திருவள்ளுவர் யார்? – 1

புதுக்கோட்டை பத்மநாபன்
சில நாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது. திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கிய விஷயம். இது குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
திருக்குறளில் உள்ள ஞானச் செழுமை, சொல்லாட்சி இவற்றை வைத்துப் பார்க்கும் போது அதை எழுதிய திருவள்ளுவர், ஓர் ஈடு இணையற்ற ஞானி என்று தான் சொல்லவேண்டும். சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய நூல், திருக்குறள். அந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் திட்டவட்டமாகக் கூறுவதற்கு எந்தவிதமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. இந்த நிலையில், ஞானச் செறிவுள்ள அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களை, முடிந்த அளவு நம் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டியதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். அதை விட்டுவிட்டு அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து, அவருக்கு ஓர் அடையாளத்தைக் கற்பித்து அரசியல் செய்வதும், அந்த அடையாள அரசியலை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் தங்கள் சாயத்தைத் திருவள்ளுவர் மேல் பூசப் பார்ப்பதும் அடியேனைப் பொறுத்தவரை வேண்டாத வேலை என்றே நினைக்கிறேன்.
இதுவரை, அடியேன் திருவள்ளுவரின் ஜாதி, மதம் பற்றி ஆய்வு செய்ததுமில்லை, செய்ய நினைத்ததுமில்லை. அந்த விருப்பம் அடியேனுக்கு இருந்ததும் இல்லை. அடியேன் அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களையும், சொல்லிய விதத்தையும் சுவைத்துப் படித்துப் பல தடவை மெய்சிலிர்த்து வியந்ததுண்டு. அதே நேரத்தில், தற்போது எழுந்துள்ள சர்ச்சை விஷயம் வீதிக்கு வந்துவிட்டபடியால் அதுபற்றி நமது கருத்தையும் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
முதலில் திருவள்ளுவருக்குக் காவி உடைபோட்டுப் படம் வரைந்ததைக் கண்டு கொதித்தெழுந்து கடுமையாகக் கண்டிக்கும் பரம யோக்கியர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன். திருவள்ளுவர் எந்த உருவத்தில் இருந்தார் என்பது பற்றியோ அவரது வாழ்க்கை வரலாறு பற்றியோ எந்தவிதமான ஆதாரங்களும் தெளிவாகக் கிடைக்காத நிலையில் வெள்ளை ஆடை அணிவித்து தாடிவைத்து அவருக்கு ஒரு உருவத்தை நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே, எந்த அடிப்படையில் அந்த உருவத்தை நீங்கள் அவருக்கு ஏற்படுத்தினீர்கள்? அவருக்கு ஒரு உருவம் கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கின்றபொழுது, மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லையா?
திருவள்ளுவராண்டு என்று ஓர் ஆண்டை உருவாக்கியிருக்கிறீர்களே எந்த அடிப்படையில் உருவாக்கினீர்கள்? திருவள்ளுவரின் பிறப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா? ஆய்வு என்ற பெயரில் எந்தவிதமான ஆதாரமும் இன்றி வெறும் அனுமானத்தால் உங்களின் சொந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கப் பல அபத்தமான காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற பொழுது மற்றவர்கள் ஆய்வு செய்யக் கூடாதா? திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாட உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, அருகதையும் இல்லை. ஏனெனில் திருவள்ளுவரின் கொள்கைக்கும் உங்கள் கொள்கை, நடைமுறை இவற்றுக்கும் உள்ள ஸம்பந்தம் கருணை உணர்வுக்கும் கசாப்புக் கடைக்காரனுக்கும் உள்ள ஸம்பந்தம் தான். அதனால் திருவள்ளுவருக்குக் காவிஉடை அணிவித்தது பற்றிக் கேள்வி கேட்க, உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை.
அதே நேரத்தில் பிரச்சனை பெரிதாகிவிட்டபடியால் திருவள்ளுவர் உண்மையில் யார், அவருக்கு எந்த உருவம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதுடன் தவிர்க்க முடியாத கடமையும் ஆகிவிட்டது. அந்தக் கடமை உணர்வோடு திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்த முக்கியமான சில விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
ஒருவரது அடையாளத்தைத் தெரிந்துகொள்ள வெளிப்படையான ஆதாரங்கள் இல்லை என்பதற்காக அவருக்கு எந்த அடையாளமும் இல்லை என்று முடிவு கட்டிவிடவும் முடியாது. எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் இருந்தே தீரும். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள, வலிமையான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவரது படைப்பில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரது அடையாளத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் திருவள்ளுவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்குச் சரியான புறச்சான்றுகள் கிடைக்காததால் அவரது சீரிய படைப்பான திருக்குறளில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும்.
திருக்குறளில் தங்களுக்குச் சாதகமாகத் தோன்றும் சில குறட்பாக்களை மட்டும் எடுத்துக் காட்டி, திருக்குறள் தங்கள் நூலென்றும் திருவள்ளுவர் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்றும், ஜைனர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் தற்காலத்தில் நாஸ்திகம் பேசும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் பொதுவுடைமைவாதிகளும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட முயன்று கொண்டிருகிறார்கள். முதலில் மேற்படி ஜைனம் முதலிய மதங்களின் கருத்துகளுக்கும் நாஸ்திகக் கருத்துகளுக்கும் அணுவளவும் திருக்குறளில் இடமில்லை என்பதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபிப்போம்.
திருக்குறளின் முதற்குறளிலேயே இறைவனே உலகிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து நாஸ்திகர்களுக்கும் பொருள்முதல்வாதிகளுக்கும் உடன்பாடான கருத்தன்று. மேலும் தெய்வ வழிபாடு, ஊழ் என்று சொல்லப்படும் விதி, மறுபிறப்பு, வினைப்பயன், வேத வைதிக நெறி, இல்லறப் பெண்களின் ஒழுக்கம், கற்பு, பிறனில் விழையாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், தவம், துறவு இவற்றைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாஸ்திகர்களுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும் திருவள்ளுவர் கூறும் இவ்விஷயங்களில் எல்லாம் உடன்பாடு உண்டா? திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இன்றைய பகுத்தறிவுவாதிகளின் தந்தை என்று சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவனுக்கு ஆண்களின் ஒழுக்கம், பெண்களின் கற்பு, மரபுவழியான திருமணமுறை, பிறனில் விழையாமை இவையெல்லாம் பிடிக்காத விஷயங்கள். திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது என்றும், திருமண முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும், ஒருவனுடைய மனைவி உப்பு, மிளகாயைப் போல் அவனுக்கு மட்டும் தனி உடைமைச் சொத்தாக நினைப்பது தவறு என்றும், கற்பு, விபசாரம் போன்ற வார்த்தைகள் பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு எதிரானவை என்றும், திருக்குறள் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றும் இவர்களின் தந்தையான பகுத்தறிவுப் பகலவனே கூறியிருக்கிறார். பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகளுக்கெல்லாம் ஆசான் என்று சொல்லப்படும் கார்ல் மார்க்ஸ், பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் தனிஉடைமை ஆகிவிடுவாள் என்றும், அவளைப் பொதுவுடைமையாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுவான விபசாரியாக்க வேண்டும் என்றும் private property and communism என்ற தலைப்பில் economic and philosophic manuscript of 1844 என்பதில் எழுதியுள்ளார். இப்படியெல்லாம் கூறியிருக்கின்ற இந்த ஆசான்களின் வாரிசுகளான இன்றைய பகுத்தறிவு வாதிகளுக்கும், பொதுவுடைமை வாதிகளுக்கும் திருக்குறளை உரிமை கொண்டாட என்ன அருகதை இருக்கிறது? இவர்களுக்கும் திருக்குறளுக்கும் என்ன ஸம்பந்தம்? திருக்குறளைப் பற்றிப் பேசக்கூட இவர்களுக்கு உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே, திருக்குறள் நாஸ்திக நூலும் அன்று. திருவள்ளுவர் நாஸ்திகரும் அல்லர். அதனால் இந்த நாஸ்திக இயக்கவாதிகள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறள் பற்றியும் கருத்துச் சொல்வது என்பது ஒரு மட்டரகமான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜைனமும் பௌத்தமும் வேதங்களையும் வைதிக கர்மங்களான வேள்விகளையும் ஏற்றுக்கொள்ளாத மதங்கள். அம்மதங்களில் சொல்லப்படும் அஹிம்ஸை , துறவு, தவம், ஆசையைத் துறத்தல், நல்ல நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் முதலிய கோட்பாடுகள் அம்மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்த வேதங்களிலும், உபநிஷத்துகளிலும், வைதிக இலக்கியங்களிலும் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்தான். அவையொன்றும் புத்தராலும் மஹாவீரராலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை. அவ்விருவரும் வேத இலக்கியங்களிலிருந்து அக்கருத்துகளை ஸ்வீகரித்துக்கொண்டு, அவற்றைத் தங்கள் மதங்களின் முக்கியக் கோட்பாடுகளாகக் காட்டிக் கொண்டார்கள்.
