அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- (3)

0

சாகர் பொன்னியின்செல்வன் 

3. காலத்தை வென்ற பிரமிட்கள்

காலை எழுந்து அறையில் இருந்த மிணரல்(mineral) தண்ணீரில் பல் துலக்கும் படி பசங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லி, குளித்து முடித்து கிழே வருவதற்கு எட்டு மணியானது. காலை வெளிச்சத்தில் ஹோட்டல் இன்னும் விசாலமாக தெரிந்தது. நான்கு வகை உணவு விடுதிகள், பெரிய நீச்சல் குளம், சூடுப்படுத்தபட்ட உள்நீச்சல் குளம்,உடல்பயிற்சி கூடம் என்று எல்லா வசதிகளும் இருந்தன.

காலை உணவு சாப்பிடப் போனால் அங்கே உணவுக்கூடம் முழுவதும் இந்திய முகங்கள். கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்றறிந்ததும் ஒரே வியப்பு. மேல்நாட்டு பதப்படுதப்பட்ட மாமிசம், புலவு சாதம், பலவகை வெண்ணை, பன்னீர் மற்றும் பதப்படுத்தபட்ட பாலாடைக்கட்டிகள் இருந்தன.  பலவகை பழம் மற்றும் காய்கறி கலவைகளும், ரொட்டிகளும் இருந்தன. என்ன சைவவகை உணவுகள் மிக கம்மியாக இருந்தன. ஏற்கனவே எகிப்தில் வரும் உடல் உபாதைகள் பற்றி தெரிந்ததாலும் தடுப்பு ஊசிகள் போடாததாலும் முடிந்த வரையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்.

எங்களோடு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளும் மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிக்காக காத்திருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு அப்துல் ஹோட்டல் வரவேற்பிற்கு வந்தார்.அவர் கூட எங்கள் வழிகாட்டி மஹ்மூத் வந்தார். வெளியே வந்ததும் எங்களுக்காக ஒரு ஹயுண்டாய் (Hyundai)வேன் காத்திருந்தது,அதேபோல் மற்ற பயணிகளுக்கு இன்னுமொரு தனி வேண் நின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனியே ஒரு வண்டி மற்றும் வழிகாட்டி! அப்பொழுதுதான் மெம்பிஸ் டூர்ஸ் ஒரு பெரிய கிளைகள் உள்ள ஒரு நிறுவனம் என்று புரிந்தது. பயணிகளை ஏற்பாடு செய்வது தலைமை அலுவலகம், அங்கிருந்து  அவர்களின் பிரதிநிதிக்கு பயணிகளின் தகவல் விவரம் அளிக்கப்படுகிறது, அந்த பிரதிநிதி எண்ணிக்கைக்கும் போகவேண்டிய இடங்களை பொருத்தும் வழிகாட்டி மற்றும் ஒட்டுனர்களை ஏற்பாடு செய்தார்.

மஹ்மூத் முதலில் நாம் உலகபுகழ் பெற்ற பிரமிடுகளை பார்க்கப் போகிறோம் என்றார். போகும் வழியில் அவரிடம் சமீபத்தில் நடந்த புரட்சி பற்றி பேச்சுக்கொடுத்தபோது, மிகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தார். தானும் தனது பத்து வயது மகனுடன் தினமும் போய் போராட்டத்தில் கலந்து கொண்டதையும் எப்படி கடைசியாக மக்களாட்சி வந்தது என்பதையும் மதியம் சொல்லுவதாக கூறினார். ஏனெனில் எங்கள் வண்டி பத்து நிமிடத்திலேயே பிரமிடுகள் வந்தடைந்துவிட்டது.

வண்டியை விட்டு இறங்கியதும் எங்களை பிரமிக்க வைத்தது பிரமிட்! எவ்வளவு பெரியது! என்ன ஒரு கம்பீரம்! மெல்ல ஒரே பனிமூட்டத்தில் வானம் வரை எழும்பி மேகத்தில் மறைந்தது போல ஒரு காட்சிப்பிழை.

“வாருங்கள் கிட்டே சென்று பார்க்கலாம்” என்று நடத்தி சென்றார் மஹ்மூத், மணலில் மெல்ல நடந்தவாறு முன்னே நின்ற பிரமிடுகளை ஏறெடுத்து பார்த்தவாறு சென்றோம். நடைபாதையோரம் எல்லாம் எகிப்தய தெய்வங்களும் பிரமிடுகளும் குவியல் குவியலாக கடையெங்கும் நிறைந்திருந்தது. பாபிரஸ்(papyrus) எனப்படும் எகிப்திய காதிதத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் ஹீரோகிளிபிக்ஸ்(heroglypics) ஓவியங்கள் என்று ஒரே வண்ணமயமான கலை பொருட்கள் கண்ணை கவர்ந்தன.

பார்த்தவாறு நடந்தபோது , “ஏய் இந்தியா இங்கே வாங்கு! அமிதாப்பச்சன் என்கடைக்கு வா! ஷாருக்கான் இங்கே வா! கரீணா கபூர் இந்த பிரமிடை பார் !” எங்களைதான் இப்படி எல்லாம் விதவிதமாக கூவி அழைத்தனர் கடைகளில் உள்ள வியாபாரிகள். மஹ்மூத் இங்கே விற்பதெல்லாம் சீனாவில் மிஷினில் செய்தவை நான் உங்களை எகிப்திய அரசாங்கத்தால் அங்கிகாரம் பெற்ற கடைக்கு அழைத்து செல்கிறேன் அங்கு வேண்டியதை வாங்குங்கள் என்றார். மேலும் இந்திய தொலைக்காட்சியும் படங்களும் எகிப்தில் மிக பிரபலம் என்றும் அதிமாக இந்திய பயணிகள் வருவதால் வியாபாரிகள் இப்படி ஒரு யுக்தியை கடைப்பிடிக்கிறார்கள் என்றார்.எங்களை நிறைக்க சொல்லி நுழைவுச்சீட்டு வாங்கி வந்தார்.

மணலில் நான்காயிரம் வருடம் முன் கட்டப்பட அந்த மாபெரும் கல்காவியத்தை பார்த்து வியந்தோம். பண்டை எகிப்திய மன்னர்கள் இறக்கும் முன் தங்கள் உடலையும் தங்கள் பரலோக பயணத்திற்கு தேவையான வேலையாட்கள், உணவு, மது,நகை போன்றவையும் சமாதி போன்ற கோவில்களில் புதைத்தனர்.இந்த கோவில்கலை பெரிய கோபுரம் போன்ற பிரமிடுகளின் நடுவே அமைப்பது பண்டை எகிப்திய கலாச்சாரம்.

கீஸாவில்(Giza) உள்ள பிரமிடுகளில்  மூன்று உலகபுகழ் பெற்றவை,இவை எகிப்திய அரசர்களுக்கு கட்டப்பட்டது, அதைவிடுத்தது மூன்று சிறிய பிரமிடுகள் அரசிமார்களுக்கு கட்டப்பட்டவை என்று அறிந்தபோது பாலியல் வித்தியாசம் பண்டை எகிப்தியர் காலம் முதல் இருந்தது என்று புரிந்தது.

சக்கரா (Sakkara) என்ற இடத்தில் தான் முதல் பிரமிட் கட்டப்பட்டது, அதன் பிறகு பல்வேறு மன்னர்கள் தங்கள் வசதிக்கும் புகழுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு அளவில் பிரமிடுகள் அமைத்தனர்.

உலக புகழ் பெற்ற கீஸா பிரமிடுகள் மூன்று. இவை தொன்மையான சரித்திர ஏழு அதிசியங்களில் ஒன்று. ஏழு அதிசயங்களில் மிகவும் பழமையானது பிரமிடுகள் தான் என்றாலும்,அன்று கட்டிய அளவில் இன்றும் கம்பீரமாக நிற்பது பிரமிட் மட்டுமே மற்ற ஆறு அதிசயங்களும் காலப்போக்கில் அழிந்தும் உடைந்தும் போய்விட்டன!

தூரத்திலிருந்து பார்க்க ஒரு பெரிய முக்கோண கோபுரம் போல காட்சியளித்தாலும் கிட்டே வந்ததும் தான், பிரமிட் பல்வேறு கற்பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியிருக்கும் அதிசயம் தெரிகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 2560 வருடங்கள் முன்னர் கட்டப்பட்ட இந்த அதிசயம் 481 அடி உயரம் கொண்டது. இரண்டு தஞ்சை பெரியகோவில்களை ஒன்றன் மீது ஒன்றாக நிறுத்தினாலும் பிரமிடை விட உயரம் கம்மி என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

நான்காம் வம்சத்தின் குபு (Khufu) என்கிற மன்னரால் சுமார் இருபது வருட காலம் கட்டப்பட்டது.இந்த மன்னனை கிரேக்கர்கள் சியாப்ஸ் (Cheops) என்றழைத்தனர். சுண்ணாம்பு பாறைகளால்(limestone) கட்டப்பட்ட இந்த கட்டடதின் மொத்த எடை சுமார் என்னூறு டன். பெரிய பாறை கற்களை உருட்டி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சரிசமமாக நேர்த்திசெய்து எழுப்பிய பண்டை எகிப்தியரின் தொழில் நுட்பம் அசர வைத்து. மேலும் கட்டிய காலத்தில் பாறைகளின் சுவடு தெரியாமல் சுண்ணாம்பு பாறைகளால் மேல்பூச்சு செய்திருந்ததின் சுவடு சில இடங்களில் தெரிந்தது. 1300 வருடம் வந்த நிலநடுக்கத்தில் மேல்பூச்சு பாறைகள் கழண்டு விழ அவற்றை கொண்டு கைரோவில் மசூதிகளும் கொட்டைசுவர்களும் கட்டப்பட்டன!

 Courtesy: Sagar

இந்த பிரமிட் ஒரு இறவுகோயில்(necropolis), எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இது ஒன்றில் தான் உள்வழி பாதைகள் மேலும் கீழும் செல்லும். உள்ளே உள்ள சமாதி(tomb) உள்வழி பாதைகளை பார்ப்பதற்கு சிறப்பு கட்டணம். எங்கள் வழிகாட்டி மஹ்மூத், இந்த கோயிலில் இப்போது ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறையை பார்த்துவர வீண் செலவு செய்யாதீர்கள், நீங்கள் லக்சோரில்(Luxor) இதைவிட சிறந்த கோயில்களை பார்க்கமுடியும். இப்போதைக்கு சுற்றிபாருங்கள். மேலே ஏறி பாருங்கள், சிறிது நேரம் சென்று நாம் இரண்டாவது பிரமிட் பொய் பார்க்கலாம் என்றார்.

ஏறலாம் என்றவுடன் பசங்க இருவரும் மிக உற்சாகத்துடன் படிகளில் ஏற ஆரம்பித்தனர். பத்து இருபது படிகள் தான் ஏறமுடியும், ஏறியதும் ஒரு குடைவரை பாதை இரவு கோவிலை அடைவதற்கு தோதாக அமைக்க பட்டிருந்தது. இது 820ம் ஆண்டு காலிப் அல்-மாமுன்(Caliph al-Mamon) காலத்தில் அமைத்த சுரங்க பாதை இதை திருடர்கள் சுரங்கபாதை (Robber’s tunnel) என்று அழைத்தனர்.

மஹ்மூத் ஏற்கனவே உள்ளே போகாதீர்கள் என்றதால் என்றதால் வெளியவே இருந்தது பார்த்தோம். எங்கு பார்த்தாலும் பல்வேறு தேச சுற்று பயணிகள். பிரமிடுகளின் மேல் ஏறக்கூடாது என்று பல்வேறு பலகைகள் அறிவித்தாலும் மக்கள் முதல் இரண்டு சுற்றளவின்  மேலே ஏறிக்கொண்டுதான் இருந்தனர். மற்றவர் ஏறும் போது மலை மடு எதுவானாலும் ஏறும் நம் பிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்கவா போகின்றார்கள் அவர்கள் ஆசைக்கு அவர்களும் ஏறினர்.

நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இரண்டாவது பிரமிடுக்கு வண்டியில் ஏறி பாலைவன பாதையில் சென்றோம்.க்ஹப்ரே (Khafre) என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த பிரமிட் க்ஹுபுவின் பிரமிடைவிடவும் கொஞ்சம் சிறியது சற்றே தெற்கில் அமைக்கப்பட்டது. குபுவின் மகன் இந்த  க்ஹப்ரே. அவரது மகனான மேன்குவரே(Menkaure) அமைத்தது மூன்றாவது பிரமிட்.

சுற்றியிருந்த மணல் வெளியில் எப்படி பாறைக் கண்டுபிடித்து கட்டினார்கள் என்றென்னும் போது மிகவும் வியப்பாக இருந்தது.பிரமிடுகளை அடிமைகளை கொண்டு கட்டினார்கள் என்றும், எகிப்திய வல்லுனர்களை கொண்டு கட்டினார்கள் என்றும் இரண்டு கருத்து நிலவுகிறது. எது எப்படியானாலும் , இப்பெரிய கோயில்களை அமைத்தது மிகவும் பெரிய செயல் அன்றோ! சில கற்பாறைகள் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்வான்(Aswan) கல்குவாரிகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.

படகுகளில் கொண்டுவரப்பட்ட இந்த கற்களை இறக்குவதற்கு படகுதுறைளும் இருந்தது என்று வரலாற்று வல்லுனர்கள் உறுதி செய்துளார்கள். பிரமிடுக்கு அருகில் மூன்று படகு போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1954ம் வருடம் நான்காவதாக மேலும் ஒரு படகு போன்ற அமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் உள்ளே பல்வேறு உடைந்த மரத்துண்டுகள் இருந்தன. அவற்றை ஒரு எகிப்திய படகுகட்டும் வல்லுணரிடம் ஒப்படைத்துஆராய்ச்சி செய்ய சொன்னார்கள். ஹாஜி அஹ்மத் யூசுப் (Haji Ahmed Yusuf) என்ற வல்லுநர் 14 வருடம் அரும்பாடுபட்டு 143 அடி கொண்ட சிடார்மர (cedar wood) படகை நிலைநிறுத்தினார். இன்று அந்த படகு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பமியான் மலை(Bamian) புத்தர் சிலைகள் தலிபான் காலத்தில் உடைக்கப்பட்டன, இஸ்லாமிய மதம் சிலை மற்றும் கோவில் வழிபாடு கூடாது என்று சொல்லுவதால் அவை உடைக்கப்பட்டன. எகிப்து இன்று இஸ்லாமிய தேசம், பண்டை கலாச்சாரத்தின் அம்சமாக பிரமிடுகளும் சிலைகளும் உள்ளனவே இது எப்படி சாத்தியம் என்று மஹ்மூதை வினவினேன்.

இன்றைய எகிப்தியர் தங்கள் வரலாற்று தொன்மையை மதிப்பவர்கள் மேலும், இந்த புராதன கோவில்கள் கலையாகவும், அந்நிய செலவானி ஈட்டும் ஒரு வியாபார பொருளாகவும் கருதப்படுகிறது. மேலும் பெரும்பாலான எகிப்திய புராதனமான கோவில்கள் இன்று யுனெஸ்கோவின் (UNESCO) உலக புரதான சின்னமாக (World Heritage Centre) அறிவிக்கப்பட்டுலதால் அவற்றை யாரும் பாழ்ப்படுத்தமுடியாது என்றார். இருந்தாலும் எகிப்தியர்கள் கோவில்களும் சிலைகளும் எகிப்தியர்கள் மற்றும் கிரேக்கர் மற்றும் அராபியர்களால் சிதைக்கபட்டுள்ளன என்றார்.

Courtesy: Wikipaedia

12ம் நூற்றாண்டில் சுல்தான் சல்லாதினின் (Saladdin) மகன் அல்-மலேக் அல்-அஸிஸ் ஒத்தாமன் பென் யூசுப் ( al-Malek al-Aziz Othman ben Yusuf), என்பவர் எகிப்திய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான பிரமிடுகளை அழிக்க முயன்றாராம். மேன்குவரே கட்டிய பிரமிடை முதலில் கல்கல்லாக பிரிக்கவும் முயன்று தோல்வி அடைந்தனர்.கற்களை நகர்த்தி தள்ளுவது பிரமிடை கட்டுவது போன்று மிகவும் கடினமான காரியம் என்றும், மேலும் கீழே தள்ளிய கற்களை மணலில் நகர்த்துவது பெரும்பாடு என்று அறிந்ததும் இடிப்பதை நிறுத்திவிட்டனர் என்றாலும், அவர்கள் தொடங்கிய சிதைப்பினால் இன்றும் இந்த பிரமிடின் வடக்கு முகத்தில் ஒரு பெரிய பிளவு உள்ளது.  12ம் நூற்றாண்டில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் எந்திர திறனால் தகர்த்து நகர்த்தமுடியாத பாறைக்கற்களை எப்படி நகர்த்தி செதுக்கி இவ்வளவு நேர்த்தியாக கணிதகோட்பாடுக்குள் கட்டிய பிரமிடுகளும் அதை கட்டிய எகிப்தியர்களையும் தலைவணங்கி வாழ்த்துவதுத்தானே சரி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *