சேக்கிழார் பாடல் நயம் – 93 (அன்பனே)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
“அன்பனே! யன்பர் பூசை யளித்தநீ யணங்கி னோடும்
என்பெரு முலக மெய்தி, யிருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி ஏவல் கேட்ப,
வின்பமார்ந் திருக்க“ வென்றே யருள்செய்தான் எவர்க்கு மிக்கான்.”
விளக்கம்:
“அன்புடையவனே! அன்பர்களது பூசையினைச் சிறிதும் வழுவாது காத்துச் செய்து வந்த நீ உன் மனைவியோடும் எமது பேருலகத்திலே சேர்ந்து, குபேரன் தானே நும் முன்னர்ப் பெரு நிதிகளை ஏந்தி நும் சொல் வழியே ஏவல் கேட்டு நிற்க, இணையில்லாத பேரின்பம் நுகர்ந்து கொண்டு நித்தியமாய் வாழ்க“ என்றே யாருக்கும் மிக்காராகிய சிவபெருமான் அருளிச் செய்தார்.
இப்பாடலில் அன்பனே என்ற சொல், எம்மிடத்து வைத்த அன்பினாலே அடியார்களிடத்து அன்புடையவனே என்று பொருள்பட்டது. ‘’அன்பர்பூசை அளித்த நீ’’ என்ற தொடர் அன்பு நிறைதலாகிய காரணத்தால் விளைந்தது அன்பர் பூசையாகிய காரியம் எனப்பட்டது.
அளித்தல் என்ற சொல் வளம் சுருங்கியபோதும் என்றும் விடாது பாதுகாத்துச் செலுத்துதலைக் குறித்தது. அணங்கு – தெய்வத்தன்மை வாய்ந்த பெண். இங்கு மனைவியாரைக் குறித்தது. தெய்வத்தை எப்போதும் வழிபடும் அடியாரின் மனைவியும் தெய்வத்தன்மை பெற்றார்.
‘’அணங்கினோடும் நீ என் பெரும் உலகம் எய்தி’’ என்ற தொடர், அடியார் பூசைக்கு உரிய அமுது படைத்து உய்த்தது மனைவியாரது கற்பின் றிறத்தாலே நிகழ்ந்ததாலின், அச்சிறப்புப் பற்றி மனைவியாருடன் சார்த்தி, அணங்கினோடும் நீ எய்தியிருக்க என்றருளினார்.
‘’நம்பெரு முலகம்’’ என்றதொடருக்கு இயற்பகையார் புராணத்தில் நலமிகு சிவலோகத்தில் என்ற தொடருக்கு சிவானந்த போகமே வளர்கின்ற அபரமுத்தித் தானமாகிய சுத்தபுவனத்திலே என்றபொருள் கூறியதை இங்குநினைவில்கொள்க
‘’இருநிதிக் கிழவன் தானே முன்பெருநிதியம் ஏந்தி‘’ என்ற தொடர் பிறகணங்களன்றிக் குபேரன் தானே பெருநிதியம் ஏந்தி முன் நின்று, என்றபொருளைக்குறித்தது. பெருநிதியம் – எடுக்க வெடுக்கக் குறையாத சங்கநிதி – பதுமநிதி என்பன.
மேலும் ‘’மொழிவழியேவல் கேட்ப‘’ என்றதொடருக்கு உனது சொல் வழிப்பட்டு நின்று, நீ ஏவின பணி செய்து வர என்று பொருள்!
சிவலோகத்திலே இந்நாயனார்க்குக் குபேரனது பெருநிதியத்தால் ஆவது என்ன? எனின் செல்வமும், அடியார் திறத்து அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும், பாரின் மல்க விரும்பி, அக்கொள்கையினின்றே அடியவர் பூசை செய்து வந்தனர் நாயனார்; அவரது எண்ணம் நிறைவேறுக என்று அடியவர்கள் நாளு நாளும் வாழ்த்தினர்; அதன் பயனை உலகிற்குக் கொடுத்துப் பாரிலே நித்தமும் செல்வமும் சிந்தையும் நீடி வருவதற்காக, இறைவன், இவர் சொல்வழிக் குபேரதேவன் நிதியமேந்தி ஏவல் கேட்டு நிற்குமாறு அருளினார் என்பதை விளக்கியது! ஆகவே இளையான்குடிமாற நாயனார் சிவகணங்களிலொருவராய்ச் சிவலோகத்தில் எழுந்தருளியிருந்து உலகிலே செல்வமும் சிவசிந்தையும் நீடி வருமாறு அடியவர்க்கு இன்றும் என்றும் அருள் புரிந்து வருகின்றார் என்பதைப் புலப்படுத்துகிறது இங்கே இன்பம் என்பது அடியார் கூட்டத்தில் வாழும் பேரின்பத்தைக் குறித்தது.
எவர்க்கும் மிக்கானாகிய முழுமுதல்வன் சோதியாகத் தோன்றி, அடியாரை நோக்கி அன்பனே, நீ அணங்கினோடும் என்பெரும் உலகம் எய்தி, குபேரன்தானே ஏவல் கேட்ப, இன்பமார்ந்திருக்க என்று அருள் செய்தான் என இவ்விரண்டு பாட்டுக்களையும் இணைத்துப் பொருள்கொள்க.
ஆகவே இப்பாடல்கள் ‘’இறைவன்திருவருளையன்றி உலகியல் இன்பங்கள் எதனையும் வேண்டாமல் வாழ்ந்தஅடியார், சிவலோகத்தில் எல்லா இன்பங்களையும்பெற்றுப் பேரின்பத்துடன் வாழ்வர்’’ என்பதை உணர்த்துகின்றன.
‘’உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே!’’
என்ற திருவாசகம் இங்கே நினைவுக்கு வரவேண்டும். இவ்வரலாற்றின் ஆதாரங்கள் பரமக்குடி அருகில் இருப்பதையும் எண்ணி மகிழ வேண்டும்.