இந்த அஹிம்ஸை முதலிய கோட்பாடுகள் திருக்குறளில் காணப்படுவதால், திருக்குறள் புத்த சமய நூல் என்று சிலரும் சமண சமய நூல் என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்து அடிப்படையற்றது. பௌத்த சமண சமயக் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கருத்துக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது என்பதை மிக முக்கியமான ஆறு காரணங்களால் தெளிவுபடுத்துவோம்.
முதலாவதாக சமணமும் பௌத்தமும் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் திருவள்ளுவர் முதல் குறட்பாவிலேயே கடவுள் தான் உலகைப் படைத்தார் என்கிறார். அவர் சொல்லும் “ஆதிபகவன்” என்பதற்கு இந்த இரண்டு மதக்காரார்களும் தங்களுக்குச் சாதகமாகக் கூடப் பொருள் கொள்ளலாம். அப்படி இவர்கள் பொருள் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அக்குறளில் ஓர் அழகான உவமையைத் திருவள்ளுவர் காட்டுகிறார். அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் எப்படி முதலாக உள்ளதோ அதைப்போல உலகுக்கு முதலாக இருப்பவர் ஆதிபகவன் என்று கூறுகிறார்.
இங்கு ‘படைத்தல்’ என்பதற்கு என்ன இடம் இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். எந்த மொழியைப் பேச வேண்டுமானலும் முதலில் வாயைத் திறந்துதான் பேசமுடியும். வாயைத் திறக்கும்போது முதலில் வெளிவருவது அகர ஒலிதான். இதனால் மற்ற எழுத்துகளின் ஒலி உருவாக அகரமே காரணமாக இருக்கிறது என்பது புலனாகிறது. அப்படி உருவாகும் மற்ற எழுத்துகளுக்குரிய ஒலிகளிலும், அகரம் உள்ளீடாகச் சேர்ந்தே இருக்கிறது. அதனால், மற்ற எழுத்துகள் தோன்ற அகரமே காரணமாகிறது என்பதால்தான், “அகர முதல எழுத்தெல்லாம்” என்றார். எப்படி அகரம் மற்ற எழுத்துகளை எல்லாம் தோற்றுவித்ததோ, அதாவது படைத்ததோ அதைப் போலக் கடவுள் உலகைப் படைத்தார் என்பதே அந்த முதல் குறட்பாவின் கருத்து. “முதற்றே”என்றால் ‘முதலாக உடையது’ என்று பொருள். அதாவது அந்த முதல்வனான ஆதிபகவன் என்ற கடவுளிடமிருந்து உலகம் தோன்றியது என்று பொருள். ஸர்வசூன்யவாதிகளான பௌத்தருக்கும், கடவுள் உலகுக்குக் காரணம் இல்லை என்ற கருத்துடைய சமணருக்கும், இந்த முதற்குறட்பாவின் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?
இரண்டாவதாக, கொல்லாமையை வலியுறுத்தும் திருவள்ளுவர்,
“கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்” என்று அரசன், குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையை ஆதரித்துப் பேசுகிறார். எல்லா நிலையிலும் அஹிம்ஸையையே வலியுறுத்தும் சமண, புத்த சமயங்களுக்கு இந்தக் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?
மூன்றாவதாக, சமணர்களும் பௌத்தர்களும் வேள்விக்கும் அதற்கு அடிப்படையான வேதங்களுக்கும் எதிரானவர்கள். திருவள்ளுவர் “ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்”, “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்ற குறட்பாக்களால், அந்தணரையும் அவர்களின் நூலான வேதத்தையும், அவர்களின் தொழிலான வேள்வி முதலியவற்றையும், அவர்களின் அறமான வைதிக தர்மத்தையும், ஓர் அரசன் பாதுகாக்க வேண்டும் என்று கூறி, வேதவைதிக நெறியையும் அந்தணரையும் ஆதரித்துப் பேசுகிறார். திருவள்ளுவரின் இந்தக் கருத்து, சமண பௌத்த சமயக் கொள்கைக்கு எதிரான கருத்து.
நான்காவதாக பூமியில் விளையும் கிழங்கு வகைகளைக் கூட சாப்பிடக் கூடாது என்னும் அளவிற்கு அஹிம்ஸையை வலியுறுத்துவது சமண சமயம். ஆனால் உழவுத் தொழிலான வேளாண்மையை ஆதரித்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார் திருவள்ளுவர். இதனாலும் திருவள்ளுவர் சமணக் கொள்கைக்கு எதிரானவர் என்பது தெளிவாகிறது. பௌத்தம் அஹிம்ஸையை வலியுறுத்தினாலும் கொல்லாமல் தானாகவே இறந்த விலங்கின் மாமிசத்தை உண்ணலாம் என்று சொல்கிறது அந்த மதம். ஆனால் திருவள்ளுவரோ, “தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்” என்ற குறட்பாவின் மூலம் பிற உயிர்களின் மாமிசத்தை உண்பவர்களைக் கண்டிக்கிறார். இவர் எப்படி சமணராகவோ பௌத்தராகவோ இருக்க முடியும்?
ஐந்தாவதாக, துறவறம், நிலையாமை ஆகியவற்றையே முழுமையாக வலியுறுத்தும் சமண, பௌத்த சமயங்களுக்கு இல்லற இன்பம், காம சுகம், மக்கட்பேறு முதலியவை எல்லாம் ஸம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் திருவள்ளுவர் இல்லறம், அங்கீகரிக்கப்பட்ட தர்மதோடு கூடிய காம சுகம், இவற்றையெல்லம் ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் சமண, பௌத்தக் கருத்துகளுக்கும் திருக்குறளின் கருத்துகளுக்கும் எந்தவித உறவும் இல்லை என்பது புலனாகிறது.
ஆறாவதாக அசோகர், புத்த சமயத்தைத் தழுவிய பின் போரைக் கைவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதனால் போர் புத்த சமயத்துக்கு, உடன்பாடான விஷயமன்று என்பது புலப்படுகிறது. தாவரங்கள், புழு பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இவற்றைக் கூடக் கொல்லக் கூடாது என்ற கொள்கையை உடைய சமணர்கள், மனிதர்களைக் கொல்லும் போரை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் திருவள்ளுவரோ போரை ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் திருவள்ளுவரின் கருத்து சமண, பௌத்த மதக் கருத்துகளுக்கு முரணானது என்பது புலனாகிறது. இந்த ஆறு முக்கியமான காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், சமணர்களும் பௌத்தர்களும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட எந்தவித நியாயமும் உரிமையும் அணுவளவும் இல்லை என்பதுதான் புலப்படுகிறது.
இதைத் தவிர, கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் புலால் உணவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருக்குறளில் புலால் உணவு கண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூறுவதற்கோ இஸ்லாமியர் என்று கூறுவதற்கோ எந்தவிதமான அடிப்படையுமில்லை.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து- இரண்டாவது குறளில் “நற்றாள் தொழார் எனின்” என்று வருகிறது. இதில் வரும் ‘தொழுதல்’ என்ற வார்த்தை, இஸ்லாமுக்குரிய வார்த்தை என்றும், முஸ்லிம்கள்தான் வழிபாட்டை ‘தொழுதல்’ என்று சொல்வார்கள் என்றும், மற்ற மதத்தினர் வழிபாட்டுக்கு அச்சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் இஸ்லாமியர் ஒருவர் கூறி வருகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இந்த இஸ்லாமியருக்குத் தன் மதத்தைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றியும் ஆழமான அறிவு இல்லை என்பது தான் தெரிகிறது. இஸ்லாமியரின் வழிபாட்டுக்கு அரபி மொழியில் “நமாஸ்” என்று பெயர். அச்சொல்லுக்கு இணையாகத், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழில் உள்ள தொழுகை என்ற சொல்லை அமைத்துக்கொண்டார்கள்.
’நின் தாள் நிழல் தொழுதே’ என்றும், ‘நிற் பேணுதும் தொழுதே’ என்றும், ‘நின் அடி தொழுதனெம்’என்றும் சங்க இலக்கியமான பரிபாடலில் ‘தொழுதல்’ என்ற சொல் திருமால் வழிபாட்டைக் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆகவே தொழுதல் என்ற சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இந்த இஸ்லாமியருக்கு, மதங்கள் ஸம்பந்தமான அடிப்படை அறிவு இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. அதனால் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எந்தவித உரிமையும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏன் அவர்கள் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் ஓர் அரசியல்தான்.
— தொடரும்