Category: பத்திகள்

பத்தி

  • பாரதியின் வேத முகம் – 6

    எத்தனை கோடி இன்பம்

    -சு.கோதண்டராமன்

    வேத ரிஷிகள் உலக வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவையும் ரசித்து ரசித்து அனுபவித்தவர்கள். காணும் ஒவ்வொரு பொருளிலும், கேட்கும் ஒவ்வொரு ஒலியிலும் அவர்களுக்கு இன்பம் பொங்கி வருவது தெரிகிறது. வாழ்க்கையின் இருண்ட பகுதியையே எண்ணி, ஐயோ என் வாழ்க்கை இப்படித் துன்ப மயமாக ஆகிவிட்டதே, உலகில் எல்லாரும் வஞ்சகக்காரர்கள், எல்லாப் பொருளும் துன்பம் நிறைந்தவை என்று அஞ்சி அஞ்சிச் சாகும் மானிடப் பூச்சிகளுக்கும் அவர்களுக்கும் தான் எத்தனை வேறுபாடு. இதோ இந்த வேத மந்திரத்தைப் பாருங்கள்.

    மது வாதா ருதாயதே

    மது க்ஷரந்தி ஸிந்தவ:

    மாத்வீர் நஸ் ஸந்த் வோஷதீ:

    மது நக்தம் உதோஷஸி

    மதுமத் பார்த்திவகும் ரஜ:

    மது த்யௌ ரஸ்து ந: பிதா

    மதுமாந்நோ வனஸ்பதி:

    மதுமாகும் அஸ்து சூர்ய:

    மாத்வீர் காவோ பவந்துந:

     

    பித்ரு தர்ப்பணத்தின் போது முப்பாட்டனார்க்கு எள்ளும் நீரும் அளிக்கும் போது இந்த மந்திரத்தைச் சொல்கிறோம். இதன் பொருள் என்ன?

    இனிய காற்று வீசுகிறது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன. செடி கொடிகள் நமக்கு இனியனவாக இருக்கட்டும். இரவும் விடியற்காலையும் இனியவையாக உள்ளன. பூமியின் புழுதி இனிதாக உள்ளது. நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பம் அளிக்கட்டும். வனத்தின் மரங்கள் இன்பம் நிறைந்தவைகளாக இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் இனிமையான பாலை அளிக்கட்டும்.

    உலகில் துன்பம் இருப்பது உண்மை தான். ஆனால் அதற்காகத் துவண்டு விடக் கூடாது என்பது பாரதியின் கருத்து. “நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கு அளிப்பாள் என்று நம்புக” என்று ஊக்கம் தருகிறார் அவர். “துன்பமே இயற்கை என்னும் சொல்லை மறந்திடுவோம், இன்பமே வேண்டி நிற்போம் யாதும் அவள் தருவாள்” என்று கூறுகிறார். அவருக்குக் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும் நந்தலாலா தென்படுகிறான். கேட்கும் ஒலியில் எல்லாம் அவனது கீதமே காதில் விழுகிறது. தீக்குள் விரலை வைத்தாலும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுகிறது. அவரது இந்த வசன கவிதையைப் பாருங்கள். இந்த வேத மந்திரத்தின் நேர் மொழிபெயர்ப்பு போலவே உள்ளது.

    இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமை யுடைத்து

                    காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது

                    ஞாயிறு நன்று திங்களும் நன்று

                    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன

                    மழை இனிது மின்னல் இனிது இடி இனிது

                    கடல் இனிது மலை இனிது காடு இனிது

                    ஆறுகள் இனியன

     

    இன்பம் என்ற இந்த வசன கவிதை முழுவதையும் படித்துப் பாருங்கள். நமக்கும் பாரதியைப் போல எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா என்று நன்றி சொல்லத் தோன்றும்.

    Share
  • வால்ட் விட்மன் வசனக் கவிதை -17

    என்னைப் பற்றிய பாடல் – 10

    (Song of Myself)

    எதிலும் நீ இருக்கிறாய் ..!

    (1819-1892)

    (புல்லின் இலைகள் -1)

    எதிலும் நீ இருக்கிறாய் ..!

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

     

     

    உள்ளும் புறமும் தெய்வாம்சம்
    எனக்குள்ளது ! நான்
    எதைத் தொட்டாலும், யாரேனும்
    எனைத் தொட்டாலும்
    எனக்குப் புனித மாகும் !
    பிரார்த்தனை மணத்தை விட எனது
    அக்குள்ளின் வாசனை
    மிக்க நேர்த்தி யானது !
    எனது சிரமானது
    ஆலயம், பைபிள் போன்ற
    சமய விதிகளை விடச்
    சாலச் சிறந்தது !
    ஒன்றைவிட நான் மேலாய் வேறொன்றை
    வழிபட்டால் அது என்
    உடலுறுப்பின் வளர்ச்சியால் தான் !

    என் பளிங்கு வார்ப்பில்
    இருப்பது நீ !
    நிழலில், நில வசிப்பில்
    இருப்பது நீ !
    நிமிர்ந்த குதிரை ஓட்டி நீ !
    என் உழுத நிலத்தில்
    எது புகுந்தாலும்
    அது நீதான் !
    என் செழித்த குருதி நீ !
    என் வாழ்வின்
    வெளுத்த பாலோட்டம் நீ ! நான்
    அழுத்தித் தழுவும் மார்பு நீ !
    எந்தன் மூளை
    உந்தன் ஆன்மீகச் சுழற்சி !
    சொட்டுச் சொட்டாய்க் கசியும்
    மேப்பிள் மரச்சார் நீ !
    கோதுமை ஆண்மை நார் நீ !

    தாராளமாய்க் கொடை அளிக்கும்
    சூரியன் நீ !
    என் முகத்துக்கு
    ஒளியும் நிழலும்
    அளிக்கும் ஆவி முகில் நீ !
    வேர்க்கும் சிற்றோடை, பனித்துளி நீ !
    உடல் உறுப்பை எழுப்பும்
    உணர்வுத் தென்றல் நீ !
    தேக்கு மரக் கிளைகள் நீ !
    அகன்ற செழிப்புத் தளங்கள் நீ !
    சுழிவுப் பாதை களில்
    இளைப்பாறும் சுமைதாங்கி நீ !
    நின் கைகளைப் பற்றினேன்,
    நின் முகத்தில் முத்த மிட்டேன்,
    நானென்றும் தொடும்
    மானிடப் பிறவி
    நீ ஒருத்தி தான் !

    +++++++++++++++++++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
      2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
      Cowley [First 1855 Edition] [ 1986]
      3. Britannica Concise Encyclopedia [2003]
      4. Encyclopedia Britannica [1978]
      5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
      6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
      [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************
    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (March 27, 2013)
    http://jayabarathan.wordpress.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (51)

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் வசந்தம் ஆரம்பமாகும் காலமிது என்றாகியும் கூட விண்டர் எனப்படும் மாரிகாலம் இங்கிலாந்தை விட்டு அசைய மனமில்லாமல் தத்தளிக்கிறது. ஆமாம் அதிபயங்கரக் குளிரில் இங்கிலாந்தின் பல பாகங்களையும் பனிமழையால் இயற்கையன்னை அபிஷேகித்துக் கொண்டிருக்கும் வேளையிலே கதகதப்பான சூழலில் தகிக்கும் கதிரோனின் வெப்பத்துள் வதங்கும் உங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன்.

    இங்கிலாந்தின் அரசியல் பயணம் ஒரு விசித்திரமான சந்தியில் வந்து நிற்கிறது. 2013ம் ஆண்டு இங்கிலாந்தின் இளைய சமுதாயத்தினர் அரசியலின் மேல் கொண்டுள்ள பார்வை ஒரு புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.

    நாட்டின் பொருளாதார நிலைமை, அரசியல்வாதிகளின் மீதான நடத்தை அதிருப்தி, நாகரீகம் எனும் பெயரில் சமுதாயமும் அன்றாட வாழ்க்கையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமும் எதிர்கால அரசியல்  பாதையின் மீதான் கண்ணோட்டத்தின் திசையைத் திருப்பியுள்ளது போன்றே தென்படுகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாராளுமன்ற இடைத் தேர்தலில் முன்னணி கட்சிகள் மூன்றும் தாக்கங்களைச் சந்திக்க ஜரோப்பிய முன்னணிக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுக்கும் ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி என்றழைக்கப்படும் UKIP  எனும் கட்சி அதிக முன்னேற்றம் கண்டிருந்தது. இக்கட்சி தற்போது ஆட்சியிலிருக்கும் கூட்டரசாங்கத்தின் முக்கிய பங்காளியான கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து அக்கட்சி ஜரோப்பிய யூனியனை நோக்கிக் கொண்டிருந்த கொள்கைகளின் பால் வெறுப்புற்று அக்கட்சியிலிருந்து நீங்கி அமைக்கப்பட்ட கட்சியாகும்.

    இக்கட்சிக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பான்மையானவை கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றவையாகும். இதனால் கன்சர்வேடிவ் கட்சி பீதியடையத் தொடங்கியிருக்கிறது.

    விளைவு,

    பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இன்றைய பேச்சின் காரணம். அது என்ன “இன்றைய பேச்சு ” என்கிறீர்களா ? அடுத்த வருடம் ஜரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் பல்கேரியா மற்றும் ரோமானிய நாடுகளுக்குத் திறக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் பல்கேரிய மக்களும், ரோமேனிய மக்களும் ஜரோப்பிய நாடுகளுக்குள் எதுவித தடங்களுமின்றி பிரயாணம் செய்யலாம். அது மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவிப் பணத்தைப் பெறும் தகுதியும் இவர்களுக்குக் கிடைக்கிறது.

    இதைப் பற்றிய பெரிய அளவிலான பிரச்சாரத்தை UKIP  கட்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது இது கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகுந்த தலையிடியைக் கொடுத்துள்ளது.

    அடுத்த‌ தேர்த‌லில் எங்கே விலாச‌மேயில்லாத‌ அளவிற்குத் தோல்வியைத் த‌ழுவி விடுவோமோ ? எனும் அச்ச‌ம் ஒருபுற‌மிருக்க‌ , பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து த‌ம‌து கொள்கை இங்கிலாந்தை மீட்சிப்பாதைக்குக் கொண்டு போகும் என்று தெரிவித்த‌ திட‌மான‌ ந‌ம்பிக்கை வலுவிழ‌ந்த‌ வ‌கை ஒருபுற‌ம் கொடுக்கும் தாக்க‌மும் சேர்ந்த‌தினால் மிக‌வும் க‌டுக‌தியாக‌ புதிய‌ கொள்கைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌ வேண்டிய‌ நிலைக்கு க‌ன்ச‌ர்வேடிவ் க‌ட்சி த‌ள்ள‌ப்ப‌ட்ட‌து.

    இந்த‌ப் பின்ன‌ணியின் கார‌ண‌மே ச‌மீப‌த்தில் வெளியான‌ பிர‌த‌ம‌ர் டேவிட் க‌ம‌ர‌னின் குடியேற்ற‌க் கொள்கை ப‌ற்றிய‌ க‌ரிச‌னை மிகுந்த‌ பேச்சு.

    நிலைகுலைந்த‌ பொருளாதார‌த்தினால் த‌லைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்ட‌த்திற்கு இங்கிலாந்துக்குள் வ‌ந்திற‌ங்கும் வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையைக் கார‌ண‌ம் காட்டித் த‌ப்பித்துக் கொள்வ‌து அனைத்துத் த‌ர‌ப்பின‌ருக்கும் ஒரு இல‌குவான‌ செய‌லாகிற‌து.

    அது த‌விர‌ த‌ம‌து விற்ப‌னையின் வீழ்ச்சியைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ ம‌க்க‌ளின் ம‌ன‌தில் நிலைகொண்டுள்ள‌ வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையின் மீதான‌ அச்ச‌ம் மிகுந்த‌ ம‌னோநிலையைச் சாத‌க‌மாக்கி அதைப் பெரிதுப‌டுத்தி செய்தி வெளியிடும் ஊட‌க‌த்துறையின் ப‌ங்க‌ளிப்பும் மிகையான‌தே !

    விளைவாக‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைப் பெறுவ‌த‌ற்கு முக்கிய‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் அனைத்தும் இக்கொள்ள‌கையில் தாம் மிக‌வும் க‌ட்டுப்பாட்டுட‌ன் இருப்ப‌தாக‌க் காட்டிக் கொள்ளும் தேவையை உண‌ர்ந்து இக்குடியேற்ற‌ப் பிர‌ச்ச‌னையைக் கொஞ்ச‌ம் மிகைப்ப‌டுத்த‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ என‌ ந‌டுநிலையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ள் க‌ருத்துத் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

    வெளிநாட்ட‌வ‌ர் அதுவும் குறிப்பாக‌ ஜ‌ரோப்பிய‌ நாட்டின‌ர் இங்கிலாந்தில் ஆறுமாத‌ கால‌த்திற்கும் மேலாக‌ வேலையில்லாதோருக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் அர‌சாங்க‌ உத‌வித் தொகையைப் பெற‌முடியாது எனும் அடிப்ப‌டையில் ஊதிய கொள்கைக‌ளைப் பிர‌த‌ம‌ர் குறிப்பிட‌, லிப‌ர‌ல் டெம‌கிர‌ட்ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் நிக் கிளேக் அவ‌ர்க‌ளோ ஜ‌ய‌ம் மிகுந்த‌ நாடுக‌ளில் இருந்து வ‌ரும் விருந்தின‌ர் விசா பெறுப‌வ‌ர்க‌ள் தாம் திரும்பிச் செல்வ‌தை உறுதிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ ஒரு க‌னிச‌மான‌ தொகையை விசா பெறும்போது க‌ட்டி , தாம் த‌ம‌து விடுமுறை முடிந்து திரும்பும் போது அப்ப‌ண‌த்தை திரும்ப‌ பெற்றுக் கொள்ள‌லாம் எனும் கொள்கையை பிர‌ஸ்தாபிக்கிறார்.

    இத‌னிடையே பிர‌தான‌ எதிர்க் க‌ட்சியான‌ லேப‌ர் க‌ட்சியின் த‌லைவ‌ர் எட் மில்லிபாண்ட் ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெளிநாட்ட‌வ‌ர் குடியேற்ற‌க் கொள்கையைப் ப‌ற்றிய‌ அச்ச‌த்தின் ஆழ‌த்தை த‌ம‌து க‌ட்சியின‌ர் உண‌ர‌த் த‌வறிய‌மைக்காக‌ தாம் ம‌ன்னிப்புக் கோருவ‌தாக‌க் கூறி தாம் அவ‌ர்க‌ளை விட‌ ஒருப‌டி மேலேறி நிற்கிறார்.

    ஆனால் ந‌டுநிலையான‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளின் ப‌டி இந்நாட்டில் குடியேறி வாழும் வெளிநாட்ட‌வ‌ர் ப‌ணிபுரிந்து செலுத்தும் வ‌ரிப்ப‌ண‌ம் இங்கிலாந்தின் பொருளாதார‌த்திற்கு மிக‌வும் பெரிய‌ அள‌விலான‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்கிற‌து என்று குறிப்பிடுகிற‌து.

    உண்மையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ளின் அச்ச‌ம் என்ன‌வென்றால் குறுகிய‌ கால‌ க‌ண்ணோட்ட‌த்தில் தேர்த‌ல் அனுகூல‌த்தை ம‌ட்டும் க‌ருத்தில் வைத்து கிள‌றிவிட‌ப்ப‌டும் இப்பிர‌ச்ச‌னை இன‌த்துவேஷ‌ அதிக‌ரிப்புக்கு வ‌ழி வ‌குத்து விட‌க்கூடாது என்ப‌தே.

    நாட்டுக்காக‌வே ம‌க்க‌ள் , ம‌க்க‌ளுக்காக‌வே அர‌சிய‌ல் இந்த‌க் கோட்பாட்டை ஞாப‌க‌த்தில் கொண்டுள்ளார்க‌ளா இந்நாட்டின் ம‌க்க‌ள் பாதுகாவ‌ல‌ர்க‌ள் என்று த‌ம்மை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ர்க‌ள் ?

    ப‌தில் கால‌த்தின் கையில் …….

    மீண்டும் அடுத்த‌ ம‌ட‌லில்

    அன்புட‌ன்
    ச‌க்தி ச‌க்திதாச‌ன்
    27.03.2013

    Share
  • இஸ்ரேல் பயணம் (12)

    நாகேஸ்வரி அண்ணாமலை

    செய்தி வாசிப்பவர்கள்  செய்திகளின் முடிவில் ‘செய்திகளின் சுருக்கம்’ என்று அதுவரை கொடுத்த செய்திகளின் சாராம்சத்தைக் கூறுவார்கள்.  அது போல் நானும் இங்கு இஸ்ரேல்-பாலஸ்தீன சரித்திரத்தின் (அல்லது போராட்டத்தின்) சுருக்கத்தைக் கூறுகிறேன்..

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில், அதாவது இப்போதைய இஸ்ரேலிலும் தனி நாடாக உருவாகப் போகும் பாலஸ்தீனத்திலும் 3000 ஆண்டுகளுக்கு முன் பல யூத இனங்கள் வாழ்ந்து வந்தன.  இவர்கள் ஆபிரஹாம், அவர் மகன் ஐஸக், அவருடைய மகன் ஜேக்கப் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர்.  பழைய ஏற்பாடு பைபிளில் கூறப்பட்டிருக்கும் புராணக் கதைகள் தவிர இதற்கு சரித்திர பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  ரோமானிய, கிரேக்க சமூகங்கள் பல கடவுள்களையுடைய மதங்களைப் பின்பற்றி வந்தபோது இவர்கள் ஒரே கடவுளைக் கொண்ட மதத்தைப் பின்பற்றி வந்தனர்.  என்றாவது ஒரு நாள் தங்கள் கடவுளின் தூதர் ஒருவர் வந்து தங்களை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர்.  டேவிட், சாலமன் என்ற இரு புகழ்பெற்ற அரசர்கள் இவர்கள் வழியில் வந்தவர்கள்.

    இவர்கள் அடிக்கடி பக்கத்து நாடுகளில் ஆண்டுவந்த அரசர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.  கி.மு.750-இல் அசீரியர்களாலும், கி.மு.612-இல் பாபிலோனியர்களாலும், கி.மு.538-இல் பெர்ஷியர்களாலும், கி.மு.333-இல் கிரேக்கர்களாலும் தங்கள் சுதந்திரத்தை இழந்தனர்.  அதற்குப் பிறகு வந்த ரோமானியர்கள் ஆட்சியில் கி.பி. 66-இல் இவர்கள் ரோமானிய அரசரை எதிர்த்ததால் ஜெருசலேமை விட்டு வெளியேறும் நிர்பந்தத்திற்கு உள்ளாயினர்.  இதற்கிடையில் கி.பி. 0-இல் இவர்களில் ஒருவராக இயேசு கிறிஸ்து பிறந்து அப்போதைய சமூகத்தில் – குறிப்பாக ஜெருசலேமில் உள்ள யூதக் கோயிலில் – நடந்து வந்த அநீதிகளையும் ஊழல்களையும் ஒழிக்கப் பாடுபட்டார்.  யூதர்களில் ஒரு சாரார் இயேசுவைக் கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு அவருடைய கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கினர்.  அவர்கள் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.  ஆனால் சமூகத்தின் மேல் மட்டத்தில் இருந்த யூதர்கள், இயேசுவின் கொள்கைகளால் தங்கள் நலன்களுக்குப் பங்கம் விளையும் என்று பயந்து அவரை ஒழித்துவிடத் தீர்மானித்து ரோமானிய அரசனின் உதவியோடு அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றனர்.  குற்றம் புரியும் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து அப்படியே அவர்களை இறக்கவிடுவதுதான் அப்போதைய பழக்கம்.  இப்படித்தான் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார்கள்.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு தன் சொந்த சமூகத்தாலேயே சமூக விரோதியாகக் கருதப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்.  கிறிஸ்துவின் சீடர்களும் தண்டிக்கப்பட்டனர்.  அப்போதைக்கு அவர்களால் வெளிப்படையாகக் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற முடியவில்லை.

    கி.பி. 66-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த யூதர்கள் பலர் உயிர் இழந்தனர்;  பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்;  பலர் ஜெருசலேமிலிருந்து வெளியேறினர்; வெளியேற்றப்பட்டனர்.  மறுபடியும் இஸ்ரேலில் இருந்த யூதர்கள் கி.பி. 132-இல் ரோமானிய அரசனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர்.  இதிலும் யூதர்கள் பலர் உயிரிழந்தனர்.  அதன் பிறகு யூதர்கள் முழுவதுமாக ஜெருசலேமை விட்டு வெளியேறினர்.  மத்திய தரைக்கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.  கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டின் என்னும் ரோமானிய அரசன் கிறிஸ்துவனான பிறகு ஜெருசலேம் நகரம் மறு வாழ்வு பெற்று கிறிஸ்தவ நகரமாக விளங்கத் தொடங்கியது.  யூதர்கள் ஜெருசலேமில் குடியேற அனுமதிக்கப்படவில்லை யென்றாலும், இடிக்கப்படாமல் மிஞ்சியிருந்த யூதர்களின் இரண்டாவது கோயிலின் வெளிச் சுவரை – இது யூதர்களின் மிகச் சிறந்த புண்ணியதலமாகக் கருதப்பட்டது – சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்தார்.  இந்த மதத்தைப் பின்பற்றிய அரசர்கள் ரோமானியர்களை வென்று பாலஸ்தீனத்தில் ஆட்சி நடத்தத் தொடங்கினர்.  இந்த இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் யூதர்கள் ஜெருசலேமிற்குள் வருவதற்கு இருந்த தடை நீங்கி அவர்கள் ஜெருசலேமில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.  பதினோராம் நூற்றாண்டில் போப்பாக இருந்த போப் அர்பன் (Pope Urban II) கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்குச் சென்று தங்கள் மத சம்பந்தப்பட்ட இடங்களை வழிபட ஏதுவாக அங்கு ஆண்டுகொண்டிருந்த அரசர்களோடு சண்டை புரிந்து ஜெருசலேமைக் கைப்பற்ற சிலுவைப் போராளிகளை அனுப்பினார்.  அவர்கள் முஸ்லீம் அரசர்களை வென்ற பிறகு சுமார் இருநூறு வருடங்கள் கிறிஸ்தவர்களின் கையில் ஜெருசலேம் இருந்தது.  அப்போது யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்;  பல யூதர்கள் கொல்லப்பட்டனர்; பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர்.  அதன் பிறகு இரு நூற்றாண்டுகள் இப்பகுதி எகிப்தை ஆண்ட மாம்லக் அரச பரம்பரை வசம் இருந்தது.  1517-இல் துருக்கியை ஆண்ட ஆட்டோமான் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  முதல் உலகப் போரில் ஆட்டோமான் அரசு வீழ்ச்சி அடையும் வரை பாலஸ்தீனம் அவர்கள் ஆளுகையில் இருந்தது.  அப்போதும் யூதர்கள் அங்கு வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    யூதர்கள் குடியேறிய  இடங்களில் தாங்கள் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் ஆங்காங்கே இருந்த மக்களோடு சேராமல் தனித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.  மேலும் இவர்கள் செய்துவந்த வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலாலும் இவர்கள் மீது மற்றவர்களுக்கு நட்புரிமை ஏற்படவில்லை.   அந்தந்த நாடுகளில் இருந்த கிறிஸ்துவர்கள், தங்கள் கடவுளின் தூதரை – அதாவது இயேசுவை – வஞ்சித்துக் கொன்றவர்கள் யூதர்கள் என்று எண்ணி இவர்களின் மீது மிகுந்த வன்மம் பாராட்டினர்.  ஸ்பெயின் முஸ்லீம் மன்னர்களின் கீழ் இருந்தபோது யூதர்கள் எந்த விதப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை.  ஆனால் சிலுவைப் போராளிகள் ஸ்பெயினில் நுழைந்ததும் யூதர்களைப் பலவாறாகத் துன்புறுத்தினர்.  அவர்கள் குடியேறியிருந்த நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவர்கள் இவர்களிடம் பகைமை பாராட்டியதால், தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அங்கு சுதந்திரமாக எந்த விதப் பிரச்சினையுமின்றி இருக்கலாம் என்ற எண்ணம் பல நாடுகளிலும் இருந்த யூதர்களிடம் உண்டானது.  தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று நினைத்தோடல்லாமல் அந்த நாடு ஒரு காலத்தில் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்துவந்த, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய, பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தனர்.  இந்த எண்ணம் ஒரு இயக்கமாக மாறியது.  இதற்குப் பெயர் ஸயானிஸம் (Zionism). இந்த இயக்கம் தோன்றியதிலிருந்தே பல நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அது மட்டுமல்ல, தாங்கள் கொண்டுவந்த தொழில்நுட்பம், செல்வம் ஆகியவற்றின் பலத்தால் பாலஸ்தீனத்தில் பல நிலங்களை வாங்கிப்போட்டு நவீன முறையில் விவசாயம் செய்தனர்; தொழிற்சாலைகள் ஆரம்பித்தனர்.  பாலஸ்தீனம் வளமடையத் தொடங்கியதால் அங்கு குடியேறிய யூதர்களோடு பாலஸ்தீன அரேபியர்களும் நன்மை அடைந்தாலும், யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தீனத்தில் குடியேறியதும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனதும் அரேபியர்களின் கோபத்தையும் பயத்தையும் அதிகரித்தது.  முதலாம் உலகப் போருக்குப் பிறகு ஆட்டோமான் பேரரசு அழிந்து, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் பிரிட்டனின் மேற்பார்வையில் வந்ததும் யூதர்கள் பிரிட்டனிடம் பாலஸ்தீனத்தில் தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று கேட்கத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றனர்.  இரண்டாவது உலக யுத்தத்தில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஹிட்லர் ஜெர்மனியில் இருந்த அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்ததும் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைய வழிகோலியது.  யூதர்களின் மேல் ஏன் இந்த அளவிற்கு ஹிட்லருக்குக் கோபம் இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  இவர் சிறு வயதினராக இருந்தபோது இவர் தாய்க்கு சிகிச்சை அளித்தவர் ஒரு யூத மருத்துவராம்.  சிகிச்சை பலனின்றி அவர் தாய் இறந்துவிட்டாராம்.  அவருடைய தாயின் இறப்பிற்கு அந்த யூத மருத்துவர் காரணம் என்று நினைத்திருக்கலாம் என்பது ஒரு ஊகம்.  இன்னொரு கோட்பாட்டின்படி அப்போது ஜெர்மனியில் பாதிக்கு மேற்பட்ட வங்கிகள் யூதர்களின் கைகளில் இருந்தனவாம்.  ஜெர்மனியில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதற்கு யூதர்கள்தான் காரணம் என்று ஹிட்லர் நினைத்ததாகச் சொல்கிறார்கள்.  எந்த ஆராய்ச்சியிலும் உண்மையான காரணம் எது என்று வெளிவரவில்லை.  ஜெர்மனியிலும் யூதர்களுக்கு எதிராக இருந்தவர்கள் கிறிஸ்தவர்கள்தான்.  அப்போதிருந்த கிறிஸ்தவ போப்பும் ஹிட்லர் செய்த அட்டூழியங்களைக் கண்டிக்கவில்லை.

    யூதர்கள் வெளியிலிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறக் குடியேற யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிறையப் பூசல்கள் ஏற்பட ஆரம்பித்தன.  இந்தப் பூசல்களைக் கையாளுவதில் உள்ள சிரமத்தை எண்ணியும், இனி பாலஸ்தீனம் தன் மேற்பார்வையில் இருப்பதால் தனக்கு நன்மை எதுவும் இல்லை என்பதையும் உணர்ந்த பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டுத் தான் வெளியேறுவதாக ஐ.நா.விடம் தெரிவித்தது.  ஐ.நா. பல முறை தன் பிரதிநிதிகளை அனுப்பி அங்குள்ள நிலையை அறிந்துவரச் செய்தது.  1947-இல் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை யூதர்களுக்கும் இன்னொரு பகுதியை அரேபியர்களுக்கும் (இவர்களில் அரேபிய கிறிஸ்தவர்களும் உண்டு) கொடுப்பது என்று ஐ.நா. முடிவுசெய்தது.

    பாலஸ்தீனம் முழுவதும் தங்களுக்கு மட்டுமே உரியது என்று நினைத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் இந்தப் பாகப்பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்துப் போராடுவது என்று முடிவுசெய்தனர்.  அதனால் இன்று வரை பாலஸ்தீனம் என்ற நாடு உருவாகாமலேயே இருக்கிறது.  ஆனால் யூதர்களோ தாங்கள் கேட்டதற்கு மேலேயே அதிக அளவுள்ள நாடு கிடைத்துவிட்டதால் உடனேயே தங்கள் நாடான இஸ்ரேலைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டனர்.  இதற்கு மறு நாளே பாலஸ்தீனத்தைச் சுற்றியிருந்த ஜோர்டன், சிரியா, லெபனான், எகிப்து ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்ததில் அரபு நாடுகள் தோற்றுப் போயின.  மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட இடங்களில் சிலவற்றையும் பிடித்துக்கொண்டது.  இப்படி அரேபிய இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டதோடு அந்த இடங்களில் யூதர்களைக் குடியேற்றவும் செய்தது.  இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே இருக்கும் அரேபியர்களையும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துகிறது.  பாலஸ்தீனத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த அரேபியர்களை அங்கு தொடர்ந்து இருக்கவிடுவதே தன்னுடைய தாராள மனப்பான்மையினால்தான் என்பது போல் இஸ்ரேல் நடந்துகொள்ள ஆரம்பித்தது.  பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்குத் தனி நாடு உருவாக்கிக் கொடுப்பதாக பிரிட்டன் ஒப்புக்கொண்டபோது அங்கு ஏற்கனவே வசித்துவரும் அரேபியர்களுக்கு எந்த விதக் கஷ்டமும் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையைப் போட்டிருந்தது.  அதையெல்லாம் இஸ்ரேல் நினைப்பதாகத் தெரியவில்லை.

    இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து  பூசல்கள் ஏற்பட்டன.  1967-இல் நடந்த யுத்தத்தில் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் இஸ்ரேல் பெரும்பகுதியைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேல் அங்கும் யூதர்களைக் குடியேற்றுவதைத் தொடர்ந்தது.  இப்படிக் குடியேற்றப்பட்டவர்கள் அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நிறையத் தொந்தரவுகள் கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.  இவர்கள் ஒரு முறை பெடுயின் இனத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் இனத்தவரின் ஆடுகளுக்கு விஷம் வைத்து அவற்றைக் கொன்றனர்.  இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களில் குடியேற்றப்பட்ட யூதர்களும் (இப்படிக் குடியேற்றப்பட்ட யூதர்களில் பலர் 1960-க்குப் பிறகு அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலிருந்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்) அங்கேயே காலம் காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனியர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினர்.

    1964-இல் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.  1969-இல் யாசர் அராபத் அதன் தலைவரானார்.  பாலஸ்தீனம் முழுவதையும் ஒரே நாடாக உருவாக்கியே தீருவது என்பது இந்த இயக்கத்தின் குறிக்கோள்.  ஆக்கிரமித்துக்கொண்ட பகுதிகளில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர் தட்டிக் கேட்டபோது அவரைத் தீவிரவாதி என்று இஸ்ரேல் கூற ஆரம்பித்தது.  1992-இல் பிரதமர் பதவியேற்ற யிட்சக் ராபின் பாலஸ்தீனர்களோடு சமரசம் பேச முன்வந்தார்.  அதுவரை இஸ்ரேல் நாடு இருப்பதையே ஒப்புக்கொள்ளாத பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த யாசர் அராபத், யிட்சக் ராபினின் சமரச ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.  இவர்களுக்கிடையே 1993-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் யூதர்களுக்கென்று இஸ்ரேல் என்ற தனி நாடு இருப்பதை பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒப்புக்கொள்வதென்றும் 1947-இல் ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் ஐந்து வருடங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.  அது வரை இந்த இடங்கள் பாலஸ்தீன அத்தாரிட்டி என்னும் அமைப்பின் கீழ் செயல்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் என்று பெயர்.  1995-இல் ராபின், இதை எதிர்த்த ஒரு யூத வெறியனால் கொலைசெய்யப்பட்ட பிறகு அதற்குப் பின் பதவிக்கு வந்த நேத்தன்யாஹூ (சென்ற ஜனவரியில் நடந்த தேர்தலில் இவருடைய கட்சி 120 இடங்கள் உள்ள இஸ்ரேலிய பார்லிமெண்டில் 31 இடங்களைப் பிடித்தது; மற்ற சில கட்சிகளோடு சேர்ந்து இப்போது இவர் மந்திரிசபை அமைத்திருக்கிறார்.  இவர்தான் பிரதம மந்திரி.) ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.

    இஸ்ரேல் அரசோடு சமாதானமாகப்  பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை என்று நினைத்த  பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச்  சேர்ந்த சிலர் யாசர்  அராபத்தின் ஃபாட்டா (Fatah) கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சிகள் ஆரம்பித்தனர்.  ஹமாஸ் (Hamas) என்னும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 1967-இல் இஸ்ரேல் எகிப்திடமிருந்து பிடித்திருந்த காஸா பகுதியை இஸ்ரேல் 2005-இல் திருப்பிக் கொடுத்த பிறகு அங்கு ஆட்சி செய்யத் தொடங்கினர்.  லெபனானில் இஸ்ரேல் பிடித்திருந்த இடத்தை ஹெஸ்புல்லா (Hezbollah) என்ற கட்சி பிடித்து அங்கு ஆட்சி நடத்தத் தொடங்கியது.  இவை இரண்டும் தீவிரவாதக் கட்சிகள்.  அடிக்கடி இக்கட்சிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் பூசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

    இஸ்ரேலின் கொள்கைகளால்  அதிருப்தி அடைந்த பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேலுக்குள் சென்று யூதர்களைக் கொன்றனர்.  யாசர் அராபத் பாலஸ்தீன இளைஞர்களை இந்த வன்முறையிலிருந்து தடுக்கவில்லை என்று கூறி 2002-இல் அப்போது பிரதமராகயிருந்த எரியல் ஷேரன் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேல் பகுதிக்குள் வருவதைத் தடுக்கப் பெரிய தடுப்புச் சுவரை எழுப்ப ஆரம்பித்தார்.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் (1947-இல் பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா. கொடுத்த இடத்தில் இதுவும் சேர்த்தி) இஸ்ரேல் ஆக்கிரமித்த இடங்களையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டது.  (சுவர் இன்னும் முற்றுப் பெறாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.)  இந்தச் சுவர் எழுப்பியதின் மூலம் பாலஸ்தீனியர்கள் மிகுந்த துன்பத்துக்குள்ளாகின்றனர்.  பலருடைய விளைநிலங்கள் சுவருக்கு இந்தப் பக்கம் இருப்பதால் அவர்கள் சுவரைச் சுற்றிக்கொண்டு இஸ்ரேலின் சோதனைச் சாவடிகள் வழியாகத்தான் தங்கள் விளைநிலங்களுக்கோ அல்லது வேலைபார்ப்பதற்கோ வர வேண்டியதிருக்கிறது.  மேலும் இப்படி வருவதற்கு இஸ்ரேல் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் அடையாள அட்டையை சோதனைச் சாவடியில் காட்ட வேண்டும்.  ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்திருக்கும் தங்கள் சொந்த இடத்திலேயே பாலஸ்தீன அரேபியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.

    2004-இல் யாசர் அராபத் பாரீஸில் உடல்நலத்திற்காக சிகிச்சை பெற்று வரும்போது இறந்துவிட்டார்.  இப்போது அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்று அவர் மனைவி சந்தேகப்பட்டதால் ராமல்லா என்ற ஊரில் (இதுதான் பாலஸ்தீன அத்தாரிட்டியின் தலைமையகம்) இருந்த அவருடைய கல்லறையைத் தோண்டி அவர் உடலை மீட்டுப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.

    இவருக்குப் பிறகு  ஃபாட்டாவின் பொறுப்பை அகம்மது  அப்பாஸ் என்பவர் ஏற்றார்.  இவரும் சமாதான விரும்பி.  எப்படியாவது பாலஸ்தீன நாட்டை உருவாக்கிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

    ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு வெஸ்ட் பேங்கில் கொடுக்கப்பட்ட இடங்களில் நிறைய இடங்களைப் பிடித்துக்கொண்டு சில இடங்களை மட்டும் பாலஸ்தீன அத்தாரிட்டி நிர்வகிக்கும்படி விட்டிருக்கிறது.  (ஆஸ்லோ ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலஸ்தீன அத்தாரிட்டி உருவாக்கப்பட்டு பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களை நிர்வகித்து வருகிறது.)  சில இடங்கள் இருவரின் கீழேயும் இருக்கின்றன.  சில இடங்கள் இஸ்ரேலின் கீழ் இருக்கின்றன.  வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய நூறு மில்லியன் டாலர் சுங்கவரிப் பணத்தை பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.  சில நாட்களுக்கு முன்தான் அந்த வரிப் பணம் பாலஸ்தீன அத்தாரிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இஸ்ரேலுக்கு அமெரிக்காவில் வாழ்ந்துவரும் யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் நிறையப் பணம் வந்துகொண்டிருக்கிறது.  ஆனால் பாலஸ்தீனர்களுக்கு அப்படியில்லை.  1945-இல் அரபு நாடுகள் பல ஒன்று சேர்ந்து (முதலில் இதில் ஜோர்டன், சவூதி அரேபியா, சிரியா, லெபனான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகள் இருந்தன.  பின்னால் பல நாடுகள் சேர்ந்துகொண்டன.  இப்போது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 21) அராப் லீக் (Arab league) என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்டன.  இந்த அமைப்பிலிருந்து பாலஸ்தீனத்திற்கு பணம் வந்துகொண்டிருந்தது.  இப்போது அது வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள்.  இதனால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் கீழ் இருக்கும் இடங்களில் வறுமை இருக்கிறது.

    அமெரிக்காவிலுள்ள பல பணபலமுள்ள யூதர்களின் வற்புறுத்தலாலும் செல்வாக்காலும் அமெரிக்கா இஸ்ரேலின் முழு நண்பனாகவும் ஆதரவாளனாகவும் விளங்குகிறது.  அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேலுக்கு தினமும் பத்து லட்சம் டாலர் உதவிப்பணம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  2011-இல் ஐ.நா.வின் யுனெஸ்கோ ஸ்தாபனத்தில் பாலஸ்தீன் ஒரு அங்கத்தினர் ஆனது.  இதை இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் எதிர்த்தது.  அதோடு மட்டுமல்ல அமெரிக்கா யுனெஸ்கோவுக்குக் கொடுக்கும் தன் பங்கிற்கான பணத்தையும் கொடுக்க மறுத்தது.  (ஐ.நா.வின் பல ஸ்தாபனங்களுக்கு உலகிலேயே பணக்கார நாடு என்பதால் அமெரிக்காதான் நிறையப் பணம் வழங்கி வருகிறது.  அதனால் அவற்றில் அதிகாரமும் செலுத்திவருகிறது.)

    மேலும் தனி நாடாகி ஐ.நா.வில் நிரந்தர இடத்தைப் பிடிப்பதற்கு முன் இப்போதே ஜெனரல் அசெம்பிளியில் 2012 நவம்பர் மாதம் non-member observer entity என்ற அந்தஸ்தை பாலஸ்தீனத்திற்கு முகம்மது அப்பாஸ் பெற்றிருக்கிறார்.  இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை.  கோபத்தில் அமெரிக்கா பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுத்துவந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டது.  அதனால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே பாலஸ்தீன அத்தாரிட்டி திணறுகிறது.  பாலஸ்தீனத்திற்கு இந்த அந்தஸ்தைக் கொடுப்பதற்குரிய ஓட்டெடுப்பில் ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட 138 நாடுகள் அந்தஸ்து கொடுக்கலாம் என்று ஓட்டளித்தன.  அமெரிக்கா இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் கூடாது என்று ஓட்டளித்தன.  ஜெர்மனி, பிரிட்டன் உட்பட 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்றுக்கொள்ளவில்லை.

    இப்படி ஐ.நா.வின் ஜெனரல் அசெம்பிளியில் பாலஸ்தீன அத்தாரிட்டிக்கு, ‘ஓட்டெடுப்பில் பங்கெற்றுக்கொள்ள முடியாத அங்கத்தினர்’ பதவி (non-member observer status) கிடைத்திருப்பதால் இஸ்ரேலுக்குச் சில பின்விளைவுகள் ஏற்படலாம்.  பாலஸ்தீன அத்தாரிட்டி அகில உலக கிரிமினல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது ஐ.நா.வால் பாலஸ்தீனத்திற்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் குடியிருப்புகளை அமைப்பதை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பது அவற்றில் ஒன்று

    இப்படிப்பட்ட பின்விளைவுகளுக்குப் பயந்து அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதி ‘நாளை எழுந்ததும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கையில் எந்த வித முன்னேற்றமும் இருக்கப் போவதில்லை.  அமைத்திக்கான பேச்சு வார்த்தைகளில்தான் இன்னும் தாமதம் ஏற்படப் போகிறது’ என்று ஏளனமாகக் கூறியிருக்கிறார்.  அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளும் கூட்டாக பாலஸ்தீனத்தின் புதிய அந்தஸ்தை எதிர்க்கின்றன.  பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு எதிராக அகில உலக கிரிமினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் பாலஸ்தீன அத்தாரிட்டிக்குக் கொடுக்கும் நிதியை நிறுத்திவிடுவதாகவும் இஸ்ரேலுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாவிட்டால் பாலஸ்தீன அத்தாரிட்டியின் வாஷிங்டன் அலுவலகத்தை மூடிவிடப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. 

    2013 மார்ச் மாதம் அமெரிக்கா கௌரவிக்கவிருந்த பெண்கள் பட்டியலிலிருந்து எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரின் பெயரை நீக்கியிருக்கிறது.  அவருடைய ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் பல்கேரியாவில் இஸ்ரேலிய யூதர்கள் பயணித்த ஒரு பேருந்து தாக்கப்பட்டதைப் புகழ்ந்து எழுதியிருந்தாராம்; மேலும் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராகக் கூறிய ஒரு மேற்கோளும் எடுத்தாளப்பட்டிருக்கிறதாம்.  ஆனால் அந்தப் பெண் தான் அப்படி எழுதவில்லை என்றும் தன்னுடைய கடவுச் சொல்லை (password) யாரோ திருடி தன் கணக்கில் யாரோ அப்படி எழுதியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார்.  இது பற்றி தீர விசாரித்த பிறகே முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை அறிவித்திருக்கிறது. அமெரிக்காதான் இப்போதைய இஸ்ரேலின் முழு நண்பன்.  இஸ்ரேலைத் தாக்கும் யாரும் அமெரிக்காவில் ஜனாதிபதியாக வர முடியாது.

    சென்ற ஜனவரி 22-ஆம்  தேதி இஸ்ரேலில் பார்லிமெண்ட் தேர்தல் நடந்தது.  எட்டு  மில்லியன் ஜனத்தொகை கொண்ட  இஸ்ரேலில் 20 சதவிகிதம்பேர்  (1.5 மில்லியன்) அரேபியர்கள். இவர்களில் பலர் தேர்தலில் வாக்களிப்பதில்லை.  இதற்குப் பல காரணங்கள் உள்ளன.  2008-இல் நடந்த தேர்தலில் 53% வாக்களித்தனர்.  இந்தத் தேர்தலில் இன்னும் இது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.  ஆனால் 56% வாக்களித்திருக்கிறார்கள்.  ‘யூதர்கள் (64%) அளவு அரேபியர்கள் ஓட்டளித்தால் இருபதுக்கும் மேலான இடங்களைப் பெறலாம்.  இப்போது வாக்களிப்பவர்களில் இன்னும் 50% அதிகரித்தால் நேத்தன் யாஹூ அரசில் (government) இருக்க முடியாது’ என்று முன்னாள் பார்லிமெண்ட் உறுப்பினரும் மந்திரியுமான கேலப் மஜாட்லே (Ghaleb Majadleh) கூறியிருக்கிறார்.  நிறைய அரேபியர்கள் ஓட்டளித்தால் நாடு (இஸ்ரேல்) ஜனநாயகத்தையும், எல்லோருக்கும் சமஉரிமை கொடுப்பதையும் மதிக்கிறது என்பது புலனாகும் என்கிறார்கள் இஸ்ரேல் தலைவர்கள்.    அரேபிய அரசியல்வாதிகள் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சமமான வேலைவாய்ப்புகள், கல்வி வசதிகள், முனிசிபல் வசதிகள் இல்லை என்கிறார்கள்.  அரேபிய கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமை இல்லை என்கிறார்கள்.  சில அரேபியர்களுக்கு தேர்தலில் அக்கறையில்லை.  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற மனப்போக்கு.  இரண்டாவது வகையினருக்கு தேர்தலில் நம்பிக்கை இல்லை.  வாக்களிப்பதால் தங்கள் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை, ஏனெனில் இஸ்ரேல் தங்களுடைய நாடு இல்லை என்று நினைக்கிறார்கள்.  ஒரு குடியரசு என்று இஸ்ரேல் தன்னைக் கூறிக்கொண்டாலும் அரேபியர்களை சரியாக நடத்துவதில்லையாதலால் வாக்களித்துப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள்.  என்னதான் தாங்கள் சரியாக நடத்தப்படாவிட்டாலும் – வேலைவாய்ப்பு, கல்வி வசதி, முனிசிபல் வசதிகள் இல்லையென்றாலும் – யூதர்களைப் போல் தங்களுக்கும் ஓட்டுரிமை இருப்பதால் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.  மூன்று அரேபியர்கள் கட்சி – ஒன்று மத அடிப்படையில், இன்னொன்று கம்யூனிஸ்ட், இன்னொன்று தேசியக்கட்சி – இருக்கின்றன.  புதிதாக இன்னொன்று இந்தத் தேர்தலில் சேர்ந்திருக்கிறது.  இஸ்ரேலின் பாகுபாட்டுக் கொள்கைகளைத் தட்டிக்கேட்க யாராவது வேண்டுமல்லவா;  அதனால் நான் வாக்களிக்கப்போகிறேன் என்கிறார் இன்னொரு அரேபியர்.

    2013 மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் விஜயம் செய்தார்.  அரசியல் தலைவர்களோடு பேசுவதை விட இளம் தலைமுறையினரோடு பேசி அவர்கள் மனதை மாற்ற முயற்சி மேற்கொண்டார்.  இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பேசுவதற்குப் பதிலாக ஜெருசலேமில் உள்ள மாநாட்டு அரங்கம் ஒன்றில் 2000 பேர் அடங்கிய கூட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அறைகூவல் விடுத்தார்.  ‘பாலஸ்தீனர்களின் இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள்.  அவர்கள் கண்கள் மூலம் உலகைப் பாருங்கள்.  பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உங்களைப் போல் சொந்த நாட்டில் சுதந்திரமாக வளரும் உரிமை இருக்கிறதல்லவா?’ என்று பேசினார்.  ஆனால் இஸ்ரேல் அமைத்துவரும் குடியிருப்புகளைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.  முகம்மது அப்பாஸை ராமல்லாவில் சந்தித்தபோது மறுபடி சமாதான உடன்பாட்டிற்குரிய பேச்சுவார்த்தைகளில் எந்த வித நிபந்தனையுமின்றி கலந்துகொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    அமெரிக்க ஜனாதிபதி இப்படிப் பேசி இஸ்ரேல் தலைவர்களை  நியாயமாக நடந்துகொள்ள வைக்க  முடியுமா என்று தெரியவில்லை.  பாலஸ்தீனியர்களின் இடங்களில்  இஸ்ரேலியர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும்  குடியிருப்புகளில் வசித்துவரும் இஸ்ரேலியர்களை எப்படி அங்கிருந்து  வெளியேற்றுவது?  இதற்கெல்லாம் தீர்வு ஏற்பட்டாலும் தீர்வு காண முடியாத இன்னொரு பிரச்சினை இருக்கிறது.  இஸ்ரேல் அரசு நிர்மாணித்து வரும் பெரிய மதில் சுவரால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் இப்போது தொடர்ச்சியாக இல்லை.  இப்படித் தொடர்ச்சியாக இல்லாத இடங்களை வைத்துக்கொண்டு அவர்கள் எப்படி பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது?

    இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக இல்லாமல் பாலஸ்தீனம் முழுவதும் ஒரே நாடாக உருவானாலும் யூதர்கள் அதை விரும்பவில்லை.  அவர்களுடைய நாடு ஒரு யூத நாடாகத்தான் இருக்க வேண்டுமாம்.  மேலும் அப்படி ஒரே நாடு உருவாகும் பட்சத்தில் பாலஸ்தீனர்கள் மெஜாரிட்டி ஆகிவிடுவார்கள்.  தங்களுக்கே தங்களுக்கென்று ஒரு யூத நாடு வேண்டும் என்று கேட்பவர்கள் இதை எப்படி ஏற்பார்கள்?  இத்தகைய காரணங்களினால் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

    கடையாக ஒன்றைக் குறிப்பிட  வேண்டும்.  மேலே குறிப்பிட்டுள்ள சரித்திர நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் கிறிஸ்துவர்கள்தான் யூதர்களைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதும் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை ஏற்பட்டிருக்கிறது என்பதும் நன்றாகப் புலனாகும்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் பற்றி இப்போது பேசுபவர்கள் இந்த உண்மையை மறந்துவிடுகிறார்கள்.  அது மட்டுமல்ல, முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் போலவும் அவர்களால்தான் யூதர்களுக்குத் தீங்கு விளைவது போலவும் கூறுகிறார்கள்.

    முற்றும்

    கீழே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக்கொண்ட வரைபடத்தைப் பார்க்கலாம்.

    palestine-FourMaps

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டிகளின் உணவுமுறையும் (3)

    செல்வன்

    கொலஸ்டிரால் என்பது என்ன?

    1) மிக ஆபத்தான நச்சுபொருள்

    2) உடலுக்கு மிக அத்தியாவசியமான மூலப்பொருள்.

    இரண்டில் எது சரி? இரண்டாவதுதான்.

    கொலஸ்டிரால் தான் உங்கள் உடல் வைடடமின் டியை உற்பத்தி செய்ய உதவும் மூலப்பொருள். அது மட்டும் அல்ல ஒருவருக்கு ஆண்மையை அளிக்கும் டெஸ்டிஸ்ட்ரோன், பெண்மையை அளிக்கும் ஈஸ்ட்ரோஜென் ஆகிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தேவைப்படுவது கொலஸ்டிரால். அது மட்டும் அல்ல உங்கள் மூளையே ஒரு மிகப்பெரும் கொழுப்பால் ஆன கொலஸ்டிரால் உருண்டைதான். கொலஸ்ட்ரால் இல்லையெனில் மனித இனமே இல்லை.

    கொலஸ்ட்ரால் இத்தனை முக்கிய மூலப்பொருள் என்பதால் உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் சக்தி படைத்து உள்ளது. நீங்கள் துளி கொலஸ்ட்ரால் இல்லாத அரிசி, பருப்பை மட்டுமே ஆயுள் முழுக்க உண்டுவந்தாலும் உங்கள் உடல் அந்த உணவை கொலஸ்டிராலாக மாற்றும் சக்தி படைத்தது. தனக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உங்கள் உடல் உற்பத்தி செய்தேதான் தீரும். அது நீங்கள் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக கிடைத்தால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலின் அளவை உங்கள் உடல் அதற்கு ஏற்ப குறைத்துக் கொள்ளும். உங்கள் உணவில் கொலஸ்டிரால் இல்லையெனில் உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தை கொலஸ்டிராலாக மாற்றும்.
    ஆக “கொலஸ்டிரால் ப்ரீ, ஃபேட் ப்ரி” என விளம்பரம் செய்யப்பட்டு விற்கபடும் உணவுகளால் எந்த நன்மையும் இல்லை.

    பன்றி புல்லைத்தான் உண்கிறது. அப்புறம் எப்படி அதன் உடலில் இத்தனை கொழுப்பு சேர்கிறது?

    கொலஸ்ட்ரால் அதிகரித்தால் ஆபத்து எனப் படிக்கிறோம். கொலஸ்ட்ரால் குறைவால் என்ன ஆகும் என படிக்கிறோமா?

    உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே போனால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். உங்கள் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படலாம். மாரடைப்பு வரலாம். ஆம் உண்மைதான். கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என பொருள் இல்லை. சொல்லப்போனால் மாரடைப்பு வந்தவர்களில் 75% பேர் பாதுகாப்பான எல்டிஎல் அளவு என சொல்லபடும் 130க்கு கீழே கொலஸ்ட்ரால் அளவு கொன்டவர்கள் தான்.

    இன்னொரு தடவை சொல்கிறேன்.

    உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வராது என பொருள் இல்லை.

    அல்லது

    உங்கள் கொலஸ்ட்ரால் எண் அதிகமாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும் எனவும் பொருள் இல்லை.

    In other words

    நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புக்கும் உங்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதற்கும ஸ்னானப்ராப்தி கிடையாது.

    ரிபீட்

    ஸ்னானபிராப்தி கிடையாது.

    மாரடைப்பு நோயாளிகளில் பாதிப் பேர் நல்ல ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் எண்களை கொன்டவர்கள் (மொத்த கொலஸ்ட்ரால் < 200. எல்டிஎல் < 130)

    உங்கள் மொத்த கொலஸ்ட்ரால் 330 தாண்டினால் தான் அது உங்களுக்கு மாரடைப்பு வருமா, வராதா என்பதைக் கணிக்கும் சக்தியை பெறுகிறது. ஆனால் உங்கள் கொலஸ்ட்ரால் எண் 160க்கு கீழே விழுந்தால் அது உங்கள் டிப்ரஷன், மன அழுத்தம் முதலிய பலவற்றுக்கு உடனடி காரணம் ஆகிறது.

    அப்புறம் ஏன் கொலஸ்ட்ரால் இப்படி வில்லன் அந்தஸ்தை பெறுகிறது?

    தவறான சில ஆய்வுகள், அரசியல் கமிட்டிகள், வணிக நிர்ப்பந்தங்கள்!!!!

    ஒரு உதாரணம் சொல்லவேண்டுமெனில் பி.எம்.ஐ எனும் எண்ணை அறிந்திருப்பீர்கள். உங்கள் பி.எம்.ஐ 25 தாண்டி இருந்தால் நீங்கள் ஓவர்வெயிட் எனும் வகையை அடைகிறீர்கள். பி.எம்.ஐ 25க்கு கீழ் இருந்தால் நீங்கள் நார்மல்.

    பி.எம்.ஐ சார்ட்படி அதிபர் ஜார்ஜ் புஷ் ஓவர் வெயிட். ஆனால் அவருக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை. அவரைப் பார்த்தால் குண்டர் மாதிரியா தெரிகிறது?

    90களில் ஓவர் வெயிட்டுக்கான பி.எம்.ஐ 28 ஆக இருந்தது.

    திடீரென ஒரே நாளில் அமெரிக்க அரசு அதை 25 ஆக குறைத்தது.

    ஆக ஓவர் நைட்டில் சுமார் 4 கோடி அமெரிக்கர்கள் குண்டர்கள் ஆனார்கள்.

    25 தான் நார்மல் பி.எம்.ஐ என முடிவு செய்தது யார்? ஒரு ஐ.நா சபை கமிட்டி. அதன் தலைவர் அந்த கமிட்டியின் தலைவர் ஒரு எடை குறைப்பு மருந்தை தயாரிக்கும் கம்பனியில் பணி ஆற்றியவர். கான்ஸ்பைரசி தியரி எழுதுவதானால் எப்படியும் எழுதலாம். ஆனால் என் நோக்கம் அது அல்ல. ஆனால் ஒன்றை தெளிவாகச் சொல்லமுடியும்.

    நீங்கள் ஒரு எடையை குறைக்கும் மருந்தை தயாரிக்கும் கம்பனி போர்டு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என வைத்துகொள்வோம். பி.எம்.ஐ நார்மல் என்பதன் அளவீடு 28ல் இருந்து 25 ஆக குறைகிறது. உடனே ஒரே வினாடியில் உங்கள் மருந்துகளுக்கு மேலும் பல கோடி வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். போர்டு மீட்டிங்கில் எப்படி கைதட்டல் எழும் என்பதை யூகிக்க முடிகிறதா?

    அரசாங்கம் வேண்டும் என்றே சதியில் ஈடுபடுகிறது என கூறுவதில் பொருள் இல்லை. அரசின் நோக்கம் 25 பி.எம்.ஐ என்பது 28 பி.எம்.ஐ என்பதை விட மக்களுக்கு பாதுகாப்பு எனும் நோக்கிலேயே இருக்கும். ஆனால் நன்றாக இருப்பவர்களை நோயாளி ஆக்கிதான் இதை செய்யவேன்டுமா? வேறு வழி இல்லையா?

    சிந்திப்போம்.

    (தொடரும்..)

    Reference:

    http://newsroom.ucla.edu/portal/ucla/majority-of-hospitalized-heart-75668.aspx

    —
    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- (3)

    சாகர் பொன்னியின்செல்வன் 

    3. காலத்தை வென்ற பிரமிட்கள்

    காலை எழுந்து அறையில் இருந்த மிணரல்(mineral) தண்ணீரில் பல் துலக்கும் படி பசங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லி, குளித்து முடித்து கிழே வருவதற்கு எட்டு மணியானது. காலை வெளிச்சத்தில் ஹோட்டல் இன்னும் விசாலமாக தெரிந்தது. நான்கு வகை உணவு விடுதிகள், பெரிய நீச்சல் குளம், சூடுப்படுத்தபட்ட உள்நீச்சல் குளம்,உடல்பயிற்சி கூடம் என்று எல்லா வசதிகளும் இருந்தன.

    காலை உணவு சாப்பிடப் போனால் அங்கே உணவுக்கூடம் முழுவதும் இந்திய முகங்கள். கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்றறிந்ததும் ஒரே வியப்பு. மேல்நாட்டு பதப்படுதப்பட்ட மாமிசம், புலவு சாதம், பலவகை வெண்ணை, பன்னீர் மற்றும் பதப்படுத்தபட்ட பாலாடைக்கட்டிகள் இருந்தன.  பலவகை பழம் மற்றும் காய்கறி கலவைகளும், ரொட்டிகளும் இருந்தன. என்ன சைவவகை உணவுகள் மிக கம்மியாக இருந்தன. ஏற்கனவே எகிப்தில் வரும் உடல் உபாதைகள் பற்றி தெரிந்ததாலும் தடுப்பு ஊசிகள் போடாததாலும் முடிந்த வரையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்.

    எங்களோடு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளும் மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிக்காக காத்திருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு அப்துல் ஹோட்டல் வரவேற்பிற்கு வந்தார்.அவர் கூட எங்கள் வழிகாட்டி மஹ்மூத் வந்தார். வெளியே வந்ததும் எங்களுக்காக ஒரு ஹயுண்டாய் (Hyundai)வேன் காத்திருந்தது,அதேபோல் மற்ற பயணிகளுக்கு இன்னுமொரு தனி வேண் நின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனியே ஒரு வண்டி மற்றும் வழிகாட்டி! அப்பொழுதுதான் மெம்பிஸ் டூர்ஸ் ஒரு பெரிய கிளைகள் உள்ள ஒரு நிறுவனம் என்று புரிந்தது. பயணிகளை ஏற்பாடு செய்வது தலைமை அலுவலகம், அங்கிருந்து  அவர்களின் பிரதிநிதிக்கு பயணிகளின் தகவல் விவரம் அளிக்கப்படுகிறது, அந்த பிரதிநிதி எண்ணிக்கைக்கும் போகவேண்டிய இடங்களை பொருத்தும் வழிகாட்டி மற்றும் ஒட்டுனர்களை ஏற்பாடு செய்தார்.

    மஹ்மூத் முதலில் நாம் உலகபுகழ் பெற்ற பிரமிடுகளை பார்க்கப் போகிறோம் என்றார். போகும் வழியில் அவரிடம் சமீபத்தில் நடந்த புரட்சி பற்றி பேச்சுக்கொடுத்தபோது, மிகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தார். தானும் தனது பத்து வயது மகனுடன் தினமும் போய் போராட்டத்தில் கலந்து கொண்டதையும் எப்படி கடைசியாக மக்களாட்சி வந்தது என்பதையும் மதியம் சொல்லுவதாக கூறினார். ஏனெனில் எங்கள் வண்டி பத்து நிமிடத்திலேயே பிரமிடுகள் வந்தடைந்துவிட்டது.

    வண்டியை விட்டு இறங்கியதும் எங்களை பிரமிக்க வைத்தது பிரமிட்! எவ்வளவு பெரியது! என்ன ஒரு கம்பீரம்! மெல்ல ஒரே பனிமூட்டத்தில் வானம் வரை எழும்பி மேகத்தில் மறைந்தது போல ஒரு காட்சிப்பிழை.

    “வாருங்கள் கிட்டே சென்று பார்க்கலாம்” என்று நடத்தி சென்றார் மஹ்மூத், மணலில் மெல்ல நடந்தவாறு முன்னே நின்ற பிரமிடுகளை ஏறெடுத்து பார்த்தவாறு சென்றோம். நடைபாதையோரம் எல்லாம் எகிப்தய தெய்வங்களும் பிரமிடுகளும் குவியல் குவியலாக கடையெங்கும் நிறைந்திருந்தது. பாபிரஸ்(papyrus) எனப்படும் எகிப்திய காதிதத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் ஹீரோகிளிபிக்ஸ்(heroglypics) ஓவியங்கள் என்று ஒரே வண்ணமயமான கலை பொருட்கள் கண்ணை கவர்ந்தன.

    பார்த்தவாறு நடந்தபோது , “ஏய் இந்தியா இங்கே வாங்கு! அமிதாப்பச்சன் என்கடைக்கு வா! ஷாருக்கான் இங்கே வா! கரீணா கபூர் இந்த பிரமிடை பார் !” எங்களைதான் இப்படி எல்லாம் விதவிதமாக கூவி அழைத்தனர் கடைகளில் உள்ள வியாபாரிகள். மஹ்மூத் இங்கே விற்பதெல்லாம் சீனாவில் மிஷினில் செய்தவை நான் உங்களை எகிப்திய அரசாங்கத்தால் அங்கிகாரம் பெற்ற கடைக்கு அழைத்து செல்கிறேன் அங்கு வேண்டியதை வாங்குங்கள் என்றார். மேலும் இந்திய தொலைக்காட்சியும் படங்களும் எகிப்தில் மிக பிரபலம் என்றும் அதிமாக இந்திய பயணிகள் வருவதால் வியாபாரிகள் இப்படி ஒரு யுக்தியை கடைப்பிடிக்கிறார்கள் என்றார்.எங்களை நிறைக்க சொல்லி நுழைவுச்சீட்டு வாங்கி வந்தார்.

    மணலில் நான்காயிரம் வருடம் முன் கட்டப்பட அந்த மாபெரும் கல்காவியத்தை பார்த்து வியந்தோம். பண்டை எகிப்திய மன்னர்கள் இறக்கும் முன் தங்கள் உடலையும் தங்கள் பரலோக பயணத்திற்கு தேவையான வேலையாட்கள், உணவு, மது,நகை போன்றவையும் சமாதி போன்ற கோவில்களில் புதைத்தனர்.இந்த கோவில்கலை பெரிய கோபுரம் போன்ற பிரமிடுகளின் நடுவே அமைப்பது பண்டை எகிப்திய கலாச்சாரம்.

    கீஸாவில்(Giza) உள்ள பிரமிடுகளில்  மூன்று உலகபுகழ் பெற்றவை,இவை எகிப்திய அரசர்களுக்கு கட்டப்பட்டது, அதைவிடுத்தது மூன்று சிறிய பிரமிடுகள் அரசிமார்களுக்கு கட்டப்பட்டவை என்று அறிந்தபோது பாலியல் வித்தியாசம் பண்டை எகிப்தியர் காலம் முதல் இருந்தது என்று புரிந்தது.

    சக்கரா (Sakkara) என்ற இடத்தில் தான் முதல் பிரமிட் கட்டப்பட்டது, அதன் பிறகு பல்வேறு மன்னர்கள் தங்கள் வசதிக்கும் புகழுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு அளவில் பிரமிடுகள் அமைத்தனர்.

    உலக புகழ் பெற்ற கீஸா பிரமிடுகள் மூன்று. இவை தொன்மையான சரித்திர ஏழு அதிசியங்களில் ஒன்று. ஏழு அதிசயங்களில் மிகவும் பழமையானது பிரமிடுகள் தான் என்றாலும்,அன்று கட்டிய அளவில் இன்றும் கம்பீரமாக நிற்பது பிரமிட் மட்டுமே மற்ற ஆறு அதிசயங்களும் காலப்போக்கில் அழிந்தும் உடைந்தும் போய்விட்டன!

    தூரத்திலிருந்து பார்க்க ஒரு பெரிய முக்கோண கோபுரம் போல காட்சியளித்தாலும் கிட்டே வந்ததும் தான், பிரமிட் பல்வேறு கற்பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியிருக்கும் அதிசயம் தெரிகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 2560 வருடங்கள் முன்னர் கட்டப்பட்ட இந்த அதிசயம் 481 அடி உயரம் கொண்டது. இரண்டு தஞ்சை பெரியகோவில்களை ஒன்றன் மீது ஒன்றாக நிறுத்தினாலும் பிரமிடை விட உயரம் கம்மி என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

    நான்காம் வம்சத்தின் குபு (Khufu) என்கிற மன்னரால் சுமார் இருபது வருட காலம் கட்டப்பட்டது.இந்த மன்னனை கிரேக்கர்கள் சியாப்ஸ் (Cheops) என்றழைத்தனர். சுண்ணாம்பு பாறைகளால்(limestone) கட்டப்பட்ட இந்த கட்டடதின் மொத்த எடை சுமார் என்னூறு டன். பெரிய பாறை கற்களை உருட்டி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சரிசமமாக நேர்த்திசெய்து எழுப்பிய பண்டை எகிப்தியரின் தொழில் நுட்பம் அசர வைத்து. மேலும் கட்டிய காலத்தில் பாறைகளின் சுவடு தெரியாமல் சுண்ணாம்பு பாறைகளால் மேல்பூச்சு செய்திருந்ததின் சுவடு சில இடங்களில் தெரிந்தது. 1300 வருடம் வந்த நிலநடுக்கத்தில் மேல்பூச்சு பாறைகள் கழண்டு விழ அவற்றை கொண்டு கைரோவில் மசூதிகளும் கொட்டைசுவர்களும் கட்டப்பட்டன!

     Courtesy: Sagar

    இந்த பிரமிட் ஒரு இறவுகோயில்(necropolis), எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இது ஒன்றில் தான் உள்வழி பாதைகள் மேலும் கீழும் செல்லும். உள்ளே உள்ள சமாதி(tomb) உள்வழி பாதைகளை பார்ப்பதற்கு சிறப்பு கட்டணம். எங்கள் வழிகாட்டி மஹ்மூத், இந்த கோயிலில் இப்போது ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறையை பார்த்துவர வீண் செலவு செய்யாதீர்கள், நீங்கள் லக்சோரில்(Luxor) இதைவிட சிறந்த கோயில்களை பார்க்கமுடியும். இப்போதைக்கு சுற்றிபாருங்கள். மேலே ஏறி பாருங்கள், சிறிது நேரம் சென்று நாம் இரண்டாவது பிரமிட் பொய் பார்க்கலாம் என்றார்.

    ஏறலாம் என்றவுடன் பசங்க இருவரும் மிக உற்சாகத்துடன் படிகளில் ஏற ஆரம்பித்தனர். பத்து இருபது படிகள் தான் ஏறமுடியும், ஏறியதும் ஒரு குடைவரை பாதை இரவு கோவிலை அடைவதற்கு தோதாக அமைக்க பட்டிருந்தது. இது 820ம் ஆண்டு காலிப் அல்-மாமுன்(Caliph al-Mamon) காலத்தில் அமைத்த சுரங்க பாதை இதை திருடர்கள் சுரங்கபாதை (Robber’s tunnel) என்று அழைத்தனர்.

    மஹ்மூத் ஏற்கனவே உள்ளே போகாதீர்கள் என்றதால் என்றதால் வெளியவே இருந்தது பார்த்தோம். எங்கு பார்த்தாலும் பல்வேறு தேச சுற்று பயணிகள். பிரமிடுகளின் மேல் ஏறக்கூடாது என்று பல்வேறு பலகைகள் அறிவித்தாலும் மக்கள் முதல் இரண்டு சுற்றளவின்  மேலே ஏறிக்கொண்டுதான் இருந்தனர். மற்றவர் ஏறும் போது மலை மடு எதுவானாலும் ஏறும் நம் பிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்கவா போகின்றார்கள் அவர்கள் ஆசைக்கு அவர்களும் ஏறினர்.

    நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இரண்டாவது பிரமிடுக்கு வண்டியில் ஏறி பாலைவன பாதையில் சென்றோம்.க்ஹப்ரே (Khafre) என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த பிரமிட் க்ஹுபுவின் பிரமிடைவிடவும் கொஞ்சம் சிறியது சற்றே தெற்கில் அமைக்கப்பட்டது. குபுவின் மகன் இந்த  க்ஹப்ரே. அவரது மகனான மேன்குவரே(Menkaure) அமைத்தது மூன்றாவது பிரமிட்.

    சுற்றியிருந்த மணல் வெளியில் எப்படி பாறைக் கண்டுபிடித்து கட்டினார்கள் என்றென்னும் போது மிகவும் வியப்பாக இருந்தது.பிரமிடுகளை அடிமைகளை கொண்டு கட்டினார்கள் என்றும், எகிப்திய வல்லுனர்களை கொண்டு கட்டினார்கள் என்றும் இரண்டு கருத்து நிலவுகிறது. எது எப்படியானாலும் , இப்பெரிய கோயில்களை அமைத்தது மிகவும் பெரிய செயல் அன்றோ! சில கற்பாறைகள் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்வான்(Aswan) கல்குவாரிகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.

    படகுகளில் கொண்டுவரப்பட்ட இந்த கற்களை இறக்குவதற்கு படகுதுறைளும் இருந்தது என்று வரலாற்று வல்லுனர்கள் உறுதி செய்துளார்கள். பிரமிடுக்கு அருகில் மூன்று படகு போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1954ம் வருடம் நான்காவதாக மேலும் ஒரு படகு போன்ற அமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் உள்ளே பல்வேறு உடைந்த மரத்துண்டுகள் இருந்தன. அவற்றை ஒரு எகிப்திய படகுகட்டும் வல்லுணரிடம் ஒப்படைத்துஆராய்ச்சி செய்ய சொன்னார்கள். ஹாஜி அஹ்மத் யூசுப் (Haji Ahmed Yusuf) என்ற வல்லுநர் 14 வருடம் அரும்பாடுபட்டு 143 அடி கொண்ட சிடார்மர (cedar wood) படகை நிலைநிறுத்தினார். இன்று அந்த படகு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பமியான் மலை(Bamian) புத்தர் சிலைகள் தலிபான் காலத்தில் உடைக்கப்பட்டன, இஸ்லாமிய மதம் சிலை மற்றும் கோவில் வழிபாடு கூடாது என்று சொல்லுவதால் அவை உடைக்கப்பட்டன. எகிப்து இன்று இஸ்லாமிய தேசம், பண்டை கலாச்சாரத்தின் அம்சமாக பிரமிடுகளும் சிலைகளும் உள்ளனவே இது எப்படி சாத்தியம் என்று மஹ்மூதை வினவினேன்.

    இன்றைய எகிப்தியர் தங்கள் வரலாற்று தொன்மையை மதிப்பவர்கள் மேலும், இந்த புராதன கோவில்கள் கலையாகவும், அந்நிய செலவானி ஈட்டும் ஒரு வியாபார பொருளாகவும் கருதப்படுகிறது. மேலும் பெரும்பாலான எகிப்திய புராதனமான கோவில்கள் இன்று யுனெஸ்கோவின் (UNESCO) உலக புரதான சின்னமாக (World Heritage Centre) அறிவிக்கப்பட்டுலதால் அவற்றை யாரும் பாழ்ப்படுத்தமுடியாது என்றார். இருந்தாலும் எகிப்தியர்கள் கோவில்களும் சிலைகளும் எகிப்தியர்கள் மற்றும் கிரேக்கர் மற்றும் அராபியர்களால் சிதைக்கபட்டுள்ளன என்றார்.

    Courtesy: Wikipaedia

    12ம் நூற்றாண்டில் சுல்தான் சல்லாதினின் (Saladdin) மகன் அல்-மலேக் அல்-அஸிஸ் ஒத்தாமன் பென் யூசுப் ( al-Malek al-Aziz Othman ben Yusuf), என்பவர் எகிப்திய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான பிரமிடுகளை அழிக்க முயன்றாராம். மேன்குவரே கட்டிய பிரமிடை முதலில் கல்கல்லாக பிரிக்கவும் முயன்று தோல்வி அடைந்தனர்.கற்களை நகர்த்தி தள்ளுவது பிரமிடை கட்டுவது போன்று மிகவும் கடினமான காரியம் என்றும், மேலும் கீழே தள்ளிய கற்களை மணலில் நகர்த்துவது பெரும்பாடு என்று அறிந்ததும் இடிப்பதை நிறுத்திவிட்டனர் என்றாலும், அவர்கள் தொடங்கிய சிதைப்பினால் இன்றும் இந்த பிரமிடின் வடக்கு முகத்தில் ஒரு பெரிய பிளவு உள்ளது.  12ம் நூற்றாண்டில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் எந்திர திறனால் தகர்த்து நகர்த்தமுடியாத பாறைக்கற்களை எப்படி நகர்த்தி செதுக்கி இவ்வளவு நேர்த்தியாக கணிதகோட்பாடுக்குள் கட்டிய பிரமிடுகளும் அதை கட்டிய எகிப்தியர்களையும் தலைவணங்கி வாழ்த்துவதுத்தானே சரி!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 64

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (31)
    திணைநிலை வரி
    “அறியேன் என்று வலிதாகச் சொல்லி, பாங்கி குறைநயப்பித்தல்”

    தன் துணையோடு கலந்து விளையாடும்
    புள்ளிகள் பொருந்திய உடம்பினை உடைய
    ஆண் நண்டினைக் கண்டான் தலைவன்.
    அதே நேரம்
    பூங்கொத்துகள் செறிந்த
    கானற்சோலையில் இருந்த
    என்னையும் நோக்கினான்.
    தன் உணர்வு ஒழியச் சென்றான்;

    வளைந்த சுருள் கூந்தல் உடையவளே!
    அவ்வாறு சென்ற தலைவனின்,
    ஒலிக்கும் அலைகள் கொண்ட
    அக்கடற் சேர்ப்பனின் நிலைமைதனை
    நானும் அறிந்திலேனடீ!

    (32)

    குளிர்ந்த தம் அருளைத் தரவென்று
    தம் குதிரை பூட்டிய தேரிலே
    வருபவர் நம் தலைவர்!
    இப்போது எனை நினைக்காது
    கைவிட்டுவிட்டாரே அவர்!

    அழகிய மென்கொத்துகளையுடைய
    அடும்புகளே!
    அன்னங்களே!
    நம்மை அவர் மறந்தாலும்
    நாம் அவரை மறக்காதிருப்போம்!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.dollsofindia.com/product/contemporary-hand-painted/lady-in-moonlight-raja-ravi-verma-painting-painting-on-woven-bamboo-strands-BJ98.html

    Share
  • தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

    மோகன் குமார்

     

    தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

    சீரியல் பக்கம் ஆசை – விஜய் டிவி 
    தெரியாத்தனமா ஒரே ஒரு நாள் இந்த சீரியலை பாத்து தொலைச்சிட்டேன். வழக்கமா மாமியார், மருமகள் பத்தி தான் பேசுவாங்க. இதில் எதோ ஆபிஸ் பத்தி மட்டுமே வருதேன்னு தான் பார்த்தேன்.
    எந்த ஆபிசில் இப்படி எந்த வேலையும் பார்க்காம பேசுவாங்களோ தெரியலை ! 8  மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு  எங்கு சார் இருப்பாங்க? எப்பவாவது அலுவலகத்தில் வேலை செய்தவரை விட்டு திரைக்கதை ,வசனம் எழுத சொல்லலாம். அதிலும் அந்த டயலாக் எல்லாம் சுத்த டிராமாத்தனம் ! 

    டிவி என்கிற மீடியாவை எவ்வளவு அழகா உபயோகிக்கலாம் ! அதவும்… ஆபிஸ் அங்குள்ள பாலிடிக்ஸ் என்பது மிக பெரிய கதைக்களம். அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்காங்க தயவு செய்து பாத்துடாதீங்க.. இந்த சீரியலை !
    மக்கள் டிவியில் திருக்குறள் 

    மக்கள் டிவி சத்தமின்றி பல நல்ல நிகழ்சிகள் தந்து வருகிறது. அவற்றில் ஒன்று… திருக்குறள் குறித்த நிகழ்ச்சி. 

    தொலை பேசியில் நிலையத்துக்கு போன் செய்ய, நிகழ்ச்சி தொகுப்பாளினி (யப்பா. இதை சொல்லவே கஷ்டமா இருக்கு ! எப்படி தான் முழுக்க தமிழில் பேசுறாங்களோ !)  ஒரு திருக்குறளின் ஆரம்ப வார்த்தையும்  நடுவில் வரும் சில வார்த்தைகளும் சொல்லி கண்டு பிடிக்க சொல்கிறார். ” வேணும்னா வீட்டில் இருக்கவங்க கிட்டே கேளுங்க” என சொன்னாலும் கூட, மக்கள் பெரும்பாலும் திருக்குறள் வரிகளை தவறாகவே சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேட்கும் அனைத்தும் மிக பிரபல குறள்களே !
    லைன் கிடைச்சா ஒரு தடவை பேசி பாக்கணும்னு அப்பப்ப தோணும்..அப்புறம் அப்படியே மறந்துடும் !
    தகேஷிஸ் கேசில் 
    போகோ டிவி யில் வரும் நிகழ்ச்சியில் ஒன்று தகேஷிஸ் கேசில் 

    ரொம்ப வினோதமான விளையாட்டுகள் நடத்துவார்கள். சறுக்கு பாறையில் ஓடுவது, உயரமான வழுக்கும் இடத்தில் கயிறு பிடித்து கொண்டு  தொங்குவது.. இப்படி பல விளையாட்டுகள். பங்கேற்கும் மக்கள் விழுவதும், தோற்பதும் தான் பார்க்க காமெடியாய் இருக்கும். 

    எல்லா விளையாட்டிலும் பெரும்பாலானோர் தோற்க ஒருவரே ஜெயிப்பர்.  மொழி தான் பேஜாரா இருக்கும்.  சைனீசோ, வேறு என்ன கருமமோ.. புலம்பி தள்ளுவாங்க ஒண்ணும் புரியாது.

    குட்டி பசங்க ஆர்வமாய் பார்த்தாலும் நாமும் கொஞ்ச நேரம் சேர்ந்து  சிரிக்க கூடிய நிகழ்ச்சி இது !
    விசுவின் மக்கள் அரங்கம் 
    சன்னில் பல வருடங்கள் வந்த அரட்டை அரங்கம் அப்புறம் சில வருடங்களாய்  ஜெயாவில் தொடர்கிறது.
    சன்னில் வரும்போது அடியேன் 3 முறை அரட்டை அரங்கத்தில் பேசியுள்ளேன். இதற்கான செலக்ஷன் – 3 நாள் நடக்கும். நீங்கள் 3 அல்லது 4 நாள் ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு, கியூவில் காத்திருந்து  பேசணும். ஒவ்வொரு ரவுண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து கடைசியில் பேசும்போது வீடியோ எடுத்து அதை விசுவே பார்த்து பின் டிவியில் யார் பேசணும் என தேர்வு செய்வார். நான்காம் நாள் தான் ஷூட்டிங் !
    சன்னில் வரும்போது நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருந்த விசு இப்போது சேர் போட்டு அமர்ந்து விட்டார். நிகழ்ச்சி ஏனோ முன்பளவு சுவாரஸ்யம் இல்லை.
    இருந்தாலும் எப்போதேனும் சானல் மாற்றும் போது சிலர் நன்கு பேசினால் பார்க்கிற வழக்கம். இவ்வாரம் மிலிட்டரியில் பணியாற்றிய ஒருவர் தங்கள் பணி எத்தனை கடினமானது என்றும், மிலிட்டரி காரர்கள் வாழ்க்கையையும் நெகிழ்ச்சியுடன் பேசினார். திரும்ப வந்த பிறகு சமூகம் தங்களை அதிகம் மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை பதிவு செய்தார். ஆயினும் நம்பிக்கை குறையாத இவர் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதாகவும்,   வாழ்க்கையில் வெல்ல முக்கிய தேவை அவரவர் “attitude  ” தான் என்றும் பேசியது நிறைவு 
    சென்னையில் ஒரு நாள் ஆடியோ ரிலீஸ் 
    ராதிகா சரத் குமார் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீடு – சென்னையில் ஒரு நாள். மலையாளத்தில் டிராபிக் என்று வந்த சக்கை போடு போட்ட படத்தின் ரீ மேக். (டிராபிக் விமர்சனம்: இங்கு) 

    ஆடியோ ரிலீசில் சரத்குமார், தனுஷ், சேரன் என பலரும் ஜாலியாக பேசினர். குறிப்பாக சரத் குமார் – தன் மனைவி ராதிகாவை செமையாக நக்கல் அடித்தார்.   அவரும் அதை ஸ்போர்டிவ் ஆக எடுத்து சிரித்து கொண்டிருந்தார் (வீட்டுக்கு போனதும் பாடி பில்டரின் பாடி என்ன ஆனதோ?) 

    தனுஷ் கூட ராதிகா மாதிரியே பேசி கலாய்த்தார். சேரன் டிரைவர் ஆக நடிப்பது தான் சற்று பயமா இருக்கு. சீனிவாசன் அற்புதமாக நடித்த பாத்திரத்தை இவர் எவ்ளோ டிராமா செய்ய போ றாரோ? 

    சின்ன தலைவி ரம்யா நம்பீசன் ஒரிஜனலில் ஒரு சிக்கலான பாத்திரத்தில் நடித்தார். தமிழில் அவரை நடிக்க வைக்காததை வன்மையாக கண்டிக்கிறோம். (நடிக்கா விட்டாலும் , ஆடியோ ரிலீசுக்கு அந்த குயில் வந்து அழகாய் கூவியது ஹீ ஹீ )
    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (6)

    பவள சங்கரி

    “உன் நாவுக்கு அஞ்சு. அது குறி தவறக்கூடிய அம்பாகும்.” – ஹஸரத் அலி.

    தேவையற்ற கவலையை விட்டொழியுங்கள்!

    நம்மில் பலர் ஏதோ பெரிதாக பிரச்சனை வரப்போகிறது என்ற கவலையிலேயே அப்போதைய நிம்மதியைத் தொலைத்தவர்களாக இருக்கிறோம். பொருளாதார பிரச்சனை, இயற்கைச் சீற்றம், விபத்து, தீவிரவாதம், ஆரோக்கியக்கேடு, நெருங்கிய உறவின் பிரிவு, மரண பயம் போன்ற பல காரணங்கள் இதற்கு அடிப்படையாக இருக்கின்றன. இதில் சிலவற்றை நாம் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். ஆனால் நம் சக்தியின் எல்லைக்கப்பால் நிகழக்கூடிய சில விசயங்கள் பற்றி கவலைப்படுவதை விட்டு நடக்கக்கூடியவைகளில் கவனம் செலுத்துவதே அறிவார்ந்த செயல்.

    எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்பாடுகள் மூலம் பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அதாவது வருமுன் காப்போம் என்ற கொள்கையை கடைப்பிடிக்கலாம். இந்த முன்னேற்பாடுகள் பற்றி பேசும்பொழுது, நான்கு விதமாக  நடந்து கொள்ளும் போக்கு நம்மிடம் இருக்கிறது. அதாவது ஒரு சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நல்ல முன்னேற்பாடுடன் தயாராக இருந்தும் தேவையற்ற கவலையை விட்டொழிக்காமல், என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். அடுத்த வகை முன்னேற்பாடு பற்றிய சிந்தையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அடுத்த மூன்றாவது வகை முன்னேற்பாடும் இல்லாமல் எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் இருப்பவர்கள். (இவர்களுக்குத்தான் கட்டாயம் உதவி தேவைப்படும்)  நான்காவதாக வருபவர் வெற்றியாளருக்குரிய குணத்தைக் கொண்டவர். அதாவது எந்த ஒரு காரியத்தையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதைத் தவிர்த்து, அறிவுப்பூர்வமாக அணுகுவதோடு, அவசர காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் சரியாக வைத்துக்கொண்டு, அதற்குரிய சரியான தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு, தேவையற்ற கவலைகளால் சக்தியை இழக்காமல் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொண்டு சமாளிப்பவர்.

    நம் கட்டுப்பாட்டையும் மீறி நடக்கக் கூடிய இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற அசம்பாவிதங்கள் குறித்த அச்சத்தினால் சக்தி விரயம் செய்யத் தேவையில்லை. முன்னேற்பாடுகளை சரியாகக் கவனித்துக் கொண்டு நம் போக்கில் பணிகளைத் தொடருதலே விவேகமான செயல். இல்லாவிட்டால் நம் உடல் மற்றும் மனதின் பெரும் சக்தியை அது தின்றுவிடும். எந்த இழப்பாக இருப்பினும் கூடியவரை விரைவில் மீண்டுவர முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். திரும்பப் பெற முடியாத இழப்புகளை நினைத்து வேதனையில் உழன்று, கடமையில் தவறுதல் சரியானதன்று. அத்தகையப் போக்கு நம் வாழ்க்கைத் தரத்தையே குறைக்கக் கூடியது. அதைவிட வாழ்க்கையின் அழகான பகுதிகளை நினைவில் கொண்டு கடமைகளைச் சரிவர செய்யத் திட்டமிடல் வெற்றிக்கான வழியல்லவா?

    மன உறுதியைக் குலைக்கும் முக்கிய எதிரி!

    ஒருவர் வாழ்க்கையில் பெறுகிற நீங்காத செல்வம், மன உறுதிதான். இதனைக் குலைக்கும் முக்கிய எதிரி அனுதாபம்தான். ஆம் ஒருவரின் அனுதாபத்தை வேண்டி நிற்கும் நிலை ஏற்படும்போது சுய மரியாதையுடன், மன உறுதியும் சுத்தமாக விலகிவிடும். மன உறுதி இல்லாதபோது வெற்றியின் எல்லையை நெருங்குவது எளிதல்ல.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர், மாதவி லதா, இன்று சென்னைவாசி. இவருடைய விசேசம என்னவென்றால் எவருடைய அனுதாபத்தையும் சற்றும் எதிர்பாராதவர். மாற்றுத் திறனாளிகளால் சுலபமாக செய்துவிட முடியாத நீச்சல் பயிற்சியில் தனித்திறன் பெற்றுள்ள இவர் இந்த ஆண்டு சென்னையில் நடந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘ஒலிம்பியாட்’ போட்டியில், ப்ரீ ஸ்டைல் 100 மீட்டர் நீச்சல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போட்டியில், கடந்த 2010-ம் ஆண்டு ‘சிறந்த ஊக்கமளிக்கும் விளையாட்டு வீராங்கனை’ என்கிற விருதையும் பெற்றுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராகவும் பணிபுரிகிறார். ஒரு வேளை இவர் அடுத்தவரின் அனுதாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தால் இந்த அளவிற்கு சாதனை புரிந்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

    இவரைப் போலவே குருடு, செவிடு, ஊமை இவற்றுடன் ஏழ்மையும் சேர்ந்து முடக்கிப் போட்டிருந்த ஹெலென் கெல்லர், அடுத்தவரின் அனுதாபம் வேண்டி முடங்கிப் போகவில்லை. தம்முடைய பலகீனங்கள் அனைத்தையும் வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நாம் வெற்றியை நாடுபவராக இருந்தால் முதலில் செய்ய வேண்டியது அடுத்தவரின் பரிதாபத்தை எதிர்பார்த்து மன உறுதியை இழந்து நிற்பதை தவிர்க்க வேண்டியதுதான்.

    ஹெலென் கெல்லர், மாதவி லதா போன்று இல்லாமல் ஆண்டவன் அருளால் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் பன்மடங்கு மன உறுதி கொண்டவராக அல்லவா இருக்க வேண்டும்? எடுத்த காரியத்தை தொய்வில்லாமல் முடிக்கும் முயற்சியை இன்றே துவங்குவோம். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்!

    தொடரும்

    படத்திற்கு நன்றி:

    http://www.rogancy.com/humor/Achievement.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 16

     

    இன்னம்பூரான்

    கனம் கோர்ட்டார் அவர்களே ~14

    http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jp

     

    எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். மதம் பிடித்த யானை ஏறி, ஏறி மிதித்தாலோ, முதலையின் பல்லிடுக்கில் அகப்பட்டுக்கொண்டாலோ, என்ன ஆவது? இந்த பாரத தேசவாசிகள் அத்தகைய பேராபத்தில் சிக்கிக்கொண்ட வேளையிலும், வாதப்பிரதிவாதங்களில், பட்டிமன்றங்களிலே, அரட்டைக்கச்சேரியிலே, குடலாடி (மடலாடலில் ஒரு வகை!) மகிழும்போது, மலையை தடவிப்பார்க்கிறார்கள், ஊர்ந்த எறும்பு நகர்ந்த பின்!

    என்.ஹெச்.சசிதல் என்ற அரசு ஊழியர் மீது அதீதமாக ரூ.33.44 லக்ஷம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து 27 வருடங்கள் ஆயின. அக்காலத்தில், இது ஒரு கணிசமான தொகை. அவரோ, அலுத்துப்போய், வழக்கை வாபஸ் வாங்கக் கோரியுள்ளார். தற்காலிக பதவி நீக்கம், கீர்த்தி நாசம், வாழ்வியல் பாதிப்பு எல்லாம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக, அவருடைய பிராது. அதை நிராகரித்த உச்ச நீதிமன்ற வாசகங்கள் (obiter dicta):

    “லஞ்சலாவண்யம் மக்களுக்கு ஒரு மந்திரமாகிவிடுமோ என்ற கவலை…தற்காலம் நம் தேசத்தின் குடலுருவி, நீக்கமற நிறைந்துள்ளது லஞ்சம். தம்பிடியோ, தங்கக்கட்டியோ, குற்றம் குற்றமே…இப்பெல்லாம் கோடிக்கணக்கில்… பதவி துஷ்பிரயோகம் செய்து சலுகைகள் காட்டுவது சமூக விரோதம்; மக்களை இழிவு படுத்துவது; சட்டத்தைத் துச்சமென கடாசுவது ஆகும்…அரசு நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில் ஆட்சி நன்றாக அமையாது…பதவி துஷ்பிரயோகம் பெருவாரி வியாதியாக எங்கும் பரவி விட்டது. லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது…லஞ்சப்பேய், ~குட்டிச்சாத்தான், கொள்ளிவாய் பிசாசு எதாக இருந்தாலும்…அந்த கூளி குழப்பம் விளைவித்து, சமுதாய முன்னேற்றத்தில் குண்டு வீசி, ரவுடிகளின் கொம்பு சீவி, மனசாட்சியை கொன்று, சமுதாய மையங்களை குலைத்து, தேசத்தின் செல்வத்தை சூறையாடி, நல்லிணக்கத்தைத் தொலைத்து, அரசாளுமையின் புற்று நோயாக அமைந்து, சர்வநாசினி என்க…கன்னாபின்னாவென்று, முறைகேடாக, சொத்து சேர்ப்பதின் முதல் பலிகடா, மக்களின் நம்பிக்கை இழப்பு…பொது வாழ்வில் யோக்கியதை இல்லையென்றால், அடி வாங்குவது, மக்கள்…இது தான் தீர்ப்பின் பின்னணி.

    தீர்ப்பு: என்.ஹெச்.சசிதலின் மனு நிராகரிக்கப்படது. தாமதம் மோசம் தான். அந்த சால்ஜாப்பைச் சொல்லி, லஞ்ச வழக்குகளை வாபஸ் செய்தால், அது ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற போக்கில் கயவாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும்.

    இதை எங்க கிராமத்துப் பெரிசு ஆறுமுகம் சேர்வையிடம் சொன்னேன். ‘இப்போ மட்டும் என்ன வாழுது?’ என்று கேட்டார். மயக்கம் வருமளவுக்கு, ஹூடாவின் ஹூடா, அப்பாவின் தாதுபுஷ்டி சப்பைக்கட்டு, நீர்மூழ்கியானாலும், பறக்கும் தட்டு ஆனாலும் ‘அடிடா கமிஷன்’ மந்திரம், மலை முழுங்கி தந்திரம், மணல் அள்ளும் யந்திரம் என்று அனுமார் வால் போல ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார். அந்த அளவுக்கு ல.லா. அபகீர்த்தி துர்வாசனை அடிக்கிறது.

    அவருக்கு மூச்சு வாங்கியதை சாக்காக வைத்துக்கொண்டு, விடை, மத்திய அரசு அசோக் சவான் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் இருக்கிறதே என்றேன். அவர் தான் மூச்சுமுட்ட எல்லா ஊடக செய்திகளை படிச்சுட்டாரே.  நான் சொன்னால், கேட்கமாட்டீர்கள். அவரே சொன்னார். கேளும், ஐயாமாரே! அம்மாமாரே!

    பெரிசு ஆறுமுகம் சேர்வை: 

    ராஜூ! என்னமோ காலேசிலே போய் படிச்சுட்டோம், ஜனநாயகம், தேசாபிமானம், தியாகம், அரசியல் சாஸனம், தேர்தல், பிரதிநிதி, அது, இது என்று உளறிக்கொட்டி, கிளறி மூடிரீங்க. என்ன தான் இருந்தாலும், வெள்ளைக்காரன் இப்படி வயத்திலே மண்ணடிக்கல்லை. அசோக் சவான் என்ற பிரதிநிதி சாமான்ய ஆசாமி இல்லை. முதல் மந்திரியாக்கும். அவர் மேலே ஆதர்ஷ் ஊழலிலும் பிராது கொடுத்தாங்க. தேர்தலில், பணத்தை வாரி இழைத்ததாகவும், ஊடகங்களில் காசு கொடுத்து, தற்புகழ்ச்சியை செய்தியாக போட்டு, வாக்கு என்று கொக்கின் தலை மேல் வெண்ணெய் வைத்ததாகவும், தேர்தல் கமிஷனுக்கு உண்மைக்குப் புறம்பான பிரமாணம் தாக்கல் செய்ததாக பேசறாங்க. இப்போ போய் தேர்தல் கமிஷனுக்கு அது பற்றி விசாரிச்சு, அவர் பதவிக்கு லாயாக்கா, இல்லையா என்று சொல்ல உரிமை இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அடிச்சுப்பேசறது. கணக்குக்கொடுக்காவிட்டால் தான் அவர்கள் தலையிடலாமாம். பொய்யும், புனைசுரட்டும் பேசினாக்க, தேர்தலில் நிற்க தகுதி இல்லை என்று சொல்லலாமா? அந்த தகுதி தேர்தல் கமிஷனுக்கு இல்லை என்று ராசாங்கம் சொல்லுது, அப்பா, கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல். இத்தனைக்கும், இந்த ‘அப்புராணை’ பிரமாணம் ஒரு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிர்மறை. (பல வருஷங்க முன்னாலெ அப்பு.) உனக்குத்தான் தெரியுமே, ராசாங்கத்தின் “ஆடிட்டர் ஜெனெரல் ஒழிக” அப்டிங்கிற கண்ணியம்! என்று சொல்லி விட்டு, புகையிலை துண்டு ஒண்ணை வாயில் அடக்கிக்கிட்டு, கொள்ளை சிரிப்புச் சிரித்தார், யாகாவா முனிவர் மாதிரி.

    ஓசை அடங்கின பின், ‘தணிக்கைத்துறை சமாச்சாரம் நிறைய இருக்கு, மாமு’ என்றதற்கு ஒரு நமுட்டுச்சிரிப்பு தான் பதில். முத்தாய்ப்பா, சொன்னேன், ‘மாமு! சேதி தெரியுமா? இதே அசோக் சவான் மீது அவரிடம் ‘தோத்துப்போனவர்’ ஒருவர் போட்ட வழக்கில், “ ‘ கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு, அவரை பதவியிலிருந்து நீக்கணும்’ என்ற மனுவை ஜனவரியிலேயே உச்ச நீதி மன்றம் நிராகரித்து விட்டது.” என்றேன். நான் பேசியது குட்டிச்சுவருடன். அவர் எழுந்து போய்விட்டார், மாட்டுக்குத் தண்ணி காட்ட.

    (தொடரும்)

     

    சித்திரத்துக்கு நன்றி: http://www.ecotippingpoints.org/our-stories/indepth/india-rajasthan-rainwater-harvest-restoration-groundwater-johad/Village-elder.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 62

     

     

    நான் அறிந்த சிலம்பில் இடையில் 62-ம் பகுதி விட்டுப்போய்விட்டதற்கு வருந்துகிறோம். இதோ அந்த பகுதி

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (27)

    காவிரியே!
    நின் கணவனது நாடு
    வளநாடு ஆகுக!
    அந்நாடு நின் குழந்தையாக,
    நீ அதைத் தாயாய் நின்று வளர்த்து,
    தவறாது உதவி செய்கிறாய்!
    அதனால் காவிரியே! நீ வாழ்க!

    அங்ஙனம் நீ காத்து நிற்கக் காரணம்,
    நாடு காத்து ஓம்புகின்ற
    ஆணைச் சக்க்ரம் ஏந்தியவனும்,
    நடுவு நெறி பாராட்டுபவனும்.
    அனைவராலும் விரும்பப்படுபவனுமாகிய
    நின் கணவன் சோழமன்னனது அருளேயாகும்;
    அதனால் காவிரியே! நீ வாழ்க!

    (28)

    “சார்த்துவரி”
    “புகாரைப் பற்றிய பாடல்கள்”
    “கையுறை மறுத்தல்”

    இனிய கதிர்களையுடைய
    திங்களது போலும்
    ஒளிர்ந்திருக்கும் முகத்தையுடைய
    தலைவியின் சிவந்த வாயில் இருக்கும்
    அழகிய பற்களுக்கு
    நீ தரும் இந்த முத்துகள் ஈடாகா;

    எனினும்
    ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறித்
    திருமாலின் மகன் காமன் அவன் போல் பித்தேறி
    கடலே! நீயும் நாள்தோறும் இங்கு வருகின்றாய்!

    ஐயனே!
    ஒலிமிகுந்த கடல் அலைகள்
    ஒளிமிகுந்த வெண் முத்துகள் தந்து
    அவற்றுக்கு ஈடாக வணிகர்கள் போல்
    மணம்மிக்க மலர் மாலைகளைக்
    கானலிடத்தே பெற்று விளங்குகின்ற
    புகார் அன்றோ எமது ஊர்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(50)

     சக்தி சக்திதாசன்

    அன்பினிய நெஞ்சங்களே !

     

    இனியதோர் மடலினிலே மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன், .
    குழந்தைகளாக இருப்போர் எப்போது வாலிபர்களாக மாறுகிறார்கள் ? இவ்வாலிபர்கள் எனும் அந்தஸ்தையடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உரிமைக தானென்ன ? தாமாகவே வாழ்வில் பல தீர்மானங்களை எடுக்கக்கூடிய வயதை அடைந்து விட்டார்கள் எனும் முடிவுக்கு வருபவர்கள் தமது முடிவில் எத்தனை வீதம் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் ?

    என்ன இது கேள்விக்கு மேல் கேள்வியாக வருகிறதே ! எதை நோக்கி இவனது இந்த மடல் நகர்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

    ஸ்கொட்லாந்து நாட்டிலே தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை 16 வயது அடைந்தவர்களுக்கும் விஸ்தரிப்பது எனும் சட்டமூலம் அமூலாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    என்ன ? எதற்கிந்த அவசரம் ? 16 வயதே நிரம்பியவர்களுக்கு தமது நாட்டை வழி நடத்திச் செல்லக்கூடியவர்கள் யார்? என்று நிர்ணயிக்கக்கூடிய அளவிற்கு வாழ்க்கை அனுபவமும் அதனுடன் கூடிய அரசியல் ஆய்வுத் திறனும் உண்டா ?

    சிந்திக்க வேண்டிய கேள்விதான் !

    இதற்கான விடைக்காக நம் சிறிது ஸ்கொட்லாந்து நாட்டின் அரசியல் நிலைப்பாடுகளைச் சிறிது உள்நோக்கிப் பார்க்க வேண்டும். ஸ்கொட்லாந்து , ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதி அது ஒரு தனிநாடாக இல்லை. ஆனால் ஸ்கொட்லாந்திலே அந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சி தாம் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று அரசியல் போராட்டம் நடத்தி வருகிறது.

    இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்து அரசாங்கம் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் வட அயர்லாந்து ஆகிய பிராந்தியங்களுக்கு மாநில சுயாட்ச்சி வழங்கியது. அதன்படி அவர்களுக்கு என்று தனியான பாராளுமன்றமும் முதன் மந்திரியும் , மாநில அளவிலான மந்திரி சபையும் உண்டு. ஓரளவு இந்தியாவிலுள்ள அமைப்பு போல் என்று வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால் அது போதாது தமக்கு தனிநாடு தேவை எனக் கோஷமெழுப்புகிறார்கள் தற்போது அங்கு மாநில ஆட்சி நடத்தும் கட்சியினர். அவர்களின் கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்காக அவர்களுக்கு தனிநாடு வேண்டுமா ?இல்லையா ? என்பது குறித்து ஸ்கொட்லாந்து மக்களைக் கேட்கும் பொது வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரத்தை இங்கிலாந்து அரசாங்கம் அளித்துள்ளது.

    இவ்வாக்கெடுப்பு அடுத்த வருடம் 2014ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறவுள்ளது . இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஜக்கிய இராச்சியத்திற்குள் இருப்பதையே விரும்புவார்கள் என்பதுவே எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் மிகவும் இளைய வயதினர் தனிநாட்டுக்கு சார்பாக இருப்பார்கள் அத்தோடு அவர்களைத் பிரச்சாரத்தின் மூலம் இலகுவாக தம் வயப்படுத்தி விடலாம் என நம்பும் மாநில அரசே இவ்வாறு 16வயதானவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் எனும் சட்டத்தை அமுலாக்க முயல்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பு .

    இந்தப் பதினாறு எனும் பருவம் இருக்கிறதே ! அது மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு பருவம் . அவர்களின் நிலை திரிசங்ட்கு சொர்க்கம்தான் !

    இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் 18 வயது வந்த ஒருவரைத்தான் வயதுக்கு வந்த ஒரு இளைஞனாகவோ அன்றி யுவதியாகவோ சட்டமூலம் கணிக்கிறார்கள்.

    பதினாறு வயது கொண்டவர்கள் சிறுவர்களே ! அவர்களின் கைகளில் இத்தகைய பொறுப்புகளைச் சுமத்துவது ஏற்கக்கூடியதா ? எனும் வாதம் பலமாகக் கிளம்புகிறது.

    16 வயது உடைய ஒருவர் திருமணம் புரியலாம் , இராணுவத்தில் சேரலாம் தனியாக வாழலாம் என்றெல்லாம் அனுமதிக்கிறோம் வாக்களிக்க மட்டும் முடியாதா என்ன ? என்கிறார்கள் ஒரு சாரார்.

    உன்னிப்பாக பார்த்தால் உண்மை அதுவல்ல.

    16 வயது உடைய ஒருவர் இங்கிலாந்தி திருமணம் செய்வதற்கு பெற்றோரின் அனுமதி தேவை , அது தவிர இராணுவத்தில் சேர்வதற்கும் பெற்றோரின் அனுமதி தேவை. அது மட்டுமின்றி 18 வயதுக்குக் குறைந்த இராணுவத்தினர் எவரும் யுத்தமுனைக்கு அனுப்பப்படுவதில்லை. இதுவே இங்கிலாந்து அரசின் சட்டம் . சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் ஈடுபட்ட யுத்தங்கள் எவற்ரிலும் 18 வயதிற்குட்பட்ட எவரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் ஸ்கொட்லாந்து மாநில அரசின் சட்டப்படி 16 வயது உடைய ஒருவர் பெற்றோரின் அனுமதி இன்றித் திருமணம் செய்து கொள்ளலாம் .

    ஆனால் இங்கிலாந்திலோ தற்போதைய அரசு 18 வயது வரை ஒருவர் கல்லூரியிலோ அன்றி வேலைக்கான பயிற்சியிலோ ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    கடந்த காலங்களை விட தற்போதைய குழந்தைகளின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. அதனால் முந்தைய 16வயதுடைய ஒருவரின் பொது அறிவிற்கும் , தற்போதைய 16 வயதுடைய ஒருவரின் பொதுஅறிவிற்கும் இடைவெளி அதிகம் அதனால் வாக்களிப்பு எனும் ஜனநாயக உரிமையை 16 வயதுடையவர்களுக்கு கொடுப்பதில் எதுவிதத் தவறுமில்லை என்று வாதாடுகிறார்கள் ஒரு சாரார்.

    பாலியல் சம்மந்தமான குற்றங்களில் 18 வயதுடையவர்களுக்கு கீழுள்ளவர்களை ஈடுபடுத்தினால் அது கிரிமினல் குற்றமாக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் எப்படி 16 வயதுடையவர்கள் வாக்களிக்கலாம் ? இது மறு சாரார்

    அதேபோல் வாணவேடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வாணங்களை வாங்குவதற்கு 18 வயது ஆக இருக்க வேண்டும் என்பதும் சட்டமாக உள்ளது. அப்புறம் எப்படி ? . . . வாதம் வலுக்கிறது.

    ஆமாம் 16 வயதுக்கும், 18 வயதுக்குமிடைப்பட்டவர்கள் ஒரு கலங்கிய நிலையில் உள்ள காலத்துக்குள்ளே சிக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. .

    சரி 18 வயதுக்குக் குறைந்த ஒருவரால் பட்டாசு வெடிகளை வாங்க முடியாது ? அப்புறம் எப்படி அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது கேள்வி எழுகிறது ?

    வெடி கையில் வெடித்து விடக்கூடும் ! ஜனநாயக முறையிலான வாக்குரிமை அதுவும் கையில் வெடித்து விடுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    14.03.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இயற்கையே தெய்வம்!..

    விசாலம்

    இயற்கையே தெய்வம்!….

    இதையே பாரதியாரும் “இயற்கையென்றுனை உரைப்பார், சிலர் இணங்கும் ஐம்பூதங்களென்றிசைப்பார்” என்று இயற்கையை சிவசக்திக்கு ஒப்பிடுகிறார்  அத்துடன்  பஞ்ச பூதங்கள் என்றும்   சொல்கிறார்  இதிலே தான்  அப்பு வாயு  நீர் நிலம்  நெருப்பு என்பவை   பின்னப்பட்டிருக்கின்றன நாம் இயற்கைக்குக்கேடு செய்ய  அது நமக்கே கேடாக முடிகிறது  மரங்களை அழித்து வீடுகள் கட்டுகிறோம் காடுகளை அழிக்கிறோம்  இதனால் நமக்குத்தேவையான பிராணவாயு குறைந்து கரிமலவாயு அதிகமாகிறது இதனால் மழை குறைவாகிறது ,இதன் பலன் விளைச்சலும் குறைகிறது ,தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது  ஓசோன் என்னும்  திரை குறைந்து கடும் வெப்பம் உண்டாகுகிறது.  நாம் இயற்கையை வணங்கி பிரார்த்தித்து காக்க வேண்டும்  முன் காலத்தில் அக்னிக்குத்தனி பூஜை நீருக்குத்தனி பூஜை  அரசமரம் வேப்பமரம் போன்ற்வைகளுக்கும்  பூஜை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர்

     ,நான் ஒரு எகிப்து நாட்டுக்கதையைப்படித்தேன்  அதில்    சூரியனின் முக்கியத்துவம் பற்றிக்கூறப்பட்டிருக்கிறது

    ‘எலோடஸ் என்பவர் இயறகையை மிகவும் ரசிப்பவர் .இயற்கைமேல் அதிக பற்றும் பக்தியும் வைத்திருந்தார் ,ஒவ்வொரு செட்யுடன் பேசுவார் நீரை வீணாக்க மாட்டார்

    காலையில் வெகு சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு முற்றத்தில் வந்து நிற்பார் அழகான  செந்நிறமான சூரியனைக்கண்டு ரசிப்பார் பின் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்து விடுவார்  தெருவில் போவோர் எல்லோரும்  இவரைக்கண்டு சிரித்தனர் கேலி செய்தனர் ஆனாலும் இவர் இதைப்பராட்டவில்லை

     “என்ன முட்டாள் மாதிரி சூரியவெளிசத்தை வணங்குகிறாயே ” என்று சிலர் கேட்க

    அதற்கு இவர் “உங்களுக்கு இயற்கையின் அருமை பெருமை  தெரிந்தால்தானே  உங்கள் அறியாமையால் இப்படி பேசுகிறீர்கள் ”  என்பார்

     தினமும் அந்தப்பக்கம் ஒரு கடலை வியாபாரி  வருவாள் எலோடஸைப்பார்த்து கேலி செய்வாள்

    ஆனல் எலிடோஸ் மிகப்பொறுமையாக கேட்டபடி இருப்பார்  அன்றைய தினமும்

    கடலைவியாபாரி வந்தாள் ,  “எல்லோரும் இந்தப்பைத்தியக்காரரைப்பாருங்கள் தினமும் சூரியனைக் கும்பிடுகிறார் சூரியன் அதன் கடமையைச்செய்கிறது

    வெளிச்சம் தருகிறது அது என்ன தெய்வமா? இந்தக்கும்பிடு கும்பிடறாரே  கஷ்டம்   கஷ்டம் என அலுத்தபடி சொன்னாள்

     இது நாள் வரை பொறுமையாக இருந்த எலிடோஸ்  ” கடலை வியாபாரியம்மா  என்னை

    நீங்கள் தினமும்   கிண்டல் செய்கிறீர்கள்! சூரியன் தான் முதன்மையான இயறகைக்கடவுள் இதை வழிபட   நம் வாழ்வும் மேன்மையடையும்  “

     “இது என்ன பைத்தியக்காரத்தனம்  தினமும் சூரியனைக்கும்பிடு   இயற்கை தெய்வம் என்றெல்லாம் பிதற்றுகிறீரே!”

     “சரி சூரியனின் அருமைத்தெரிய நான் ஒன்று சொல்கிறேன் கேட்பீர்களா? தைரியம் உண்டா ?”  “என்ன சொல்லுங்கள் கேட்கிறேன்”

     “ஒருநாள் முழுவதும் ஒரு இருட்டு அறையில் இருந்து கழிக்க வேண்டும்

    உங்களால் அப்படி இருக்க முடியுமா?

     “இதென்ன பிரமாதம் இருக்கலாமே என்னால் முடியும் ” என்று ஆணவத்துடன் பதிலளித்தாள்.

     எலிடோசும் தன் வீட்டின் பின் புறம் இருக்கும் ஒரு இருட்டறையில்  அவளைத்

    தங்க வைத்தார்,எல்லா கதவுகளும் மூடிவிட்டார்

     “உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளேயே அவளுக்கு மூச்சு அடைத்தது

    காற்று வரவில்லை  வெளிச்சம் வரவில்லை மனதுக்குள் ஒரு பயம் வந்தது

    மறுநாள் கதவைத்திறந்ததும் வெளியே ஓடோடி வந்தாள் கடலைக்காரி

    எலிடோசின் கையைபிடித்தாள்

    “என்னை மன்னித்துவிடுங்கள் ஒரு நாள் முழுவதும்  இருட்டில் இருப்பது எத்தனைக்கடினம் என்று  தெரிந்துக்கொண்டேன் சூரிய வெளிச்சம் உடலில் படும்

    போது தான் புத்துண்ர்ச்சிப்பெற்றேன்  சூரிய ஒளிக்கு ஒரு அபூர்வ

    சக்தி இருக்கிறது என்பதையும் உணர்ந்தேன்  இனி நான் கேலி செய்ய மாட்டேன்

    நானும் அந்தச்சுரியனை வணங்குவேன் “

    எலிடோஸ்  சிரித்தார்   ”  நாம் செயற்கைப்பொருட்களைக்கண்டுபிடிக்கிறோம்

    ஆனாலும் அதில்  எதாவது பிரச்சனை ஏற்படுகிறது  ஆனால் அந்தத்தெய்வம்

    போன்ற இயற்கைகளால் நம்க்கு நன்மையே ..அவைகள் இல்லாமல் நாம் வாழமுடியாது,,காற்று நீர் நெருப்பு சூரிய ஒளி இவைகள் எல்லாம் இல்லாமல் நம்மால் உயிர் வாழமுடியுமா ?’

    கடலைவியாபாரி இயறகையின் பெருமையை உணர்ந்தாள்.

    Share
  • பிக்கோலிம் புளுகு – 1

     

    தேமொழி

     

    முன்னுரை:

    வல்லமையில் முன்பு வெளிவந்த கட்டுரையான “பிக்கோலிம் போர்” (http://www.vallamai.com/?p=30512/) பற்றி உங்களுக்கு நினைவிருக்கலாம். “பிக்கோலிம் போர்” (Bicholim conflict) பற்றி மிகச் சுருக்கமாக ஒரு அறிமுகம் …  இவ்வாறு ஒரு போரே நடந்தது இல்லை.  ஆனால் நடந்ததாக ஒரு மோசடி சமீபத்தில் விக்கிபீடியாவில் நிகழ்ந்திருக்கிறது. கோவா மாநிலத்தின் பிக்கோலிம் என்ற இடத்தில் இப்படி ஒரு போர்  நடந்ததாக ஒரு கட்டுக் கதை.  1640 இல் இருந்து 1641 வரை கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையில் நடந்ததாக விக்கிபீடியாவில் ஜூலை 4, 2007 இல் ஒரு கட்டுரை எழுதப் பட்டிருந்திருக்கிறது.   இந்தக் கட்டுக் கதையின்படி, பிக்கோலிம் போரின் விளைவாக ஒரு சமாதன உடன்படிக்கை ஏற்பட்டு போர் நின்றது.  உடன்படிக்கையின் விளைவாக சுதந்திர கோவா மாநிலம் அமைக்கப் பட்டது.  இந்தக் கட்டுக் கதை 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 25 நாட்கள் விக்கிபீடியா வலைதளத்தில் இடம் பெற்ற பின்பு, அது மோசடி பதிவு என கண்டு கொள்ளப் பட்டு, சென்ற ஆண்டு 2012 டிசம்பர் 29 ஆம் தேதி நீக்கப் பட்டுவிட்டது. இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகக் காட்டப் பட்ட சான்றுகள் அனைத்தும் பொய்யானவை.  தற்பொழுது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்ட மோசடி செய்திகளின் வரிசையில் பிக்கோலிம் போர் இடம் பிடித்துள்ளது (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:List_of_hoaxes_on_Wikipedia மற்றும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/Bicholim_conflict மற்றும் http://en.wikipedia.org/wiki/Bicholim_conflict).

    விக்கிபீடியா அதை நீக்கிவிட்டாலும், சிறந்த விக்கி கட்டுரைகளை நூலாக வெளியிடும் பதிப்பகம் ஒன்று, அதனை நூலாக வெளியிட்டு விற்பனை செய்கிறது (http://www.alibris.com/search/books/isbn/9785510567311). விக்கி கட்டுரைகளை  இதுபோல விற்பனை செய்வதை காப்புரிமை என்ற அடிப்படையில் விக்கி தடுப்பது இல்லை. கல்வி பரவவேண்டும் என்ற அடிப்படையில் அனுமதியும் அளிக்கிறது.  ஆர்வக் கோளாறின் காரணமாக, “பிக்கோலிம் போர்” கட்டுரையில் அப்படி என்னதான் இருந்தது எனத் தெரிந்து கொள்ளும் நோக்கில் அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஆசை எழுந்தது. லென்நெக்ஸ் கார்ப் (LENNEX Corp) பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள 90 பக்கங்கள் உள்ள அந்த நூலில் ஒரு ஆறு பக்கம்  மட்டுமே “பிக்கோலிம் போர்” (Bicholim Conflict) பற்றி கட்டுரையில் விவரிக்கப் படுகிறது.  மற்ற பக்கங்களில் கோவா, பிக்கோலிம், மராட்டியர்கள், போர்ச்சுகீசியர்கள்  என்ற மற்ற பல விக்கி கட்டுரைகள் நூலை நிறைக்கிறது.  இக்கட்டுரை மொழி பெயர்க்கப்பட்டு “பிக்கோலிம் புளுகு” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.  இனி விக்கிபீடியாவில் வெளியிடப்பட்ட கட்டுக்கதை(கட்டுரை) தொடர்கிறது.

    பிக்கோலிம் புளுகு:

    பிக்கோலிம் போர் என்பது  1640-1641 இல் கோவாவை ஆட்சி புரிந்த போர்ச்சுகீசியர்களுக்கும், சிவாஜி பான்ஸ்லே (Shivaji  Bhonsle) ஆட்சிக்குட்பட்ட மராட்டியப் பேரசிற்கும் இடையே நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆகும். இது நிகழ்ந்தது கோவாவின் வட பகுதியான பிக்கோலிம் என்ற இடத்தில். இப்போராட்டம் 1640 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில் இருந்து 1641 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்கள் வரை நிகழ்ந்தது. பிறகு மராட்டியர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு,  முன்பிருந்த அரசுகளின் எல்லைகளையே இருதரப்பினரும் ஏற்றுக்கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் பிக்கோலிம் போர் முடிவிற்கு வந்தது [1]. எனினும், போர்ச்கீசியர்களுக்கும் மராத்திய அரசுக்கும் இடையே ஒரு பதட்டமான சூழ்நிலை கோவாவிலும் மராட்டியத்தின் அண்டைத் தீவுகளான டையு-டாமனிலும் (Diu, Daman) தொடர்ந்தது[2].  போராட்டம் பெரும்பாலும் கோவாவில் நிகழ்ந்தாலும் சில கால கட்டங்களில் போர்சுகீசியர்களுக்கு எதிரான கலகம் அருகிருந்த பேர்னம் மற்றும் பார்டெஸ்  (Pernem, Bardez) பகுதிகளிலும் நிகழ்ந்தது [3].

    (தொடரும்)

    ______________________________________
    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 63

     

     

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    [ 29 ]

    “தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
    என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்”

    வலிமைமிக்க பரதவர் வாழும் பாக்கத்தில்,
    களவில் கூடிய மகளிர்
    தலைவனைப் பிரிந்ததால் நேர்ந்த துயரால்,
    அம்மகளிர்தம்
    செம்மையான முன் கையில் இருந்து
    வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்து
    தூற்றுவதை, தலைவனே!
    ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?

    பூக்களின் அரும்புகளின் சுமையால்
    பாரம் அதிகரித்த
    நீண்ட புன்னைமரத்தின் கொம்பதனில்
    அன்னமொன்று ஏறியிருக்க,
    அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்
    சுற்றி இருந்த பூக்களை
    நட்சத்திரங்கள் என்றும் எண்ணிய
    அந்தியில் மலரும் ஆம்பல் மலர்
    பகலிலேயே மலர்ந்தது.
    தேன் உண்பதற்காகவென
    அவ்வாம்பல் மலரை
    வண்டுகள் ஊதி நிற்கும்
    புகார் அன்றோ எமது ஊர்?!

    (30)

    தன்னை உண்டவரைத் தம் போதையாலே
    அறிவிழக்கச் செய்து அடிமை செய்யும்
    கள் எனும் ஊண் எம் பாக்கத்துள்
    அழியாது நிற்கும்.
    இங்கு வாழும் மகளிர்க்கு
    எம்மருந்தாலும் தீர்த்திட முடியாத
    காம நோய் அதனை நீ தருகின்றாய் என்று
    தலைவனே!
    நாங்கள் எங்ஙனம் அறிவோம்?

    சிறுமியர் வண்டல் கொண்டு இழைத்திருந்ததை
    கடல் அலைகள் அழித்துச் சென்றிட,
    சிறுமியரின் மதிமுகத்தில் இருந்த,
    பகைவர்கள் புண்ணில் தோய்த்தெடுத்த
    வேல்போன்ற கண்கள் நீரைத்தான் வார்க்கின்றன.
    கோபம் கொண்ட சிறுமிகள்
    கடலைத் தூர்க்க முயன்று
    மணலை வாரி இறைக்கின்ற
    புகார் அன்றோ எமது ஊர்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l7.htm

    Share