Category: பத்திகள்

பத்தி

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (106)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் கூடிய மடலுடன் உங்கள் முன்னே மற்றொரு வாரத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருக்கும் இன்று மே மாதம் முதலாம் திகதி. உழைப்பவர்களின் மகத்துவத்தைப் போற்றும் உன்னதமான தினம். வாழ்க்கை முழுவதும் உழைத்து உருக்குலைவோருக்காய் உலகம் முழுவதும் அவர்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தினம்.

    உழைப்பு என்பது எத்தனை மகத்தானதோ உழைப்பதற்காய் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அத்தனை மகத்தானவையே. தொழிலாளி எனும் திரைப்படத்தில் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் வரிகளில் டி.எம்,எஸ் இன் கணீர் குரலில் மக்கள் திலகம் நடித்திருந்த பாடல்,

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    எனும் பாடல் மிகவும் அர்த்தம் வாய்ந்த பாடலாகும். உழைப்பு எனும் பதம் என் வாழ்வில் எடுத்த பங்குகளை நான் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன். எனது 18வது வயது வரை நான்கு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசிச் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்து மண்ணிலே போடப்பட்ட போது எனக்கு வயதோ வெறும் 181/2 யே. மாணவனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் அந்நாளைய வழக்கப்படி பகுதிநேர வேலையோடு கூடிய முழுநேர மாணவனாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகினேன். உழைப்பின் மகத்துவம் அப்போதுதான் எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையின் புதிர்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியது உழைப்பு என்பது வெறும் உதியத்திற்காக செய்வது மட்டுமல்ல ஒரு மாணவனாக நான் வந்த லட்ச்சியத்தை நிறைவேற்றுவதற்காக அஏஏஇய மொழியில் கல்வி கற்பது கூட ஒருவகை உழைப்பே என்பது புரிய ஆரம்பித்தது. உழைப்பின் பலனின் ஆனந்தமும் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது. வார விடுமுறைகளில் கட்டிடங்களில் காவல்காரனாகப் பணிபுரிந்து கொண்டு வார நாட்களில் முழுநேர மாண்வனாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் என் ஒருவனின் வாழ்ப்வாத்ரத்திற்காகவே இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமானல் நான்கு பிளளைகளை வளர்த்தெடுக்க என் பெற்றோர் செய்திருக்கக்கூடிய உழைப்பின் கடினம் புரிய ஆரம்பித்தது. எனது பெர்றோர் எனக்காக செய்தவைகள் ஏதோ அவர்களது கடமை என்ற வகையில் அதுவரைகாலமும் வாழ்ந்து முடித்த என் வாழ்க்கையின் தன்னலத்தை எண்ணியபோது என்மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்ட கணங்கள் எண்ணிலடங்காதவை.

    மாணவனாக இருக்கும் போதே மணமுடித்துக் கொண்ட எனது கல்வியை முடித்துக் கொள்வதற்காக என் அன்புக்குரிய என் மனைவி செய்த கடுமையான உழைப்பு , ஒரு மகனை ஈன்ற பின்னும் கூட முழுநேர பணியுடன் இரவு நேர கல்லூரிப் படிப்பின் மூலம் தனது கல்வித்தகமைகளைப் பெற்றுப் பட்டம் வாங்கிய என் மனைவியின் கடின உழைப்பு எனக்கு மேலும் பல பாடங்களைப் புகட்டியது.

    இந்த உழைப்பாளர் தினம் என்பதெல்லாம் எதற்காக என்று எண்ணும் பலர் இருக்கிறார்கள். இதை எமது வாழ்நாளில் நாம் செய்த உழைப்பினை அல்லது செய்திருக்கக்கூடிய செய்யாமல் விட்டுப்போன உழைப்பினை மீள்பரீசீலிப்பதற்கான ஒருநாளாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் தானே !

    இன்று என் கண்முன்னே நான் காணும் பலவகை மனிதர்கள். தமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் கடும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைத்துக் கொண்டிருப்போர் ஒருபுறம், தாம் உழைக்காமல் இருப்பதனை நியாயப்படுத்தப் பலவிதமான காரணங்களைக் கண்டுபிடித்துச் சோம்பலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருபுறம், உழைக்க வேண்டும் எனும் அவா இருந்து உழைக்க முடியமால் வேதனையுறும் உடல் ஊனமுற்றோர் ஒருபுறம் என எத்தனையோ வகையினர்.

    இவ்வாழ்க்கை எமக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். எமக்குக் கிடைக்கும் தருணங்களைப் பயன்படுத்தி எமது உழைப்பின் மூலம் எமது நிலையை உயர்த்துவதோடு எம்மால் உதவக்கூடியவர்களுக்கு உதவும் மனப்பான்மையோடு வாழ்வதே இவ்வாழ்க்கையை எமக்குக் கொடுத்த அந்த அனைவருக்கும் பொதுவான சக்திக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

    எனது அன்பினிய உறவுகள் அனைத்திற்கும் எனது அன்பான உழைப்பளர் தின வாழ்த்துகள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • குறளின் கதிர்களாய்…(26)

     

    செண்பக ஜெகதீசன்

         

    உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்

    கச்சாணி யன்னா ருடைத்து.

          -திருக்குறள் -667(வினைத் திட்பம்)

     

    புதுக் கவிதையில்…

    உருளும் பெரிய தேரும்

    உருண்டோடிச் சென்றிடத்

    தேவை,

    உருவில் சிறிய அச்சாணி..

     

    இதுபோல் திடமொடு

    மாந்தர்

    அகிலத்திலுண்டு..

     

    அதனாலவர்

    உருவத்தை வைத்து

    எள்ளி நகையாடுதல்

    ஏற்றதல்ல…!

     

    குறும்பாவில்…

    பெருந்தேருக்கு சிறு அச்சாணிபோல்

    புவியில் மாந்தர் உளதால்,

    உருவம் கண்டு எள்ளல் உதவாது…!

     

        மரபுக் கவிதையில்…

    தேரது பெரிதாய் இருந்தாலும்,

         திடமாய்த் தெருவில் ஓடிடவே

    வேரதாய் வேண்டும் நிச்சயமாய்

         உருவில் சிறிய அச்சாணி,

    பாரது சிறந்திட உருசிறிதாய்ப்

         பல்லோர் இங்கே உளதாலே

    நேரதாய்க் கொண்டிடு உள்ளத்திலே,

         நீக்கிடு சிறிதெனும் நினைவினையே…!

     

    லிமரைக்கூ…

    சிறிய அச்சாணியால் ஓடுது தேர்,

    குறைவாய் எண்ணாதே..

    சிறிய உருவினிலும் சிறப்புடையோர் பார்…!

     

    கிராமிய பாணியில்…

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    பாருபாரு பெரிய தேரு

    சீரா ஓட சின்ன அச்சாணி..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    அதால,

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    எடபோடாத,

    அச்சிபோலச் சின்னவரும்

    அறிவு தெறம உள்ளவுருதான்..

     

    அந்த

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    கொறசொல்லாத..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

    Share
  • காதல் நாற்பது [4]

     

    காதல் நாற்பது [4]

    எலிஸபெத் பிரௌனிங்

     

    எலிஸபெத் பிரௌனிங்

    (1806-1861)

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    jay
    உன்வசம் உள்ளதுன் பிறவிப்பணி !
    உனக்கு அழைப்பு வரும்
    சிற்சில செல்வ மாளிகை
    அரங்கத்திலே!
    உன்னதப் பாக்களை
    மிக்க நளினமாய்ப்
    பாடுவோனே !
    உன் கர்ப்ப உதடுகள் உதிர்ப்பதை
    மென்மேலும் கேட்டு,
    நடன மாடுவோர் கால்கள்
    இடறி முறிந்து போய் விடும்!
    உன் உன்னதக் கைகளால்
    கீழ்மை யான, இந்த
    ஏழ்மை மாது இல்லத்தின்
    தாழ்ப்பாளைத் திறப்பாயா ?
    உனக்குத் தெரியாமலே
    உன்னிசைக் கீதங்கள்
    பூரணப்
    பொன் அலைகளாக
    என் இல்லத்தின் வாசல் முன்
    வருவது பற்றி
    நீ என்ன
    நினைக்கிறாய் ?
    ஏற்று அதைத்
    தாங்கி கொள்வாயா ?
    என் வீட்டுக் கூரைக் குள்ளே
    பறக்கின்றன,
    வௌவாலும் ஆந்தைகளும் !
    விட்டில் போன்ற
    என் கீச்சுக் குரல்
    உன் மகர யாழ் முன்னே
    எப்படிப் போட்டி இடும் ?
    மெதுவாக முணு முணுப்பேன்,
    மேலும்
    என்னை ஒதுக்கி விட்டு
    விலகுவது
    எதிரொலிக் கப்படுமா ?
    ஏகாந்தனாய்த்
    தனித்து நீ
    இனிதே பாட நேர்ந்தால்
    அழுதிடும் என் நெஞ்சுக்குள்
    எழுந்திடு மோர்
    அவலக் குரல் !

    ********************

    Poem -4

    Sonnets from the Potuguese
    By: Elizabeth Browing
    Thou hast thy calling to some palace-floor,
    Most gracious singer of high poems! where
    The dancers will break footing, from the care
    Of watching up thy pregnant lips for more.
    And dost thou lift this house’s latch too poor
    For hand of thine? and canst thou think and bear
    To let thy music drop here unaware
    In folds of golden fullness at my door?
    Look up and see the casement broken in,
    The bats and owlets builders in the roof!
    My cricket chirps against thy mandolin.
    Hush, call no echo up in further proof
    Of desolation! there’s a voice within
    That weeps . . as thou must sing . . . alone, aloof.
    **********

    Share
  • மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

     

    மலர் சபா

     
    கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில் வழி முப் பிரிவாகப் பிரிதல்

    அங்கே இருக்கின்றmalar
    கொடும்பாளூர் நெடுங்குளம் என்ற
    இரு ஊர்களுக்கு இடையே உள்ள
    கோட்டகத்துக்குள் புகுந்து சென்றால்
    அந்த அரிய வழி
    பிறை நிலவதனைத் தன் தலையில் சூடிய
    பெருமை வாய்ந்த இறைவன் சிவபெருமான்
    கையில் ஏந்தியுள்ள
    மூன்று தலை கொண்ட திரிசூலம் போல்
    மூன்றாகப் பிரிந்து செல்லும்.

    வலப் பக்கம் செல்லும் வழி

    அங்ஙனம் காணப்படும் மூன்று வழிகளுள்
    நீங்கள் வலப்புறம் உள்ள வழியில் செல்ல விரும்புவீராயின்
    விரிந்து அகன்ற தலையை உடைய வெண்கடம்ப மரமும்
    காய்ந்து உலர்ந்த தலையை உடைய ஓமை மரமும்
    அடைப்பகுதியாகிய தாள்கள் பொரிந்து காணப்படும் வாகை மரமும்
    காய்ந்த தண்டுடன் விளங்கிடும் மூங்கில் மரமும்
    நீர் வற்றியதால் சுருங்கி வரிகளுடன் விளங்கிடும்
    சப்பாத்திக் கள்ளிகள் கரிந்து கிடக்கும் இடங்களையும்..

    நீர் பருக விரும்பி வேட்கையாலே
    மான்கள் அலைந்து திரிந்து சத்தமிடும்
    காட்டினையும் இடையிடையே
    பாலைவாழ் மக்களாகிய எயினர் வசிக்கும்
    பாலை நிலங்களைக் காண்பீர்கள்.

    அவற்றைக் கடந்து சென்றபின்,
    ஐவனம் என்னும் நெற்பயிர்கள் விளையும் கழனி,
    இலையற்ற கணுக்களையுடைய கரும்புச்சோலை,
    கொய்யும் பருவம் அடைந்திட்ட அழகிய திணைப்புனம்,
    கொழுவிய கொல்லையில் விளைந்திட்ட வரகு,
    வெள்ளுள்ளி மஞ்சள்
    அழகிய கொடியுடைய கவலைக் கிழங்கு,

    வாழை கமுகு,
    தாழ்ந்த குலையாகத் தொங்குகின்ற தென்னை,
    மா பலா இவை யாவும்
    அடுத்தடுத்துச் சூழ வளர்ந்திருக்கும்
    பாண்டிய மன்னனுடைய
    ‘சிறுமலை’ எனும் ஊரைக் காணலாம்.

    அம்மலை உங்கள் வலது புறமாக வரும்படி
    நீங்கள் சென்றால்
    அகன்ற நகரான மதுரை மாநகரை அடையலாம்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 86

    படத்துக்கு நன்றி:
    Share
  • சிறுகை அளாவிய கூழ் (17)

     

    இவள் பாரதி

     
    ஒரு பக்கத்தை வாயில் சுவைத்தபடியும்nivi
    மறுபக்கத்தை கையில் பிசைந்தபடியும்
    விளையாடி
    ஏதோ நினைவு வந்ததைப் போல
    பக்கங்களை மாற்றி
    முகம் பார்த்து
    முலைப்பாலருந்தியபடி
    தாயின் சிரிப்பிற்கு
    சிவப்பு உதடு விரித்து
    அதில் இரண்டு பால்பற்கள் தெரிய சிரித்து
    குடிப்பதை நிறுத்திவிட்டுக்
    காம்பைக்கிள்ளி விளையாடி
    அடடா.. ஆஹா..
    ஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம்
    எந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை

    ———————-

    வெடி வெடிக்கும்போதும்
    இடி இடிக்கும்போது
    அயர்ந்துறக்கும்
    அம்மாகுட்டி
    பேனா மூடி விழும்போதும்
    பேப்பரைத் திருப்பும்போதும்
    எழும் ஓசைக்கு
    தூக்கம் கலைந்துவிடுகிறாள்
    பெருஞ்சத்தங்களை
    பொருட்படுத்தாது
    சிறுசத்தங்களுக்கு
    செவிசாய்க்கிற விசித்திரம்
    குழந்தைக்கு மட்டுமே சாத்தியம்

    ———————-

    Share
  • என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 3

    சு. கோதண்டராமன்

     

    வேத மொழி

    வியாசர்

    பிற்காலத்து ஆசார்யர்களிலே சிலர் வேதத்தைக் கர்மகாண்டம் என்றும் அதனால் தாழ்ந்தபடியைச் சேர்ந்ததென்றும் உபநிஷத்தே ஞானகாண்டம் என்றும் ஆதலால் அது வேதத்தைக் காட்டிலும் உயர்ந்ததென்றும் கருதுவாராயினர். இங்ஙனம் பிற்காலத்து ஆசாரியர்கள் நினைப்பதற்கு உண்டான காரணங்கள் பல. அவற்றுட் சிலவற்றை இங்கே தருகிறேன். முதலாவது காரணம், வேத பாஷை மிகவும் பழைமைப்பட்டுப் போனபடியால் அதன் உண்மையான பொருளைக் கண்டுபிடித்தல் மிகவும் துர்லபமாய்விட்டது. நிருக்தம் என்ற வேத நிகண்டையும் பிராம்மணங்கள் என்று சொல்லப்படும் பகுதிகளிலே காணப்படும் வேத மந்திர விளக்கங்களையும் சுற்ற பின்னரே, ஒருவாறு வேத மந்திரங்களின் பொருளையறிதல் சாத்தியமாயிற்று. வேதம் பிரம்மாண்ட நூல். அதில் இத்தகைய ஆராய்ச்சி செய்வார் மிக மிகச் சிலரேயாவார். இப்போது வேதத்திற்கு விளக்குப் போல நிற்கும் ஸாயணரென்ற வித்யாரண்ய சங்கராச்சாரியரின் பாஷ்யம் பிராம்மணங்களையும் நிருக்தத்தையுமே ஆதாரமாகவுடையது. பிராம்மணங்களில் பெரும்பாலும் கற்பனைக் கதைகளும் கற்பிதப் பொருளுமே கூறப்பட்டிருக்கின்றன. நிருக்தத்திலோ என்றால் பெரும்பாலும் வேத பதங்களுக்குச் சரியான பொருளே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பல இடங்களில் அதன் தாது நிச்சயங்கள் மிகவும் சம்சயத்துக்கு இடமாகவும் சில இடங்களில் அதன் பொருள்களே பிழைபட்டதாகவும் இருக்கிறது. – பாரதி

     ஸம்ஹிதைகள் பழைய, மிகப் பழைய ஸம்ஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன. அதாவது, வேதங்களின் ஸம்ஸ்கிருதம் மதுரைச் சங்கத்துக்கு முந்திய தமிழைப் போலவும் உபநிஷத்துக்களின் பாஷை சங்கத்துக்குப் பிந்திய தமிழைப் போலவும் இருக்கின்றன. ஆனால், இந்த உவமானம் முற்றிலும் பொருந்ததாகக் கூறலாகாது. இன்னும் அதை உள்ளபடி விளக்குமிடத்தே. ஸம்ஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம் – அதாவது, ஸம்ஹிதை மாத்திரம் – தனியான பாஷையாக இருக்கிறது. இஃதொரு பெருவியப்பு அன்றோ? வேத ஸம்ஸ்கிருதம் வேறெந்த நூலிலும் கிடையாது. – பாரதி

              ரிஷிகள் உள்ளத்தைத் தெளிவு செய்து கொண்டோர். ஆதலால் அடிவரை எளிதாகப் பாய்ந்து அங்கிருந்து மந்திரம் கொண்டுவந்தனர். – பாரதி.

    ரிக் வேத மொழி பாணினியின் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மிக வேறுபடுகிறது. எனவே ஸம்ஸ்கிருதம் மட்டும் கற்றால் வேதத்தைப் படித்துவிட முடியாது. பிற்கால ஸம்ஸ்கிருத இலக்கிய வழக்கில் இல்லாத சொற்கள் வேதத்தில் பல உண்டு. சில சொற்களுக்கு வேதத்தில் பொருள் வேறு, பிற்கால இலக்கியத்தில் வேறு பொருள். இலக்கண விதிகளும் சில இடங்களில் வேறுபடுகின்றன.

    இத்தனைக்கும் மேல் பெரும் இடர்ப்பாடு என்னவென்றால் வேத ரிஷிகள் சில இடங்களில் இலக்கணத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஒரு உதாரணம் பார்ப்போம்.

    மிகுந்த வலிமையுடைய இந்திரனுக்கு பிரார்த்தனைகளை அனுப்புங்கள். பசுக்கள். இந்திரனுக்கு நிறைய தோத்திரங்களைச் செய்யுங்கள்.1

    இந்த மந்திரத்தில் பசுக்கள் என்பது எந்த வாக்கியத்தோடும் ஒட்டாமல் நிற்கிறது. நம்முடைய பசுக்கள் செழிப்பதற்காக என்று சாயணர் விளக்கம் தருகிறார். பசுக்கள் தரும் பாலைக் கொண்டு என்றோ பசுக்களைப் பலியிட்டு என்றோ கூட விளக்க முடியும். மூன்றுமே ரிக் வேதத்தின் பிற பகுதிகளில் சொல்லப்பட்ட கருத்துடன் ஒத்துப் போகின்றன. ரிஷியின் மனதில் இருந்த கருத்து எது என்பதை அறிய முடியவில்லை.

    ரிஷிகள் கவிதை எழுதப் போகிறேன் என்று திட்டமிட்டு உட்கார்ந்து எழுதிய கவிதைகள் அல்ல இவை. அருள் நிலையில் அவர்கள் மனதில் தோன்றியவை. அதனால் அதில் இலக்கணத்தை எதிர்பார்க்க முடியாது.

    பாட்டுக்கொரு புலவன் பாரதியடா அவன்

    பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா,

    கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா அந்தக்

    கிறுகிறுப்பில் உளறு மொழி பொறுப்பாயடா

    என்று கவிஞர் தேசிய விநாயகம் பிள்ளை பாடினார். தெய்வ ஆவேசத்தின் கிறுகிறுப்பில் பாடிய வேத ரிஷிகளின் மொழி, இலக்கணம் பற்றிக் கவலைப்படாத மொழியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

    இன்னொரு காரணமும் இருக்கலாம். காலப் போக்கில் மனப்பாடம் செய்தோரின் கவனக்குறைவு காரணமாக ஓரொரு எழுத்து மாறியிருக்கலாம். அது இலக்கணப் பிழையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

    இது ரிஷியின் இலக்கணப் பிழையா, அல்லது ஏடெழுதியவரின் கைப் பிழையா அல்லது மனப்பாடம் செய்தவரின் நினைவுப் பிழையா என்பது பற்றிக் கவலைப் படாமல் இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பாடத்தில் முடிந்த வரை பொருள் அறிய முயல்வோம்.

    வேதத்தில் சில பாடல்கள் மிகச் சாதாரணமானவை. உதாரணமாக, ரிக் 5.27 என்ற சூக்தம் அக்னியைக் குறித்துப் பாடப்பட்டதாக அனுக்ரமணிகா (அட்டவணை) சொல்கிறது. பொருளைப் பார்த்தால்- த்ரயருணன் என்ற அரசன் எனக்கு ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் நூறு பொற்காசுகளும் இரண்டு குதிரைகளும் கொடுத்துள்ளான். ஏ அக்னியே, அவனுக்கு மகிழ்ச்சி கொடு என்று இவ்வாறு செல்கிறது.

    பண்டைத் தமிழ்ப் புலவர்கள் அரசனிடம் பரிசு பெற்றுப் புகழ்ந்து பாடியதாக அறிகிறோம். அதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இந்து சமயத்தின் ஆணி வேர் என்று சொல்லக் கூடிய ஆன்மிகக் கருத்து இதில் என்ன இருக்கிறது? புரவலரைப் போற்றும் இந்தப் பாடலுக்கு வேதம் என்ற பெரிய மரியாதை எதற்கு? என்று தோன்றுகிறது.

    இலக்கணப் பிரச்சினைகள் இல்லாமல் எல்லாச் சொற்களும் பொருள் தெரிந்த சொற்களாக இருக்கும்போது கூட பல இடங்களில் சொற்களின் பொருளைத் தொகுத்துக் கூறும்போது இடர்ப்பாடுகள் வருகின்றன. பல பாடல்கள் விடுகதை போல உள்ளன. ஒரு உதாரணம் பார்ப்போம்.

              காலில்லாதவள் காலுள்ளவர்களுக்கு முன்னதாகப் போகிறாள். தலையை அசைய வைத்து, நாக்கைப் பேச வைத்து முப்பது அடிகள் பயணிக்கிறாள்.2  

    இதற்கு சாயணர் அளிக்கும் விளக்கம்- சுயமான அசைவு இல்லாமல் சூரியனால் தள்ளப்பட்டு வருவதால் காலில்லாதவள் உஷா (வைகறைப் பொழுது). கால் உள்ள பிராணிகள் எழுந்து சஞ்சரிக்கும் முன்னர் அவள் புறப்பட்டு விடுகிறாள். சத்தமி்ல்லாமல் தூங்கிக் கொண்டிருந்த மக்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிப் பேச வைக்கிறாள்.

    இது பொருத்தமாகத் தோன்றுகிறது என்றாலும் இது தான் ரிஷியின் மனதில் இருந்த எண்ணமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை.

    அசுவினி தேவர்களைக் குறித்துப் பாடப்பட்ட ரிக் இது.

              இந்தப் பிரார்த்தனை உசத்யனின் மகனாகிய என்னைக் காப்பாற்றட்டும். இந்த இரண்டு பறவைகளும் என்னைக் கறக்காமல் இருக்கட்டும். பத்துப் பத்தாகக் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த விறகுகள் என்னை எரிக்காமல் இருக்கட்டும். உங்கள் இருவருடனும் கட்டப்பட்ட இது தானாகவே பூமியைத் தின்கிறது.3

    அந்தப் பறவைகள் என்பது இரவும் பகலும். அவை ரிஷியின் சக்தியை வலுக்கட்டாயமாக உறிஞ்சிவிடுகின்றன. வயதான காலத்தில் ரிஷியின் குனிந்து நடக்கும் உடல் பூமியைத் தின்பதாக சாயணர் குறிப்பிடுகிறார். சாயணர் உரை இல்லாவிட்டால் விடுகதை போன்ற இத்தகைய பாடல்களைப் புரிந்துகொள்ள முடியாது. இதில் வரும் விறகு எதைக் குறிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    மற்றொரு மந்திரத்தின் மொழிபெயர்ப்பு இது.

              இன்றும் இல்லை, நாளையும் இல்லை, யாரறிவார் இந்த அற்புதத்தை? அடுத்தவர் மனமோ அலை பாய்கிறது. கற்றது யாவும் மறந்து போயின.4

    இந்திரன் தனக்கு ஹவிர் பாகம் கிடைக்கவில்லை என்று வருந்தும் போது அகஸ்தியரிடம் இதைச் சொல்வதாகச் சாயணர் கூறுகிறார். இதற்கு முன் பின் உள்ள மந்திரங்களின் துணை கொண்டு பார்த்தாலும் இதற்கு என்ன பொருள் என்பது விளங்கவில்லை.

    இது போன்ற ஆயிரக் கணக்கான மந்திரங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் அளிக்கின்றன. அதனால் வேதத்தின் உண்மையான கருத்து என்ன என்பதே அறிய முடியாமல் அது மறையாகவே இருக்கிறது.

    இத்தகைய விடுகதை போன்ற மந்திரங்களை நீக்கிவிட்டு மற்ற மந்திரங்களைக் கொண்டு ரிக் வேதத்தின் சாரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.

    குறிப்புகள்

    இரண்டாவது பத்தியில் கொடுக்கப்பட்ட எண்கள் முறையே ரிக் வேதம் மண்டலம், சூக்தம், மந்திரத்தைக் குறிக்கும்.

    1                      8.96.10. (back)

    2                      6.59.6   (back)

    3                      1.158.4 (back)

    4                      1.170.1 (back)

    படத்திற்கு நன்றி :

    http://anmeegam.blogspot.in/2012/07/blog-post.html

    Share
  • குறளின் கதிர்களாய்…(25)

     

     செண்பக ஜெகதீசன்

     

    நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலி

    னீங்கி னதனைப் பிற.

    -திருக்குறள் -495(இடனறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இருக்கும்

    இடத்தை வைத்துத்தான்

    இருக்குது எதிலும் வெற்றி..

     

    நீரிலிருக்கும் வரைதான் முதலை

    எமனாகும்

    எல்லா உயிர்க்கும்..

     

    நீங்கி வெளியே வந்தால்,

    அது

    இரையாகும்

    பிற உயிர்க்கே…!

     

    குறும்பாவில்…

     

    நீரிலிருந்தால் வென்றிடும் முதலை,

    நீங்கி வேறிடம் வந்தால்

    இடருறுமே பிற உயிர்களால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    தண்ணீர் நிறைந்த நீர்நிலையில்

    தங்கி வாழும் முதலையது

    எண்ணம் போல வெல்லும்பிற

    எல்லா உயிரையும் தன்பலத்தால்,

    தண்ணீர் நீங்கி வெளிவந்து

    தரையில் நின்று போரிட்டால்

    கண்டிடும் தோல்வியே பிறவுயிரால்,

    கற்றிதை செயல்படு இடனறிந்தே…!

     

    லிமரைக்கூ…

     

    நீரில் இருக்கும்வரைதான் வென்றிடும் முதலை,

    தரையிலது தோற்றிடும்..

    இடனறியாத செயல்பாட்டால் இழந்திடுவாய் முதலை…!

     

    கிராமிய பாணியில்…

     

    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ

    மொதலக்கத தெரிஞ்சுக்கோ..

     

    அது

    இருக்கும்வர தண்ணிக்குள்ள

    இல்ல அதுக்கு எதிரிதான்,

    எல்லா உயிரும் அடக்கந்தான்

    எப்பமுமே வெற்றிதான்..

     

    ஆனா,

    தண்ணியவுட்டு வெளியவந்தா

    தலகீழா மாறிப்போவும்,

    எல்லா உயிரும் எதிரிதான்

    எதுத்துநின்னா தோல்விதான்..

     

    அதால

    தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ

    கருத்தநல்லாத் தெரிஞ்சக்கோ,

    நடந்துக்கோ நடந்துககோ

    எடந்தெரிஞ்சி நடந்துக்கோ…!

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (105)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பு கலந்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே அடுத்தொரு வார முடிவில் மகிழ்வுடன் வந்திருக்கிறேன்.

    ஜனநாயகம் , தேர்தல் , வாக்கெடுப்பு என உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனக் கருதப்படும் இந்திய மண்ணின் தேர்தல் திருவிழா அரங்கேறும் வேளையிது.

    எனது தமிழக உறவுகள் யாரைத் தொடர்பு கொண்டாலும் அனைவரும் வாக்களிப்பதைத் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள் எனும் செய்தி மனதுக்கு மிகவும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.

    ஈழத்திருமண்ணை பிறந்த மண்ணாகவும், இங்கிலாந்து நாட்டின் வாழ்விடப் பிரஜையாகவும் இருக்கும் எனக்கு ஏன் இந்தியத் தேர்தலில் இத்தனை அக்கறை எனக் கேள்வி எழுவது சகஜமே !

    இந்திய அரசியலின் தாக்கம் எனது தாய்மண்ணின் சகோதரர்களின் வாழ்வுடன் சம்மந்தப்பட்டது என்பது முதற்காரணம்.

    இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையில் இன்று முன்னனி வகிக்கும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இந்தியத் திருநாடு திகழ்வது அடுத்தொரு காரணமாகிறது.

    ஈழத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளின் பின்னர் இன்றைய நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நிம்மதியான, நிரந்தரமான, கெளரவமான, தமது வாழ்வாதரங்களை தாமே நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.

    அதற்கு ஒரு திடமான, நிலையான மக்களின் அனுமதி கொண்ட அதிகாரமிக்க இந்திய அரசு அவசியம்.

    நான் அரசியல் பாகுபாடற்றவன்.

    இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை உண்மையாகவே விரும்புகிறார்கள்.

    அவர்களின் அணுகுமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் அனைவரின் இறுதி நோக்கமும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வே.

    இதுவே யதார்த்தமாகும்..

    தத்தமது அரசியல் காரணங்களுக்காக, தமது கட்சிகளின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் மற்றவர் மீது வீசும் சரமாரியான குற்றச்சாட்டுகளும் ஏனைய கொள்கை வேறுபாடுகளும் அவர்களின் காலத்தின் கட்டாயம்.

    வித்தியாசங்களில் விளைவதுதான் மனித வாழ்க்கை. மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கை நியதி. ஆனால் சத்திய உண்மைகள் நிரந்தரமானவை அவை காலத்தால் அழியாதவை.

    தேர்தல் காலங்களில் தேவைகளின் நிமித்தம் காலக்கட்டாயத்தின் பணிப்பில் வேறுபாடுகள் விளக்கேற்றி வெளிச்சமூட்டப்படுகின்றன.

    ஆனால் இந்தியத் தேர்தலின் வெற்றியில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ஏன் மொத்த இலங்கையின் எதிர்கால சுபீட்சமுமே தங்கியுள்ளது. எனலாம்.

    அடுத்ததாக இன்றைய உலகப்பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கடந்த சில வருடங்களாக உலகின் முன்னனி நாடுகள் கண்ட பொருளாதார வீழ்ச்சியிலும் கூட இந்திய பொருளாதார வளர்ச்சியையே கண்டது.

    இன்றைய உலக்ப்பொருளாதாரச் சந்தையில் முன்னனி நாடாக இந்தியப்பெருந்தேசம் விளங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும்..

    இந்தியா காணும் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தின் அடிமட்ட மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்பதைப் பற்றி அலசும் வகையான ஆற்றலும், இத்தகையதோர் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை போட்டியிடும் எந்தக் கட்சிகளிடமும் உள்ளதா என்பதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான அரசியல் முதிர்ச்சியும், இந்திய அரசியல் வரலாற்றுப் பின்னனி பற்றிய பூரண அறிவு இல்லாத என்னிடம் இல்லை என்பதுவே உண்மை.

    இருப்பினும் மத்தியில் ஒரு உறுதியான அரசாங்கம் அமைந்திருப்பதால் மட்டுமே இந்தியாவின் இந்த முன்னனி நிலை உலகப்பொருளாரச் சந்தையில் நீடித்திருக்கும் என்பதைத் நான் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

    இந்திய உபகண்டத்தின் அரசியலும் இவ்வுபகண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புகளும் ஒரு சுதந்திரமான , உறுதியான இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தான் முன்னெடுத்துச் செல்லப்படமுடியும் என்பதும் அரசியல் அவதானிகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகிறது.

    இத்தகைய வலுவான காரணங்களின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாகிறேன்.

    இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல அவர்கள் பெறும் வெற்றி ஜனநாயக வரம்புகளுக்குட்பட்டதாக சுதந்திரமான இந்திய அரசியல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி

    Share
  • சிறுகை அளாவிய கூழ் (16)

     

    இவள் பாரதி

    nivi

    உனக்கு எப்போதெல்லாம்
    வெளிப் போந்த தோன்றுகிறதோ
    அப்போதெல்லாம்
    சிவப்புச் செருப்பை ஏந்தியபடி
    அறைகள்தோறும்
    ஒவ்வொருவராய்
    அழைத்துப்போகச் சொல்லிக்
    மூடியிருக்கும் கதவை கைகாட்டுகிறாய்.. (more…)

    Share
  • வாசிப்புகளின் வாசலிலே… (3)

    தி.சுபாஷிணி

    நம்மோடுதான் பேசுகிறார்கள்

    சீனிவாசன் & பாலசுப்ரமணியன்

    su

                    சென்ற ஆண்டு (2013) இறுதியில் டிசம்பர் 28 ஆம் நாள் தமிழூரில், பேராசிரியர் ச.வே.சுப்ரமண்யம் அவர்கள் நடத்திய கம்பன் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மறுநாள் டிசம்பர் 29 ஆம் நாள் திருநெல்வேலி வந்தேன். அங்கு இடையறா இலக்கிய வேளாண்மை செய்து கொண்டிருக்கும், பொருணை இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். ஆயிரத்து 550 வாரங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் புலவர்கள், பேராசிரியர்கள் கூடி, சங்க மரபு இலக்கியங்கள் பற்றி கலந்துரையாடலும், சிறப்புப் பொழிவுகளும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டின் உறைவிடமான திரு.தளவாய் டி.ராமசாமி அவர்கள் இக்கட்டத்தின் புரவலராய் அவரது வீட்டில் சுப, அசுப நிகழ்வுகள் நடந்தாலும் தளராது நடத்தி வருகின்றார். அவரது அழைப்பின் பெருமிதத்தில் அவ்விழாவில் கலந்துகொண்டு, திரு.தி.க.சி. அவர்களைக் காணச் சென்றேன்.

                    வழக்கம் போல், தன் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரவேற்றார் தி.க.சி.

                    “அடடா! இப்பொழுதுதான் ஓவியர் சீனிவாசனும் வேங்கட சுவாமிநாதனும் என்னை வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். ஒரு அரைமணி நேரம் முன்பு வந்திருக்கக் கூடாதா?” என்றார் தி.க.சி.

                    எனக்கு வருத்தமாய் போயிற்று. ஏனெனில் வேங்கட சுவாமிநாதன் அவர்களை நான் இரு வருட காலமாக பார்க்க முயன்று கொண்டிருந்தேன். அதை நான் தி.க.சி. அய்யா அவர்களிடம் கூறினேன். உடனே சீனிவாசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரும் நெல்லையை விட்டு மதுரையை நோக்கிச் சென்று விட்டனர். 31 ஆம் தேதியன்று சென்னையில் சீனிவாசன் வீட்டில் அவரைப் பார்க்கலாம் என்கின்ற தகவலைச் சொன்னார். அதன்படி 31-ந் தேதியன்று சென்னையை வந்தடைந்ததும், சீனிவாசன் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

                    அடையாறிலுள்ள வீட்டைக் கண்டுபிடித்து, மூச்சிறைக்கப்போய் அவர் முன் நின்றேன். வேங்கட சுவாமிநாதன் “ஏனம்மா? இப்படி சிரமப்பட்டு என்னைப் பார்க்கலாமா?” என்று வினவினார். அப்போது அங்கு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இருந்தார். அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சகோதரி ஏற்கனவே அறிமுகமானவர்.

    “சிரமம் இல்லை சார்! உங்களுடைய அறிவும், திறனாய்வு பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

    திரு.நாஞ்சில் நாடன் உங்களைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து உங்களைப் பார்க்க எண்ணம் கொண்டேன். உங்கள் எழுத்தைப் புரிந்துகொள்ளும் அளவு அறிவில்லாதவள் சார் நான். ஆனால் உங்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. நான் அனுபவத்தை இப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்” என என் நூல்களை அவரிடம் கொடுத்தேன். அவர் மிகவும் பிரியமாக என்னிடம் பேசினார். ‘அத்தகைய அறிவாளி’ என்கின்ற ஆணவம் இல்லாது, என்னைப்பற்றி கேட்டுக்கொண்டார். பின் சீனிவாசன் தன் நூலைக் கொடுத்தார். அதுதான் “நம்மோடுதான் பேசுகிறார்கள்”. ஓவியர் எழுத்தாளராய் காட்சியளித்தார். அந்த கணத்திலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.

                    இப்படித்தான் என்னை நூல்கள் வந்தடைகின்றன. சீனிவாசன், பாலசுப்ரமணியன் என்னும் இரு ஓவியர்கள் நம்மோடுதான் எளிய பேச்சுநடையில் நம்முன் உட்கார்ந்து சம்மணம் போட்டுக்கொண்டு பேசுகிறார்கள். திடீரென்று எழுந்து ஜன்னல் அருகே நின்று சீனிவாசன் சீரியஸாகப் பேசுகிறார். அதைத் தூண்டிவிடுவது பாலசுப்ரமணியன். ‘என்னால் முடியலைப்பா? மூச்சு முட்டுது! கொஞ்சம் வெளியில் வாங்கப்பா! காலாற மெரினா வழியாக திருவல்லிக்கேணி செல்லலாம்” என்று அழைத்து செல்கிறார்கள்.

                    ‘சுபாஷிணி’ என்று கூப்பிட்டு சொல்கிற மாதிரி இருக்கிறது. அதாவது “கலைங்கிறது கூடை முடையறது இல்லை. வாழ்க்கை. அனுபவம் வெளிப்பாடு. வாழ்க்கையைக் கத்துக்கவும் முடியாது. காமிக்கவும் முடியாது. கலையும் அப்படித்தான்”.

                    மேலும் சீனிவாசன் தொடர்கிறார்.

                    “சமுதாயத்துல மூணு விஷயங்களை வலுப்படுத்த வேண்டி இருக்கு. ஒண்ணு செவ்வியல் கலைகளை மீட்டெடுக்கிறது. பாதுகாக்கிறது. சமகாலக் கலையை வளர்க்கிறது. பிரச்சாரம் பண்றது, கலைபத்தின புரிதலை, நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறது. நாகரீகத்தைச் செழுமைப்படுத்துகிறது. இதை ஒரு கலை வெளிப்பாடாக இருக்கிற கட்டிடம் செய்ய முடியும்னா கலைஞனா இருக்கிற நம்மால் செய்ய முடியாதா? வாழ்வியல்தான் கலை, கலைதான் வாழ்வியல்.

                    பொருளாதாரம் எப்பொழுதுமே கலை வெளிப்பாடுகளுக்கே தடையாக இருந்ததில்லை. மனநிலைதான் தடையாக இருக்கிறது. சிந்தனையும் சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடும் பொருளாதாரத் தடையினால் தடைப்பட்டதில்லை. மக்களையும் சமுதாயத்தையும் செழுமைப்படுத்துவது சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடுகளே!

                    நூலின் நடை எளிய பேச்சு மொழியிலேயேதான் செல்கின்றது. ஆனால் அது கூறும் விஷயங்களோ பெரியது. மிகவும் பெரியது. ‘மஹா வாக்கியம்’ என்று கூறுவார்களே அதுபோல் இருக்கின்றது.

                    சீனிவாசன் கேள்விகளைக் கேட்டு, குழப்புவதுபோல் ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்குகிறார். பின் ஏதோ நம்முடன் பேசித்தான் தெளிவடைவதைப்போல், அவரது சிந்தனையின் தெளிவை, எண்ண ஓட்டங்களின் முறையை நம்மிடம் பகிர்ந்துக் கொள்கின்றார். படிக்கும் நமக்கும் அவருடன் சேர்ந்து பயணிப்பது இன்பமளிக்கின்றது.

                    சீனிவாசன் முன் வைக்கும் கேள்வி & ஓவியம் என்றால் என்ன? அதையும் தாண்டி படைப்புகள் என்றால் என்ன? அப்படியென்றால் ஓவியன் யார்? படைப்பாளி யார்?

                    “திருத்தமாகச் செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் ஓவியம். அதே திருத்தமாக செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் சிந்தனை சார்ந்து இருக்குமானால் அது படைப்பு. சுருங்கச் சொன்னால், அலங்காரமாகவும் இருந்துகொண்டு, சிந்தனைகளையும் தூண்டுமானால் அது படைப்பு.

                    ஒரு படைப்பாளனுக்கும் ஒரு ஓவியனுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் பார்வையாளன் மனதில் சந்தோசத்தை மட்டும் தூண்டுபவன் ஓவியன். சந்தோசம் என்பது பார்த்த மாத்திரத்தில் தொற்றிக் கொள்கிற விஷயம். தொற்றிக்கொண்ட பிறகு ஒரு விளக்கத்தைக் கொடுத்து உற்சாகத்தைக் கொடுத்து சிந்தனையைத் தூண்டி, நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மீறிய அவரவர் சார்ந்த துறைகளில் அவரவர்களுக்கான ஊக்கத்தைக் கொடுப்பது படைப்பு. ஆக பயிற்சி, பயிற்சியின் முதிர்ச்சியில் விளைபவன் ஓவியன். பயிற்சியின் முதிர்ச்சியில் இருந்து விடுபட்டு சிந்தனாவாதியாக மாறி சிந்தித்தவற்றைப் படைப்பின் மூலமாக வெளிப்படுத்திச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படைப்புகள் இருக்குமானால் அவன் படைப்பாளி.”

                    இப்படி அருமையான சிந்தனை ஓட்டம், விளக்கம் தருகிறார் சீனிவாசன் இந்நூலில். அதுவும் நெல்லுக்குள் அரிசி இருக்கு என்று போகிற போக்கில் சொல்வதுபோல் சொல்கிறார்.

                    ‘கிளிப்பச்சையில் ஒரு காக்கா வந்துச்சுன்னு’ தொடங்கி, ஓவியத்தின், அருபத்தினைப் பற்றி விளக்குகிறார். சீனிவாசனின் அருப ஓவியங்களின் தேர்வைப்பற்றி பாலசுப்ரமணியம் அழகாகப் பகிர்ந்து கொள்கிறார். எல்லாம் ஓவியங்களில் தொழில்நுட்ப பெயர்கள். ஆனால் அதை மிகவும் எளிமையான மொழியில் கூறுகிறார். ஒரு அருப ஓவியத்திலேயும் வடிவம், டெக்சர், கலர், லைன்ஸ், உருவம் எல்லாமே இருக்குன்னு சீனிவாசன் சொல்கிறார். ஆனால் சீனிவாசன் ஓவியத்திலே அது இல்லாமலும் இருக்குன்னு சொல்கிறார் பாலசுப்ரமணியம். இதப்பத்தி சீனிவாசனிடம் மேலும் பேசியதை இங்கு பாலசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்

    என்று நூல் முடிவடைகிறது.

                    இந்நூலை படித்து முடித்தவுடன், “தி இந்து” தமிழ் நாளிதழில் (22.2.2014) கலை இலக்கியம் பகுதியில் ஓவியர் சந்தானராஜ் பற்றிய கட்டுரையில் எழுதியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

                    “புள்ளிகளை இணைப்பதல்ல கோடு. புள்ளிகளுக்கு இடையே ஒரு வெளி இருக்கிறது. அந்த வெளியையும் உள்ளடக்கியதுதான் கோடு”.

                    இந்தப் புள்ளிகளுக்கு இடையிலுள்ள வெளியில் உருவாகும் படைப்புத் தெறிப்புகளால்தான், நான் சீனிவாசனின் தேடலை பார்க்கின்றேன்.

    நூலின் தலைப்பு    –       நம்மோடுதான் பேசுகிறார்கள்

    ஆசிரியர்                        &             சீனிவாசன் & பாலசுப்ரமணியன்

    பக்கம்                               &             128

    விலை                             &             200 ரூ

    வெளியீடு                     &             வம்சி புக்ஸ்

                                                                    19, டி.எம்.சாரோன்,

                       திருவண்ணாமலை & 606 601.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 116 (21.04.14)

    மலர் சபாmaraiyon

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    மறையோன் தனது ஊரையும் , தான் தென்னனை வாழ்த்திய காரணத்தையும் உரைத்தல்

    பாண்டிய நாட்டின் சிறப்பினையும்
    அம்மன்னரின் கொடை முதிலிய செய்கையையும்
    என் கண்கள் குளிரக் கண்டேன்;
    அதனால் அம்மன்னரை வாழ்த்தி வந்திருந்தேன்;
    அதனால் வருகை புரிந்தேன்.
    முத்தீயில் வேள்வி எடுக்கும் மறையோன்
    இங்ஙனம் கூறக் கேட்டு..

    மதுரைக்குச் செல்வதற்கு உரிய நல்ல வழியைப் பற்றி மறையவனிடம் கோவலன் வினாவுதல்

    மதுரைக்குச் சென்றிடும் செவ்விய வழி யாது
    என நீவிர் கூறுவீராக..
    என்று வேதம் ஓதும் மறையோனிடம்
    கேட்டனன் கோவலன்.

    மாங்காட்டு மறையோன் கூறிய மதுரை வழி கால நிலைமையையும் வழியின் அருமையையும் உணர்த்தல்

    அரசியலைத் தொழிலாகக் கொண்ட
    அமைச்சரோடு சேர்ந்து
    தன் செங்கோல் வளையும் வண்ணம்
    அரசனும் நெறி தவறி நடக்க,
    அதனால் நல்லாட்சி இழந்த நாட்டைப் போல..

    வேனில் காலமெனும் அமைச்சனோடு
    கொடுங்கதிர் சூரியன் சேர்ந்து
    தன் நெறிகளில் தவறித்
    தான் உருவாக்கிய நலன்களைத்
    தானே அழித்தனன்.

    முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும்
    தன் இயல்பது மாறி அழிந்து
    தமது நன்மைகளில் குன்றி
    நம்பிய மக்களுக்கு
    நடுநடுங்கக்கூடிய துயர் விளைவித்தது.

    தம் இயல்புநிலை மாறிப்
    பாலையென வடிவம் மாறி விளங்கிய
    இக்காலம் தன்னில்
    நீயும் இக்காரிகை தன்னுடன்
    பயணம் வந்துள்ளாய்..

    கற்பாறைகளும் சிறுமலைகளும்
    அரிதான வழிகளும் நிறைந்த,
    காண்போரைக் குழப்பமடைய வைக்கும்
    இக்கானல் நீர்த்தோற்றமும் உடைய
    இந்நெடிய பாலைவழியைக் கடந்து சென்றால்..

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  54 – 70

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:

    http://www.inbaminge.com/t/slokas/Vedic%20Chanting/

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது

     
    jay

    fig-1-saturn-rings.jpg

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா.

     

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_P04G1ObJm4

    http://www.youtube.com/watch?v=_P04G1ObJm4&feature=player_detailpage

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LNW4-4uq2C8

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YL__UbPsPDg

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=D7iS95-wE_E

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=t07Liw4Yb00

    ++++++++++++++++++++++

    பல பில்லியன் ஆண்டுகட்கு முன்பே சனிக்கோள் இப்போது இருப்பதை விட பளுவான வளையங்கள் மூலம் பேரளவு வடிவுள்ள துணைக் கோள்களை உருவாக்கி வந்துள்ளது.   சந்திரன்கள் வளையத்தின் விளிம்பில் உண்டாகும் போது, வளையங்கள் வலுவிழந்து விட்டன  என்று சொல்லலாம்.  பூர்வீகத்தில் வடிவான துணைக்கோள்கள்  பெரியதாக உருவாகியும், சனிக்கோளுக்கு அப்பாலும் தள்ளப் பட்டன.

    கார்ல் முர்ரே [பிரதமக் கட்டுரை ஆசிரியர், லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகம்]

    ***********************

    New moon for saturn

     

    சனிக்கோளின் வளையத்தில் ஒரு புதிய துணைக்கோள் உருவான விந்தை.

    2014 ஏப்ரல் 14 ஆம் தேதி நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக் கோளின் வெளி வளையத்தில் [Outer Ring : A] ஒரு சிறிய பனி அண்டம் [Small Icy Object] துணைக்கோள் போல் உருவாகி வரும் விந்தையை லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கார்ல் முர்ரே முதன்முறையாகக் கண்டதாக “லகாரஸ் இதழில்” [Lcarus Journal]  அறிவித்துள்ளார்.   இதுவரை [2014] கண்டுபிடிக்கப்பட்ட சனிக்கோளின் சந்திரன்கள் : 62.  இவையாவும் சனிக்கோளின் வலுவான வளையங்களி லிருந்துதான் ஒருயுகத்தில் தோன்றி இருக்க முடியும்.   இது கோளாய் உருவாகி வரும் முறையை ஆராய்ந்து, இதுவரை வடிவான சந்திரன்களின் தோற்றத்தை அறிய முடியும் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.   காஸ்ஸினி விண்ணுளவியின் கூரிய காமிரா பல மில்லியன் மைல் தூரத்தில் உள்ள சனிக்கோளின் வளைய விளிம்பில், சூழ்நிலையை விட  20% மடங்கு பெரு வெளிச்சம் உள்ள ஒரு பகுதியைப் படமெடுத்தி ருக்கிறது.   அப்பகுதி 750 மைல் நீளமும், 6 மைல் அகலமும் [1200 கி.மீ. x 10 கி.மீ.]  கொண்டுள்ளது.  இம்மாதிரி மாறுபாடுகள் அங்குள்ள அண்டத் துணுக்குகளின் ஈர்ப்பு விளைவால் நேர்கின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்..

    இச்சிறு பனி உண்டை பெரிதாகப் போவதில்லை என்றும், சிறிது காலத்தில் முறிந்து போகலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.   ஆனால் அது வடிவாகும் முறையும், நகரும் விதமும், சனிக்கோளின் மற்ற பனிக்கோள் சந்திரன்கள், பெரு வளையத்திலிருந்து எப்படி உருவாயின என்று அறிந்து கொள்ளப் பயன்படும்.   அதுபோல் நமது பூமியும் பிற அண்டக்கோள்களும் சூரிய மண்டலத்தில் உருவாகி எப்படி நகர்ந்து அப்பால் சென்றன  என்று ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

    சனிக்கோளின் இச்சிறு சந்திரனுக்குப் “பெக்கி” [Peggy] என்று பெயரிட்டுள்ளார். சனிக்

    ​ ​

    கோளுக்கு அப்பால் தூரத்தில் சுற்றிவரும் சந்திரன்கள் தொலைவுக்கு ஏற்ப பெரிது பெரிதாய் உருவாகியுள்ளன.   சந்திரன் உருவாக்கும் வளையங்கள் மேற்கொண்டு துணைக்கோள் வடிவாக்க வலுவிழந்து இந்தப் பெக்கியே சனிக்கோள் வளையம் படைக்கும் இறுதிச் சந்திரனாய் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். 

     

    New Moon formation

    “அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவு அளப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலை நோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத் துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன.  அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும்.  அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன்களை ஆராயக் கூடும் !  அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”

    மிசியோ காக்கு, பௌதிகப் பேராசிரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)

    இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவிக் கப்பலே உன்னத வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது.  மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனி நிலவு, பூர்வீகப் பூமி உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் !

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

     

    சனிக்கோளின் தனித்துவ மகத்துவ ஒளிவளையங்கள்

    சூரிய மண்டலத்திலே நீர்மயமான பூமியைப் போல் தனித்துவம் பெற்றது ஒளிமய வளையங்கள் அணிந்த எழிலான சனிக்கோள் !  நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ தன் புதிய தொலைநோக்கியில் சனிக்கோளையும் இறக்கைபோல் தெரிந்த அதன் வளையங்களைக் கண்டது வானியல் விஞ்ஞானம் உலகில் உதயமாக அடிகோலியது !  சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712].  முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலைநோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை ! கால வேறுபாட்டால் பிறகு சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்!

    1655 இல் ஹியூஜென்ஸ் முதன்முதல் சனியின் துணைக்கோள் டிடானைக் [Titan] கண்டுபிடித்தார். வளையங்களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்ற தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார்!  1659 இல் ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டமில்லை என்றும் அறிவித்தார். சனியைச் சுற்றி இருக்கும் ‘திடத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.

    அதற்கடுத்து இன்னும் கூரிய தொலைநோக்கியை ஆக்கிய பிரென்ச் கணிதஞானி காஸ்ஸினி, அது திடப் பொருள் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் இயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் வளையங்கள் தெரியாது சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது!

    சனிக்கோள் வளையங்களின் தனித்துவ அமைப்புகள்!

    சூரிய குடும்பத்தில் பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி இரண்டாவது பெரிய கோள் சனிக்கோளே. சனிக்கோள் நமது பூமியைப் போல் 95 மடங்கு பெரியது. தன்னைத் தானே சுற்ற 10.5 மணி நேரமும், பரிதியைச் சுற்றிவர 29.5 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கிறது. சனிக்கோளின் விட்டம் மத்திய ரேகைப் பகுதியில் 75,000 மைலாக நீண்டும், துருவச் செங்குத்துப் பகுதியில் 7000 மைல் சிறுத்து விட்டம் 68,000 மைலாகக் குன்றியும் உள்ளது. சனியைச் சுற்றிவரும் வளையங்களின் எண்ணிக்கை சுமார் 100,000 என்று அனுமானிக்கப் படுகிறது. அந்த வளையங்களில் விண்கற்களும், தூசிகளும், துணுக்குகளும் பனிமேவி இடைவெளிகளுடன் வெகு வேகமாய்ச் சுற்றி, சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால், அவை சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன. வளையங்களின் தடிப்புகள் 10 மைல் முதல் 50 மைல் வரை பெருத்து வேறு படுகின்றன. சனிக்கோளின் வெளிப்புற வளையத்தின் விட்டம் மட்டும் 169,000 மைல் என்று கணக்கிடப் பட்டுள்ளது! தூரத்திற் கேற்ப வளையங்களின் துணுக்குகள் பல்வேறு வேகங்களில் சனிக்கோளைச் சுற்றி வருவதால்தான், அவை சனியின் ஈர்ப்பு விசையில் இழுக்கப்பட்டு சனித்தளத்தில் மோதி நொறுங்காமல் தப்பிக் கொள்கின்றன!

    சனி மண்டலம் வாயுப் பாறை உறைந்த ஒரு பனிக்கோளம்!

    சனித் தளத்தின் திணிவு [Density] பூமியின் திணிவில் எட்டில் ஒரு பங்கு! காரணம் சனிக் கோளில் பெரும்பான்மையாக இருப்பது பாறையாக உறைந்திருக்கும் ஹைடிரஜன் [Hydrogen] வாயு. மிக்க பளு உடைய சனிக்கோளின் சூழ்நிலை, சூழக அழுத்தத்தைச் [Atmospheric Pressure] சனியின் உட்பகுதியில் விரைவில் உச்சமாகி ஹைடிரஜன் வாயுத் திரவ மாய்க் குளிர்ந்து கட்டியாகிறது [Condenses into a Liquid].  உட்கருவில் திரவ ஹைடிரஜன் மிக்கப் பேரழுத்தத்தால் இரும்பாய் இறுகி, உலோக ஹைடிரஜன் [Metallic Hydrogen] பாறை ஆகி, மின்கடத்தி யாக [Electrical Conductor] மாறுகிறது. சனிக்கோளம் ஒரு பிரமாண்டமான காந்தக் களமாக [Magnetic Field] இருப்பதற்கு இந்த உலோக ஹைடிரஜனே காரணம்

    நாசா ஏவிய காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவியின் தலையான பணி, ஹியூஜென்ஸ் உளவியைச் சுமந்து கொண்டு சனிக்கோளை அண்டி, அதைச் சுற்றி வருவது. சனிக்கோளைச் சுற்றும் போது, அதன் நூதன வளையங்களின் அமைப்பு, பரிமாணம், போக்கு, இடை

    ​ ​

    வெளிகள் ஆகிய வற்றை அளந்து ஆராய்வது. அடுத்து சனியின் சந்திரன்களை நெருங்கி அவற்றையும் ஆராய்ந்து புதுத் தகவல்களைப் பூமிக்கு அனுப்பும் பணி. ‘இதுவரைக் குருடர் தடவிப் பார்த்த யானையைப் போன்றுதான், சனிக் கோளின் காந்த கோளத்தைப் பற்றி வானியல் விஞ்ஞானிகள் தெரிந்து கொண்டிருந்தனர்! இப்போதுதான் யானையைக் கூர்ந்து பார்க்கப் போகிறோம்’ என்று டாக்டர் டாம் கிரிமிகிஸ் [Dr. Tom Krimigis John Hopkins Applied Physics Lab, Laurel Maryland] கூறுகிறார். பரிதியின் மேனியிலிருந்து வெளியேற்றப் பட்ட பரமாணுக்களின் புயல் வெள்ளம் சூழ்ந்த சக்தி மிக்க துகள்கள் உருவாக்கிய காந்த கோளமே, சனிக்கோளைச் சுற்றிலும் போர்த்தி யுள்ளது. 

    சனிக்கோள் அணிந்துள்ள ஒளிவீசும் எழில் வளையங்கள்!

    சனி மண்டலத்தின் ஒளிமயமான வளையங்கள் மிகவும் பிரம்மாண்டமான பரிமாணம் உடையவை ! சனியின் வளையங்களை பெண்ணின் கை வளையல் என்றோ, கால் சிலம்பாகவோ, அன்றி இடை அணியாகவோ எப்படி வேண்டு மானாலும் ஒப்பிடலாம் ! சனிக் கோளின் விட்டம் சுமார் 75,000 மைல் என்றால், அதற்கு அப்பால் சுற்றும் வெளி வளையத்தின் விட்டம் 170,000 மைல்! உள்ளே இருக்கும் முதல் வளையத்தின் விட்டம் 79,000 மைல் ! E,G,F,A,B,C,D, என்னும் பெயர் கொண்ட ஏழு வளையங்கள், சனியின் இடையை ஒட்டியாண அணிகளாய் எழிலூட்டுகின்றன! E என்னும் வளையம் அனைத்துக்கும் வெளிப்பட்டது. D என்னும் வளையம் அனைத்துக்கும் முற்பட்டது. A வளையத்துக்கும் B வளையத்துக்கும் இடைவெளி மட்டும் சுமார் 3000 மைல்! காலில் அணியும் சிலம்புக்குள்ளே இருக்கும் முத்துக்களைப் போல் ஒவ்வொரு வளையத்தின் உள்ளே கோடான கோடித் தனித்தனித் துணுக்குகள் [Individual Ringlets] பரவலாகி, சனிக் கோளை வட்டவீதிகளில் [Circular Orbits] சுற்றி வருகின்றன.  விண்கப்பல் வாயேஜர்-2 தனிக்கருவி மூலம் எண்ணியதில் சனியின் வளையங்களில் சுமர் 100,000 மேற்பட்ட கற்களும், பாறைகளும் சுற்றுவதாக அது காட்டி யுள்ளது!

     

    வளையங்கள் யாவும் சனியின் மத்திமரேகை மட்டத்தில் [Equator Plane] சுற்றும், வட்டவீதிக்கு 27 டிகிரி சாய்ந்த கோணத்தில் அமைந்துள்ளன.  சுடர்வீசும் வளையங்கள் எல்லாம் திரட்சியான தட்டுக்கள் [Solid Disks] அல்ல! சில இடத்தில் வளையம் 16 அடியாக நலிந்தும், சில பகுதியில் 3 மைல் தடித்துப் பெருத்தும் உள்ளன. வளையங்களில் பல்லாயிரக் கணக்கான பனித்தோல் போர்த்திய கூழாம் கற்கள் [Pebbles], பாறைகள், பனிக் கட்டிகள், தட்ப வாயுக் கட்டிகள் [Frozen Gases] தொடர்ந்து விரைவாக ஓடிச் சனிக்கோளைச் சுற்றி வருகின்றன! வளையங்கள் சூரிய ஒளியில் மிளிர்வதற்குப் பனி மூடிய கற்களும், பனிக் கட்டிகளுமே காரணம். சனிக்கோளை நெருங்கிய உள் வட்ட வளையத்தின் துணுக்குகள் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வெகு வேகமாகச் சுற்றிவரும் போது, வெளி வட்ட வளையத் துணுக்குகள் சிறிது மெதுவாக 15 மணி நேரத்தில் ஒரு தரம் சுற்றுகின்றன. வளையத் துணுக்குகளின் பரிமாணம் தூசியாய் இம்மி அளவிலிருந்து, பாறைகளாய் 1000 அடி அகலமுள்ள வடிவில், வட்டவீதியில் உலா வருகின்றன.

     

     

    சனிக்கோள் வளையங்கள் எப்படி உருவாயின என்பது புதிரே

    பனித்தோல் மூடிய துணுக்குகள், தூசிகள் நிரம்பிய சனியின் வளையங்கள் பரிதியின் ஒளியை எதிரொளிக்கின்றன !  அவற்றின் மீது விழும் 80% ஒளித்திரட்சியை அவை எதிரனுப்புகின்றன.  ஒப்புநோக்கினால் சனிக்கோள் தான் பெறும் 46% சூரிய ஒளியைத் திருப்பி விடுகிறது.  பூதக்கோள் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஓரிரு வளையங்களைக் கொண்டிருந்தாலும் அவை பூமியிலிருந்து தெரியப் படுவதில்லை !  பரிதியின் வெளிக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் அனைத்தும் பெரும்பான்மையாக வாயுக்கள் கொண்ட வாயுக் கோள்கள்.  அசுர வேகத்திலும், பூதக் கவர்ச்சி ஆற்றலிலும் அகப்பட்ட கோடான கோடி துண்டு, துணுக்குகளை சனிக்கோள் ஒன்றுதான் தனது மத்திம ரேகைத் தளத்தில் (Equator Plane) வட்ட வீதியில் சுற்றும் பல்வேறு வளையங்களாய் ஆக்கிப் பிடித்துக் கொண்டுள்ளது !  செவ்வாய்க் கோளுக்கு அப்பால் கோடான கோடிப் விண்கற்கள், பாறைகள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பாற்றலில் சுற்றி வந்தாலும் அவற்றைத் தனது சொந்த வளையங் களாக மாற்றி இழுத்துக் கொள்ள முடியவில்லை !  சனிக்கோள் மட்டும் எப்படித் தன்னருகே கோடான கோடிப் பனிக்கற்களை வட்ட வீதிகளில் சுற்றும் தட்டுகளாய்ச் செய்தது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது !  பேராசிரியர் மிசியோ காக்கு கூறியது போல் இந்த புதிய நூற்றாண்டில் சனிக்கோளின் அந்த நூதனப் புதிரை யாராவது ஒரு விஞ்ஞானி விடுவிக்கப் போகிறார் என்று நாம் எதிர்பார்க்கலாம் !

     

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – What Created Saturn’s Rings ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html
    11 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40308155&format=html
    12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html
    13 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    14 “Physics of the Impossible” Michio Kaku – Article By : Casey Kazan (March 4, 2008)

    15 http://en.wikipedia.org/wiki/Rings_of_Saturn  [April 15, 2014]

    16  http://www.dailygalaxy.com/my_weblog/2014/04/saturns-rings-are-they-revealing-the-creation-of-a-new-moon.html

    17  http://www.jpl.nasa.gov/spaceimages/details.php?id=PIA18078  [April 14, 2014]

    18  http://www.jpl.nasa.gov/news/news.php?release=2014-112  [April 15, 2014]

    19.  http://www.tasnimnews.com/English/Home/Single/341311  [April 17, 2014]
    ******************

    jayabarathans@gmail.com  [April 17, 2014]

    This Image Is Possibly The Birth of Saturns Newest Moon

    Saturn’s Mysterious Moons (V1)

    Saturn’s Mysterious Moons

    NASA | Cassini Mission to Saturn Highlights

    NASA | The Cassini-Huygens Mission To Saturn
    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (28)

    28. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! லியானார்டோ அருங்காட்சியகம், வின்ச்சி, இத்தாலி

    சுபாஷிணி ட்ரெம்மல்

    வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நபர்களில் சிலர் வாழ்ந்த இல்லங்கள் அல்லது அவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு மணடபங்கள் போன்றவற்றிற்குச் செல்லும் போதெல்லாம் காலத்தைக் கடந்து நிற்கும் அவர்களது நினைவுகளுடன் நான் சஞ்சரிப்பது வழக்கம். இப்படி அமையும் வாய்ப்புக்களெல்லாம் ஒரு அனுபவம் தானே என்று மிகச் சாதாரணமாக என்னால் நினைத்து விட முடியாது. மாறாக இவ்வகை நிகழ்வுகளை எனது டைரியில் முக்கிய நிகழ்வுகளாக நான் குறித்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

    இப்படி வாய்க்கும் அனுபவங்களில்.. அதிலும் குறிப்பாக நம் மனதில் மிக மிக நாம் ரசிக்கும், விரும்பும், அதிசயத்து வியக்கும், லயித்துப் போகும் ஒருவரது நினைவின் சுவடாக இருக்கும் ஒரிடத்திற்கு நாம் செல்கின்றோம் எனும் போது அந்த அனுபவம் தரும் உணர்வுப் பூர்வமான அனுபவங்களைப் பிரமிப்பு என்று சொல்வதா அல்லது வியப்பு என்று சொல்வதா எனக் குழம்பிப் போனாலும் இந்த வாய்ப்பு அமைந்ததை நினைத்து மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது என் அனுபவப் பூர்வமான உண்மை.

    உலக மனிதர்களில் என்னை மிகக் கவர்ந்த ஒருவர்.. எப்போது நினைத்தாலும் அல்லது அவர் பெயரைக் கேட்டாலும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒருவர்.. என்று சொன்னால் அதில் முதல் இடம் பெறுபவர் லியோனார்டோ டாவின்சி.

    ஒரு கலைஞன்..!
    ஒரு விஞ்ஞானி…!
    ஒரு கட்டிடக் கலைஞன்..!
    ஒரு அறிஞன்..!

    இவற்றிற்கும் மேல் லியோனார்டோ டாவின்சி …
    ஒரு புதுமை சிற்பி..!

    unnamed
    லியோனார்டோ டா வின்ச்சி

    பொதுவாக டாவின்சி என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனம் தொடர்பு படுத்திப் பார்ப்பது இந்தக் கலைஞன் உருவாக்கிய வரலாற்று பிரமாண்டங்களான தி லாஸ்ட் சப்பர் (The Last Supper) சித்திரமும் மோனா லிசாவின் (Mona Lisa) உருவப் படமும் தான். இதில் மோனா லிசா சித்திரத்தைப் பற்றி முந்தைய பிரான்ஸிலுள்ள லூவ்ர அருங்காட்சியகத்தைப் பற்றிய அருங்காட்சியகப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். லியோனார்டோ என்னும் இந்தப் புதுமை உலகப் படைப்புச் சிற்பியின் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பது இந்த இரண்டு சித்திரப் படைப்புக்கள் மட்டுமல்ல. இக்கலைஞனின் சிந்தனையில் உருவான பல்லாயிரக்கணக்கானச் சிந்தனை ஓட்டங்களின் பிரதிபலிப்பாக, புதிய உருவாக்கங்களைச் சலிக்காமல் படைத்தவன் இம்மாபெரும் கலைஞன். லியோனார்டோவின் படைப்புகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகள் இவற்றைப் பற்றி தனிப் பதிவாக எழுத வேண்டும் என்பதும் என் விருப்பம். பின்னர் ஒரு முறை இது நிச்சயம் வடிவம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

    1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் திகதி இத்தாலியின் வடக்கு மாநிலப் பகுதியின் ஒரு சிற்றூரான வின்ச்சி நகரில் பிறந்தவர் இவர். இவரது படைப்புகளைப் பார்க்கும் போது இவரது சிந்தனையை முற்றும் முழுதுமாக அறிவியலும், இயற்கை நியதிகளும், புதுமை படைக்க வேண்டும் என்ற தீவிர தாகமுமே ஆர்ப்பரித்திருந்தமையை மிக நன்றாக உணர முடியும். தனது சமகால படைப்புகளைப் பார்த்து அதன் நீரோட்டமாக தனது படைப்புகளை உருவாக்கியவன் அல்ல டாவின்சி. இதற்கு முற்றிலும் மாறாக தனது சமகால படைப்புகளிலிருந்தும் அதற்கும் முந்தைய படைப்புகளிலிருந்தும் மாறுபட்ட சிந்தனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவன் இவன். லியோனார்டோவின் பெயர் சொல்லி உருவான சித்திரக் கூடங்களும், கட்டிட கட்டுமான நெறி முறைகளும், அறிவியல் கருத்துகளும், மாணவர்களும் அவரை பின்பற்றி ரெனைசான்ஸ் எனக் குறிப்பிடப்படும் கலாச்சார மறு பிறப்பினை ஐரோப்பிய பிராந்தியம் முழுமைக்கும் இட்டுச் செல்ல வைத்த மிகப் பலம் பொருந்திய ஒரு ஆளுமை லியோனார்டோ டா வின்சி என்று சொன்னால் இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

    leo3

    வின்ச்சி நகரில் நுழையும் சாலை- இரு புறமும் ஆலிவ் மரங்கள் (ஏப்ரல் 2013)

    கடந்த ஆண்டு (2013) ஏப்ரல்-மே மாதங்களில் இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் மாவட்டத்திற்குச் சென்றிருந்த போது வின்ச்சிக்கு பிரத்தியேகமாக பயணித்து இங்கிருக்கும் டாவின்சி அருங்காட்சியத்தை நேரில் சென்று பார்த்து வந்தேன். கலையும் அறிவியலும் வெவ்வேறு தானே? இவையிரண்டும் ஓரிடத்தில் சங்கமிக்க முடியுமா என பலர் நினைக்கலாம். ஆனால், இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து லியோனார்டோவின் படைப்புகளைப் பார்வையிடும் ஒவ்வொருவரும் இவன் அறிவியலையும் கலைப்படைப்புகளையும் பிரித்துப் பார்க்காத ஒரு மனிதன் என்பதை அறிவர். அறிவியலுக்கும் கலைப்படைப்புகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை வைக்காது இரண்டையும் இணைத்துப் பார்த்து அதன் வழி புதுமையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தனி இடமும் சிறப்பிடமும் பெறுபவர் லியோனார்டோ.

    இது வரை கிடைத்திருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் லியோனார்டோவின் குறிப்புகளும் புதிய கண்டுபிடிப்புகளும் 13,000 பக்கங்களில் அவரது சொந்தக் கையெழுத்தினால் எழுதியும் வரைந்தும் வைக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளில் வானில் பறக்கும் இயந்திரம், போர் இயந்திரங்கள், மனித உடலின் உட்பகுதியில் அமைந்திருக்கும் அங்கங்களை தனித்தனியே ஆய்வு செய்து விளக்கிய வரைபடங்கள்-குறிப்புகள், கட்டுமான வரை படங்கள், வீட்டுத் தேவைக்கான இயந்திரங்கள் என்பன குறிப்பிடத்தக்கவை.

    leo2

    லியோனார்டோ வடிவமைப்பான, வின்ச்சி நகரைப் பார்த்தவாறு அமைந்திருக்கும் Vitruvian Man (ஏப்ரல் 2013)

    ரோபோட் எனப்படும் இயந்திர மனிதன் அல்லது மிருகங்களின் உருவாக்கம் என்னும் கருத்து கடந்த நூற்றாண்டில் விரிவாக வளர்ந்த ஒன்று. லியோனார்டோவின் சிந்தனையில் இயந்திர மிருகம் ஒன்றும் படைக்கும் சிந்தனை எழுந்து அதன் விளைவாக அசைந்து நடந்து சென்று தன் இதயத்தைத் திறந்து லில்லி மலர்களை வழங்கும் ஒரு இயந்திர சிங்கத்தையும் கருத்தில் சிருஷ்டித்து, அதனை உருவாக்கி அதன் உருவாக்கக் குறிப்புகளையும் பதிவு செய்து வைத்திருக்கின்றார்.

    ஒரு மனிதனால் இவ்வளவு விஷயங்களைப் படைக்க முடியுமா..? வெவ்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து இருந்து அதில் தன் முத்திரையைப் பதிக்க முடியுமா என்றால் முடியும் என்பதற்கு எனக்கு கண் முன்னே தோன்றும் உதாரணம் இந்த 15ம் நூற்றாண்டு மனிதர் லியோனார்டோ டா வின்ச்சி!

    அவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, இயந்திரக் கல்வி பயின்று தனது இளமைக் காலத்தைச் செலவழித்த வின்ச்சி நகரிலேயே அந்நகரின் ஊராட்சி மையம் அவருக்கு ஒரு அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றது. இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் 1919ல் எழ பின்னர் படிப்படியாக இதற்கானப் பணிகள் ஆரம்பிக்க, இவரது ஒரு பிறந்த தினத்திலேயே அதாவது 1953ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் இந்த அருங்காட்சியகம் திறப்பு விழா கண்டது.

    leo1

    நினைவு இல்லத்தின் வாசலில் (ஏப்ரல் 2013)

    இங்கு தான் உங்களை அழைத்துச் செல்ல விருக்கின்றேன்.

    வாருங்கள்.. இணைந்து செல்வோம்..!

    தொடரும்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (104)

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    உலகம் உருண்டு கொண்டிருக்கிறது. உருளும் இந்த உலகின் ஒவ்வொரு பாகத்திலும் வெவ்வேறு சமுதாய அமைப்புகள் வெவ்வேறு அங்கங்களாக வெவ்வேறு வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன..

    வித்தியாசமான வாழ்க்கைமுறைகளைக் கொண்டிருந்தாலும் அனைவருடைய அடிப்படைத் தேவைகளும் ஒரே இலக்கையே கொண்டிருக்கின்றன.

    உண்பதற்கு உணவு, உடுத்திக் கொள்வதற்கு உடை, பதுகாப்பாக வாழ்வதற்கு மனை இந்த அடிப்படை வாழ்வை நோக்கி முன்னேறிய மனிதவர்க்கம் தமது பாதுக்காப்பான வாழ்வை விடுத்து தமக்கு அடுத்த சந்ததியும் பாதுகாப்பாக வாழவேண்டும் எனும் எண்ணத்தில் தமது தேவைக்கு மேலாகச் சேமிக்கத் தலைப்பட்டார்கள்.

    இதுவே இன்றைய வாழ்க்கை முறையின் அத்தியாவசிய தேவைகளுக்கு வழிகோலி நிற்கிறது

    இத்தகைய சேமிப்பும் அச்சேமிப்புக்காக ஓயாது உழைக்கும் தன்மையும் வசையம் தானா ? எனும் கேள்வி எழும்போது இத்தேவைகளுக்கான தேடல்கள் இல்லையெனில் இன்று இவ்வுலக்கம் இத்தகைய விஞ்ஜான முன்னேற்றங்களை அடைந்திருக்குமா ? எனும் கேள்வியும் எழாமலில்லை.

    இங்கேதான் நியாயத்திற்கு அந்நியாய வரம்பினைக் கடக்கும் மனப்பான்மைக்குமான வேறுபாடு தலைதூக்குகிறது.

    தனக்கும் தனது தலைமுறைக்குமான தேடல்களை நியாய வரம்பினிற்குள் தேடும் மனிதனின் நியாயமான் ஆசைகள் அதன் எல்லையைக் கடக்கும் போது அங்கு அடுத்தவரின் தெவைகளை மதிக்காது தமக்க்கே அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை மெதுவாக உள்லே நுழைகிறது.

    என்னடா இது ? சக்தி இம்மடலில் வேத வியாக்கினகங்களை அள்ளி வீசுகிறானே என்று அங்கலாய்ப்பது புரிகிறது..

    மனைதனுடைய நியாயமான தேடல்களின் வரம்பு மீறல்களைக் கட்டுப்படுத்தி வாழ்க்கையின் அடிமட்டத்தில் சந்தர்ப்பம் இல்லாமையாலோ அன்றிக் காலத்தின் செயற்பாட்டினாலோ அல்லாடிக் கொண்டிருப்போருக்கான பாதுகாப்பை உத்தர்வாதப்படுத்துவதே உண்மையான மக்கள் அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது.

    இன்றைய இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைப்பது அவசியம் எனும் பாணியில் வேலையில்லாதோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகள் இவர்களின் பராமரிப்புக்காக உதவிகள் அரசாங்கக் கொள்கைகள் வாயிலாக அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அடிப்படைத் தத்துவங்கள் அனைத்து கட்சிகளினாலும் அபிப்பிராய பேதமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

    சரி அப்படியானல் எவ்விடத்தில் கட்சிகள் இக்கொள்கையில் வேறுபடுகின்றன என்ற கேள்வி எழுவது இயற்கையே !

    மக்களின் அடிப்படைத் தேவைகள் எவை ? அவை எத்தகைய மக்களின் பாவனைக்கு அளிக்கப்படுக்கின்றன? இவ்வரசாங்க உதவிகளைப் பெற்றுக் கொள்பவர்கள் உண்மையாகவே அதற்குரிய தகுதிகளைக் கொண்டவர்கள் தானா? எனும் கேள்விகளுக்கு எந்த அள்வில் உளரீதியான மனசாட்சிக்கு விரோதமில்லாத விடைகளைத் தேட்டுவதிலேயே இக்கட்சிகளின் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் தென்படுகின்றன.

    வேலையிலாதோருக்கு உதவிப்பணம் கொடுப்பதென்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் உதவிப்பணத்தைப் பெற்று இலகுவாக பணி எதுவும் புரியாமலே வாழப்பழகிக் கொண்டவர்கள் தாம் வேலை தேடுவட்ய்ஹர்க்லு எதுவித முயற்சியும் எடுக்காமல் வாழ்வது என்பதும் எமக்குக் கண்கூடாகவே தெரிகிறது.

    இரண்டு உதாரணக்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் மிகவும் கடுமையாக உழைத்து கிடைக்கும் பணத்துக்குள் தனது குடும்பத்தைப் பராமரித்து வருகிறார். மற்றொருவரே பல வருடங்கள் எதுவுதப் பணியுமே புரியாமல் அராசங்கம் கொடுக்கும் உதவிகளைக் கொண்டு தனது குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு தனது வாழ்வை விடுமுறையில் வாழ்வது போலக் கழிக்கிறார்.

    வேலையிலாதவருக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணம் எங்கிருந்து வருகிறது கடுமையாக உழைக்கும் மற்றையவரின் வரிப்பணத்திலிருந்தே !

    இங்கேதான் பல கேள்விகள் எழுகின்றன. மனிதனின் அடிப்படை வசதிகள் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ?

    மூன்று வேளை உண்ண உணவும், கெளரவமாக உடுத்திக் கொள்ள உடையும், வசிக்க வீடுமா இல்லை கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, பயணிக்க மோட்டார் வாகனம் இவையும் சேர்ந்ததா ?

    இன்றைய இங்கிலாந்தில் இக்கேள்வி மிகப்பிரதானமாக பலரின் மத்தியில் எழுந்துள்ளது.

    அதேவேளை எத்தனையோ முயற்சித்தும் எந்த வேலையும் கிடைக்காமல் அல்லல்படும் மனிதர்களும் இல்லாமல் இல்லை.

    2015ம் ஆண்டு மேமாதம் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இப்பொதுத் தேர்தலில் என்றுமில்லாதவாறு கட்சிகளுக்கிடையில் கடும் போட்டிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

    எந்தக் கட்சி ஆட்சியமைக்கப்போகிறது என்பது எந்தக் கட்சி அதிகாரக் கதிரையில் அமரப்போகிறது என்பது இந்தப் பிரச்சனையில் எந்தக் கட்சி மிகவும் அதிரடியான ஆனால் மக்களின் வரவேற்புப் பெறும் பிரகடனங்களில்  மிகவும் துணிச்சலாக முன்வைக்கப் போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது..

    இனிவரும் வாரங்களில் மேலும் பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 2

     

    வேதக் கடல்

    சு.கோதண்டராமன்

    வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.

    ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே”  என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

    வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த  விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.

    untitled 2

                உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். —மகாகவி பாரதி

    எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

                சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.

                அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.) இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

    யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.

    காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.

    untitled 1

    இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,

    अप्स्वन्तरमृतप्सु  भेषजमपामुत  प्रशस्तये । देवा  भवत  वाजिन:  ரிக் ஸம். 1.23.19

    நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.

    இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.

    अप्स्वन्तरमृतमप्सु  भेषजमपामुत  प्रशस्तिष्वश्वा  भवथ  वाजिन:  தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74

    நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே, வலிமை பெறுங்கள்.

    தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது.   இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.

    யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.

                யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான்.  அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.

              யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்………. 

                எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.

     படங்களுக்கு நன்றி:

    http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html

    Share