பா.க. சுப்பிரமணியம்

உனக்கும்
எனக்குமான
புரிதலற்ற
புரிதலின் மோதலில்
ஏற்பட்ட
இடைவெளியென்பது
சாதிகளுக்கும்
வர்க்கங்களுக்குமிடையே
எழுப்பப்பட்ட
மதில் சுவர்கள் போல்
என்றும்
இடிக்க முடியாததல்ல

உன்
அன்பை
உதட்டில்
ஊற்றி
உயிரில்
நிரப்பினாய்
என்
இதய வெளியில்

அகதியாய்
திரிந்த எனக்கு
அடைக்கலம் தந்த
அழகின்
தாய்நாடே

உன்னால்
உதிர்ந்துகிடக்கிற
என்
உயிர்ப்பூக்கள்
மறுபடியும்
மறுபடியும்
வந்து
உன்
மார்ச் சூட்டில்
மலர வேண்டும்

வெளிச்சம் இல்லாத
வீதிகளில்
நான்
நடந்து போகையில்
நீ
என்னெதிரே
நிலவாக வந்தாய்

உன்னைத்
தேடித் தேடி
கண்ணில் வந்து
இதயம்
எட்டிப் பார்க்கும்
காணாத போதும்
காதல் மனசில்
வந்து
பூப்பூக்கும்

இருதயம்
எரிவதற்கு
காதல் மட்டும்
தீ மூட்டும்
இருவரும்
நனைவதற்கு
அன்பு மட்டும்
நீரூற்றும்

நாம்
எரிந்தும்
நனைந்தும்
இரு பிறப்பெடுப்போம்

என்
உயிர் வெளிகளில்
மோகம்
பூப்பூக்கும்
உன்
தேகக் கால்களில்
உறவு
பால்வார்க்கும்

இருதயம் நிறைய
உன்
நினைவிருக்கும்
இறக்கிற வரையிலும்
உன்னோடான
என்
உறவிருக்கும்

நினைக்கும் போது
திறக்கவும்
மறக்கும் போது
மூடிக் கொள்ளவும்
முடிகிற
உன்
மனசுக்கு மட்டும்
எப்படி
இரண்டு கதவு(கள்)

நீ
கடந்து போன திசையில்
தென்றலுக்குச்
சிறகு முளைத்து
பறந்து செல்கின்றது

நீ
நடந்து போன
அடிச்சுவட்டிலெல்லாம்
பூக்கள் அரும்பெடுத்து
பூப்பூத்துக் கொண்டிருக்கின்றன

இரவென்றும்
பகலென்றும்
நீ
சிரிக்கின்ற பொழுதையும்
சிரிக்காத பொழுதையும்
நிர்ணயித்துச் செல்கிறது
காலம்

காதலென்பது
நாணயமாய்
இரண்டு
இதயத்தின்
மறுபக்கங்களாகவும்
இருப்பது

உறவில் உருகி
உதட்டு வழி
இதழில் இறங்கியது
நாம்
பரிமாறிக் கொண்ட
உயிர்

இவ்வுலகில்
உண்ண…
உண்ண…
திகட்டாத அமுதம்
நீ மட்டுந்தான்

உன்
பார்வையைப் போட்டு
என்
மனசைப் பிடித்தத்
தூண்டில்
நீ

நம் உறவு
இரண்டு மறுபக்கங்கள்
சந்தித்துக் கொள்வதற்கான
மையப் புள்ளி

நம்
உறவு
உயிர்ப்பதம்
பிரிவு
பதர்ப்பதம்

ஜென்மங்கள்
பலவிருந்தால்
அதன் முடிவுவரை
நாம்
பிறப்பெடுப்போம்

உயிரிலும்
உணர்விலும்
உடலிலும்
மூழ்கிப் போதல்
காதல்

உன்
இதழ் பூவில்
தேனருந்தி
மயக்கம் கொண்ட
ஆண்மான்
நான்

நம்
உயிர்
இரண்டு
இருதயங்களில்
துடிக்கின்றது

ஒரு பக்க நாணயம்
செல்லாக் காசாகிவிடும்
காதலென்பது
இரண்டு மனசும்
இணைந்திருப்பது
இதயத்தின்
நான்கு சுவர்களும்
அன்பில்
நனைந்திருப்பது

காதல் வந்து
இரண்டுபேர்
மனசிலும்
பால் பொங்க
அன்பை ஊற்றும்
அடுப்பெரிக்கும்

சைவக் காதலுக்குப்
பதில்
நட்பாய் இருந்துவிடு
வண்டுகள்
தொடாமல் போனால்
பூக்கள்
மலடாகிப் போகும்

காதல் என்பது
பொழுதுப் போக்கல்ல
அது
உயிரின் ஊற்றிடம்
உறவின் போக்கிடம்
இதயத்தின் இருப்பிடம்

நான்
உன்னைப்
பார்த்துப் பார்த்துப்
பழகிய
கண்களின்
எட்டு திசைகளிலும்
எழுகிறது
உன் பிம்பம்

துடிக்கத்
துடிக்கத்
துண்டித்து விட்டுப்போன
உன்னோடான
என் காதல்
இதயத்தில்
இறங்கி
மனசில் வந்து
மறுபடியும்
துளிர்க்கிறது

ஒருவரால்
ஒருவர்
உயிர் வாழ்வதும்
மரணிப்பதும்
காதலின்
பரிணாமங்கள்

உன்
அமுதமூட்டும்
காதலால்
நான்
மீண்டும்
மீண்டும்
உயிர்த்தெழுகிறேன்
மரணத்திலிருந்து

உன்
வாசனை நுகர்வில்
சந்தனக்காடு
பற்றி எரிகிறது

விடை பெறுதலும்
விடை தருதலுக்குமான
கால ஓட்டத்தில்
காலியான
இதயத்தை
நிரப்பிவிட்டுச் செல்லும்
நம் காதல்

என்று உதிர்ந்ததோ
தெரியவில்லை
மனசடிவாரத்தில்
ஒரு நிலவு
இப்போது
என் இருதயம்
இருள் பிரதேசத்தில்

புன்னகையைக் கொடுத்து
காதலை வாங்கும்
வணிகத்தில்
இதயம்
சந்தையானது

நம் அருகருகே
நாம் எதிரெதிராகும்
சந்தர்ப்பங்களில்
மனசுகளோடு
மௌனம்
கைக் குலுக்கிவிட்டுப் போகும்

உன்
சிரிப்பில் சிதறிய
புன்னகையை
பொறுக்கியெடுத்து
மின்னல்
கன்னத்தில் பூச்சூடிச் செல்லும்

உன்னை தேடிய
என்
கனவு பயணம்
வானவில் கடந்து
முகில் கலைத்து
சூரியனை முத்தமிட்டு
நட்சத்திரங்கள் பறித்து
மின்னல் பிடித்து
நிலவில் நடந்து
திரும்பி வந்து பாதங்களில்
உன்னிடம் சரணடையும்

இரம்யமான
அந்திகளில்
நாம்
தோளோடு தோள்சேர்த்து
நிலவுக்குள் பிரவேசிக்கிறோம்

நினைவுச் சுவடுகள்
பயணித்த  வழிகளெங்கும்
இறைந்து கிடக்கிறது
நம்
காதலின் வாசம்

நான்
பூக்களாய் சிரிக்கக் கேட்டேன்
நீ
மௌனத்தை
வளர்த்துக் கொண்டிருக்கிறாய்
ஒரு நாள்
செடியருகே
செத்து மடிதலும்
சுகந்தான் எனக்கு

படத்துக்கு நன்றி: படத்துக்கு நன்றி: 5-beautiful-eyes-www.cute-pictures.blogspot.com_

1 thought on “உயிர் வெளி

  1. ஏதேனும் எசப்பாட்டுக் கச்சேரி நடக்கிறதோ? பா.க.சுப்பிரமணியம் அவர்களே நீங்களும் தனுசுவும் எழுதிய கவிதைகளை மாற்றி மாற்றிப்  படிக்கவும் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இது .  உயிர் வெளி எனும் தலைப்பில் தொடர்ந்து காதல் காவியம் படிப்பதாகத் தெரிகிறது.  மிக நல்ல கவிதைகள்…தொடருங்கள்.  

    ….. தேமொழி 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க