Category: பொது

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (246 )

    அன்பினியவர்களே!

    அன்பான இனிமை பூத்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. மாரி, வசந்தம், கோடை , இல்லையுதிர் காலம் என இயற்கை யார் எதில் தவறினாலும் தான் தனது கடமையில் தவறாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலைகள் உதிர்ந்து மீண்டும் மரத்தில் துளிர்க்கிறது மாரி மாறி வசந்தமாகிறது ஆனால் நாம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களாகிறோம். நாம் மீண்டும் துளிர்ப்பதில்லை; நாம் எப்போது சருகாகி விழுகிறோம் என்பதும் எமது கைகளில்லை. ஆதவன் கிழக்கில் உதிப்பதும் பின் மேற்கு எனும் பள்ளத்துள் விழுந்து மறைவதும் எதுவித இடையூறுமின்றி நடந்துகொண்டு இருக்கிறது. மனித வாழ்வில் மட்டும் உறவு எப்போது வருகிறது பின் பிரிவு எப்போது வருகிறது என்று மட்டும் தெரிவதில்லை.

    இந்த மனித வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். வாழ்வில் தாங்க முடியாத துயரத்திலோ அன்றி மீளமுடியாத கஷ்டத்திலோ வாழ்பவர்கள் இதனை ஏற்க முடியாதிருக்கலாம் ஆனால் வாழ்வில் அனைவரும் அனுபவிக்கும் அப்போதைய நிலைகள் தற்காலிகமானவைகளே ! காலம் மாறும் அவரவர் நிலைகளும் மாறும். இன்றிருப்போர் நாளை இருப்பது நிச்சயமில்லை எனும் ஒரு நிலையிலே நாம் எம்மோடு தக்க வைத்திருக்கும் இப்போதைய நிலைகள் மட்டும் எப்படி நிரந்தரமானவையாக இருக்கலாம்? இத்தகைய ஒரு நிலையற்ற வாழ்விலே நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எம்மீது பல கலாசார அணிகலன்களைப் பூட்டிக் கொள்கிறோம். இவற்றிற்கு மதச்சாயத்தைப் பூசிக் கொள்கிறோம். நாம் எந்த மதத்தில் எந்த குலத்தில் பிறக்கிறோம் என்பது எமது கைகளில்லை. ஆனால் எங்குப் பிறக்கிறோமோ அங்கு எமக்கு மதச்சாயம் பூசப்பட்டு விடுகிறது.

    மத நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை என்பதற்கு நான் எப்போதும் எதிரானவனில்லை. மதமும், இறை நம்பிக்கையும் மனிதர்களது ஆன்மீக பலத்தை அதிகப்படுத்தி ஒவ்வொருவருடைய மனதிலும் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்காகவே அமைந்துள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. ஆனால் ஒவ்வொருவருடைய மனத்திலும் தாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது.அந்த எல்லைக்கோட்டைத்தாண்டும்போது எது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜீரணிக்கப்படக்கூடிய நியாயமான நம்பிக்கையாக இருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக நியாயமற்ற வெறியாக மாறத் தலைப்படுகிறது. இங்கேதான் மத நம்பிக்கை மனிதாபிமானத்தை விட்டு அகலத் தொடங்குகிறது இதுவே மக்கள் மனங்களில் இத்தகைய நம்பிக்கைகளை நோக்கி விசனப் பார்வைகளைத் தூண்டுகிறது. உலகில் இன்று பேணப்படும் அத்தனை மதங்களின் அடிப்படியும் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அம்மத நம்பிக்கைகளையும், அதனை மூர்க்கத்தனமாக எவ்வித கேள்விகளுமின்றிப் பின் தொடர்பவைகளையும் தமது இலட்சியம் எனும் போர்வையிலடங்கிய வெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்வதற்காக இம்மதங்களின் காவலர்கள் என்று தமக்குத் தாமே முடிசூட்டிக் கொண்டவர்கள் இம்மதக் கோட்பாடுகளை மனிதம் எனும் இலட்சியத்திலிருந்து வேறுபடுத்தி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    எதற்காக இந்த முன்னெடுப்பு என்று பார்க்கும்போது சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட வழக்கும் அதையடுத்த தீர்ப்பும் என்பதுமே காரணமாகிறது. ஒரு கிறீஸ்தவ மதப் பின்னணியைக் கொண்ட குழந்தை அதனுடைய தாயிடமிருந்து கடந்த மார்ச் மாதம் காவற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு அரச சமூகநலத் துறையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் அக்குழந்தையைத் தாயார் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பதுவே. இது நடந்தது இங்கிலாந்தின் கிழக்கு இலண்டனின் பகுதியான “டவர் ஹம்லெட் (Tower Hamlet) எனும் பகுதியிலேயாகும். இப்பகுதி ஆசியர்கள் பெரும்பான்மையாக அதுவும் இஸ்லாமிய மதத்தினைப் பின்னணியாகக் கொண்டோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். அரசு நடைமுறைப்படி இப்படி பெற்றோரிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த வளர்ப்புப் பெற்றோர் யாரெனத் தெரிந்து அவர்களிடம் வளர்ப்புப் பொறுப்பை கையளிப்பதேயாகும். இப்படியான வளர்ப்புப் பெற்றோர்கள் அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அப்படியான அதே கலாசாரப் பின்னணி கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் இல்லாத நிலையில் மற்றைய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் முன்வருவாராகில் அவர்களிடம் கையளிப்பார்கள்.

    நான் மேற்குறிப்பிட்ட அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர் அப்பகுதியில் கிடைக்காத காரணத்தினால் கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்ட அக்குழந்தை இஸ்லாமிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அங்கேதான் சிக்கல் உருவானது. அக்குழந்தை அதனது வளர்ப்புப் பெற்றோரினால் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும்படியாக வற்புறுத்தப்பட்டது என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்குற்றச்சாட்டுக்களை பரிசீலனையின் பின்னால் ஏற்றுக்கொண்டு அக்குழந்தை அதனது பாட்டியுடன் வாழும்படி தீர்ப்பளித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் சரியான வகையில் பரிசீலிக்கப்பட்டு நிரூபணமாகியது எனில் இங்குப் பல கேள்விகள் எழுகிறது. சந்தர்ப்ப சூழலினால் தான் வாழும் கலாசாரப் பின்னணியில் இருந்து பிரியும் ஒரு குழந்தை தானே தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத நிலையில் நிர்ப்பந்தமாக தனக்குப் பரிச்சயமில்லாத கலாசாரச் சூழலுக்குள் தள்ளப்படுவது நியாயமானது தானா ? தனது உரிமைத்தாயிடமிருந்து சட்டத்தின் கரங்களினால் பிரிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பராமரிக்க முன்வரும் மனிதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே! ஆயினும் அக்குழந்தையின் இயற்கையான கலாசாரப் பின்னணியில் இருந்து அதனை முழுமையாக தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்ற முயல்வது அக்குழந்தையின் தன்னுரிமையைப் பறித்தெடுப்பதாகாதா?அன்றி அக்குழந்தைக்கும் தமது சொந்தக் குழந்தைகளுக்கும் எதுவித பேதங்களும் இருக்கக்கூடாது எனும் தூயநோக்கில் அக்குழந்தையையும் தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்றுவது என்பதில் எதுவிதமான தவறுமில்லை என்பதுதான் உண்மையாகுமா? இவைகள் பல முனைகளில் இருந்து கிளம்பும் யதார்த்தமான கேள்விகளே!

    அதேநேரம் பல வேற்றுமதக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் கிறீஸ்தவ மத வளர்ப்புப் பெற்றோர்கள் மீது இத்தகைய நுணுக்கமான பார்வையோ அன்றி அவர்கள் மதத்தின் மீது ஒரு தீவிரக் காட்டம் நிறைந்த பார்வையோ நடத்தப்படுவதில்லையே! ஏன் எம்மீது மட்டும் இப்படி என்று வேதனையடையும் சில இஸ்லாமிய மதத்தினரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நீதித் தராசு என்பது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் நம்பும் வரைதான் சட்டமும், ஒழுங்கும் உள்ளத்தில் முதன்மை நிலைபெறும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    மிகத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்ன என்கிறீர்களா?

    ஒரு குழந்தையின் இக்கட்டான நிகழ்வு இங்கிலாந்தில் இன்று இஸ்லாமிய மதத்தின் மீதான ஒரு நுணுக்கமான கண்ணோட்டத்தை அம்மதத்துக்கு எதிராகத் திருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளும் சில தீவிர வலதுசாரப் பத்திரிகைகளின் இப்பிரச்சார வேட்கைக்குத் தீனிபோடும் நிலையாக உருவெடுத்திருப்பதே !

    கவியரசரின் வரிகளில் “மதம் என்பது ஒரு மனிதனுக்கு அணிகலனேயன்றி ஆடையல்ல!”

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • எது அந்தரங்கம்?

    – நிலவளம் கு.கதிரவன்

         முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியாக தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

         இத்தகைய தீர்ப்பிற்கான தேவை ஏன் தற்போது எழுந்தது என்றால் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  ஆதார் அடையாள அட்டை தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி அவர்கள் தொடுத்திருந்த வழக்குதான் தனி மனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

         நமது இந்திய அரசியல் சட்டமானது நமக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது.  சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, மற்றும் அரசியலமைப்பிற்கு தீர்வுகாணும் உரிமை போன்ற உரிமைகள் சட்டப் பிரிவு 14 முதல் 32 வரையிலான பகுதியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்ற தனியுரிமை சார்ந்த சட்ட விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை. எனினும் அடிப்படை உரிமை சார்ந்த விளக்கங்களை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21வரையறுத்துக் கூறியுள்ளது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. தனிநபர் அந்தரங்கம் தொடர்பான வழக்கில் 1954இல் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வும், 1962இல் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை அன்று எனத் தீர்ப்புரை வழங்கியது.  தற்பொழுது இதில் சிக்கல் ஏற்படவே, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியே விவாதித்து அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

        உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  அரசாங்கம் உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.  இதுதான் உரிமையின் இயல்பு.

    ஆரம்பகாலத்தில் நமது உரிமைகளைக் கட்டுப்பாடற்ற முழுமையோடு அனுபவித்து வந்த நாம், நாகரிகச் சமூக வளர்ச்சியின் காரணமாகவும், மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாகவும்  இதற்கொரு தீர்வாக அரசாங்கம் சட்ட வரையறை செய்தது.

      இது தொடர்பில் மேற்படி பட்டியலிடப்பட்ட உரிமைகளை அனுபவிக்க நமக்கு வழிவகை செய்தது.  அரசியலமைப்பு ஏற்பட்ட காலத்தில் உள்ள சூழ்நிலையில் உரிமை சம்பந்தமாகத் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஐயங்கள் ஏற்படவில்லை.  கால மாற்றத்தில், நாகரிகச் சமுதாயமாக மேம்பட்ட சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் பாதுகாப்புக் கருதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

         அந்தரங்கம் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.  அது உடல் சார்ந்ததாக இருக்கலாம்; அல்லது தனியரின் தகவல் சார்ந்ததாக இருக்கலாம்.  உடல் சார்ந்த அந்தரங்கம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.  ஆனால் தனியரின் தகவல் சார்ந்தது என்பது மக்கள்தொகைப் பெருக்கம், தேசப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தரவுகள் அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

         இப் பிரச்சினையின் மையப் புள்ளியான ஆதார் தொடர்பான விபரங்கள் அனைத்து பயன்பாடுகளுக்கும் அவசியம் என மத்தியஅரசு கேட்பதுதான். இதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் அரசிடம் அளிக்கின்ற தகவல்கள் பொதுவெளியில் பரவாமல் காப்பது அரசின் கடமை எனக் கேட்பதில் நியாயம் உள்ளது.  இன்றைய எண்ம உலகத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ சமூக ஊடகங்கள், இணைய தளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நமது பொது தகவல்களைத் தினமும் அளித்துக்கொண்டு வருகிறோம்.  இதன் வழியே உருவாகும் சாதக பாதகங்களை நாம் எண்ணிப் பார்ப்பதும் இல்லை.  இது தொடர்பில் அரசிடம் முறையிடுவதுமில்லை.

        சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நாம் செயல்படுவது தினமும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது.   அது அரசு வழியாகவோ அல்லது மேற்கண்ட வசதிகளை நமக்கு வழங்கும் நிறுவனங்கள் மூலமாகவோ.  இதில் எல்லாம் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை.  ஆனால் அரசாங்கம் பாதுகாப்புக் கருதிக் கேட்கும்போது அடிப்படை உரிமை நம் கண்முன் வந்துவிடுகிறது.

         அந்தரங்கம் அடிப்படை உரிமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  முதலில் இதில் தெளிவு வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக ஆதார் தொடர்பான வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்;  என்றாலும் மக்கள் வழங்கும் தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதுதான் நமது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.  தேசப் பாதுகாப்பு, குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுகளுக்கு ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தமது தரவுகளை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

         அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்கும் நாம் ஓட்டுரிமை, சொத்துரிமை போன்றவற்றில் கண்டும் காணாமல் வாளாவிருக்கிறோம்.  தனி நபர் உரிமை சம்பந்தமான இவ்வழக்கு விசாரணையில் இரண்டு நீதிபதிகள், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டுரிமை என்பது சட்ட உரிமையாகத்தான் உள்ளது என்றும் இவ்விரண்டு உரிமைகளும் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று கூறியதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.  சொத்துரிமை சம்பந்தமாக மத்தியஅரசு விளக்கம் அளிக்கும்போது, விவசாயச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், பொதுப் பணிக்காக, எந்தச் சொத்தையும் அரசு ஆர்ஜிதம் செய்யவும், நஷ்ட ஈடு என்ற பெயரில் அல்லாமல் ஒரு தொகையை அளிக்கவும் 1978ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனால் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட விளக்கத்தை ஏற்காமல், இதனால் பாதிக்கப்படுவது சிறிய அளவிலான விவசாயிகள்தாம் எனக் கூறிச் சொத்துரிமையையும் அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் எனக் கூறியது.

        எனவே இதுபோன்ற தனி மனிதரின் பிற உரிமைகளையும் அடிப்படை உரிமையாகப் பெற நமக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்பின் வழியாக இனிவரும் வழக்கு விசாரணையின்கீழ் அளிக்கின்ற தீர்ப்பிலும் இது எதிரொலிக்கும் என நம்பலாம்.  இதில் நமக்குள்ள முக்கியக் கடமை எதுவென்றால் நாம் அளிக்கின்ற பொதுத் தகவல்களின் நம்பகத் தன்மையைக் காப்பது, பொது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்பதாகத்தான் இருக்க வேண்டும்.

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (6)

     

     

     

    மீ.விசுவநாதன்
    பகுதி: ஆறு

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1-1

    காவியம் இயற்றினார் வால்மீகி

    உருவாய் தருமம் உலகில் பிறந்து
    திருவாய் நடந்த தெய்வக் கதையை

    அகத்தி லாழ்த்தி அமுதாய்ச் சொல்ல
    சுகமாய்த் தனித்துச் சூழல் மறந்து

    நாத வீணை நலந்தரும் இசையை
    வேத நரம்பெலாம் விருப்புடன் கேட்டல்போல்

    வால்மீகி உள்ளே வந்து குவிந்தது
    ஆல்போல் வம்ச அத்தனை செய்தியும்

    உண்மை ஒலியாய் உரக்கக் கேட்டது !
    மண்ணில் நடந்த மனித தருமனை

    கண்ணில் ஒற்றிக் கவிதை செய்ய
    எண்ண எண்ண இராமன் விரிந்தான் !

    உண்ணும் உணவிலும் உத்தமன் ருசியைத்
    திண்ணமாய் உணர்ந்து தீட்டினான் காவியம்!

    சீதையின் மகாவரலாறு

    பிறப்பும் வளர்ப்பும் பிரிந்த நிகழ்வும்
    துறந்த முனிகளின் தூய வழியும்

    சிறந்த நட்பும், சிறிய செய்கையால்
    இறந்த உயிரிலும் இருந்த மேன்மையும்,

    ஆசை கொண்ட அற்ப உறவும்
    ஆசை விட்ட ஆண்மைத் திறமும்

    அப்படியே ஏதும் அழுக்கின்றிச் சொல்லி
    இப்படிதான் வாழ்ந்தான் இராமன் என்று

    எடுத்துச் சொன்ன ஈடிலாச் சரித்திரம்
    தொடுத்துக் கொடுத்த தூயோன் வால்மீகி !

    “இலவ-குசன்” இசைத்த இராமாயணம்

    இராம கதையை எழுதி முடித்தவன்
    நாம மேன்மையை நாட்டு மக்கள்

    அறிந்திடச் செய்ய ஆசை கொண்டார் !
    செறிந்த ஞானம் சிறந்த பண்புடன்

    இணைந்து விளங்கும் “இலவகுச” ரெட்டையர்
    இணைந்திதைப் பாடினால் எப்போதும் உயிர்ப்புடன்

    இருக்கு(ம்) என்று நினைத்த வேளை
    உருக்கும் இசையால் உலகை மயக்கும்

    “இலவனும் குசனும்” இணையிலா முனிமுன்
    தலைவணங்கி நின்றனர் ! தாயாய்த் தந்தையாய்

    தானே இருந்து தங்களை ஆக்கிய”ஆ
    சானே” என்றவர் தாளினைப் பற்றினர் !

    சீதையின் வரலாறைச் சிறப்பாகப் பாட
    மேதைகள் கிடைத்ததாய் மிகவும் மகிழ்ந்தார் !

    படிப்பதற்கும் நன்றாகப் பாடுதற்கும் ஏற்ற
    துடிப்பான குழந்தையெனப் போற்றித் தேர்ந்தார் !

    நன்றாகக் கற்று ஞானம் பெற்றனர் !
    ஒன்றாக இருவரும் ஊரூராய்ச் சென்று

    இராமா யணத்தை இசையுடன் வழங்கினர் !
    கிராம மக்களும் கீர்த்திமிகு முனிகளும்

    பக்திப் பெருக்கிலே பதறாது கேட்டனர் !
    புத்தியில் தருமநெறி புதைத்துக் கொண்டனர் !

    பரிசுப் பொருள்களைப் பாடிய பிள்ளைக்குப்
    பெரிய வாழ்த்துடன் பிரியமாய்த் தந்தனர் !

    “பிற்காலம் இக்கதை பேர்சொல்லும்! ஊன்றிக்
    கற்றோரின் கவலைகள் களியாக மாறும் !”

    என்று முனிவர்கள் இனிதுற வாழ்த்தினர் !
    கன்றுக ளிருவரும் கர்வம் துறந்தனர் !

    அந்த அயோத்தி அரசன் இராமனும்
    இந்தக் கதையை தெருவோரங் கேட்டு

    அரச சபைக்கு அழைத்துவரச் சொன்னார் !
    முரசு முழங்க முகத்தில் சூரிய

    குலமே ஒளிர குழந்தைகள் வந்தனர் !
    நிலவே இரண்டாய் நிலத்தில் நிற்பதை

    அனைவரும் பார்த்து அதிச யித்தனர் !
    இனியவன் இராமன் இப்படிச் சொன்னார்”

    “மங்களங்கள் வாரி வழங்கிடும் கதையை
    உங்களுக்காய் இசைக்க உள்ளனர் இவர்கள் !

    நானும் கேட்டேன் நல்லவள் சீதையின்
    மானங் காத்த மகத்தான வரலாற்றை !

    மீண்டும் என்மனம் கேட்கத் துடித்தது
    ஆண்ட, ஆளும் அயோத்தி அரசரின்

    இரகுகுல சரித்திரம் ரத்தின ஒளியுடன்
    இரகுகுல “லவகுசன்” இசையிலே கேட்கலாம் !”

    குழந்தைகள் கதையைக் கூறத் தொடங்கினர்!
    குழந்தைபோல் இராமனும் முன்னே அமர்ந்து

    கதையில் கரைந்தார் ! கவனம்
    சிதையா சபையும் சேர்ந்து கொண்டதே ! (44)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் மூன்றாவது, நான்காவது பகுதி நிறைந்தது)

    Share
  • எம்ஜிஆர் எனும் நாமம் !

    எம் ஜி ஆர் நூற்றாண்டு காலமாதலால் எம் ஜி ஆருக்கு சமர்ப்பாணம்

     

     

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    வண்ணத் திரையினில் வலம்வந்தார் நாயகனாய்

    எண்ணமெலாம் எம்ஜிஆர் எனும்நினைப்பை ஊட்டிநின்றார்

    கண்ணுக்குள் பதியும்படி காட்சிகள் பலவமைத்து

    மண்ணிலுள்ளோர் மனமெல்லாம் வந்தமர்ந்தார் எம்ஜிஆர் !

     

    ஏழையாய் வாழ்ந்தாலும் கோழையாய் வாழாமல்

    வாழ்நாளை வளமாக்கி வாழ்வதற்கு அவருழைத்தார்

    நாளையதை மனமிருத்தி நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து

    ஆழமுள்ள ஆள்மையுடன் அவர்வாழத் தொடங்கினரே !

     

    தாய்ப்பாசம் அவரிடத்துப் பெருக்கெடுத்து ஓடியதே

    தாய்க்குலத்தின் பெருமைகளை தன்படத்தில் காட்டினரே

    வாய்க்கின்ற தருணமெலாம் மனிதகுல உயர்வினுக்கு

    வடிகாலாய் இருக்கும்படி வகுத்தளித்தார் வசனமெலாம் !

     

    எம்ஜிஆர் படங்களிலே எப்பாட்டு வந்திடினும்

    அப்பாட்டில் பலகருத்தை அவர்புகுத்த முனைந்திடுவார்

    படம்பார்ப்போர் வாழ்க்கையிலே புடம்போட்டு வருவதற்கு

    பாட்டமைத்த எம்ஜிஆர் பாடமாய் ஆகிநின்றார்  !

     

    தானதர்மம் செய்வதுதான் தலைசிறந்த தருமமென

    தன்வாழ்வில் அதைப்புகுத்தி இயன்றவரை உதவிநின்றார்

    பணம்கிடைத்த போதெல்லாம் பலபணிகள் அவர்செய்து

    பாமரரின் தோழமையை பரிசெனவே  பெற்றுநின்றார்  !

     

    வெள்ளித்திரை நாயகனாய் வீதியெல்லாம் வந்தாலும்

    உள்ளமெலாம் உயர்கருத்தை உவந்தேற்ற விரும்பினரே

    நல்லமனம் அவரிடத்து இயல்பாக அமைந்ததனால்

    நாட்டுமக்கள் வாழ்வுபற்றி நாளுமவர் எண்ணினரே !

     

    நடிக்கின்ற காட்சிகளில் குடிக்கின்ற காட்சிகளை

    வெறுத்துவிட்ட  நாயகனாய் வெற்றிநடை போட்டாரே

    குடிப்பழக்கம் தனையொதுக்கி குடிமக்கள் தனைப்பற்றி

    நடிப்பாலும் உணர்த்திநின்ற நாயகனே  எம்ஜிஆர் !

     

    ஆத்திகம் நாத்திகம் அனைத்தையும் அரவணைத்தார்

    அநியாயம் கண்டவுடன் ஆத்திரமும் அவர்கொண்டார்

    ஆதலால் அரசியலை அவசியமாய் ஆக்கிக்கொண்டு

    ஆட்சியினை வசமாக்க ஆக்கமுடன் அவருழைத்தார் !

     

    மக்களது ஆணையுடன் வந்தமர்ந்தார் எம்ஜிஆர்

    மக்களெலாம் அவராலே மறுவாழ்வு பெற்றனரே

    பாமரர்க்கு பயனைநல்கும் பலத்திட்டம் அவர்கொணர்ந்தார்

    பார்த்தவர்கள் வியந்தபடி போற்றினரே   எம்ஜிஆரை !

     

    படகோட்டியாய் இருந்து பலதுன்பம் பட்டாலும்

    எங்கவீட்டுப் பிள்ளையாய் எம்ஜிஆர் இருந்துவிட்டார்

    நாடோடி மன்னனாய் நற்கருத்தை விதைத்தஅவர்

    ஊர்கூடித் தேர்ந்தெடுக்க உட்கார்ந்தார் ஆட்சியிலே !

     

    பட்டிதொட்டி எல்லாமே எம்ஜிஆர் எனும்வெளிச்சம்

    பட்டுத் தெறித்ததனால் பலருமே பயனடைந்தார்

    கிட்டவந்து தொட்டுப்பார்க்க முட்டிமோதி நின்றார்கள்

    அத்தனையும் எம்ஜிஆரின் ஆளுமையின் மகத்துவமே !

     

    புதுக்கட்சி புதுப்பாடம் புதுஆட்சி அத்தனையும்

    புறப்பட்டு வரச்செய்த புரட்சிதான் எம்ஜிஆர்

    நிதம்மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிநின்ற உறவாக

    உரம்பெற்று வளர்ந்தவர்தான் உணர்வுநிறை எம்ஜிஆர் !

     

    எம்ஜிஆர் எனும்நாமம் இன்றளவும் ஒலிக்கிறது

    எல்லோரும் அவர்பெயரை இதயத்தில் வைத்துள்ளார்

    தமிழ்நாட்டின் விடிவுக்காய் தனைக்கொடுத்த எம்ஜிஆர்

    தமிழர்களின் மந்திரமாய் தானுயர்ந்து நிற்கின்றார் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170821 -Indra garvabhangam -lr

    “இம்மி அசையா(து) இமையோன் அயிராவதம்(இந்திரன் பட்டத்து யானை)
    JIMMYயா(வாலை சுருட்டிக் கொண்டு நாயாகும் வரையில்)  கும்வரையில்  ஜிம்னாஸ்டிக்(கோவர்த்தனம் தூக்கியது) -MUMMYக்காய்;

    ஆனவரை பெய்தான் அமரன்(இந்திரன்),முடிவிலே-

    வானவில்லாய்(ஆகாஸத்தில் வானவில்-சமாதான ஸிம்பல்) ஆனான் வளைந்து’’….கிரேசி மோகன்….!

     MUMMY -கோமாதா….!
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    “சாமயஜுர் ரிக்கதர்வ கானரச கீதையை 
      ஆமை உருவெடுத்து அன்றளித்த -வாமன 
      மீனவ ராகசிம்ம மூணுராம கண்ணனாய் 
      ஆனகல்கி மூர்த்தி அவர்”….கிரேசி மோகன்…
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170810 - Anamika - lr
    ”தேரிலவர் சேணம் ,தெருவிலவர் ஸ்ரீசூர்ணம்(கண்ணன் உண்ட மண்னை(ஸ்ரீசூர்ணம்) நெற்றியில் இட்டுக்கொள்கிறோம்)-மாரிலவர் பூணல் மகாலஷ்மி -பேரில்லா(அனாமிகா)
    ஆன்மனவர் பாரதம்செய் ஆண்மகன் ,கீதையை
    வான்மண்ணுக்(கு) ஈன்றபெரு, மால்’’….கிரேசி மோகன்….!

    Share
  • Elegy – இரங்கற்பா

     

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இரங்கற்பா

    images (3)

    உன்னால்தான் உயிரோடிருக்கிறேன்.
    உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான்.
    ஓ எனதன்பே.

    குரலற்ற எமது இரைச்சல்
    விண்ணையே குத்திக் கிழித்தாலும்
    உன்னை மட்டும் அடைவதேயில்லையது
    எனினும் பனியாய் உறைந்து
    தொலைதூர சிகரங்களில் குவிந்திருக்குமது
    மீண்டும் ஆதிநாளுக்கே இழுக்கிறது.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (123)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    20645963_1399821553405373_447907129_n

    முருகானந்தன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
            

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • ஈரோடு புத்தகத் திருவிழா (2017)

     

    Makkal Sinthanai Peravai,
    A – 47, Sampath Nagar,
    Erode – 638011.
    Ph No : 0424  – 2269186.

    INVITATION

    MSP-BOOK-2017-WRAPPER

    Share
  • ’யங் இந்தியா’!!

    பவள சங்கரி

    HATS OFF ‘YOUNG INDIA’ GUYS!!

    IMG_20170805_153535289

    IMG_20170805_153559378

    IMG_20170805_153648727

    ‘யங் இந்தியா’ என்ற அமைப்பினர் ஈரோடு நகரை அழகுபடுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த அமைப்பில் இளைஞர்கள் , ஓவியர்கள், மாணவர்கள் , படித்த இளம் குடும்பப்பெண்கள் என்று இளைய சமுதாயமே நகரை அழகுபடுத்த முனைந்துள்ளனர்! நேற்று ஈரோடு இரயில்வே காலனி வழியாக சென்றபோது அங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதில் முக்கியமான விசயம், இவர்களில் ஒருவருமே தங்கள் பெயரைச் சொல்ல விரும்பாமல், ‘நாங்கள் யங் இந்தியா உறுப்பினர்கள் என்று சொல்லுங்கள் போதும்’ என்று சொன்னதுதான்! தற்பெருமை நாடாத, நல்வழிகாட்டும் இளைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    Share
  • ஹிரோஷிமா அணு ஆயுத அழிவுநாள் நினைவு [August 6th 1945]

    அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

    Image result for hiroshima japan

    சி. ஜெயபாரதன், கனடா

    பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து விழுதற்றுப் போக,
    விதையும் பழுதாக
    ஹிரோஷிமா எழில்மேனி அழித்து
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு!
    நாகசாகியும் அணுப் பேரிடியால்
    நாசமாகி
    மட்டமாக்கப் பட்டது!
    திட்ட மின்றி
    தென்னாலி ராமன் போல்
    மூடர்கள் அணு உலையைச்
    சூடாக்கி
    வெடிப்புச் சோதனை அரங்கேறி
    நிர்வாண மானது,
    செர்நோபில் அணு உலை !

    மாய்ந்தனர் மக்கள்,
    மடிகிறார் !
    மேலும் மரிப்பார் ! மரிப்பார்!
    நாடு நகரம்
    வீடு வயல்கள் எங்கும்
    மூடின வெங்கதிர் வீச்சுகள்!
    கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
    கடத்தப் பட்டார் வேறூர்
    கைப்பையுடன்
    கதிர்மழைப் பொழிவால்!
    புற்று நோயும், இரத்த நோயும்
    பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
    மன்னிக்க முடியாத,
    மாபெரும்
    மனிதத் தவறால் நேர்ந்த
    இரண்டாம்
    அணுயுகப் பிரளய
    அரங்கேற்றம் !

    ++++++++++++

    the-crying-soul

    [செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
    பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

    Share
  • தமிழ் சமுதாயம் 2077 [7] ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’

     

    unnamed (2)

    இன்னம்பூரான்

    ஜூலை 22, 2017

    பிரசுரம்:

    இந்த தொடரின் இலக்கு தமிழ் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். தற்காலம் நமது வாழ்வியல் நன்றாக அமையவில்லை என்பது எல்லாருடைய ஏகோபித்தக் கருத்து. அதை நல்வழிப்பாதையில் இயக்க முடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 1942 ல் இன்றைய ஜெர்மனியைப் பற்றி கனவு கூட கண்டிருக்க முடியாது. எனவே, ‘தமிழ் சமுதாயம் 2077’ பற்றிய என் கனவுகளையும், வரலாற்று அலசல்களையும், எதிர்காலம் பற்றிய கணிப்புகளையும் பதிவு செய்கிறேன். இன்றைய சூழ்நிலையில், நான் கூறுவது பலருக்கு பிடிக்காது, உள்ளதைச் சொன்னால், உடம்பு எரியும் என்பதால்.

    நம்மை பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முதன்மை இடம் வகிப்பது:

    ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’.

    இன்றைய சட்டசபையில் அங்கம் வகிப்பவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். திருமங்கலம், தஞ்சாவூர், ஆர்.கே.நகர் என்ற ஊர்கள், தமிழ் நாட்டில் பிரதிநிதித்துவம் ஒரு கேலிக்கூத்து என்பதை நிரூபித்து விட்டதாலும், அமரராகி விட்ட ஜெயலலிதாவின் ஆசாபாசங்கள் பொது மேடைக்கு வந்து விட்டதாலும், அவரின் மரணத்தை பற்றிய முடியா வழக்குகளும், திகில் மர்மங்களும், அ.தி.மு.க. தாயாதி சண்டைகளும், வழக்குகளும், உச்சநீதிமன்ற தீர்வுகளும், தடாலடி வருமானவரி ஆய்வுகளும், அதருமமிகு சென்னையைப் பற்றி வெளி வரும் தகவல்களும் நம்மை தலை குனிய வைக்கின்றன. ஜல்லிக்கட்டு, விவசாயிகளின் துன்பம், மருத்துவர்களின் தகுதிக்கு உரிய இடம் கொடுப்பது, மீனவர்கள் படும் இன்னல்கள் என்ற பொது நல சேவைகளைப்  பற்றி தமிழ் சமுதாயமும், அரசும் ‘ஏனோ தானோ சமாதானமாக’த்தான் நடத்திருக்கின்றன. சென்னைக்கு வடக்கே எங்கு சென்றாலும் கேலிக்கு இடம் கொடுக்கிறோம்.

    இன்று தமிழ் சமுதாயத்தைப் போற்றிப் பாதுகாப்பது, தற்கால முதல்வரா? வந்து போய்வரும் மாஜி முதல்வரா? நிழல் மனிதரா? அல்லது நிழல் மனிதர்களா? என்ற வினா ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டால், எல்லா விடைகளும் பொருந்தும்/பொருந்தாது. எதிர்கட்சிகள் கலங்கிய நீரில் மீன் பிடிக்கின்றன. மக்கள் நலனில் யாருக்காவது அக்கறை இருக்கிறதா என்று கேட்டால், மாண்புமிகு. (அந்த விருதுக்கு உரிய ஒரே மனிதர்) இரா.செழியன் அவர்கள் அமரராகிவிட்டாரே என்கிறார்கள். இது நிற்க.

    ஒரு விஷயத்தில் பல்லாண்டு பல்லாண்டுகளாக சட்டசபை மரபு ஒன்று இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அது போற்றத்தக்க மரபு அல்ல. அரசை நடத்துபவர்கள் மனித குலம்.   சுயநலம், சொத்து சேர்ப்பது, கையூட்டு, மக்களுக்கு விரோதமான செயல்கள் (உயிர் வாழ்பவர்களுக்கு மரண சான்று அளிப்பது, குட்கா கொடை, கலப்பட கொலைகள் போன்றவை) தழைத்து வருகின்றன. காசை தூசாக்குவதில், சட்டத்தை மட்டம் தட்டுவதில் பல்கலைக்கழகம் முதல் பல அரசியல் துறைகள் தலைமை தாங்குகின்றன. அப்படிப்பட்ட அரசை கண்காணிக்கும் தணிக்கை ஆவணங்களை சட்டசபை கதவுகளை மூடுவதற்கு அரை வினாடி முன்னால் தாக்கல் செய்யும் இந்த மரபு மக்களால் நிந்திக்கப்படவேண்டும். ஆடிட் ரிப்போர்ட் சான்றுகளுடன் பேசும். அவலங்களைக்  கோடிட்டுக் காட்டும்.  ஜூலை 19, 2017 அன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்க நேரம் இல்லாததால், அனாதையான ஆறு ஆடிட் ரிப்போர்ட்கள் என்ன சொல்கின்றன? யாரும் படிக்கமாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால், ‘தணிக்கைத்துறை ஒரு முட்டுக்கட்டை’ என்ற தொடரை பதிவு செய்து வந்தேன். நான் ஒருவனே அதை படிப்பது தெரியும்!

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://www.govint.org/typo3temp/pics/443fdd967a.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கறுப்பு

    இன்னம்பூரான்

    ஜூலை 14, 2917

    unnamed

    கறுப்புப்பணம் கூடு விட்டு கூடு பாய்வது பல்லாண்டு பல்லாண்டுகளாக தணிக்கைத்துறையில் எங்கள் கண்களை உறுத்தும். வருமான வரி, கலால் வரி, சுங்கவரி ஆகியவை நான் 1955ல் தணிக்கைத்துறையில் சேர்ந்த போது, ‘தணிக்கைக்கு அப்பாற்பட்டவை, கிட்ட வராதீர்கள்’ என்று கதறினார்கள்; எங்களை உதறினார்கள்; அலறினார்கள். விடாக்கொண்டன், தொடாக்கொண்டன் கதை தான். எங்கள் துறை முள்ளை முள்ளால் எடுத்தது. பிறகு என்ன? ‘அம்புட்டுக்கொண்டான் தும்மட்டிக்காய் பட்டர்’ கதை தான்.

    வருமானவரி விதிமுறைகள் பாலைத்திணை போல் கரடு முரடானவை. ஏமாற்றுபவனைக் காப்பாற்றி, ஏமாந்தவனைத் தூக்கில் போடக்கூடிய சாமர்த்தியம் உள்ள அதிகாரிகள் அந்த இலாக்காவை ஆட்டிப்படைத்ததும் உண்டு. தற்காலம் விதிகள் புரியக்கூடியவை; எளிய மொழி கையாளப்படுகிறது. தண்டனைகளும் அக்கு வேறு, ஆணி வேறாக, கூவிக்கூவிப் பிரகடனம் செய்யப்படுகின்றன. தப்புத்தவறு செய்யும் அதிகாரிகள்,வங்கி அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் செம்மையாக மாட்டிக்கொள்கிறார்கள். எங்கள் துறையின் பளு குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்!

    இன்றைய செய்தி:

    என் வங்கிக்கணக்கில் என்னுடைய ஊதியத்திற்கு மேல் எக்கச்சக்கமாக வரவு வைக்கப்பட்டிருந்தால், அது எப்படி என்று வருமான வரி இலாக்கா விசாரிப்பது அவர்கள் கடமை. நவம்பர் 9, 2016க்கு பிறகு 5.56 லக்ஷம் ஆசாமிகள் அந்த மாதிரி பினாமியாக இயங்கி, கோக்குமாக்கு செய்துள்ளார்கள். அவர்கள் மீது கேள்விக்கணை பாய்கிறது. இது இரண்டாவது கட்டம்.

    முதல் கட்டத்தில், தன்னுடைய பற்பல வங்கிக்கணக்குகளைப் பற்றி மெளனம் சாதித்தவர்கள் 1.04 லக்ஷம் நபர்கள். தடபுடலாக, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் லக்ஷக்கணக்கில் வங்கியில் வரவு வைத்தவர்கள் 17.92 லக்ஷம் நபர்கள். அவர்களில் 9.72 லக்ஷம் நபர்கள் மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளார்கள். வருமான வரி இலாக்காவும் https://incometaxindiaefiling.gov.in. மூலம் தங்களை தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கலாம். வருமானவரி அலுவலகத்தை முற்றுகையிட தேவையும் இன்றி வரி செலுத்துவோர் ஆன்லைன் விளக்கத்தைச் சமர்ப்பிக்க முடியும். அகப்பட்டுக்கொண்ட தும்மட்டிக்காய் பட்டர்கள் எல்லாருக்கும்

    எஸ்எம்எஸ் மூலம் தாக்கீது அனுப்பப்படும். 2 லக்ஷம் ரூபாய்க்கு மேல் செய்யப்படும் வைப்புத்தொகை தகவல் அவர்கள் தெரிவிக்கவேண்டும் என்று ஆணை.

    சுருங்கச்சொல்லின்: உண்மை விளம்புக.

    -#-

    படித்தது: நாளைய ஹிந்து இதழ்.

    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Flag_of_Afghanistan_%281880–1901%29.svg/1200px-Flag_of_Afghanistan_%281880–1901%29.svg.png

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு

    பவள சங்கரி

    பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு. முந்தைய கட்டணத்தைவிட சுமாராக 20% அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 50,000 லிருந்து 55,000 ரூபாய் வரையிலும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணங்கள் ரூ 80,000 லிருந்து 85,000 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    மாணவர்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்த அரசு AICTE அறிவித்த உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் நியமனம் போன்றவைகளை நிறைவேற்றியிருந்தால் மட்டுமே இந்தக் கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.
    Share