இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (105)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பு கலந்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே அடுத்தொரு வார முடிவில் மகிழ்வுடன் வந்திருக்கிறேன்.

ஜனநாயகம் , தேர்தல் , வாக்கெடுப்பு என உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எனக் கருதப்படும் இந்திய மண்ணின் தேர்தல் திருவிழா அரங்கேறும் வேளையிது.

எனது தமிழக உறவுகள் யாரைத் தொடர்பு கொண்டாலும் அனைவரும் வாக்களிப்பதைத் தமது முதற்கடமையாகக் கொண்டுள்ளார்கள் எனும் செய்தி மனதுக்கு மிகவும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறது.

ஈழத்திருமண்ணை பிறந்த மண்ணாகவும், இங்கிலாந்து நாட்டின் வாழ்விடப் பிரஜையாகவும் இருக்கும் எனக்கு ஏன் இந்தியத் தேர்தலில் இத்தனை அக்கறை எனக் கேள்வி எழுவது சகஜமே !

இந்திய அரசியலின் தாக்கம் எனது தாய்மண்ணின் சகோதரர்களின் வாழ்வுடன் சம்மந்தப்பட்டது என்பது முதற்காரணம்.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையில் இன்று முன்னனி வகிக்கும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக இந்தியத் திருநாடு திகழ்வது அடுத்தொரு காரணமாகிறது.

ஈழத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளின் பின்னர் இன்றைய நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒரு நிம்மதியான, நிரந்தரமான, கெளரவமான, தமது வாழ்வாதரங்களை தாமே நிர்ணயிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.

அதற்கு ஒரு திடமான, நிலையான மக்களின் அனுமதி கொண்ட அதிகாரமிக்க இந்திய அரசு அவசியம்.

நான் அரசியல் பாகுபாடற்றவன்.

இந்திய அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை உண்மையாகவே விரும்புகிறார்கள்.

அவர்களின் அணுகுமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் அனைவரின் இறுதி நோக்கமும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வே.

இதுவே யதார்த்தமாகும்..

தத்தமது அரசியல் காரணங்களுக்காக, தமது கட்சிகளின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் மற்றவர் மீது வீசும் சரமாரியான குற்றச்சாட்டுகளும் ஏனைய கொள்கை வேறுபாடுகளும் அவர்களின் காலத்தின் கட்டாயம்.

வித்தியாசங்களில் விளைவதுதான் மனித வாழ்க்கை. மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கை நியதி. ஆனால் சத்திய உண்மைகள் நிரந்தரமானவை அவை காலத்தால் அழியாதவை.

தேர்தல் காலங்களில் தேவைகளின் நிமித்தம் காலக்கட்டாயத்தின் பணிப்பில் வேறுபாடுகள் விளக்கேற்றி வெளிச்சமூட்டப்படுகின்றன.

ஆனால் இந்தியத் தேர்தலின் வெற்றியில் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ஏன் மொத்த இலங்கையின் எதிர்கால சுபீட்சமுமே தங்கியுள்ளது. எனலாம்.

அடுத்ததாக இன்றைய உலகப்பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கடந்த சில வருடங்களாக உலகின் முன்னனி நாடுகள் கண்ட பொருளாதார வீழ்ச்சியிலும் கூட இந்திய பொருளாதார வளர்ச்சியையே கண்டது.

இன்றைய உலக்ப்பொருளாதாரச் சந்தையில் முன்னனி நாடாக இந்தியப்பெருந்தேசம் விளங்குவது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும்..

இந்தியா காணும் பொருளாதார வளர்ச்சி சமுதாயத்தின் அடிமட்ட மக்களைச் சென்றடைகிறதா இல்லையா என்பதைப் பற்றி அலசும் வகையான ஆற்றலும், இத்தகையதோர் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை போட்டியிடும் எந்தக் கட்சிகளிடமும் உள்ளதா என்பதைப் பற்றிக் குறிப்பிடுவதற்கான அரசியல் முதிர்ச்சியும், இந்திய அரசியல் வரலாற்றுப் பின்னனி பற்றிய பூரண அறிவு இல்லாத என்னிடம் இல்லை என்பதுவே உண்மை.

இருப்பினும் மத்தியில் ஒரு உறுதியான அரசாங்கம் அமைந்திருப்பதால் மட்டுமே இந்தியாவின் இந்த முன்னனி நிலை உலகப்பொருளாரச் சந்தையில் நீடித்திருக்கும் என்பதைத் நான் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

இந்திய உபகண்டத்தின் அரசியலும் இவ்வுபகண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புகளும் ஒரு சுதந்திரமான , உறுதியான இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தான் முன்னெடுத்துச் செல்லப்படமுடியும் என்பதும் அரசியல் அவதானிகள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகிறது.

இத்தகைய வலுவான காரணங்களின் அடிப்படையில் இந்தியத் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவனாகிறேன்.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல அவர்கள் பெறும் வெற்றி ஜனநாயக வரம்புகளுக்குட்பட்டதாக சுதந்திரமான இந்திய அரசியல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதே முக்கியமானது.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *