அன்புக்கு நான் அடிமை..
கவிஞர் காவிரி மைந்தன்
உலக உயிர்களின் ஆதார ஸ்ருதி அன்பு மட்டுமே! அன்புமன வீணைமீட்டி எழும் ஆனந்தராகத்தில்தான் இன்பமயமிருக்கும்! இவ்வுலகம் இயக்கம் பெறும்! ‘நீ’ ‘நான்’ என்பதைவிட ‘நாம்’ என்பதில் சுகமிருக்கும்! பொருளிருக்கும்! இறைவன்மீது கொள்கின்ற பக்தி என்பது என்ன? அன்பின் மிகுதிதானே? எனவேதான் அடியார்க்கு அடியாராக இறைவனே திருவிளையாடல் புரிந்ததாக புராணங்கள் சொல்கின்றன.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். நாகரீக மோகத்தில் நடைபெறும் ஒரு கேளிக்கை வரவேற்பில் பாடுகின்ற பாட்டு! எத்தனையோ பக்கங்களில் எழுதப்படவேண்டிய கருத்தோவியத்தை தன் தூரியைால் கவிதையாக்கி ஒற்றைப்பாடலில் நிலைநிறுத்திக் காட்டியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்!
அறவழியில் செல்ல வேண்டிய மனத்தை ஆர்ப்பரிக்கும்் நவநாகரீக மோகம்வந்து அலைக்கழிப்பதை அடையாளம் காட்டுகிறார். ஏழைகள் வாழ்வில் ஒரு பக்கம் இல்லாமையால் வாடுகிற போது, செல்வந்தர்கள் மறுபக்கம் அளவின்றி செலவிடுவதை அழகாக எடுத்துக்காாட்டிய இனிய பல்லவி..
‘அன்புக்கு நான் அடிமை’ என்கிறது!
தமிழக மக்களின் ஏகோபித்த வாழ்த்துக்களோடு அரியணையேறவிருந்த மக்கள் திலகத்தின் திரைவரலாற்றின் கடைசிப் பக்கங்களில் இடம்பெற்ற பாடல்! ‘இன்றுபோல் என்றும் வாழ்க’ – இதிலே கனிந்த நல் மனதில் தோன்றும் கருணையின் வார்த்தைச் சரங்கள் சுகம் சுகமாய் பவனி வரும் சுந்தரத்தமிழைக் கேளுங்கள்! கானக்குரலெடுத்து கவரும் கே.ஜே.யேசுதாஸ் பாடிடும் பாடலாய்.. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் நம்மை ஈர்த்திடும் இனிய பாடல்! நல்லவர் உள்ளமெல்லாம் வள்ளலைலப் போற்றியிருக்க.. நற்றமிழில் பாடல் இயற்றி நலமுறத் தந்தாய் வாழி என முத்துலிங்கத்தைப் பாராட்டலாமே!
அன்புக்கு நான் அடிமை …
அன்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எங்கும் பாலைவனம் போல்
இருக்கும் நிலை பார்க்கிறேன்
அன்பு பணிவு அடக்கம் எங்கே
தேடி பார்த்தேன் தென்படவில்லை
(அன்புக்கு நான் அடிமை )
குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசை தண்ணீர் போலே
இரைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே
(அன்புக்கு )
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
உறவு கொண்டீர்களே
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
மறந்து போனீர்களே
நாகரீகம் என்பது எல்லாம்
போதையான பாதை அல்ல
(அன்புக்கு )

