வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (8)

7

பவள சங்கரி

தீய சக்திகளுக்கு வெறுப்புணர்ச்சி, சாந்தமான உணர்வு, நல்ல போதனைகளை மகிழ்வுடன் இரசித்துக் கேட்கும் போழ்தும் ஒருவரிடமிருந்து அச்சமென்ற அந்த ஒன்று விலகிவிடுகிறது.
புத்தர்


வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்

எப்போது ஒருவருக்கு சிலரைக் கண்டால் அதீத வெறுப்புணர்ச்சி வருகிறதோ, அப்போதே அவர் தான் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் சுய பச்சாதாபத்தில் உழன்று கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. சக மனிதர்களை நேசிக்காமல் இருப்பதைக் காட்டிலும் வெறுப்புணர்வைக் காட்டுவது மிக மோசமானது. அவர் தன்னை மிஞ்சிவிடுவாரோ என்ற படபடப்பும்கூட வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளடைவில் அடுத்தவரிடம் காட்டும் அந்த வெறுப்புணர்ச்சி, நம்மீதே சுய அனுதாபத்தை ஏற்படுத்தி மெல்ல மெல்ல சுய வெறுப்பிற்கும் வழிவகுத்துவிடும். நம்மை நாமே வெறுக்கும் சூழல் தன்னம்பிக்கையை முற்றிலும் குலைத்துவிடும். இதைத் தவிர்க்க ஒரே வழி எவரையும் வெறுக்காமல் இருக்க பழகிக்கொள்ள வேணடும். தன்னைப் போல பிறரையும் நேசிப்பது வெற்றிப் பாதையின் மலரணை என்பதில் ஐயமில்லை.

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

எந்த ஒரு காரியத்தைச் செய்யும் போதும் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் வந்தால் அந்த காரியத்தை சரியாகக் கொண்டு செலுத்துவது சிரமம். காரணம் தோல்வி என்பதே கற்பனையான ஒன்று. தோல்வி என்று கற்பனையாக நினைப்பதெல்லாம் வெற்றிக்கான படிகள் என்பதுதான் நிதர்சனம். இதை முழுமையாக உணர்நது கொண்டாலே தேவையற்ற சலனம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் முன்னேற முடியும்.

என் உறவினர் ஒருவர் மிகச் சிறந்த இருதய அறுவை சிகிச்சை  நிபுணர். ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருந்தவர். வாழ்க்கையில் தம் பதவிக் காலத்தில் பல ஆபத்தான அறுவை சிகிச்சைகளையும் சர்வ சாதாரணமாகச் செய்து பல உயிர்களை காத்தவர். தம்முடைய  பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற வேண்டிய நேரத்தில் இறுதி அறுவை சிகிச்சையின் போது, நோயாளி இறந்துவிட, அந்த சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதித்து, தம் கவனக் குறைவினால்தான் தன்க்கு தோல்வி ஏற்பட்டது என்று கற்பனை செய்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதே நோயாக மாறி பத்து ஆண்டுகள் படாதபாடுபட்டார். தன்னுடைய 35 ஆண்டுகால சேவையின்போது காப்பாற்றிய எத்தனையோ உயிர்களைப் பற்றியும், அந்த வெற்றியைப் பற்றியும் மன நிறைவு கொள்ளாத அவர், தன் கையை மீறி நடந்த ஒரு அசம்பாவிதத்தை அதீத கற்பனைக் கண்களுடன் பார்த்து, அமைதியாக வாழ வேண்டிய நாட்களை தொலைத்ததோடு, தாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவரச் செய்யத் தவறிவிட்டார். இதனால் பிரச்சனைகள் அதிகமானதே தவிர வேறு எந்த பலனும் இல்லை.

இன்னொரு சம்பவம் நான் மிகவும் ஆச்சரியப்பட்டது, இரண்டு நண்பர்கள் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரும் பாராட்டுக்களுடன் நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். அடுத்தவரோ இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்று வெளியே வந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரையும் தனித்தனியாகச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்த போது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது எனக்கு. ஆம் அதிக மதிப்பெண் வாங்கி வெளியில் வந்த மாணவர் சரியான வேலை கிடைக்காமல் பெரும் மன வருத்தம் கொண்டிருக்க, மற்றொரு மாணவரோ நல்ல ஒரு பிரபலமான பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். இது எப்படி சாத்தியம் என்று விசாரித்த போது, நல்ல மதிப்பெண் வாங்கி வெளியில் வந்து, முதல் நேர்ககாணலுக்குச் சென்றவர், அங்கு வேலை கிடைக்காமல் போனவுடன், தோல்வி என்ற அச்சம் சிறைபிடிக்க, அடுத்து வந்த அத்தனை நேர்காணல்களையும் அதே அச்சத்துடன் அணுக, நாளடைவில் தன்னம்பிக்கை குலைந்து புதிய முயற்சி என்ற வார்த்தைக்கே இடமளிக்காமல், கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு குறைவான ஊதியத்தில் திருப்தி இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் இறுதி ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றாலும் அதைக்கண்டு அச்சம் கொள்ளாமல் அடுத்த முறை இன்னும் பெரு முயற்சியுடன் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண் பெற்றதோடு அதே தன்னம்பிக்கையுடன் போன முதல் நேர்க்காணலே வெற்றியைக் கொடுக்க அன்றிலிருந்து ஏறுமுகம்தான் அவருக்கு!

எந்த ஒரு செயலையும் கெட்டியாக பிடித்துக் கொள்வதோடு, அதை இலகுவாக அவிழ்த்துவிடவும் பழக வேண்டும். ஆம் நம்மால் முடிந்தவரை நூறு சதவிகித முயற்சியை மூலதனமாக்கிவிட்டு, நம் இருதயத்தையும், ஆன்மாவையும் ஒருங்கே அதில் முழுமையாகச் செலுத்திவிட்டு அடுத்த நொடி அதிலிருந்து என்ன பலன் கிடைக்கப் போகிறது என்ற அச்சம் இல்லாமல், மகிழ்ச்சியுடன், தன்னம்பிக்கையுடன் வளைய வந்தால் போதும், வெற்றிப்பாதை தெளிவாகப் புலப்படும்!

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே நாம் ஆகிறோம் என்பதே சத்தியம். இதைத்தான் எண்ணம் போல வாழ்வு என்பார்கள் இல்லையா!

தொடருவோம்

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (8)

  1. ஒரு செயலின் மூலம் கிடைக்கும் பலனிலேயே மனமிருக்கும் பட்சத்தில், நூறு சதவிகித கவனம் செலுத்தி, அச்செயலைச் செவ்வனே செய்ய இயலாமல் போவது நிதர்சனம். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்று கீதை உபதேசிப்பதும் இதைத்தானே!!. அருமையான வரிகளால் இதை விளக்கியிருக்கிறீர்கள். அது போல், வெறுப்புணர்ச்சி பற்றிச் சொன்ன கருத்துக்களும் மனதில் நங்கூரமிட்டு உட்கார்ந்து கொண்டன. நிலை மாறும் உலகில், அதீத வெறுப்புணர்ச்சியால் அடைவதென்ன?, எதை வெளியிடுகிறோமோ அதுவே வட்டியும் முதலுமாக திரும்பக் கிடைக்கிறது. அன்பும் வெறுப்பும் அவ்வாறே. மனித மனங்களை அன்பு கொண்டு வெற்றி கொள்வதே உண்மையான வெற்றி என்பதை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    தொடர்ந்து தங்கள் வைர வரிகளைப் படிக்கக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

  2. மனித வாழ்வின் நிகழ்வுகள் பல சமயங்களில் விசித்திரம் நிறைந்தவையாக உள்ளன. ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒருகாலத்தில் எல்லாராலும் எண்ணப்பட்டவர்கள் பிற்காலத்தில் சாதனையாளராய் மாறுவதும், மிகப்பெரிய ஆளாய் வருவார் எனும்படியான திறமையோடு விளங்குவோர் பின்னாளில் மிகச் சாதாரணமாக மாறிக் காணாமல் போய்விடுவதும் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை.

    கட்டுரையில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரு வேறு நபர்களின் வாழ்வும், அவர்களின் இன்றைய நிலையும் நம்மை மிகவும் சிந்திக்க வைப்பதோடு மன உறுதியை எந்த நிலையிலும் இழக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துவதாய் அமைந்துள்ளன.

    தேவையற்ற அச்சத்தை விடுத்து, தன்னம்பிக்கையோடும், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலோடும் வாழ்க்கையைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம் என்பதனை இதைவிடத் தெளிவாய் யாரும் சொல்லிவிட முடியாது.
    “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.” என்பது வள்ளுவப் பேராசானின் அமுதமொழி.

    ‘சிறந்த சிந்தனைகளின் பெட்டகமாக’த் திகழ்ந்துவரும் அன்புக்குரிய திருமதி. பவள சங்கரி அவர்களின் கட்டுரைத் தொடர், சுயமுன்னேற்றத்திற்கும், வாழ்வின் வெற்றிக்கும் நல்லதோர் வழிகாட்டியாய் விளங்கிவருகின்றது. அவர்களுக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!!

    …மேகலா

  3. முயற்சி என்னும் மரம் வளர்த்து, நம்பிக்கை என்னும் நீரூற்றி, வெறுப்பு என்னும் களைகளை நீக்கினால், வெற்றி என்னும் கனி பறிக்கலாம் என்பதை எளிமையான முறையில் விளக்கும் அழகான தொடர். ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  4. இன்றைய காலத்தில் அனைவருக்கும் நல்லவனாக வாழ்வது மிகவும் கடினம். புத்தனையே பிடிக்காதவர்கள் எத்தனையோ பேர் இருந்தார்கள்.ஆனால் நாம் முயற்சிக்க வேண்டும் என்று வரும் கட்டுரை நம்மை செம்மை படுத்துகிறது.

    நம் இந்திய ரானுவன் ஒருவன் சொன்னது தன் சக வீரனிடம், “நான் முன்னேறினால் என் பின்னால் வா, நான் சரனைடைந்தால் என்னை சுட்டுவிடு.” ஆயிரம் தியாகங்கள் மற்றும் நம்பிக்கை இவன் வார்த்தையில்.

    நல்லெண்ணமும் நம்பிக்கையும் நெஞ்சில் வை தித்திக்கும் வாழ்க்கை. என்ற கருவோடு வந்த கட்டுரையை தந்த மதிப்பிற்குரிய பவளா அவர்களுக்கு நன்றிகள்.

  5. காணும் பொருளில் தன்னைக் கண்டால்
    தன்னை வெறுப்பார்  எவறுண்டோ
    தன்னை வெறுத்து  தனிமைக் கண்டார்
    தரணியில் சிறக்க  வழியுண்டோ
    தரணியில் சிறக்க  வழியினில் அச்சம்
    வந்தால் வெல்ல துணிவோடு
    முயற்சி  அடக்கம் இருந்தால்  மிச்சம்
    உன்றன் வசமே நடைபோடு
    வெற்றி கனியைப் படிக்கும் வரையில்
    எல்லாம் குழப்பம் என்றவரும்
    வெற்றி கனியைக் அடைந்த பின்னால்
    எல்லாம் உனதே என்றுவரும்
    பவளம்  கடலில் பகிர்ந்த‌  வித்தை
    படிமேல் உன்னை ஏற்றிவிடும்
    தவழும்  தமிழால் பலரைப்போற்ற‌
    காரியம் கையில்கூடி வரும்

  6. விசைப்     பலகை      பழுதின்      வண்ணம்
    விளக்கக்  குறிப்போ  பிழையின் வண்ணம்
    விரல்கள்  தயங்கி     இயங்கும்   வண்ணம்
    படிப்போர்  குழம்பி    திரியும்        வண்ணம்
    வல்லமை எல்லாம் வண்ணம் ஆனால்
    அல்லலாய் பொருளும் மாறி போனால்
    என்செய! வேண்டினேன் ! குமரன் தாயே!
    என்னுமை சங்கரி     திருத்தி காப்பாய்!

    காணும் பொருளில் தன்னைக் கண்டால்
    தன்னை வெறுப்பார்  எவருண்டோ
    தன்னை வெறுத்து  தனிமைக் கண்டார்
    தரணியில் சிறக்க  வழியுண்டோ
    தரணியில் சிறக்க  வழியினில் அச்சம்
    வந்தால் வெல்லத் துணிவோடு
    முயற்சி  அடக்கம் இருந்தால்  மிச்சம்
    உன்றன் வசமே நடைபோடு
    வெற்றி கனியைப் படிக்கும் வரையில்
    எல்லாம் குழப்பம் என்றவரும்
    வெற்றி கனியைக் அடைந்த பின்னால்
    எல்லாம் உனதே என்றுவரும் !!
    பவளம்  கடலில் பகிர்ந்த‌  வித்தை
    படிமேல் உன்னை ஏற்றிவிடும்
    தவழும்  தமிழால் பலரைப்போற்ற‌
    காரியம் கையில்கூடி வரும் !!

  7. தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக அழகாக்ப் பகிர்ந்து, என் எண்ணத்திற்கும், எழுத்திற்கும் வலுவேற்றிய அன்பு நெஞ்சங்கள், திருமிகு பார்வதி இராமச்சந்திரன், திருமிகு மேகலா இராமமூர்த்தி, திருமிகு தனுசு, திருமிகு சச்சிதானந்தன், திருமிகு சத்தியமணி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, நண்பர்களே. மென்மேலும் ஊக்கமளிக்கிறது உங்கள் அன்பான வார்த்தைகள். நனி நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *