தமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா!

2

பவள சங்கரி

தலையங்கம்

தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா சுபமாக முடிந்துள்ளது. அடுத்த வானவேடிக்கை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கோலாகலமாகத் தொடரும்! சென்ற முறையைவிட இந்த முறை தேர்தலில் பங்களிப்புகள் அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 14 சதவிகிதம் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. பின் தங்கிய மாவட்டங்களில்தான் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 81 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. தனித் தொகுதிகளிலும் அதிகப்படியான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. வட மாவட்டங்கள் என்று குறிப்பிடப் படக்கூடிய சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் குறைந்துள்ளன. குறிப்பாக படித்த மத்தியதர மக்கள் அதிகம் வாழக்கூடிய தென் சென்னையில் தமிழ்நாட்டிலேயே மிகக் குறைவான வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இது படித்த சமுதாயத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது. பல்வேறு ஊடகங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவைகளின் தனிப்பட்ட முறையிலான வேண்டுகோள்களுக்குப் பிறகும் இந்த அளவிற்குக் குறைவான வாக்குப் பதிவுகள் தென் சென்னையில் நடைபெற்றுள்ளது வெட்கத்திற்குரிய விசயம்.

இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாக அதிகப்படியான வாக்குப் பதிவுகள் இளைய சமுதாயத்தினரிடமிருந்து வந்துள்ளது என்பதுதான். நல்லதொரு மாற்றமான இதனால் தேர்தலின் கணிப்புகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்குப் பிறகும் பணப் பரிமாற்றங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதும் விளங்குகிறது. முடிவுகளும் அவ்வாறே வரும் என்று நம்பலாம். மும்பையில் நடைபெற்ற தேர்தலில் எல்லோரும் பாராட்டும் வகையில் 55 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை 40 முதல் 44 சதவிகித வாக்குப்பதிவுகளே நடைபெற்றிருக்கிறது. இதுவும் அவமானகரமான விசயம். பாண்டிச்சேரியில் 82 சதவிகிதமும், மேற்கு வங்காளத்தில் 80 சதவிகிதமும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் என்று 100 சதவிகித வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றதோ அன்றுதான் அது நமது ஜனநாயகத்திற்குக் கிடைத்த முழு வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும். பணப் பரிமாற்றங்கள் அறவே இல்லாத ஒரு தேர்தலாகவும் அது இருக்க வேண்டும். இன்றுவரை அது சிம்ம சொப்பனமாகவே இருந்து வருவதும் வேதனைக்குரிய விசயம். வாழ்க ஜனநாயகம்!

ஜனநாயகம் வேரூன்ற வேண்டுமென்றால் வாக்களிப்பதில் இளைய சமுதாயத்தினரின் பங்களிப்பு அதிகரித்துள்ளது போலவே அரசியலிலும் அவர்களுடைய பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!

ஜெய்ஹிந்த்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தமிழ்நாட்டில் சுபமாக முடிந்த தேர்தல் திருவிழா!

  1. தேர்தலில் மக்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இளைய தலைமுறையினர் காட்டும் அக்கறை, ஊழலுக்கு எதிரான அவர்களது எழுச்சி இவை நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. எனினும் நமது கட்சிக்காரர்கள் இப்போதும் பழைய பல்லவி பாடிக்கொண்டு மக்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் அநாகரிகம் நிலவிவருவது வருத்தத்துக்குரியது. கட்சிக்காரர்கள் கொடுக்கும் லஞ்சம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம். அந்த பணம் சிவபெருமான் சொத்து குலநாசம் என்பது போல ஊழலில் சம்பாதித்த சொத்து நம் சொந்த செல்வத்தையும் சீரழிக்கும் என்று அதனை நிராகரிக்கும் காலமே ஜனநாயகத்தின் பொற்காலம்.

  2. அன்பு பவளா மிகவும் சரியாக சொன்னீர்கள். படித்தவர்கள் தான் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள் என  சென்னை நிலவரத்தைப்  பார்த்தால் சொல்ல தோன்றுகிறது. சிலர் ராமன் ஆண்டாலென்ன  இராவணன் ஆண்டாலென்ன என்ற போக்கில் மனம் சலித்துப்போய் இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் ஓட்டுரிமையை விட்டு விடுவது தவறல்லவா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *