Category: பத்திகள்

பத்தி

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . (53)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.

    அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.

    இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின் மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.

    தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.

    அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

    1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

    அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.

    அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.

    இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.

    அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.

    அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.

    அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.

    1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

    விளைவாக ,

    1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.

    1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.

    பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

    இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

    நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.

    வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.

    இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

    இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.

    சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

    இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.

    “அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.04.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (9)

    பவள சங்கரி

    புன்னகைக் கவசமிடுவோம்!

    ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து நீங்கள் புன்னகைக்கும்போது அது அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஒரு அழகான அன்புப் பரிசாகிறது ..

     தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, அன்பான ஒரு சொல், கேட்கும் ஓர் செவி, நேர்மையான ஒரு பாராட்டு, அல்லது அக்கறையான ஒரு சிறிய செயல், இவையனைத்தும் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை அடிக்கடி நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்.
    அன்னை தெரெசா

    ஒரு சாதாரண புன்னகை எத்துனை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். புன்னகையை எந்த இடத்தில் நாம் தொலைக்கிறோம் என்பதை முதலில் சிந்திப்போம்.

    1. கோபம் எட்டிப்பார்த்தால் புன்னகை ஓடி ஒளிந்து கொள்கிறது.
    2. அன்பு குறைய ஆரம்பித்தால் புன்னகை மறைந்து சிடுமூஞ்சித்தனம் தலைகாட்ட ஆரம்பித்துவிடுகிறது.
    3. உடலில் ஆரோக்கியம் குன்றினால் வேதனையில் புன்னகை தொலைந்து விடுகிறது.
    4. வேதனையான சம்பவங்கள் ஏதும் நடந்துவிட்டால் புன்னகை காணாமல் போகிறது.
    5. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் திரை போட்டு மறைத்துக் கொள்கிறது புன்னகை.
    6. தேவையற்ற வெறுப்பு புன்னகையை உண்டுவிடுகிறது.

    இப்படி பல்வேறு காரணங்களால் புன்னகை நம்மைவிட்டு விலக்கப்படுகிறது. இதில் வேதனையான சம்பவங்கள் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எதுவாயினும் வலுக்கட்டாய்மாகவாவது புன்னகையை வரவழைத்துப் பாருங்கள். அப்போதுதான் அதன் வலிமை நம்க்குப் புரியும். ஆம் அந்தப் புன்னகை நம்க்குள்ளும், நம்முடன் இருப்பவர்களுக்குள்ளும் நம்ம முடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அடுத்தவர் மனநிலையையும் சற்றே உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் வேதனையான மன நிலையில் இருக்கும் போது நம் புன்னகையை வீசாமல் அன்பான பார்வையால் அவரை அமைதிப்படுத்திவிட்டு பின்பு நம் புன்னகையை வெளிப்படுத்தி அவரையும் அமைதி கொள்ளச் செய்வது உத்தமம். இந்த ஒரு சிறு புன்னகை மந்திரம் நம்மையும் அமைதிப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படச் செய்வதோடு, அடுத்தவரையும் அமைதியாக்கி நமக்கு ஆதரவாக செயல்படவும் செய்துவிடும்.

    யாரையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை!

    ஆம், யாரையும் மாற்றுவது என்பது தேவையற்ற கால விரயம் செய்யக்கூடிய ஒரு செயல். காரணம் ஒருவரை அவருடைய இயல்பான தன்மையிலிருந்து மாற்றுவது சாத்தியமில்லாத காரியம், அது என்றுமே நடக்க முடியாத ஒரு வெட்டி வேலையாகக்கூடும். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை அறியாமலே இதைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த வழியில் சென்று மாற்ற முயன்றாலும் அது வீண் வேலை மட்டுமே.தொடர்ந்த சமாதான வார்த்தைகளாலோ, மகிழ்ச்சியற்ற அமைதியான சைகைகளாலோ, அவரிடம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை வெளிப்படையாகச் சொல்லியோ அல்லது ஒரு வார்த்தையும் சொல்லாமல் புரிய வைக்க முயன்றாலோ என இப்படி எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் நிச்சயம். நம்முடைய நெருங்கிய உறவாகவோ, இரத்த சம்பந்தம் உள்ளவரோ அல்லது நெருங்கிய நண்பரோ இப்படி யாராக இருந்தாலும் இதே நிலைதான். உண்மையில் எவ்வளவு அதிகமாக நாம் அவர் மாற்றம் வேண்டி அழுத்தம் கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி மேலாக திரும்ப அந்த அழுத்தம் நமக்கே வந்து சேரும். ஒரு புள்ளியில் அது ஒரு சச்சரவாகக்கூட மாறும் வாய்ப்பாகிவிடும். மாற்றத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். அது அவருடைய உரிமையும் கூட. அதனால் நாம் எதையும் மாற்ற முயற்சித்து காலத்தையும் விரயம் செய்து, மன அமைதியும் கெடுத்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும், உள்ளதை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்றார்போல் நம் பாதையையும் அமைத்துக்கொண்டால் அவருக்கும் சுதந்திரம் கிடைப்பது போல வெற்றிகரமாக நமக்கும் விடுதலை கிடைத்துவிடுகிறது.

    வாழு! பிறரையும் வாழவிடு!

    தொடர்வோம்

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5

    செல்வன்

    இன்றைய மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் உடல்நல குறிப்புக்களை ஆதிமனிதன் பின்பற்றி இருந்தால் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும். அந்த அளவு மோசமான அறிவுரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. உதாரணம் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணச் சொல்லி இவர்கள் கொடுக்கும் அறிவுரை. முட்டையில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள் எல்லாமே மஞ்சள் கருவில் தான் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு என்பது ஒரு உயிருக்குத் தேவையான அனைத்து மூலப்பொருளையும் கொண்டது. அத்தகைய சத்தான மஞ்சள் கருவை தூக்கி எறிந்து வெள்ளைக் கரு ஆம்லட்களை உண்டு பலரும் உடல்நலனை கெடுத்து கொண்டார்கள். முட்டைக்கு பதில் கடைகளில் விற்பனைக்கு வந்த எக் ஒயிட்டில் பல கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலக்கப்பட்டு இருந்தன.

    இதே மாதிரி பாலைக் குடிக்க வேண்டாம் எனச் சொல்லி கொழுப்பு நீக்கிய ஸ்கிம் மில்க்கை குடி என இவர்கள் கூறிய அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு எடுத்த பாலை கொட்டிய பால் என தமிழகத்தில் அழைப்பார்கள். அதில் புரதம், கால்ஷியம் தவிர்த்து எதுவும் கிடையாது. பாலில் இருக்கும் கொழுப்பை நீக்கியவுடன் அதில் உள்ள வைட்ட்மின் ஏ, வைடமின் டி எல்லாம் அகன்றுவிடும். அதனால் செயற்கையாக வைட்டமின் ஏவையும், வைட்டமின் டியையும் கொட்டிய பாலில் கலந்து வந்தார்கள். ஆனால் வைட்டமின் ஏவும், வைட்டமின் டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பாலில் உள்ள கொழுப்பு இன்றி அவை உடலில் சேருவது இல்லை. கழிவில் அப்படியே அந்த வைட்டமின்கள் வந்துவிடும். கொட்டிய பாலில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அந்த வைட்டமின்கள் நம் உடலில் சேரவேண்டும் எனில் கொட்டிய பாலை உண்கையில் பாலுடன் வெண்ணையை உண்ண வேண்டும்!!!!

    கொட்டிய பால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அதற்கு முன் கொட்டியபாலை அவர்கள் விற்காமல் கொட்டித்தான் வந்தார்கள். அதற்கு இப்படி ஒரு சந்தை கிடைத்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி.

