அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 10 (குறவன்)

ச.கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறும் குறவன் மலைநிலத்து மக்களினத்தவன் ஆவான். ‘குறவர்’ என்னும் தொகைப்பாத்திரம் பின்புல விளக்கமாக மட்டுமே பயன்பட்டுள்ளது. தலைவன் கூற்றிலும், தோழி கூற்றிலும் இடம்பெறும் குறவன் பாடல் சான்ற புலனெறி வழக்கில் பேசும் தகுதி அற்றவன். அவன் பேசியதாகத் தோழி எடுத்துச் சொல்வதும்; தலைவன் அவனை மையப்படுத்திப் பேசுவதும் காண்கிறோம். எனினும் குறவன் முழுமையான பாத்திரப் படைப்பாக அகப்பாடல்களில் காணப்படுகிறான்.
குறவனின் தோற்றமும் தொழிலும் செயலும்
குறவன் பொன் போன்ற வேங்கைப்பூங் கொத்தைச் சூடியிருப்பான். வளைந்த வில்லையும் விரைந்து செலுத்தக்கூடிய அம்புகளையும் தாங்கியிருப்பான். இனிய பலாச்சுளைகளிலிருந்து செய்த தேறலைத் தன் சுற்றத்தோடு சேர்ந்து அருந்துவான். உடன் சேர்ந்து ஓடி வரும் வேகம் மிகுந்த நாய் தொடர வேட்டைக்குச் செல்வான் (அகம்.- 182). மலைப்புறத்தின் உச்சியில் கிடைக்கும் தேனைத் தம் கிளையோடு சேர்ந்து சேகரிப்பான் (அகம்.- 322). குறவர் பாம்பின் விஷம் போல விரைந்து போதையூட்டும் தோப்பியை மலையுச்சியில் இருக்கும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவர். தழையுடை அணிந்த குறமகளிர் ஊற்றிக் கொடுக்கத் தாமும் மாந்திப் புனக்காவலை மறந்து விடுவர். யானை வந்து தம் புனத்தில் மேய்ந்து செல்லச் சினம் கொள்வர். பின்னர் அந்த யானையை அழிக்கத் தம் கிளையோடு இளையவர் முதியவர் அனைவரும் சேர்ந்து வில்லோடு திரிவர் (அகம்.- 348). தினையை விளைவிக்க மழை வேண்டி வழிபட்டு ஆரவாரிப்பர் (ஐங்.- 251). கதிர் முற்றிய பருவத்தில் அறுவடை செய்வர் (ஐங்.- 284).
நாட்டார் வழக்காற்றில் குறவன்
“குறவன் காதல் மடமகள்” (ஐங்.- 251, 255, 258, 259, 260)
என்ற தொடர் செவ்விலக்கியக் கால நாட்டார் வழக்காற்றில் மறித்து வரும் தொடராகும்; அதாவது மீண்டும் மீண்டும் இடம் பெறுவதாகும். மக்கள் வாய்மொழியில் பயின்று வந்த பெருவழக்காகும். ஏனெனில் இத்தொடர் ஐங்குறுநூற்றின் குன்றக் குறவன் பத்தில் பயின்று வருவது போன்றே நற்றிணையிலும் பயின்று வருவதைக் காண்கிறோம்.
“குறவன் காதல் மடமகள்” (நற்.- 201& ஐங்.- 260)
பெறுவதற்கு அரியவள் என்று தலைவன் கணக்குப் போடுகிறான்.
“குறவர் காதல் மடமகள்” (நற்.- 353)
பற்றிய தோழியின் கூற்றில்; தலைவி இல்லறத்தில் இருந்து விருந்தயர்வதில் வல்லவள் என்னும் உள்ளுறை பொதிந்துள்ளது.
உவமப்பொருளில் குறவன்
தலைவியின் எழில் தொலையத் தாய் வருத்தமுறக் கண்ட தோழி;
“……………………………… குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவுக்களம் கடுப்ப நாளும்” (அகம்.- 232)
அன்னை வேலனை அழைத்து வெறியாட்டு அயர்வாள் என்கிறாள். குறவர் தம் மனையுறை முதுபெண்டிருடன் சேர்ந்து குரவை அயரும் போது எழும் ஆரவாரமும், சிதறிய மலர்களும் பலிப்பொருட்களும்; இனிமேல் எடுக்கப் போகும் வேலனின் வெறிக்களத்திற்கு உவமையாக அமைந்துள்ளன.
உள்ளுறை உவமத்தில் குறவன்
காட்டில் முள்ளம்பன்றியை வேட்டையாடினான் குறவன். சிக்கிய பன்றியால் அருகில் இருந்த காட்டு மல்லிகைப் புதர் குருதி சிந்துவது போல் காட்சியளித்தது.
“…………………………………குறவன் காட்ட
குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
முளவுமாத் தொலைச்சும் குன்றநாட” (அகம்.- 182)
என்ற தோழியின் கூற்றில் குறவனின் செயலும் விளைவும் உள்ளுறையுடன் அமைந்துள்ளன. காட்டு மல்லிகை மணம் மிகுந்தது; குருதி புலவு நாறுவது. குறவன் முள்ளம்பன்றியைத் தான் வேட்டையாடுகிறான். ஆனாலும் அது பதுங்கியிருந்த புதரில் குருதி பட்டதால்; மல்லிகை மணத்தையும் மீறிப் புலவு நாறுகிறது. அதுபோலத் தலைவி பண்பிற் சிறந்தவள்; ஆனால் தலைவனது கேண்மையின் விளைவால்; இப்போது மேனி வேறுபட்டுத் தாய்க்கு அவளது களவொழுக்கம் புலப்பட்டு விட்டது என்கிறாள் தோழி. அகப்பாடலின் உரிப்பொருளை நாசூக்காக உள்ளுறையால் விளக்க குறவனின் வேட்டை பற்றிய விளக்கம் பயன்பட்டுள்ளது.
உரிப்பொருள் ஒப்பீட்டுக் களத்தின் கருவியாகக் குறவன்
குன்றக்குறவனும் அவனது மனைவியும் ‘பால்’ மடுத்துள்ளனர்; அதாவது சாராயம் குடித்துள்ளனர். அன்றைய சமுதாயத்தில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே. (நற்.- 341)
இப்பாடலில் முதற்பொருளாவன மலைப்புறத்துக் காட்டுப் பாசறையாகிய இடப்பின்புலமும்; நாள் மயங்கிக் கூதிரொடு வேற்றுப்புல வாடை அலைக்கும் காலப்பின்புலமும் ஆகும். குன்றக்குறவன் இங்கே சிறுபாத்திரம் ஆகிறான். ஏனெனில் தலைவன் தன் நெஞ்சோடு பேசும்போது; குறவனின் மனைவி நிலையையும் தன் மனைவி நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான். வினைவயிற் பிரிந்தவன் ஆற்றித் தன் தலைவியை நினைத்து ஏங்குகிறான்.
சிறு மயக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றத்தோடும் சேர்ந்து; அதாவது பங்காளிகளோடு சேர்ந்து விளையாட்டும் சிரிப்புமாகக் குழறித் தன் தலைவனோடு சேர்ந்து; அவனுக்கு இன்பமூட்டும் கேலிப் பேச்சில் ஈடுபடுகிறாள் மடந்தை. இங்கே கூட்டுக்குடும்பக் காட்சி புனையப்பட்டுள்ளது. சுற்றத்தார் அருகு இருந்தாலும்; குறவனும் மனைவியும் தமக்கு மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய அந்தரங்கப் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்; அதாவது குறுநொடி பயிற்றுகின்றனர். இந்த இல்லற இனிமை முல்லைத்திணைக்கு உரியது. குறமக்களின் இந்த இன்பநிலையுடன்; தன் நிலையையும் தன் தலைவியின் நிலையையும் ஒருங்கு எண்ணி முரண்படுத்திப் பார்க்கிறான். ‘ஆறாத சினம் காரணமான போருக்காக; மழை பொழியும் கூதிர் காலத்தில்; காட்டாறு பெருகும் கரையில்; பகலா? மாலையா? என்று சொல்லமுடியாத பருவத்தில்; வேற்றுப்புலத்தினின்று (வடநாட்டிலிருந்து) வீசும் வாடைக்காற்று துன்பத்தை மிகுதிப்படுத்த; தலைவியைப் பிரிந்து தனிமையில் வாடுகிறேனே’ என்பது தலைவனின் தவிப்பு.
பாடலில் இரண்டு துணை இடம்பெறுவதே ஒப்பீட்டிற்காகத் தான். முதல் துணை மடந்தையின் கணவனாகிய குன்றக்குறவன். இரண்டாவது துணை பாசறையில் பிரிந்து இருக்கும் தலைவனின் மனைவி.
எவ்வளவு அழகு! வாழ்க்கைத் துணையாகக் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அமைவர் என்ற கருத்து இடம்பெறும் பாடல் இது.
வேந்தனுக்கும் வேளுக்கும் இடையில் போர் நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாவது ‘வரிப்பறை’ பற்றிய உவமை. வரி என்பது நெல்லைக் குறிக்கும். எனவே வரிப்பறை நெல் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பறை ஆகும்
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் குன்றக்குறவனின் மனைவி போதையில் கிளையை ஒடித்துப் பேசுவதாகச் சொல்லும் உரை பொருளை மேம்படுத்தவும் இல்லை; சூழ்நிலைக்குப் பொருத்தமாகவும் இல்லை.
பாடலில் குன்றக்குறவன் இடம் பெறுகிறான் என்பதற்காக குறிஞ்சித் திணை சார்ந்த பாடல் என்று சொல்கிறார் உரையாசிரியர்; ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தலைவன் பாசறையில் தலைவியைப் பிரிந்து ஆற்றி இருக்கிறான். எனவே முல்லைத் திணை; உரிப்பொருளை அடிப்படையாக வைத்தே திணையை அறுதியிட வேண்டும்.
தந்தைமையின் பிரதிநிதியாகும் குறவன்
குறிஞ்சித் திணைத் தலைவியின் பெருமை பற்றித் தலைவன் பேசும் போதெல்லாம் அவளது தந்தையாகிய குறவனின் பாசத்தை மையப்படுத்தியே பாடல்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.
குறவன் கடவுளை வேண்டிப் பெற்ற மகள் இவள் என்கிறாள் தோழி (ஐங்.- 257). வண்டுபடு கூந்தல், தண்டழை உடை, வளைக்கை, முளைவாய் எயிறு, தேவலோகப் பெண் போன்ற சாயல், தலைமைத்தன்மை, பருவமெய்திய இளமை, சிவந்த வாய், மயில் போன்ற ஒயில், மென்தோள் அனைத்தும் ‘குன்றக் குறவன் காதல் மடமகளி’டம் இருப்பதாகத் தலைவன் பேசுகிறான் (ஐங்.- 251, 256, 258). இவ்வாறு தலைவியின் அழகு, பண்பு, பெருமை அனைத்தும் அவளது தந்தையோடு சேர்த்தே பேசப்படுகின்றன.
நீரைப் போலக் குளிர்ந்த சாயலும் தீயைப் போல மனவலிமையை அழிக்கும் தன்மையும்;
“சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளி”டம் (குறுந்.- 95)
இருப்பதாகத் தலைவன் உரைக்கிறான்.
மகள் தரையில் நடந்தால் கூட பாசத்தில் உருகி ‘உனக்கு இது ஆகாது மகளே; பாதங்கள் சிவந்து விடும்’ என்று உரைக்கும் தந்தையைக் குறவன் என்று குறிப்பிடாவிட்டாலும்; குறிஞ்சித் திணைத் தலைவியின் தந்தை குறவன் தானே. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இயற்கையாக அமையும் அன்பின் ஈர்ப்பினை;
“எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
எவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)
என்ற தோழி தலைவனிடம் தொடர்ந்து குறவர் செயலைப் பேசுகிறாள்.
பின்புலத்தைத் தெளிவிக்கும் குறவன்
தினை அறுவடைக்குப் பின்னர் புனத்தில் விதைத்த அவரைக்கொடி படர்ந்து பூக்கும் காலம் முன்பனிக்காலம். தலைவன் வினைமுடிந்து மீளத் தாமதமாகும் காலத்தைக் குறிக்கக் குறவனின் செயலைப் புலவோர் பயன் கொள்கின்றனர்.
“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்
அரும்பனி அச்சிரம் வாராதோரே” (குறுந்.- 82)
என்று தலைவி புலம்புவது காண்க.
குறவர் எனும் தொகைப் பாத்திரமும் இடப்பின்புல விளக்கத்திற்கும் காலப்பின்புல விளக்கத்திற்கும் துணை செய்கிறது.
“நிலநீர் ஆரக் குன்றம் குழைப்ப
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி” (நற்.- 5)
என்னுங்கால் மிகுந்த மழைக்காலத்தின் நிலைமை குறவர் செயலால் விளக்கமடைகிறது. குறவர் வெட்டி அழித்தலால் குறைப்பட்ட நறைக்கொடி மீண்டும் தளிர்த்துச் சந்தன மரத்தின் மேல் படர்ந்து ஏறியது. இப்பகுதி குறவர் செயலால் தெளிவான பின்புல விளக்கமாக அமைந்துள்ளது.
முடிவுரை
குறவன் பேசியதாகத் தோழி எடுத்துச் சொல்வதும்; தலைவன் அவனை மையப்படுத்திப் பேசுவதும் காண்கிறோம். உவமப் பொருளாகவும், உள்ளுறைப் பொருளுக்குத் துணை செய்பவனாகவும், பின்புலச் சித்தரிப்பை முழுமையுறச் செய்பவனாகவும், உணர்வுச் சித்தரிப்புக்கு ஏற்ற ஒப்பீட்டுக் களம் அமைக்கும் கருவியாகவும், தலைமகளின் தந்தையாகவும், முழுமையான பாத்திரப் படைப்பாகவும் குறவன் அகப்பாடல்களில் காணப்படுகிறான்.