சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

ஸ்பிரிங் என்று அழைக்கப்படும் வசந்தம் ஆரம்பமாகும் காலமிது என்றாகியும் கூட விண்டர் எனப்படும் மாரிகாலம் இங்கிலாந்தை விட்டு அசைய மனமில்லாமல் தத்தளிக்கிறது. ஆமாம் அதிபயங்கரக் குளிரில் இங்கிலாந்தின் பல பாகங்களையும் பனிமழையால் இயற்கையன்னை அபிஷேகித்துக் கொண்டிருக்கும் வேளையிலே கதகதப்பான சூழலில் தகிக்கும் கதிரோனின் வெப்பத்துள் வதங்கும் உங்களுடன் அடுத்த மடலில் இணைகிறேன்.

இங்கிலாந்தின் அரசியல் பயணம் ஒரு விசித்திரமான சந்தியில் வந்து நிற்கிறது. 2013ம் ஆண்டு இங்கிலாந்தின் இளைய சமுதாயத்தினர் அரசியலின் மேல் கொண்டுள்ள பார்வை ஒரு புதிய பரிணாமத்தை எடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை, அரசியல்வாதிகளின் மீதான நடத்தை அதிருப்தி, நாகரீகம் எனும் பெயரில் சமுதாயமும் அன்றாட வாழ்க்கையில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமும் எதிர்கால அரசியல்  பாதையின் மீதான் கண்ணோட்டத்தின் திசையைத் திருப்பியுள்ளது போன்றே தென்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பாராளுமன்ற இடைத் தேர்தலில் முன்னணி கட்சிகள் மூன்றும் தாக்கங்களைச் சந்திக்க ஜரோப்பிய முன்னணிக்கு எதிரான கருத்துக்களை முன்னெடுக்கும் ஜக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி என்றழைக்கப்படும் UKIP  எனும் கட்சி அதிக முன்னேற்றம் கண்டிருந்தது. இக்கட்சி தற்போது ஆட்சியிலிருக்கும் கூட்டரசாங்கத்தின் முக்கிய பங்காளியான கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து அக்கட்சி ஜரோப்பிய யூனியனை நோக்கிக் கொண்டிருந்த கொள்கைகளின் பால் வெறுப்புற்று அக்கட்சியிலிருந்து நீங்கி அமைக்கப்பட்ட கட்சியாகும்.

இக்கட்சிக்கு விழுந்த வாக்குகளில் பெரும்பான்மையானவை கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றவையாகும். இதனால் கன்சர்வேடிவ் கட்சி பீதியடையத் தொடங்கியிருக்கிறது.

விளைவு,

பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் இன்றைய பேச்சின் காரணம். அது என்ன “இன்றைய பேச்சு ” என்கிறீர்களா ? அடுத்த வருடம் ஜரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் பல்கேரியா மற்றும் ரோமானிய நாடுகளுக்குத் திறக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் பல்கேரிய மக்களும், ரோமேனிய மக்களும் ஜரோப்பிய நாடுகளுக்குள் எதுவித தடங்களுமின்றி பிரயாணம் செய்யலாம். அது மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் வேலையில்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் உதவிப் பணத்தைப் பெறும் தகுதியும் இவர்களுக்குக் கிடைக்கிறது.

இதைப் பற்றிய பெரிய அளவிலான பிரச்சாரத்தை UKIP  கட்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது இது கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகுந்த தலையிடியைக் கொடுத்துள்ளது.

அடுத்த‌ தேர்த‌லில் எங்கே விலாச‌மேயில்லாத‌ அளவிற்குத் தோல்வியைத் த‌ழுவி விடுவோமோ ? எனும் அச்ச‌ம் ஒருபுற‌மிருக்க‌ , பொருளாதார‌ நெருக்க‌டியிலிருந்து த‌ம‌து கொள்கை இங்கிலாந்தை மீட்சிப்பாதைக்குக் கொண்டு போகும் என்று தெரிவித்த‌ திட‌மான‌ ந‌ம்பிக்கை வலுவிழ‌ந்த‌ வ‌கை ஒருபுற‌ம் கொடுக்கும் தாக்க‌மும் சேர்ந்த‌தினால் மிக‌வும் க‌டுக‌தியாக‌ புதிய‌ கொள்கைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்ய‌ வேண்டிய‌ நிலைக்கு க‌ன்ச‌ர்வேடிவ் க‌ட்சி த‌ள்ள‌ப்ப‌ட்ட‌து.

இந்த‌ப் பின்ன‌ணியின் கார‌ண‌மே ச‌மீப‌த்தில் வெளியான‌ பிர‌த‌ம‌ர் டேவிட் க‌ம‌ர‌னின் குடியேற்ற‌க் கொள்கை ப‌ற்றிய‌ க‌ரிச‌னை மிகுந்த‌ பேச்சு.

நிலைகுலைந்த‌ பொருளாதார‌த்தினால் த‌லைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்ட‌த்திற்கு இங்கிலாந்துக்குள் வ‌ந்திற‌ங்கும் வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையைக் கார‌ண‌ம் காட்டித் த‌ப்பித்துக் கொள்வ‌து அனைத்துத் த‌ர‌ப்பின‌ருக்கும் ஒரு இல‌குவான‌ செய‌லாகிற‌து.

அது த‌விர‌ த‌ம‌து விற்ப‌னையின் வீழ்ச்சியைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ ம‌க்க‌ளின் ம‌ன‌தில் நிலைகொண்டுள்ள‌ வெளிநாட்ட‌வ‌ரின் வ‌ருகையின் மீதான‌ அச்ச‌ம் மிகுந்த‌ ம‌னோநிலையைச் சாத‌க‌மாக்கி அதைப் பெரிதுப‌டுத்தி செய்தி வெளியிடும் ஊட‌க‌த்துறையின் ப‌ங்க‌ளிப்பும் மிகையான‌தே !

விளைவாக‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வைப் பெறுவ‌த‌ற்கு முக்கிய‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் அனைத்தும் இக்கொள்ள‌கையில் தாம் மிக‌வும் க‌ட்டுப்பாட்டுட‌ன் இருப்ப‌தாக‌க் காட்டிக் கொள்ளும் தேவையை உண‌ர்ந்து இக்குடியேற்ற‌ப் பிர‌ச்ச‌னையைக் கொஞ்ச‌ம் மிகைப்ப‌டுத்த‌த் தொட‌ங்கியுள்ள‌ன‌ என‌ ந‌டுநிலையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ள் க‌ருத்துத் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

வெளிநாட்ட‌வ‌ர் அதுவும் குறிப்பாக‌ ஜ‌ரோப்பிய‌ நாட்டின‌ர் இங்கிலாந்தில் ஆறுமாத‌ கால‌த்திற்கும் மேலாக‌ வேலையில்லாதோருக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் அர‌சாங்க‌ உத‌வித் தொகையைப் பெற‌முடியாது எனும் அடிப்ப‌டையில் ஊதிய கொள்கைக‌ளைப் பிர‌த‌ம‌ர் குறிப்பிட‌, லிப‌ர‌ல் டெம‌கிர‌ட்ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ர் நிக் கிளேக் அவ‌ர்க‌ளோ ஜ‌ய‌ம் மிகுந்த‌ நாடுக‌ளில் இருந்து வ‌ரும் விருந்தின‌ர் விசா பெறுப‌வ‌ர்க‌ள் தாம் திரும்பிச் செல்வ‌தை உறுதிப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌ ஒரு க‌னிச‌மான‌ தொகையை விசா பெறும்போது க‌ட்டி , தாம் த‌ம‌து விடுமுறை முடிந்து திரும்பும் போது அப்ப‌ண‌த்தை திரும்ப‌ பெற்றுக் கொள்ள‌லாம் எனும் கொள்கையை பிர‌ஸ்தாபிக்கிறார்.

இத‌னிடையே பிர‌தான‌ எதிர்க் க‌ட்சியான‌ லேப‌ர் க‌ட்சியின் த‌லைவ‌ர் எட் மில்லிபாண்ட் ம‌க்க‌ள் ம‌ன‌தில் வெளிநாட்ட‌வ‌ர் குடியேற்ற‌க் கொள்கையைப் ப‌ற்றிய‌ அச்ச‌த்தின் ஆழ‌த்தை த‌ம‌து க‌ட்சியின‌ர் உண‌ர‌த் த‌வறிய‌மைக்காக‌ தாம் ம‌ன்னிப்புக் கோருவ‌தாக‌க் கூறி தாம் அவ‌ர்க‌ளை விட‌ ஒருப‌டி மேலேறி நிற்கிறார்.

ஆனால் ந‌டுநிலையான‌ புள்ளி விப‌ர‌ங்க‌ளின் ப‌டி இந்நாட்டில் குடியேறி வாழும் வெளிநாட்ட‌வ‌ர் ப‌ணிபுரிந்து செலுத்தும் வ‌ரிப்ப‌ண‌ம் இங்கிலாந்தின் பொருளாதார‌த்திற்கு மிக‌வும் பெரிய‌ அள‌விலான‌ ப‌ங்க‌ளிப்பைச் செய்கிற‌து என்று குறிப்பிடுகிற‌து.

உண்மையான‌ அர‌சிய‌ல் அவ‌தானிக‌ளின் அச்ச‌ம் என்ன‌வென்றால் குறுகிய‌ கால‌ க‌ண்ணோட்ட‌த்தில் தேர்த‌ல் அனுகூல‌த்தை ம‌ட்டும் க‌ருத்தில் வைத்து கிள‌றிவிட‌ப்ப‌டும் இப்பிர‌ச்ச‌னை இன‌த்துவேஷ‌ அதிக‌ரிப்புக்கு வ‌ழி வ‌குத்து விட‌க்கூடாது என்ப‌தே.

நாட்டுக்காக‌வே ம‌க்க‌ள் , ம‌க்க‌ளுக்காக‌வே அர‌சிய‌ல் இந்த‌க் கோட்பாட்டை ஞாப‌க‌த்தில் கொண்டுள்ளார்க‌ளா இந்நாட்டின் ம‌க்க‌ள் பாதுகாவ‌ல‌ர்க‌ள் என்று த‌ம்மை அறிமுக‌ப்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ர்க‌ள் ?

ப‌தில் கால‌த்தின் கையில் …….

மீண்டும் அடுத்த‌ ம‌ட‌லில்

அன்புட‌ன்
ச‌க்தி ச‌க்திதாச‌ன்
27.03.2013

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *