திருமால் திருப்புகழ் (66)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ் (வெண்பா)….
————————————————————–
’’கண்ணனை நெஞ்சே கருது’’
—————————————————–

சூர்பணகை ஆனாலும், சுந்தரி ஆனாலும்,
பார்ப்பன எல்லாம் பரம்பொருளே – தாற்பரியம்
தன்னை உணர்ந்து தவறா(து) இருந்திட,
கண்ணனை நெஞ்சே கருது!
சதிரிள மாதர் சகவாச தோஷம்,
உதிரிலைக் காலம் உணர்வாய் – மதிளரங்க
மன்னனை, மாயனை, மண்புகுந்த ஆயனை,
கண்ணனை நெஞ்சே கருது!
பண்டரி எங்குளான், பாலன் புகன்றிட,
விண்டதிரத் தூண்வாய் வெளிப்பட்ட – பண்டரியில்
தன்நினைவு தப்பத் துதிப்போர்க்(கு) அருள்புரியும்,
கண்ணனை நெஞ்சே கருது!
பட்டதெல்லாம் பாழாகும், தொட்டதெல்லாம் தூளாகும்
எட்டிய(து) ஏதும்வாய்க்(கு) எட்டாது – அட்டமியில்
விண்ணகன்று தாய்மாமன் வெஞ்சிறைக்கு வந்தவனை
கண்ணனை நெஞ்சே கருது!
வானிருந்த, கீழிறங்கி தூணிருந்த, தந்தவர
வானிருந்த, தாம்பு வடமிருந்த – மாவிருந்தை
உண்ணுதற்(கு) ஆகா(து), உறியேறும் ஆகாயக்
கண்ணனை நெஞ்சே கருது!!
————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in/2011_12_01_archive.html
அன்பு கிரேசி மோகன் வணக்கம் உங்களுடைய திருமால் திருப்புகழை விடாமல் படித்து வருகிறேன் .அதில் வரும் சித்திரங்களும் பிரமாதம்.திருப்புகழ் என்றாலே முருகன் தான் என் முன் நிற்பார். திருமால் திருப்புகழ் படிக்க தசாவதாரம் முழுவதும் ஒன்று மாறி ஒன்று வருகிறது. இந்தப்படத்தில் கிருஷ்ணன் கையில் கங்கணமும் . யசோதை கையில் இருக்கும் சங்கும்.பால் ஊட்டும் அழகும் சொல்ல முடியாது . திரு கேசவ் ஜிக்கு என் வாழ்த்துகள். .திருமால் பெருமைக்கு நிகரேது என்று பாடத்தோன்றுகிறது . நன்றி