தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 14 (இறுதிப்பகுதி)

8

திவாகர்

தேவன் முதல் முதலாக எழுதியது ஆங்கிலத்தில்தான் என்று எழுதுகிறார் ‘மெட்ராஸ் ம்யூசிங்ஸ்’ முத்தையா அவர்கள். அப்போதைய ஆங்கில அறிஞரான பி.ஆர். ராம் ஐயங்காரை ஆசிரியராகக் கொண்ட ‘மை மெகஸின் ஆஃப் இண்டியா’ என்ற இதழில் தேவனின் எழுத்துக்க்கள் சுடர் விட ஆரம்பித்தன என்றும், திரு கல்கி அவர்கள் பார்வையில் பட்டு ஆங்கிலத்துக்கு சமமாக தமிழிலும் தேவன் அதே நகைச்சுவையுடனும் எழுதமுடியும் என்ற முடிவுடன் தேவனை எழுத வைத்தார் என்றும் திரு முத்தையா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இன்னொரு விஷயம், மை மெகஸினுக்கு போட்டியாக எஸ் எஸ் வாஸன் ‘தி மெர்ரி மெகஸின்; எனும் இதழ் கூட அந்தச் சமயத்தில் ஆரம்பித்தார் என்றும் முத்தையா குறிப்பிட்டுள்ளார். தேவன் ஒருவேளை தமிழில் எழுதாவிட்டால் கூட ஆங்கிலத்தில் தொடர்ந்திருப்பார்.. ஆங்கிலத்தில் எழுதுவதால் உலகம் பரந்த புகழ் கூட கிடைத்திருக்கலாம். ஆனால் தமிழ்த்தாயின் கருணை அவரை தமிழிலேயே இருத்தி வைத்து விட்டது எனலாம்.

தேவன் தன்னுடைய எழுத்துத் தொழிலில் இன்னொரு இடைஞ்சலை கூட சந்தித்திருப்பதாக மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதாக அந்தக் கட்டுரை சொல்கிறது. தேவனுக்கு 1940 முதலாண்டு சமயங்களில் விகடனில் சரியான ஸ்தானம் கிடைக்காததால் கல்கி அவர்களின் ஆலோசனைப்படி சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் உத்தியோகம் கிடைத்து அங்கு சேர இருந்ததாகவும், ஆனால் சரியான சமயத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டமும், கல்கி அவர்களின் சிறைவாசமும், அதன் பின் கல்கியும் சதாசிவமும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டதாலும் அதற்கு எஸ்.எஸ் வாஸனின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக இருந்ததாகவும், அதனால் ஏற்பட்டஆனந்த விகடனில் ஆசிரியர் ஸ்தானத்துக்கான வாய்ப்பும், இவ்வாறு எதிர்பாரா நிகழ்ச்சிகள் துரிதகதியில் ஒன்றன் பின்னால் ஒன்றாக ஏற்பட்டதால், தேவன் ஆல் இந்தியா ரேடியோவில் சேரவில்லை.

மேலும் தேவனுக்கு ஏற்கனவே இருந்த துணை ஆசிரியர் வேலையின் காரணமாக செய்திகள் எழுதுவதும், செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கிண்டலுடன் செய்திக் கட்டுரைகளையும் நிறைய எழுதுவார்.  காங்கிரஸ் கட்சியின் குழப்பங்கள், ஆங்கிலேயரின் அதிரடி திட்டங்கள், போர்க் காலத்தில் நடந்த நிகழ்வுகள், சமுதாயத்தில் அக்காலத்தே இருந்த சீரழிவுகள் எதுவும் தேவன் எழுத்துக்குத் தப்பியதில்லை. குறிப்பாக யுத்தத்தில்  பங்குகொண்ட நாடுகள் பற்றிய கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வாரம் ஒருமுறை யுத்தகால நிகழ்ச்சிகளைக் கட்டுரையாக ஆனந்த விகடனில் எழுதினார். உலகத் தலைவர்களின் அன்றையப் போக்கை உன்னிப்பாக கவனித்து எழுதிய கட்டுரைகளும் உண்டு. எனவே ஆல் இந்தியா ரேடியோ’ வில் சேருவதற்கு தேவனுக்கு நிறையவே தகுதிகள் இருந்திருக்கிறது. ஆனாலும் இங்கும் தமிழ்த்தாய்தான் வெற்றி பெற்றிருக்கிறாள். ஒருவேளை ஆல் இந்தியா ரேடியோவில் சேர்ந்திருந்தால் வெளியே, வெளிப்பத்திரிகைகளுக்கு தேவன் எழுதும் வாய்ப்புகள் இராது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தேவனின் முக்கியக் கதைகள் சாம்புவிலிருந்து சி ஐ டி சந்துரு வரை, கல்யாணியிலிருந்து ஜஸ்டிஸ் ஜகன்னாதன், தென்னாட்டு செல்வங்கள் எல்லாமே அந்த பிற்காலத்தில், அதுவும் அவர் விகடன் ஆசிரியர் ஸ்தானத்தில் அமர்ந்தவுடன் எழுதப்பட்டவை என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும். பிற்காலத்தில் ஆசிரியராக, தேவன் விகடனில் எழுதிய நகைச்சுவை கட்டுரைகளின் கணக்கு எண்ணிக்கையில் அடங்காததாகும். சாதாரண கட்டுரை ஒன்று எழுதுவதைக்கூட ஒரு நகைச்சுவை பாணியில் விளக்குகிறார் பாருங்களேன்..

ஆசிரியர் கேட்டுக்கொண்ட படியினாலே இந்தக் கட்டுரை எழுதுகிறேன்.” என்று சொல்லிக்கொண்டே ஆரம்பிக்க முடியவில்லை.  ஏனென்றால் ஆசிரியர் என்னைக் கேட்கவே இல்லை.இரண்டாவது, ஆசிரியர் கேட்டுக்கொண்ட வியாஜ்யத்தை வைத்து சர்வ மோசமான விஷயங்களால் இரண்டு பக்கத்தை நிரப்பவும் இஷ்டமில்லை.ஆகையினால் கொஞ்சம் நல்ல விஷயமாய் யோசனை செய்து எழுதலாமென்று ஆரம்பித்தேன். இப்படி வெகு நேரம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, எங்கள் வீடு கூட்டும் செல்லம்மாள் வந்து சேர்ந்தாள். “காலை தூக்கி நாற்காலி மேலே வெச்சுக்குங்க.. உள்ளைக் கூட்டணும்” என்றாள்.

“செல்லம்மா! ரொம்ப விந்தையான விஷயமாய் உனக்குஏதாவது தெரிந்தால் சொல்லேன். பத்திரிகைக்கு எழுதலாமென்று பார்க்கிறேன்.” என்றேன்.

நான் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தாள். நான் சொன்னதில் என்ன ஹாஸ்யம் இருக்கிறது என்று தெரியவில்லை. சிலசமயம் நான் ஹாஸ்யமாக பேசவேண்டுமென்று ஆரம்பித்துப் பேசினால் எவரும் சிரிப்பது கிடையாது.ஒரு சமயம் நாலு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ‘ஒரு ஹாஸ்ய சம்பவம் ஏற்பட்டது. நான் சொன்னால் நீங்கள் குபீரென்று சிரித்து விடுவீர்கள்” என்று சொன்னேன். அப்படியா! எங்கே அதைச் சொல்லேன்..என்றார்கள் அவர்கள். “ஆஹா! சிரிக்கும் சிரிப்பில் வயிறு புண்ணாகிவிடும்” என்று எச்சரிக்கையும் செய்து விட்டு அந்த ஹாஸ்ய அனுபவத்தைச் சொன்னேன். அவர்கள் முழுவதையும் கேட்டுவிட்டு, “அவ்வளவுதானா, இதில் வேடிக்கை என்ன இருக்கிறது?” என்றார்கள்.

இதற்கு நேர் எதிரிடையான இன்னொரு விதமான ஆசாமிகளும் இருக்கிறார்கள். இவர்களிடம் எதைச் சொன்னாலும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த ஆசாமிகளிடம் நிஜ விகட துணுக்காகயாரும் ஒன்றைச் சொல்லக்கூடாது, சொன்னால் அந்த இடச்த்திலேயே அவர்கள் சிரித்து உயிரை விட்டு விட்டாலும் விடலாம்!”

இதற்குப் பிறகு இந்த செல்லம்மாவே ‘ரொம்ப நேரம் ரோசனை செய்து’ ஒரு ஐடியா கொடுத்து மழையைப் பற்றி எழுதச் சொன்ன கட்டுரை அது..மழைக்காக வேண்டி ஒரு குடையை வாங்க அது அவருக்கு வேண்டிய சமயத்தில் மக்கர் செய்யும் நகைச்சுவை கட்டுரை.தேவனது மோட்டார் அகராதி என்றொரு கட்டுரை, (தற்போதைய கார்கள்)  அவர் எப்போது எழுதினாரோ (அவர் காலத்தில் மோட்டார் கார்கள் எண்ணிக்கையில் மிகவும் ,குறைவுதானே) ஆனாலும் இன்றும் கூட அந்த அகராதி காலத்துக்குத் தகுந்தாற்போலத்தான் இருக்கிறது. அந்த அகராதியிலிருந்து ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தேவனின் நகைச்சுவை எழுத்தில் கொடுத்துள்ளேன்.:

இதன் முன்னுரையே கல கல.

(ஏற்கனவே மோட்டார் வைத்திருப்பவர்களும், மோட்டார் புதிதாய் வாங்க உத்தேசித்திருப்பவர்களும், மோட்டாரே வாங்குவதில்லை என்று விரதம் செய்திருப்பவரும், மோட்டார் வாங்கப் பணமில்லையே என்று பரிதவிப்பவர்களும், மோட்டாரை வாங்கிவிட்டு ஏனப்பா வாங்கினோம் என்று ’சிந்தாக்கிராந்தரா’யிருப்பவர்களும், மோட்டாரைக் காயப்படுத்தினவர்களும், மோட்டாரால் காயப்படுத்தப்பட்டவர்களும், இன்னும் இதரரும் படித்துத் தெளிந்து கொள்ளலாம். ஏற்கனவே மூளை தெளிந்திருந்தால், இப்போது கலக்கிக் கொள்ளலாம்)

பிரேக்: மோட்டாரை ஓடும்போது, இப்படி ஒரு சாமான் இருப்பதையே மறந்துவிடலாம்.
பெட்ரோல்: இது மட்டும் தண்ணீராக இருந்தால் நானும் நீரும் தலைக்கு ஒரு மோட்டார் வைத்துக் கொள்ளலாம்.
போலீஸ்காரர்: மோட்டார் ஓட்டிகளின் தெய்வம், கையைக் காட்டி, பத்தாயிருந்தாலும் சரி, பதினாயிரமாகவும் இருந்தாலும் சரி, நமஸ்காரம் செய்யாவிட்டாலும் பிரதட்சணமாவது செய்தே தீரவேண்டும்.

மனிதர்கள்: இவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். 1) மோட்டாரால் கொல்லுபவர் 2) மோட்டாரால் கொல்லப்படுபவர்.
முட்டாள்கள்: இதர மோட்டார் ஓட்டிகள், பாதசாரிகள், சைக்கிள்காரர்கள்
முழுச்செவிடர்கள்: பாதசாரிகள்.
மோட்டார்:  இது இல்லாதவர்கள் அவசியம் வாங்கிப்பார்க்கவேண்டிய பண்டம், இருப்பவர்கள் அவசியம் விற்றுத் தொலைக்கவேண்டிய பண்டம்

இப்படியே மோட்டாரால் அனுபவிக்கும் அவஸ்தையை நகைச்சுவை சற்றும் குறையாமல் சொல்லுவார் தேவன். அவரும் ‘மோரீஸ் மைனர்’ ’மோட்டாரை’ வாங்கி சென்னை மாநகரத்தில் பவனி வந்தவர்தாம்.

’கோபம் வருகிறது’ என்றொரு கட்டுரையை கதையாக எழுதியிருந்தார் தேவன். இந்தக் கோபம் என்கிற உணர்ச்சியை எத்தனை ஆழமாக சீண்டிப் பார்த்திருக்கிறாரோ.. நீங்களும் அதைச் சற்று அனுபவியுங்களேன்..

மனிதருக்கு மனிதர் கோபம் வித்தியாஸப்படுகிறது. கோபமூட்டக் கூடிய சந்தர்ப்பங்களின் தன்மையும் அதை அடக்கப் பெற்றிருக்கும் சக்தியையும் பொறுத்திருக்கிறது அது. ‘முடவனுக்கு விட்ட இடத்தில் கோபம்’ என்பது பிரசித்தமான வசனம். துர்வாச முனிவருக்குக் கோபம் வர ஒரு காரணமும் தேவை இல்லை. “ஸார்! நீங்கள் கடைசியாக கோபித்துக் கொண்டு எட்டு நிமிஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது போல் இருக்கிறதே!” என்று ஞாபகமூட்டினால் போதும்: “பிடி சாபம்! இது வரை ஏன் ஞாபகப்படுத்தாமல் இருந்தாய்?” என்று கோபித்துக் கொண்டு விடுவார்.

எனக்கு கோபம் வரும் விதத்தை பின்னால் நினைத்துப் பார்த்து சிரித்திருக்கிறேன். என்னுடைய கோப வேளையில் எனக்கு யாரைக்கண்டாலும் பிடிக்காது. எனக்குப் பிடித்த டிபனைக் கூட முதலில் தொடமாட்டேன். கோபம் விரக்தியாக வேற்றுருவம் கொண்டு, ‘நான் கண் காணாமல் தொலைந்து போய்விடுகிறேன்.. இந்த வீட்டில் இனிமேல் எதையும் சாப்பிடுவதாய் இல்லை” என்றெல்லாம் பேசி, மெள்ள மெள்ள வழிக்கு வந்து.. “சரி.. சரி.. சீக்கிரம் இலையைப் போடு..நான் ஆபீசுக்குப் போகிறேன்!” என்பேன்.

ராஜத்துக்குக் கோபம் வருவதுண்டு. எல்லா ஸ்திரீகளையும் போலவே அது எப்போது எதற்காக வரும் என்று சொல்வதற்கில்லை. கடும் மெளனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், எனக்கு வேண்டிய சகல உபகரணங்களையும் உரிய காலத்திற்கு முன்னால் அவள் எடுத்து வைப்பதிலிருந்தே அவளுக்கு அது கோப வேளை என்று ஊகித்துக்கொள்வேன்.

‘இவ்வளவு நன்றாக சிசுருட்சைகள் நடப்பதென்றால், ராஜம், நீ அடிக்கடி கோபித்துக் கொள்ளேன்’ என்று கூட நான் அவளைக் கேட்டுக்கொள்ளலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்பதில்லை.

நானும் என் சகோதரியும் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தகப்பனாரிடமிருந்து ஒதுங்குவோம். முக்கியமாக அவர் ‘சவரம் செய்து கொண்ட தினங்களில்’ அதிக கோபமாக இருப்பது போல் எங்களுக்கு ஒரு பிரமை தோன்றும்.

கோபத்தினுடைய குணம் ஒன்று உண்டு. யார் மிகவும் அன்புக்கும் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களோ, அவர்கள் மீதுதான் அது லகுவில் பாயும். நமக்கு வேண்டியவர்களின் சிறு பிழையையும் நாம் மன்னிக்கத் தயாரில்லை. கருங்கல்லுடன் போட்டி போடும் பொரி விளங்காய் உருண்டையை அஞ்சாமல் கடிப்போம் – அன்னத்துடன் ஒரே ஒரு சிறு கல் இருந்துவிட்டால் அதை பொறுக்கமாட்டோம் அல்ல்வா?

பெரிய நோய்களைப் போல் இதயத்தில் கோபத்தைத் தங்கவிடவே கூடாது. பாலிலிருந்து வெண்ணெயைக் கடைந்தெடுத்து விட்டாப் போல, அவ்வப்போது அதை நீக்கி விடுவதே நலம்.

நான் கூர்க்கா சேவகர்களைப் பார்த்திருக்கிறேன். இடையில் ஒரு தோல் பையில் ஒரு கத்தி சதா தொங்கிக் கொண்டிருக்கும். கத்தியின் கைப்பிடி மட்டும் என் கண்ணில் பட்டிருக்கிறதே ஒழிய அதன் இரும்பு பாகத்தை நான் கண்டதே இல்லை. ஆபத்திற்கு கத்தி இருக்கிறது.. ஆனால் உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியவரை அதை எடுக்காமலேயே சமாளித்துக் கொள்ளப் பார்க்க வேண்டியதுதான்.

கோபம்தான் அந்தக் கத்தி.

இந்தக் கட்டுரைக் கதையில் ஒன்று கவனித்தீர்களா.. ‘சிறுவர்களாக இருந்தபோது தகப்பனார் சவரம் செய்தபின்னர் அதிக கோபத்தால் காணப்படுவாராம். அது பிரமை என்று சொன்னாலும் ஒருவிதத்தில் உண்மைதான். அந்தக் காலகட்டத்தில் ஒருவாரம் பத்து நாள் என முகத்தில் முடி வளரவிட்டு விட்டு முகச்சவரம் மழித்துக் கொள்ளும்போது தற்போதைய கூரான பிளேடுகள் போல இல்லாமல் ஏதோ சுமாராக கூர் செய்யப்பட்டு இருக்கும் கத்தியால் மழித்து விடுவார்கள். நிச்சயமாக அந்த எரிச்சல் ஒருநாளாவது இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ..தேவனின் கூர்ந்து நோக்கும் தன்மை எங்கெல்லாம் பாய்கிறது என்பதற்கு இதுவே சான்று. யாருக்காவது கோபம் வந்தால் இந்தக் கட்டுரையைப் படியுங்கள், அப்படியும் அந்தக் கோபம் போகவில்லையென்றால் அவர் எழுதிய கதைகளைப் படியுங்கள். அதிலும் சாம்புவின் கதைகளைப் படித்தால் காலா காலத்துக்கும் கோபம் வரவே வராது..

அதே போல தொடர்கதைகளில் ஒவ்வொரு அத்தியாயத்துக்கு வித்தியாஸமான முறையில் ஒரு முன்விவரணை (கொடேஷன்) கொடுத்து அதன் அடிப்படையில் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பது அவர் வழக்கம். இந்த ‘கொடேஷன்களில்’ பல செய்திகள் புராணங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்தும், தமிழ்ப் பாடல்களிலிருந்தும் சில சமயம் கோர்ட் ரிகார்டுகளிலிருந்தும் கொடுப்பது உண்டு. இவையாவும் மிகவும் சுவாரஸியமானவை மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒரு புதிய செய்தியை நமக்குத் தெரிவிக்கும்.

இத்தனை விஷயங்கள் எழுதியவருக்கு நாற்பத்து நான்கே ஆண்டுகள்தான் இவ்வுலக வாசம் என்பது வேதனையான விஷயம்தான். அவர் சுகவீனப்பட்டு மறைந்தவுடன் வருத்தப்படாத நண்பர்கள், எழுத்தாளர்கள் இல்லை. தேவன் மறைந்தவுடன் அந்த மரணத்தை ஒப்புக்கொள்ளாத  வாசகர்கள் பல்லாயிரக்க்கணக்கில் உண்டு. ஏதாவது அதிசயம் நிகழ்ந்து இவர் திரும்பி வந்துவிடமாட்டாரா’ என்று அவரது நினைவஞ்சலி’ கூட்டத்தில் பலர் பேசினார்கள். ’அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்’ என்று ஒரு பெண் எழுத்தாளர் அழுதுகொண்டே சொன்னதாக ஒரு கட்டுரையில் படித்தது நினைவுக்கு வருகிறது..இருபத்தொன்பது வயதிலேயே ஒரு பிரபல வாரப்பத்திரிகைக்கு ஆசிரியராகி பதினைந்து வருடங்கள் அந்த ஆசிரியர் ஆளுமையுடன் படைத்த எழுத்தோவியங்கள் அவரைப் போலவே என்றும் இளமையாகவே இருக்கின்றன. இன்றைக்கும் கூட ஒரு மிஸ் ஜானகி, கல்யாணி போன்ற கதைகள் முதல் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தால் ஏதோ இப்போது எழுதி வெளிவந்ததைப் போல ஒரு பிரமையைக் கொடுக்கும். அதுதான் தேவன்.

இந்த வருடம் (2013) அவருக்கு ‘சதாப்தி’ வருடம். இது அவரது பூத உடலுக்குதான் கணக்கு. ஆனால் தேவன் எழுத்துக்கு வயதே கிடையாது. ஒரு கதாசிரியனின் படைப்புகளை தேவன் ‘மிஸ் ஜானகியில்’ எழுதும்போது பிரும்மாவின் சிருஷ்டிகளுக்கு ஈடாக ஒப்பிடுகிறார். இதனால் எழுத்தாளரும் பிரம்மதேவனே என்று தேவன் எழுதுவார். பிரம்மதேவனின் சிருஷ்டிகளுக்கு சிரஞ்சீவித்துவம் உண்டோ இல்லையோ என்பதை யாம் அறியோம், ஆனால் தேவன் படைத்த கதாபாத்திரங்கள் அமரத்துவம் படைத்தவைதான். அந்த கதாபாத்திரங்கள் என்றென்றும் தேவன் பெயரை தமிழுலகமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கும்தான். தேவனின் எழுத்துக்கள் அத்தனையும் படித்தவர்கள் என்னோடு இந்தக் கருத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப் போவார்கள் என்ற பெரு நம்பிக்கையில் பெருமிதத்தோடு இந்த நூறாவது ஆண்டில் இந்தக் கட்டுரைகள் அனைத்தையும் தேவனின் ஆன்மாவுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்..

(முடிந்தது)

பின் குறிப்பு: இந்தக் கட்டுரைகளைப் படித்து அவ்வப்போது எனக்கு திருத்தங்களும், நல்வார்த்தையும் எழுதி அனுப்பிய அத்தனை பெரிய மனிதர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தக் கட்டுரைகள் நம் இளைய சமுதாயம் இப்படி ஒரு எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை. “எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும்’ என்ற தேவனது அரிய அறிவுரையை மனதில் கொண்டு தற்கால இளைஞர்கள் பலர் தமிழில் எழுத முன்வரவேண்டும் நலல நல்ல எழுத்துகளைப் படைக்கவேண்டும். தமிழ்த்தாயின் சிந்தையைக் குளிர்விக்கவேண்டும் என்பதே நம் வேண்டுகோள் கூட. நன்றி!!

அன்புடன்
திவாகர்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 14 (இறுதிப்பகுதி)

  1. அருமையான கட்டுரைத் தொடர்; அனைத்தும் அழகாக தேவனின் சிறப்புகளை எடுத்துரைத்தது. திவாகர் அவர்களே, மற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் இது போன்று எழுதுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    ….. தேமொழி

  2. அற்புதமான கட்டுரைத் தொடர். தொடரின் நிறைவு வரிகள் மனதை உருக்கியது உண்மை. திரு.தேவனின் கதாபாத்திரங்கள், அவர்களின் உரையாடல்கள் யாவுமே, அமரத்துவம் வாய்ந்தவையே. திரு. தேவனின் புகழுடல் என்றும் மறையாது நம்முள் அமரதீபமாக ஒளிவீசித் திகழும் என்பதற்கு, தங்களது அற்புதக் கட்டுரைத் தொடரே அத்தாட்சி!!!. தங்களுக்கு என்ன சொல்லி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை. என் நன்றி கலந்த பணிவான வணக்கங்கள் திரு.திவாகர் அவர்களே!!.

  3. கூடவே வந்து விட்டேன்! தேவன் அவர்கள் குறுகிய வாழ்நாளில் எவ்வளவு எழுதியிருக்கிறார் என்று யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது! அவருடையது அற்புதமான எழுத்து என்றால், உங்களுடையது அற்புதமான ரசனையும், அதைச் சொல்லும் அருமையான பாங்கும்! மொத்தத்தில் தொடர் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இத்தனை அருமையாகப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. குறிப்பாகத் தேவன் அவர்கள் எழுதியவற்றை நீங்களே தட்டச்சிப் பகிர்ந்த பொறுமைக்கும் உழைப்பிற்கும் நன்றிகள் பல.

  4. தேவன் நூறு – தொடரின் ஒவ்வொரு பகுதியும் சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்ததாயிருந்தது. பாராட்டுக்கள். இத்துணை எழுத்துத் திறமையும், அறிவாற்றலும் நிரம்பிய திரு. தேவன் அவர்களின் அகால மரணம் எழுத்துலகுக்கு ஓர் ஈடு செய்யவியலா இழப்புத்தான்.

    இத்தகைய அற்புத எழுத்தாளரை இத்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் அவர் எழுத்தாற்றலின் மகத்துவத்தையும் நாங்கள் நன்கு உணரும்படிச் செய்துவிட்டீர்கள்.

    ‘பட்டு கத்தரித்தது’ போன்ற தங்களின் (அளவான, அழகான) எழுத்து நடை அற்புதம்.

    அன்புத் தோழி தேமொழி கேட்டுக்கொண்டதையே நானும் உங்கள்முன் அன்பு வேண்டுகோளாய் வைக்கிறேன். தொடர்ந்து சென்ற நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அறிந்துகொள்ள ஆவலாயிருக்கின்றோம்.
    இந்த அருமையான கட்டுரைத் தொடரை மிகச் சிறப்பாகப் படைத்த திரு. திவாகர் அவர்களுக்கு இந்தப் பொன்னாடையை (மானசீகமாக) வல்லமை வாசகர்கள் சார்பில் அணிவிக்கின்றேன். பாராட்டுக்கள். நன்றி!!

    –மேகலா

  5. தேமொழி, மேகலா.
    உங்கள் இருவர் பாராட்டு உரைகளுக்கு, வாச்த்துதலுக்கும், வேண்டுகோளுக்கும் உங்கள் இருவருக்குமாக சேர்த்து நன்றி!. மற்ற எழுத்தாளர்களைப் பற்றி எழுதச் சொல்லியுள்ளீர்கள். கொஞ்சம் கஷ்டமான செயல். ஏனெனில் நிறைய படிக்கவேண்டும். தேவன் நான் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே படித்து வருவதால் ஏதோ எழுத முடிந்தது. அதே போல அவர் காலத்து பெண் எழுத்தாளர் குமுதினி’யைப் பற்றி எழுதியுள்ளேன். (தமிழ் ’மரபு விக்கி’யில் உள்ளது). மற்ற எழுத்தாளர்களை இத்தனை ஆழமாகப் படித்ததில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தின் நிச்சயமாக எழுதுகிறேன். அங்கள் அன்புக்குக் கடமைப் பட்டுள்ளேன்.

  6. பார்வதிக்கு ராமச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையானவர். அப்படிப்பட்ட அமரதீபத்தின் ஒளியைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்ததற்கு சந்தோஷப்படுகிறேன்.

  7. கவிநயாவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி!  தேவனைப் பற்றி எழுதவேண்டும் என்று இந்த நூற்றாண்டு வேளையில் இப்படி எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்ததே.. அதுவே பெரிய சந்தோஷமல்லவா..

  8. அருமையான பதிவு திவாகர் சார்..
    எனக்கு ஒரே ஒரு ஆசை உண்டு.. தேவனின் எழுத்தோவியங்கள் கோபுலுவின் ஓவியங்களோடு மறுபடியும் வெளிவர வேண்டும்.. காத்திருக்கிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *