நான் அறிந்த சிலம்பு – 63

 

 

மலர் சபா

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

[ 29 ]

“தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல்
என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்”

வலிமைமிக்க பரதவர் வாழும் பாக்கத்தில்,
களவில் கூடிய மகளிர்
தலைவனைப் பிரிந்ததால் நேர்ந்த துயரால்,
அம்மகளிர்தம்
செம்மையான முன் கையில் இருந்து
வளையல்கள் தாமே கழன்று வீழ்ந்து
தூற்றுவதை, தலைவனே!
ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?

பூக்களின் அரும்புகளின் சுமையால்
பாரம் அதிகரித்த
நீண்ட புன்னைமரத்தின் கொம்பதனில்
அன்னமொன்று ஏறியிருக்க,
அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்
சுற்றி இருந்த பூக்களை
நட்சத்திரங்கள் என்றும் எண்ணிய
அந்தியில் மலரும் ஆம்பல் மலர்
பகலிலேயே மலர்ந்தது.
தேன் உண்பதற்காகவென
அவ்வாம்பல் மலரை
வண்டுகள் ஊதி நிற்கும்
புகார் அன்றோ எமது ஊர்?!

(30)

தன்னை உண்டவரைத் தம் போதையாலே
அறிவிழக்கச் செய்து அடிமை செய்யும்
கள் எனும் ஊண் எம் பாக்கத்துள்
அழியாது நிற்கும்.
இங்கு வாழும் மகளிர்க்கு
எம்மருந்தாலும் தீர்த்திட முடியாத
காம நோய் அதனை நீ தருகின்றாய் என்று
தலைவனே!
நாங்கள் எங்ஙனம் அறிவோம்?

சிறுமியர் வண்டல் கொண்டு இழைத்திருந்ததை
கடல் அலைகள் அழித்துச் சென்றிட,
சிறுமியரின் மதிமுகத்தில் இருந்த,
பகைவர்கள் புண்ணில் தோய்த்தெடுத்த
வேல்போன்ற கண்கள் நீரைத்தான் வார்க்கின்றன.
கோபம் கொண்ட சிறுமிகள்
கடலைத் தூர்க்க முயன்று
மணலை வாரி இறைக்கின்ற
புகார் அன்றோ எமது ஊர்?!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/degree/a011/a0113/html/a01134l7.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.