கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 9

-மேகலா இராமமூர்த்தி

இராமனுக்குப் பட்டமில்லை என்று சொன்னவர்களின் கொட்டத்தை அடக்கி அண்ணனை அரசனாக்கியே தீருவேன் என்று சீற்றத்தோடு மொழிந்த இளவல் இலக்குவனைத் தன் பக்குவமான சொற்களால் சாந்தப்படுத்திய இராமன், அவனையும் அழைத்துக்கொண்டு தாய் சுமித்திரையின் இருப்பிடத்தை அடைந்தான். செய்தியறிந்த சுமித்திரை இலக்குவனைப் பார்த்து, ”நீயும் இராமனோடு காட்டுக்குப் புறப்படு! இனி இராமனே உனக்குத் தந்தை; சீதை உனக்கு அன்னை. அவர்கள் மீண்டும் அயோத்தி திரும்பினால் நீயும் திரும்பி வா! இல்லையேல் இராமனுக்கு முன்னால் மடி! உன் வாழ்வை முடி!” என்றுரைத்துவிட்டு இருவரையும் அணைத்துக்கொண்டு கண்ணீர்பெருக்கினாள்.

அவளைத் தேற்றிவிட்டு, உடுத்தியிருந்த உடைகளைக் களைந்து மரவுரி அணிந்துகொண்டு இராமனும் இலக்குவனும் வெளியில் வந்தனர். அடுத்து சீதையின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான் இராமன். அவனது கோலம் கண்ட சீதை துணுக்குற்றாள். அவளிடம் நிலைமையை விளக்கிய அவன், ”யான் கான்சென்று மீளுவேன் விரைவில்; நீ வருந்தாது ஈண்டு இருப்பாயாக!” என்று சொல்லவே, அச்சொற்கள் அவள் செவியைச் சுட்டன. இராமன் அரசாட்சி இழந்ததை பற்றிக்கூடச் சீதை கவலவில்லை; தன்னைப் பிரிந்து அவன் கானகம் செல்வதை அறிந்தே பெரிதும் வருந்தினாள்.  

அதுகண்ட இராமன், ”பெண்ணே! சூரியனின் வெம்மை மிகுந்த, கற்களும் முட்களும் நிறைந்த காட்டுவழியில் பயணப்படுவதற்குச் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மலரனைய நின் பாதங்கள் ஏற்றவை அல்ல! அதனால் நீ இங்கேயே இருப்பதுதான் நல்லது” என்றான்.

சீதை அச்சொற்களைத் தாளமாட்டாமல்,

”இரக்கமற்ற மனத்தோடு பற்றில்லாது என்னைவிட்டு விலகிச் செல்கின்றாய்! காட்டுவழியில் ஊழிக் காலத்துச் சூரியனும் சுடுவான் என்பது எத்தகையது? உன் பிரிவு சுடுவதைவிடவா அந்தப் பெருங்காடு என்னைச் சுட்டுவிடும்? என்றாள் கண்களில் நீர்மல்க!

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங் காடு என்றாள். 
(கம்ப: நகர்நீங்கு படலம் – 1917)

சீதையின் இந்தக் கருத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற அரச புலவர் எழுதிய குறுந்தொகைப் பாடலொன்று!

தலைவியைப் பிரிந்து பொருள்தேட விழைகின்றான் தலைவன். ”உன்னைப் பிரிந்து தலைவி எங்ஙனம் இருப்பாள்?” என்று தோழி தலைவனிடம் வினவ, ”நான் செல்லும் ஓமை மரங்கள் நிறைந்த, பாழ்பட்ட பாலைநிலமானது தலைவிக்கு மிகுந்த துன்பத்தைத் தரக்கூடியது” என்கிறான் தலைவன்.

அதுகேட்டு வருத்தப் புன்னகை உதிர்த்த தோழி, “பெரும! பாலைநிலம் இன்னாதது என்றால் உம்மைப் பிரிந்து மனையில் தனித்திருப்பது மட்டும் தலைவிக்கு இனிமையைத் தந்துவிடுமோ?” என்று கேட்கிறாள்.

”…ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.”
(குறுந்: 124 – பாலைபாடிய பெருங் கடுங்கோ)

சீதையின் கூர்மையான வினாவுக்கு என்ன மறுமொழி புகல்வது என்று இராமன் சிந்தித்திருந்த வேளையில், விரைந்து உள்ளே சென்ற சீதை தானும் சீரம் (மரவுரி) உடுத்து அவனோடு புறப்படுவதற்கு ஆயத்தமாக வந்துநின்றாள்.

சீதையை அந்தக் கோலத்தில் கண்டவர்கள் அனைவரும் அழுது துடித்தனர். உச்சமான துன்பநிலையை அவர்கள் அடைந்தும் மாளாததற்குக் காரணம் அவர்கள் விதி முடியாமையே அன்றி வேறில்லை என்கிறார் கம்பர்.

சீதை கானகம் செல்லத் தயாராகிவிட்ட நிலையிலும்கூட அவளை உடனழைத்துச் செல்ல இராமனுக்கு விருப்பமில்லை. ”நீ உடன்வருவதால் ஏற்படப்போகும் விளைவுகளை அறிந்திலை; நீ என்னோடு வந்தால் எனக்கு எல்லையற்ற இடர் தருவாய்” என்று கூறி அவள் வருவதைத் தடுக்கவே முனைகின்றான்.

…விளைவு உன்னுவாய்
அல்லை போத அமைந்தனை ஆதலின்
எல்லை அற்ற இடர் தருவாய் என்றான்.
(கம்ப: நகர்நீங்கு படலம் – 1922)

தவ வாழ்க்கை மேற்கொள்ளப்போகும் இடத்திற்குப் பெண்டிரை உடனழைத்துச் செல்வது தேவையற்றது; அத்தோடு பெண்டிரை அழைத்துச் சென்றால் அவர்களைக் காப்பதையே ஆடவர் முழுநேர வேலையாகச் செய்யவேண்டிவருமே தவிர வேறு பணிகளில் நிம்மதியாக ஈடுபட முடியாது என்பதையெல்லாம் யோசித்தே தீர்க்க தரிசனத்தோடு சீதையை உடனழைத்துச் செல்ல மறுக்கின்றான் இராமன்.

ஆனால் சீதையோ வந்தே தீருவேன் என்று கிளம்புவதோடு, தன்னை அழைத்துச்சென்றே ஆகவேண்டும் என்று இராமனை வற்புறுத்தவும் செய்கின்றாள். அப்போது அவள் பேசும் வார்த்தைகள் சில, அவள் தரத்தைக் குறைக்கும் வகையில் வரம்பு கடந்து செல்கின்றன வால்மீகி இராமாயணத்தில். அத்தகைய மொழிகளை நற்குடியில் பிறந்த பெண்ணொருத்தி தன் கணவனைப் பார்த்துப் பேசுவது அவளுக்குப் பெருமை தராது என்றெண்ணிய கம்பர் அவற்றைத் தம் காப்பியத்தில் சேர்க்கவில்லை.

சீதையின் தீர்மானத்தை அறிந்த இராமன் அவளையும் இளவல் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு தன் கானக வாழ்க்கையைத் தொடங்கச் செல்லுகின்றான்.

இம்மூவரையும் கானகத்தேவிட்டு நொந்த நெஞ்சோடு அரண்மனை திரும்புகின்றான் தேரோட்டி சுமந்திரன். வசிட்ட முனிவரிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி அவரையும் தயரதன் அரண்மனைக்கு அழைத்துவருகின்றான்.

அரண்மனை வாயிலில் தேரொலி கேட்டதும் மகன் இராமன் வந்துவிட்டானோ எனும் நைப்பாசை சோர்ந்து படுத்துக்கிடந்த தயரதன் மனத்தில் சற்றே எழ, ”வீரன் வந்துவிட்டானா?” என்று வசிட்டரைப் பார்த்து வினவுகின்றான். ”இல்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேதனையோடு அகல்கின்றார் வசிட்டர்.

அருகில்வந்து நின்ற சுமந்திரனைப் பார்த்த தயரதன், ”இராமன் அருகிலிருக்கிறானா தொலைவுக்குச் சென்றுவிட்டனா?” என்று கேட்கிறான். ”சேய்த்தேயுள்ள கானகத்திற்குத் தம்பியொடும் தாரத்தொடும் போய்விட்டான் இராமன்” என்கிறான் சுமந்திரன்.

மகன் வனம் புகுந்தான் என்ற சொல்லைக் கேட்டதும் அதனைத் தாங்கும் திறனின்றி உயிர்நீங்கி வான் புகுந்தான் தயரதன் என்கிறது கம்பரின் இராம காதை.

நாயகன் பின்னும் தன் தேர்ப்
     பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணியனோ என்று
     உரைத்தலும் தேர் வலானும்
வேய் உயர் கானம் தானும்
     தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான் என்ற
     போழ்தத்தே ஆவி போனான். (கம்ப: தைலம் ஆட்டு படலம் – 1988)

ஈமக் கடன்கள் ஆற்றுதற்குப் புதல்வர்கள் யாரும் அருகில் இல்லாத சூழலில், பரதனுக்குத் தகவல் அனுப்பிவிட்டு, தயரதனின் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இட்டுப் பாதுகாக்கின்றார் வசிட்டர்.

இக்காலத்தில் இறந்துபோன பெற்றோரின் உடலை வெளிநாட்டிலிருக்கும் பிள்ளைகள் வீடுவந்து சேரும்வரை அதிகுளிர் பெட்டியில் (freezer box) வைத்துப் பாதுகாப்பதைப்போல் அந்நாளில் தைலத்தில் (எண்ணெய்) வைத்திருந்து கெட்டுப்போகாமல் காத்திருக்கின்றார்கள் என்பதை இதன்மூலம் நாம் அறியமுடிகின்றது.

[தொடரும்]

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *