓலி, ஓசை, சொற்கள் ஆகியவற்றின் பிறப்பினை இவ்வாறாக அறிந்துகொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழின் பாடல்களைக் காணப்புகலாம்.

    மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள் சிவகாமியம்மைமீது இயற்றப்பட்டுள்ளதெனக் கூறுவர். அவற்றினை இயற்றியோர்:

    1. நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    2. ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்.
    3. மு. ரா. அருணாசலக் கவிராயர்.

    இருப்பினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவைகளில் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாததாகும்.

    நாம் இங்கு காணப்போவது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றிய நூலின் பாடல்களைத்தாம். ஏனெனில் முன்பே கூறியதுபோல, இவர் மட்டுமே குதலைமொழியாடல் பருவத்தைப் பாடியுள்ளார். மற்றதில், இரண்டாவது நூல் வழக்கமான பெண்பால் பிள்ளைத்தமிழுக்கான பத்துப் பருவங்களையே கொண்டமைந்துள்ளது. மூன்றாவது காணக் கிடைக்கவில்லை.

    முதல்பாடல் சிவகாமி அன்னையிடம் புலவரின் வினாக்களாகவே அமைந்துள்ளது:

    ‘தாயே! முழுநிலவு பொழியும் இனிய அமுதக்கிரணங்களும், தெள்ளிய அலைகளைக்கொண்ட பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் முன்பொருகாலம் கடைந்தபோழ்து அதிலிருந்து கிடைத்த தேவாமிர்தமும் முத்தியைத்தர வல்லனவோ?

    ‘அவ்வமுதத்திற்கு நிகரானவை எனக்கூறப்படும் மா, பலா, வாழை எனும் முக்கனிகளொடு சர்க்கரையும் பசுந்தேனும் சேர்த்தாலும் அவை இருவினைகளாலும் வரும் துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தருமோ?

    ‘காமதேனுவின் பாற்சுவையும் கிளியானது கொஞ்சிப்பேசும் மொழியும் பாசம் எனும் ஆணவமலமாகிய இருளை நீக்கிவிடுமோ?

    ‘ஆனால், (நீ பேசிடும் குதலைமொழியானது),

    ‘தவறுகளைத் திருத்தும்; இம்மைக்கும் மறுமைக்கும் முத்திதரும். இனிச்சொல்ல வேறென்ன உள்ளது? ‘தம் குழந்தைகள் பேசும் இனிய சொற்களைக்கேட்பது செவிக்கு இன்பம் எனும் உண்மை பொய்யாகுமோ? (ஆகாது; அதுவே உண்மை!)

    ‘குழலிசையும் யாழிசையும் இனியதன்று; இவற்றிலும் சிறந்த உனது பவளவாயினின்றும் பெருகும் குதலைமொழியைப் பேசியருள்வாயாக!

    ‘குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.”

              முழுமதியின் அமுதமும் தெண்டிரைப்
                       பாற்கடலில் முன்கடைந்திடும் அமுதமும்
             முத்திதருமோ? அதனையொப்பென உரைத்திடினும்
                       முக்கனி சருக்கரையொடும்
             …………………………………………………..
             வழுவகலும் இம்மைக்கும் மறுமைக்கும்
                       முத்திதரும் மற்றினி உரைப்பது
             ………………………………………………….
             குழலினிது யாழினிதுமன்று நின்பவளவாய்க்
                       குதலைமொழி ஆடியருளே10!
             ………………………………………………

    மக்கட்பேறு எனும் திருக்குறள் அதிகாரத்தின் கருத்துக்கள் மிகப்பொருத்தமாகப் பாடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

                ‘……….. ……….. …………… மற்றவர்
             சொற்கேட்டல் இன்பம் செவிக்கு11.’
    ‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
             மழலைச் சொல்கே ளாதவர்12.’

    கருத்தினுள் வாங்கிக்கொண்டு சிந்தித்து இன்புற வேண்டிய பாடல் இதுவாகும்.

    அடுத்த பாடல் மொழி பிறக்கும் விதத்தினை விளக்கிக் கூறுகிறது.

    ‘சொல்லின் நுண்ணிய நிலையான சூக்குமையாக முதலில் இருந்து, பின் பைசந்தி எனப்படும் கலங்கிய தெளிவற்ற நிலையிலெழுந்து, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைச்சொல்லாகி, இறுதியில் தெளிவான வைகரியாகி ஒலிக்கும் வாக்கானது, கொப்பூழ், மார்பு, கழுத்து, உச்சி, மூச்சுக்காற்று எப்போதும் சென்றுவரும் நாசித்துவாரங்கள் ஆகியவற்றில் கலந்து, பல், அண்ணம், உதடுகள், நாக்கு என்பவற்றுடன் கலந்து, வாயினில் ஒலிவடிவான சொற்களாக உருப்பெற்று ஒலிக்கும்.

    ‘இத்தகைய மழலைச் சொல்லினை தம் குழந்தைகள் பேசுவதனைக்கேட்டு, கண்டும், அனுபவித்தும், பார்த்தும், அன்னை தந்தையர் பேரின்பம் எய்துவர்.’

    இவ்வாறு பேசும் மழலையர் பெற்றோரின் தெய்வங்களே அன்றோ? அதனையே அடுத்துக் கூறிப் போற்றுகிறார்.

    ‘எனக்கு வரம்தர வந்த தாயும் தந்தையும் நீ! நான் போற்றி வழிபடும் தெய்வமும் நீயே! குறைவில்லாத எனது உயிரும் நீ! பருவுடலும் நீ! உடலில் உறைந்துள்ள ஐம்புலன்களும் நீ! இனிமையாகக் கூவிடும் குரல்படைத்த கிளியும் நாணிடும் உனது குதலைமொழியைப் பேசியருளுகவே! குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.’ எனும்  பாடல்.

    சூக்குமை விளங்கும் பைசந்தி மத்திமையொரு
                       துலங்கும் வைகரி ஆகியே
             சொல்லரும் இலஞ்சி யுரனொடு கண்டம்
                       உச்சி ஒலிதொடர் நாசியொடு கலந்தே
             வாக்கினில் எழுந்துபல் அண்ணம் இதழ்
                       நாவினில் வழங்கும் மழலைச் சொல்லுமேல்
             …………………………………………………..
                       உடலினில் படரும் ஐம்புலனும் நீயே!
             …………………………………
             குழகன் மகிழ்சிவ காமசுந் தரிநின்
                       மழலைவாய்க் குதலை மொழியாடி அருளே13!

    நம் தமிழகத்தில் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனும் வழக்குண்டு. இங்கு தெய்வத்தையே குழந்தையாக்கிப் போற்றி, அக்குழந்தை வடிவிலும் தெய்வத்தை உணரும் அடியாரின் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது.

    மேலும் உரையாசிரியர் நாகராசு அவர்களின் கருத்துப்படி, தனது பாடல்களான மழலைச் சொற்களைத் தாயும் தந்தையுமாக விளங்கும் இறைவி ஏற்று மகிழ வேண்டுமெனும் விருப்பத்தையும் புலவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

    (தொடரும்)

    ___________________________________

    பார்வை நூல்கள்:

    1. கா. நாகராசு, 2015. நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் வகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்.

    2. அபிராமி பட்டர்- அபிராமி அந்தாதி.

    3. காளிதாசர்- இரகுவம்சம்

    4. அகத்தியர்

    5. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

    6. தொல்காப்பியர் – தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்.

    7. அருணந்தி சிவாச்சாரியார்- சிவஞான சித்தியார்

    8. பாரதியார்- கவிதைகள்.

    9. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    10, 13. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-குதலைமொழியாடல் பருவம்.

    11, 12. திருவள்ளுவர்- திருக்குறள்.

     

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 5

    பரிமேலழகர் உரைத் திறன் – 5

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    எல்லாம் இருந்தும் என்ன பயன்?

    முன்னுரை

    திருக்குறள் இரண்டடிக் குறட்பாவாகத் தோன்றுவதால் அதன் பொருளைப் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனக் கருதுவது இயல்பே. உண்மையில் ‘குறுகத் தரித்தது’ என்பதை உணர்வார் சிலரே. அவ்வாறு நோக்கியுணர்ந்து உரைகண்டவர்களில் பரிமேலழகர் தலையானவர். ஒரு சீருக்கும் மற்றொரு சீருக்கும் ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் நிலவும் அல்லது நிலவ வேண்டிய யாப்பு, தொடைவிகற்பம், பொருண்மை, பொருத்தம் ஆகியவை செம்மையாக இருக்கிறதா என்பதைப் பொறுமையுடனும் ஆழ்ந்த புலமை மற்றும் சிந்தனையுடன் அணுகுவது அவர்க்கு இயல்பு. அவ்வாறு, எல்லார் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றிப் பரிமேலழகருக்கு மட்டும் மாறுபட்டுத் தோன்றி உரைகாணப்பட்ட குறட்பா ஒன்றினைக் காணலாம்.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அன்புடைமை’ என்னும் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக அமைந்திருப்பது,

     “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பில வர்க்கு” (79)

    என்னும் குறட்பா. இதற்கு,

    • யாக்கை அகத்து – யாக்கை அகத்தின்கண் (நின்று)
    • உறுப்பு – (இல்லறத்திற்கு உறுப்பாகிய)
    • அன்பு – அன்பு
    • இலவர்க்கு – உடையரல்லாதவர்க்கு
    • புறத்து உறுப்பு எல்லாம் – ஏனைப் புறத்தின் கண் நின்று உறுப்பாவன எல்லாம்
    • எவன் செய்யும் – (அவ்வறம் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • குறட்பாவில் ‘உறுப்பு’ என வாளா கூறியிருக்க, பரிமேலழகர் ‘இல்லறத்திற்கு உறுப்பு’ என உரை காண்கிறார். அதிகாரம் அன்புடைமையெனினும், இயல் இல்லறவியல் என்பதனை நோக்கி. இல்லறம் அன்பின்றிக் கடைபோகாது ஆதலின் ‘இல்லறத்தின் உறுப்பு’ என நுண்ணியம் காண்கிறார்.
    • ‘அன்பு இலவர்க்கு’ எனக் குறட்பாவில் இருக்க, ‘அன்பு உடையரல்லாதார்க்கு’ என உரை காண்கிறார். அன்பாகிய பண்பினை ‘உடைமை’ என உருவகம் செய்யும் திருவள்ளுவர் கருத்திற்கு (அன்புடைமை) இயைய அன்பினை ஓர் உடைமையாகக் கொள்கிறார்.
    • ‘அகத்துறுப்பு’ ‘புறத்துறுப்பு’ என நிற்க பரிமேலழகர் ‘நின்று’ என்னும் சொல்லை இருவழியும் வருவித்து உரை காண்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “புறத்துறுப்பாவன – இடமும் பொருளும் ஏவல் செய்வாரும் முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் உறுப்பு எனப்பட்டன. “யாக்கையில் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இலாதார்க்கு என்று உரைப்பாரும் உளர்., அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • இல்லறத்தான் அறம் செய்வதற்கான கருவிகள் இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றுமாம். இந்தக் கருவிகள் ‘அன்பு’ என்னும் மூலக்கருவியாகிய இல்லறத் துணையின்றிச் செயல்படாது. செயல்படினும் பயனில்லையாம். இதனைத் ‘துணையோடு கூடாத வழி அவற்றாற் பயனில்லை என்னும் தொடரால் குறிக்கின்றார்.
    • அன்பு அகத்துறுப்பாதலின் இவை புறத்துறுப்பாயின.
    • ‘‘எல்லாம்’ (என்னும் பன்மையால்) அவை மூன்றாக இருப்பினும் அன்பில்லாதவழிப் பயனில்லை என்பார் ‘எவன் செய்யும்’ என்று எழுதுகிறார்.
    • முதலோடு இணையாதவழிச் சினை வினை சிறக்காது. அன்பென்னும் முதலுக்கு இடம், பொருள், ஏவல் என்பன உறுப்புப்போலச் செயல்படுவதால் ‘உறுப்பு’ என்றாராம் திருவள்ளுவர்.
    • பிறரெல்லாம் புறத்துறுப்பு என்பதற்குக் கண் முதலிய உறுப்புக்கள் எனப் பொருள் கண்டதனை ஏற்றுக்கொள்ளாத பரிமேலழகர் மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு ‘யாக்கையில் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்ன பயனைச் செய்யும்? என உரைப்பாரும் உளர்” என எழுதி “அதற்கு (அவ்வுரைக்கு) இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக’ எனக் குறிப்பாகச் சுட்டி மறுக்கிறார். அகத்துறுப்பு அன்பு என்பதில் மாறுபாடு காணாத பரிமேலழகர் புறத்துறுப்பு எவை என்பதில் மாறுபடுகிறார்.

    பரிமேலழகரும் இயைபும்

    ஆசிரியர் பரிமேலழகர் ‘நோக்கு’ என்னும் திறனாய்வுக் கொள்கையை அடிப்படையாக வைத்தே உரைகாண்கிறார். ‘இயைபு’ என்றால் பொருத்தம். குறட்பாவில் பயின்று வந்துள்ள அசை முதலாக அனைத்துறுப்புக்களின் பொருத்தத்தை ஆராய்கிறார். ஒருமை பன்மை மயக்கத்தை ஆராய்கிறார். உவமப் பொருத்தத்தை ஆராய்கிறார். செய்வினை, செயப்பாட்டு வினை பற்றி ஆராய்கிறார். தன்வினை, பிறவினைகளைப் பற்றி ஆராய்கிறார். இத்தகைய பல நுண்ணியங்களை அவரது உரையில் காணலாம். உரை சொல்வார் பாட்டின் இயைபறிந்து சொல்ல வேண்டும் என்பது அவர் உரைக்கொள்கை. அத்தகைய  கொள்கையைப் பின்பற்றும் அவர், அதனைப் பின்பற்றாது எழுதப்படட உரைகளைப் பல இடங்களில் மறுத்துரைக்கின்றார். குறட்பாவில் எப்படியெல்லாம் அவர் இயைபு காண்கிறார் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்.

    • ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ (643) என்னும் குறட்பாவில், ‘சொல் தகை அவாய்’ எனப் பிரித்து ‘சொல்லானது சில குணங்களை அவாவி’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார். எழுதிச், சொல் அவாவும் அதாவது சொல்லுக்கு இருக்க வேண்டிய உயர்பண்புகளைப் பட்டியலிடுகிறார். பிறரெல்லாம் ‘கேட்டாரைப் பிணிப்பதாகிய தகையவாய்’ எனப் பன்மையாக்கி உரை கூறினர். பரிமேலழகர் அப்படி ‘தகையவாய்’ எனப் பன்மையாகக் கொண்டால் ‘அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையவில்லை’ என இயைபின்மை காட்டுகிறார்.
    • ‘எற்று? என்று இரங்குவ செய்யற்க’ (655) என்னும் குறட்பாவிற்குப் ‘பின்னால் நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக, மயங்கிச் செய்தால், அங்ஙனம் நினைந்து வருந்தற்க’ என்று பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம் ‘நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக மயங்கிச் செய்தால் தொடர்ந்து செய்யாது ஒழிக’ என உரை கண்டார். பரிமேலழகர், தவறுகளைச் செய்து விட்டு வருந்துவதுதான் இயல்பாதலால் அத்தவறுகளைத் தொடர்ந்து செய்யாதிருப்பது முந்தைய கருத்தோடு இயையவில்லை என்பார் ‘பின் தொடர்தற்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று” எனப் பிறரெல்லாம் இயைபற உரைத்தார்’ என இயைபின்மை சுட்டுவார்.
    • “ஊறொரால் உற்றபின் ஒல்காமை’’ (662) என்னும் தொடருக்குப் பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும் தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இரண்டும்’ எனப் பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம், ‘ஊறொரார் எனப் பாடம் ஓதி உரைகண்டார். ‘ஊறொரால்’ என்பதும் ‘ஒல்காமை’ என்பதும் இணைந்து இரண்டு என்னும் செவ்வெண்ணோடு பொருந்தியது. ‘ஊறொரார்’ என்னும் உயர்திணைப் பன்மை என்றால் பின்வரும் சொல் ஒல்கார் என்றிருந்தால் சரி. அது ‘ஒல்காமை’ என இருப்பதால் அதனோடும் பொருந்தாது. மேலும் செவ்வெண்ணும் பொருந்தாது. “இதனை ஊறொரார் எனப் பாடம் ஓதுவாரும் உளர். “அஃது ஒல்காமை என்னும் எண்ணோடும் இரண்டு என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்” என இயைபின்மை காட்டுவார்.
    • “அங்கணத்துள் உக்க அமிழ்து” (720) எனத் தொடங்கும் குறட்பாவில் அல்லினத்தார் முன் எதனையும் சொல்லற்க, அவ்வாறு சொல்லப்படும் சொல் தூய்மையற்ற முற்றத்தின்கண் உக்க அமிழ்து’ என உரையெழுதினார். பிறரெல்லாம் எதனையும் சொல்லற்க அது தூயதல்லாத முற்றத்தின்கண் அமிழ்தினைக் கொட்டியதுபோல’ என்று உரையெழுதினார். ‘உக்கப்பட்ட அமிழ்து’ என்பது பொருளுவமை. ‘அமிழ்து உக்கினாற் போல என்றால் அது வினையுவமை. ‘பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருளுவமையோடு இணையாமை நோக்கிற்றிலர்” என இயைபின்மை சுட்டுவார்.
    • “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்” (926) என்னும் குறட்பாவிற்கு உறங்கினார் செத்தாரின் வேற்றுமை இல்லாதது போலக், கள்ளுண்பார் நஞ்சுண்பாரினும் வேறல்லர் என்று உரை காண்கிறார். பிறரெல்லாம் நிரல்நிறையாக்கிப் பொருள் உரைப்பர். “அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாகலானும் சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும் அஃது உரையன்மை அறிக” என்று அணியின் இயைபின்மை சுட்டுவார்.

    இவ்வாறு குறட்பாவின் எல்லாவகையான இடுக்குகளிலும் நுட்பமாகப் பொருத்தப்பாட்டைக் காணும் இயல்பு ஏனைய உரையாசிரியர்களின் உரைகளில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நுண்ணோக்குத்தான் அவருரையின் தனிச்சிறப்பாகவும் கொள்ளப்படுகிறது.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘அறம் அன்பில்லாத உயிர்களைக் காயும்’ என்றும், ‘அன்பில்லாத உயிர் தளிர்க்காது’ என்றும் ‘அன்பில்லாதார்க்கு உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தது போலாம்’ என்றும் முன்பின்னாக அன்பின் பேராற்றலையும் தேவையையும் கூறிய திருவள்ளுவர் நிறைவு செய்தற்பொருட்டு அன்பில்லாத நிலையில் புறத்துறுப்பால் பயனில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். எனவேதான் அன்புடைமை என்னும் அதிகாரத்துள் 77, 78, 79, 80 ஆகிய நான்கு குறட்பாக்களையும் ஓரலகாகக் கொண்டு ‘இவை நான்கு பாட்டானும் அன்பில் இல்வழிப் படும் குற்றம்” கூறப்பட்டது’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
    • உடம்புக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., வாய்க்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., கண்ணுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., மூக்குக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., செவிக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., இவ்வாறு ஐம்புலன்களுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லாதபோது அவற்றைப் புறத்துறுப்புக்கள் எனக் கொள்வது பொருந்தாது என அவ்வுரையின் இயைபின்மை கூறி, இல்லறத்தில் இடம், பொருள், ஏவல் என்னும் புறத்துறுப்புக்கள் துணைக்கருவிகளாயினும் உயிர்த்துடிப்பாகிய அன்போடு இணைந்து செயல்பட்டாலே இல்லறப் பயனாகிய அறம் நிறைவுறும் என்பது அவர் கருத்து.

    நிறைவுரை

    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசருக்குப் பரிமேலழகர் காலத்தால் முந்தியவராயினும் பிந்தியவராயினும் இந்தக் குறட்பாவுக்குப் பரிமேலழகர் எழுதிய கருத்தினை அப்படியே உட்கொண்டு,

    “இல்லானுக்கு அன்பு இடம் பொருள் ஏவல் மற்று
    எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும்? – நல்லாய்!
    மொழியிலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
    விழியிலார்க்கு ஏது விளக்கு?”  (நன்னெறி15)

    என்னும் வெண்பாவில் ‘நூலுக்கு மொழியும் ஒளிக்கு விழியும் போல’ இல்லறத்தானுக்கு அன்பு என உவம அளவையால் விளக்கிக் காட்டியிருக்கும் சதுரப்பாடு நோக்கத்தக்கது. “கொடுக்கணுங்கற மனசு வேணுமில்ல” என்ற வழக்கில் புறத்துறுப்புக்களின் அமைவிடம் நோக்குக. புறத்துறுப்புக்கள் என்பன ‘மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகக் கொள்ளாமல் “இடம், பொருள், ஏவல் என்பனவே என அவர் எழுதிய நுட்பமே இக்குறட்பாவின் உரையருமையாகும். இவ்வாறு படைப்பின் நுட்பம் காண்பதன் மூலம் படைப்பாளனின் உள்ளம் காண முயல்வது பரிமேலழகருக்கு இயல்பு என்பதை இதனால் அறியலாம்.

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 14

    கதை வடிவில் பழமொழி நானூறு – 14

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 29

    பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
    வல்லான் தெரிந்து வழங்குங்கால், – வல்லே
    வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
    ‘குளநெடிது கொண்டது நீர்?’.

    பழமொழி -. ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்’

    அல்வர் ராஜஸ்தானின் ஒரு அருமையான நகரம். பழம் பெரும் கோட்டைகள் நிறைந்த நகரம் என்றெல்லாம் சித்தப்பா சொன்னது நினைவிற்கு வரவேதான் நான் நாலு நாள் விடுப்பு எடுத்து இங்கு வந்திருக்கிறேன். எவ்வளவு அரித்தாலும் என் சித்தப்பா பையன் வெளியில் சுற்ற மறுக்கிறான்.  ப்ளஸ் 2 பாடம் நெறைய இருக்காம் படிக்கிறதுக்கு. ரொம்ப கட்டாயப் படுத்தினா சித்தி கோவிச்சுப்பாங்களோ என்னவோ.

    அரைகுறை ஹிந்தியில் பக்கத்து வீட்டு பப்லுவை ப்ரெண்ட் புடிச்சாச்சு. முதலில் நான் ஊரச் சுத்திப்பாக்கணும்னு சொன்னவுடனே சிரிச்சான் அப்புறம் நாளைக்கு காலையில சைக்கிள் எடுத்துட்டு சுத்தலாம்னு சொல்லியிருக்கான். சின்ன ஊர் போல.

    காலையில ஊர்சுத்தக் கிளம்பும்போது சித்தி கையில டிபன் பாக்ஸ் தண்ணி பாட்டில் மறக்காம எடுத்துட்டுப் போடா. இது உங்க ஊர் இல்ல.னு சொன்னதோட அர்த்தம் இப்பதான் புரிஞ்சுது. ராஜஸ்தான் உச்சி வெயில் மண்டய பதம் பாத்துக்கிட்டுருக்கு. பப்லு என்னவோ பையா இந்த் ஊர்ல பாழடைஞ்ச கோட்டைகள் நிறைய பக்கத்துல இருக்கு முதல்லஅதப் பாக்கலாம் அப்பறமா உங்களுக்கு மூட்இருந்தா ஊருக்கு வெளிய இருக்கற பெரிய கோட்டைக்குப் போகலாம் அப்டின்னு சொல்றான்.

    என்னவோ தெரியல மக்கள் நடமாட்டம் அதிகமா இல்ல. ரோட்ல நடந்து போற பாவடை சட்டை பெண்களும் தலை வழியா போட்டிருக்கிற துப்பட்டாவால முகத்த மூடிக்கிட்டு நடக்கறாங்க. ஆரஞ்சு பச்சை சிவப்புனு கலர்தான் தெரியுது முகமே தெரிய மாட்டேங்குது. இங்கயெல்லாம் பெண்களுக்கு நகையோட அவசியமே இல்ல அப்டிதானே பப்லு. என் கேள்விக்கு மீண்டும் அவன் சிரிப்புதான் பதில்.

    ஆமாங்கறானா இல்லைங்கறானா யோசித்துக்கொண்டே வந்ததில் ஒரு கோட்டையை அடைந்து விட்டோம். அங்கிருந்த அனுமார் கோவில்ல ஏதோ பூசையாம். போய்ப் பாத்துட்டு கோட்டைக்குப் போகலாம்னு அவன் சொல்லவே சைக்கிளை நிறுத்திவிட்டு மலைக்குன்றில் ஏற ஆரம்பித்தோம்.

    புடைக்கிற வெயிலிலும் நிறைய மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். அங்கேயும் பல வண்ணத் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி பெண்களும், அதேபோல் பல வண்ணத் தலைப்பாகை அணிந்த ஆண்களும்.

    மீண்டும் என் மனதில் நகைபற்றிய அதே கேள்வி. கேட்டும் விட்டேன். என்னைப் பொருட்படுத்தாது புவாஸா ஹுகும் என்று அழைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் பின்னால் ஓடுகிறான் பப்லு.

    அவள் நின்றவுடன் என்னை அழைத்து இவள் என் அத்தை ஜமீன் குடும்பம் என அறிமுகப்படுத்தியவுடன் அந்தப் பெண் தன் துப்பட்டாவை விலக்கி எனக்கு கமாகனி என ராஜஸ்தானிய மொழியில் வணக்கம் சொல்கிறாள்.

    என் அம்மாவின் வயது அந்த அம்மாளுக்கு. என்ன அழகாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் பெரிய சிவப்பு நிறப் பொட்டு. காதிலும் மூக்கிலும் வெள்ளைக்கல் ஜொலிக்கிறது. கழுத்தோடு ஒட்டி பெரிய சைஸ் நெக்லஸ் போன்ற அணிகலன் கைக்கு நான்குவீதம் வளையல்கள். எல்லாம் பழைய காலத்து நகை போல இருக்கு. பரம்பரை நகையோ என்னவோ.

    பப்லு ஏதோ கேட்க அவள்என்னைப் பார்த்து இருபதுதோலா நகை போட்டிருக்கிறேன் என தெளிவான ஹிந்தியில் கூறுகிறாள்.

    ஓ நேத்தைக்குத்தான்சித்தி சொல்லிக்கொண்டிருந்தாள் இங்கயெல்லாம் பவுன் கிடையாது. தோலானுதான் சொல்லுவாங்க. நம்ம ஊர்ல 1 பவுன் எப்டி எட்டு கிராமோ அதுபோல இங்க ஒரு தோலா பத்துகிராம் அப்டின்னா இந்த அம்மா இருநூறு கிராம் அதாவது இருபத்தைந்துபவுன் நகை போட்டுக்கொண்டிருக்காங்க. என்ன ஆச்சரியம் வெளியில எதுவுமே தெரியாம துப்பட்டாவால மறைச்சு மூடிக்கிறாங்க.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த அம்மாள் எங்களை அனுமார் தரிசனம் முடிந்தபின் கீழேயுள்ள பண்டாருக்கு சாப்பிட வருமாறு அழைக்கிறாள். பப்லு ரொம்ப வற்புறுத்தியதால்அங்க போனோம். பூரி, கிழங்கு, கேசரி, பஞ்சாமிர்தம் எனப்படும் தயிர்ப் பிரசாதம் எல்லாம் சாப்பிட்டாச்சு.  இன்னிக்கு அவங்களோட கல்யாண நாளாம். வருசா வருசம் அவங்க வயலில வேலை செய்யற எல்லாரையும் கூப்பிட்டு இந்த மாதிரி அனுமார் கோவிலில் பூசை செஞ்சுசாப்பாடு போடுவாங்களாம்.

    இந்தத் தடவ நானும் பப்லுவும் கலந்துக்கிட்டதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோசமாம். இப்ப என்னய அந்த மக்கள் முன்ன நாலு நல்ல வார்த்த பேசச் சொல்றான் பப்லு. நான்யோசிச்சேன். என்ன சொல்லலாம். ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்‘ ங்கறபழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.

    பக்கத்துல இருந்த குளத்தக் காட்டி இதுலேந்து கொஞ்சம் தண்ணிய நாம எடுத்துட்டுப் போகறதுனால  மொத்த தண்ணியும் வத்திடப் போறதில்ல. அதுமாதிரிதான் நம்மகிட்ட  இருக்கற செல்வத்த தேவையானவங்களுக்குக் கொடுத்தா அது ஒரு நாளும் குறையாது பெருகத்தான் செய்யும். தருமத்துல சிறந்தது அன்னதானம். இப்ப இந்த ஜமீன்தார் குடும்பம் உங்க எல்லாருக்கும் நல்லா சாப்பாடு போட்டு தேவையானதச் செஞ்சிட்டுவரதால நீங்களும் சந்தோசமா அவரோட வயல்ல உழைப்பீங்க. மகசூலும் பெருகும்.

    என்ன புரிஞ்சுதோ தெரியல எல்லாரும் கையத் தட்டுகின்றனர். ஒரு பழமொழிய ராஜஸ்தான் மண்ணில் சொன்ன பெருமையோட நானும் பப்லுவுடன் கிளம்பினேன்.

    பாடல் 30

    களமர் பலரானும் கள்ளம் படினும்
    வளமிக்கார் செல்வம் வருந்தா; – விளைநெல்
    அரிநீர் அணைதிறக்கும் ஊர! ‘அறுமோ
    நரிநக்கிற்(று) என்று கடல்’.

    பழமொழி:-‘அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்’

    ஏன் ஆத்தா. வெளைச்சல் எல்லாம் எப்டி இருக்கு. கேட்டுக்கொண்டே திண்ணையில் அமர்கிறேன்.

    எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு. உன்னய மாதிரி படிச்ச பயலுவதான் இத்தனவருசத்துக்குப் பொறவு விவசாயம் பண்ணுதேம்னு வந்து நாட்டாம பண்ணிக்கிட்டுத் திரியுதான்.

    என் ஆத்தா பாம்பட ஆச்சிக்கு பொடிவச்சுப் பேசுவதற்குக் கேக்கவா வேணும். எதையும் நேரடியாச் சொல்லமாட்டா. புரியலைன்னா வளச்சி வளச்சி நாலுமட்டம் கேளு. சொல்லுதேன் என்பாள். புதிய மனிதர்களுக்குச் சங்கடம்தான்.

    அரசாங்க வேலை பார்த்து ரிடையார்ட் ஆகிவிட்ட நான் கிராமத்தில் குடியேரலாமா என்ற எண்ணத்துடன் நிலைமையைப் பரிசீலிக்க வந்திருக்கிறேன். முன்ன மாதிரி இந்த ஆத்தாகிட்ட பேசி வார்த்தய வாங்கற அளவு பொறும இல்ல. பேசாம நம்ம கண்ணபிரானக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்.

    முடிவுடன் அவன்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். அவனும் ஆறு மாதம் முன் இங்கு வந்து குடியேறினான். வங்கியில் வேலைபார்த்து இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிச்சுட்டான். கடைசி காலத்த இங்க கழிக்கலாம்னு வந்திருக்கான்.

    அவன் வீட்டை அடைந்தவுடன் நோட்டம் விட்டேன். பழைய வீட்டை இடித்து கட்டமைப்பை மாற்றியிருக்கிறான். வீட்டின் வாசல்திண்ணை அழிக்கம்பிச்சிறைக்குள் அடைக்கப்பட்டு மேலே பேன் தொங்குகிறது. இனி தெருவில் போவோர் வருவோர் உட்கார முடியாது. உள்ளே சிமெண்ட் தரை மாற்றப்பட்டு வெள்ளை டைல்ஸ். இடையிடையே கோல ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. வீட்டினுள் ஏ.சி,  இண்டெர்நெட் எல்லா வசதியும் செஞ்சிருக்கான். சுவற்றில் மாற்றப்பட்ட பெரிய சைஸ்டி.வி. மொத்தத்தில் கிராமத்து வெளிப்புறமும், நகரத்து உட்புறமும் கொண்ட வீடாக மாறியிருந்தது அவன் வீடு.

    யோசித்துப்பார்த்தேன். முன்ன உங்க வீட்டு வாசல்ல ஆடு கட்டி வச்சிருப்பாங்க. பின்பக்கத்துக் கொட்டில்ல மாடு கட்டி வச்சிருப்பாங்கயில்ல. ஒருதடவ கோழிக்கூடய எடுத்துவிட்டு எல்லாக் கோழியும் சிதறி ஓடிருச்சுன்னு உங்கம்மாகிட்ட எப்டி திட்டுவாங்கினோம். பழைய விசயத்தை ஞாபகப் படுத்தினேன். அவனுக்கு அதில் நாட்டமில்லைஎனப் புரிந்து கொண்டவுடன் நேரடியா விசயத்துக்கு வந்தேன்.

    நானும் இங்க குடிவந்துரலாம்னு இருக்கேன். பையன் அவன்பாட்டு பாம்பேல வேலபாத்துட்டு இருப்பான்.உன்னய மாதிரியே வீட்ட கொஞ்சம்மாத்திக் கட்டிக்கிட்டு….

    உங்கம்மா அதுக்கெல்லாம் ஒத்துக்காது. போனவாரம்தான் அறுவட சமயத்துல என்னய உக்காத்திவச்சு அறிவுரை மழை பொழிஞ்சுச்சு. அப்டி இருக்கணும் இப்டி இருக்கணும். பகட்டெல்லாம் கூடாது. உங்க ஆத்தா இருந்து சொன்னதா நெனச்சிக்கோன்னு.

    இவன் என்ன சொல்ல வறான்னு புரியல.ஆனா என் அம்மாமேல கடுப்புல இருக்கான்னு புரியுது. நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவனே தொடர்கிறான்.

    அறுவடை முடிஞ்சு போர் அடிச்சு நெல்லத் தூர்வாரி முடிச்சவொடனே ரெண்டு வீட்டு நெல்லயும் குமிச்சு வச்சிருந்தோம். உங்கம்மா என்னயக் காவலுக்கு உக்காத்தி வச்சிட்டு வீடு வரைக்கும் போயிட்டாங்க.

    அப்ப நெல்ல மூட்ட கட்டி எடுத்துட்டு வரதுக்காக வந்த கூலியாட்கள் அளக்கும்போதே ஆளுக்கு கொஞ்சம் நெல்ல புடவை முந்தானையில முடிஞ்சிக்கிட்டாங்க. நான் அவங்களச் சத்தம்போட்டு வேலை முடிஞ்சவொடனே கூலி தருவோம். இந்த மாதிரி திருடற வேல வச்சிக்காதீங்கனு சத்தம்போட்டேன்.  அப்ப வந்த உங்கம்மா காக்கா தண்ணிகுடிச்சு குளத்துத் தண்ணி வத்திடவா போகுது.

    எடுத்துக்கட்டும் உடு. இதை எடுத்துட்டுப் போயி அதுங்க என்ன கோட்டயா கட்டிடப் போவுது. வெலைக்குப் போட்டு நெல்லிக்கா, மாங்கா என்னமும் வாங்கித் தின்னும் அவ்வளவுதான் சொல்லி அறிவுரைய ஆரம்பிச்சிட்டாங்க.

    என் மனதிற்குள் முன்பு படித்த பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. ‘அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்‘ அம்மா சொன்னதுகூட இந்த பழமொழி மாதிரிதான் நரி நக்கினதால கடல்தண்ணி வத்தாதுங்கறது அதோட பொருள். ஆனா அத இப்ப சொல்லக்கூடாது ஏற்கனவே கோபமா இருக்கற என் நண்பனோட கோபம் இன்னும் அதிகமாயிடும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 29

    பழகத் தெரிய வேணும் – 29

    நிர்மலா ராகவன்

    (அன்பா, அதிகாரமா?)

    தலைவர்கள் எவ்வழியோ, அவ்வழியில்தான் பிறரும் நடக்க முனைகிறார்கள்.

    ஜனநாயகமாக ஆரம்பித்த அரசியல் கட்சிகள்கூட மெல்ல மெல்ல, தலைவர்கர் ஒரு சிலரின் கைகளுக்குப் போய்விடுகிறது. அவர்களுடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலையில், பெயரளவில்தான் மக்களுக்கான அரசியல்.

    அதிகாரத்தால் எது வேண்டுமானால் செய்யலாம் என்பது நாட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் அலுவலகத்திலும்கூட, தலைவர்கர் பலருடைய கொள்கை.

    அலுவலகத்தில் சர்வாதிகாரிகள்

    ‘பெண்தானே!’ என்று, வீட்டில் இரண்டாந்தர அங்கமாக நடத்தப்படுபவர்களே பெரும்பாலும் பிறரைக் கேவலமாக நடத்த முற்படுகிறார்கள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் அமர்ந்துவிட்டதால், பிறரை மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றிப் போகிறது அவர்களுக்கு.

    கதை

    குடும்ப வாழ்வில் தோல்வி கண்டவள் அந்த கல்வி அதிகாரி. அவளுக்குப் பிள்ளைப்பேறு இல்லாததைச் சாக்காக வைத்து, இரண்டாவது, பின்னர் மூன்றாவது மணம் புரிந்துகொண்டிருந்தார் அவளுடைய கணவர். அவர்களுடைய மதமும் அதை ஆதரித்ததால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

    ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியையாக ஆனபோது, குடும்ப வாழ்வில் தனக்குக் கிடைக்காத மதிப்பையும் மரியாதையையும் இங்காவது பெறவேண்டும் என்று நிச்சயித்தவள்போல் நடந்துகொண்டாள்.

    அண்மையில், ‘ராட்சசி’ படத்தில் வந்ததுபோல், ஓர் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது, உள்ளே நுழைந்து, அவரைத் தரக் குறைவாகப் பேசுவாள்.

    பள்ளி முழுவதும் கேட்கும்படி, கடமையிலிருந்து வழுவிய ஆசிரியைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒலிபெருக்கியில் அலறுவாள். அல்லது, வாராந்திரப் பொதுக்கூட்டத்தில் குற்றம் சாட்டுவாள்.

    ‘பள்ளிக்கூடத்தில் கட்டொழுங்கை நிலைநாட்டிவிட்டேன்!’ என்று இத்தகைய தலைமை ஆசிரியைகள் மார்தட்டிக்கொள்ளலாம்.

    ஆனால், மாணவ மாணவிகள் ஆசான்கள் மீது வைத்திருக்கும் நல்லெண்ணம் அகன்றுவிடுமே!

    தன்கீழ் வேலை பார்க்கிறவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கிவிடுவது சிறந்த தலைமைத்துவத்தின் லட்சணமா?

    “அது எப்படி, வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எல்லாரும் இப்படிப் பிரகாசமாக ஆகிவிடுகிறீர்கள்?” என்று என்னுடன் வேலை பார்த்த ஒருவர் கேட்டார் (அவர் யாருக்கும் அடங்கியதில்லை).

    `எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலிடத்தில் இருப்பவர் என்ன சொன்னாலும், செய்தாலும் பணிந்து போகவேண்டிய நிலையில் இருக்கிறேன்!’ என்ற உறுத்தல் ஒருவரது தன்னம்பிக்கையைப் பாதிக்காதா?

    அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டால் கசப்புதான் மிஞ்சும். அப்புறம் எப்படி உற்சாகமாக வளையவர முடியும்?

    அதிகாரம் செலுத்துபவர்களின் உத்தி

    “ஒரு பெண்ணை அழவைத்தால், அதன்பின் அவளை அடக்குவது எளிது!” சிறிதும் கூச்சமின்றி, தான் கடைப்பிடிக்கும் வழியைப் பெருமையுடன் என்னுடன் பகிர்ந்துகொண்டாள் நபீசா. உதவித் தலைமை ஆசிரியை என்பதால் பள்ளி  அவள் கட்டுப்பாட்டில் இருந்தது.

    ஒரு மாணவி, காதில் இரு துளைகள் போட்டிருந்த குற்றத்திற்காக, ஆசிரியர்களின் பொது அறைக்கு வரவழைக்கப்பட்டாள்.

    “நம் மதத்தின்படி, இது தவறு,” என்ற வசவு பெற்றாள்.

    “அம்மா ஒன்றும் சொல்லவில்லையே!” என்றாள் அப்பெண், திமிராக.

    அவ்வளவுதான்! ஆசிரியைகள் பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, அவளைச் சரமாரியாகத் திட்ட, தாக்குப் பிடிக்க முடியாது, அப்பெண் அழத் தொடங்கினாள்.

    பதின்ம வயது மாணவிகள் புருவத்தைச் சீர்ப்படுத்திக்கொண்டு வந்தாலும் இதே கதிதான்.

    நானும் கட்டொழுங்கு ஆசிரியையாக இருந்ததால், ஒரு பெண்ணிடம் மெல்ல, “ஆசிரியைகளே இப்படித்தான் அலங்கரித்துக்கொள்கிறோம். படிப்பு முடிந்ததும், உன் விருப்பப்படி இரேன். எதற்காக வீணாகத் தண்டனைக்கு ஆளாகிறாய்?” என்று கூற, அவள் முகத்தில் சிரிப்பு.

    இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு மாணவியின் காதிலுள்ள துளைகளோ, திருத்தப்பட்ட புருவமோ பிரச்சினை இல்லை. அதிகாரம் ஒன்றே பிரதானமாகிவிடுகிறது.

    தம்மைப் பார்த்துப் பிறர் அஞ்சுவதைப் பெருமையாக நினைப்பவர்கள் இவர்கள். பயம் மதிப்பாகாது என்பதைப் புரிந்துகொள்ளாத அறிவிலிகள்!

    “ஒரு பொய்யைப் பெரிதாக்கு. ஆனால், எளிமையாக வைத்திரு. மக்கள் நம்பிவிடுவார்கள்!” என்ற ஹிட்லரின் வாக்கைக் கடைப்பிடிப்பவர்கள் அதிகார வர்க்கத்தினர்.

    ‘மதம்’ என்ற ஒரு வார்த்தையால் மிரட்டியே பிறரை அடக்கிவிடுவார்கள். (மதத்தின்வழி கடவுளை அடைய நல்ல மனமும் நடத்தையும் மட்டும் போதாதா?)

    இன்னொரு சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலின், “பிறரை யோசிக்க விடக்கூடாது”; “பிரச்னை செய்கிறார்களா? அவர்களைக் கொன்றுவிட்டால், பிரச்னை மறைந்துவிடும்,” என்றெல்லாம் தன் பங்கிற்கு `அறிவுரை’ வழங்கியிருக்கிறார்.

    கொல்ல முடியாவிட்டாலும், ஒருவர் அகாரணமாகத் தண்டிக்கப்படுவதைப் பார்த்து, பிறராவது ஒழுங்காக இருப்பார்கள் என்று கணக்குப் போடுகிற வர்க்கம் இவர்கள்.

    இப்படிப்பட்டவர்களைக் குடும்பங்களிலும் பார்க்கலாம்.

    கதை

    இரண்டு வயதுக்கு மேற்பட்ட தன் மகன்கள் பின்னாலேயே நடப்பார் கிட்டன்.

    எப்படித் தெரியுமா?

    கையில் பிரம்புடன்.

    குழந்தைகள் பயத்தால் மிரள.

    ‘ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை ஊட்டுகிறேன்,’ என்ற சாக்கை வைத்து, தனக்குத்தானே அதிகாரத்தை அளித்துக்கொள்ளும் வழி அது.

    குழந்தைகளுக்கு வயது வந்ததும், சிறுபிராயத்தில் அடக்கி வைத்திருந்த பயம் ஆத்திரமாக மாற, அது மனைவியிடமும், அத்துடன் பிற பெண்களிடமோ, குழந்தைகளிடமோ திரும்பும்.

    இத்தகைய தந்தையுடன் பேச்சுவார்த்தை இல்லாது, அவருடைய இறுதிக் காலத்தில் அவரை ஒதுக்கி வைத்த மகன்களை நான் அறிவேன்.

    ‘நான் என் மகனை எவ்வளவு கண்டிப்பாக வளர்த்தேன்!’ என்று வருந்துவார் தந்தை.

    கதை

    அப்படி ஒரு தந்தைக்குப் பிறந்தவன் செல்வா.

    அவனே அப்பாவான பிறகு, அவனையும் அறியாமல், தன்னைத் தந்தை நடத்தியது போலவே மூன்றே வயதாகியிருந்த தன் குழந்தையையும் நடத்த முற்பட்டான்.

    ‘பிரம்பால் அடிக்காத குழந்தை எப்படி உருப்படும்?’ என்பது அவனுடைய தர்க்கம்.

    அவனுடைய கோபம் தந்தையின்மேல் மட்டுமில்லை, அவரை எதிர்க்க முடியாத தன்மேலேயும்தான் என்று, படித்த மனைவிக்குப் புரிந்தது.

    “நீங்கள் உங்கள் அப்பாவுடன் பேசுவதை நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டன. உங்கள் மகனும் அப்படி உங்களை நடத்த வேண்டுமா?” என்று வாதாடினாள். `அவனுக்கு உங்கள்மேல் மரியாதை போய்விடும்,” என்று மேலும் எச்சரித்தாள்.

    வீம்புடன், “அவன் முன்னுக்கு வந்தால் போதும். என்னை மதிக்காவிட்டால் போகிறான்,” என்றான் செல்வா.

    அவன் சொந்த வியாபாரம் ஆரம்பித்த புதிது. தான் எதிர்பார்த்தபடி உடனே கொழிக்க முடியவில்லையே என்ற ஆத்திரம் அப்பாவிக் குழந்தைமேல் திரும்பியது.

    தந்தைக்கு எதிராகக் குழந்தையைப் பரிந்தால், அவனுக்கு அப்பாவிடமிருக்கும் மரியாதை போய்விடாது என்பது புரிந்து, அவன் திட்ட ஆரம்பித்ததுமே, குழந்தையை அப்பால் தூக்கிக்கொண்டு போய்விடுவாள் மனைவி.

    பன்னிரண்டு வயதில் சற்று விவரம் புரிந்ததும், “அப்பாவுக்கு ஏம்மா என்னைப் பிடிக்கல்லே?” என்று கேட்டான் மகன்.

    அப்பாவின் குடும்பப் பின்னணியை அம்மா எடுத்துச் சொல்ல, “பாவம்! அப்பாவுக்குக் கொஞ்சம் சிகிச்சை கொடுக்கலாம்,” என்று சொல்லும் அளவுக்கு அவனுடைய விவேகம் வளர்ந்திருந்தது.

    அன்புடன் வளர்க்கப்பட்டவர்களுக்குத்தானே வெளியுலகம் பந்தாடும்போது அதை எதிர்க்கும் துணிவும் அறிவும் இருக்கும்?

    இது புரியாது, ‘இது ரொம்ப கெட்ட உலகம். அதைச் சமாளிக்க இவனுக்குத் தெரியவேண்டாமா?’ என்று தங்களுடைய அதிகாரப் போக்கிற்கு நியாயம் கற்பிக்கிறவர்களின் அறியாமையை என்னவென்று சொல்ல!

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-36

    தி. இரா. மீனா

    சித்தராமன் தொடர்ச்சி

    1. “நீரிலுள்ள மீன் தன் நாசியிடம்
    நீரைச் சேரவிடாத விதத்தைப் பாரய்யா
    சரணன்  உலகத்தினூடே இருப்பினும்
    உலகத்தைத் தன்னருகே விடமாட்டான் பாரய்யா.
    மீனுக்கு அந்த அறிவையும்
    சரணனுக்கு இந்த அறிவையும் கொடுத்தனையே
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    2. “எனக்குத் தெரியும் எனக்குத் தெரியுமெனச்
    சொன்ன பலரும் அகந்தையில் சென்றனர்.
    எனக்குத் தெரியவில்லை,தெரியவில்லையெனச்
    சொன்ன பலரும் மறதியில் சென்றனர்.
    தெரிந்தோம் என்பதும் தெரியவில்லையென்பதும்
    ஞானத்தின் முட்டுக்கட்டை.
    தெரிந்தால் அறிவு, மறந்தால் அறிவீனம்
    தெரிந்தும் தெரியாதவன் தெளிந்த
    நீரின் கமல கபிலசித்த மல்லிகாஜூனன் தானே”

    3. “அத்வைதம் பேசமுடியும் கோடி தடவைகள்.
    தூயபக்தி நன்னடத்தையில் உறுதியோடு
    ஒரு தடவை ஒழுகமுடியுமா?
    சொற்படி நடந்து , நடப்பது போல் சொல்கின்ற
    தூயபக்தி நன்னடத்தையில் உயர்ந்தோர்தம்
    பதம் வணங்கி வாழ வைப்பாய் ஐயனே,
    கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    4. “எண்ணம் விரிய இலிங்கமென்றானது
    எண்ணம் பிரிய கல்லென்றானது
    எண்ணம் ஒன்றாதபோது யாதொன்றும் ஆகாது
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    5.  “களிமண் ஒன்று சட்டிகள் பன்னூறு
    மனம் ஒன்று செயல்கள் பன்னூறு
    தந்தை ஒருவன் சந்ததிகள் பன்னூறு
    கபிலசித்த மல்லிகார்ஜூனனுள் உலகங்கள் பன்னூறு”

    6.  “தாங்கள் வேதப்பிரியனல்லன் ஐயனே;
    தாங்கள் சாத்திரப் பிரியனல்லன் ஐயனே ;
    தாங்கள் நாதப் பிரியனல்லன் ஐயனே ;
    தாங்கள் புகழ்ச்சிப் பிரியனல்லன் ஐயனே;
    தாங்கள் உத்திப் பிரியனல்லன் ஐயனே;
    பக்திப் பிரியனென நம்பினேன்
    காத்திடுவாய் கபிலசித்தி மல்லிகார்ஜூனனே“

    7. “பெண் அழிந்தபின் மண்ணின் விருப்பமேன்?
    மண் அழிந்தபின் பொன்னின் விருப்பமேன்?
    முக்கண்ணன் ஆனபின் மூன்றின் விருப்பமேன்?
    கபிலசித்த மல்லிகார்ஜூனனே“

    சித்தாந்தி வீரசங்கய்யா

    பெயருக்கேற்றாற் போல சித்தாந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர். ’கோளாகார விஸ்வ விரகிதலிங்க ’இவரது முத்திரையாகும்.

    “நீராலான முத்தை அமைதியான நீரில் போட
    அந்நாளின் நீர் அதுவென முத்து கெட்டியாகுமா?
    அல்லது மீண்டும் அது நீராகுமா?
    இவ்விரண்டின் பேதமறிந்தால்,
    துவைதம், அத்துவைதம் அறிந்தவரென்பேன்.
    இதுவன்றி வெற்றி தோல்விக்குச் சமர் புரியும்
    கல் மனத்தவருக்கு எங்குள்ளதோ
    கோளாகார விஸ்வவிரகித இலிங்கமும் அதன் சாத்தியமும்”

    சுங்கத பங்கண்ணா

    சுங்கம் வசூலிப்பது இவரது காயகம். ’பங்கேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    1. “உணவு மீது முனைப்பு
    உறக்கம் மீது முனைப்பு
    பெண்மீது முனைப்பிருப்பது போல
    இலிங்கம் மீதுமிருக்க வேண்டும்
    சிவலிங்கத்தில் கவர்ச்சி கொண்டால்
    தன்னையே கொடுப்பான் சென்ன பங்கநாத தேவன்”

    2.  “உடல் போர்க்களமானது
    புலன்களின் கூட்டம் சிதைந்தது
    உடலரசன் தடுமாறினான்
    சுயமெனும் ஆற்றலின் பேரரசன் வென்றான்
    பங்கேவரனின் அன்பினால்“

    சூளே சங்கவ்வா

    ’நிர்வச்சேஸ்வரன்’ இவரது முத்திரையாகும்.

    “ஒருவனுக்கு நேரமொதுக்கி
    வேறொருவனோடு கூடினால்
    நிர்வாணமாக்கி அடிப்பாரையா
    விரதக்கேடுடையவனோடு சேர்ந்தால்
    காய்ச்சிய கம்பியால் கை செவி மூக்கறுப்பாரையா
    இதையறிந்து விரும்பேன், விரும்பேன்
    உம்மீதாணை நிர்வச்சேஸ்வரனே.”

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 92 (வழிவரும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வழிவரும்  இளைப்பி  னோடும்  வருத்திய  பசியி  னாலே
    அழிவுறும்  ஐயன்  என்னும்  அன்பினிற்  பொலிந்து  சென்று
    குழிநிரம்  பாத  புன்செய்க்  குறும்பயிர்  தடவிப்  பாசப்
    பழிமுதல்  பறிப்பார் போலப்  பறித்து அவை கறிக்கு  நல்க

    இளையான்குடி மாறனார், வந்தஅடியாரின் ஈரமேனியைத்துடைத்து வேறு ஆடையளித்து ‘அடியார்மிகவும்பசியோடு இருக்கிறார்’ என்றபோது, ‘நம் வறுமை நீங்க  இன்று பகலில்   விதைத்த முளைநெல்லை வயலிலிருந்து வாரிக்கொண்டு வந்தால் என்னால் ஆனதைச் செய்வேன்’ என்றார். வயலில் இருந்து வந்த ஈரநெல்லை வறுத்து, இடித்து அரிசியாக்கி உணவு  சமைக்க அடுப்பில் எரிதுரும்பு இல்லைஎன்றார் உடனே நாயனார்   தம்வீட்டின் உட்கூரை மூங்கில் வரிச்சுக்களைப் பிடுங்கிப் போட்டார். அடுப்பு மூட்டிநெல்லை வறுத்து  அரிசியாக்கிச்   சோறாக்கினார். அடுத்து ‘கறிக்கு இனிஎன்னசெய்வது?’ என்றுகேட்டார். அப்போது நாயனார் பின்பக்கம் புன்செய்ப் பயிராக முளைத்திருந்த  கீரையைப்  பறித்து  நல்கினார்

    இப்பாடலின் பொருள்: “வழி வந்ததாலுளதாகும் இளைப்பினுடனே அதன் முன்னரே வருத்திய பசியினாலே எமது ஐயன் வருந்தும்“ என்கின்ற அன்பினாற் கிளர்ந்து சென்று தமது கொல்லையிலே, முளைக்கவைத்த குழிகளினின்றும் மேலே கிளம்பும் பருவம் உறாத சிறிய இலைக்கறிப் பயிர்களைக் கையினாற்றடவிப் பாசப் பழிமுதலை அறவே பறிப்பவர்போல அவற்றை வேரோடும் பிடுங்கி வந்து கறிக்காக (நாயனார்) மனைவியார் கையிற் கொடுக்க, இப்பாடலில்  வழிவரும் இளைப்பினோடும் வருத்திய பசி என்பது – வழி வருதலாலுள தாகிய இளைப்பு – அயர்ச்சி. வழிவருதலென்னும் புறத்து நிகழ்ச்சியாகிய அயர்ச்சியுடன் உள்ளிருந்து வருத்திய பசியும் என்க. எனவே உள்ளும் புறமுமாக இருவழியானும் அடியவர் வருந்தினார் என்று அவர்பாற் சென்ற அன்பு காரணமாக நாயனார் தம்  கவலைகொண்ட உள்ளத்தைக்  குறித்தது.

    அடுத்து அன்பினிற் பொலிந்து சென்று  என்ற தொடர்,  அன்பு நிறைதலால் மிகக் கிளர்ச்சியுடன் விரைந்துபோய். இது நாயனார் பயிர்களைப் பறிப்பதற்குச் சென்ற விரைவினையும், அது போழ்து அவரது மன நிலையையும் குறித்தது. ஒவ்வோர் கணமும் அடியவர் பசி அதிகரித்தலைப் பொறுத்துக் கொள்ளாமல்  இவ்விருவரும் செய்த செயல்களின் தன்மை குறித்தபடியாம்.

    மேலும்,  குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் – புன்செய்ப் பயிர் – கீரை முதலிய இலைக்கறிப் பயிர். இவை புன்செய் நிலத்தில் பயிரிடப்பெறுவன. குழிநிரம்பாத – பயிர்கள் இடப்பெற்ற குழிகளின் அளவுக்கு மேற்பட்ட உயரம் மேலே வளர்ந்து வராத. புன்செய் – வீட்டுக் கொல்லையாக நாயனார் பயன்படுத்திய புன்செய் நிலம் நாயனார் முளை வாரிவந்தது நெல் விளையும் நன்செய் நிலமென்றும்,கறிக்காகும் குறும்பயிர் பறித்து வந்தது அவரது மனையை அடுத்துக் கொல்லைப் பயிர் செய்துவந்த புன்செய் நிலமென்றும் அறியலாம். இப்போது பரமக் குடியை அடுத்த இளையான் குடி என்னும் இவ்வூரில் வீட்டு மனைகளின் அடுத்து இங்குக் குறித்த புன்செய் மேடு என்று வழங்கும் ஒரு புன்செய் இடமும், அதனை அடுத்து இது குறித்த முளைவாரி அமுதளித்த ‘’முளைவாரிக்குட்டை’’ எனவழங்கும் நன்செய் நிலமும் இன்னுங் காணப்பெறுகின்றன.

    இவ்விரண்டு நிலங்களினும் நாயனார் நென்முளையும், பயிரும் மேல் விளையாமல் வாரியும் பறித்ததும் விட்டபடியால் இன்றைக்கும் ஒன்றும் விளையாமலிருந்து வருகின்றன என்பது அவ்வூரார் சொல்லக்  கேட்ட செய்தியாம். இவற்றை வேலியிட்டுப் பாதுகாத்து உலகிற்கு அறிவிக்குமாறு கல்வெட்டு முதலிய, நினைவின் அடையாளங்கள் பொறித்துக் காவல்செய்து போற்றுதல் சைவர்களின் முதற்கடமைகளில் ஒன்றாம்.

    அடுத்து தடவி   என்ற  சொல் , குழி நிரம்பாத குற்றளவுடைமையானும், நள்ளிருட் காலமாதலானும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று என்க. பாசப் பழிமுதல் பறிப்பார்போல நாயனார் பறித்தவை குறும்பயிர் அன்று; அவை அவரது பாசத்தின் பழிமுதல் பறித்தலே போல நின்றன என்றார். பாசப் பழிமுதல் – ஆணவமாகிய சகல மலத்திற்கும் வேராகி நிற்கும் மூலமலம் என்பர். “யாக்கை தன்பரிசும் வினையிரண்டும் சாருமல மூன்றும் அற ‘’ என்பது கண்ணப்ப நாயனார் புராணம்.  பிற்காலத்துச் செல்லல் நீங்குதற்காக வித்தியிருந்த நெல் முளை வாரியதனானே வித்துமேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய கர்மங்களைக் கிழித்தலும், குறும்பயிர் வேருடன் பறித்ததனானே பிராரத்த வினைகளை அழித்தலும், மனையின் அலக்குக்களை அறுத்து மேலும் புவன போகங்களை இல்லாமல் வீட்டியதனாலே சஞ்சித கர்மங்களை அழித்தலும் குறிக்கப்பெற்றன என்று இங்கு விசேடப்பொருள் காண்பாருமுண்டு. இவை ஆணவம் முதலான  மும்மலங்களின் அழிவு குறித்தன என்பாருமுண்டு. இவையெல்லாம்  சிவாநுபவப்  பொருள்;

    முதல் – மூலவேர்.  பறிப்பார்போல – இங்கு போல என்ற உவமவுருபு பயன்பற்றித் தோன்றிச் சிறப்பு நிலைக்களமாயின உவமம் என்பர். உவமிக்கப்பட்ட பொருளும் உவமையும் பண்பினால் ஒன்றேயாயின ஒற்றுமை நிலைகுறித்து நின்ற அழகும் காண்க.  குறும்பயிர்கள் வேரோடு பறிக்கப் பெற்றபடியால் பாசப் பழிமுதல் என்றார்

    நயம் : இப்பாடலில்  சைவ நன்மக்கள் தம்  முன்வினை, கடந்த பிறப்பின்  வினை, இப்பிறவி வினை  என்ற  சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் ஆகிய  வினைகளை  அறுத்த பின்னரே இறையருள் பெறலாம் . இவற்றை கூரை வரிச்சு , குறும்பயிர் ஆகிய  அடையாளங்களால்  உணர்த்திய  சேக்கிழார் பெருமானின்  பாடல் நயம்  எண்ணியெண்ணி  இன்புறத்தக்கது!

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 27

    உறுகண் பலவும் உணராமை கந்தாத்
    தறுகண்மை ஆகாதாம் பேதை, – ‘தறுகண்
    பொறிப்பட்ட வாறல்லால், பூணாது‘ என் றெண்ணி,
    ‘
    அறிவச்சம் ஆற்றப் பெரிது‘.

    பழமொழி –  பேதை எதையும் செய்யமாட்டான்

    வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் திடீரென அவனுக்கு என்ன வந்துவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் அவன் எப்படியெல்லாம் விருத்திசெய்திருப்பான் என கோட்டை கட்டிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். ஏன் இப்படி. என்னவாக இருக்கும்.

    தீபாவளி பலகாரங்கள் எதுவும் இனிக்கவில்லை. மனம் ஒரு குரங்குதானே. அதனால்தானோ என்னவோ முன்னால் தட்டு நிறைய வீட்டில்செய்த இனிப்புகள் இருந்தும் எதையும் கையில் எடுக்க மனம் வரவில்லை.

    நண்பனின் தந்தை அவனைத் திட்டும்போதெல்லாம் எப்படி வக்காலத்து வாங்கி இருக்கிறேன். மனம் யோசனையில் ஆழ்ந்தது.

    நீ எதுக்கும் லாயிக்கில்லாதவன்டா. உக்காந்து தின்னே காலத்தக் கழிச்சிரு. உன் சோம்பேறித்தனத்த வளக்கறதுக்கு எட்டு காரணத்தச் சொல்லு. வெளியில இறங்கி உலகத்தப்பாத்ததானே பிழைக்கிற வழி தெரியும். நாலு சுவத்துக்குள்ள உக்காந்து நீயும் உங்கம்மாவும் கோட்ட கட்டிக்கிட்டே இருங்க. ஏண்டாப்பா நீ கூடவா இவனுக்கு புத்தி சொல்லக்கூடாது. ஏதோ சென்னைக்குப் போகப்போறதா கேள்விப்பட்டேனே. உண்மையா.

    ஆமா அங்கிள். நான் எங்க சித்தப்பா வீட்ல போய் இருந்துக்கிட்டு வேல தேடப்போறேன்.

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சவொடனே இவனையும் கூப்பிட்டுக்கறேன். ஒப்புக்குச் சொன்ன வார்த்தை அன்று.

    பள்ளிப்படிப்பில் தொடங்கி கும்பகோணம் கல்லூரி வரை நானும் என் நண்பன் நாகுவும் ஒண்ணாத்தான் படிச்சோம். அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். எதிலயும் ரிஸ்க் எடுக்க மாட்டான். அவங்க அம்மாவும் அந்தக் கொணத்த திசை திருப்பி பலமான கடவுள் நம்பிக்கைய விதைச்சாங்க. நாளாவட்டத்துல அது கடவுள் நம்பிக்கையா இல்லாம கடவுள் பயமா மாறிப்போச்சு. டேய் பரீட்சைக்கு முன்ன பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டுட்டு வரேன். கோபிச்சுக்கப் போறாருங்கற அளவில்.

    இதை அவன் அம்மாவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது நல்லது தம்பி நான் அவனுக்கு புத்தி சொல்றேன் என்றாள். அவள் புத்தி சொல்லி வளர்த்தவிதத்தைத் தான் நான் இப்ப பாக்கறேனே. போனவாரம் தீபாவளி அன்று அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

    கால ஓட்டத்தில் ஒருவரையொருவர் மறந்து வேலை, திருமணம் என்று வேறு வேறு திசைகளை நோக்கி பயணித்து விட்ட பின் அவரின் குரல் என் கடந்த காலத்தை மீண்டும் வரவழைத்ததுபோல்….

    தம்பி நான் உங்க நண்பர் நாகுவோட அப்பா பேசறேன். ஊர மறந்துட்டீங்க போல. இந்தப்பக்கமே வரதில்ல. முடிஞ்சப்போ குடும்பத்தோடவந்து எங்க வீட்ல தங்கிட்டுப்போங்க. உங்க நண்பரும் சந்தோஷப்படுவாரு. உங்கபையனும் என் பேரனும் சேந்து விளையாடலாம்.

    கேட்க நன்றாக இருந்தது. இதோ வந்தேவிட்டோம். என்ன ஆச்சர்யம். நாகு மட்டும் மாறவேயில்லை. ஏதோ கடை வைத்து நடத்துகிறானாம். அதைப்பெரிசாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதே ஓட்டுவீட்டில்தான் வசிக்கிறார்கள்.

    எனக்கு என்னடா குறைச்சல். சாப்பாட்டுக்கு கடை வருமானம் இருக்கு. போய்வர சைக்கிள் வாகனம் இருக்கு. ஒத்த பையன். நாம படிச்ச பள்ளிக்கூடத்திலயே அவனையும் சேத்திருக்கேன். நல்லாப் படிக்கிறான். மனைவி நச்சரிப்புதான் தாங்கமுடியல. வருமானம் பத்தாதாம். எங்கப்பாவும் அவகூட ஜால்ரா போடறார். வங்கியில கடன் வாங்கி கடையை விரிவுபடுத்துனு.

    நீயே சொல்லு. கடவுள் யாருக்கு எது கொடுக்கணும்னு விதிச்சிருக்காரோ அதுதானே கிடைக்கும்.  அதுக்குமேல ஆசப்பட்டா அவருக்குக் கோபம் வராதா. இந்த விஷயத்துல எங்கம்மா தான் சரி.  என்னய தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லச் சொல்லியிருக்காங்க. கடவுளா மனமிரங்கி கொடுத்தா கொடுக்கட்டும். இல்லன்னா விதிவிட்ட வழினு இருப்பேன். அவன் பேசப்பேச எனக்கு ஆச்சரியம்

    ‘அறிவச்சம் ஆற்றப் பெரிது’ என்னும் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. தனக்கு வந்து சேர்ந்த துன்பம் பலவற்றுக்கும் காரணம் அறியாமலேயே அது விதிப்பயன் என்றெண்ணி தீர்க்க முயற்சிக்காமலிருப்பவன் பேதையாவான். ஆம் நாகுவும் ஒரு பேதையே.

    பாடல் – 28

    சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
    பட்ட இழுக்கம் பலவானால் – பட்ட
    பொறியின் வகைய கருமம்; அதனால்,
    ‘அறிவினை ஊழே அடும்’.

    பழமொழி – ‘அறிவினை ஊழே அடும்’

    நம்ம ராஜேந்தர் சாரோட வழக்கப் பத்தி கேள்விப்பட்டயா. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குடா. எவ்வளவு பொறுப்பான வாத்தியார். ஒழுக்கத்த நம்மளுக்கு கத்துக் கொடுத்தவரே அவர் தான். என்னால அவர் அப்படிச் செஞ்சிருப்பாருன்னு நம்ப முடியல. நீங்க கண்டிப்பா ஒருநாள் ரொம்ப பேமஸ் ஆவிங்க சார்னு நான்பலமுறை சொல்லியிருக்கேன். அதுக்காக இப்படியா. சென்னையிலிருந்து வந்திருக்கும் நான் என் பால்ய நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

    பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் அரசுப்பள்ளியில் படித்த எங்களுக்கு இராஜேந்தர் சார் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியர். அவராலேயே நல்ல மதிப்பெண் பெற்று சென்னை பொறியியற்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்மட்டும் இல்லையெனில் எங்களில் பாதிபேரின் வாழ்க்கை ப்ளம்பர் மற்றும் பிட்டர் எனதான் கழிந்திருக்கும். பொறியியல் படிப்பை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

    கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் அவரைப்பற்றி வரும் செய்திகளை மற்றவர்கள் போல் கடந்துபோக என்னால் முடியவில்லை. இப்போது நல்லபணியில் இருக்கும்நான் ஏதாவது ஒருவகையில் அவருக்கு உதவ வேண்டும். அதனால் தான் என் உற்ற நண்பனிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறேன். அவன் தற்போது நாங்கள் படித்த மேல்நிலைப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறான்.

    ஆமாண்டா. நான் அந்தப் பள்ளியில ஆசிரியர்னாலும் சார எதிரில பார்க்க நேர்ந்தா இப்பவும் எழுந்து நிப்பேன். அவருக்குச் சரிசமமா உட்காற மனசு வராது. திடீர்னு அவரப் பத்தி புகார் வந்தவொடனே பள்ளிக்கூடமே ஆடிப்போயிடுச்சு.

    அவருடைய கடைசி தம்பி தன் மகன டாக்டர் ஆக்கணும்னு விருப்பப்பட்டிருக்கார்போல. அதுக்காக சார்கிட்ட உதவி கேட்டிருக்காரு. தம்பி ஊர்ப்பக்கம் விவசாயம் பாத்துக்கிட்டிருக்கறதால சார் அவர் மகனத் தன் வீட்லயே வச்சி படிக்க வச்சிருக்கார். அப்பறம் கோச்சிங் சென்டர்ல சேக்கணும்னு நெனச்சப்போதான் வினையே தொடங்கிச்சு. நம்ம பள்ளியில புதுசா ஒரு கெமிஸ்டரி சார் சேந்திருக்கார். அவர் குடும்பமே கோச்சிங்சென்டர் வச்சு நடத்தறவங்க போல. அவர நம்பி நீட் கோச்சிங்காக தன் தம்பி மகன அவரோட சென்டர்லயே சேத்து விட்டுருக்காரு. சேரும்போது பத்துபக்கத்துக்கு ஒரு விண்ணப்பம் நிரப்பச்சொல்லியிருப்பாங்க போல. அதில கீழ எழுதியிருந்தத எல்லாம் சரியாவாசிக்காம கூட வேலை பாக்கறவர்தானேனு நினைச்சு சார் கையெழுத்து போட்டிருக்கார்.

    இவருடைய தம்பி மகனுக்கு நீட் தேர்வுல சரியா மதிப்பெண் கிடைக்கல. ஆனா அவங்க உங்க தம்பிமகன் பெயரில வேற ஒருபையனும் எழுதி இருக்கான் அது க்ளியர் ஆயிருக்கு. நீங்க இருபதாயிரம் கட்டணம் எங்களுக்குக் குடுத்தீங்கன்னா உங்களுக்கு சீட் நிச்சயம்னு சொன்னாங்களாம். அப்ப அவருக்குக் கோபம் வந்திருச்சு. முறையாப் படிச்சு வாங்கினவங்க பாதிக்கப்படுவாங்கனு கூக்குரல் போட்டு போலீசுக்குத் தகவல் குடுத்துட்டாரு போல.

    அப்பதொடங்கினது தலவலி. அந்த கோச்சிங் சென்டர் காரருக்கு அரசியல்ல பெரியபுள்ளிகளத் தெரியும்போல. பணம் குடுத்து சரிகட்டிட்டாரு. பழி முழுக்க சார்மேல வந்திருச்சு. பேராசப்பட்டு அவர் சென்டர நிர்ப்பந்தப் படுத்தினதாவும் அதுக்காக அவர் எழுத்துல எழுதிக்கொடுத்ததாவும் வழக்கு பதிவு பண்ணிட்டாங்க.

    முன்ன அவர் படிக்காம கையெழுத்து போட்டது வினையாப் போச்சு. அதில தாங்கள் எந்த வழியிலாவது (ஆள் மாறாட்டம் செய்தோ/பிற வழியிலோ) நீட் தேர்வில் என்மகனைத் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன்னு எழுதியிருந்தத கவனிக்காம அவர் கையெழுத்துபோட்டிருக்கார் போல.

    இப்போ என்னடான்னா….  என்னய்யா நீயே கையெழுத்து போட்டுட்டு கெடைக்கலன்ன வொடனே இவுங்கள மாட்டி விடப் பாக்கறனு போலீசு திட்டறதப் பாக்க சகிக்கல. இதத்தான் ‘அறிவினை ஊழே அடும்’ னு பழமொழியாச்சொல்லுவாங்க போல. அறிவாளி கூட தன்னோட தலையெழுத்தால சிலநேரம் அவத்தைப்படுவாங்கறது தான் அதோட அர்த்தம். .

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 4

    பரிமேலழகர் உரைத் திறன் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அழுக்காறு’ – பாவமா? பாவியா?

    முன்னுரை

    சமய அடிப்படையில் உரைகாண்பது, மெய்யியல் அடிப்படையில் உரையெழுதுவது, அரசியல் கொள்கைகளுக்கு இயைய உரை காண்பது, இலக்கண அடிப்படையில் உரை காண்பது, காரண காரிய அடிப்படையில் உரை காண்பது, சொற் பயன்பாட்டுக்கான (பதப்பிரயோகத்திற்கான) காரணம் கண்டறிந்து உரையெழுதுவது, அதிகாரத் தலைப்பு, இயல், பால் இவற்றின் பிரிவினைக்கேற்ப உரைகாண்பது எனப் பரிமேலழகர் உரையறி திறன் பலவாம். எல்லா நெறிகளிலும் செந்நெறி சென்று குறள் நெறி காண முயலும் கொள்கையுடையார் அவர்.  ‘நோக்கு’ என்னும் பழந்தமிழ் திறனாய்வு நெறியைப் பயன்படுத்தி அவர் எழுதிய உரையே திருக்குறள் உரையாகும். குறட்பாவை ஓரலகாகக் கொண்டால், அதனுள் அடங்கிய, அடிகள், சீர்கள், அசைகள் எனத் தனித்தனியாக நோக்கியுணர்ந்த பிறகே அவர் உரையெழுதுகிறார். ஓர் உருவகப் பொருத்தத்திற்கு அவர் கூறும் விளக்கம் இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக அமைந்திருப்பது,

    “அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்” (168)

    இந்தக் குறட்பாவிற்கு,

    • “அழுக்காறு என ஒரு பாவி” ‘அழுக்காறு’ எனச் சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி
    • “திருச்செற்றுத், தீயுழி உய்த்துவிடும்” தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.

     எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘ஒரு’ என்பதற்கு உலகவழக்கினையொட்டி ஓர் எண்ணாகக் கொள்ளாது ‘ஒப்பில்லாத’ என உரை காண்கிறார்.
    • ‘திரு’ என்பது செல்வத்தைக் குறிப்பதால் அது ‘இம்மைப் பயன்’ எனவும் ‘தீயுழி’ என்பது நரகத்திற்கோர் பெயராதலின் ‘மறுமை’ எனவும் கண்டறிகிறார்.
    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னை உடையானை’ என வருவித்துக் கொள்கிறார்.

     பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை (அழுக்காறு என்னும் பண்பை உடையவனை) இருமையும் கெடுத்தற் கொடுமை பற்றி (பண்பாகிய) அழுக்காற்றைப் (பண்பியாகிய) பாவி என்றார்.” கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின்.”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னைஉடையானை’ என வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘உடையானை’ என்னும் பொழிப்புரையை விளக்கவுரையில் ‘தன்னை ஆக்கினானை’ என மாற்றிக் கொள்கிறார். அதாவது ‘அழுக்காறு’ என்னும் பண்பைத் தானே உருவாக்கி அதனை உடைமையாகக் கொண்டானாம்.
    • ‘அழுக்காறு’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் ‘பிறர் ஆக்கம் பொறாமை’ (35) என்று பொருள் வரையறை செய்கிறார். ‘பிறர் ஆக்கம் கண்டவழி மகிழ்ச்சியடைய வேண்டிய ஒருவன் பொறாமைப் படுகிறான்’ என்றால் அந்தப் பண்பு அவனால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது என்பது பெறப்படும்
    • படவே அழுக்காறு என்பது செம்பில் களிம்பு போலல்லாது மனிதன் தானே தேடிக்கொண்ட பண்பு என்பதை அறிய முடியும். அறியவே அவன் தேடிய செல்வம் அவனைக் காக்க வேண்டியதிருக்க, அவன் அழிவுக்குக் காரணமாகிறது என்பது நுண்ணியம்.
    • பண்பைப் பண்பியாகத் திருவள்ளுவர் உருவகித்ததற்கான காரணத்தைத் தனக்கே உரிய புலமையாற்றலால் விளக்கிக் காட்டுகிறார்.
    • எதிர்மறைப் பண்புகள் காரணமாகக் கொடுஞ்செயலைச் செய்தாரைப் ‘பாவி’ என அழைப்பது உலக வழக்கு. அவ்வழக்கின் அடிப்படையிலேயே திருவள்ளுவர் அழுக்காறுடையானைப் பாவி என்றாராம். அதாவது அழுக்காற்றை உடையவனைத் தீயவன், கேடன், கயவன் என்றெல்லாம் அழைக்காது அவனைப் ‘பாவி’ என ஏன் அழைத்தார் என்பதற்கான காரணத்தை வள்ளுவர் உலக வழக்கினால் அறிந்தார் என்பதாம்.

     பரிமேலழகர் கண்ட உரையருமை

    ஓர் உருவகத்தின் காரணத்தை ஆராய்ந்து எழுதியிருக்கும் அழகருடைய உரை மாண்பு இப்படி அமைகிறது. ‘அன்பு’ என்பது பண்பு. அதற்குச் செயல் கிடையாது. அதாவது அன்பு தானாக செயல்படாது. அந்தப் பண்பைத் தனக்கு இயல்பாகக் கொண்டவன்தான் அதன் பெருமையைத் தன் செயல் வழி உணர்த்த முடியும். சான்றாக ‘இரக்கம்’ என்ற உயரிய பண்பு வள்ளற்பெருமான் வழியாகச் செயல்பட்டுப் பெருமையுற்றது. ‘நன்மை’ செயல்படாது. நல்லவன்தான் செயல்படுவான். ‘தீமை செயல்படாது’ தீயவன்தான் செயல்படுவான். எனவே பண்புக்குப் பண்பி இல்லை. ‘அழுக்காறு உடையான்கண்ணேயே’ (135) ஆக்கம் சேராதேயன்றி அழுக்காற்றிடம் சேராது என வள்ளுவர் கூறவில்லை என்பதையும் நோக்குதல் வேண்டும்.

    ஆனால் திருவள்ளுவர் ‘பண்பு செயல்படும்’ என்று கூறுகிறார். அதாவது பண்பே பண்பியாகச் செயல்படும் என்று கூறுகிறார். பண்பு தானாகச் செயல்படுமா? இதுதான் வினா? ‘படாது’ என்பது உண்மை. சில நேர்வுகளில் பண்பு பண்பியாகச் செயல்படும் என்பது திருவள்ளுவர் கருத்து. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் முன்னெடுக்கிறபோது அதற்கான விளக்கத்தை அவர் கூறினாரிலர்.

    ‘பண்பி இதனைச் செய்வான்’ எனக் கூறாது ‘பண்பே இதனைச் செய்யும் (விடும்) எனக் கூறியமைகிறார் திருவள்ளுவர். இப்போது உரையாசிரியருக்குப் பொறுப்பு கூடுதலாகிறது. நூலாசிரியரின் சொற் பயன்பாட்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதுதான் உரையாசிரியர் பணியே தவிர நூலாசிரியர் பதிவில் குறைகாண்பது நெறியாகாது. ‘அழுக்காறு’ என்பது ஒரு பண்பு. அது பண்பி அல்ல. பாவம் என்பது பண்பு. ‘பாவி’ என்பவன் பண்பி. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. ஆனால் திருவள்ளுவர் அழுக்காற்றையே ஒரு பாவி என்கிறார். இலக்கணப்படி இது உருவகம். ஆனால் பொருளுணர் நெறிப்படி இது சரியன்று. ஆனால் கூறுகிறவர் தெய்வப்புலவர். ஒரு நுட்பமின்றி இவ்வாறு கூறியிருக்கமாட்டார். அந்த நுட்பம் என்ன? பண்புக்குப் பண்பி இல்லை என்பது உண்மைதான். ஆனால் திருவள்ளுவர் மானுடத்தின் எதிர்மறைப் பண்புகளில் பொறாமையை அதாவது பிறர் ஆக்கம் கண்டவழி வயிற்றெரிச்சல் படுகின்ற அந்த அழுக்காற்றைச் சாதாரண எதிர்மறைப் பண்புகளில் ஒன்றாகக் கொள்ளவில்லை. அதனைத் தனியாகப் பிரித்து அதன் கொடுமையைச் சுட்டுகிறார். மற்ற எதிர்மறைப் பண்புகள் பிறருக்கு எதிராகவே செயல்படும்.  ஆனால் அழுக்காறாகிய இப்பண்பு கொண்டவனுக்கே எதிரியாகும். மற்ற பண்புகள் செயல்பட ‘பண்பி’ தேவை. இதனைச் செயல்படுத்த தனியாக ஒரு ஆள் தேவையில்லை. அந்தப் பண்பே அந்த அழிவுச் செயலை மேற்கொள்ளும். யார்மீது? எவன் பொறாமை கொண்டானோ அவன்மீதே அது தன் தாக்குதலைத் தொடுக்கும்.  கம்பியில்லாமலேயே பாய்கின்ற மின்சாரம் அழுக்காறு!

    ‘ஒரு’ என்ற சொல்லுக்கு ஒப்பற்ற என அழகர் உரையெழுதினார், ‘ஏனைய பாவங்களின் செயல்படு எல்லை இம்மை மட்டுமே. அழுக்காறு மறுமையையும் அழிக்கும் பேராற்றல் உடையது என்னும் அதன் ஒப்பின்மையாகிய வலிமை நோக்கி. திருவள்ளுவர் பண்பியில்லாத பண்பைப் பண்பியாக்கினார். அதாவது பாவத்தைப் பாவியாக்கினார். அழகர் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து எழுதினார்.

    திருவள்ளுவர் காட்டிய உடைமைகளும் அல்லாதனவும்

    மானுடம் சிறக்க மாந்தர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் திருவள்ளுவர் ‘உடைமை’ என்னும் சொல்லால் நேர்முகமாகச் சுட்டுவார். ‘அன்புடைமை’, ‘அடக்கமுடைமை’ முதலிய பத்து உடைமைகளை அவர் கூறுவார். இருக்கக் கூடாத, அல்நெறி செல்லக் காரணமாகும் இயல்புகளை எதிர்மறையில் சுட்டுவது அவர்தம் வெளிப்பாட்டு நெறி, ‘பயனில சொல்லாமை’, ‘பிறனில் விழையாமை’, ‘புறங்கூறாமை’ முதலியன இவ்வாறு அமைந்தவை.

    பண்புகள் இடம் மாறினால்

    எதிர்மறைப் பண்பாகிய அழுக்காற்றினை உடைமையாக்கி, இருக்க வேண்டிய உடன்பாட்டுப் பண்பாகிய ஒழுக்கத்தை எதிர்மறையாக்கியும் வள்ளுவர் சிந்தித்திருக்கிறார். அதாவது ஒருவனுக்கு இருக்க வேண்டிய பண்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்? என்று சிந்தித்த வள்ளுவர், ‘இருக்கக் கூடாத பண்பு உடைமையானால் என்ன ஆகும்? என இருவகையாகவும் சிந்தித்திருக்கிறார் என்பதாம்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு’ (135)

    உடன்பாட்டுப் பண்புகளை வள்ளுவர் உடைமைகளாகச் சொல்லுவார் என்பது மேலே குறிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குறட்பாவில் ‘அழுக்காறுடையான்’ என எதிர்மறைப் பண்பு உடைமையாகக் குறிக்கப்பட்டது. மேலும் உடைமையாக இருக்க வேண்டிய ஒழுக்கம் ‘ஒழுக்கமிலான்’ என எதிர்மறையால் குறிக்கப்பட்டது காண்க. அதனால் இருவழியும் ஒருவனுக்குக் கேடு என்பதை மிக நுட்பமாக வள்ளுவர் குறித்திருக்கிறார். இவற்றையெல்லாம் உள்வாங்கியே பரிமேலழகர் உரை அமைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

    பரிமேலழகரின் நினைவாற்றல்

    ‘பண்பு’ ஒரு செயலூக்கி என்பதைப் ‘பாவி’ என்னும் சொல்லால் குறித்த வள்ளுவத்தைத் தம் உரையாற்றலால் உணர வைத்த பரிமேலழகர் இதனையொத்த இன்னொரு சொல்லுக்கும் இவ்வாறே உரையெழுதுகிறார். “இன்மை என ஒரு பாவி’ (1042) என்பதற்கு மேல் ‘அழுக்காறென ஒரு பாவி’ (168) என்புழி உரைத்தாங்கு உரைக்க” என்று நினைவூட்டுகிறார். இந்த இரண்டு பாடல்களுக்கும் இடையே தொள்ளாயிரம் பாடல்களுக்கு மேல் இருக்கின்றன என்பதையும் அக்காலக் கல்விமுறை, சுவடிவழிக்கல்வியே என்பதையும் உட்கொண்டால் பரிமேலேழகர் உட்பட உரையாசிரியர்கள் அனைவர்தம் நினைவாற்றலையும் அறிந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    பண்பிதான் செயல்படும் என்பது உண்மையேயாயினும் சில நேர்வுகளில் பண்பே பண்பியாகச் செயல்படும். அது நேர்முகமானால் நன்மை. எதிர்முகமானால் பேரழிவு. ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகத்   திருவள்ளுவர் உருவகம் செய்தது ஏன் என்பதற்குப் பரிமேலழகர் கண்ட உரைநுட்பம் இதுதான். பரிமேலழகர் உரையால் பண்புக்கும் செயலாற்றல் உண்டு என்று அறிந்து கொண்ட நாம் எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் வள்ளுவரால் அடைய வேண்டிய பயன். ‘மனம்போல் வாழ்வு என்பதும் ‘உன் மனசார சொல்லு’ என்பனவும் அவை! எண்ணங்கள் செயலுக்கு மூலம் மட்டுமன்று. பல நேர்வுகளில் அவையே செயலூக்கியுமாகும்.!

    (தொடரும்)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 12

    கதை வடிவில் பழமொழி நானூறு – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 25

    முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
    தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; – சொல்லின்
    நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
    ‘அறிமடமும் சான்றோர்க்(கு) அணி’.

    பழமொழி -‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’

    நல்லதாப் போச்சு. இந்த தடவ எல்லாரும் வந்துருக்கீங்க. ஆலமரப் படையல பெரிசா செஞ்சிடலாம். அதுக்குத் தேவையான சாமான்களெல்லாம் சொக்கி பாட்டிகிட்ட கேட்டுச் சொல்றேன். போய் வாங்கிட்டு வந்துடுங்க. அம்மா சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே போனாள்.

    நான் சண்டிகரில் வசிப்பதால் வருடத்திற்கு ஒருமுறையாவது வந்து போவதுண்டு. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அக்காவும் நியுசிலாந்தில் வசிக்கும் தம்பியும் இப்போதுதானே வருகிறார்கள். மூன்று குடும்பமும்ஒண்ணு சேர்வது கஷ்டம்தான். அதுவும் கிராமத்தில். நல்லவேளை. சித்தப்பா பையன் கல்யாணத்தை சாக்குவைத்து எல்லாரும் கூடிஇருக்கிறோம். சித்திதான் வரிசையாக நிறைய சடங்குகள் சொன்னாள். பந்தக்கால் நடுவதிலிருந்து தொடங்கி…. இப்போ அம்மா வேற இந்தப் படையல்… எங்கயும் சுத்திப்பாக்கப் போகமுடியாது போல. யோசனையுடன் அமர்ந்திருந்தேன்.

    அப்பா அதுஎன்ன ஆலமரத்துக்குப் படயல்சாப்பாடு. அது என்ன சாப்பிடவா போகுது. நெறைய மெனு வேற சொல்றாங்க. அதுக்கு ஒவ்வொரு பேமிலியும் நியூ டிரஸ் குடுக்கணுமாமே. கேட்கிறான் என் மகன்.

    கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணில் பட்டுப்புடவை கட்டிக்கொண்டுஆலமரம் இலை விரித்து சாப்பிடுவதாக யோசித்தேன். கற்பனை நல்லாதான்இருக்கு.  ஆமா எதுக்கு இது. இந்தக் கேள்விய சின்னவயசில நான் கேட்டதே இல்ல. விசேசம்னு சொன்னா நல்லா சாப்பிடணும்.விளையாடணும். ஆனா இந்த காலத்துப் பசங்க ரொம்ப தெளிவு. காரணம்கேட்டே கழுத்தறுக்கறாங்க.

    பாட்டிகிட்டயே கேளுடா. எனக்கு இதப்பத்தி எதுவும் தெரியாது. சமாளித்தேன்.

    போப்பா நீங்க சுத்த வேஸ்ட். ஓடிவிட்டான் என் பத்துவயது மகன்.

    அம்மாவின் லிஸ்ட் வந்துவிட்டது. மதியம் டவுண் போத்தீஸ் போய் ஆளுக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துட்டு அதுக்கு மேல வைக்க கம்மல், செயின், வளையல் எல்லாம் கவரிங் கடையில் வாங்கிட்டு வந்துடுங்க. அப்புறமா மளிகை சாமான் இங்க வாங்கிக்கலாம்.

    இந்த சாக்குல டவுணச் சுத்தலாம். நாளைக்கு சாவகாசமா லோக்கல் ப்ரெண்ட் லட்சு கிட்ட இந்தப் படையல் நம்பிக்கை எதுக்குன்னு கேட்டுத்தெரிஞ்சுக்கணும்.

    மறுநாள் பலசரக்கு சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது எதேச்சையாக லட்சு கண்ணில் பட்டான். அவனாகவே டேய் என்ன ஆலமரப் படையல் சாமானா. அசத்து. பெரிய இடம். பட்டுப்புடவையெல்லாம் வைக்கப்போறயாமா. கேள்விப்பட்டேன்.

    அவன் பேச ஆரம்பித்ததும் எனக்கு ஆச்சர்யம்.

    ஏ….அதெப்படி .. உனக்குத் தெரியும். ..நானே உங்கிட்ட டவுட் கேக்கலாம்னு இருந்தேன். காரணமே தெரியாம இந்தப் படையல்ல எனக்கு நம்பிக்கையே இல்ல. அம்மாக்காக பண்றேன். அவ்வளவுதான்..

    ரொம்ப குழம்பாத. முன்னயெல்லாம் சுடுகாடு ஆலமரத்தடியில இறந்தவங்கள நெனச்சு விதவிதமா சாப்பாடு மட்டும் பண்ணி வைப்பாங்க. உண்மையில அந்தச் சாப்பாடு சுடுகாட்டுல வேல செய்யிறவுங்களுக்குத்தான். நாளாவட்டத்துல நம்ம தமிழய்யா முயற்சியில பொதுநல சங்கம் உருவாக்கினோம். இந்த மாதிரி படையல் வைக்கணும்னா அந்தச் சங்கத்துல முதலிலேயே பதிவு பண்ணணும். சங்க உறுப்பினர் அந்த விசேசத்துல கலந்துப்பாரு. மூடிபோட்ட சம்படங்கள்லதான் சாப்பாடு கொண்டுவைக்கணும். இலையைப் பரப்பிஒவ்வொரு கரண்டி வேணாப் போடலாம். அதைக் காக்காய்க்காக விட்டுவச்சிறுவாங்க. சம்படத்தோடசாப்பாட்ட எடுத்துட்டுப்போயி ஒவ்வொரு ஏழைகளுக்கும் வரிசைப்படி குடுத்துட்டு வந்தாங்க. இப்பயெல்லாம் துணிமணிகளும் கொடுக்கணும்னு சங்கம் உத்தரவு போட்டிருக்கு அதனாலதான் உங்கள பட்டுப்புடவை வாங்கச்சொன்னோம். படையலுக்கு வச்ச பாத்திரங்கள் துணிமணிகள் எல்லாத்தையும் தீபாவளிக்கு முன்ன மிகக் குறைந்த விலைக்கு சங்கம் ஏழைகளுக்குக் கொடுக்கும்.

    பாரிவள்ளல் முல்லைக்கு தேர் கொடுத்தான் அப்டிங்கறதுல மேலோட்டமாப் பாத்தா அவன் தெரிஞ்சுக்கிட்டே செஞ்ச அறியாமைச் செயல்கூட அவனுக்கு மங்காப் புகழப் பெற்றுக்குடுத்துடுச்சேனு நெனைப்போம். அதனால தேர்செய்யறவங்களுக்கு மேலமேல வேலைவாய்ப்பு கிடைக்க உதவினான்னும் எடுத்துக்கலாம். அதுபோலத்தான் இதுவும். யார் இந்த ஆலமரப் படையலத் தொடங்கினாங்கனு தெரியல. நம்பிக்கைகளைச் சிதைக்காம அது வெறும் நம்பிக்கைதான்னு தெரிஞ்சுக்கிட்டே அத வாழறவங்களுக்கு உதவியா மாத்த நினைச்சுதான் எங்க சங்கம் உழைச்சிட்டிருக்கு. ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ ங்கற பழமொழிப்படிதான் எங்க சங்கம்இயங்குது. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பையே தரும்னு சொல்லுவாங்க இல்லயா. அதுபோல இந்த ஊருக்குள்ள எங்களுக்குப் பெருமதான்.

    நண்பன் பேசப் பேச நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

    பாடல் 26

    பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
    சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? – விற்கீழ்
    அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! – ‘அறியும்
    பெரிதாள் பவனே பெரிது’..

    பழமொழி – ‘அறியும் பெரிதாள் பவனே பெரிது’..

    இன்று என் மின்னஞ்சலைத் திறந்தவுடன் ஒரு ஆச்சரிய அதிர்வு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனோ எழுந்துசென்று கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கவேண்டுமெனத் தோன்றியது. விக்னேஷ் அனுப்பிய அழைப்பிதழ் அது. கண்ணாடியில் ஆங்காங்கே தெரிந்த நரைமுடிகள் என்வயதை உணர்த்தின. எத்தனை வருடத்திற்கு முந்தைய நிகழ்வுஅது. இன்னும் பசுமையாக என்மனதில்.

    ஆமாம்….. நான் தோற்றுவிட்டேன். எனது தோல்வியை ஒப்புக்கொள்ள புஷ்பா என் அருகில் இல்லையே. ஒருவேளை அவன் அவளையும் அழைத்திருப்பானோ. பொறுத்துதான் பார்க்க வேண்டும். எப்படியும் நாளை போகப்போகிறேனே. விழாவிற்குச் செல்வதற்காக உடுத்த வேண்டிய சேலை முதல் அனைத்தையும் எடுத்துவைத்தேன். பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்திக்கப்போகும் நிகழ்வல்லவா. விக்னேஷின் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ. டில்லியை விட்டு மாற்றலாகி வந்தபிறகு மீண்டும் தொடர்புகொள்ள முயற்சி செய்ததேயில்லை. இந்த விழாவுக்கு கண்டிப்பாக அனைத்து ஆசிரியைகளையும் அழைத்திருப்பான். நேஹா மேடத்தைப் பார்க்கமுடியும். பழசையெல்லாம் அவர்கள் மறந்திருப்பார்கள். இந்தமுறை சந்தித்தால் நன்றாகப் பேசவேண்டும்.

    அடுத்தநாள் விமானம் ஏறியவுடன் மனம் பின்னோக்கிச் சென்றது.

    அது பத்தாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. நானும் புஷ்பாவும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியைகள். ஆசிரியர் தினத்தைக் கொண்டாட அனைவரும் அரங்கில் காத்திருக்கிறோம். எங்கள் தலைமை ஆசிரியை கேட்டுக்கொண்டதிற்கிணங்க பள்ளி சம்பந்தமான தங்களின் அனுபவங்களைப் பகிர ஒவ்வொருவராக மேடை ஏறுகிறார்கள்.

    பெருமையடித்தே பொழுதைக் கழிக்கும் கதைசொல்லிகள் தங்கள் கற்பனைப் புராணத்தைத் தட்டிவிட ஆரம்பித்தனர். அனைவரைப் பற்றியும் சரியாக எடைபோட்டு வைத்திருக்கும் தலைமை ஆசிரியை ஒப்புக்கு கைதட்டி ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தினார்.

    ஒவ்வொருவர் பேசிமுடித்ததும் இவளைப் பற்றித் தெரியாதா. எனக் கிண்டலடித்துக் கொண்டே இருந்த புஷ்பா. நேஹா மேடம் மேடையேறியவுடன் அதிர்ச்சியானாள்.

    என்னஆச்சு இவங்களுக்கு. இவங்களுமா…….

    நேஹா மேடத்தின் உரை ஆரம்பித்தது. நான் சொல்லப்போகும் இந்த அனுபவம் வேறு ஒருவருடையது. அவர் மேடை ஏற விருப்பம் தெரிவிக்காததால் அவருக்குப் பதில் நான் கூறுகிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு பி பிரிவு மாணவன் விக்னேஷ். உங்கள் அனைவருக்கும் அவனைப்பற்றி நன்றாகத் தெரியும். யாரையும் மதிக்கமாட்டான். பள்ளிக்கு சரியாக வந்ததே கிடையாது. அவனுக்கு நண்பர்களே கிடையாது. இந்நிலையில் நம் பள்ளியிலிருந்து ஒருவர் அவன்வீட்டிற்குத் திடீர்விஜயம் செய்து அவனைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார். தன் வீட்டிற்குத் திடிரென அவர் வந்தவுடன் அதிர்ச்சியுற்றானாம். அவரை வாசலிலேயே நிற்கச் செய்து வீட்டைத் துப்புரவு செய்து பத்து நிமிடம் கழித்து உள்ளே அனுமதித்திருக்கிறான். அதன்பிறகுதான் தெரிந்தது அவன் தனியாக அந்த வீட்டில் வசிக்கிறான் என்று. அம்மாவும் அப்பாவும் மருத்துவர்கள். தங்களுக்குள் சண்டையிட்டு மணவிலக்கு பெற்றுவிட்டனர். இருவருடனும் வசிக்க விருப்பமில்லாது தனியாக வாழ்கிறான். அன்புசெலுத்த ஆளில்லாமல்தான் அவன் அப்படியிருக்கிறான் என உணர்ந்த அவர் அடிக்கடி அவன் வீட்டிற்குச் சென்று அவனைத் தன் குடும்பத்தில் ஒருநபர் போல் பாவித்திருக்கிறார். விளைவு கடந்த ஒரு மாதமாக தவறாது பள்ளிக்கு வருகிறான். நன்றாகவும் படிக்கிறான். இதன்மூலம் உங்களனைவ்ருக்கும் தெரிவிக்க விரும்புவது மாணவர்களைக் குறைசொல்லாது அவர்களுக்கு பாடத்தில் விருப்பமில்லாது போவதற்கான காரணத்தை அறிந்து அதைத் தீர்க்க முயற்சியுங்கள். வகுப்பறை உங்கள் வசப்படும்.

    அவர் உரையை முடித்தவுடன் அந்த நபர் யாராக இருக்கக்கூடும் என அனைவரிடமும் சலசலப்பு. அனைவரும் மனதுள் பெருமூச்சு விட்டனர்.  இவனால்தான் நூறு சதவிகித தேர்ச்சி பாதிக்கப்படும் எனப் பயந்தோம். நல்லவேளை… என்றனர்.

    எவ்வளவு நல்லமனம் படைத்தவர்களுடன் நாம் வேலைபார்க்கிறோம் பார்த்தாயா என புஷ்பா கூறியபோது நீ வேண்டுமானாலும் பார். நம் பள்ளி கவுன்சிலர்தான் அவன் வீட்டிற்குப்போயிருப்பாள். பள்ளியே நூறுசதவிகிதத் தேர்ச்சிக்குப்பயந்து இந்தவேலையைச் செய்திருக்கும் எனச் சவால்விட்டேன்.

    சிறிது நாட்களில் நான்வேலையை விட்டுவிட்டு பெங்களூருக்கு வந்துவிட்டேன். அவ்வப்போது புஷ்பாவுடன் மட்டும் உரையாடல் தொடர்ந்தது. வெகுநாட்களுக்குப்பிறகு  பள்ளி அலுவலகத்தில் வேலைபார்க்கும் தனஞ்சைதான் அவன் வீட்டிற்குச்சென்றநபர் என புஷ்பா கூறியபோது என்னால் நம்பவேமுடியவில்லை.

    புத்திசாலிங்களுக்கு மத்தவங்க சொல்லிதான் தெரியணும்னு இல்ல. ‘அறியும், பெரிதாள்பவனே பெரிது னு பழமொழியே இருக்கே. அவங்க தானே நல்லது செய்வாங்க. அப்படித்தான் என் வாழ்க்கையிலயும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கினார் தனஞ்சை சார். அவர் மகளையே திருமணம் செய்துக்கிட்டு உங்க எல்லாருடைய ஆசிர்வாதத்தைப் பெறுவதில எனக்கு ரொம்ப சந்தோஷம். உரையாற்றிக்கொண்டிருக்கிறான் என் முன்னாள் மாணவன் விக்னேஷ் சி. எ.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 28

    பழகத் தெரிய வேணும் – 28

    நிர்மலா ராகவன்

    (எதற்காகப் படிப்பது?)

    பரீட்சைப் பயத்தை எதிர்கொள்ள வேண்டுமா?

    அதற்கான வழி இதோ!

    என் பதின்ம வயது மாணவிகளுக்குச் சொல்வேன், “பிராக்டிகல் பரீட்சைக்கு முதல்நாள் ஏதாவது காதல் புதினம் படியுங்கள். அம்மா திட்டினால், ‘டீச்சர்தான் சொன்னார்கள்,’ என்று விறைப்பாகச் சொல்லிவிடுங்கள்!”

    மாணவிகள் சிரிப்பார்கள், ‘ஏதடா, டீச்சரே அம்மாவை எதிர்க்கச் சொல்லிக்கொடுக்கிறார்களே!’ என்று.

    படிப்பது என்றால், பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களை மட்டும் குறிப்பதல்ல. அது புரியாது, பாலர் பள்ளி படிக்கும் நாளிலிருந்தே குழந்தைகளை, ‘வீட்டுப்பாடம் இருக்கா?’ என்று   விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் போகுமா?

    அம்மா ஓயாமல், ‘படி, படி’ என்று தொணதொணக்கிறாள். இதில் மேல்படிப்பு வேறா! வேண்டாம்பா,’ என்று வேண்டுமென்றே, பரீட்சைகளில் தவறான பதில்களை அளித்த மாணவ, மாணவிகளை அறிவேன்.

    ஞாபகசக்தி பெருக

    படித்த கதையையே திரும்பத் திரும்பப் படிப்பது சிறு குழந்தைகளின் ஞாபகசக்தியை வளர்க்கும்.

    தானே படிக்கும் வயது வரும்வரை வீட்டிலுள்ளவர்கள்தாம் அவர்களுக்குப் படித்துக்காட்ட வேண்டும். இப்பழக்கத்தால் உறவிலும் நெருக்கம் ஏற்படுகிறது, மொழித்திறனும் மேம்படும்.

    மிகச் சிறு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்கும் ஆசையைத் தூண்டிவிட்டால், புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்தாலே ஆனந்தம் பெருகும்.

    சிறுவர்கள் கதைகளில் ராட்சதன், பூதம் எல்லாரும் சர்வசாதாரணமாக நடமாடுவார்கள்.

    அக்கதைகளைப் படித்துச் சொல்லும்போது, அவர்கள் கண்கள் பயத்தில் விரிந்தாலும், இறுதியில், தீயவர்கள் அழிவார்கள் என்று அறியும்போது ஏற்படும் நிம்மதியால் மகிழ்ச்சி பெருகும். தைரியம் பெருகும்.

    செத்துப்போன சிங்கம்

    என் பேரனுக்கு மூன்று வயதானபோது, ‘எந்தக் கதை வேணும்?’ என்றால், ‘சிங்கம்!’ என்று கொக்கரிப்பான்.

    முயலானது குட்டியாக இருந்தாலும், அச்சத்தை ஊட்டிய சிங்கத்தை ஏமாற்றிய பஞ்சதந்திரக் கதைதான் அவனுக்குப் பிடித்தது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை.

    கதையின் முடிவில், “சிங்கம் தண்ணிக்குள்ளே இன்னொரு சிங்கம் இருக்கிறதைப் பாத்து, கோபமா உள்ளே குதிச்சுது. அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்பேன்.

    உடலை நிமிர்த்து, “சத் போச்!” என்பான், வீரமாக.

    படங்களே இல்லையே!

    பெரும்பாலான குழந்தைகளுக்குப் படங்கள் போட்டிருந்தால்தான் புத்தகங்களைப் படிக்கப் பிடிக்கும். ஏனெனில், அதுதான் எழுத்துக்களைவிட எளிதில் புரியும். அதனால், காமிக் புத்தகங்களை மட்டும்தான் விரும்பிப் படிப்பார்கள். ‘படித்தால் சரி!’ என்று விடவேண்டியதுதான்.

    ஆனால், எந்த வயதிலும் படங்கள் நிறைந்த புத்தகங்கள்தாம் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா?

    பதின்மூன்று வயதான என் மாணவிகள் ஆரம்பக்கல்வியைச் சீனப்பள்ளியில் படித்திருந்தார்கள். இடைநிலைப்பள்ளியிலோ, விஞ்ஞானப்பாடத்தை மலாய் மொழியில் படிக்கவேண்டும்.

    வருத்தத்துடன், “எங்கள் புத்தகத்தில் படங்களே இல்லையே!” என்று புகார் செய்தார்கள் என்னிடம்!

    கண்காணிப்பு

    குழந்தைகள் பெரியவர்களாகும்வரை எத்தகைய புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டுவது அவசியம்.

    கதை

    பத்து வயதாகியும், இரவில் தான் கழிப்பறைக்குச் செல்லும்போது யாராவது உடன்வரவேண்டும் என்று கெஞ்சுவான் பிரபு.

    இத்தனைக்கும், வீட்டுக்குள்தான் இருக்கும் அந்த இடம். விளக்குகளும் உண்டு.

    பின் எதற்காகப் பயம்?

    “நான் சின்ன வயசிலே நிறைய பயங்கரமான கதை படிப்பேன். அதனால ராத்திரியானா பயம்!” என்றான், என் கேள்விக்குப் பதிலாக.

    சிறு வயதில் அந்தந்த பாத்திரங்களுடன் நாம் ஒன்றிவிடுவதால், அவர்கள் அனுபவிக்கும் உணர்வுகள் நம்மையும் தொற்றிவிடும்.

    கல்லூரி நாட்களில் நான் ஆங்கிலப் புத்தகங்களை விரும்பிப் படிக்கும்போது, அம்மா, ‘இப்போ படிச்சியே, அதோட கதை என்ன?’ என்று தவறாது கேட்பாள். எதற்காகக் கேட்டாள் என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. சுவாரசியமாக விவரிப்பேன்.

    அக்காலத்தில் ஒரு பெண் தடுக்கி விழும்போது அவளைப் பிடித்தாலோ, அல்லது அவள் நழுவவிட்ட புத்தகங்களை எடுத்துக் கொடுத்தாலோதான் காதல் வரும் என்பதுபோல் தமிழ்ப் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும்.

    ‘நீ படிக்கிறதிலே ஒழுங்கா, கல்யாணம் பண்ணிக்கிறமாதிரி கதையே கிடையாதா!’ என்று அம்மா அங்கலாய்த்தபோது சிரிப்பாக இருந்தது.

    இளம்வயதினருக்கான ஆங்கிலப் புதினங்களிலோ, கள்ளக்காதல்தான் அதிகமாக இருந்தது.

    எதைப் படிப்பது?

    சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது, ‘நானும் பிறர் மதிக்க வாழ்வேன்,’ என்ற ஊக்கத்தை அளிக்கவல்லது.

    சில சமயம், ‘எனக்குக்கூட அம்மாதிரியான திறமைகள் உண்டே!’ என்று தோன்றிப்போகும். இல்லாவிட்டால், அவைகளை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் பிறக்கும்.

    படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பிறரைப் புரிந்துகொள்வது எளிது. ‘அந்தப் புத்தகத்தில் ஒருவன் இப்படித்தானே இருந்தான்!’ என்று, தீயவர்களைக் கண்டு அச்சம் ஏற்படும். தன்னைத்தானே புரிந்துகொள்ளவும் சிலருக்கு முடிகிறது.

    ஓயாமல் காதல் நவீனங்களை மட்டும் படிக்கும் பழக்கம்கொண்ட பெண்கள் கதாநாயகியுடன் ஒன்றிவிடுவார்கள், ‘நம் வாழ்க்கை அப்படி அமையவில்லையே!’ என்ற ஏமாற்றம்தான் பிற்காலத்தில் எழும்.

    நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, ‘பிறர் படிக்கிறார்களே!’ என்று அவர்கள் படிக்கும் புத்தகங்களையே படிக்க ஆரம்பித்தால், நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது. நாம் ஒவ்வொருவரும் தனிப்பிறவி என்றால், எதற்காகப் பிறரைப்போல் இருக்கவேண்டும்?

    நம்மை மாற்றும் சக்திகொண்டவை வார்த்தைகள்.

    பதினைந்து வயதிலிருந்தே நான் தேடிப் படித்தது உளவியலுக்கான கல்லூரி பாடப் புத்தகங்களை.

    ‘ஓயாமல் இந்த மாதிரி புத்தகங்களையெல்லாம் படிக்காதே. பைத்தியம் பிடித்துவிடும்,’ என்று அம்மா கவலையோடு கெஞ்சுவாள்.

    (தெரியாத்தனமாக விஞ்ஞானத்திலும் கணக்கிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டதால், அவைகளைக் கட்டாயமாகப் படிக்க நேரிட்டது).

    எழுத்தாளர்களுக்கு உளவியல் தெரிந்திருப்பது அவசியம்.

    கதாபாத்திரங்களின் உணர்வு புரிந்தால்தானே பாத்திரப்படைப்பில் நம்பகத்தன்மை இருக்கும்?

    முதியோர்களுக்கு

    படிக்கும் பழக்கம் முதியோர்களின் மூளைக்குப் பயிற்சி கொடுக்கவல்லது. தன்னையே மறக்கும் நிலை, அதாவது, அல்சீமர் நோய் அணுகாது.

    ஒரே இடத்தில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்தால், பலரோடு பல நாடுகளுக்கும், எக்காலத்திற்கும் பிரயாணம் செய்ய முடியும். கற்பனையில்தான்!

    அதிகம் அலைய முடியாத நிலையில், வாழ்வில் உற்சாகம் திரும்பும்.

    ‘இனி படித்து என்ன கிழிக்கப்போகிறேன்’ என்று அலுத்து விட்டுவிட்டால், வாழ்வில் சலிப்புத்தட்டாமல் என்ன ஆகும்?

    Share