ஏப்ரல் 23: உலக வாசகர்களின் பிறந்த நாள்

எஸ் வி வேணுகோபாலன்

images (3)
எல்லா வேறுபாடுகளையும் கடந்த ஒரு திருநாளாக புத்தக தினம் பிறக்கிறது. உலக வாசகர்களின் பிறந்த நாள் இது. பெரிய பெரிய படங்களைக் கொண்ட பல வண்ண புத்தகத்தை ஒய்யாரமாகக் கொண்டாடிப் படித்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுமியும், முகத்தருகே புத்தகத்தை வைத்துக் கண்களை இடுக்கியவாறு படித்துப் பெருமிதம் கொள்ளும் மூத்த குடிமகன் ஒருவரும் ஒரு சேர பூரிப்பு கொள்ளும் அற்புத தினம் அல்லவா இந்த நாள்!

திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும் என்னைக் கிறங்கடிக்கும் செய்தியாக இருப்பது, ஸ்பெயின் தேசத்தின் கேட்டலோனியா நகரத்தில் இந்த நாளைக் காதலர் தினம் போலக் கொண்டாடும் விதம்! ஆடவர்கள் தமது மனம் கவர்ந்த நங்கையர்க்கு ரோஜா மலர்களைப் பரிசாக அளித்து மகிழ்வார்களாம். பதிலுக்கு, அந்தப் பெண்கள் புத்தகங்களை வழங்குவார்களாம். இந்த நாளில் 4 மில்லியன் மலர்களும், 8 லட்சம் நூல்களும் கை மாறும் என்று தெரிவிக்கிறது இணையதள குறிப்பு ஒன்று. ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் சரிபாதி இந்த ஒரு நாளில் விற்றுவிடுமாம். புத்தகக் காதலர்களும், காதல் அகத்தினரும் நீடூழி வாழ்வார்களாக!

ஒரு பெரிய ஆளைக் கூட மாய மந்திரம் போட்டுக் குறுக்கி ஒரு குடுவையில் அடைத்துவிடுகிற மந்திரவாதி போல, இந்த உலகத்தையே-அதன் வரலாற்றையே-அரிய மனிதர்களையே-அருங்காட்சி அனைத்தையுமே…ஒரு சொடுக்கு போட்டுக் குடுவையில் அடைத்ததுமாதிரி ஒரு புத்தகம் நம் எதிரே இருக்கிறது. எத்தனை எத்தனை குடுவைகளை நம்மால் விடுவித்துப் பார்க்க முடிகிறதோ அத்தனை இன்பங்கள் இந்த வாழ்வில் நமக்கு வசப்படுகிறது. அதன் பார்வையே முதல்கட்ட உற்சாகத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைத்துவிடுகிறது.

நாம் கதவைத் திறந்ததும் நம்மோடு பேசத் தொடங்குகிற சித்தராக இருக்கிறது புத்தகம். அந்தக் குரல் மூடி வைத்த அந்த நூலில் நமக்காக எத்தனையோ காலமாகக் காத்திருக்கிறது. நமக்குப் போதும் என்கிறபோது, கதவை மீண்டும் சாத்தி வைத்தால் சடக் என்று அமைதியாகி அடுத்த திறப்புக்குக் காத்திருக்கிறது அந்தக் குரல். யார் தட்டியபோதும் திறக்கிற அந்தக் கதவு, கரையான்களிடமும் பேதம் பார்க்காமல் தன்னை ஒப்புக் கொடுத்து ஒரு தியாகப் பெருவாழ்வுக்குத் தயாராகிறது.

அவரவர் கற்பனைக்கு ஏற்ப, அவரவர் வேகத்திற்குப் பொருத்தமாக, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் முன்பின்னாகக் கூடக் காட்சிகளை இயக்கும் திரையரங்கமாக இருக்கிறது ஒரு புத்தகம். ஒளியுமிழும் அதன் திரைச்சீலை, படத்தைப் பார்ப்பவர் ஏரிக்கரையில் அமர்ந்தாலும், பயணத்தின் ஊடே வருகை புரிந்தாலும், சமையல் அறை வேலைகளின் இடைவெளியில் எட்டிப் பார்த்தாலும் அதே மதிப்போடும், பொறுப்போடும் தனது திரையிடலை அன்போடு நிகழ்த்துகிறது. பழைய படங்களின் புதிய காப்பிக்காக ஏங்காத வாசகர் உண்டா! எத்தனை எத்தனை கிளர்ச்சியை உருவாக்குகிறது இந்த வாசிப்பு!

பழைய புத்தகங்களைப் புரட்டிப் புரட்டி அதன்மீது போதை கொண்டு அலைவோரைக் குறித்து ஒரு கட்டுரையை பதினைந்து ஆண்டுகளுக்குமுன் தினமணிக் கதிரில் வாசித்த நினைவு வருகிறது. ஆக்கபூர்வமான போதை அது! இனி புத்தகமே வாங்கமாட்டேன் என்று சொல்லிச் சென்ற நண்பர் ஒருவரை அடுத்த வருடமே புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன். மது அருந்தாவிட்டால் என்ன, பழகிய கடைக்குப் போய்வருவதில்லையா, அப்படித்தான் இதுவும் என்றார் அவர்!

வேறு ஒரு நண்பர் எப்போது சந்திக்கும்போதும் ஜோல்னாப் பையைப் பிடுங்கி உள்ளே என்ன புத்தகம் இருக்கிறது என்று ஆராய்வார். இன்னொருவர், கடைசியாக என்ன புத்தகம் வாசித்தீர்கள் என்றுதான் பேச்சையே தொடங்குவார். இப்படியான ஜீவிகள் அடுத்தவர் வாசிப்பைத் தூண்டவும், வாசிப்பின் தூதுவர்களாகவும் அமைந்துவிடுகின்றனர். பகிர்வு மிகப் பெரிய வாசிப்புத் தளம். தாங்களாக வாசிக்க இயலாதவர்கள்கூட இப்படியான கேள்வி ஞானத்தில், ஒரு கட்டத்தில் தேடித் பிடித்து வாசிக்கத் தொடங்குகின்றனர். மறைந்த அற்புதக் கலைஞர் பூர்ணம் விசுவநாதன் அவர்களது குழுவில் நடித்துவந்த ரமேஷ் என்ற வங்கி ஊழியரது பணி நிறைவு விழாவில் பேசிய குருகுலம் நாடகக் குழு இயக்குனர் பூவராக மூர்த்தி, எப்போது பார்க்கும்போதும் இவரைப் படிக்கவில்லையா அவரைப் படிக்கவில்லையா என்று கேட்டுக் கேட்டு எத்தனையோ எழுத்தாளரது படைப்புகளை ரமேஷ் தன்னை வாசிக்க வைத்த உத்தியைக் குறிப்பிட்டார். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறும் வித்தியாச கோஷ்டிகள் இவர்கள்.

இந்த ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் அன்று , வாசிப்பு குறித்த எனது அனுபவங்களை எல்லாம் புரட்டிப் போட்டாள் ஓர் ஒன்பது வயது சிறுமி. திருவான்மியூர் பனுவல் அமைப்பின் சமூக நீதி மாத நிகழ்வுகளில் அன்று பீமாயணா என்ற படக் கதை வடிவிலான அம்பேத்கர் வரலாறு புத்தகத்தை அறிமுகப் படுத்திப் பேசிய அந்தக் குழந்தையின் பெயர் சைதன்யா. கையில் எந்தக் குறிப்பும் அற்று, ஒரு பிசிறு இல்லாமல், சுமார் இருபது நிமிடங்கள்போல அத்தியாயம் அத்தியாயமாக அவள், அம்பேத்கரின் ஆளுமை குறித்து தான் அடைந்த வியப்பின் பிரதிபலிப்பை எடுத்து உரையாற்றிய விதம் பார்வையாளரை அசத்தியது. வண்டிக்காரர் இளக்காரமாகப் பார்த்தார் என்ற வாக்கியமும், பின்னர் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கையில், அதிலும் அம்பேத்கருக்கு ஒரு நன்மை இருந்தது. தீண்டாமை குறித்துப் புரிந்து கொள்ளவும் போராடவும் அவருக்கு அது உதவியது என்ற சொல்லாடலும் நுட்பமாக இருக்கும் அவரது வாசிப்பை உணர்த்தியது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தில் நடித்திருக்கும் இந்தச் சுட்டிப் பெண், ஏற்கெனவே எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது குழந்தைகளுக்கான கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விருது வாங்கி இருப்பவர். வலைப்பூவில், கவிதைகளை எழுதித் தள்ளுபவர். இந்தக் குட்டிப் பெண்தான், இணையதள சாட்டில் பதில் போடத் தவறியபோது என்னை இறந்து விட்டீர்களா என்று கேட்ட தேவதை.

வாசிப்பு இறக்காத வரை மனிதர்கள் பெருவாழ்வு வாழ்வார்கள் என்றே தோன்றுகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இந்த நாள், உண்மையில் வாசகர்களின் பிறந்த நாள்! உலகம் முழுக்க பிறந்த நாள் கொண்டாடும் வாசகர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

**********
நன்றி:தி இந்து நாளிதழ்: ஏப்ரல் 23, 2014

படத்திற்கு நன்றி:

http://www.catchy.ro/author/adina-dinitoiu

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஏப்ரல் 23: உலக வாசகர்களின் பிறந்த நாள்

  1. //பழைய படங்களின் புதிய காப்பிக்காக ஏங்காத வாசகர் உண்டா! எத்தனை எத்தனை கிளர்ச்சியை உருவாக்குகிறது இந்த வாசிப்பு!//

    புத்தக வாசிப்பைபற்றி மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். இனிய புத்தக வாசிப்பு நாள் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.