இவள் பாரதி

nivi

உனக்கு எப்போதெல்லாம்
வெளிப் போந்த தோன்றுகிறதோ
அப்போதெல்லாம்
சிவப்புச் செருப்பை ஏந்தியபடி
அறைகள்தோறும்
ஒவ்வொருவராய்
அழைத்துப்போகச் சொல்லிக்
மூடியிருக்கும் கதவை கைகாட்டுகிறாய்..
பார்த்துக்கொண்டிருந்த காற்று
கதவை பலம்கொண்டு தள்ளியது
துள்ளிஓடினாய் காற்றாய் காற்றின்பின்
————-

மருத்துவமனை
பேருந்து நிறுத்தம்
விசேஷ நிகழ்ச்சிகள்
போகுமிடங்களில்
பசித்தால்
மேலாடை இழுத்து
கையையோ தலையையோ
உள்நுழைக்க முயல்கிறாய்..
புன்முறுவலோடு தனியறை தேடியமர்ந்து
அமுதூட்டுகிறேன்
ஒருவயது கடந்து பாலருந்தும் மழலை மட்டுமல்ல
முலையூட்டும் தாயும் பாக்கியவான்களே
———

சுவற்றில் அசையாது நிற்கும்
பல்லியைப் பிடிக்க
சலிக்காது முயற்சிக்கிறாய்
உன் கைவிரலுக்கும்
அதன் இருப்பிடத்திற்கும்
சிறு இடைவெளியேயிருக்க
பதறிப்போயுனை பின்னுக்கிழுத்ததில்
சிதறின
பல்லி செல்லவிருந்த பாதையும்
பொக்கை வாயின் பயமும்

 

 

1 thought on “சிறுகை அளாவிய கூழ் (16)

  1.  மிக அருமை. ஒரு குழந்தையை மடியில் விட்டுவிட்டீர்கள். அழகு வெகு அழகு. நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க