என்னுயிர்த்தோழனே..!
பிச்சினிக்காடு இளங்கோ
உதிரத்தை வியர்வையாய்
மொழிபெயர்க்கத்தெரிந்தவனே
வியர்வையை நதியாக்கி
நாளும் குளிப்பவனே
என்னுயிர்த்தோழனே
உன் வியர்வைத்துளி
ஒவ்வொன்றும் ரூபாயல்ல
வெள்ளி…வெள்ளி
அள்ளி ச்சேர்க்க
வந்ததை மறந்து
வெள்ளித்திரைமுன்
விரயம் செய்வதா?
வெள்ளி
சலுகையில் கிடைத்ததல்ல
உன்னையே நீ
கசக்கிப்பிழிந்ததில் விளைந்தது
அடகுவைத்த
நிலம், நகை,
கட்டிமுடிக்காத
சகோதிரியின் திருமணக்கடன்
பாதியிலேயே நிற்கும்
கட்டத்தொடங்கிய வீடு
அப்படியே இருக்கையில்
எப்படித்தோழா?
இப்படி
வேலைக்கு விடுப்புப்போட்டு
வீணாகவந்து நின்றாய்!
உழைத்துக்களைத்து
இரவில்
தொலைபேசியில் தொலைத்து
தொலைந்து
கண்டெடுக்கும் வாழ்க்கையை
கண்டபடி வீணடிப்பதா?
புதிதாய்ப் பிறந்த
குழந்தைக்கும் மனைவிக்கும்
நகையும் உடையும்
அனுப்புவது எப்போது?
அங்கேதான் நாம்
அரிதாரங்களையெல்லாம்
அவதாரமாய் எண்ணி
மீட்கப்படாத
அகதிகளாக இருக்கிறோம்
அரசியலால்
அவமானங்களோடு
அன்றாடம் வாழ்கிறோம்
இங்கேயும் வந்து
கேள்விக்குறியாவதா?
தாய்மொழி வாழும்
இதுதான் நம்
தாய் நாடு
உன் உழைப்புக்கும்
உயர்வுக்கும்
கைகொடுத்துதவும்
இன்னொரு வீடு
உழைப்பவரெல்லாம்
ஒன்றெனக் கருதும்
இந்நாட்டில்
உழைப்பை விடுத்து
உடலையும் கெடுத்து
திரையரங்குமுன்திரள்வது
சரியா?
பெற்றதிலிருந்து
எதையும்பெறாத பெற்றோருக்கு
தரவேண்டியதை மறந்து
தடம்புரள்வது சரியா?
பகலில்
வியர்வையில் குளிக்கிறாய்
இரவில்
குளிர்நீரில் குளிக்கிறாய்
ஆடைமாற்றிக்
களைப்பைத்தொலைக்கிறாய்
நீ
நிலைதடுமாறுவதும்
நிலைகுலைவதும்
நியாத்திற்கு எதிரானது
உனக்கும்
உன்குடும்பத்திற்கும்
துரோகமானது
உன் அபிமான
அவதார புருசர்களெல்லாம்
நடிப்பிலும்கூட
‘டூப்’ வைத்து
நடிப்பவர்கள்
இப்பொழுது திரைப்படத்தில்
நடிப்பும் இல்லை
நடிகர்களும் இல்லை
இருப்பவர்களெல்லாம்
உடலை நெளிப்பவர்கள்
பாட்டுக்கு
உடற்பயிற்சி செய்பவர்கள்
இவர்களை நம்பி
ஏன் தம்பி
ஏமாந்துபோகிறாய்?
எதிர்காலமில்லாத
இவர்களிடமா உன்
எதிர்காலம் இருப்பது?
நீ செய்வது
பொழுதுபோக்கா?
இல்லை
பொல்லாப்போக்கு
உனக்கிருப்பது
கலைமனமா?
இல்லை
கவர்ச்சி மனம்
விலைபோவதை விடு
நிலைபெற முடிவெடு
நீடித்த புகழ்பெறு
(திரையரங்குமுன் கலாட்டா செய்திகேட்டு எழுதிய கவிதை)