    2 வயது முதல் குழந்தைகளுக்கு கொட்டியபாலை கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் உங்கள் வயது ஐம்பதை தாண்டி உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைக்கலாம் என எப்.டி.ஏ ஒரு விதியை அறிமுகபடுத்தியது. இதனால் கொலஸ்டிரால், இதய அடைப்பு பிரச்சனை எதுவும் இல்லாத  65 லட்சம் அமெரிக்கர்கள் ஸ்டாடினை உட்கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

    ஆனால் ஆய்வுகள் இதுகுறித்து என்ன கூறுகின்றன? மந்காட்டன், நியூயார்க் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் 2277  பேரைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்த புள்ளிவிவரங்கள் கொல்ஸ்டிராலும், எல்டிஎல்லும் மோசமானவை எனக் காட்டவில்லை. மாறாக எத்தனைக்கெத்தனை கொலஸ்டிராலும், எல்டிஎல் விகிதமும் அதிகமாக இருந்ததோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் அதிகமாக உயிர்வாழ்ந்தார்கள்.

    Inline image 2

    இந்த ஆய்வின்படி மொத்த கொலஸ்டிரால் அளவு 175க்கு கீழ் இருந்தவர்களில் 97% 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 176ல் இருந்து 200 வரை இருந்தவர்களில் 78% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.

    கொலஸ்டிரால் 200 தாண்டியதும் மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக (57%) குறைந்தன.

    அதேபோல் கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் எல்டிஎல் கொலஸ்டிரால் 97க்கு கீழ் இருந்தவர்களில் 90% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள். ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் ஸ்டாடின் கொடுக்கும் அளவு “மோசமாக” கருதப்படும் 144 என்ற அளவைத் தாண்டி எல்.டி.எல் இருப்பவர்களில் 53% பேர் 10 ஆன்டுகளில் மரணம் அடைந்தார்கள்.

    இன்றைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகபட்ச எல்.டி.எல், மொத்த கொலஸ்டிரால் அளவு என்ன?எல்.டி.எல் 130.மொத்த கொலஸ்டிரால் 200. நீங்கள் வயதானவராக இருந்து, மருத்துவர் சொல்லும் அளவுகளுக்கு உங்கள் கொலஸ்டிராலை குறைத்தால் என்ன ஆகும்?

    முட்டையை குறித்து நடத்தபட்ட்ட ஆய்வுகள் மருத்துவ அறிவுரைகள் எவ்வளவு தவறானவை எனக் காட்டின.

    கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை வைத்து சீனாவில் நடத்தபட்ட இந்த மெகா அனாலிசிஸ் ஆய்வு முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும், இதயநோய்களுக்கும் ஸ்னானபிராப்தி இல்லை என்றது. உங்களுக்கு சக்கரை இருந்தால் முட்டை உங்களுக்கு இதய்நோயை வரவழைக்கும் (ஆனால் அது இந்த நிலையில் கூட ஒரு சந்தேகத்துக்கு உரிய கருதுகோள் தான்). டயபடிஸ் இல்லாதவர்கள் முட்டையை உண்டால் அது அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை, இதயநோயும் வருவது இல்லை என்கிறது பேராசிரியர் லியூவின் ஆய்வு.

    முட்டையின் வெள்ளைக் கருவை உண்டு, கொழுப்பு எடுத்த பாலை குடித்துத் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்களா என்ன?

    (தொடரும்)

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 17

    இன்னம்பூரான்


    சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.

    திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.

    அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.

    தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.

    பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.

    இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

    சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!

    சித்திரத்துக்கு நன்றி:

    http://2.bp.blogspot.com/-RVUgUWAEfY4/T6Idc2X4PTI/AAAAAAAAAhc/rhE-vQNOd7A/s1600/medicine.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 66

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (35)
    பிரியேன் என்று
    அன்று சொல்லிச் சென்ற
    அன்பு பொருந்திய காதலரின்
    உருளையுடைய பெரிய வலிய தேர்
    சென்ற வழியது சிதையும்படி
    பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

    குளிர்பூக்கள் கொண்ட சோலையே!
    துணையுடன் கூடி மகிழும் அன்னமே!
    ஈரம் பொருந்திய குளிர் நீர்த்துறையே!
    இங்ஙனம் எமைப் பிரிதல் தகாது என்று
    அவரிடம் உரைக்க மாட்டீரோ!

    (36)

    பிரியேன் என்று
    அன்று சொல்லிச் சென்ற
    அன்பு பொருந்திய காதலரின்
    உருளையுடைய பெரிய வலிய தேர்
    சென்ற வழியது சிதையும்படி
    பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!

    நீ வாழ்வாயாக!
    முன்பு எம்முடன் அன்புடன்
    உறவாடியிருந்த கடலே!
    இன்று உன் செயலால்
    உறவு கெடப் பகைமை ஆனாய்!
    என்றாலும் நீ வாழ்வாயாக!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01234l3.htm

    Share
  • தொல்லை காட்சி- நீயா நானா – லொள்ளு சபா – தெய்வ மகள்

    மோகன் குமார்

    ஐ பி. எல் கார்னர்

    மும்பை Vs சென்னை மேட்ச் முழுதாய் பார்க்காவிடினும் அவ்வப்போது ஸ்கோர் பார்த்து விட்டு இறுதியில் தோனி இன்னிங்க்ஸ் மட்டும் பார்த்தேன்.

    தோனி இவ்வளவு அற்புதமாக ஆடி, பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. பேப்பரில் கூட தோனி – வெறும் சிக்ஸ் ஆக அடித்து பயிற்சி எடுத்ததாகவும், ஸ்பின், வேக பந்து வீச்சாளர் என எப்படி வந்து போட்டாலும் ஆறுக்கு அனுப்பி பரிசி எடுத்ததாகவும் சில நாள் முன்பு தான் படித்தேன். அதன் பலனை மேட்சில் காண முடிந்தது. போலார்ட்டின் அதி அற்புத கேட்ச் இல்லாவிடில் சென்னை ஜெயித்திருக்கும் ஹூம் :

    சன் ரைசர்ஸ் வெறும் 126 ரன்களை defend   செய்த  மேட்சும் இரண்டாம் பகுதி அட்டகாசம். டேல் ஸ்டெயின் பந்தில் பல முறை குச்சிகள் கார்ட் வீலிங் ஆகின.

    ஐ. பி. எல் லால் – தூக்கம் குறைகிறது. மறு நாள் drowsy -ஆக உள்ளது. முழு மேட்ச் பார்ப்பதை குறைக்கணும் !

    நல்ல நிகழ்ச்சி- ஆங்கிலம் கற்றுத் தரும் ஜெயா டிவி

    ஜெயா டிவி யில் பல வருடங்களாக ராஜகோபால் என்கிற ஒருவர் எளிய முறையில் ஆங்கிலம் கற்றுத் தருகிறார். காலை 7.40 முதல் 7.50 வரை ஜெயா டிவி யில் பேசுவார் இவர்.

    வகுப்பறை போல போர்டு வைத்துக் கொண்டு எதிரில் மாணவர்கள் இருக்கிற மாதிரி பாவனையில் இவர் பேசுவதே செம காமெடியாக இருக்கும். மேலும் இவருக்கு செம ஹியூமர் சென்ஸ்.

    ஆங்கிலத்தில் நாம் தப்பாய் உபயோகிக்கும் சில விஷயங்கள் இவர் நிகழ்ச்சி பார்த்து திருத்தி கொண்டதுண்டு.

    ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என நினைக்கும் அலுவலக நண்பர்கள் சிலருக்குச் சொல்லி, அவர்கள் இந்நிகழ்ச்சி பார்த்து விட்டு ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு என்று சொன்னதுண்டு.

    முடிந்தால் பாருங்கள் !

    மகாபாரதம்

    சன் டிவியில் ஞாயிறு காலை மகாபாரதம் வெளிவருகிறது. முன்பு ஹிந்தியில் கண்டிருந்தாலும் தமிழில் காண சற்று சுவாரஸ்யம் தான்.

    நமக்கு தெரிந்த நடிகர், நடிகைகள், நிறையவே பொருட்செலவு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் என நிறைய ஆச்சரியங்கள் + மகிழ்ச்சிகள்

    எங்கள் ஊரில் வருடா வருடம் மகாபாரதம் 15 நாள் சொற்பொழிவு நடக்கும். எங்கள் கடையில் அமர்ந்தவாறே தெளிவாய் கேட்கமுடியும். கோவிலுக்குச் சென்று அமர்ந்து கேட்டதும் உண்டு. இருந்தும் அம்பை என்கிற பெண்ணின் கதை சென்ற வாரம் தான் பார்த்து புதிதாய் அறிய முடிந்தது. மகாபாரதத்திற்குள் தான் எத்தனை எத்தனை கிளைக் கதைகள் !

    ராமாயணத்தை விடவும் மகாபாரதம் சுவாரஸ்யமானது என்பது என் தாழ்மையான எண்ணம் !

    சீரியல் பக்கம் – தெய்வ மகள்

    விகடனின் புத்தகம் ஒன்றில் இந்த அழகு தேவதை அட்டைப் படம் பார்த்து சொக்கிப் போனேன். அப்புறம் உள்ளே என்ன சமாசாரம் என்று படித்தால் – வாணி போஜன் என்கிற அம்மணி விகடன் சமீபத்தில் எடுத்து சன் டிவியில் வரும் தெய்வமகள் சீரியல் ஹீரோயினாம்.

    ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு கலைச்சேவை ஆற்ற வந்துள்ளார் வாணி. சீரியலில் இவர் போடும் உடைகள் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு  இருப்பது அவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் பார்த்தாலே தெரிகிறது.

    இதற்காகவெல்லாம் சீரியல் பார்க்கிற அளவு மனசில்லை..!

    கோடம்பாக்கம் வாணிக்கு கூப்பிடு தூரம் தான் !

    சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

    ஞாயிறு மதியம் பொழுது போகாமல் சன் டிவியில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி  முழுவதும் பார்த்தோம் சானியா மிர்சா, சரோஜா தேவி, த்ரிஷா, ஹன்ஷிகா போன்றோருக்கு சாதனையாளர் விருது கிடைத்தது. (ஹன்சிகா நடிக்க வந்த சில வருடங்களில் என்ன சாதனை செய்தார் என்று தான் புரியலை)

    தொகுத்து வழங்கியவர்களுள் ஒருவரான கார்த்திக் என்கிற புது காம்பியர் பெண்களை நிறையவே கிண்டலடித்துக் கொண்டிருந்தார் இருந்தும் அவ்வப்போது சிரிக்கவும் வைத்தார்

    அனிருத் – தனது புதிய படமான எதிர் நீச்சலில் இருந்து பாடல் பாடியது அமர்க்களமாய் இருந்தது.

    நிகழ்ச்சியில் மிக அசத்தியவர்கள் – ஒரு டான்ஸ் ஆடிய இரு குட்டிப் பசங்க… 5 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் போல் உடலை மடக்கி திருப்பி சுற்றி ஆடியது – பார்த்த அனைவரையும் அதிசயிக்க வைத்தது

    நீயா நானா – பெண்ணுக்குள் ஆண் – ஆணுக்குள் பெண்

    இந்தத் தலைப்பு ஒளிபரப்பாகும் முன்பே சற்று சர்ச்சையை கிளப்பியது. அதென்ன பெண்ணுக்கு தனி குணம்; ஆணுக்கு தனி குணம் என்று.

    ஆனால் ” Men are from Mars; Women from Venus” – என்று ஒரு புத்தகமே வந்து சக்கை போடு போட்டது சில விஷயங்களில் ஆணும், பெண்ணும் இயல்பாகவே மாறுபடுகிறார்கள். எனக்கு பெண் குழந்தையும், மச்சானுக்கு   ஆண்  குழந்தையும் 2 நாள் வித்தியாசத்தில் பிறந்து இருவரும் அருகருகில் வளர்ந்த போது இதை தெளிவாகக் காண முடிந்தது.

    நிற்க. வெட்கம், கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் பின்னணியில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி ஓரளவு சுவாரஸ்யமாகவே இருந்தது

    லொல்லு சபா மாரத்தான்

    ஒவ்வொரு சனி மதியமும் விஜய் டிவி தங்களின் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியின் சிறப்பான பகுதிகளை காண்பிக்கின்றனர்.  அப்படி இந்த வாரம் – லொல்லு சபா மாரத்தான் ! சந்தானம்,  ஜீவா, மனோகர் ஆகியோர் அடித்த லூட்டிகளைப் பார்த்து வயிறு வலி வந்து விட்டது.

    மண் வாசனை, சின்னத் தம்பி, சிந்து பைரவி, நான் அவன் இல்லை என எத்தனை படங்களை நாசம் செய்திருக்கிறார்கள். கூடவே டைரக்டர் உள்ளிட்ட தங்களையே எள்ளல்   செய்யவும் தயங்குவதில்லை.

    மீண்டும் லொல்லு சபா வந்தால் நன்றாயிருக்கும் என்கிற ஆதங்கத்தை இன்னோர் முறை பதிவு செய்கிறேன்

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (8)

    பவள சங்கரி

    தீய சக்திகளுக்கு வெறுப்புணர்ச்சி, சாந்தமான உணர்வு, நல்ல போதனைகளை மகிழ்வுடன் இரசித்துக் கேட்கும் போழ்தும் ஒருவரிடமிருந்து அச்சமென்ற அந்த ஒன்று விலகிவிடுகிறது.
    புத்தர்


    வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்

    எப்போது ஒருவருக்கு சிலரைக் கண்டால் அதீத வெறுப்புணர்ச்சி வருகிறதோ, அப்போதே அவர் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சுய பச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. சக மனிதர்களை நேசிக்காமல் இருப்பதைக் காட்டிலும் வெறுப்புணர்வைக் காட்டுவது மிக மோசமானது. அவர் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற படபடப்பும்கூட வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளடைவில் அடுத்தவரிடம் காட்டும் அந்த வெறுப்புணர்ச்சி, நம்மீதே சுய அனுதாபத்தை ஏற்படுத்தி மெல்ல மெல்ல சுய வெறுப்பிற்கும் வழிவகுத்துவிடும். நம்மை நாமே வெறுக்கும் சூழல் தன்னம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிடும். இதைத் தவிர்க்க ஒரே வழி எவரையும் வெறுக்காமல் இருக்க பழகிக்கொள்ள வேணடும். தன்னைப் போல பிறரையும் நேசிப்பது வெற்றிப் பாதையின் மலரணை என்பதில் ஐயமில்லை.

    அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

    எந்த ஒரு காரியத்தைச் செய்யும் போதும் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் வந்தால் அந்த காரியத்தை சரியாகக் கொண்டு செலுத்துவது சிரமம். காரணம் தோல்வி என்பதே கற்பனையான ஒன்று. தோல்வி என்று கற்பனையாக நினைப்பதெல்லாம் வெற்றிக்கான படிகள் என்பதுதான் நிதர்சனம். இதை முழுமையாக உணர்நது கொண்டாலே தேவையற்ற சலனம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் முன்னேற முடியும்.

    என் உறவினர் ஒருவர் மிகச் சிறந்த இருதய அறுவை சிகிச்சை  நிபுணர். ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தவர். வாழ்க்கையில் தம் பதவிக் காலத்தில் பல ஆபத்தான அறுவை சிகிச்சைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து பல உயிர்களை காத்தவர். தம்முடைய  பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் இறுதி அறுவை சிகிச்சையின் போது, நோயாளி இறந்துவிட, அந்த சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதித்து, தம் கவனக் குறைவினால்தான் தன்க்கு தோல்வி ஏற்பட்டது என்று கற்பனை செய்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதே நோயாக மாறி பத்து ஆண்டுகள் படாதபாடுபட்டார். தன்னுடைய 35 ஆண்டுகால சேவையின்போது காப்பாற்றிய எத்தனையோ உயிர்களைப் பற்றியும், அந்த வெற்றியைப் பற்றியும் மன நிறைவு கொள்ளாத அவர், தன் கையை மீறி நடந்த ஒரு அசம்பாவிதத்தை அதீத கற்பனைக் கண்களுடன் பார்த்து, அமைதியாக வாழ வேண்டிய நாட்களை தொலைத்ததோடு, தாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். இதனால் பிரச்சனைகள் அதிகமானதே தவிர வேறு எந்த பலனும் இல்லை.

    இன்னொரு சம்பவம் நான் மிகவும் ஆச்சரியப்பட்டது, இரண்டு நண்பர்கள் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரும் பாராட்டுக்களுடன் நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். அடுத்தவரோ இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்று வெளியே வந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரையும் தனித்தனியாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது எனக்கு. ஆம் அதிக மதிப்பெண் வாங்கி வெளியில் வந்த மாணவர் சரியான வேலை கிடைக்காமல் பெரும் மன வருத்தம் கொண்டிருக்க, மற்றொரு மாணவரோ நல்ல ஒரு பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். இது எப்படி சாத்தியம் என்று விசாரித்த போது, நல்ல மதிப்பெண் வாங்கி வெளியில் வந்து, முதல் நேர்ககாணலுக்குச் சென்றவர், அங்கு வேலை கிடைக்காமல் போனவுடன், தோல்வி என்ற அச்சம் சிறைபிடிக்க, அடுத்து வந்த அத்தனை நேர்காணல்களையும் அதே அச்சத்துடன் அணுக, நாளடைவில் தன்னம்பிக்கை குலைந்து புதிய முயற்சி என்ற வார்த்தைக்கே இடமளிக்காமல், கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு குறைவான ஊதியத்தில் திருப்தி இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இறுதி ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் அதைக்கண்டு அச்சம் கொள்ளாமல் அடுத்த முறை இன்னும் பெரு முயற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்றதோடு அதே தன்னம்பிக்கையுடன் போன முதல் நேர்க்காணலே வெற்றியைக் கொடுக்க அன்றிலிருந்து ஏறுமுகம்தான் அவருக்கு!

    எந்த ஒரு செயலையும் கெட்டியாக பிடித்துக் கொள்வதோடு, அதை இலகுவாக அவிழ்த்துவிடவும் பழக வேண்டும். ஆம் நம்மால் முடிந்தவரை நூறு சதவிகித முயற்சியை மூலதனமாக்கிவிட்டு, நம் இருதயத்தையும், ஆன்மாவையும் ஒருங்கே அதில் முழுமையாகச் செலுத்திவிட்டு அடுத்த நொடி அதிலிருந்து என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற அச்சம் இல்லாமல், மகிழ்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் வளைய வந்தால் போதும், வெற்றிப்பாதை தெளிவாகப் புலப்படும்!

    நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்பதே சத்தியம். இதைத்தான் எண்ணம் போல வாழ்வு என்பார்கள் இல்லையா!

    தொடருவோம்

    படத்திற்கு நன்றி

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (52)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகின்றேன். என்னுடைய மடல் வரிசையில் இது 52 வது மடல். ஆமாம் ஜம்பத்திரண்டு வாரங்களாக தொடர்ந்து உங்களுடன் இம்மடல் வாயிலாக உறவாடி வருகிறேன்.

    52 வாரங்கள் ! ஓ ! ஒரு வருடமல்லவா? ஆமாம் இம்டலின் உறவாடலுக்கு இத்தோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. இவ்வோராண்டு காலமாக இப்புலம்பெயர் தேசத்திலேயிருந்து புலம்பும் இச்சிறியேனின் புலம்பல்களை பொறுமையுடன் படித்து ஆதரித்து வந்த உறவுகள் அனைவருக்கும், இம்மடலை அழகாக தவறாமல் பதிப்பித்து வரும் எனதினிய வல்லமை நிர்வாகத்தினருக்கும் முதற்கண் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புத்தம்பி அண்ணாகண்ணனின் அன்பான ஆதரவுடன் வல்லமையில் இதுவரை நான் படைத்து வந்த அனைத்தையும் அதேபோல அன்பான ஆதரவுடன் பவள சங்கரி அவர்களும் தொடர்ந்து பதிப்பித்து வருவது மனதை நிறைக்கிறது.

    நான் எனது முதலாவது மடலில் குறிப்பிட்டது போல ஒரு காலத்தின் பதிவு என்பது காலத்தின் கண்ணாடியைப் போன்றது. நாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை எதிர்காலச் சந்ததியினரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு உன்னத ஊடகக் கண்ணாடியே பதிவுகளாகும்.

    எனது 38 வருட புலம்பெயர் வாழ்க்கையில் நானடைந்த, கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் பல. இதே மாற்றங்களை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமானவை. ஓ! இப்படி நடந்திருக்கிறது என்று நாம் நினத்திருக்கும் வேளையில் மற்றொருவரின் பார்வையில் அது வேறுவிதமாகப் பதிந்திருக்கிறது என்பதை அறியும் போது மிகவும் விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

    வாழ்க்கையெனும் இந்த அற்புதக் கல்லூரியில் நான் இன்னமும், மாணவனே. தினமும் புதிதாக பலவற்றை பலவிதமான என்னை விட வயது முதிர்ந்தவர்கள், வயதில் இளையவர்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவை அனைத்தும் எனக்கு அளிப்பது எவ்வளவு உழைத்தாலும் அடைய முடியா அனுபவச் செல்வங்களே !

    இவ்வேளையில் எனக்கு இப்படியான ஒரு மடல் வகையிலான பதிவைச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அளித்த அமரர் அலிஸ்டர் குக் ( Akister Cook) அவர்களை எண்ணிக் கொள்கிறேன்.

    1975ம் ஆண்டு 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவனாக இங்கிலாந்தில் வாழ்ந்திருந்த வேளை எனது வாழ்வாதாரத்திற்காக பகுதி நேர காவல் ஊழியனாக ( Security Guard) பணி புரிந்த வேளை தனிமையான ஆபிஸ் கட்டிடங்களின் இரவுநேரக் காவல்காரனாக பணிபுரிகையில் எனது தனிமையைப் போக்க உதவுவது பி.பி.ஸி வானொலியில் அவர் தன்னுடைய சொந்தக்குரலில் நடத்தி வந்த “அமெரிகாவிலிருந்து ஒரு கடிதம் ( A Letter From America) “ எனும் நிகழ்ச்சியேயாகும்.

    இங்கிலாந்திலிருந்து, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் ஒரு புலம்பெயர் இங்கிலாந்து தேசத்தவரின் அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.

    எனது உங்களுடனான இந்த மடல் வடிவான உரையாடலுக்கு பின்னனி இந்த நிகழ்வின் மீது நான் கொண்டிருந்த நெகிழ்வாகும்.

    நான் வாழ்ந்த வாழும் காலத்தில் இங்கு நடைபெறும் பல நிகழ்வுகளை எனது பார்வையில் பட்டவாரு உங்களுக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். இந்நோக்கத்தில் நான் எத்தனை தூரம் முன்னேறியிருக்கிறேன் என்பதன் நீதிபதி நீங்களே. எனது இந்த மடல் வல்லமையின் ஆத்ரவு நீடிக்கும் வரை, உங்களின் அன்பான ஆதரவு தொடரும் வரை எனது வாழ்வு இப்பூவுலகில் நிலைத்திருக்கும் வரை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

    “தம்பி உன் உள்ளத்தில் உண்மையிருந்தால் எழுதுகோலை எடு , எழுது” என்றான் புரட்சிப் பாவலன் பாரதி.

    என்னுடைய முயற்சிக்கு எனது உள்ளத்தில் குடியிருந்து என்னை என்றும் வழிநடத்தும் அண்ணாமலையானின் அருள் தொடர்ந்து கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு அடுத்த மடலில் சந்திக்கிறேன்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    04.04.2013

    Share
  • பிக்கோலிம் புளுகு – 2

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

     

    Goa at its height under Portuguese occupation: Novas Conquistas (highlighted in yellow), Velhas Conquistas (highlighted in red)

    வரலாற்றுப் பின்னணி:
    வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542 ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].

    இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603 க்கும் 1639 க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்கரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுகீசியர்களால், தங்கள் போர்சுகல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்சுகீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர்  **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].

    டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639 ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஒரு உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்றப் பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்க்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].

    மோதலின் பாதையில்:
    மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்சுக்கீசிய தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].

    இந்த தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதசார்பின்மைக் கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாக கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்த தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].

    1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடை காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திராததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மாராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].
    (தொடரும்)

    படம் உதவி:
    Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG

    Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    **என் குறிப்பு:
    சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.

     

    Share
  • கொலஸ்டிரால் ரிப்போர்டை அறிந்து கொள்வோம்!… (4)

    செல்வன்      

       உங்கள் கொல்ஸ்டிரால் டெஸ்டில் பொதுவாக கீழ்காணும் வகை கொலஸ்டிரால்கள் காணப்படும்.

    1) மொத்த கொலஸ்டிரால்: இது 200க்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என ரிப்போர்ட் கூறும்

    2) எச்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது நல்ல கொலஸ்டிரால்): இது 40க்கு அதிகம் இருக்கணும்

    3) எல்டிஎல் கொலஸ்டிரால் (அல்லது கெட்ட கொலஸ்டிரால்): இது 130க்கு கீழே இருக்கணும்

    4) ட்ரைகிளிசரைட்: இது 150க்கு கீழே இருக்கணும்.

    இதில் பலரும் மொத்த கொலஸ்டிரால் 200 தாண்டினால் உடனே தான் கொல்ஸ்டிரால் பேஷண்ட் என நினைத்து பீதி அடைவார்கள். கூடவே கெட்ட கொல்ஸ்டிரால் எனும் எல்டிஎல் 130 (சில நாடுகளில் 100) தாண்டினால் அவ்வளவுதான். “எனக்கு ஸ்டாடினை பரிந்துரையுங்கள்” என தானாக மருத்துவரிடம் போய் நோயாளியாக ஆகிறவர்கள் உண்டு.

    உண்மையில் கெட்ட கொல்ஸ்டிரால், நல்ல கொல்ஸ்டிரால் என்பது எல்லாம் பொதுமைபடுத்துதல். எல்டிஎல்லில் பல உள்வகை உண்டு. அதில் சில நமக்கு நல்லது, சில கெட்டது. நல்ல கொல்ஸ்டிரால் எனப்படும் எச்டிஎல்லில் கூட சிலவகை எச்டிஎல் நல்லது, சிலவகை எச்டிஎல் கெட்டது.

    எல்.டி.எல்லில் இரு வகை. சின்ன சைஸ் எல்.டி.எல் (LDL-B), பெரிய சைஸ் எல்.டி.எல் (LDL-A).பெரிய சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் ஆபத்தற்றது. காரணம் அது உங்கள் ரத்த நாளங்களில் ஒட்டி மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் சின்ன சைஸ் எல்டிஎல் கொலஸ்டிரால் மிக ஆபத்தானது.

    ஆனால் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் இது எதையும் காட்டுவது இல்லை. உங்கள் எல்டிஎல் கொல்ஸ்டிராலின் உள்வகைகள், எச்டிஎல் கொலஸ்டிராலின் உள்வகைகள் இவற்றை உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட் பிரித்து காட்டுவது இல்லை. அப்படி பிரித்து ஆராயாமல் உங்களுக்கு இதயநோய் வரும் ஆபத்து உள்ளதா, இல்லையா என்பதை கொலஸ்டிரால் ரிப்போர்டை மட்டும் வைத்து கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு NMR lipoprifile test என்பது போன்ற மேலும் அட்வான்ஸ்டான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. அதை எல்லாம் செய்யாமல் “உங்களுக்கு கொல்ஸ்டிரால் பிரச்சனை” என உங்கள் மருத்துவர் கூறினால் அதை ஏற்று நீங்கள் ஸ்டாடின்களை உண்டு நோயாளியாக வேண்டாம். NMR lipoprofile பரிசோதனை செய்ய சொல்லி கேளுங்கள். அந்த சோதனை முடிவை விளக்க சொல்லி உங்கள் மருத்துவரை கேளுங்கள்.

    மேலும் உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில்

    உங்கள் எல்.டி.எல் கொல்ஸ்டிரால் அளவை நேரடியாக அளக்கும் சக்தி அடிப்படையான கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் இல்லை. பல கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் LDL-calculated என எழுதி இருப்பார்கள். சிலவற்றில் எழுதி இருக்க மாட்டார்கள். ஆனால் எழுதி இருந்தாலும், இருக்காவிட்டாலும் நூற்றுக்கு 99.99% ரிப்போர்டுகளில் உங்கள் எல்.டி.எல் நேரடியாக அளக்கபடுவது இல்லை. கணக்கிடதான் படுகிறது.

    எல்.டி.எல்லை கணக்கிட உதவும் பார்முலாவின் பெயர் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா. அது எப்படி கணக்கிடபடுகிறது என எழுதினால் கட்டுரை கணக்கு வகுப்பாக மாறிவிடும் அபாயம் இருப்பதால் அதை செய்யவில்லை. ஆனால் தேவைபட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள். பதில் அளிக்கிறேன்.

    எல்.டி.எல்லை நேரடியாக அளக்காமல் பார்முலாவை வைத்து கணக்கிடுவதில் உள்ள தவறு என்ன?

    இதில் தவறு என்னவெனில் உங்கள் ட்ரைகிளசரடு எண் 100க்கு கீழ் அல்லது 400க்கு மேல் இருந்தால் ஃப்ரிட்வால்ஃப் பார்முலா வேலை செய்யாது. அது உங்கள் எல்.டி.எல் எண்ணை மிகைபடுத்தி காட்டும். ஆக உங்கள் ட்ரைகிலசரைட் நூறுக்கு கீழ் இருந்தால் உங்கள் எல்.டி.எல் எண் என உங்கள் கொலஸ்டிரால் ரிப்போர்ட்டில் காட்டபடும் எண் முழுக்க தவறானது.

