வாழ்க்கை நலம் – 57
குன்றக்குடி அடிகள்
57. “மெய்ப்பொருள் காண்பதறிவு”
இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித்தன்மை பெற்றே விளங்குவன.
மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது வாழ்வின் துறைதோறும் வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமால் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றது.
பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு. சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும்.
ஆனால் நிலையில்லாதவனாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும், சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு “மெய்” என்று பெயர். அனால், இது உண்மையல்ல. காலத்தால் கேடுறுதலாம். சர்க்கரை இனிமையானது. சர்க்கரையால் விளைவது பெருந்துன்பம். வெந்தயம் கசப்பான பொருள். ஆனால் வாழ்க்கைக்கு நலம் தருவது; இன்பம் தருவது.
குளிர்ச்சியானவையாக இருப்பவை சூட்டையே தருகின்றன. சூடாக இருப்பவை குளிர்ச்சியையே தருகின்றது. ஆதலால் பொருளின் தோற்றம் பார்க்காமல் பொருளின் தன்மை, அப்பொருளால் விலையும் பயன் ஆகியன தெரிந்து அதற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். இத்தகு அறிவு சராசரி மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஞானிகளுக்கே உண்டு.
சாதாரண மக்கள் தோற்றதால் கவர்ச்சிக்கப்படுவர். தற்காலிகமானவையாக இருப்பினும் உடனடியாக பலன்களை எதிர்பார்ப்பர். எப்பொருளையும் ஆழ்ந்து நோக்குவதில்லை. வேளாண்மைக்குப் பயன்படும் இரசாயன உரங்கள் உரமே இல்லை.
இரசாயன உரங்கள் ஒருவகைத் தூண்டு சக்தியேயாகும். ஆனால் நமது மக்கள் இவைகளை உரம் என்று நம்பினார்கள்; இந்த உரத்தையே நம்பி, குப்பை உரம் தயாரிப்பதை மறந்தார்கள். இதனால் நிலத்தின் பூசாரம் குறைந்ததுதான் மிச்சம். அறியாமை அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுதல் இன்றைய பெரு வழக்கு. இதற்கு அப்பரடிகள் ஒரு கதை கூறி விளக்கினார்.
ஆமை சாப்பிடும் மக்கள், ஆமையை உலைப் பானையில் இட்டு வேக வைத்தார்கள். உலைப் பானையில் தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது ஆமை இன்ப போதையில் துள்ளி விளையாடும். ஆனால் அந்தச் சூடு இன்பமாக இருக்கும் பொழுது நீடிக்கப் போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்.; இதனை உணரும் சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களில் பலர் இப்படிதான் வாழ்கின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளவிப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” (திருக்குறள் – 355) என்றார்.
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி