சிறுகை அளாவிய கூழ் (17)
இவள் பாரதி
ஒரு பக்கத்தை வாயில் சுவைத்தபடியும்
மறுபக்கத்தை கையில் பிசைந்தபடியும்
விளையாடி
ஏதோ நினைவு வந்ததைப் போல
பக்கங்களை மாற்றி
முகம் பார்த்து
முலைப்பாலருந்தியபடி
தாயின் சிரிப்பிற்கு
சிவப்பு உதடு விரித்து
அதில் இரண்டு பால்பற்கள் தெரிய சிரித்து
குடிப்பதை நிறுத்திவிட்டுக்
காம்பைக்கிள்ளி விளையாடி
அடடா.. ஆஹா..
ஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம்
எந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை
———————-
வெடி வெடிக்கும்போதும்
இடி இடிக்கும்போது
அயர்ந்துறக்கும்
அம்மாகுட்டி
பேனா மூடி விழும்போதும்
பேப்பரைத் திருப்பும்போதும்
எழும் ஓசைக்கு
தூக்கம் கலைந்துவிடுகிறாள்
பெருஞ்சத்தங்களை
பொருட்படுத்தாது
சிறுசத்தங்களுக்கு
செவிசாய்க்கிற விசித்திரம்
குழந்தைக்கு மட்டுமே சாத்தியம்
———————-
கவிதை முழுக்க என் மகளின் பிள்ளை பிராயத்தையே நினைவுறுத்தி செல்கிறது .
இந்த கவிதை தொடரை ஆரம்பத்தில் படிக்க தவறிய வருத்தமளிக்கிறது .
ஏழு வண்ணத்திலும் வடித்துவிட முடியாத ஓவியம்
எந்த மொழியிலும் எழுதிவிட முடியாத கவிதை
அருமை.
தாய்மையின் மேன்மை.குழந்தை பெற்றவளின் உள்ளக்கிடக்கை எழுத்துக்கு எழுத்து வெளிவருகிறது. படிக்கக் கொடுத்தவருக்கு மிகநன்றி.