    ஆக கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டை வைத்து ஸ்டாடினை உட்கொள்ள துவங்குவது என்பது தெர்மாமிட்டரை மட்டும் பார்த்து டைபாய்டு மருந்து உட்கொள்வதற்கு சமம். தெர்மாமீட்டர் மிக அடிப்படையான சோதனை. டைபாய்டு இருக்கா இல்லையா என்பதை அறிய மேலும் பல சோதனைகளை செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் ஸ்டாடினை உட்கொள்வது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஸ்டாடின் என்பது விளையாட்டு இல்லை. அதில் நினைவு இழப்பு மாதிரி பல பக்கவிளைவுகள் உண்டு. மேலும் அது கொலஸ்டிராலை குறைக்குமே ஒழிய இதய அடைப்பை தடுப்பதற்கான சாத்தியகூற்றை மிகவும் குறைவாக தான் குறைக்கும். இப்படி பக்கவிளைவுகளை உன்டாக்கும் மருந்தை தவறாக இருக்க கூடிய கொல்ஸ்ட்ரால் ரிப்போர்ட்டை மட்டும் நம்பி உண்பது சரியல்ல.

    என்.எம்.ஆர் டெஸ்ட் செலவு பிடிக்கும் விஷயம் தான். ஆனால் கொல்ஸ்டிராலை குறைக்க உண்ணும் ஸ்டாடின் விலையை விட அது குறைவானது தான்.

    மற்றபடி உங்கள் கொல்ஸ்டிரால் ரிப்போர்ட்டில் முக்கியமான எண்கள் எவை?

    எச்.டி.எல் மற்றும் ட்ரைகிளசரைடு

    எச்.டி.எல் என்பது குப்பை லாரி மாதிரி. அது உங்கள் ரத்தநாளங்களுக்குல் சென்று கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை வாரி கொண்டு வந்து உங்கள் லிவரில் சேர்க்கும். லிவர் அந்த கெட்ட எல்.டி.எல் கொலஸ்டிராலை உடைத்து கழிவாக மாற்றி அனுப்பிவிடும். ஆக எச்.டி.எல் அதிகமாக இருந்தால் அது மிக ஆரோக்கியமான விஷயம். எச்.டி.எல் 40க்கு கீழே இருந்தால் உங்கள் உடனாடி வேலைகள் அனைத்தையும் ஒத்தி போட்டுவிட்டு எச்.டி.எல்லை 40க்கு மேல் உயர்த்த நீங்கள் முயலவேண்டியது அவசியம். உங்கள் எச்.டி.எல் 60 தான்டினால் அது மிக பெரிய பலம். உங்கள் ட்ரைகிளிசரடு 100க்கு கீழ் இருந்து உங்கள் எச்.டி.எல் 60க்கு மேல் இருந்தால் அது நீங்கள் புல்லட் ப்ரூப் ஆடையை அணிந்து இருப்பது போன்ற பாதுகாப்பை உங்கள் இதயத்துக்கு அளிக்கும். உங்கள் எச்.டி.எல் 60 தான்டி, ட்ரைகிளிசரைடு 140க்கு கீழ் இருந்தால் அப்புறம் உங்கள் எல்.டி.எல்  ஆபத்தை விளைவிக்காத நல்ல வகை எல்.டி.எல்லாக இருக்கும் வாய்ப்பு தான் மிக அதிகம்.

    ட்ரைகிளசரைடு என்பது என்ன?அது எப்படி உருவாகிறது?அதை எப்படி குறைப்பது? எச்.டி.எல்லை எப்படி அதிகரிப்பது?

    இதற்கு இரன்டு வழிமுரைகள் தனியாக இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அதாவது……

    ட்ரைகிளசரிடு அதிகமாக இருந்தால் எச்.டி.எல் தானாக குறையும்.

    ஆக எச்.டி.எல்லை அதிகரிக்க ட்ரைகிளீசரைடை குறைத்தே ஆகவேன்டியது அவசியம். ட்ரைகிளிசரைடை குறைத்தால் எச்.டி.எல் தானாக அதிகரிக்கும்.

    ட்ரைகிளசரைடை எப்படி குறைப்பது?

    இதை அறிய ட்ரைகிள்சரைடு எப்படி உருவாகிறது என்பதை அறிவது முக்கியம்.

    ட்ரைகிளிசரைடு என்பது வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் ட்ரைகிளிசரைடு. நீங்கள் அரிசி, கோதுமையை உன்டால் அதில் உள்ள சர்க்கரை உங்கள் உடலால் குளுகோஸ் ஆக மாற்ரபடும். குளுகோஸ் தான் எரிபொருள். ஆனால் அந்த எரிபொருலை செலவு செய்யாவிடில் அதை சேமிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இரன்டுநாளுக்கு மேல் தேவையான அளவு குளுகோசை சேமிக்கும் சக்தி உடலில் இல்லை. ஆனால் உடலில் ஒவ்வொரு செல்லிலும் ஏராளமாக கொழுப்பை சேர்க்கும் சேமிப்புதிறன் உங்கள் உடலுக்கு உள்ளது. ஆக மீதம் குளுகோஸ் உங்கள் லிவருக்கு அனுப்பபடும். லிவர் அதை ட்ரைகிளிசரைடு ஆக மாற்றி ரத்தத்தில் அனுப்பும். அது உங்கள் உடலில் ஊளைசதையாக சேமிக்கபடும்.

    ட்ரைகிளசரைடை குறைக்க வழி இதில் இருந்தே தெரியும்.

    சர்க்கரைசத்து (carbohydrates) உள்ள உணவுகளை உண்பதை குறைப்பது, அல்லது நிறுத்துவது.

    சர்க்கரை சத்து நிரம்பிய உணவுகளை உண்பதை குறைத்தால் குரைவான அளவில் ட்ரைகிளிசரடை உடல் உருவாக்கும்.

    சர்க்கரைசத்து நிரம்பிய உணவுகளை உண்பதை சுத்தமாக நிறுத்தினால் ட்ரைகிளிசரைடு உருவாகும் வழியே உடலில் கிடையாது. உடலில் குளுகொஸ் குறைவு எண்கையில் அதிக குளுகோசை சேமிக்கும் அவசியமே இல்லையே?

    ட்ரைகிளிசரடு குறைந்தால் எச்.டி.எல் தானாக் அதிகரிக்கும். இவை இரண்டும் நடந்தால் உங்கள் எல்.டி.எல் ஆபத்தை விளைவிக்கும் சின்ன வகை எல்.டி.எல்லில் இருந்து உடலுக்கு நலனளிக்கும் பெரிய வகை எல்.டி.எல் ஆக மாறும். அதன்பின் உங்களுக்கு கொல்ஸ்டிராலை பற்றி யாதொரு கவலையும் வேண்டியது இல்லை.

    (தொடரும்)

    Share
  • திருமுருகன் துதிமாலை (2)

     

    சத்தியமணி

    காரணம்தேடி கலங்கிடும் போதுநீ

    காரியம் ஆகவேண்டும்

    ஆரணமோதி அடைந்திடும் மகிமைநின்

    அடிகளில் காணவேண்டும்

    சீரணமாகா திண்டாடும் பிணிநீக்கி

    சேமங்கள் சேர்க்க வேண்டும்

    பாரணங்  கண்டு பலகாலந் தொண்டு

    பணியாற்றும் ஆசி வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (2)

    Share
  • உன்மத்தம்: 2

    இன்னம்பூரான்

    பித்தரெல்லாம் பைத்தியம் அல்ல; பைத்தியம் எல்லாம் சைத்தியம் அல்ல; சைத்தியம் எல்லாம் ‘க்ராக்’‘அல்லது ‘செமிக்ராக்’ அல்ல. பித்தமில்லா எத்தன் பத்தரைமாத்துத் தங்கம் போல அரிதிலும் அரிது. சிலருக்கு ஸ்க்ரூ ரொம்ப லூசு; பலருக்குக் கொஞ்சம் கொஞ்சம் லூசு. ஒத்தருக்குவாது ஸ்க்ரூ டைட் இல்லை. டைட் பண்ணினால், உடைந்து விடும். இது தான் நிலாவெளிச்சம் போல நிதர்சனம்.

    எப்போது நமது சித்தம் நமது ஆளுமைக்குள் இல்லையோ,அதை ‘சித்தஸ்வாதீனம்’ இழந்த நிலை என்று கூறுவது வழக்கம் என்றாலும், சித்தம் நம் ஆளுமைக்குள் இருக்குமா அல்லது நாம் தான் என்றென்றும் சித்தத்தின் ஆளுமைக்குள், ஓட்டின்னுள் உறையும் ஆமையைப் போல, அடங்கி, ஒடுங்கி வாழ்நாளை கழிக்கிறோமோ என்ற சிக்கலை மனோதத்துவ சாத்திரம் இன்று வரை அவிழ்க்கவில்லை. இந்த நுட்பத்தை சிறிதேனும் புரிந்து கொண்டாலே, அவுத்துப்போட்டுட்டு அலையற அசத்துக்களுக்கும், அவதூதர்களின் ஆன்மீகத்துக்கும் உள்ள மடுவுக்கும், மலைக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் புலப்படும்.

    உன்மத்தம் பைத்தியமோ, சைத்தியமோ இல்லை. ஆன்மீக நினைவலைகளில் மங்காது வாழும் சேஷாத்திரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், விசிறி சாமியார் போன்றோரின் வரத்துப்போக்குக்களை காணக்கொடுத்துவைத்தவர்களில் சிலர் அவர்களது சதா சர்வதா மோன நிலையை கண்டு வியந்தனர். சிலர் அவர்களின் உன்மத்த நிலையை பரிகசித்தனர்.  அவரவர் மனதின் வரையறைகளை யாரால் தாண்ட முடியும்? உயிரனங்களின் மனோதத்துவம் பற்றி மனிதன் அறிந்து கொண்டது சொற்பம். இரண்டே வரியில் அதை உரைத்து விட்டார், எங்கள் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்:

    உடல் வெளுக்க வழி உண்டு எங்கள் முத்து மாரியம்மா,
    மனம் வெளுக்க வழி இல்லையே எங்கள் முத்து மாரி…

    `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்` பற்றி உசாத்துணையில் படிக்கும் கொடுப்பினை கிடைத்தது. விருப்பம் உள்ளவர்கள்அதை முழுதும் படிப்பது நலமே.   அதிலிருந்து நன்றி நவின்று பகிர்ந்து கொள்ளும் சத்குரு அவர்களின் அதி ஆச்சரியமான உன்மத்த ஆசாரத்தைப் பற்றிய சில தகவல்கள் நான் சொல்வதை உறுதிப்படுத்துகிறது.

    வம்சாவளி தெய்வ அம்சம் பொருந்தியது. ஆதி சங்கரர் புனித நர்மதை நதியின் புண்யஸ்தலத்திலிருந்து காஞ்சிக்கு வரவழைத்த தேவி உபாசகர்களின் வம்சம் என்கிறார் `அபிநவ சுகபிரும்மம்`. ஜனவரி 22, 1890 அன்று ஜனித்த சேஷாத்திரி , குழவியாக இருக்கும்போதே தொட்டதெல்லாம் பொன்  என்று கியாதி. அந்த வம்சாவளியில் ஜோதிட சாஸ்திரம் கை வந்த கலை. இவருக்கு திருமணம் பேச ஆரம்பித்தவுடனேயே ‘சந்நியாச யோகம்’ என்று சொல்லி, அது நின்று போனதால் வருந்திய விதவைத்தாய் வாடினாள்; மறைந்தும் போனாள். சேஷாத்ரியோ சதா சர்வகாலமும் பூஜை, புனஸ்காரம், கோயில், குளம். கட்டிய துணி அழுக்கு; கலைந்தத் தலைமுடி; தாடி; பளிச் குங்குமம்; தேஜோமயமான முகாரவிந்தம். ஜபதபம், அதுவும் மயானத்தில். பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீக்ஷை. இன்று கூட அவருடைய தீக்ஷாநாமம் யாருக்கும் தெரியாது. அவரைப்போய் லெளஹீகத்தில் அடைத்துப்போட்டார்கள், தந்தையின் சிரார்த்தம் செய்ய. காலி அறை. மாயமாய் மறைந்து விட்டாராம். (பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸரை பற்றியும் இப்படி ஒரு செய்தி உண்டு.) ஊரெல்லாம் இந்த அற்புதம் பற்றியே பேச்சு. வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். கால்நடையாகவே பல புண்யக்ஷேத்திரங்களை தரிசித்து விட்டு, திருவண்ணாமலையே கதி என்று அங்கு வந்தடைந்தார்.

    “…அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார்…’.

    பகவான் ரமணருக்கும் (அவருக்கு ‘உந்திப்பற’ உன்மத்தம்) இவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது, தொட்டும் தொடாமலும்.

    (தொடரும்)

    உசாத்துணை:

    http://sirugamaniganesan.blogspot.co.uk/2011/10/sadguru-sri-seshadri-swamigal.html

    சித்திரத்துக்கு நன்றி: http://avatharsrisesha.files.wordpress.com/2009/12/ms.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 65

    மலர் சபா
    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     

    இனிய கள் ஊறும் வாயையுடைய
    நெய்தல் மலரே!
    வருத்தம் அதிகரிக்க வைக்கும்
    இம்மாலைப் பொழுதினில்
    தனிமையில் வருந்துகின்றன
    என் கண்கள்.

    அது போன்ற துன்பம்
    ஏதும் இல்லாததால்
    ஆழ்ந்து நீ உறங்குகின்றாய்!
    நீ உறங்கும்போது
    காண்கின்ற கனவுதனில்
    கொடியவராம் எம் காதலர்
    இச்சோலைப் பக்கம் வரக்கண்டாயா?

    (34)
    பறவைகள் போல
    விரைந்து சென்றிடும்
    குதிரைகள் பூட்டிய
    தேரின் சக்கரங்கள்
    சென்ற வழி அனைத்தையும்
    சிதைத்து நீ நிற்கிறாய்,
    தெளிந்த நீரையுடைய கடலே!

    என்ன செய்வேன் இனி யான்?
    என்னுடன் இருந்து கொண்டே
    பழிபோற்றும் அயலாரோடு
    சேர்ந்துகொண்டு
    நீயும் எனக்குத் துன்பம் தருகின்றாய்.
    என் நோயினை நீ அறியாய்;
    என்ன செய்வேன் இனி யான்?

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://jaikrishnaraitushar.blogspot.com/2011_03_01_archive.html

    Share
  • தொல்லை காட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

    மோகன் குமார்

    ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே !
    *****
    விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.

    கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் – பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
    ************
    நீயா நானாவில் கௌரவ கொலைகள்

    பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது புதிய படமான கௌரவம் படத்தின் பாடல் வெளியீட்டை நீயா நானாவில் நடத்த விரும்பி அணுக, அதே தலைப்பில் ஒரு விவாதமும் வைத்து பாடல் வெளியீடு நடந்தது.

    சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் வந்திருந்து தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி விட்டு திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.

    நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.

    ” கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது”

    ” Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல  தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது “

    நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை – அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..

    ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்

    ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் ” ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் – கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வேன்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு இளம் டிவி சீரியல் நடிகைகள்.

    கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் பொறுமையாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.

    சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !

    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

    எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் கலந்து கொள்வோரை எப்போதும் ” எக்சலண்ட் ” ” சூப்பர்ப்” என்கிற சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.

    எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.

    விஜய் டிவி விழித்து கொள்ளா விட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.

    அசத்தும் காம்பியர்கள்

    விஜய் டிவியில் மட்டும் எப்படி தான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.

    சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றிய மா. கா. பா ஆனந்த என பலரும் இங்கு காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.

    இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்

    இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !

    சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி

    படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்கு டிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு “சரவணன் மீனாட்சி ” சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி – தங்கள் பெற்றோரை விட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.

    குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ? ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !

    இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..

    வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளி கூட தெரியாம முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட – அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா?

    சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..

    லோ ஹிப் கட்டுவதை பார்த்தால் வருகிற எரிச்சல் இப்படி ஒரேயடியா இழுத்து சொருகிகிட்டாலும் ஏனோ வரத்தான் செய்யுது.

    புதிய நிகழ்ச்சி – ஜோடி சீசன் – 4

    விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் – 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க, ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுக ஆகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்

    ரசிக்கும் படி யாரேனும் இருந்தால் அவர் ஆடும்போது எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லுபோது சானல் மாற்றிவிடுவது நல்லது

    சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்

    சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.

    இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) இருக்கிறார். அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு

    ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அவர் அதிகம் திட்டலை.

    இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை

    அது இது எது

    இவ்வாரம் அது இது ஏதுவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா – டீம் வந்திருந்தது. விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி.

    சிவாவுக்கு இது வித்யாச ஹோம் கம்மிங். பல வருடங்கள் இந்நிகழ்ச்சி நடத்தியவர் இன்று அதில் ஒரு போட்டியாளராக… மா. கா. பா – சிவா இருப்பதால் அடக்கி வாசித்து அவரை நிறையவே பேச விட்டார்.

    பிந்து மாதவி முடியெல்லாம் வெட்டி கொண்டு பையன் மாதிரி இருந்தார் அதை வைத்து அவரை நன்றாக ஓட்டி தள்ளி விட்டார் சிவா. விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். 3 ரவுண்டிலும் ஜெயித்தது பிந்து மாதவி மட்டுமே ! இவ்வாரம் சிரிச்சா போச்சு ரவுண்டு செம கலக்கல். முடிஞ்சா இணையத்தில் தேடி கண்டு களியுங்கள் !

    Share
  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (7)

    பவள சங்கரி

    தங்களுக்குத் தேவையானது எது என்பதைத் தெளிவாக அறிந்துணர்ந்து கொண்டவர்கள் எவரோ அவர்களுக்கு அதை அடையக்கூடிய மனவலிமையை இவ்வுலகம் மிக மகிழ்வுடன் வழங்கிக் கொண்டிருக்கிறது!
    வால்ட்டர் ஸ்டேபிள்ஸ்

    சிந்தித்து செயல்படுவோமா?

    எந்த ஒரு காரியமும் மேலோட்டமாக செயல்படுவதற்கும், நல்ல முறையில் சிந்தித்து செயல்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படையாகத் தெரியும். பல நேரங்களில் நாம் சிந்தித்து செயல்படுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மேலோட்டமான நினைவலைகள் எந்த பாதிப்பையும், எங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. பின் எப்படி சிந்திப்பது?

    சிந்தனை என்பது ஆழ்மனதிலிருந்து பிறக்க வேண்டும். ஆம் உண்மையான ஈடுபாட்டுடன் கூடிய தெளிவான ஆழ்மனச் சிந்தனையாக அது அமைதல் வேண்டும். அப்படி நம் ஆன்மாவைத் தீண்டக்கூடிய ஒரு சிந்தனை வாய்க்கப்பெறும் போது அதன் படைப்பாளி நாம் அல்ல என்பதை நம்மால் உணர முடியும். நாம் நினைத்துப் பார்த்திராத, நம் கற்பனைக்கும் எட்டாத ஒரு சக்தியையும், வழிகாட்டுதலையும் அது வழங்குவதையும் ஒரு மூன்றாம் மனிதரைப் போல தள்ளி நின்று நாமும் உணர முடியும். என்பதுதான் சத்தியம்! ஆம் அப்படி ஒரு சிந்தனையின் வழி நடப்போர் வெற்றியை இழந்ததாக சரித்திரமே இருக்காது என்பதும் உண்மை. அமைதியாக அமர்ந்து, எந்த இடையூறும் இல்லாத சூழலில் தெளிவாகச் சிந்திக்க வழிவகுக்க ஆரம்பித்தாலே வெற்றியின் எல்லையை தொட ஆரம்பிக்கிறோம் என்றுதானே அர்த்தமாகிறது!

    பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் தேவையில்லை

    ந்ம் சக்திக்கு உட்பட்ட, நம்மால் நிறைவேற்றக்கூடிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் தயக்கம் கொள்ள வேண்டியதில்லை. நம் பங்களிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நம் உரிமைகளைப்  பெறவும் எளிதாகிறது. அந்த வகையில் ஏற்றுக் கொள்ளும் எண்ணற்ற பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையை அனுசரித்துச் செல்லும் இந்தப் போக்கு நம் வெற்றிப்பாதையை விரிவடையச் செய்கிறது.

    உண்மையை அன்போடும், கருணையோடும் எதிர்கொள்வோம் !

    ஆம், மாற்ற இயலாத சில உண்மைகளை நேசிக்கக் கற்றுக் கொண்டால் அது நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக நம்மோடு பணிபுரிபவரோ அல்லது அண்டை அயலாரோ நம்மிடம் இயல்பாக இல்லாமல் எதோ ஒரு கோபத்தை வெளிப்படுத்துபவராக இருக்கலாம். நாம் அடிக்கடி சந்திக்கக்கூடியவர்களின் இந்த மனநிலை நம்மையும் நிச்சயம் பாதிக்கக்கூடும். அது நம் அன்றாடப் பணிகளை முடக்கிப் போட்டுவிடும். இது போன்ற சூழலில் நாமும் அவருடைய எண்ணங்களைப் பிரதிபலிக்காமல், உண்மையான நேசத்தை அங்கு வெளியிட்டால் நாளடைவில் அவரும் நம்மிடம் அதே அன்பை வெளிப்படுத்தும் இயல்பிற்கு வந்துவிட வாய்ப்புகள் அதிகம். அப்படி அவர்களால் வர முடியாவிட்டாலும் அந்த அவர்களுடைய எண்ணம் நம்மை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நம் நேசம் அதற்கொரு கவசமாகிவிடும்.  இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களை நேராகச் சந்திக்க வேண்டிய தருணம் ஏற்படும் பொழுதெல்லாம், அவருடைய கண்களை நேரிடையாகச் சந்தித்து, ஒரு “ஹாய்” அல்லது புன்னகையுடன் ஒரு அன்பான பார்வையுடன் ஒரு ‘வணக்கம்’ சொல்ல வேண்டியது. இந்த சின்ன செயல் அவரையும் மனம் மாறச் செய்வதோடு, நம்மையும் உற்சாகமாக நம் பணிகளைத் தொடர சக்தியைக் கொடுத்துவிடும். முயன்றுதான் பார்ப்போமே! மீண்டும் நினைவு கூர்வோம். நாம் அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு கொள்ளக்கூடிய உண்மைகளை அன்போடும், கருணையோடும், பொறுமையோடும் எதிர்கொள்வது மிக சக்தி வாய்ந்ததொரு மந்திரம். அன்றாடம் அந்த மந்திரத்தை உச்சரித்து நம் வெற்றிப் பாதையை விரிவாக்குவோம்!

    இலட்சியம் ஏற்படுத்துவது மாற்றம் என்றால்
    அலட்சியம் ஏற்படுத்துவது ஏமாற்றம்தானே?

    தொடருவோம்

    Share