-மேகலா இராமமூர்த்தி

நீர்த்துளி சொட்டும் வண்ண இலைகள் கொண்ட செடியைக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது இந்தப் படம். நிழற்பட நிபுணருக்கு  என் நன்றி!

இயற்கையின் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எத்தனை விதமான விசித்திர உயிர்கள்! அதிலும் தாவரங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்துபடைப்பதோடு நம் மனத் துயருக்கும் மருந்தளிக்க வல்லவை!

நுணுகிய நோக்குக் கொண்ட நம் கவிஞர்களின் கலைக்கண்கள், இந்தப் படத்தை எப்படி அணுகியிருக்கின்றன என்பதை அவர்களின் கவிதைகள்வழி அறிந்துவருவோம்!

*****

”மேகக் காதலனால் கொட்டப்பட்ட நீர்த்துளிகள் இந்தச் செடியின் உடலெங்கும் முத்தத் தடங்கள்போல் மின்னுகின்றன” எனும் அழகிய கற்பனையைத் தன் கவிதையில் ஏற்றியிருக்கின்றார் திருமிகு. விஜயகுமாரி.

சொட்டும் மிச்சமின்றி
கொட்டி விட்டேன் காதலை
சுமக்கிறாய்,
உன் மேனியெங்கும்
முத்தத்தடங்கள் போல.
ஏந்துகிறாய்
அன்னை போல்
கண்ணாடிக் குழந்தைகள் போல
முகம் பார்த்துக்கொள்கிறேன்
நெடுநாள் கழித்து
என் சாயல் அதனில்.
சூரியனைப் பற்றி
கவலை கொள்ளாதே.
நாளையும் வருவேன்
காதலிக்க.
இப்படிக்கு
உன் நான்
மேகத்திலிருந்து!

*****

பனித்துளியால் இலைக்கழகா? இலையால் பனித்துளி அழகா? என்று விடை வேண்டி வினாக் கணை தொடுத்திருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

பனித்துளி தாங்கிய இலைகள்
பருவப்பெண்ணின் அழகிய உதடுகள்
வண்ணவண்ண நிறத்திலிருப்பதனால்
வானவில் வடிவில் நின்றதுவோ?
பளபள நிறத்தில் பனித்துளிகள்
மழைத்துளியின் மாற்று உருவமதோ?
மொத்தத்தில்
பனித்துளையால் இலைக்கழகா?
இலையால் பனித்துளி அழகா?
விடையைத்தான் கூறுங்கள்
வெகுநேரம் காத்திருப்பேன்!

*****

”பயனுள்ள துளசிச்செடி பக்கத்துவீட்டில் வாடியிருக்க, பணக்காரவீட்டுப் பயனிலாச் செடியான எனக்கோ நிதமும் விலைகொடுத்து நீருற்றுகின்றார்கள்!” என்று உள்ளம் குமுறும் செடியினைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதன் கவிதையில்.

செடியின் உள்ளக் குமுறல்!

வசதி உள்ளவன்
வீட்டுத் தோட்டத்துச்
செடி நான்!

பணம் கொடுத்துத்
தண்ணீர் வாங்கி
என்னை வாழ வைத்து
என்ன பயன்?

அழகுக்கான செடி
பூக்காத கொடி
நீரே என் குடி
செல்லாத உருப்படி!

அடுத்த வீட்டுத்
துளசி மாடம்
நீரின்றி வாட்டம்!

குடிக்க நீரின்றித்
தெரு எல்லாம்
தவியோ தவிப்பில்
பணக்கார வீட்டில்
தோட்டத்துச் செடியாக
நானிருப்பது
எனக்கது சிறுமையே!

*****

”அகிலத்தை அசத்தும் அழகிய அழுகாத மலர் நான்! என்மீது விழுந்த பனித்துளியால் இன்னும் வாடாமல் வாழ்கிறேன்” என்று தன்னிலை விளக்கும் ரோஜாவைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. செ. சீத்தாலட்சுமி அய்யப்பன்.

சிவந்த இதழுடன்
சிரித்த முகத்துடன்
கிளையுடன் இருந்தாலும்
சிலையாக நின்றாலும்
தனியாக இருக்கிறேன்
வேரில் ஈரமில்லை
வீழவும் துணிவில்லை
ஆணிவேர் ஆனேன்
ஆசை பல கொண்டேன்
அடையவில்லை அனைத்தையும்
ஏணி போல
ஏற்றிவிட்டேன்
ஏனோ……
நான் ஏறவில்லை
ஏமாற்றமும் எனக்குஇல்லை
அகிலத்தை
அசத்தும்
அழகிய
அழுகாத
மலர் நான்
என் மீது விழுந்த
பனித்துளியால்
இன்னும்
வாடாமல் வாழ்கிறேன்!

*****

முள்ளாகவும் மலராகவும் மாறி மாறி விளங்கும் வாழ்வின் தன்மையை அழகிய சொற்களால் கவிச்சரமாக்கித் தந்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

முள்ளும் மலரும்

ஒருபக்கம்…
மற்றோரின் வாழ்வு கண்டு
ஆற்றாமை கோபம் கொண்டு
விழுமியங்கள்யாவும் கெட்டு
அழுக்காறு முள்ளாய் வளரும்!
மறுபக்கம்…
எளியோரின் இன்னல் கண்டு – அவர்
துயர் நீக்கி வாழவைத்துக்
களிப்பூட்டி உய்விக்கும்
உயர் எண்ணம் பூவாய் மலரும்…

ஒரு நேரம்….
காலமதை வீணடித்துக்
களிப்பொன்றே வாழ்வென்று
முயற்சியென்ற சொல்கூட
முள்ளாய்க் குத்தும்….
மறு நேரம்….
புதுமுயற்சி பலசெய்து
பழமைகளைக் களைந்து
புத்துலகம் படைப்பதற்கு
உத்வேகம் பூவாய் மலரும்…

வாழ்க்கையென்ற செடியினிலே
வளர்வது முள்ளா? மலரா?
வளர்கையில் எதுவும் விளங்குவதில்லை!

சில நேரங்களில் ….
முள் கொடுத்த சுகானுபவமும்
மலர் கொடுத்த காயங்களின் வடுக்களும்
அனுபவ வானில் மின்னலாய்க் கீற்றுவிடும்!

*****

கருத்துமணம் வீசும் கவிதைகளைத் திருத்தமாய்த் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்து!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

கண்ணீர் துடைக்க…

முள்ளாலும்
முழுப் பாதுகாப்பில்லை,
எட்டா உயரத்தில்
மொட்டாய் இருந்தாலும்
எட்டிப் பறித்துவிடுகிறான்
மனிதன்…

அழகு அழகு என்று
கூறிக்கொண்டே
அழகை அழிப்பதுதான்
அவன் வேலை…

அதிலும் இப்போது
காலா காலத்தில்
பூவும் வரவில்லை
பொழுதும் போகவில்லை,
அழுது வடிகிறது
அழகு ரோஜாச் செடி…

அதோ,
ஆறுதல் சொல்லிக்
கண்ணீர் துடைக்கக்
கீழை வானில் வருகிறான்
கதிரவன்…!

”அழகை அழிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் மனிதன், எட்டாத உயரத்தில் நான் மொட்டாக இருந்தாலும் எட்டிப் பறித்துவிடுகிறான். அதோ! என் கண்ணீரைத் துடைத்துத் தேற்ற வருகிறான் கதிரவன்” என்று எதார்த்தத்தைக் கவிநயத்தோடு கலந்துதந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.