மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை
மலர் சபா
கொடும்பாளூரை அடுத்த நெடுங் குளக்கரையில் வழி முப் பிரிவாகப் பிரிதல்
அங்கே இருக்கின்ற
கொடும்பாளூர் நெடுங்குளம் என்ற
இரு ஊர்களுக்கு இடையே உள்ள
கோட்டகத்துக்குள் புகுந்து சென்றால்
அந்த அரிய வழி
பிறை நிலவதனைத் தன் தலையில் சூடிய
பெருமை வாய்ந்த இறைவன் சிவபெருமான்
கையில் ஏந்தியுள்ள
மூன்று தலை கொண்ட திரிசூலம் போல்
மூன்றாகப் பிரிந்து செல்லும்.
வலப் பக்கம் செல்லும் வழி
அங்ஙனம் காணப்படும் மூன்று வழிகளுள்
நீங்கள் வலப்புறம் உள்ள வழியில் செல்ல விரும்புவீராயின்
விரிந்து அகன்ற தலையை உடைய வெண்கடம்ப மரமும்
காய்ந்து உலர்ந்த தலையை உடைய ஓமை மரமும்
அடைப்பகுதியாகிய தாள்கள் பொரிந்து காணப்படும் வாகை மரமும்
காய்ந்த தண்டுடன் விளங்கிடும் மூங்கில் மரமும்
நீர் வற்றியதால் சுருங்கி வரிகளுடன் விளங்கிடும்
சப்பாத்திக் கள்ளிகள் கரிந்து கிடக்கும் இடங்களையும்..
நீர் பருக விரும்பி வேட்கையாலே
மான்கள் அலைந்து திரிந்து சத்தமிடும்
காட்டினையும் இடையிடையே
பாலைவாழ் மக்களாகிய எயினர் வசிக்கும்
பாலை நிலங்களைக் காண்பீர்கள்.
அவற்றைக் கடந்து சென்றபின்,
ஐவனம் என்னும் நெற்பயிர்கள் விளையும் கழனி,
இலையற்ற கணுக்களையுடைய கரும்புச்சோலை,
கொய்யும் பருவம் அடைந்திட்ட அழகிய திணைப்புனம்,
கொழுவிய கொல்லையில் விளைந்திட்ட வரகு,
வெள்ளுள்ளி மஞ்சள்
அழகிய கொடியுடைய கவலைக் கிழங்கு,
வாழை கமுகு,
தாழ்ந்த குலையாகத் தொங்குகின்ற தென்னை,
மா பலா இவை யாவும்
அடுத்தடுத்துச் சூழ வளர்ந்திருக்கும்
பாண்டிய மன்னனுடைய
‘சிறுமலை’ எனும் ஊரைக் காணலாம்.
அம்மலை உங்கள் வலது புறமாக வரும்படி
நீங்கள் சென்றால்
அகன்ற நகரான மதுரை மாநகரை அடையலாம்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 86