இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (52)

0

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இம்மடலை வரைகின்றேன். என்னுடைய மடல் வரிசையில் இது 52 வது மடல். ஆமாம் ஜம்பத்திரண்டு வாரங்களாக தொடர்ந்து உங்களுடன் இம்மடல் வாயிலாக உறவாடி வருகிறேன்.

52 வாரங்கள் ! ஓ ! ஒரு வருடமல்லவா? ஆமாம் இம்டலின் உறவாடலுக்கு இத்தோடு ஓராண்டு பூர்த்தியாகிறது. இவ்வோராண்டு காலமாக இப்புலம்பெயர் தேசத்திலேயிருந்து புலம்பும் இச்சிறியேனின் புலம்பல்களை பொறுமையுடன் படித்து ஆதரித்து வந்த உறவுகள் அனைவருக்கும், இம்மடலை அழகாக தவறாமல் பதிப்பித்து வரும் எனதினிய வல்லமை நிர்வாகத்தினருக்கும் முதற்கண் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புத்தம்பி அண்ணாகண்ணனின் அன்பான ஆதரவுடன் வல்லமையில் இதுவரை நான் படைத்து வந்த அனைத்தையும் அதேபோல அன்பான ஆதரவுடன் பவள சங்கரி அவர்களும் தொடர்ந்து பதிப்பித்து வருவது மனதை நிறைக்கிறது.

நான் எனது முதலாவது மடலில் குறிப்பிட்டது போல ஒரு காலத்தின் பதிவு என்பது காலத்தின் கண்ணாடியைப் போன்றது. நாம் வாழும் காலத்தின் நிகழ்வுகளை எதிர்காலச் சந்ததியினரின் பார்வைக்கு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு உன்னத ஊடகக் கண்ணாடியே பதிவுகளாகும்.

எனது 38 வருட புலம்பெயர் வாழ்க்கையில் நானடைந்த, கண்கூடாகக் கண்ட மாற்றங்கள் பல. இதே மாற்றங்களை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமானவை. ஓ! இப்படி நடந்திருக்கிறது என்று நாம் நினத்திருக்கும் வேளையில் மற்றொருவரின் பார்வையில் அது வேறுவிதமாகப் பதிந்திருக்கிறது என்பதை அறியும் போது மிகவும் விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கிறது.

வாழ்க்கையெனும் இந்த அற்புதக் கல்லூரியில் நான் இன்னமும், மாணவனே. தினமும் புதிதாக பலவற்றை பலவிதமான என்னை விட வயது முதிர்ந்தவர்கள், வயதில் இளையவர்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவை அனைத்தும் எனக்கு அளிப்பது எவ்வளவு உழைத்தாலும் அடைய முடியா அனுபவச் செல்வங்களே !

இவ்வேளையில் எனக்கு இப்படியான ஒரு மடல் வகையிலான பதிவைச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அளித்த அமரர் அலிஸ்டர் குக் ( Akister Cook) அவர்களை எண்ணிக் கொள்கிறேன்.

1975ம் ஆண்டு 18 வயதே நிரம்பிய கல்லூரி மாணவனாக இங்கிலாந்தில் வாழ்ந்திருந்த வேளை எனது வாழ்வாதாரத்திற்காக பகுதி நேர காவல் ஊழியனாக ( Security Guard) பணி புரிந்த வேளை தனிமையான ஆபிஸ் கட்டிடங்களின் இரவுநேரக் காவல்காரனாக பணிபுரிகையில் எனது தனிமையைப் போக்க உதவுவது பி.பி.ஸி வானொலியில் அவர் தன்னுடைய சொந்தக்குரலில் நடத்தி வந்த “அமெரிகாவிலிருந்து ஒரு கடிதம் ( A Letter From America) “ எனும் நிகழ்ச்சியேயாகும்.

இங்கிலாந்திலிருந்து, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் ஒரு புலம்பெயர் இங்கிலாந்து தேசத்தவரின் அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகும்.

எனது உங்களுடனான இந்த மடல் வடிவான உரையாடலுக்கு பின்னனி இந்த நிகழ்வின் மீது நான் கொண்டிருந்த நெகிழ்வாகும்.

நான் வாழ்ந்த வாழும் காலத்தில் இங்கு நடைபெறும் பல நிகழ்வுகளை எனது பார்வையில் பட்டவாரு உங்களுக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். இந்நோக்கத்தில் நான் எத்தனை தூரம் முன்னேறியிருக்கிறேன் என்பதன் நீதிபதி நீங்களே. எனது இந்த மடல் வல்லமையின் ஆத்ரவு நீடிக்கும் வரை, உங்களின் அன்பான ஆதரவு தொடரும் வரை எனது வாழ்வு இப்பூவுலகில் நிலைத்திருக்கும் வரை தொடர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

“தம்பி உன் உள்ளத்தில் உண்மையிருந்தால் எழுதுகோலை எடு , எழுது” என்றான் புரட்சிப் பாவலன் பாரதி.

என்னுடைய முயற்சிக்கு எனது உள்ளத்தில் குடியிருந்து என்னை என்றும் வழிநடத்தும் அண்ணாமலையானின் அருள் தொடர்ந்து கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு அடுத்த மடலில் சந்திக்கிறேன்.

அன்புடன்
சக்தி சக்திதாசன்
04.04.2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *