தமிழ்த் தேனீ

நல்ல தூக்கம்  , திடீரென்று  டொம் என்று ஏதோ விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் மாதவன் , பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த  மைதிலி  அது ஒண்ணுமில்லேங்க ,  நம்ம ஜன்னலுக்கு மேலே இருக்கே  சன்ஷேட்   அதுலே இந்தப் பூனை ரெண்டு குட்டி போட்டிருக்கு,  நம்ம கார் ஷெட்டுக்குக்கு மேலே பிளாஸ்டிக் ஷீட் போட்டிருக்கீங்களே  அதுமேலே பூனை குதிச்சிருக்கும்  அதான் சத்தம் என்றாள்  .
ஆமா இருந்த இட்த்திலே இருந்தே  நீயா  ஏதாவது கற்பனை செய்து எதையும் சொல்லாதே, பதினோரு மணி  பாதிராத்திரி, காலம் கெட்டுக் கிடக்கு, போனவாரம் கூட ராமன் தெருவிலே ஜன்னலை உடைச்சு வீட்டிலே இருக்கறதையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிட்டாங்க மர்ம நபர்கள், இப்பல்லாம்  மர்ம நபர்கள் அதிகமாயிட்டாங்க,
போலீஸ்காரங்க நிறைய மர்ம நபர்களை தேடிக்கிட்டே இருக்காங்க , என்று மைதிலிடம் கூறிவிட்டு, நீ ஒண்ணும் பயப்படாதே  நான் போயி பாத்துட்டு வரேன்  என்றபடி டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு  மெயின் கேட்டைத் திறந்து வெளியே போனான் மாதவன் .
வீட்டைச் சுற்றி எல்லா இடத்திலேயும் பார்த்தாச்சு , ஒண்ணும் தெரியலே, யோசித்துக்கொண்டிருக்கும்போதே மறுபடியும் அதே சத்தம், கார் ஷெட்டின் அருகே சென்று டார்ச் அடித்துப் பார்த்தான்,
ஒரு பூனை அதன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு  பிளாஸ்டிக் ஷீட் மேலே குதித்து, மிக லாவகமாக அங்கே இருந்து ஜன்னலுக்கு தாவி , குட்டிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், ஜன்னலிலிருந்து கீழே குதித்து ,  பம்ப்செட் மோட்டார் இருக்கும் அறையின் கிரில் வழியாக உள்ளே போய் குட்டியை மிகப் பத்திரமாக தரை இறக்கி வைத்துவிட்டு  மாதவனைப் பார்த்து மிய்யாவ் என்றது.  அந்த மியாவ் வுக்கு என்ன பொருள் என்று மாதவனுக்கு புரிந்தது, பயப்படாதே  நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் உன் குட்டியை , ஏதோ சத்தம் கேட்டுதேன்னு வந்து பாத்தேன், என்று ஏதோ ரொம்பநாள் பழகினா மாதிரியும் , இவன் பேசறதெல்லாம் அந்தப் பூனை புரிந்து கொள்ளும் என்னும் எண்ணத்துடன் அதுனாலே நான் இங்கேயே இருக்கேன் நீ  மேலே போயி உன்னோட இன்னொரு குட்டியையும்  தூக்கிண்டு வா  என்றான்.
பூனை இப்போது வேறு தொனியில் மியாவ் என்று கத்திவிட்டு குட்டிப் பூனையின் பக்கத்திலே  படுத்துக் கொண்டது. மாதவன் மனதில் அந்தப் பூனையின் மியாவுக்கு என்ன அர்த்தம் என்றும் அதன்   எண்ணம் என்ன என்பதும்  புரிந்தது . ஆமாம் அந்தப் பூனை கண்களின் பாவத்தாலும் முக அசைவாலும்  இவனுக்கு மிக அழகாக அதன் எண்ணத்தை  புரியவைத்தது.   அட கூர்ந்து கவனித்தால் இந்தப் பூனையின் மொழியைக் கூட கற்றுக் கொள்ள முடியும் போல் இருக்கிறதே என்று தோன்றியது மாதவனுக்கு.
உன்னாலே ஆபத்தில்லேன்னு புரிஞ்சிகிட்டேன்   ஆனா இன்னொரு குட்டி அங்கே மேலே இருக்கு  அதைப் பத்தியும் கவலையா இருக்கு,  இப்போ இந்தக் குட்டியை  கொண்டு வந்து வெச்சிருக்கேனே  இந்த இடம் பாதுகாப்பா இருக்குமான்னு  யோசிச்சிண்டு இருக்கேன்  இந்த இடம் பாதுகாப்பானதுன்னு   என் மனசுக்கு பட்டால்தான்   இன்னொரு குட்டியையும் இங்கே கூட்டி வருவேன்  அப்படி என்று அந்த மிய்யாவுக்கு அர்த்தம் புரிந்து கொண்டான் மாதவன் ,
அவனுக்கு திடீரென்று ஒரு ஆசை எப்படியும் இந்தப் பூனை மேலே இருக்கற இன்னொரு குட்டியை எடுத்துண்டு வர மேலே போகும் , அப்பிடி அந்தக் குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு புகைப்படம் எடுக்கலாம்னு உள்ளே போயி கேமராவை எடுத்துக்கொண்டு  மைதிலி நீ சொன்னது சரியா இருக்கு, அதேதான் அந்தப் பூனைதான், குட்டியைக் கவ்விண்டு வந்து கீழே வெச்சிருக்கு, இன்னொரு குட்டியைக் கவ்விண்டு வரும்போது ஒரு போட்டோ எடுத்திண்டு வரேன்  , என்றபடி வெளியே போனான்,
இவன் வீட்டுக்குள் வந்து மைதிலியிடம் பேசிவிட்டுத் திரும்பி வரும் நேரத்துக்குள் அந்தப் பூனை இன்னொரு குட்டியையும் கவ்விக்கொண்டு வந்து  மோட்டார் ரூமில் வைத்துவிட்டு அதன் பக்கத்தில் படுத்துக்கொண்டு இவனையே பார்த்துக்கொண்டு இருந்தது.
மாதவன் ஜன்னல் வழியே இதோ பாரு  மைதிலி  சத்தமே போடாம பூனை மாதிரி அதுக்குள்ளே இன்னொரு குட்டியையும் கொண்டு வந்து வெச்சிடிச்சு  என்றான்  போட்டோ எடுக்க முடியாத  ஏமாற்றத்துடன்  .
ஏங்க அது பூனைதானே   என்றாள் மைதிலி   அது அப்பிடித்தான் செய்யும் , நீங்க தள்ளி வந்துட்டீங்க இல்லே அந்த நேரத்திலே உங்களாலே கீழே இருக்கற குட்டிக்கு ஆபத்து ஏற்படாதுன்னு யோசிச்சு  நீங்க அங்கே போறதுக்குள்ளே கொண்டு வந்து வெச்சிடிச்சு பாத்தீங்களா . நம்மளைவிட எல்லாமே  புத்திசாலியா இருக்கு என்றாள்.  அட ஆமாம் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே   அதை  போட்டோ எடுத்துட்டு   உள்ளே வந்தான்  மாதவன் ,
நாய்   நாம குடுக்கறதை தின்னுட்டு காவல் காக்கும் , அதை வளக்கலாம் ஆனா  பூனைக்கு முன் யோசனை அதிகம், திருட்டுத் தனம் அதிகம்னு  சொல்வாங்க, அதுனாலே பூனை என்ன செய்யுமாம் அந்த வீட்டிலே இருக்கறவங்க  எப்போ போவாங்க  நாம போயி திருட்டுத் தனமா கிடைக்கறதை சாப்படலாம்னு  காத்துகிட்டு இருக்குமாம், அதுனாலே பூனை வளக்கக் கூடாதுன்னு சொல்வாங்க,  என்றாள்  மைதிலி.
வாசற் கதவைப் பூட்டிவிட்டு வந்து படுத்தான் மாதவன், ஆமாம் அதெப்பிடி  நீ இங்கேருந்தே சரியா கண்டு பிடிக்கறே ,ஆமாம் தூங்கலையா நீ முழிச்சிகிட்டே படுத்திருந்தியா என்றான்.
இல்லே இல்லே தூங்கிட்டேன் ,ஆனாலும்  பொம்பளைங்க  தூக்கமெல்லாம் கோழித் தூக்கம் மாதிரி, பூனைத் தூக்கம் மாதிரிதான் ,அசந்து போயி தூங்குவோம் ஆனாலும் ஒரு விழிப்பு இருந்துகிட்டே இருக்கும் , ஆனா ஆம்பிளைங்க  அசந்து போனா ஆழ்ந்து தூங்கிடுவீங்க  , அதுனாலே இந்த சத்தம் இதுனாலேன்னு  அனுபவத்திலே கண்டுபிடிக்க முடியும் எங்களாலே என்றாள்.
அதெல்லாம் சரி மைதிலி நீ சொன்னியே பூனைக்கு திருட்டுத் தனம் அதிகம்  வீட்டிலே இருக்கறவங்க எப்போ போவாங்க அப்பிடீனு காத்துகிட்டு இருக்கும் அப்பிடீன்னு , அதை ரொம்ப தப்பா புரிஞ்சிகிட்டு தப்பா சொல்லிக் குடுத்துட்டங்களோ  நம்ம பெரியவங்க, இல்லே  பெரியவங்க சொன்னதை தப்பா நாம புரிஞ்சிகிட்டோமான்னு  தெரியலே,
மெதுவா சத்தமே போடாம இருக்கறது பூனையோட குணம், அவ்ளோதான் உண்மை, அதுக்கு இருக்கற  இருட்டிலேயும் கண்ணு தெரியும்கிற சக்தியைப் பயன்படுத்தி அது தனக்கு வேண்டிய உணவைத் தேடிக்கிது  அவ்ளோதான், ஆனா அதுக்கு பயம் அதிகம்  அதுனாலே நாம யாரும் இல்லேன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கப்புறம் வந்து அதுக்கு வேணுங்கற  உணவை சாப்பிடுது, அதை நாம திருட்டுத் தனம்னு சொல்றோம்,
நம்மைப் பாத்து பயப்படறதாலே நாம எப்போ தள்ளிப் போவோம்ம்னு காத்திருக்கும் அவ்ளோதான், அதை தப்பா சொல்லிட்டாங்கன்னு நெனைக்கிறேன்    மனுஷன் எப்போ  போவான்னு காத்திருந்து  வந்து திருடும்னு.   இப்போ நீயே ஒத்துகிட்டே நான் அசந்து தூங்கறேன்னு , ஆனா நீ அசந்து தூங்கினாலும் ஒரு விழிப்புணர்வு இருக்கும்னு.
அப்போ நான் அசந்து தூங்கும்போது  உனக்கு விழிப்பு வருதுன்னு வெச்சிக்கோ, அப்போ உனக்கு தாகமா இருக்கு , பிரிட்ஜிலேருந்து  ஏதாவது எடுத்து தாகத்துக்கு குடிக்கறேன்னு வெச்சிக்கோ, யதேச்சையா   எனக்கு அப்போ விழிப்பு வந்தா , உடனே நான் அசந்து தூங்கற நேரமாப் பாத்து  எனக்கு கூடக் குடுக்காமே நீ குளிர்பானம் குடிக்கறேன்னு நான் நெனைச்சிகிட்டா எவ்ளோ  முட்டாள் தனமோ அதே மாதிரிதான் பூனை நமக்குத் தெரியாம வந்து பாலைக் குடிக்கும் போது  அதைத் திருட்டுப் பூனைன்னு சொல்றதும் என்றான் மாதவன்.
அட ஆமா .நீங்க சொல்றதும் சரியாத்தான் இருக்கு,  , நான் மாடியிலே  துணி காயப் போடும்போது நெனைச்சிகிட்டேன் , இந்தப் பூனை குட்டிகளுக்கு பால் குடுக்குதே,  ,இதுக்கு குட்டிகளுக்கு பால் குடுக்க சக்தி வேணுமே அதுனாலே  இந்தப் பூனைக்கு ஏதாவது குடுக்கலாமா ன்னு ஆனா பெரியவங்க  பூனைக்கு சாப்பிட ஏதாவது குடுத்தா அப்புறம் நம்ம வீட்டிலேருந்து போகவே போகாது  எப்போ நாம அடுத்து அடுத்து அதுக்கு குடுப்போம்னு காத்திருக்கும் , அப்பிடிக் குடுக்கலேன்னா  திருடியாவது சாப்பிடும்னு சொல்வாங்களே அப்பிடீன்னு பயந்து ஒண்ணுமே குடுக்காம விட்டுட்டேன் என்றாள் மைதிலி
நீ சொல்றதும் சரிதான்  அதுவும் ஒரு ஜீவன்தானே , அதுக்கும் பசிக்கும், குட்டிகளுக்கு பால் குடுக்க அதுக்கும் சக்தி வேணும், அதுனாலே  நாம ரெண்டு பேரும் போயி கொஞ்ச பால் எடுத்து ஒரு கிண்ணத்திலே வெச்சு அந்தப் பூனைக்கு குடுக்கலாமா  என்றான் மாதவன்.
இதோ எடுத்துகிட்டு வரேன் என்றபடி ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு  வந்து வாங்க போயி அந்தப் பூனைக்கு குடுக்கலாம்னு மாதவனும் மைதிலியும் வெளியே வந்து அந்தப் பால் கிண்ணத்தை பூனையிடம் வைத்துவிட்டு , அது பாலைக் குடிக்கும் என்று காத்திருந்தனர்  இருவரும்,  ஆனால் இவர்களை நம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இவர்களையே அந்தப் பூனை இவர்களையே பார்த்துக்கொண்டு  சும்மா உட்கார்ந்து இருந்தது .
உனக்காத்தானே பால் கொண்டு வந்தோம் , நமபவே மாட்டேங்கறையே  நாங்க உனக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம்,பாலைக் குடி என்றான் மாதவன், மியாவ் என்றது பூனை சரி  புரிஞ்சு போச்சு  யாரோட இயல்பையும் மாத்த முடியாது நம்மாலே , நாம தள்ளிப் போனாத்தான் இந்தப் பூனை பாலைக் குடிக்கும் போல இருக்கு  ,  சரி வா நாம போயி தூங்கலாம் என்றபடி உள்ளே வந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள் இருவரும்,
மெதுவே மெல்ல அடிஎடுத்து வைத்து கிண்ணத்தில் வாயை வைத்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு மீண்டும் சந்தேகத்துடன் தலையைத் தூக்கி  சுறும் முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் பாலைக் குடிக்க ஆரம்பித்த்து  பூனை. சிரித்தபடி  மாதவன் பாத்தியா  அதோட திருட்டுத் தனத்தை என்றான்.
ஏன் திருட்டுத் தனம்னு சொல்றீங்க அதோட இயல்பு ஜாக்கிறதை உணர்வு என்றாள் மைதிலி, சபாஷ் நீயும் சரியாப் புரிஞ்சிக்கறே, அது சரி நாம எதைச் சாப்பிட்டாலும்  கடவுளுக்கு படைச்சிடு சாப்படறோமே . உண்மையாவே இந்தப் பூனை மாதிரி நாம் படைச்ச பாலை கடவுள் குடிச்சா அடுத்த முறை படைப்போமா  என்றான் மாதவன்.
எல்லாம் மனசுதாங்க காரணம்  அங்கே பூனைக்கு சந்தேகம், இங்கே நமக்கு சந்தேகம் நாம  தயாரிச்சிருக்கற உணவுப் பொருள்லே ஏதாவது ஒவ்வாமை இருந்தா நம்மைப் பாதிக்குமே.அப்பிடீன்னு .
அதுனாலே எல்லா வல்லமையும் படைச்ச இறைவா  ,நாங்க இதை உனக்கு படைக்கிறோம் இதிலே ஏதேனும் தோஷமிருந்தா அதைப் போக்கற சக்தி உனக்குதான் இருக்கு, இதிலே இருக்கற தோஷங்களை நீக்கி ஆரோக்கியமான  அமைர்தமா  இந்த உணவை மாத்தி  எங்களுக்கு குடுன்னு வேண்டிக்கறோம்,
ஜீவராசிகளையும் படைச்சு அதுக்கு வேண்டிய உணவையும் படைச்ச இறைவனுக்கு நன்றி சொல்றா மாதிரிதான் அவனை அப்பப்போ நெனைச்சுக்கணும் ,மறக்க் கூடாதுங்கறதுக்காக  பெரியவங்க சில வழிமுறைகளை ஏறபடுத்தி வெச்சிருக்காங்க அதிலே இதுவும் ஒண்ணு என்றாள் மைதிலி.
ஆமாம் மைதிலி  சாப்பாட்டிலே யாராவது எதையாவது கலந்து குடுத்துட்டா என்ன செய்யறதுன்னு  சாப்பிட்டுப் பார்த்து அதிலே ஒண்ணும் பாதிக்கறா மாதிரி எதுவும் கலக்கலே  என்று  உறுதி படுத்திக்க முன்னெல்லாம் ராஜாக்கள் ஒரு ஆளை வெச்சிருப்பாங்களாம். அவர் முதல்லெ சாப்பிட்டுட்டு  அவருக்கு எதுவும் பாதகமா ஆகலைன்னா  ராஜா சாப்புடுவாராம்.
அது மாதிரி ஒரு ஆளா நாம தெய்வத்தை வெச்சிருக்கோம்னு எனக்கு தோணுது,  நாமளும் இந்தப் பூனை மாதிரிதான்  சந்தேகப் பிராணி என்றான் மாதவன் .   மனுஷன்தாங்க எப்பவுமே திருட்டுப் பூனை  என்றாள் மைதிலி.
அதுசரி மைதிலி  மைதிலி அந்தப் பூனை  தன் குட்டியை வாயாலே கவ்வி எடுத்துகிட்டுப் போவுதே  குட்டிப் பூனைக்கு வலிக்காதா என்றான்.
குட்டிப் பூனைக்கு வலிக்காம ஜாக்கிறதையா எடுத்துகிட்டுப் போவும் தாய்ப்பூனை. இது ஒரு மாதிரி தாய்மை , தாய்மைங்கறதே பக்திதானே ,  நாம பக்தீன்னு சொல்றோமே  அதை ரெண்டு விதமா பெரியவங்க சொல்வாங்க ,  ஒண்ணு  மர்க்கட நியாயம், இன்னொண்ணு மார்ஜார நியாயம்
மர்க்கடம்ன்னா குரங்கு , குரங்கு  அது பாட்டுக்கு கிளைக்கு கிளை தாவிக்கிட்டே போவும் , ஆனா அதோட குட்டி  தாய்க் குரங்கை கெட்டியா பிடிச்சிக்கும் , குட்டிக் குரங்கு சரியாப் பிடிச்சுக்காம கையை விட்டுடிச்சுன்னா கீழே விழுந்துடம் ,அதுனாலே  கெட்டியாப் பிடிச்சிக்கும் , இது மாதிரி ஒரு பக்தி, நாமதான் தெய்வத்தை  பிடிச்சிக்கணும்னு சொல்லுது
இன்னொண்ணு இந்தப் பூனை மாதிரி, மார்ஜாரம்ன்னா பூனை  இந்தப் பூனை குட்டிகளை எப்பவும் விடாம காப்பாத்தும், வாயாலே பூனைக்குட்டிகளுக்கு வலிக்காமே கவ்விகிட்டு போயி பத்திரமா வெச்சுக் காப்பாத்தும் . அதுனாலே குட்டிகள் கவலைப் படாமே  எல்லாத்தையும் தாய்ப்பூனையை நம்பி ஒப்படைச்சிட்டு  நிம்மதியா இருக்கும்.
ஆனா மனுஷன் இந்த ரெண்டு பக்தியையும் முழுசா நம்பறதில்லே. வேணும்னா கடவுளைக் கும்புடறான், இல்லாட்டி கடவுளை நெனைக்கறதே இல்லேன்னு  மாறி மாறி நிலையில்லாத புத்தியை வெச்சிகிட்டு அல்லாடறான்.
அது மாதிரிதான்  நானும் படுத்தவுடனே எல்லாத்தையும் நீ பாத்துப்பேன்னு  நம்பி நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிடறேன் மைதிலி , தாய்க்குப் பின் தாரம் சரிதானே என்றான் மாதவன்
மியாவ் என்றது பூனை,   பத்தியா நான் சொன்னது சரின்னு பூனை கூட சொல்லிடிச்சு  என்றான் மாதவன். இருவரும் சிரித்துக் கொண்டே  தூங்க ஆரம்பித்தனர்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on ““ திருட்டுப் பூனைகள் “

  1. பூனைக்கிருப்பது ஜாக்கிரதை உணர்வுதான் என்பதை அழகான விளக்கங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அது போல் ‘நிவேதனம்’ குறித்த கருத்துக்கள் அருமையிலும் அருமை. அழகழகான அற்புதக் கருத்துக்கள் பல சேர்ந்த அருமையான கதையைப் படிக்கத் தந்தமைக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.

  2. கணவனும் மனைவியுமாக இணைந்து அந்த நள்ளிரவில் தாய்ப் பூனைக்கு பால் பருகக் கொடுக்கும் காட்சி அழகான கவிதை போன்று உள்ளது. வாழ்த்துக்கள் திரு. தமிழ்த்தேனீ அவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *