செண்பக ஜெகதீசன்

 

நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும்புனலி

னீங்கி னதனைப் பிற.

-திருக்குறள் -495(இடனறிதல்)

 

புதுக் கவிதையில்…

 

இருக்கும்

இடத்தை வைத்துத்தான்

இருக்குது எதிலும் வெற்றி..

 

நீரிலிருக்கும் வரைதான் முதலை

எமனாகும்

எல்லா உயிர்க்கும்..

 

நீங்கி வெளியே வந்தால்,

அது

இரையாகும்

பிற உயிர்க்கே…!

 

குறும்பாவில்…

 

நீரிலிருந்தால் வென்றிடும் முதலை,

நீங்கி வேறிடம் வந்தால்

இடருறுமே பிற உயிர்களால்…!

 

மரபுக் கவிதையில்…

 

தண்ணீர் நிறைந்த நீர்நிலையில்

தங்கி வாழும் முதலையது

எண்ணம் போல வெல்லும்பிற

எல்லா உயிரையும் தன்பலத்தால்,

தண்ணீர் நீங்கி வெளிவந்து

தரையில் நின்று போரிட்டால்

கண்டிடும் தோல்வியே பிறவுயிரால்,

கற்றிதை செயல்படு இடனறிந்தே…!

 

லிமரைக்கூ…

 

நீரில் இருக்கும்வரைதான் வென்றிடும் முதலை,

தரையிலது தோற்றிடும்..

இடனறியாத செயல்பாட்டால் இழந்திடுவாய் முதலை…!

 

கிராமிய பாணியில்…

 

தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ

மொதலக்கத தெரிஞ்சுக்கோ..

 

அது

இருக்கும்வர தண்ணிக்குள்ள

இல்ல அதுக்கு எதிரிதான்,

எல்லா உயிரும் அடக்கந்தான்

எப்பமுமே வெற்றிதான்..

 

ஆனா,

தண்ணியவுட்டு வெளியவந்தா

தலகீழா மாறிப்போவும்,

எல்லா உயிரும் எதிரிதான்

எதுத்துநின்னா தோல்விதான்..

 

அதால

தெரிஞ்சுக்கோ தெரிஞ்சிக்கோ

கருத்தநல்லாத் தெரிஞ்சக்கோ,

நடந்துக்கோ நடந்துககோ

எடந்தெரிஞ்சி நடந்துக்கோ…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(25)

  1. நம் பலம் அறிந்து செயல்பட்டால் வெற்றியோடு வலம் வரலாம் எனும் வாக்கை , அத்தனை விதத்திலும் வழக்கம் போல் அருமையாய் தந்துள்ளீர்கள்.

  2. கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
    திரு. அமீர் அவர்களுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *